ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Georgi Valentinovich Plekhanov (1856–1918): His Place in the History of Marxism

ஜோர்ஜி வலென்டினோவிச் பிளெக்ஹானோவ் (1856—1918): மார்க்சிசத்தின் வரலாற்றில் அவரது இடம்

By David North and Vladimir Volkov
5 December 2016

டிசம்பர் 11 அன்று, சர்வதேச சோசலிச இயக்கமானது “ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை” ஜோர்ஜி வலென்டினோவிச் பிளெக்ஹானோவின் 160வது பிறந்ததினத்தை அனுசரிக்கிறது.”மனிதர்கள் செய்யும் தீமை அவர்களுக்குப் பிறகும் வாழ்கிறது; அவர்கள் செய்யும் நன்மை பெரும்பாலும் எலும்புகளுடன் சேர்ந்து புதைக்கப்படுகிறது”. இது பிளெக்ஹானோவ் விடயத்தில் பெருமளவுக்கு உண்மையாக இருக்கிறது. இது வெறுமனே வரலாற்றாசிரியர்களின் அகநிலை மனவிருப்பினால் மட்டும் விளைந்து விடவில்லை, அவரது நெடிய புரட்சிகர வாழ்க்கையின் முரண்பட்ட தன்மையில் இருந்தும் எழுகிறது.

பிளெக்ஹானோவின் வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளில், தேசியப் பேரினவாதத்திற்கு (national chauvinism) அவர் சரணாகதியடைந்தமை புரட்சிகர இடதுகளின் மத்தியில் அவரது மரியாதயை தகர்த்து விட்டது என்ற உண்மையைக் கொண்டே அவரது அரசியல் மரபு ஆழமாக நிறம் தீட்டப்பட்டு வந்திருக்கிறது. 1914 இல் உலகப் போரின் வெடிப்புக்கு ஜேர்மனிக்கு எதிராய் ரஷ்யாவை பாதுகாக்க அழைத்து அவர் பதிலிறுப்பு செய்தார். 1917 இல் பிளெக்ஹானோவ் அக்டோபர் புரட்சியைக் கடுமையாக எதிர்த்தார். இந்த இரண்டு காட்டிக்கொடுப்புகளும் அவ்வப்போதையதான (episodic) தப்புக்கணக்குகளின் விளைபொருட்களாய் இருக்கவில்லை. பிளெக்ஹானோவின் தனிமனிதத் தலைவிதி முன்தீர்மானிக்கப்பட்டதாய் இருந்தது என்று திட்டவட்டம் செய்கின்ற அளவுக்கு செல்லாமல் —மனிதர்கள் அவரவர் தெரிவைத் தெரிந்தெடுத்துக் கொள்கிறார்கள்— அவரது அரசியல் வீழ்ச்சியானது, ஒரு புறநிலையான அர்த்தத்தில், 1914 ஆகஸ்டில் வெடித்திருந்த உலக நெருக்கடியால் அரசியல்ரீதியாக திக்குமுக்காடி விட்டிருந்த புரட்சியாளர்களது ஒரு ஒட்டுமொத்தத் தலைமுறையின் தலைவிதியை பிரதிபலித்ததாக இருந்தது.


