ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK health care cuts will lead to 100 additional deaths each day

இங்கிலாந்தின் சுகாதார பராமரிப்பு வெட்டுக்கள் நாளொன்றுக்கு 100 கூடுதல் இறப்புக்களுக்கு வழிவகுக்கும்

By Margot Miller
28 November 2017

உலகெங்கிலும், அரசாங்கங்கள் “நிதி இல்லை” என்று காரணம் காட்டி, “செயல்திறன்” மற்றும் “செலவு குறைப்பை” ஊக்குவித்தல் எனும் பெயரில் சுகாதார பராமரிப்பு செலவுகளை வெட்டிக் குறைத்து வருகின்றன. ஆயினும், யதார்த்தம் என்னவெனில், அவற்றின் நேரடி விளைவாக பாரிய மக்களுக்கு காலத்திற்கு முந்திய இறப்பை விளைவாக்குவதோடு, நிதிய தன்னலக்குழு மேலும் செல்வச் செழிப்படைவதற்கான ஆதாரமாக இருக்கிறது.

இங்கிலாந்தில் மட்டும், 1 மில்லியனுக்கும் மேலான வேலை இழப்புக்களைக் கொண்டதும் 100 பில்லியன் பவுண்டுகளுக்கு அதிகமான செலவின வெட்டுக்களின் கொடூரமான தாக்கம் குறித்ததுமான ஒரு ஆய்வு, சுகாதார பராமரிப்பு மற்றும் அத்தியாவசிய சேவைகளின் தொடர்ச்சியான அழிவின் உலகளாவிய தாக்கத்திற்கான ஒரு அறிகுறியை நமக்கு வழங்குகின்றது.

ஆக்ஸ்ஃபோர்ட் மற்றும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகங்கள் (Oxford and Cambridge Universities) மற்றும் லண்டன் பல்கலைக்கழகத்தின் (University of London-UCL) ஒரு கூட்டு அறிக்கை, இங்கிலாந்து தேசிய சுகாதார சேவை (National Health Service-NHS) மற்றும் சமூக பராமரிப்பு ஏற்பாடுகள் மீதான மிகக் கொடூரமான வெட்டுக்கள், கிட்டத்தட்ட 200,000 க்கும் “மேலதிகமான” உயிரிழப்புக்களை இங்கிலாந்தில் 2020 ஆம் ஆண்டின் முடிவிற்குள் விளைவிக்கக்கூடும் என்று கண்டறிந்துள்ளது.

பிரிட்டிஷ் மருத்துவ இதழான BMJOpen இல் வெளியான “இங்கிலாந்தில் இறப்பு விகிதத்தின் மீதான சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு செலவின கட்டுப்பாடுகளின் விளைவுகள்: ஒரு காலமுறை ஆய்வு,” 2009 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 45,000 கூடுதல் இறப்புக்கள் நிகழ்ந்துள்ளதாக மதிப்பிடுகிறது, மேலும் அதிர்ச்சியூட்டுவதாக நாளொன்றுக்கு 100 பேர் வீதம், 2015 முதல் 2020 க்குள் இன்னும் 152,141 இறப்புக்கள் நிகழும் என்றும் முன்கணிப்பு செய்கின்றது.

2008 உலகளாவிய நிதிய சரிவிற்குப் பின்னர், 1 டிரில்லியன் (1,000,000,000,000) பவுண்டுகளை இறைத்து வங்கிகளை பிணையெடுத்ததை தொடர்ந்து, தொழிற் கட்சி அரசாங்கத்தின் கீழ் முதலில் தொடங்கப்பட்டு பின்னர் தொடர்ச்சியான கன்சர்வேட்டிவ் அரசாங்கங்களால் பின்பற்றப்பட்ட சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு செலவின வெட்டுக்களினால் உருவாகும் இறப்பு விகித அதிகரிப்பை இந்த ஆராய்ச்சி இணைப்புகள் தெரிவிக்கின்றன.

“2001 முதல் 2010 வரையிலும்,” “இங்கிலாந்தில் நிலவிய முற்றுமுழுதான இறப்பு எண்ணிக்கை வருடத்திற்கு சராசரியாக 0.77% வீதம் குறைந்தது என்றும், ஆனால், 2011 முதல் 2014 வரையிலும், வருடத்திற்கு சராசரியாக 0.87% வீதம் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது” என்றும் இது தெரிவிக்கிறது.

மிகவும் கூடுதலான மரணங்கள் வயதானவர்களாய் உள்ளது. இந்த ஆய்வுக் காலத்தில், மருத்துவமனையில் இறந்தவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த போதும், முதியவர்களும், மிக பலவீனமானவர்களும் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களது சொந்த வீடுகளிலோ அல்லது பராமரிப்பு இல்லங்களிலோ தேவையின்றி மடிந்து போகும் உண்மையை இது மூடிமறைக்கின்றது. சமூக பராமரிப்பு மீதான செலவின வெட்டுக்கள் அத்தோடு, மருத்துவமனை மற்றும் சமூக செவிலியர் எண்ணிக்கை குறைபாடு உள்ளிட்ட காரணிகள் ஒருங்கே இதற்கு பொறுப்பாகின்றது.

