ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ව්‍යවස්ථා විවාදයෙන් පාලක පන්තියේ ප‍්‍රජාතන්ත‍්‍ර විරෝධී ස්වභාවය එලිදරව් කෙරෙයි

அரசியலமைப்பு விவாதத்தில் ஆளும் வர்க்கத்தின் ஜனநாயக-விரோத பண்பு வெளிப்படுகின்றது

By W.A. Sunil
14 November 2017

புதிய அரசியலமைப்பை உருவாக்கும் இடைக்கால அறிக்கை பற்றிய விவாதம் அக்டோபர் 29ல் இருந்து “அரசியலமைப்புச் சபைக்குள்” இடம்பெற்றது. நான்கு நாட்களாக இடம்பெற்ற இந்த விவாதமானது தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக ஆளும் வர்க்கம் காட்டும் பகைமையை அம்பலப்படுத்தியுள்ளது.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் ஜனநாயக-விரோதமாக அரசியலமைப்புச் சபையாக மாற்றம் செய்யப்பட்ட பாராளுமன்றத்தினால் நியமிக்கப்பட்ட வழிநடத்தல் குழுவினாலேயே இந்த இடைக்கால அறிக்கை உருவாக்கப்பட்டது.

புதிய அரசியல் யாப்பை வரைவது பற்றிய விடயத்தை மையப்படுத்திக்கொண்டு, சிங்கள மேலாதிக்கவாத அரசியல் ஸ்தாபனம், முதலாளித்துவ ஊடகங்கள் மற்றும் பௌத்த பிக்குகள் குழுவினால் கிளறிவிடப்பட்டுள்ள நச்சுத்தனமான சிங்கள-பௌத்த பேரினவாத பிரச்சாரத்தின் மத்தியிலேயே இந்த விவாதம் நடத்தப்பட்டது.

விவாதத்துக்குள் அரசாங்க கட்சியும் எதிர்க் கட்சியும், “பௌத்த மதத்துக்கு முதலிடம் கொடுப்பதிலும்” “ஒற்றை ஆட்சியை பாதுகாப்பதிலும்” தாங்களே அதிகம் அர்ப்பணித்துக்கொண்டவர்கள் என்பதை ஸ்தாபித்துக்கொள்வதற்காக மிகவும் இழிவாக போட்டியிட்டுக்கொண்டன.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசியலமைப்புச் சபைக்கு வழங்கிய உரையில், “அரசியலமைப்புச் சபையின்” வழிநடத்தல் குழுவினால் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை வெளிப்படுத்தும் கொள்கைகள் மற்றும் சூத்திரங்கள் இந்த அறிக்கையில் உள்ளடங்கியுள்ளதாக” அறிவித்தார். அவை “கொள்கை மற்றும் சூத்திரங்கள்” என்பவற்றில் காணப்படும் ஜனநாயக-விரோத பண்பானது விக்கிரமசிங்கவின் உரையில் நன்கு அம்பலப்பட்டது.

“எமக்கு ஒற்றை ஆட்சியை அகற்ற வேண்டிய அவசியம் இல்லை, சிங்கள-பௌத்தர்களை வீழ்த்த வேண்டிய தேவையும் இல்லை, நாம் எல்லோரும் ஒற்றை ஆட்சியைப் பாதுகாக்கவே உள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமயிலான கூட்டு எதிர்க்கட்சி என அழைக்கப்படுவது, இந்த வழிநடத்தல் குழுவுக்கு முன்வைத்த பிரேரணைகளில் ஒன்று, “ஒற்றை ஆட்சி, பௌத்த சாசனம் மற்றும் நாட்டின் இருப்பை” ஆபத்தில் தள்ளும் அரசியலமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளுடன் உடன்பாட்டை வெளிப்படுத்திய விக்கிரமசிங்க, “நீங்கள் மட்டுமல்ல நானும் அதற்கு உடன்படுகின்றேன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும் அதை ஏற்றுக்கொள்கின்றார்” என சுட்டிக்காட்டினார்.