1917 இல் பிளெக்ஹானோவ்

பிளெக்ஹானோவ் போன்ற ஆளுமைகளது நாசகரமான முடிவின் “வேர்களை” அவர்களது ஆரம்ப கால தவறுகளிலும் தவறான அடியெடுப்புகளிலும் இருந்து கண்டறிந்துகொள்ள வரலாற்றாசிரியர்களும் வாழ்க்கைவரலாறு எழுதுபவர்களும் முனைவது என்பது புரிந்துகொள்ளக் கூடியதே. ஆயினும், அரசியல் உடற்கூறு பரிசோதனையிலான இத்தகைய அவசியமான பயிற்சிகள் ஒருதரப்பான மதிப்பீடுகளுக்கும் இட்டுச் செல்லக் கூடும். ஆய்வின் கீழான வாழ்க்கையானது அதன் “நல்ல” மற்றும் “தீய” பக்கங்களுக்கு இடையிலான ஒரு மோதலாக பொருள்விளக்கமளிக்கப்படுகிறது. இந்த அணுகுமுறையானது, ஒரு அரசியல் தலைவரின் பரிணாம வளர்ச்சியை நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களின் ஒரு மோதல், மேலாதிக்கம் செய்வதில் இரண்டுபக்கங்களும் ஒன்றுடன் ஒன்று சண்டையிடுகின்றன என்ற அணுகுமுறையில் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்து கொள்ளத் தவறுகிறது. மாறாய், புறநிலை சூழ்நிலைகளின் உள்ளடக்கத்தில், ஒரு அரசியல் ஆளுமையின் —ஒரு அரசியல் மற்றும் புத்திஜீவிதப் போக்கின் என்றும் நாம் இங்கே சேர்த்துக் கூறியாக வேண்டும்— பல பக்கம் கொண்ட மற்றும் ஒன்றுடனொன்று தொடர்புடைய கூறுகளின் ஆழமான முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப்படுகின்றன. கோதெயின் Mephistopheles எச்சரித்தன: “Vernunft wird Unsinn. Wohltat Plage.” (அறிவுக்கூர்மை அபத்தமாக மாறுகிறது. இனிய குணம், ஒடுக்குமுறையாகிறது.”) வரலாற்றின் ஒரு காலகட்டத்தில், நியாயமான காரணத்துக்காக, உண்மையாகவும் வலிமையின் தோற்றுவாயாகவும் தென்படக் கூடிய ஒன்று இன்னொரு காலகட்டத்தில் பொய்யாகவும் ஒரு மரணகரமான பலவீனமாகவும் வெளிப்படுகிறது.

பிளெக்ஹானோவின் வாழ்க்கை குறித்த ஆய்வு வரலாற்றின் அத்தியாவசியமான புறநிலைத் தன்மையை பாதுகாப்பது என்ற சவாலை முன்வைக்கிறது. அவரது அரசியல் வீழ்ச்சியின் அறிகுறிகள் 1905 ஆம் ஆண்டிலேயே ஏற்கனவே வெளிப்பட்டிருந்தன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இது அவரது புத்திஜீவித சக்திகள் திடீரென பலவீனமடைந்ததைக் கொண்டோ அல்லது அவரது ஆளுமையின் “எதிர்மறை” பக்கங்கள் வலுவடைந்ததைக் கொண்டோ விளக்கத் தகுந்தது அல்ல. முதலாம் ரஷ்யப் புரட்சியின் வெடிப்பும் தாக்கமும் தான் பிளெக்ஹானோவின் வீழ்ச்சியில் மேலாதிக்கம் செலுத்திய காரணிகளாக இருந்தன.

பிளெக்ஹானோவ் தான் ரஷ்யாவில் தொழிலாள வர்க்கம் ஒரு புரட்சிகர சமூக சக்தியாக எழுவதை முன்கணித்த முதல் மார்க்சிச தத்துவாசிரியராக இருந்திருந்தார். 1905 புரட்சியின் வெடிப்பானது ஜனநாயகப் புரட்சியில் தொழிலாள வர்க்கத்தின் தீர்மானகரமான பாத்திரம் குறித்த அவரது மதிப்பீட்டை ஊர்ஜிதம் செய்தது. ஆயினும், அது அரசியல் ஜனநாயகத்துக்கான போராட்டம், முதலாளித்துவ வர்க்கத்தைத் தூக்கிவீசுவது மற்றும் சோசலிசத்தை ஸ்தாபிப்பது ஆகியவற்றுக்கு இடையிலான உறவு குறித்த இன்றியமையாத அரசியல் கேள்விகளையும் எழுப்பியது, இந்தக் கேள்விகள் முந்தைய கால் நூற்றாண்டு காலத்தில் பிளெக்ஹானோவ் அபிவிருத்தி செய்திருந்த முன்னோக்கின் அத்தியாவசியமான கூறுகளுக்கு முரண்பட்டதாய் இருந்தன. நிகழ்வுகளால் தனது செல்தகமையை இழந்திருந்த ஒரு அரசியல் முன்னோக்குடன் அவர் இணைந்திருந்ததானது, நீண்ட ஒரு வீழ்ச்சியினை ஆரம்பித்து வைத்து, ஒட்டுமொத்தக் காட்டிக்கொடுப்பில் உச்சத்தை அடைந்தது.