2016 க்கு முந்தைய வெறும் ஆறு ஆண்டுகளில், முதியவர்களுக்கான சமூக பராமரிப்பு குறித்த மொத்த உள்ளூர் நிர்வாகம் செலவுசெய்யும் அளவு 1.57 பில்லியன் பவுண்டாக குறைக்கப்பட்டது, இது 95 பராமரிப்பு இல்லங்களை மூடும் நிலைக்கு இட்டுச்சென்றது. மக்கள்தொகையில் ஒவ்வொரு 100,000 பேருக்கும் சமூகப் பராமரிப்பு செலவினங்களில் தலைவீத குறைப்பு 10 பவுண்டுகளாக இருந்ததுடன் பராமரிப்பு இல்லத்திலான இறப்புக்கள் 5 கூடுதல் ஆகவும் இருப்பதை இந்த ஆய்வு தொடர்புபடுத்தியது.

பல தசாப்தங்களாக, தேவையான கட்டத்தில் செயலற்றிருக்கும் NHS இன் வரலாற்று மரபுக்கு சான்றுரைப்பதாக, 2010-2014 ஆண்டுகளுக்கு இடையில், மக்கள்தொகையில் 85 வயதானவர்களின் எண்ணிக்கையில் எதிர்பார்க்கப்பட்ட அதிகரிப்பு இருந்தது என்றாலும், இங்கிலாந்தில் சமூக பராமரிப்பு செலவுகள் வருடத்திற்கு 1.19 சதவிகிதம் சரிவுற்றது.

மருத்துவமனைகளில் படுக்கைகளை காலியாக்க வேண்டிய கட்டாயத்தில் நோயாளிகள் சரியாக குணமடைவதற்கு முன்னரே அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பல்வேறு உடல்நல பிரச்சினைகளை கொண்ட முதியவர்களோ “படுக்கை தடுப்பான்கள்” என்று இரக்கமற்ற வகையில் குறிப்பிடப்படுகின்றனர். மேலும், “அவசரகால மருத்துவ துறைகள் (Accident and Emergency-A&E), முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015/2016 இல் 900,000 (4.6%) க்கு அதிகமான நோயாளிகள் வருகையையும், 4 சதவிகிததுக்கு அதிகமான அவசரகால மருத்துவமனை சேர்க்கைகளையும் கண்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அவரசரகால பிரிவில் (A&E) 12 மணிநேரத்திற்கு மேல் காத்திருக்கும் வயதான நோயாளிகளின் எண்ணிக்கை மும்மடங்கு பெருகியுள்ளதோடு, தாமதிக்கப்பட்ட மருத்துவமனை விடுவிப்புகளிலும் 31 சதவிகித அதிகரிப்பு இருந்து வந்தது” என்று இந்த அறிக்கை குறிப்பிடுகின்றது.

2010 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளுக்கு இடையே, “சுமார் 6,000 செவிலியர்கள் வெளியேற்றப்பட்டமையானது, அதே காலகட்டத்தில் எதிர்பார்த்தபடி சுமார் 10 சதவிகித உயிரிழப்புக்களை ஏற்படுத்தியது. பலவருட கால ஊதிய கட்டுப்பாடு மற்றும் பயிற்சி மைய குறைப்புக்களால் தற்போது 24,000 செவிலியர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. ஊதிய பறிப்புக்களுக்குப் பின்னர், செவிலியர் பணிக்கான விண்ணப்பங்களின் வருகை 20 சதவிகிதம் குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் (European Union-EU) இருந்து பிரிட்டன் வெளியேற திட்டமிட்டுள்ளதால், EU இல் இருந்து வருகின்ற மூன்றில் ஒரு பங்கு செவிலியர் பணியிட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கையும் இன்னும் மோசமாகிவிடும்.

இறப்பு இடைவெளியை முடிவுக்குக் கொண்டுவர, NHS வரவு-செலவுத் திட்டம் 2021 வரை வருடத்திற்கு 6.3 பில்லியன் பவுண்டிற்கு, அதாவது மொத்தம் 25.2 பில்லியன் பவுண்டிற்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்று இந்த அறிக்கை முடிவடைகிறது. அதற்கு மாறாக, கடந்த வார வரவு செலவு திட்டத்தில், சான்சலர் பிலிப் ஹாமண்ட், NHS க்கு 2.8 பில்லியன் பவுண்ட் கூடுதல் பற்றாக்குறை கொண்ட வரவு செலவுத் திட்டத்தை அறிவித்தார். அதன் பிந்தைய வரவு செலவுத் திட்ட பகுப்பாய்வில், நிதி ஆய்வுகளுக்கான நிறுவனம் (Institute for Fiscal Studies), 2022 வரையிலும் பிரதிவருடம் உற்பத்தி, வளர்ச்சி மற்றும் வருவாய்கள் வீழ்ச்சி கண்டுவருமென முன்கணிப்பு செய்கின்றது. “1980 களில் இருந்து மிகக் கடுமையான நிதியியல் கட்டுப்பாடுகளுக்கு” NHS முகம்கொடுத்து வருவதாகவும் இது தெரிவிக்கிறது. நிதி நெருக்கடி, தற்போதைய 1 சதவிகிதமாக வீழ்ச்சியடைவதற்கு முன்னதாக, 4 சதவிகித வருடாந்திர செலவின வளர்ச்சியுடனும், முதியோர் மக்கள் தொகையுடனும் NHS முறிந்து போகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