“13வது அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்பட்ட போது நாட்டில் யுத்தம் ஒன்று நடந்துகொண்டிருந்தது, யுத்தம் முடிவுக்கு வந்திருந்தாலும் பிரச்சினை முடிவுக்கு வரப்படவில்லை. இந்தப் பிரச்சினையை இப்போது முடித்துவிடுவோம். நாம் நாடு என்ற வகையில் முன் செல்வோம்.” தானும் பங்களிப்பு செய்து தூக்கி வளர்த்த சிங்கள பேரினவாதிகளின் குற்றச்சாட்டுக்கு உள்ளாவோம் என்ற பீதியில், பிரச்சினை என்ன என்பதை கூறுவதை அவர் கவனமாக தவிர்த்துக்கொண்டார்.

வடக்கு-கிழக்கு பிரதேசங்களை மீண்டும் ஒருங்கிணைக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் யோசனைக்கு எதிராக, கூட்டு எதிர்க் கட்சி முன்னவைத்துள்ள “மாகாண சபைகளை ஒன்றிணைக்கக் கூடாது” என்ற பிரேரணையையும் மேற்கோள் காட்டிய விக்கிரமசிங்க, அதற்கு அனுமதியளித்து அறிவித்ததாவது: “வடக்கு, கிழக்கு ஒன்றிணைகிறது, சப்ரகமுவ, வயம்ப ஒன்றிணைகின்றது என எம்மால் கூறமுடியாது. அதை எம்மால் செய்ய முடியாது.”

ஜனாதிபதி சிறிசேன விவாதத்தில் பங்கெடுக்காவிட்டாலும், அக்டோபர் 30 நடந்த, கூட்டுவாழ்க்கை சங்கம் மற்றும் தேசிய உள்நாட்டு செயற்பாட்டாளர்களின் மாநாட்டில், அரசியலமைப்பு பிரேரணைகள் நாட்டை பிளவுபடுத்துவதாகவும் இனத்தை காட்டி கொடுப்பதாகவும் மற்றும் பௌத்த மதத்தை இல்லாமல் ஆக்குவதாகவும் முன்னெடுக்கப்படும் பொய் பிரச்சாரத்தை நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