ஆனாலும் பிளெக்ஹானோவின் முடிவு அவரது சாதனைகளை இல்லாமல் செய்துவிடுவதில்லை. அல்லது அவரது முன்னோக்கின் முக்கியமான கூறுகள் இறுதியாக மறுக்கப்படுவதால் அவரது அரசியல் எழுத்துக்கள் மீதான ஒரு ஆய்வில் இருந்து இன்று கற்றுக் கொள்வதற்கு எதுவுமில்லை என்று அர்த்தமல்ல. மேதைகளின் விடயத்தில் —அவர்கள் பணியாற்றியது அரசியல் களமாயிருக்கலாம், விஞ்ஞான களமாயிருக்கலாம், அல்லது கலையின் களமாயிருக்கலாம்— பெரும்பாலும் நடப்பதைப் போல, அவர்கள் பின்னால் வரும் தலைமுறைகள் கண்டறிவதற்காக ஏராளமான புதைந்த இரத்தினங்களை விட்டுச் செல்கிறார்கள். நிச்சயமாக பிளெக்ஹானோவ் விடயமும் அதுதான். அவரது பலவீனங்களும் தோல்விகளும் நன்கறிந்தவை, அவற்றைக் கற்பது புரட்சியாளர்களின் பல தலைமுறைகளுக்கு ஒரு எச்சரிக்கைக் கதையாக சேவைசெய்திருக்கிறது. ஆனால் அவரது படைப்புகளின் வழியாகத் தேடினால், சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர இயக்கத்திற்கு புத்துயிரூட்ட மகத்தான மதிப்புக் கொண்ட ஏராளமானவற்றை அவரது தத்துவார்த்த மற்றும் அரசியல் மரபில் மார்க்சிஸ்டுகள் காண்பார்கள்.

ஆரம்பத்தில், குறிப்பாக 1905 புரட்சிக்கு முன்வந்த மூன்று தசாப்தங்களின் காலத்தில், மார்க்சிசத்தை அபிவிருத்தி செய்ததிலும் பாதுகாத்ததிலும் பிளெக்ஹானோவின் பங்களிப்பு எந்த அளவுக்கு விரிந்ததாய் இருந்தது என்பதை ஒரு கட்டுரைக்குள்ளாக போதுமான அளவு சுருக்கிக் கூறுவது என்பது சாத்தியமில்லாதது. அவரது எழுத்துக்கள் அக்டோபர் புரட்சிக்குத் தலைமை கொடுத்து வரலாற்றின் முதல் தொழிலாளர்’ அரசை நிறுவிய லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் ரஷ்ய சோசலிஸ்டுகளின் தலைமுறைக்கு தத்துவார்த்த மற்றும் அரசியல் கல்வியளிப்பதில் அசாதாரணமான செல்வாக்கு செலுத்தின.