பிராந்திய மற்றும் வர்க்க வேறுபாடுகளுக்கு தொடர்புடைய வேறுபட்ட இறப்பு விகிதங்களை BMJOpen அறிக்கை கருத்தில் கொள்ளவில்லை. இருந்தாலும், “சோதனை செய்து, தனிப்பட்ட முறையில் வழங்கப்படுவதே சமூக பாதுகாப்பு என்றும்; மேலும் அணுகுதலையும், தரத்தையும் பாதிக்கக்கூடிய காரணிகளையும்” இது குறிப்பிடுகின்றது.

கன்சர்வேடிவ் கட்சி மற்றும் சுதந்திர ஜனநாயகக் கட்சி கூட்டணியினால் திணிக்கப்பட்ட கோர்டன் பிரவுன் தலைமையின் கீழ் உள்ள தொழிற்கட்சி அரசாங்கத்தால் திட்டமிடப்பட்ட 20 பில்லியன் பவுண்ட்களுக்கான வெட்டுக்களுடன், 2010 இல் இருந்து NHS வேண்டுமென்றே மிதமாக செயலாற்றுகிறது. “மனிதாபிமான நெருக்கடி” என்ற பிரிட்டிஷ் செஞ்சிலுவைச் சங்க எச்சரிக்கையின் அடிப்படையில், 2021 ஆம் ஆண்டிற்குள் “திறன் சேமிப்பில்” இன்னும் 26 பில்லியன் பவுண்ட் திணிக்கப்படவுள்ளது.

தொழிற் கட்சியும், தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் உள்ள அதன் கூட்டாளிகளும் இங்கிலாந்து முழுவதும் உள்ளூர் நிர்வாகத்தினால் சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு அழிக்கப்படுவதற்கு தொடர்ந்து மறைமுகமாக ஒத்துழைக்கின்றன. 2015 இல் ஜெர்மி கோர்பின் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பின்னர், அவரும், அவரின் நிழல் சான்சலர் ஜோன் மெக்டோனலும், சிக்கன நடவடிக்கைகளைத் தொடர்ந்து திணிக்கவும், “சட்டவிரோத” வரவு-செலவுத் திட்டங்களை தடுக்கவும் தொழிற் கட்சி ஆலோசனை சபைக்கு அறிவுறுத்தினர்.

BMJOpen ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவரான, கேம்பிர்ட்ஜ் பல்கலைக்கழக செயல்முறை சுகாதார ஆராய்ச்சி பிரிவின் (Applied Health Research Unit) பேராசிரியர் லாரன்ஸ் கிங், “சிக்கன நடவடிக்கைகள், வளர்ச்சியை ஊக்குவிக்கவோ அல்லது பற்றாக்குறையை குறைக்கவோ செய்யாது என்பது இப்போது தெளிவாகிவிட்டது — இது மோசமான பொருளாதாரம், ஆனால் சரியான வர்க்க அரசியல். இதுவும் பொது சுகாதாரப் பேரழிவே என்பதை இந்த ஆய்வு காட்டுகின்றது. இதைப் பொருளாதாரப் படுகொலை என அழைத்தல் ஒரு மிகைப்படுத்தல் அல்ல” என்று கூறினார்.

விஞ்ஞான சோசலிசத்தின் இணை நிறுவனர் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் அவரது 1845 படைப்பான இங்கிலாந்தில் தொழிலாள வர்க்கத்தின் நிலை என்பதில் விவரித்ததை, துர்நாற்ற நீர் விநியோகம், சிக்கலான வீட்டு அமைப்பு மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட தொழிலாள வர்க்க மாவட்டங்கள் ஆகியவற்றால் ஏற்பட்ட “சமூகப் படுகொலை” என பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தைக் கண்டனம் செய்ததை, இந்த வார்த்தை எதிரொலிக்கிறது.

இங்கிலாந்தின் உயர் பல்கலைக்கழகங்களில் சில புகழ்பெற்ற கல்வியாளர்களால் செய்யப்பட்ட கண்டனம் செய்யும் ஆய்வை எதிர்கொள்கையில், அரசாங்கம் அரசியல் சார்பு கொண்ட வழக்கமான எதிர்ப்பை மட்டுமே வெளியிட்டது. Royal Society of Medicine பத்திரிகை வெளியிட்ட ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழக முந்தைய ஆராய்ச்சி அறிக்கைக்கும் இதேபோன்று பதிலிறுக்கப்பட்டது, இந்த அறிக்கை 70 க்கு மேற்பட்ட ஆண்டுகளில் மிகப்பெரிய அதிகரிப்பாக, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 இல் 30,000 “அதிக இறப்புக்கள்” இருந்ததாகக் காட்டுகிறது.