ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

China invests billions in Eastern Europe, heightening tensions with Germany

சீனா கிழக்கு ஐரோப்பாவில் பில்லியன்களை முதலீடு செய்வது, ஜேர்மனி உடனான பதட்டங்களை அதிகரிக்கிறது

By Peter Schwarz
30 November 2017

கிழக்கு ஐரோப்பாவில் சீன முதலீடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து பலமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளன. விரைவாக விரிவடைந்து வரும் அந்த ஆசிய பொருளாதார சக்தியை குறிப்பாக ஜேர்மனி ஒரு பங்காளி என்பதைக்காட்டிலும் ஒரு போட்டியாளராக காண்கிறது.

திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் 16+1 கூட்டுறவு அமைப்பு எனப்படுவதன் ஆறாவது உச்சிமாநாடு புடாபெஸ்டில் நடந்தது. அதில் சுமார் 1,000 தொழிலதிபர்கள் உட்பட சீன பிரதம மந்திரி லி கெக்கியாங்கும் கலந்து கொண்டனர்.

கிழக்கு ஐரோப்பாவிற்கான முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களுக்கு 3 பில்லியன் டாலர் வழங்க லீ பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டொர் ஓர்பன் உடன் மட்டுமே 11 இருதரப்பு உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டார்.

2012 இல் ஸ்தாபிக்கப்பட்ட 16+1 கூட்டுறவு அமைப்பானது சீனா மற்றும் முன்னாள் சோவியத்-செல்வாக்கில் இருந்த கிழக்கு அணி நாடுகளை உள்ளடக்கியதாகும். அதில் பங்கு வகிக்கும் ஐந்து பால்கன் நாடுகளை தவிர, பதினோறு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திலும் அங்கத்துவ நாடுகளாக உள்ளன.

கிழக்கு மற்றும் மத்திய ஐரோப்பிய நாடுகளுடனான சீனக் கூட்டுறவு (CEEC), சீனாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான வர்த்த பாதைகளை ஒட்டி போக்குவரத்து மற்றும் பொருளாதார திட்டங்களில் பெரும் முதலீடுகளை உள்ளடக்கி உள்ள "ஒரே இணைப்பு, ஒரே பாதை" (OBOR) என்று அறியப்படும் அதன் புதிய பட்டுச் சாலை மூலோபாயத்தின் பாகமாக உள்ளது.

புடாபெஸ்ட்டில் இருந்து சேர்பிய தலைநகரம் பெல்கிராட் வரையில் ஒரு புதிய இரயில் இணைப்பைக் கட்டமைக்கும் திட்டம், இவ்வார உச்சி மாநாட்டில் ஒப்புக் கொள்ளப்பட்ட மிக முக்கியமான திட்டமாக இருந்தது. அந்த 2.1 பில்லியன் டாலர் திட்டத்தின் எண்பத்தி ஐந்து சதவீதத்திற்கு, சீன ஏற்றுமதி-இறக்குமதி வங்கி (Exim Bank) நிதியுதவி வழங்கும். இது, சீன கப்பல் கட்டுதல், பழுதுபார்த்தல் தளவாடங்கள் வினியோகித்தல் நிறுவனமான Cosco இன் மிகப்பெரும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பிரேயுஸ் கிரேக்க துறைமுகத்தையும் ஐரோப்பிய இரயில் வலையமைப்பையும் இணைக்கும். இது தவிர பால்கன்களின் இரயில் மற்றும் சாலை திட்டங்களுக்கும் சீனா நிதி வழங்க உள்ளது.

சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பாவுக்கு இடையே முதலீடு மற்றும் வர்த்தகம் 16+1 கூட்டுறவு அமைப்பின் கட்டமைப்பிற்குள் வேகமாக வளர்ந்துள்ளது. மொத்த வர்த்தகம் 2009 இல் இருந்து 2014 க்குள் 100 பில்லியன் டாலருக்கு அதிகரித்தது. அப்பிராந்தியத்தற்கான சீன இறக்குமதிகளின் சதவீதம் 2 சதவீதத்திற்கும் சற்று குறைந்திருந்ததில் இருந்து 6 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக அதிகரித்தது. ஹங்கேரியும் செக் குடியரசும் இப்போது பிரான்ஸ், இத்தாலி அல்லது நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்வதைக் காட்டிலும் தொலைதூர கிழக்கில் இருந்து அதிக பண்டங்களை இறக்குமதி செய்கின்றன.