ஒரு முக்கியமான வரலாற்று ஆளுமையாக பிளெக்ஹானோவின் ஸ்தானமானது அவரது கணிசமான தத்துவார்த்த எழுத்துக்களின் மீதே அமர்ந்திருக்கிறது. அதில் அவர் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் கருத்துக்களை விளக்கினார் மற்றும் அபிவிருத்தி செய்தார். அவற்றில் மிக நன்கறிந்தவை பின்வருமாறு: வரலாற்றின் மோனிச (ஒரே மூலக்கூறுப்) பார்வையின் அபிவிருத்தி குறித்து (On the Development of the Monist View of History), வரலாற்றில் தனிமனிதனின் பாத்திரம் (The Role of the Individual in History), வரலாற்றின் சடவாதப் புரிதல் குறித்து (On the Materialist Understanding of History) மற்றும் மார்க்சிசத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் (Fundamental Problems of Marxism). 18 ஆம் நூற்றாண்டு பிரெஞ்சு சடவாதத்தின் வரம்புகள் குறித்த பிளெக்ஹானோவின் திறனாய்வும், இயங்கியல் மற்றும் வரலாற்றுச் சடவாதத் தத்துவத்தை மார்க்சும் ஏங்கெல்சும் விரித்துரைத்தமைக்கு அது கொண்டுள்ள உறவும் இப்போதும் முழு செல்தகைமையுடன் நிற்கின்றன. மெய்யியல் வரலாறு குறித்த அவரது அறிவு அறிவுக்களஞ்சியம் போன்றதாகும். பிளெக்ஹானோவ் தேர்ச்சி பெறாத முக்கியமான மெய்யியல் உரையென்று எதுவுமிருந்ததா என்ன என்று சமகால ஒருவர் ஆச்சரியம் கொள்வதைத் தவிர்க்கமுடியாது. ஏதேனும் ஒரு குட்டி—முதலாளித்துவப் பேராசிரியர் அவரது சொந்த குழப்பமான மற்றும் நல்லது என பொறுக்கியெடுத்திருந்த மெய்யியல் ஊகங்கள் மிக ஆழமாய் அவரே சிந்தித்தவை என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்கின்றவாறு கூறிக் கொள்கிறபோது, அந்த ஆணவமிக்க அற்பரின் “கண்டுபிடிப்புகள்” எல்லாம் ஏற்கனவே கூறப்பட்டது தான், ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே வெளியிடப்பட்டிருந்த ஒரு புத்தகத்தில், இன்னும் மிக அழகான இலக்கிய நடையில், வெளிப்படுத்தப்பட்டு விட்டிருந்தது என்பதைக் காட்டுவதில் பிளெக்ஹானோவ் அளவில்லா ஆனந்தம் கொள்வார்.

பிளெக்ஹானோவின் எழுத்துக்கள் உள்ளடக்கத்தில் செறிவானவையாகும், அவற்றைக் கவனத்துடன் படிக்கும் வாசகர்கள் அவரது உட்பார்வைகளின் தாக்குப்பிடிக்கும் பொருத்தம் கண்டு மலைத்துப் போவார்கள். 1896 இல், வரலாற்று நிகழ்ச்சிப்போக்குகளை விளக்குவதற்கு இனம் (race) என்ற பிழையான கருத்தாக்கத்தைப் பிரயோகித்ததற்காக பிரெஞ்சு வரலாற்றாசிரியர் டேய்ன் (Hippolyte Taine) மீது பிளெக்ஹானோவ் கவனம் செலுத்தினார். பிளெக்ஹானோவ் எழுதினார், “சற்று அதிக சிக்கலான நிகழ்வுகளை பிறப்பினால் அல்லது பாரம்பரியமாக அமையும் நிலைகளின் செயல்பாடுகள் தான் காரணம் என்று காட்டுவதைக் காட்டிலும் பார்க்க, அத்தனை சிரமங்களையும் உதறித்தள்ளுவதில், எளிதானது வேறொன்றுமில்லை. ஆயினும் வரலாற்று அழகியல் என்பது அதன்பின் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.”[1]

அதே விடயத்திலான இன்னொரு கருத்துரையின் போது, பிளெக்ஹானோவ் நகைச்சுவையுடன் குறிப்பிட்டார்: “எந்த இனமாக இருந்தாலும், குறிப்பாக அதன் சமூக அபிவிருத்தியின் ஆரம்ப கட்டங்களில், தன்னை இருப்பதிலேயே மிக அழகான இனமாகக் கருதிக் கொண்டு, தன்னை மற்ற இனங்களில் இருந்து பிரித்துக்காட்டுகின்ற அந்த அம்சங்களின் மீது ஒரு பெரும் மதிப்பு கொண்டிருக்கும் என்பது பொதுவாய் அறிந்தது தான்.”[2] வரலாற்றுப் பகுப்பாய்வுக்கான ஒரு செல்லுபடியாகின்ற வகைப்பாடாக இனம் இருப்பதை பிளெக்ஹானோவ் நிராகரித்தார். ”வரலாற்று மக்கள் வகை என எடுத்துக் கொண்டால், பொதுவாக அவர்கள் தொடர்பாய் குறிப்பிடுவதற்கு இனம் என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது பயன்படுத்தக் கூடாது என்பதையே, முதலாவதும் முதன்மையானதுமாய், நாம் சுட்டிக் காட்ட விரும்ப வேண்டும். வரலாற்றில் எந்த ஒரு மக்கள் குழுவாயினும் தூய இனம் என்று அழைக்கப்படத்தக்கவர்களைக் கொண்டிருக்க முடியாது; அவர்கள் ஒவ்வொருவருமே பல்வேறு இனக் கூறுகள் இடையேயான மிக நெடிய மற்றும் தீவிரமான கலப்பின் விளைபொருட்களே.”[3] ஏராளமான போலி—இடதுகள் மற்றும் பல்கலைக்கழக அடிப்படை கொண்ட அடையாள அரசியல் ஊக்குவிப்பாளர்களது முகங்களில் தூக்கிவீசத்தக்க வார்த்தைகளைப் பயன்படுத்தி, பிளெக்ஹானோவ் எழுதினார்:

