ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වර්ගවාදී යුද්ධයේ සහායෙකු වූ ජනතා විමුක්ති පෙරමුන උතුරේ චන්දය ඉල්ලයි

இனவாத யுத்தத்தை ஆதரித்த ஜே.வி.பி. இலங்கையின் வடக்கில் தேர்தலில் போட்டியிடுகின்றது

வி. கமலதாசன் (சோசலிச சமத்துவக் கட்சியின் ஊர்காவற்துறை வேட்பாளர்)
30 டிசம்பர் 2017

பெப்பிரவரி 10 நடக்கவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வடக்கில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியும் (ஜே.வி.பி.) போட்டியிடுகின்றது.

2009 மே மாதம் இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்ட பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கொழும்பு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தில் பங்கெடுத்த ஜே.வி.பி. சிங்களப் பேரினவாதத்தை தலையில் தூக்கி வைத்திருக்கும் ஒரு அமைப்பாகும். ஜே.வி.பி.யின் அரசியலுக்கும் சோசலிசத்துக்கான போராட்டத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லாவிட்டாலும், அவர்கள் சோசலிசவாதிகளாக பாசாங்கு செய்துகொள்வதோடு தமிழ் மக்களின் ஆதரவாளர்களாக காட்டிக்கொள்ளவும் அண்மைக் காலமாக பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தத்தை ஆதரித்ததால் தமிழர்கள் மத்தியில் அவப்பேறு பெற்ற ஜே.வி.பி.யின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்காக அதன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் சந்திரசேகரன் கொழும்பில் இருந்து வந்திருந்தார். அங்கு உலக சோசலிச வலைத் தள நிருபர், யுத்தத்திற்கு முழுமையாக ஆதரவளித்துவிட்டு எந்த அடிப்படையில் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளீர்கள், என அவரிடம் கேள்வியெழுப்பினார்.

“யுத்தத்திற்கு ஆதரவளித்தது உண்மை, அதற்கு காரணங்கள் இருக்கின்றன” எனக் கூறிய இராமலிங்கம், திட்டமிட்டு அந்த காரணங்களை கூறாமல் தவிர்த்துக்கொண்டார்.

ஏனைய ஊடகவியலாளர்களும், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரிப்பதற்காக உயர் நீதியமன்றத்தில் ஜே.வி.பி. வழக்கு தாக்கல் செய்திருந்தது தானே? எனவும் கேட்டனர். அதற்கு பதில் கொடுத்த இராமலிங்கம் கூறியதாவது: “தமிழ் மக்களின் தாயகம் வடக்கு கிழக்கு இல்லை. இலங்கை முழுவதும் தமிழ் மக்களின் தாயகம் என்பதுதான் எமது கட்சியின் நிலைப்பாடு. ஒரு பிரதேசம், மொழி, மத, ஜாதி அடிப்படையில் மக்கள் பிரிக்கப்படுவதை நாம் எதிர்க்கின்றோம்.”

இராமலிங்கத்தின் கருத்து, போருக்கு ஆதரவளித்ததை வஞ்சத்தனமாக நியாயப்படுத்துவதற்கு ஜே.வி.பி. முன்னெடுக்கும் பிரச்சாரமாகும். ஜே.வி.பி. ஒரு காலமும் தமிழ் மக்களின் சம உரிமைக்காக முன் நிற்கவோ, அவர்களுக்கு எதிரான பாரபட்சங்களை எதிர்க்கவோ இல்லை. மாறாக, சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்துக்கும் முன்னுரிமை கொடுக்கும் ஒற்றை ஆட்சியையும் அரசியலமைப்பையும் பாதுகாப்பதிலேயே ஜே.வி.பி. முன்நிற்கின்றது. இந்த அர்த்தத்திலேயே, ஏனைய இனவாத கும்பல்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், வடக்கு மற்றும் கிழக்கு இணைக்கப்படுவதை எதிர்த்து ஜே.வி.பி. உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தது. 

