ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ලංකාවේ භික්ෂු සංවිධාන ආඥාදායක පාලනයකට අත වනයි

இலங்கையில் பிக்குகள் அமைப்பு சர்வாதிகார ஆட்சிக்கு அழைப்பு விடுக்கின்றது

By K. Ratnayake
25 October 2017

“புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியமில்லை என அஸ்கிரி-மல்வத்த தலைமை பிக்குகள் கூறுகின்றனர்” என்ற தலைப்பின் கீழ், இலங்கை ஊடகங்கள் கடந்த வியாழன் அன்று பிரதான செய்தி ஒன்றை வெளியிட்டன.

புதன் கிழமை கூடிய மல்வத்த மற்றும் அஸ்கிரி பீடங்களின் பிக்குகள் செயற் குழுவானது, அரசியலமைப்பு சபையின் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பற்றி கலந்துரையாடியதன் பின்னர், குறிப்பிட்ட கடைசி அறிக்கையை வெளியிட்டதாக அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டது. கடந்த செப்டெம்பர் 21, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால், அரசியலமைப்புச் சபைக்கு இந்த இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. 2016 ஆரம்பத்தில் அரசாங்கம், எதேச்சதிகாரமான முறையில் இலங்கை பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றியது.

சோசலிச சமத்துவக் கட்சியானது (சோ.சக.), மைத்திரபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அமெரிக்க சார்பு அரசாங்கத்தையும் அதன் ஜனநாயக-விரோத அரசியலமைப்பு நடவடிக்கையையும் முழுமையாக எதிர்க்கின்றது.

அதேபோல், சோ.ச.க., பௌத்த பிக்குகளின் தலைக்கனம் மிக்க பிற்போக்கு கருத்துக்களை கண்டனம் செய்கின்றது. இலங்கையின் பிரதான பிக்கு குழுக்கள் இரண்டினது கமிட்டி கூட்டங்களின் பின்னர், மல்வத்த மகா விகாரையின் உபதலைவர் கிம்புல்கும்புரே விமலதர்ம, ஊடகங்களுக்கு பின்வருமாறு கூறினார்.

“இந்த அரசியலமைப்பின் மூலம், அதிகாரம் பகிரப்படுவதோடு முழு பாராளுமன்றத்திற்கும் அல்லாத அதிகாரம் பிரதேச சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. இதனால், இந்த அரசியலமைப்பு பொருத்தமற்றது. நாமும் இந்த அரசியலமைப்பை பொருத்தமற்றது என தீர்மானித்தோம். புதிய அரசியலமைப்பு ஒன்று அவசியம் இல்லை என நாமும் கூறுகின்றோம். இப்போது உள்ள அரசியலமைப்பு எமக்கு நல்லது. இந்த அரசியலமைப்பை சுருட்டிவைக்குமாறு நாம் அரசாங்கத்திற்கு கூறுகின்றோம்.”

இந்த பௌத்த பிக்குகள் குழு, நாட்டின் அரசியலமைப்பை பற்றி அணையிடும் உரிமையை தன் கையில் எடுத்துக்கொண்டுள்ளதுடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட இப்போதுள்ள எதேச்சதிகார அரசியல் யாப்பை புகழ்கின்றது. சுருக்கமாகக் கூறினால், சிங்கள பௌத்த பேரினவாதத்தை உச்சத்தில் வைக்கும் எதேச்சதிகார அரசியலமைப்பையே இந்த பிக்குகள் கோருகின்றனர்.

திங்களன்று கூடிய கோட்டே சங்க சபையும், இதே போன்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக பிக்குகளின் பிரச்சாரத்திற்கு முண்டு கொடுக்கும் ஊடகங்கள் தூக்கிப் பிடித்தன.