எந்த குறிப்பிட்ட மக்களது வாழ்வியல் வரலாற்றிலும் நமக்குப் புரிந்து கொள்ள இயலாததாகத் தென்படுகின்ற எதற்கும் இனத்தைக் காரணமாக்கி விடுவது என்ற மோசமான பழக்கத்தை ஒருவழியாக நாம் விட்டொழித்தோமென்றால், சமூக விஞ்ஞானம் மிக, மிக பயனடையும். இனரீதியான குணாம்சங்கள் அந்த வரலாற்றின் மீது சற்று செல்வாக்கு கொண்டிருக்கலாம், ஆனாலும் அத்தகைய அனுமானிக்கப்படுகின்ற செல்வாக்கு என்பது ஆராய்ச்சியின் நலன்களின்படி கிட்டத்தட்ட பூச்சியமாக கருதப்படுகின்ற அளவுக்கு மிகமிகச் சொற்பமானதாகவே இருக்கும், எந்த மக்களின் அபிவிருத்தியிலும் அவதானிக்கத்தக்க அம்சங்கள் அந்த அபிவிருத்தி நடந்தேறியிருந்த குறிப்பிட்ட வரலாற்று நிலைமைகளின் விளைபொருளாகத் தான் கருதப்பட வேண்டுமேயன்றி, இனத்தின் செல்வாக்கினால் விளைந்ததாக அல்ல.[4]

மெய்யியல் சடவாதத்தின் முன்னிலை பாதுகாவலராக, அகநிலை கருத்துவாதத்தின் பல்வேறு பள்ளிகளுக்கு வக்காலத்து வாங்கிய ஏராளமானோருக்கு எதிராக பிளெக்ஹானோவ் வாள் சுழற்றினார். பெண்டெட்டோ குரோஸ், வில்ஹெம் வூண்ட் மற்றும் தோமஸ் மசாரிக் போன்ற ஐரோப்பாவின் புத்திஜீவித மகான்கள் உள்ளிட்ட அவரது எதிரிகள் இந்த மோதல்களில் ஆழமான இரத்தம்சொட்டுகின்ற காயங்களுடனேயே பொதுவாக வெளியில்வந்தனர். பிளெக்ஹானோவ் சடவாதத்தை தளர்ச்சியற்றுப் பாதுகாத்தமையானது அவரை இன்றைய நாள் வரையில் தாக்குதலுக்கான ஒரு இலக்காக ஆக்கியிருக்கிறது. அவரது கண்ணோட்டங்கள் மார்க்சிசம் மற்றும் இயங்கியலின் “கொச்சையான” வடிவங்களாக பொதுவாக சித்தரிக்கப்படுகின்றன, நவ—கான்ட்டிசவாத கட்டமைப்பியல் மற்றும் நேர்மறைவாதம் முதல் பிராங்ஃபேர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவம் வரையில் பகுத்தறிவின்மைவாத மற்றும் கருத்துவாத நீரோட்டங்களின் மேலோங்கிய செல்வாக்கின் கீழ் இருக்கின்ற போலி—இடது போக்குகளின் வட்டாரத்தில் இது பரவலாக சுற்றிவருகின்ற கருத்தாக இருக்கின்றது.

