ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Stalinists split over whether to openly ally with big-business Congress Party

பெரு-வணிக காங்கிரஸ் கட்சியுடன் வெளிப்படையாக தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டுமா என்பது பற்றி இந்திய ஸ்ராலினிஸ்டுகள் பிளவுபட்டுள்ளனர்

By Wasantha Rupasingha
24 November 2017

இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்திற்குள்ளும், கிராமப்புற ஏழைகளுக்கு மத்தியிலும் எதிர்ப்பு பெருகிவரும் நிலையில், இந்திய முதலாளித்துவத்தின் பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் கட்சியுடன் வெளிப்படையான தேர்தல் கூட்டணி அமைக்க வேண்டுமா என்பது பற்றி இந்தியாவின் பிரதான ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அல்லது CPM ஆழமாக பிளவுபட்டுள்ளது. அதனால், கட்சி பிளவும் தவிர்க்க முடியாததாகிறது.

ஊடக அறிக்கைகளின்படி, கடந்த மாதம் நடைபெற்ற சிபிஎம் மத்திய குழுவின் (CPM) மூன்று நாள் கூட்டம், 2019 தேசிய தேர்தல்களுக்காக காங்கிரஸ் கட்சியுடன் ஒரு தேர்தல் கூட்டணியை உருவாக்குவதில் அக்கட்சியின் தலைமை “கிட்டத்தட்ட பிளவுபடும்” என்பதை வெளிப்படுத்தியது.

சிபிஎம் அரசியல் குழுவின் பெரும்பான்மை ஆதரவிலான அணுகுமுறைக்கு இணங்காமல், கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, வரவிருக்கும் கட்சி மாநாட்டிற்கான முக்கிய தீர்மானத்தைக் கொண்ட “சிறுபான்மை வரைவு” ஒன்றை சமர்ப்பித்தார். இது, இந்து மேலாதிக்கவாத பிஜேபி க்கு எதிராக, காங்கிரஸ் கட்சி உட்பட அனைத்து “மதச்சார்பற்ற கட்சிகளுக்கான” ஒரு தேர்தல் கூட்டணியை அமைக்க ஸ்ராலினிஸ்டுகளுக்கும், அவர்களது இடது முன்னணி தலைவருக்கும் பரிந்துரைத்தது. அதேசமயம், யெச்சூரியின் முன்னோடி பிரகாஷ் காரத் தலைமையிலான எதிர்க்கும் கன்னையினால் முன்வைக்கப்பட்ட எதிர் ஆவணம், “நவதாராளவாத” காங்கிரஸ் தவிர, அனைத்து “மதச்சார்பற்ற கட்சிகளின்” ஒரு கூட்டணிக்காக ஸ்ராலினிஸ்டுகள் வேலை செய்ய வேண்டுமென விவாதித்தது.

கூட்டத்தில் பேசிய 63 மத்திய குழு உறுப்பினர்களில், 32 பேர் காரத்தின் நிலைப்பாட்டை ஆதரித்த அதேவேளையில், 31 பேர் காங்கிரஸ் கட்சியுடனான தேர்தல் கூட்டணிக்கு யெச்சூரி விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. கட்சித் தலைமை இடையே பிளவு ஏற்பட்டதும், சிபிஎம் இன் இரண்டு முக்கிய தலைவர்களும் ஒருவருக்கொருவர் எதிராக அணிவகுத்தனர், இறுதியில் மத்திய குழுவோ எந்தவொரு முடிவையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியது. பின்னர், “ஒரு சமரச சூத்திரத்தின்” கீழ், அரசியல் குழுவின் கருத்து, மற்றும் மத்திய குழுவின் விவாதங்களின் அடிப்படையில், அடுத்த ஏப்ரலில் நடைபெறவுள்ள, கட்சியின் 22 வது தேசிய மாநாட்டிற்கான தீர்மான வரைவை மறுபரிசீலனை செய்ய அரசியல் குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டது.

இரண்டு பக்கங்களுக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளையும், அவர்களுக்கு இருக்கும் அனுமானிக்கப்பட்ட ஆதரவையும் வைத்து பார்த்தால், கட்சி மாநாடு வரையிலும், மேலும் அதற்கு அப்பாலும் கூட இந்த சர்ச்சை தொடர்ந்து குமுறலை ஏற்படுத்துவதற்கான அனைத்து சாத்தியமும் உள்ளது.