அப்பிராந்தியத்தில் இப்போதைய சீன முதலீடுகள் மொத்தம் 6 பில்லியனுக்கும் 8 பில்லியன் டாலருக்கும் இடையில் உள்ளது. 15 பில்லியன் டாலர் சீன முதலீடுகள் திட்டமிடப்பட்டுள்ளதாக வாஷிங்டனை மையமாக கொண்ட CSIS சிந்தனை குழாம் மதிப்பிட்டது.

இதுவும், முன்னதைப் போலவே, மொத்த அளவில் ஒரு சிறிய சதவீதமே. போலாந்தில் மட்டும், மொத்த வெளிநாட்டு நேரடி முதலீடு 200 பில்லியன் டாலராக உள்ளது, ஆனால் போலாந்து, செக் குடியரசு, ஸ்லோவேகியா மற்றும் ஹங்கேரி ஆகிய வீஸெகிராட் நாடுகளுக்கு (Visegrad states) 2014-2020 காலத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவு திட்ட பரிவர்த்தனைகள் மொத்தம் 150 பில்லியன் யூரோ வரையில் தான் உள்ளது.

கிழக்கு ஐரோப்பாவில் அதன் நடவடிக்கை, ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களைச் சவால் செய்யும் நோக்கம் கொண்டதல்ல என்பதை சீன தலைமை தொடர்ந்து மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. கடந்த ஆண்டு லாட்விய தலைநகர் ரிகாவில் நடந்த 16+1 கூட்டுறவு அமைப்பின் கூட்டத்தில் லீ கெக்கியாங் குறிப்பிடுகையில், இந்த கூட்டுறவு அமைப்பானது சமாதானம் மற்றும் ஸ்திரப்பாட்டை பலப்படுத்தி, சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே கூட்டுறவு அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த, வளமான, நிலையான ஐரோப்பாவில் சீனா ஆர்வம் கொண்டுள்ளது என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஆனால் புரூசெல்ஸூம் பேர்லினும் விடயங்களை வேறுவிதமாக பார்க்கின்றன. ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மார் காப்ரியேல் சீனாவினால் ஏற்படும் ஐரோப்பாவின் பிளவு குறித்து இந்த கோடையில் எச்சரித்தார். அந்த பட்டுச் சாலை முனைவை ஒரு மிகப்பெரிய புவிசார் அரசியல், கலாச்சார, பொருளாதார, இறுதியாக இராணுவ மூலோபாயமாக வர்ணித்த அவர், அதனுடன் ஐரோப்பிய ஒன்றியம் தற்போதைக்குப் போட்டியிடவே முடியாது என்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்ற வர்த்தக குழுவின் தலைவர் பேர்ன்ட் லாங்க அதேபோன்றவொரு கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினார். “கிழக்கு ஐரோப்பாவில் சீனாவின் முதலீடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆழமாக பிளவுபடுத்தும் அபாயத்தை கொண்டுள்ளது,” என்று ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதி எச்சரித்தார். பல பில்லியன்களை வாரியிறைத்து, சீனா "ஐரோப்பிய அரசியல் மீதான செல்வாக்கை விலைக்கு வாங்கி" வருகிறது என்ற பயம் நிலவுகிறது.

“சீனா, கிழக்கு ஐரோப்பாவை பணிய வைக்கிறது,” என்று தலைப்பிட்ட ஒரு கருத்துரையில், Süddeutsche Zeitung குறிப்பிட்டது, “சீனாவுடனான மோதலில் பணயத்தில் இருக்கும் பிரச்சினையானது, ஐரோப்பாவின் சுய-உறுதிப்பாட்டுக்கு மேலானது.” “புரூசெல்ஸ் வழியாக செல்லாமல்" ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு பாதையைப் பெறுவதற்காக "ஐரோப்பாவின் பலவீனமான இடங்களையும் பிரி கோடுகளையும்" சீன அரசாங்கம் சாதகமாக்கி கொள்வதாக அப்பத்திரிகை குற்றஞ்சாட்டியது. ஆசியா, ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைப் போலவே, சீனாவும் ஐரோப்பாவில் "பொருளாதாரரீதியில் விரிவடைவதன் மூலமாக அதன் வல்லரசாகும் வேட்கையை திருப்திப்படுத்திக்" கொள்ள உத்தேசிக்கிறது.

முதலாளித்துவ மீட்சியைத் தொடர்ந்து, கிழக்கு ஐரோப்பா சில காலமாக ஜேர்மனி மற்றும் ஏனைய மேற்கு ஐரோப்பிய சக்திகளின் கொல்லைப்புறமாக சேவையாற்றின. ஐரோப்பிய ஒன்றியத்தால் ஆதரிக்கப்பட்ட ஊழல் ஆட்சிகள், சமூக சேவைகள் மற்றும் கல்வி முறையை அழித்த அதேவேளையில், மேற்கு ஐரோப்பிய நிறுவனங்களோ பெரும்பாலும் மேற்கு கூலிகளில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவானதற்கு சமமான குறைந்த கூலிகளில் நன்கு படித்த தொழிலாளர்களைச் சுரண்டின.