இலங்கையில் தொழிலாளர்-ஒடுக்கப்பட்ட மக்களது கொடூரமான அனுபவமும் அவர்களது நிலைப்பாடும் முற்றிலும் மாறுபட்டதாகும். ஜே.ஆர். ஜயவர்தனவின் அரசாங்கம், மக்களின் வரையறுக்கப்பட்ட ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளையும் நசுக்குவதற்காக 1978ல் இந்த அரசியலைமைப்பை நிறைவேற்றியது. 1980ல் 180,000 அரசாங்க ஊழியர்களை வேலைநீக்கம் செய்யவும், 30 ஆண்டுகள் பூராவும் இனவாத யுத்தத்தை முன்னெடுக்கவும், 1988-1990 காலப் பகுதியில் கிராமப்புற இளைஞர்கள் 60,000 பேர் கொல்லப்பட்ட இரத்தக்களரி ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிடவும், இன்னும் பல தாக்குதல்களை முன்னெடுக்கவுமே இந்த அரசியலமைப்பு பயன்படுத்தப்பட்டது. மக்கள் மீதான இந்த கொடூரமான தாக்குதல், பெரும் முதலாளிகளதும் சர்வதேச மூலதனத்தினதும் தேவைகளை இட்டு நிரப்புவதன் பாகமாக இடம்பெற்றவை ஆகும். பௌத்த ஸ்தாபனம் இந்த தாக்குகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.

1994ல் இருந்தே, சிறிசேன உட்பட ஆட்சிக்கு வந்த அனைத்து ஜனாதிபதிகளும், இந்த அரசியலமைப்பின் மீதான மக்களின் எதிர்ப்பை சுரண்டிக்கொள்வதற்காக நிறைவேற்று ஜனாதிபதி முறையை தூக்கி வீசி “ஜனநாயக அரசியலைமைப்பை” கொண்டு வருவாதாக பொய் வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், பதவிக்கு வந்த பின்னர் அதைப் பற்றிக்கொண்டு சாதாரண மக்களுக்கு எதிராக, எதேச்சதிகார அதிகாரங்களை கொடூரமாக பயன்படுத்தினர்.

சர்வாதிகார அதிகாரம் கொண்ட இனவாத அரசியலமைப்புக்கான பிக்குகளின் பிரச்சாரமானது எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடக் கூடாதது.

நிலப்பிரபு மரபைச் சார்ந்த பௌத்த ஸ்தாபனம், சுரண்டல் முறையில் தங்கியிருக்கின்ற அதனுடன் பின்னிப் பிணைந்த முதலாளித்துவ வர்க்க ஆட்சியின் பாகமாகும். அதன் பிரதிநிதிகள், ஆளும் தட்டைப் போலவே அபிவிருத்தியடையும் சமூக வெடிப்புகளால் தமது நலன்கள் மற்றும் வரப்பிரசாதங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் ஏன்று பீதியடைந்துள்ளனர். தொழிலாளர்கள் வறியவர்கள் இளைஞர்கள் மத்தியில் வளச்சியடைந்து வரும் போராட்டங்களை நச்சுக்குவதற்காக, இப்போது அவசிப்படுவது எதேச்சதிகார ஆட்சியே என்பதை அவர்கள் ஆட்சியாளர்களுக்கு அறிவுறுத்துகின்றனர்.

புதிய சுற்று தமிழர் விரோத அலையை கிளறி விடும் முயற்சியாகவே இந்த பௌத்த பிக்குகள், அரசியலைமைப்பு பிரேரணை நாட்டின் ஒரு பகுதியை தமிழ் மக்களுக்கு கொடுத்து இலங்கையை பிளவுபடுத்துவதற்கு உதவுகின்றது என கூச்சலிடுகின்றனர். இந்த விஷமத்தனமான சுலோகம், தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தி இனவாத மோதல்களை தூண்டிவிட்டு, முதலாளித்துவ ஆட்சியை பேணுவதற்காக எப்போதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

உலக முதலாளித்துவ வீழ்ச்சியினால் ஆழமடைந்து வரும் தற்போதைய பொருளாதார, அரசியல் மற்றும் சமூக நெருக்கடியின் மத்தியில், அரசாங்கத்தைப் போலவே, மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கும் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான வலதுசாரி கும்பலும், பிக்குகளின் வரத்தைப் பெற்றுக்கொள்வதற்கு அழைப்பு விடுத்துக்கொண்டிருகின்றன. இலங்கையில் முதலாளித்துவ தட்டின் அனைத்து கன்னைகளும் பிற்போக்கு பௌத்த ஸ்தாபனத்தில் தங்கியிருப்பது, அதை தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்திக்கொண்டு, முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாத்துக்கொள்வதற்கே.