பெரு-வணிக காங்கிரஸ் கட்சிக்கு அவரது பிற்போக்குத்தனமான ஆதரவை தெரிவித்து வாதிடுகையில், யெச்சூரி, “இந்து பாசிசவாத” பிஜேபி க்கு எதிராக இடதுசாரி முன்னணி காங்கிரஸ் கட்சி தலைமையிலான தேர்தல் கூட்டணியை அமைப்பதற்கான அவரது ஆதரவிற்கு முற்றிலும் மோசடியான ஒரு சமாந்தரமாக, 1930 களின் தொடக்கத்தில் நாஜிக்களுக்கு எதிராக தொழிலாள வர்க்க அமைப்புகள் மற்றும் கட்சிகளைக் கொண்ட ஒரு “ஐக்கிய முன்னணி” க்கு ட்ரொட்ஸ்கி அழைப்பு விடுத்ததை தொடர்புபடுத்தி லியோன் ட்ரொட்ஸ்கியின் பெயரை குறிப்பிட்டார்.

Hindu பத்திரிகை செய்தியின்படி, பிஜேபி “உச்சத்தில்” உள்ள நிலையில், பிஜேபி க்கு எதிரானதொரு தேர்தல் கூட்டணியை அமைப்பதில் “அரசியல் சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைய” “அனைத்து கட்சிகளின் தேவையும்” இருக்கிறது என்ற தனது கோரிக்கைக்கு முட்டுக்கொடுக்க, யெச்சூரி, ஐக்கிய முன்னணி கொள்கை குறித்த ட்ரொட்ஸ்கியின் பிரபல கோட்பாடான “தனித்தனியாக அணிவகுத்துச் செல், ஆனால் ஒன்றாக தாக்கு” என்பதை மேற்கோளிட்டார்.

சிபிஎம் இன் பொதுச் செயலாளர் இன்று வாதிட்ட கொள்கை, ட்ரொட்ஸ்கி பரிந்துரைத்த கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. பாசிச பிற்போக்குத்தனத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான வர்க்க பலத்தை அணிதிரட்ட நோக்கம் கொண்டதாகவே ட்ரொட்ஸ்கியின் கொள்கை இருந்தது, ஆனால் யெச்சூரியோ, இந்து மேலாதிக்கவாத பிஜேபி ஐ எதிர்ப்பதன் பேரில், காங்கிரஸ் கட்சிக்கும், நெருக்கடி நிறைந்த இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும், மற்றும் அதன் அரசாங்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்தை விலங்கிட முனைகிறார்.

இந்நிலைமைகளின் கீழ், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி (KPD), “ஹிட்லருக்குப் பின்னர், நாங்கள்” என்ற அதன் கூற்றை எடுத்துக்காட்டியது போல, பாசிசவாதிகள் பரிந்துரைத்த அச்சுறுத்தலை மிக மோசமாக குறைத்துமதிப்பிட்டது, மற்றும் சமூக ஜனநாயகக் கட்சியோ (SPD) தொழிலாள வர்க்க போராட்டத்தை எதிர்த்ததோடு, பாசிசத்திற்கு எதிரான அரணாக முதலாளித்துவ வைய்மார் குடியரசின் நிறுவனங்களை ஊக்குவித்தது. சமூக ஜனநாயகவாதிகளுடன் எந்தவித அரசியல் சமரசமும் இல்லாது பாசிசவாதிகளுக்கு எதிராக போராடுவதற்கு தொழிலாளர்களின் பாதுகாப்பு காவலர்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் பிற ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளில் இணையுமாறு SPD யை கோருமாறு KPD ஐ ட்ரொட்ஸ்கி முறையாக வலியுறுத்தினார். ட்ரொட்ஸ்கி குறிப்பிட்டதைப் போல, “சமூக ஜனநாயகத்துடனோ அல்லது ஜேர்மன் தொழிற்சங்கத் தலைவர்களுடனோ பொதுவான மேடை எதுவும் கிடையாது, பொதுவான பிரசுரங்களோ, பதாகைகளோ, கோஷ அட்டைகளோ கிடையாது! தனித்தனியாக அணிவகுத்துச் செல், ஆனால் ஒருங்கிணைந்து தாக்கு! மேலும், எப்படி வேலைநிறுத்தம் செய்வது, யாரை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்வது, எப்பொழுது வேலைநிறுத்தம் செய்வது என்பதற்கு மட்டும் உடன்படு!”