ஜே.வி.பி. 1983ல் ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) யுத்தத்தை கிளறிவிட்ட சமத்தில் இருந்தே அதற்கு தொடர்ந்தும் ஆதரவளித்து வந்துள்ளது. 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போது, ஈழம்வாதிகளுக்கு கப்பமாக நாட்டைப் பிளவுபடுத்துவதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி., மூன்று ஆண்டுகள் தொடர்ந்த பயங்கர படுகொலை இயக்கத்தை கட்டவிழ்த்துவிட்டது. இதன் போது அதன் அரசியல் எதிரிகள் சுமார் ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் அவரை அடுத்து வந்த ஆர். பிரேமதாச அரசாங்கங்கள், ஜே.வி.பி. உறுப்பினர்கள் உட்பட தீவிரமடைந்து வந்த சிங்கள இளைஞர்களில் சுமார் 60,000 பேரை அழிப்பதற்கு அதைப் பயன்படுத்திக்கொண்டது.

இந்த அழிவுகளின் பின்னர், சிறிதுகாலத்துக்குள்ளேயே 1990களின் ஆரம்பத்தில் முதலாளித்துவ அரசியல் ஸ்தாபனத்தின் கட்சியாக ஜே.வி.பி. உருவாகியது. 2004ல் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் 4 அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொண்ட ஜே.வி.பி., சுனாமி நிவாரணங்களை விநியோகிப்பதற்காக புலிகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பொறுமுறையை எதிர்த்து, அதில் இருந்து வெளியேறியது.

ஐ.தே.க. ஆட்சி, 2002ல் புலிகளை கொழும்பு அரசாங்கத்தின் கனிஷ்ட பங்காளியாக ஆக்கிக்கொள்வதன் பேரில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையையும் ஜே.வி.பி. இனவாத அடிப்படையில் எதிர்த்தது. அந்த உடன்படிக்கையை இரத்துச் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன், 2005 ஜனாதிபதி தேர்தலில் ஜே.வி.பி. மஹிந்த இராஜபக்ஷவை ஆதரித்தது. புலிகளுக்கு எதிரான யுத்தத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்பது இதன் உள்ளர்த்தமாகும். தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை அடுத்து 2006 நடுப் பகுதியில் இராஜபக்ஷ யுத்தத்தை மீண்டும் தொடங்கினார்.

அந்தக் காலப் பகுதியில் பாதுகாப்பு படைகளால் அல்லது அதனுடன் சேர்ந்து இயங்கிய தமிழ் துணைப் படைக் குழுக்களால் விசேடமாக தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை, கொல்லப்பட்டமை மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்துள்ளமை உட்பட குற்றங்களுக்கும், அவை யுத்தத்தை தூண்டும் நடவடிக்கைகள் என்பதை சுட்டிக் காட்டியே, ஜே.வி.பி. ஆதரவு கொடுத்தது. ஜே.வி.பி.யின் செம்படை என அழைக்கப்பட்டதையும் அது இராணுவத்துக்கு பதுங்குகுழி தோண்டுவதற்காக ஈடுபடுத்தியமை, யுத்தத்துக்கான ஒத்துழைப்பு எந்தளவு இழிந்த மட்டத்திற்கு இடம்பெற்றது என்பதற்கு உதாரணமாகும்.

போரின் முடிவில், சுமார் 300,000 தமிழ் மக்கள் அகதி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டனர். புலி சந்தேக நபர்களை தேடிப் பிடிப்பதற்கு இது அவசியம் என இராணுவம் கூறிய தர்க்கத்தை தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஜே.வி.பி. இதையும் நியாயப்படுத்தியது. 40 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் இறுதித் தாக்குதல்களில் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மதிப்பிட்டுள்ளது.

2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி இராஜபக்ஷவை தோற்கடித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆட்சியில் நியமிப்பதற்காக அமெரிக்கா திட்டமிட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு ஏனைய முதலாளித்துவக் கட்சிகள் மற்றும் போலி இடதுகளுடனும் சேர்ந்து முழுமையாக ஜே.வி.பி. ஒத்துழைத்தது. அதையடுத்து சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஐ.தே.க.யும் சேர்ந்து அமைத்த ஐக்கிய அரசாங்கத்தின் நிர்வாக சபையிலும் ஜே.வி.பி. பல மாதங்கள் முக்கிய பங்காளியாக செயற்பட்டது.