புரூசெல்ஸிடம் இருந்து தங்களைத் தூர விலக்கி கொண்டதன் மூலம் வலதுசாரி சக்திகள், அதிகரித்து வந்த கோபத்தை தேசியவாத வழிகளுக்குள் திருப்பி கொள்ள இந்த நீடித்த சமூக வீழ்ச்சியைச் சுரண்டிக் கொண்டுள்ளன. ஹங்கேரி, போலாந்து மற்றும் செக் குடியரசில், இதுபோன்ற கட்சிகளே இப்போது ஆட்சியில் உள்ளன. ஹங்கேரிய பிரதம மந்திரி ஓர்பனைப் பொறுத்த வரையில், சீனாவிடமிருந்து வந்த அரசு விஜயத்தை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தான அவரது சுதந்திரத்தை எடுத்துக்காட்ட ஒரு நல்வரவு சந்தர்ப்பத்தை வழங்கியது. பேர்லினும் புரூசெல்ஸூம் சீற்றத்துடன் விடையிறுத்தன.

ஆனால் கிழக்கு ஐரோப்பாவில் சீனாவின் முன்னேற்றமானது, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கான ஒரு காரணம் மட்டுந்தான். கூட்டுறவை ஆழப்படுத்துவதற்காக 2011 உக்கு பின்னர் வழமையான அரசு கலந்தாலோசனைகளை நடத்தியமை உட்பட, ஜேர்மன் அரசாங்கம் சில வேளைகளில் சீனாவுடன் நெருக்கமாக ஒத்துழைத்தது. சீனா, ஜேர்மனியின் இயந்திர மற்றும் வாகன தொழில்துறைக்கு மிக முக்கிய விற்பனை சந்தையாக விளங்குகிறது. ஜேர்மனியின் மிகப்பெரிய வாகன நிறுவனமான வோல்ஸ்வாகன், ஜேர்மனியை விட சீனாவில் அதிக வாகனங்களை விற்பனை செய்கிறது.

ஆனால் சீன நிறுவனங்கள் தொழில்நுட்பரீதியில் தாக்குப்பிடித்து, உலக சந்தையில் ஜேர்மன் நிறுவனங்களுடன் போட்டியிட தொடங்கியதும் மற்றும் ஜேர்மன் நிறுவனங்களை விலைக்கு வாங்க தொடங்கிய பின்னர் பேர்லின் நிலைப்பாடு மாறியுள்ளது. 2015 இல் ஜேர்மனியில் சீன நேரடி முதலீட்டை விட சீனாவில் ஜேர்மன் நேரடி முதலீடு பல மடங்கு அதிகமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இந்த போக்கு திடீரென தலைகீழானது.

குறிப்பாக ஜேர்மன் உயர்-தொழில்நுட்ப நிறுவனங்களை சீன நிறுவனங்கள் வாங்குவதற்கு பேர்லின் ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றியது. ஒரு சீன நிறுவனம் robot உபகரண உற்பத்தியாளர் Kuka ஐ ஒரு சீன நிறுவனம் விலைக்கு வாங்கிய பின்னர், கடந்த கோடையில் ஜேர்மன் அரசாங்கம் எதிர்வரும் காலத்தில் இதுபோன்ற கையகப்படுத்தல்களை தடுக்க அதற்கு உதவும் வகையில் ஒரு சட்டமசோதாவை நிறைவேற்றியது.

பகுப்பாய்வின் இறுதியில், பெய்ஜிங், புரூசெல்ஸ் மற்றும் பேர்லினுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்கள், டொனால்ட் ட்ரம்பின் "அமெரிக்கா முதலில்" கொள்கைகளை வாஷிங்டன் ஏற்றதுடன் புதிய உலகளாவிய பரிமாணங்களை எடுத்துள்ள வர்த்தக போர் நடவடிக்கைகளின் தீவிரப்பாட்டின் ஒரு விளைபொருளாக உள்ளன. ஏகாதிபத்திய சக்திகள், ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் செய்ததைப் போலவே, செல்வாக்கிற்கும் சந்தைகளுக்குமான ஒரு கடுமையான மோதலைக் கொண்டு பூகோளமயப்பட்ட முதலாளித்துவ நெருக்கடிக்கு விடையிறுத்து வருகின்றன, இது அதிகரித்தளவில் இராணுவ வடிவங்களை ஏற்று வருகிறது.