ஒரு ஐக்கிய முன்னணியின் வருங்கால உறுப்பினர் கட்சியான காங்கிரஸை விட்டுக்கொடுக்கும் யெச்சூரியின் முயற்சியை ட்ரொட்ஸ்கி ஆதரித்த கொள்கைக்கு ஒப்பிடுவது வெளிப்படையாகவே அபத்தமானது. 1930 களின் தொடக்கத்தில், SPD நீண்டகாலமாக அதன் புரட்சிகர மூலங்களை காட்டிக் கொடுத்ததோடு, முதலாளித்துவ ஆட்சியின் பாதுகாவலனாக மாற்றப்பட்டுவிட்டது, என்றாலும் பாரிய தொழிலாள வர்க்க உறுப்பினர்களையும், தொழிற்சங்கங்களில் இணைந்த மில்லியன் கணக்கிலான உறுப்பினர்களையும் கொண்ட SPD ஒரு முதலாளித்துவ தொழிலாளர் கட்சியாகவே இருந்தது.

பரம்பரை தலைமைத்துவத்தைக் கொண்ட ஒரு வலுவற்ற முதலாளித்துவ தேர்தல் இயந்திரமாகவே காங்கிரஸ் கட்சி தற்போது உள்ளது. சுதந்திர இந்தியாவின் ஏழு தசாப்த கால முதலாளித்துவ ஆட்சியின் பிரதான கட்சியாக அது இருந்து வந்துள்ளது. இந்தியாவை, உலக முதலாளித்துவத்திற்கு ஒரு மலிவு உழைப்பு புகலிடமாகவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஒரு “மூலோபாய பங்குதாரர்” ஆகவும் உருவாக்கும் உந்துதலில் 1991 க்கு பிந்தைய இயக்கத்தை அது முன்னெடுத்தது, மேலும் ஸ்ராலினிஸ்டுகளின் “மதச்சார்பற்ற” தன்மையினாலான உயர்வுக்கு சான்றுகள் இருந்தாலும், இந்து வலதுக்கு அதுவும் பலமுறை மறைமுக ஆதரவாளராக இருந்து வந்துள்ளது.

யெச்சூரி ட்ரொட்ஸ்கிசத்தின் ஒரு பரம எதிரி. சிபிஎம் இன் மற்ற தலைவர்களைப் போலவே, அவரும் இடது எதிர்ப்பு குறித்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் இரத்தக்களரியான ஒடுக்குமுறையையும், சோவியத் ஒன்றிய கலைப்பிலும், முதலாளித்துவ மீட்சியிலும் உச்சக்கட்டத்தை அடைந்த “தனியொரு நாட்டில் சோசலிச” தேசியவாத வேலைத்திட்டத்தையும் உறுதியுடன் பாதுகாக்கிறார். இந்திய ஸ்ராலினிஸ்டுகளின் நெருக்கடி குறித்த ஒரு அளவீடாக இருக்கும் சிபிஎம் இன் வலது நோக்கி மேலும் ஏற்பட்டுள்ள சரிவை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியில் தான், சிபிஎம் இன் பொதுச் செயலாளர் நான்காம் அகிலத்தின் நிறுவனரின் பெயரை இப்போது சிடுமூஞ்சித்தனமாக பிரயோகித்திருக்க வேண்டும்.

பல தசாப்தங்களாக CPM தலைவர்கள் சிவப்பு கொடிகளை அசைத்தும், "ஏகாதிபத்திய எதிர்ப்பு" மற்றும் மார்க்சிச வாய்வீச்சுக்களை பயன்படுத்தியும் கொண்டு, முதலாளித்துவ ஸ்தாபகத்திற்குள் தங்களை ஒருங்கிணைத்துக்கொண்டனர். 1991 இல் இருந்து 2008 வரையிலும் மத்தியில் அரசாங்கம் அமைத்த அடுத்தடுத்த “பிஜேபி எதிர்ப்பு” வலதுசாரி அரசாங்கங்களை அவர்கள் தாங்கிப்பிடித்ததையும், மேலும், அவர்கள் அரசாங்கம் அமைத்த மூன்று மாநிலங்களிலும் அவர்களே “முதலீட்டாளர் சார்பு” கொள்கைகள் என அழைத்ததை செயல்படுத்தியதையும் இது உள்ளடக்கியுள்ளது.

அதன் விளைவாக, ஒரு டசின் பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைக்கப்பட்ட, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளுமன்ற கீழ்சபையான மக்களவையில் சிபிஎம் இன் பிரதிநிதித்துவத்துடன் தொழிலாள வர்க்கத்தினருக்கு இருந்த ஆதரவு வீழ்ச்சியடைந்துபோனது.