இந்த நாட்டில் “பிரச்சினை” ஒன்று இருப்பதாகவும் அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்று கூறினாலும், பிரச்சினை என்ன என்பதை அவரும் கூறாமல் கவனமாக தவிர்த்துக்கொண்டார். அதற்கு மாறாக அவர், பிரச்சினைக்கு “தீர்வு” தேடுவதற்காக அனைத்துக் கட்சி மாநாடு, அனைத்து மத தலைவர்கள் மற்றும் புத்திஜீவிகளினதும் மாநாடு ஒன்று எதிர்காலத்தில் கூட்டப்படும் என குறிப்பிட்டார். பௌத்த மதத்துக்கும் சிங்கள மொழிக்கும் அரசாட்சி முன்னிலையை வழங்குவதை கைவிடமாட்டோம் என சபதம் எடுத்து இந்த கும்பல்களை திருப்திப்படுத்துவதே அவற்றின் குறிக்கோளாக இருக்கும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அகற்றப்படக் கூடாது என பௌத்த சங்க ஸ்தாபனம் கூட்டு எதிர்க் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளும் பிரச்சாரம் ஒன்று முன்கொணரப்பட்டுள்ளது. விவாதத்துக்குள் இந்த பிரச்சாரத்தைப் பற்றி விக்கிரமசிங்க எதையும் கூறாத அதேவேளை, சிறிசேனவும் மௌனம் காத்து அது பற்றிய உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை அகற்றி, அரசியலமைப்பில் “ஜனநாயக மாற்றங்களை” ஏற்படுத்துவதாகவும் “நல்லாட்சியை” ஸ்தாபிப்பதாகவும் போலி வாக்குறுதிகளை கொடுத்தே 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்தது. இந்தப் பிரச்சாரத்திற்கு போலி இடது அமைப்புகள், போலி சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் குழுவும் பங்களிப்பு செய்தனர். ஜனநாயக-விரோத இராஜபக்ஷவின் பிற்போக்கு ஆட்சிக்கு மாறாக, நேரடியாக அமெரிக்காவுக்கு சார்பான அதன் யுத்த முனைப்புகளுக்கு இலங்கையை முடிச்சுப் போட்டுவிடும் சிறிசேன தலைமையிலான பிற்போக்கு ஆட்சியை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதற்காக வாஷிங்டனும் புது டில்லியும் திட்டமிட்ட ஆட்சி மாற்றத்தை, மேற்கூறிய சாக்குப் போக்கில் மூடி மறைத்தனர்.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவும் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் கோரிக்கைக்கு ஏற்ப செயற்பட்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ தட்டுக்களுக்கு வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் கொஞ்சம் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களைக் கொடுத்து கொழும்பு ஆட்சியுடன் ஒன்றிணைத்துக் கொள்வதற்கு வாய்ப்புத் தேடுகின்றனர். இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவது, கொழும்பு அரசாங்கத்தின் கைகளைப் பலப்படுத்திக்கொள்வதன் மூலம், கிளர்ச்சிக்கு வந்துகொண்டிருக்கும் தொழிலாளர்கள், வறியவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டங்களை நசுக்கித் தள்ளுவதற்காக எதேச்சதிகார ஆட்சிக்கு மாறுவது. இரண்டாவது, அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் புவிசார் அரசியல் தேவைகளுக்கு சேவையாற்றும் ஆட்சியொன்றை ஸ்தாபித்துக்கொள்வதாகும்.

விவாதத்தில் ஈடுபட்ட முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷ கூறியதாவது: “வடக்கில் மக்களின் அவசியங்களை ஓரத்தில் வைத்துவிட்டு, வடக்கில் அரசியல்வாதிகளின் தேவைகளை இட்டு நிரப்புவதற்கே புதிய அரசியல் யாப்பை அமைப்பதில் முதலிடம் கொடுக்கப்பட்டிருப்பது, 2015ல் ஆட்சி மாற்ற சதிக்கு ஒத்துழைத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளுக்கு பிரதியுபகாரம் செய்வதற்குத் தான் என்றே நான் நினைக்கின்றேன்.” பின்னர் அவர், அதிகாரத்தைப் பகிரும் யோசனையை கைவிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகள் மீது மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு விரோதமாக எழுச்சி பெறும் மக்களின் எதிர்ப்பை, இனவதா பாதைகளில் திருப்பிவிட்டு மீண்டும் ஆட்சியில் அமர்வதற்கு இராஜபக்ஷ முயற்சிக்கின்றார். இராணுவத்திற்கும் இனவாதிகளுக்கும் அழைப்பு விடுக்கும் அவரது இலக்கு, ஆட்சியை கைப்பற்றிய பின்னர் தமது உரிமைகளுக்காக எழுச்சி பெறும் மக்களை நசுக்கித் தள்ளும் ஆட்சியை உருவாக்கிக் கொள்வதே ஆகும்.

தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பற்றி எந்தவொரு அக்கறையும் இல்லாத தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவக் கட்சிகள், ஒற்றை ஆட்சிக்குள் சிங்கள முதலாளித்துவ வர்க்கத்துடன் தமிழ் உயரடுக்குகளுக்காக சலுகைகளைப் பங்கிட்டுக்கொள்வதற்கே எதிர்பார்க்கின்றன. “நாம் பிரிக்கப்படாத இலங்கைக்குள் அதிகாரம் பங்கிடப்படுவதை எதிர்பார்க்கின்றோம். நாம் எப்போதும் நாட்டில் இருந்து பிளவுபடுவதற்கு அழைப்பு விடுக்கவில்லை” என தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுர குமார திசாநாயக்க, இந்த விவாதத்தை, ஜனநாயகம் மற்றும் எதேச்சதிகாரம் பற்றிய விவாதமாக சித்தரித்த அதேவேளை, அரசியலமைப்புத் திருத்தத்தில் “நாட்டில் ஏற்பட்டுள்ள சில அரசியல் முரண்பாடுகளுக்கு ஏதாவது சீர்திருத்தங்களை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையின் மீது” விவாதத்தில் பங்கெடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். இராபக்ஷ குழுவின் இயக்கத்தை அவர் எதேச்சதிகாரவாதமாக அவர் குறிப்பிட்டது, அரசாங்கத்தை சுத்தப்படுத்துவதற்கே ஆகும்.

தமிழ் மக்களுக்கு எதிரான போருக்கு ஒத்துழைத்து, யுத்தத்தை முன்னெடுப்பதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அவசியங்களுக்காக முன்நின்ற ஜே.வி.பி., நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை தாம் எதிர்ப்பதாக காட்டிக்கொள்வதற்கு கபடத்தனமான நடிப்பில் ஈடுபட்டது. “யுத்தத்தை உருவாக்கியது நிறைவேற்று ஜனாதிபதி முறையே ஆகும், நிறைவேற்று ஜனாதிபதி முறை செல்லப் பிராணி பூனை அல்ல. இதை தூக்கியெறிய வேண்டும்,” என திசாநாயக்க கூறினார்.

சகல மதங்களினதும் சகல மொழிகளினதும் “சம உரிமையை ஏற்றுக்கொள்ளும் அடிப்படையை தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாக” திசாநாயக்க விடுத்த அறிக்கை, போலி-ஜனநாயக முகமூடியை போட்டுக்கொள்வதாகும். ஏனைய முதலாளித்துவக் கட்சிகளைப் போலவே ஜே.வி.பி.யும், பௌத்த மதத்துக்கும், சிங்கள மொழிக்கும் தற்போதைய அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முதன்மை நிலையை முழுமையாக பாதுகாக்கின்றது. பிற்போக்கு முதலாளித்துவ ஒற்றை ஆட்சியை பாதுகாத்த திசாநாயக்க, “இது பிளவுபட அனுமதிக்கக்கூடிய நாடா? இதைப் பிரிக்க அனுமதிக்க முடியாது” என சுட்டிக் காட்டினார்.

ஆட்சி அதிகாரத்தை பிரித்தானிய காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் கையில் இருந்து தமது கைக்கு மாற்றப்பட்ட நாளில் இருந்தே, சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக இனவாத பாரபட்சங்களைச் செய்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை பிற்போக்கான முறையில் பிளவுபடுத்துவதற்கு செயற்பட்ட, 1983ல் இருந்து கொடூரமான யுத்தத்தை முன்னெடுத்து தொழிலாளர் வர்க்கத்தையும் தமிழ் மக்களையும் நசுக்கிய இந்த ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு கன்னையாலும் ஜனநாயக உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க முடியாது.

உலக முதலாளித்துவ வீழ்ச்சியின் பாகமாக, நெருக்கடியில் மூழ்கியுள்ள இலங்கையின் முதலாளித்துவ வர்க்கம், அதன் சுமையை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள்மீது சுமத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் கொடூரமான நிபந்தனைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. புதிய அரசியலமைப்பு பற்றிய கூச்சல்களுக்கு பின்னால், இந்த தாக்குதல்களுக்கு விரோதமாக கிளர்ச்சியடைந்து வரும் தொழிலாளர்களுக்கும் ஏழைகளுக்கும் எதிராக பொலிஸ்-அரச எதிரேச்சதிகாரத்தையே சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் உண்மையிலேயே தயாரித்து வருகின்றது.