பிளெக்ஹானோவ் ஹேகலைப் புரிந்து கொள்ளவில்லை என்றும் அவர் இயங்கியல் வழிமுறைக்கு அலட்சியம் காட்டினார் என்றும் பெரும்பாலும் சொல்லப்படுகிறது. இந்தப் பழி குறிப்பாக பிராங்ஃபர்ட் பள்ளி மற்றும் பின்நவீனத்துவத்தைப் பின்பற்றுபவர்கள் மத்தியில் பொதுவாய் இருக்கிறது, அவர்கள் பிளெக்ஹானோவைப் படிப்பதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும், ஹேகலைப் பற்றிய —மார்க்ஸைப் பற்றி சொல்லவும் வேண்டாம்— மிகக் குறைந்த புரிதலே அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் அவர்களது விமர்சனங்கள் நிரூபிக்கின்றன. “ஹேகல் மரணத்தின் பதினாறாவது ஆண்டு அனுசரிப்புக்கு” என்ற பிளெக்ஹானோவின் 1891 கட்டுரை, மார்க்சிசத்தின் அபிவிருத்தியில் இந்த மாபெரும் கருத்தியல் மேதையின் இயங்கியல் வழிமுறையின் முக்கியத்துவம் குறித்த ஆகச்சிறந்த ஆய்வுகளில் ஒன்றாக இருக்கிறது. பிளெக்ஹானோவ் விளக்கினார்:

சமூக அறிவியல்களில் ஹேகலின் முக்கியத்துவமானது, அவற்றின் அத்தனை நிகழ்முறைகளையும் des Werdens (இருத்தலுக்கு வரும்) நிகழ்ச்சிப்போக்கின் கண்ணோட்டத்தில் இருந்து, அதாவது அவற்றின் தோற்றம் மற்றும் மறைவின் கண்ணோட்டத்தில் இருந்து, அவர் பரிசீலித்தார் என்ற உண்மையின் மூலமே முதலும் முதன்மையுமாய் தீர்மானிக்கப்படுகிறது. [5]

இயற்கை, வரலாறு மற்றும் மூளையில் இயல்நிகழ்வுகளின் முழுமையை நிகழ்முறையாகப் புரிந்துகொள்வதில் அவரது புத்திஜீவித சாதனைகள் மாபெரும் அளவுடையதாய் இருந்தபோதும், ஹேகலின் வேலை கருத்துவாதத்தை அடிப்படையாகக் கொண்டே அபிவிருத்தி கண்டது. இந்த வரம்புக்கு எதிராக அந்த மெய்யியலாளர் எரிச்சலடைந்திருந்தார். பிளெக்ஹானோவ் கூறினார், ஹேகல் “அவர் எட்டிய இந்த முடிவுகளைக் கொண்டு அதிருப்தியுடன் இருந்தவராகவே இருந்தார், பலசமயங்களில் கருத்துவாதத்தின் பனிமூட்டமான உயரங்களில் இருந்து பொருளாதார உறவுகளின் ஸ்தூலமான களத்துக்கு இறங்கி வர அவர் கடமைப்பட்டவராயிருந்தார்.”[6] கருத்துவாதத்தைத் தாண்டிய ஒரு பாதையைக் காண்பதற்கு ஹேகல் செய்த சொந்த முயற்சிகள் வரலாற்றை ஆய்வுசெய்வதிலும் புரிந்து கொள்வதிலும் ஒரு புதிய சகாப்தத்திற்குத் தொடக்கமளித்த ஒரு கண்டுபிடிப்பை —பொருளாதார அபிவிருத்தியின் முக்கியத்துவம்— நோக்கி சுட்டிக்காட்டின.

ஹேகலின் மரணத்திற்குப் பின்னர் நடைபெற்ற சடவாதத்தை நோக்கிய உருமாற்றம் வெறுமனே பதினெட்டாம் நூற்றாண்டின் அப்பாவித்தனமான மாறாநிலைவாத சடவாதத்திற்கான (metaphysical materialism) திருப்பமாக இருக்க முடியாது. இங்கே நமக்கு ஆர்வமான துறையில், அதாவது வரலாற்றுக்கான விளக்கத்தில், சடவாதமானது முதலும் முதன்மையுமாய் பொருளாதாரத்தை நோக்கித் திரும்ப வேண்டியிருந்தது. அவ்வாறில்லாது வேறுவழியில் நடப்பதென்பது ஹேகலின் வரலாறு குறித்த மெய்யியலுடன் ஒப்பிடுகையில் முன்னேற்றத்தைக் குறிக்காது, மாறாக பின்னடைவையே குறிக்கும்.[7]

காரல் மார்க்ஸ்தான் வரலாறு குறித்த ஆய்வை ஒரு சடவாத அடித்தளத்தில் நிறுத்தினார்.