சிபிஎம் தலைமைக்குள் இருக்கும் யெச்சூரியின் எதிர்ப்பாளர்கள் ஆதரிக்கும் கொள்கையும் தொழிலாள வர்க்க நலன்களுக்கு முரணாகவே உள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உயிர்வாழ் ஆதரவு தேவைப்படும் காங்கிரசுக்கு சிபிஎம் உதவி அளிக்க வேண்டுமென யெச்சூரி விரும்புகிறார், அதேசமயம், தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக கடுமையான விரோதம் கொண்டுள்ள, மேலும் காங்கிரஸ் மற்றும் பிஜேபி இரண்டு கட்சிகளுடனும் பலமுறை கூட்டணி அமைத்திருந்த பிராந்திய மற்றும் சாதிய அடிப்படையிலான கட்சிகளுடன் தேர்தல் கூட்டணியை உருவாக்க சிபிஎம் இற்கு காரத்தின் கன்னை ஆலோசனை வழங்குகின்றது.

இந்த வேறுபாடுகள் பெரும்பாலும் குறுகிய தேர்தல் கணிப்புகளுக்குள் வேரூன்றி உள்ளன, ஆனாலும் ஆதரவு வலையமைப்பை அணுகுவதில் அவை பிணைந்துள்ளதால், அதுதொடர்பான விவாதம் கடுமையானது. யெச்சூரிக்கு, சிபிஎம் இன் மேற்கு வங்க மாநில பிரிவின் ஆதரவு உள்ளது. சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி மேற்கு வங்கத்தை தொடர்ச்சியாக 34 ஆண்டுகள் ஆட்சி செய்தது, 2011 இல் முடிவடைந்தது, ஆனால் இப்பொழுது மாநில சட்டமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக மட்டுமே அது உள்ளது. வலதுசாரி கட்சிகளுக்கும், கடுமையான எதிர்க்கட்சிகளான திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கும் இடையே மாநில அரசியல் பெரிதும் தீவிரப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் காணாமற் போவதை காட்டிலும் காங்கிரஸ் உடனான கூட்டணியை உருவாக்குவது சிபிஎம் இற்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது.

கேரளாவில், தற்போது ஸ்ராலினிஸ்டுகள் தான் மாநில அரசாங்கத்தை வழிநடத்துகின்றனர், அங்கு சிபிஎம் இன் பிரதான தேர்தல் போட்டியாளராக காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் உடனான வெளிப்படையான தேர்தல் கூட்டணியால் அதன் ஆதரவு கீழறுக்கப்படுமோ என்ற கேரள மாநில சிபிஎம் தலைமையின் ஐயங்களுக்காக காரத்தின் கன்னை குரல் கொடுக்கின்றது.  

காங்கிரஸ் உடன் சிபிஎம் நெருக்கமாக ஒத்துழைக்குமானால், தொழிலாளர்கள், கிராமப்புற ஏழைகள் மற்றும் இளைஞர்கள் இடையே தங்களது கட்சி இன்னும் இழிவிற்குள்ளாகுமோ என்று காரத்தின் கன்னை அச்சப்படுகின்றது. இந்நிலையில், கடந்த மாத மத்திய செயற்குழு கூட்டத்தின் போது காரத்தின் கன்னை, “பிஜேபி க்கு எதிராக பாரிய இயக்கங்களை வலுப்படுத்த முயற்சியெடுக்க வேண்டும் என்றும், ஒருவேளை காங்கிரஸ் உடன் சிபிஎம் இணைந்தால் இந்த நிலைப்பாடு நீர்த்துப்போய்விடக்கூடும்” என்றும் வாதிட்டது.

ஊடக அறிக்கைகளின்படி, யெச்சூரியின் நிலைப்பாட்டின் மீது காரத்தின் கன்னை கோபம் கொண்டுள்ளதால், சிபிஎம் பொதுச் செயலாளர் பதவி குறித்து வழமையாக இரண்டாவது முறையாக வழங்கப்படும் வாய்ப்பை அவருக்கு வழங்காமலிருக்க அவர்கள் முனையலாம்.

இருப்பினும், மே 2004 முதல் ஜுன் 2008 வரையிலும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி (United Progressive Alliance-UPA) அரசாங்கத்திற்கு ஒரு பிரதான ஆதரவாளராக செயலாற்றிய சிபிஎம் தலைமையிலான இடது முன்னணி அப்போது காரத் தலைமையின் கீழ் இருந்தது. உண்மையில், சிபிஎம், அரசாங்கத்திற்கு வெளியிலிருந்து முறையாக செயலாற்றிய போதும், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய அனைத்து கட்சிகளையும் ஏற்றுக்கொள்ள செய்வதிலும், மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை பெயரளவிற்கு குறிப்பிடுவதான பொதுவான குறைந்தபட்ச வேலைத்திட்டத்தை (Common Minimum Programme) எழுதுவதிலும் முக்கிய பங்கு வகித்தது.