அரசியலமைப்பின் மூலம் நாடு பிளவுபடுகின்றது எனக் கூறி, அரசாங்கத்தின் திட்டத்தை கண்டனம் செய்து இராஜபக்ஷ அக்டோபர் 16 அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதன் குறிக்கோள், அரசாங்கத்துக்கு எதிரான வெகுஜன அதிருப்தியை இனவாத பாதையில் தடம்புரளச் செய்வதும் இனவாத பிரச்சாரத்தை தீவிரமாக்குவதுமாகும்.

விக்கிரமசிங்க, பிக்குகளின் கடைசி அறிக்கையின் ஒரு நாளுக்கும் பின்னர் நடந்த ஊடக சந்திப்பில், குறைந்த பட்சம் மல்வத்த மாநாயக்க தேரர்கள் உட்பட பௌத்த பிக்குகளின் ஒரு குழுவேனும் அரசாங்கத்தின் அரசியலமைப்பு திருத்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பதாக காட்டும் ஒரு பரிதாப முயற்சியில் ஈடுபட்டார்.

அரசியலமைப்பு சபை வழிகாட்டல் குழுவின் அறிக்கையில், “பௌத்த மதத்துக்கு முதலிடம்” கெடுக்கப்படும் என்பது மீண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சபைக்கு அந்த அறிக்கையை முன்வைத்த விக்ரமசிங்க, “அறிக்கையில்” முதல் பந்தியிலேயே இலங்கை “ஒற்றை ஆட்சியாக இருக்க வேண்டும்” என பிரேரிப்பதாக கூறியுள்ளார். மேலும் கூறிய அவர், “பௌத்த நாடாக இருப்பது பற்றி நாம் பெருமைப்படுகிறோம். எமது அரசியலமைப்பு இந்த நிலைமையை பாதுகாக்கின்றது. பௌத்த அடைப்படைகள் மற்றும் கொள்கைகளின் அடிப்படையிலேயே புதிய அரசியலைப்பு உருவாக்கப்படுகிறது,” என்றார்.

தேரர்களை கௌரவிப்பதற்காக, செப்டெம்பர் 29 அம்பாறையில் நடந்த ஒரு விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன, “நாட்டின் ஒற்றையாட்சிக்கு குந்தகம் ஏற்படும் அரசியலமைப்புக்கு நான் எப்போதும் இடம் கொடுக்கமாட்டேன், அதேபோல், நடப்பில் உள்ள அரசியலமைப்பில் பௌத்தத்துக்கு கிடைத்துள்ள முதன்மை நிலையை மாற்றுவதற்கு அனுமதிக்க மாட்டேன்” என கர்ஜித்தார்.

சிறிசேன-விக்ரமசிங்க மற்றும் ஆளும் கும்பலின் ஏனைய பகுதியினரும், அட்டாங்க நமஸ்காரம் செய்து பௌத்த துறவிகளிடம் வரம் கேட்பது, பிற்போக்கு சக்திகளை தூக்கி நிறுத்தி முண்டு கொடுப்பதற்கே ஆகும். அவர்களின் ஆசீர்வாதத்தில் வளரந்த பாசிச பொதுபல சேனா, ராவணா பலய போன்ற அமைப்புகள், பௌத்த அடிப்படைவாதத்தின் உண்மையான கொடூர முகத்தை காட்டுகின்றன.