இவை அனைத்தையும் செய்த பின்னர், ஜே.வி.பி. அதன் 50 ஆண்டுகால வரலாற்றில் தமிழர்களுக்கு “எந்த துரோகமும் இழைக்காத கட்சி” என இராமலிங்கம் சொல்வது வரலாற்றை தலைகீழாக மாற்றுவதாகும். ஜே.வி.பி. அதன் ஆரம்பம் முதலே தமிழர்-விரோத பேரினவாதத்தை மாவோவாதம் மற்றும் குவேராவாதத்துடன் கலந்து எடுக்கப்பட்ட ஒரு நோக்கையும் அரசியலையும் அடிப்படையாகக் கொண்ட கட்சியாகும். முன்னர் சுருக்கமாகக் கூறப்பட்ட ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள், இந்த அரசியலின் தர்க்கரீதியான விளைவே ஆகும். சிங்கள தொழிலாளர்களின் மற்றும் வறியவர்களின் உரிமைகளை நசுக்குவதற்கு முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த சரித்திரமும் அதற்கு உள்ளது.

1964ல் லங்கா சமசமாஜக் கட்சியானது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்து சோசலிச சர்வதேசியவாத கொள்கையை காட்டிக் கொடுத்து தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துடன் கட்டிப்போட்டு அதன் அரசியல் சுயாதீனத்திற்கு குழிபறித்தது. இது, தொழிலாள வர்க்கத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டிருந்த சிங்கள மற்றும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் தெற்கில் ஜே.வி.பி.யும் வடக்கில் புலிகளும் தலைதூக்குவதற்குமே வழிவகுத்தது.

வடக்கு கிழக்கில் இனவாத யுத்தத்தை முன்னெடுத்த ஐ.தே.க., ஸ்ரீ.ல..சு.க. உட்பட முதலாளித்துவ கட்சிகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட முதலாளிகளின் தோள்களின் மீது ஏறி இந்த பிரதேசங்களில் போட்டியிடுகின்றன. இலங்கையின் ஏனைய பிரதேசங்களில் போலவே வடக்கு –கிழக்கிலும் மக்கள் மத்தியில் இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் வறியவர்கள் மத்தியில் அவப்பேறு பெற்று நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன. இந்த உழைக்கும் மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு தாம் எந்தவிதத்திலும் பொறுப்பாளிகள் அல்ல என்ற தோரணையில் இப்போது ஜே.வி.பி. புதிய வேடமிட்டு அரசியல் வேலைகளில் ஈடுபடுகின்றது.

இந்த சகல கட்சிகளும் மக்களின் ஜனநாயக உரிமைகள் அல்லது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் சமூக உரிமைகளுக்காக அன்றி, சர்வதேச நிதி மூலதனத்தினதும் அதன் முகவர்களான இலங்கையின் பெரும் வர்த்தகர்களதும் இலாப நோக்கங்களுக்காவே முன்நிற்கின்றன.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) யாழ்ப்பாண மாவட்டத்தில் ஊர்காவற்துறை பிரதேச சபைக்கும், பெருந்தோட்டப் பகுதியில் அம்பகமுவ பிரதேச சபைக்கும், கொழும்பில் கொலன்னாவ நகரசபைக்கும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. இனவாத யுத்தத்துக்கு எதிராகவும், வடக்கு கிழக்கில் இருந்து இலங்கை இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற்றக் கோரியும் போராடுவதில் சோசலிச சமத்துவக் கட்சிக்கு நீண்ட வரலாறு உள்ளது. சிங்களப் பேரினவாதத்துக்கும் தமிழ் பிரிவினைவாதத்துக்கும் எதிராக சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாள வர்க்கத்தை சோசலிச வேலைத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தி ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை கட்டியெழுப்புவதற்கு போராடுவதே எமது வேலைத் திட்டமாகும். இது தெற்காசியாவிலும் உலகம் முழுவதிலும் சோசலிசத்துக்காக முன்னெடுக்கப்படும் போராட்டத்தின் பாகமாகும்.