யெச்சூரியின் ஆதரவுடன் மேற்கு வங்க சிபிஎம், மத்திய குழுவின் முடிவையும் மீறி, 2016 மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்காக ஸ்ராலினிஸ்டுகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே முதன்முதலில் பகிரங்கமாக அறிவிக்கப்பட்ட தேர்தல் கூட்டணியை உருவாக்கிய போது, காரத்தும் அவரது பிரிவினரும் கண்டும் காணாதது போல இருந்தனர். சிபிஎம் இற்கு தோல்வியாக தேர்தல் முடிவடைந்த பின்னரே, மேற்கு வங்க சிபிஎம் தலைமையை நோக்கி காரத் பிரிவினர் திரும்பி பார்த்து, காங்கிரஸ் உடனான கூட்டணியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவரவும், கட்சி கொள்கையை மீறியதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவும் அதனை வலியுறுத்தியது.

சிபிஎம் இன் இரு கன்னைகளும், மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் ஜோதி பாசுவின் கூற்றான “சோசலிசம் ஒரு தொலைதூர அவலக் குரலாக” நிராகரித்து, வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் இந்திய முதலாளித்துவ உந்துதலுக்கு வெறுமனே ஆதரவளித்தனர். வாஷிங்டன் உடன் ஒரு மூலோபாய கூட்டணியை அபிவிருத்தி செய்வது உள்ளிட்ட இந்திய முதலாளித்துவத்தின் பெரும் சக்தியாக உருவெடுக்கும் இலட்சியங்களுக்கும் அதனால் தான் அவர்கள் உதவி செய்தனர்.

போர் குற்றவாளியான ஜோர்ஜ் டபிள்யூ புஷ் இன் கீழ் அமெரிக்காவுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்ததனாலும், மேலும் அதுவே இந்தியாவின் பாரிய இராணுவ விஸ்தரிப்புக்கு ஆதரவாக இருந்ததனாலும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியை சிபிஎம் தாங்கிப்பிடித்தது. செப்டம்பர் 2016 இல் பாகிஸ்தான் உள்ளே பிஜேபி அரசாங்கம் சட்டவிரோதமான மற்றும் ஆத்திரமூட்டும் வகையிலான “நுட்பமான தாக்குதல்களை” தொடங்கிய போது, காரத்தின் ஒரு கூட்டாளியாக, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், மாநில சட்டமன்றத்தில் இந்திய இராணுவத்தை வாழ்த்தும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்.     

வர்க்கப் போராட்டம் குறித்த ஸ்ராலினிஸ்டுகளின் பல தசாப்த கால ஒடுக்குமுறையுடனும், மற்றும் மத்திய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் முதலாளித்துவ திட்ட நிரலை செயல்படுத்துவதில் தீவிர பங்கு வகித்ததுமே இந்துமத வலதுகளின் எழுச்சியுடன் நேரடியாக தொடர்புபட்டுள்ளது. பிற்போக்கு வளர்ச்சிக்கு வழிவகுத்த முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தை அடிபணிய வைக்கும் அதே வழிவகைகளை ஊக்குவிக்கும் வகையில், இனவாதத்தை தூண்டுவது, மற்றும் சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வது உள்ளிட்ட, நரேந்திர மோடியின் கீழ் நிகழ்த்தப்படும் பிஜேபி இன் குற்றங்களை ஸ்ராலினிஸ்டுகள் தற்போது சுட்டிக்காட்டுகின்றனர்.

தொழிலாள வர்க்கம் ஒரு புதிய பாதையை கண்டுகொள்ள வேண்டும்: அது முதலாளித்துவத்தின் அனைத்து அரசியல் பிரதிநிதிகளிடமிருந்தும் அதன் அரசியல் சுயாதீனத்தை உருவாக்க வேண்டும், வறுமை மற்றும் கொள்ளைகளில் இருந்து வெகுஜனங்களை வெளியேற்றும் வகையில், இந்திய முதலாளித்துவத்தின் தோல்விக்கு அதன் சொந்த சோசலிசத் தீர்வை முன்னெடுக்க வேண்டும். மேலும் அதன் அடிப்படையில், தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கும் சர்வதேச சோசலிசத்திற்குமான போராட்டத்திற்கு பின்னால் உழைக்கும் தொழிலாளர்களை அணிதிரட்ட வேண்டும்.