இலங்கை ஆளும் வர்க்கமும் பேரினவாத கும்பல்களும் தமது செயற்பாடுகளுக்கு தமிழ் முதலாளித்துவம் காட்டும் இனவாத பிரதிபலிப்புகளை தூக்கிப் பிடிக்கின்றன. சம உரிமை, சமஷ்டி மற்றும் பிரவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டத்தில் கோரிய தனியான அரசு போன்று, தமிழ் முதலாளித்துவ பிரதிநிதிகள் தமது இனவாத பிரதிபலிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தமது வர்க்க நலன்களை தேடும் தமிழ் முதலாளித்துவத்தின் நிலைப்பாடுகளை சோ.ச.க.யும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் தொடந்தும் எதிர்த்து வந்துள்ளன. அதன் சிறப்புரிமை கோரிக்கைள் தமிழ் தொழிலாள வர்க்கத்தையும் ஏழைகளையும் சுரண்டுவதற்கான உரிமையை கோருவதாகும். ஆயினும், பிரதான பொறுப்பாளிகள், சிறுபான்மையினருக்கு எதிராக திட்டமிட்டு பாரபட்சங்களை செய்த சிங்கள ஆளும் வர்க்கத்தினரே ஆவர். பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் இருந்தே, இந்த பலவீனமான வர்க்கம் தமது காலனித்துவ எஜமானர்களுக்கு சேவை செய்ததோடு எழுச்சியடைந்து வந்த தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்காக இனவாதத்தை பயன்படுத்திக்கொண்டது.

பெயரளவிலான சுதந்திரத்தின் பின்னர், நாட்டில் ஜனநாயக கடமைகளை அல்லது சமூக பிரச்சினகளை தீர்க்க இலாயக்கற்ற இலங்கை முதலாளித்துவம், இனவாத நச்சுக் கருவியை கூர்மைப்படுத்தி, முதலில் தமிழ் பேசும் தோட்டத் தொழிலாளர்களின் பிரஜா உரிமை மற்றும் வாக்குரிமையை அபகரித்தது. வர்க்கப் போராட்டங்களின் வெடிப்புடன் அரசியல் நெருக்கடியும் உக்கிரமடைந்ததுடன், ஆளும் வர்க்கம் 1956ல் சிங்களம் மட்டும் என்ற பிரச்சாரத்தை கையில் எடுத்ததுடன் 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புகளுக்குள் சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் முன்னிலை இடம் கொடுத்து, இன மற்றும் மத பிளவை ஆழப்படுத்தியது.

இலங்கையில் ட்ரொட்ஸ்கிச இயக்கம், இந்த இனவாத தாக்குதல்களுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தியது. எனினும் 1964ல் லங்கா சம சமாஜக் கட்சியானது, ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியுடன் சேர்ந்து, சிறிமா பண்டாரநாயக்கவின் முதலாளித்துவ கூட்டரசாங்கத்தில் சேர்ந்து, சர்வதேச சோசலிச கொள்கைகளை காட்டிக்கொடுத்தது. அது முதல் ல.ச.ச.க. மற்றும் ஸ்ரானிஸ்டுகளின் ஒத்துழைப்புடன் இனவாத தாக்குதல்களை மேலும் உக்கிரமாக்குவதற்கு ஆளும் கும்பலால் முடிந்தது.

போலி இடதுகள் பௌத்த பிக்களை திருப்திப்படுத்த அரசாங்கத்தின் பிரச்சார வண்டியில் ஏறியுள்ளன. வெள்ளிக்கிழமை ஒக்டோபர் 20 அன்று பத்திரிகையாளர் மாநாட்டை நடத்திய, பிரஜைகள் சக்தி அமைப்பின் காமினி வியங்கொடவும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தொழிற்சங்க பிரிவின் சமன் ரத்னப்பிரியவும், மல்வது பீடத்தின் தலைமை பிக்குவும் மற்றும் பிக்குகள் குழுவின் ஒரு பகுதியினரும் அரசியலமைப்பு பிரேரணைகளை எதிர்க்கவில்லை என விக்கரமசிங்க சொல்லியதை மீண்டும் உச்சரித்தனர். பௌத்த பேரினவாத பிரச்சாரத்துக்கு அடிபணிந்துள்ள இவர்கள், தொழிலாளர்களுக்கும் வறியவர்களுக்கும் எதிரான இயக்கத்தையும் பிற்போக்கு சிந்தனைகளையும் ஊக்குவிப்பதில் ஈபட்டுள்ளனர்.

