ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

සිසු සමිති ආන්ඩුව සමග සම්මුතියකින් සයිටම් විරෝධතා ව්‍යාපාරය නතර කරයි

மாணவர் சங்கம் அரசாங்கத்துடன் சமரசம் செய்துகொண்டு சைட்டம் எதிர்ப்பு இயக்கத்தை நிறுத்தியது

By Pradeep Ramanayake and K. Ratnayake
9 November 2017

மாலபே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை அகற்றுமாறு கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதை தீவிரமாக்குவதற்காக, அரச மருத்துவப் பீட மாணவர்-பெற்றோர்களின் சங்கத்தின் உறுப்பினர்கள் ஐந்து பேர் திங்களன்று ஆரம்பித்த உண்ணாவிரதமானது மாணவர் சங்கத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான சமரசத்துடன் நேற்று கைவிடப்பட்டது.

அதேவேளை, அரசாங்கத்தின் வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்டு, ஒன்பது மாதங்களுக்கும் அதிகமான காலம் மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்த வகுப்பு மற்றும் சிக்கிச்சைப் பயிற்சி பகிஷ்கரிப்பையும் கைவிடுவதற்கு மருத்துவ மாணவர் நடவடிக்கை குழு தீர்மானித்ததோடு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் தனது எதிர்ப்பை நிறுத்திவைத்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன “சைட்டம் நெருக்கடியை தீர்ப்பதன்” பேரில் உருவாக்கிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுடனான கலந்துரையாடலின் பின்னர் வெளியில் வந்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர, “மாணவர்கள் வெற்றிபெற்றுள்ளார்கள்” என பெருமையாகக் கூறிக்கொண்டார். மருத்துவ மாணவர் நடவடிக்கை குழுவின் அழைப்பாளர் ரயன் ஜயலத்தும் அதை மீண்டும் உச்சரித்து, சைட்டத்தை இரத்துச் செய்யமாட்டோம் என அறிக்கை விடுத்த உயர் கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களுக்கு, “தாம் வேலையை செய்து காட்டியதாக” போலியாக கிண்டல் செய்தனர். இந்த வாய்ச்சவடால், அரசாங்கம் கல்வி தனியார்மயமாக்கத்தை எந்தவகையிலும் நிறுத்தப் போவதில்லை என்பதை மூடி மறைப்பதாகும்.

அ.ப.மா.ஒ., மருத்துவ மாணவர் நடவடிக்கை குழு மற்றும் அவற்றை அரசியல் ரீதியில் இயக்கிவரும் முன்னிலை சோசலிசக் கட்சியும் (மு.சோ.க.) மாணவர் எதிர்ப்பை நிறுத்துவதற்காக, ஹர்ஷ டி சில்வா கலந்துரையாடலின் போது கொடுத்த வாக்குறுதியையே பற்றிக்கொண்டுள்ளன. சில்வா விடுத்த அறிக்கையில், “சைட்டம் நிறுவனத்தை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என கூறப்படுகின்றது. இந்த அறிக்கை, அக்டோபர் 29 அன்று ஜனாதிபதி சிறிசேன “சைட்டம் நெருக்கடியை தீர்க்கும்” பெயரில் விடுத்த அறிக்கையில் இருந்து அடிப்படையில் மாறுபட்டதல்ல.

“சைட்டம் இரத்துச் செய்தல்” என்பது வெறுமனே அந்த பெயரில் இருக்கும் தனியார் மருத்துவ பீடத்தை அகற்றுவது மட்டுமே. கல்வி தனியார்மயமாக்கம் மற்றும் அதன் பாகமாக, தனியார் மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்படுவது நிறுத்தப்பட போவதில்லை. சைட்டம் நிறுவனம் வேறு பெயர்களில் வேறு வடிவங்களை ஸ்தாபித்துக்கொண்டு, மருத்துவ பட்டங்களுக்காக கல்வியை விற்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

ஆழமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்துக்கு எதிராக, தொழிலாளர் மற்றும் ஏழைகளின் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வருகின்ற நிலைமையின் கீழேயே சிறிசேனவின் பிரேரணை முன்வைக்கப்பட்டது. நீண்ட காலமாக இழுபட்டுச் சென்ற மாணவர்களதும் வைத்தியர்களதும் போராட்டங்களை நிறுத்துவதற்காக, சைட்டம் விரோதத்துக்கு அழைப்பு விடுத்த அமைப்புகளை அணிதிரட்டிக்கொள்வதே சிறிசேனவின் குறிக்கோளாகும். எனினும், சைட்டம் முகமூடி மாற்றத்துக்காக அரசாங்கம் முன்வைத்துள்ள பிரேரணையை, நீண்ட மற்றும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்ட மாணவர்கள், வைத்தியர்கள் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சிந்திக்கும் தட்டினர் மத்தியில் நுழைத்து உடனடியாக அவர்களது போராட்டத்தைக் கைவிடச் செய்வது இலகுவான காரியம் அல்ல என்பதை நன்கு அறிந்திருந்த மாணவர் ஒன்றியத்தைப் போலவே, சைட்டம் எதிர்ப்பைச் சூழ அணிதிரண்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மற்றும் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உட்பட அமைப்புகள், சிறிசேனவின் அழைப்புக்கு அடிபணிவதற்காக சாக்குப் போக்கைத் தேடுவதிலேயே கடந்த இரண்டு வாரங்களாக ஈடுபட்டிருந்தன.

முன்னிலை சோசலிசக் கட்சி மற்றும் ஜே.வி.பி.யும் ஜனாதிபதியின் பிரேரணையை “அனுகூலமானது” என வருணித்து, மேலும் முன்செல்லுமாறு அவருக்கு வேண்டுகோள் விடுத்தன. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தைக்கு நுழைந்து, போலி அனுகூலமான பிரேரணையை தெளிவுபடுத்தி, அதை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக்கொண்ட அதேவேளை, பெற்றோர்களின் உண்ணாவிரதத்துக்கு “ஒத்துழைப்பு கொடுத்து” அதை அரசாங்கத்துடன் சமரசத்துக்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமானது தனியார்மயமாக்கங்களுக்கு எதிரானது அல்ல. அது சைட்டத்தை சூழ்ந்த பிரச்சாரத்தின் மூலம், தனியார்மயமாக்கலுக்கு எதிரான மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் விரோதத்தை கரைத்துவிடுவதிலேயே ஈடுபட்டிருந்தது.

உண்ணாவிரதம் நடந்த இடத்தில், திங்களன்று, ஊடகங்களின் முன் உரையாற்றிய அ.ப.மா.ஒ. அழைப்பாளர் லஹிரு வீரசேகர, “இந்த உண்ணாவிரத நடவடிக்கையை தொடங்கியிருந்தாலும், இன்னமும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் வெளிப்படையாக உள்ளன” எனக் கூறினார். இந்த கருத்தின் உள்ளர்த்தம், அரச கல்வியை வெட்டுவதற்கு எதிரான மாணவர்களை திருப்பி அனுப்பக்கூடியவாறான பிரேரணைகளை அரசாங்கம் கொடுக்குமெனில், அதை இரண்டு கைகளாலும் ஏந்திக்கொள்வதற்கு தாயார் என்பதே ஆகும்.

முன்னிலை சோசலிசக் கட்சி, மிகவும் திட்டமிட்டே, சைட்டத்தை இரத்துச் செய் என்ற தனியான பிரச்சினை மீதான பிரச்சாரமொன்றில் மாணவர்களை சிறைவைப்பதன் பேரில், அ.ப.மா.ஒ. மற்றும் மருத்து மாணவர் நடவடிக்கை குழுவை பயன்படுத்திக்கொண்டது. கல்வி மற்றும் சுகாதாரத்தை தனியார்மயமாக்கலுக்கு எதிரான போராட்டமானது, அரசாங்கத்தினதும் முதலாளித்துவ வர்க்கத்தினதும் கொள்கையை அரசியல் ரீதியில் தோற்கடிப்பதற்கான பாரதூரமான போராட்டமாகும். ஏனெனில், அவை, அரசாங்கத்தின் பரந்த தாக்குதல்களின் பாகமாக இருக்கின்றன.

ஜனாதிபதி சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் பொருளாதார சிக்கன கொள்கைகள், சர்வதேச மூலதனத்தினதும் அதன் இலங்கை கைக்கூலிகளான இலங்கை பெரும் முதலாளிகளதும் தேவையின்படி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியாலுமே திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கொள்கைகளை தோற்கடிப்பதற்கான போராட்டம், சோசலிச கொள்கைகளை நடைமுறைப்படுத்துகின்ற தொழிலாளர்களதும் விவசாயிகளதும் அரசாங்கமொன்றை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. அது அனைத்துலக தொழிலாள வர்க்கத்தின் ஒத்துழைப்புடன், உலக சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பாகமாகும்.