போலி இடது நவ சம சமாஜக் கட்சியின் விக்ரமபாகு கருணாரட்ன, சடவாத மார்க்சிசத்தை கருத்துவாத பௌத்த மதத்துடன் முடிச்சுப் போடும் பிற்போக்கு முயற்சியில் ஈடுபட்டு பேரினவாத பிரச்சாரத்துக்கு முண்டு கொடுப்பதை நீண்டகாலமாக செய்து வருகின்றனார். முதலாளித்துவ வர்க்கத்தின் ஏதாவதொரு குழுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்துவரும் இந்த கும்பல், தற்போது சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கத்திற்கு ஒத்து ஊதுகின்றது.

சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தை அரசியலமைப்புக்குள் ஸ்தாபிப்பது பிற்போக்கானதும் முற்றிலும் ஜனநாயக விரோத நடவடிக்கையுமாகும். முற்போக்கு நிலைப்பாடு எதுவெனில், அரசில் இருந்து மதத்தை பிரித்து, ஜனநாயக மதச் சார்பற்ற அரசை ஸ்தாபிப்பதே ஆகும். பௌத்தத்தை அல்லது ஏனைய மதங்களை பின்பற்றுவது தனிநபர் விருப்பமாக இருத்தல் வேண்டும். அரசு எந்த மதத்துக்கும் அனுசரணை மற்றும் வரப்பிரசாதம் கொடுக்கக் கூடாது. வர்க்கம், மதம், ஆண், பெண் மற்றும் பாலின அடிப்படையிலான வேறுபாடுகளுக்கு எதிராக, ஜனநாயகத்தை அடிப்படையாகக் கொண்டதே சமத்துவமாகும்.

அரசாங்கத்தினதும் இராஜபக்ஷ குழுவினதும் ஒத்துழைப்பு பெறும் பௌத்த பிக்குகளின் பிற்போக்கு பிரச்சாரங்களை உழைக்கும் மக்கள் எதிர்க்க வேண்டும். இந்த பிரச்சார புகையின் மறைவில் அரசாங்கமும் ஆளும் வர்க்கமும், சர்வாதிகாரத்துக்கு திட்டமிடுகின்றன.

பூகோள முதலாளித்துவம் அழுகி நாற்றமெடுக்கும் நிலைமையின் கீழ், அனைத்து நாடுகளிலும் ஆளும் வர்க்கங்கள் தேசியவாதத்தையும் மதவாதத்தையும் புலம்பெயர்ந்து வந்தவர்கள் மீதான பீதியையும் கிளறிவிடும் பிரச்சாரங்களின் மூலம், தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான இயக்கங்களை கட்டியெழுப்ப முனைப்பு காட்டுகின்றன. டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்தது முதல், ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் வலதுசாரி மற்றும் பாசிச கட்சிகளின் வளர்ச்சியை கடந்த பல மாதங்களாகக் காணக் கிடைத்தது. அயலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இந்து அடிப்படைவாத பாரதீய ஜனதாக கட்சி அரசாங்கம், தொடர்ச்சியாக முஸ்லிம் எதிர்ப்பை கிளறிவிடுகின்றது.

இன்று முதலாளித்துவத்திடம் இருந்து வெகுஜனங்களுக்கு சர்வாதிகாரம், சமூக உரிமைகள் பறிப்பு மற்றும் போரைத் தவிர வேறு எதுவும் கிடைப்பதில்லை. இதற்கு எதராகப் போராடுவதற்காக தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் சகல கன்னைகளிலும் மற்றும் அதன் முகவர்களிடம் இருந்து பிரிந்து, சோசலிச சர்வதேசவாத கொள்கையின் அடிப்படையிலான சுயாதீன அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டும். தெற்காசியாவிலும் மற்றும் உலகம் முழுதும் சோசலிசத்திற்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை, அதாவது தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்துக்காக முன்னெடுக்கும் போராட்டத்திலேயே, இலங்கையில் ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிப்பது பிணைந்துள்ளது.