ஒரு சில முதலாளிகளது இலாபத்துக்காக அன்றி, சமுதாயத்தில் பரந்த பெரும்பான்மையினரின் தேவைக்காக, பொருளாதாரத்தை மறு ஒழுங்கு செய்யும் நிலைமைகளை உருவாக்குவதன் மூலம் மட்டுமே, இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கும் அபிவிருத்தி செய்வதற்கும் வளங்களைப் பயன்படுத்த முடியும். அதாவது, தொழிலாள வர்க்கமானது ஏழைகளதும் இளைஞர்களதும் ஆதரவுடன் பிரதான முதலாளித்துவ கூட்டுத்தாபனங்கள், வங்கிகள் மற்றும் பெருந்தோட்டங்களை கைப்பற்றிக்கொண்டு, தொழிலாளர்களது ஜனநாயக கட்டுப்பாட்டின் கீழ் திட்டமிடப்பட்ட உற்பத்தி நடவடிக்கைகளுக்காக பொருளாதாரத்தை மறு ஒழுங்கு செய்ய வேண்டும். அதே போல், வெளிநாட்டு கடன்கள் திருப்பிச் செலுத்தப்படாமல் இரத்துச் செய்யப்பட வேண்டும்.

சோசலிச சமத்துவக் கட்சியும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பும் மட்டுமே, இலவசக் கல்வி உரிமையை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தலையீடு செய்து இந்த புரட்சிகர வேலைத் திட்டத்தை முன்வைத்தன.

கல்வி உரிமையை அபகரித்துக்கொள்வதற்காக ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த தாக்குதல்களுக்கு எதிராக மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் எதிர்ப்பு வளர்ச்சியடைந்து வந்த நிலைமையின் கீழ், 2008ல் சைட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, அ.ப.மா.ஒன்றியத்தின் மருத்துவ மாணவர் நடவடிக்கை குழுவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும், அவை பிணைந்துள்ள முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாத்து அதற்குள் பிரச்சினையை தீர்த்துக்கொள்ள முடியும் என்ற மாயையை பரப்பியவாறே சைட்டத்தை இரத்துச் செய்யக் கோரி அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரமொன்றிற்குள் அந்த எதிர்ப்பை தடுத்துவைத்தன.

நேற்று மாணவர் சங்கத்தை அரசாங்கத்துடன் சமரசத்துக்கு கொண்டுவந்ததில் உத்வேகமடைந்த முன்னிலை சோசலிச கட்சியின் ஒரு தலைவரான துமிந்த நாகமுவ, உண்ணாவிரத மேடைக்கு அருகில், “போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் செய்த பிரமாண்டமான அர்ப்பணிப்பின் காரணமாகவே இத்தகைய வெற்றியை எம்மால் பெற முடிந்தது, இந்த நாட்டின் தொழிலாளர்களின் ஓய்வூதிய உரிமை இரத்துச் செய்யப்பட்டுள்ளது, சுகாதாரத் துறையின் காணிகள் பிரச்சினையின்றி விற்கப்படுகின்றன, அரச நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட்டு வருகின்றன, உங்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு போராட்டப் பாதையே என நாம் நினைக்கின்றோம்” என பிதற்றிக்கொண்டார்.

சைட்டத்தை இரத்துச் செய்வதாக சில்வா விடுத்த அறிக்கையையே நாகமுவ வெற்றி என அறிவித்துள்ளார். அரசாங்கம் அரச கல்வியை தனியார்மயமாக்குவதை நிறுத்தப் போவதில்லை என்பதை அவர் கவனமாக மூடிமறைத்தார். தனியான பிரச்சினைகள் மீதான பிரச்சினைகளுக்குள் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை தடுத்து வைப்பதற்காகவும் முதலாளித்துவ அரசாங்கத்துக்கு எதிராக அரசியல் போராட்டம் ஒன்றை அபிவிருத்தி செய்வதற்கு விரோதமாக, மாணவர் பிரச்சாரத்தை மிகைப்படுத்திக் காட்டுவதற்கே இப்போது இந்த அமைப்புகள் தயாராகின்றன. முதலாளித்துவ சார்பு ஜே.வி.பி. அவர்களுக்கு உதவுகின்றது. அத்தகைய “எதிர்ப்பை” ஏற்பாடு செய்வதில், எந்தவொரு பிற்போக்காளனுடனும் கூடவும் கூட்டுச் சேர்வதற்கு முன்னிலை சோசலிசக் கட்சி தயார் என்பதை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ குழுவின் தலைவர்களை மாணவர்களின் மேடைக்கு அழைத்து வந்ததன் மூலம் காட்சிப்படுத்தியது.