ஹேகலைப் போலவே, அவரும் மனித வரலாற்றை விதிகளுக்கு உட்பட்டதும் மனிதனின் எதேச்சைத்தன்மையில் இருந்து சுயாதீனப்பட்டதுமான ஒரு நிகழ்ச்சிப்போக்காக கண்டார்; ஹேகலைப் போலவே, அவரும், வரலாற்று நிகழ்வுபோக்குகள் குறித்த மாறாநிலைவாத விளக்கத்தைக் கொண்டு திருப்தியடைந்தவராக இல்லை, இறுதியாக, ஹேகலைப் போலவே அவரும், சமூக வாழ்க்கையின் அத்தனை செயல்படுகின்ற மற்றும் இடைத்தொடர்பு கொண்ட சக்திகளுக்குமான ஒரேயொரு உலகளாவிய ஒற்றை மூலவளத்தைக் கண்டடைய முயன்றார். அந்த மூலத்தை அவர் முழுமுதல் பரமாத்மாவில் காணவில்லை, மாறாக, நாம் மேலே கண்டது போல, ஹேகல் அவருடைய சக்திவாய்ந்த மற்றும் திறன்மிக்க கைகளிலும் கூட ஒரு சக்தியற்ற மற்றும் பயனற்ற கருவியாக கருத்துவாதம் ஆனபோது எதில் அடைக்கலம் புகத் தள்ளப்பட்டிருந்தாரோ, அதே பொருளாதார அபிவிருத்தி என்ற விடயத்தில் அந்த மூலத்தைக் கண்டார். ஆனால், ஹேகலில் எது ஒரு தற்செயலான, அத்துடன் ஒரு கிட்டத்தட்ட மாமேதையின் ஒரு ஊகமாக இருந்ததோ, அது மார்க்சில் ஒரு புடம்போட்ட, விஞ்ஞானபூர்வ விசாரணையாக ஆகிறது.[8]

பிளெக்ஹானோவ் அவரது சொந்த எழுத்துகளில் மெய்யியல் வழிமுறையின் முக்கியத்துவத்துக்கு ஒரு கொச்சையான நேர்மறைவாத அலட்சியத்தைக் காண்பித்தார் என்பதாக அவரை விமர்சிப்பவர்கள் கூறுகிறார்கள். இதற்கு சிறந்த பதிலை அந்த ஆசிரியரின் வார்த்தைகளில் கவனம் செலுத்தியே பெறலாம்:

ஹேகல் தனது மெய்யியலில் வழிமுறை குறித்த கேள்விக்கு இத்தகையதொரு முக்கிய இடம் கொடுத்தாரென்றால் அல்லது தங்களது ”வம்சாவளியை” எதேச்சையாக “ஹேகல் மற்றும் காண்ட்”டில் தேடுவதில் பெருமிதம் கொள்கின்ற மேற்கு ஐரோப்பாவின் சோசலிஸ்டுகள், நிகழ்வுப்போக்குகளை ஆய்வு செய்வதில் கிடைக்கின்ற தரவுகளைக் காட்டிலுமான மிக அதிக முக்கியத்துவத்தை அந்த ஆய்வு மேற்கொள்ளப்படுவதற்கான வழிமுறைக்குத் தருகிறார்கள் என்றால் அது காரணமில்லாமல் இல்லை. ஆய்வுமுடிவுகளில் தோன்றக் கூடிய ஒரு பிழை சரியான வழிமுறையை மேலும் செலுத்திக் காணும்போது தான் தவிர்க்கவியலாமல் கவனத்துக்கு வர முடியும், திருத்தப்பட முடியும். ஒரு பிழையான வழிமுறையோ வெகு அபூர்வமான சில குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் மட்டும்தான் இந்த அல்லது அந்த உண்மைக்கு நேரெதிரான முடிவுகளைத் தராதிருக்கும். ஆனாலும் ஒரு கவனமான மெய்யியல் கல்வியூட்டல் இருந்து வந்திருக்கிற ஒரு சமூகத்தில் மட்டுமே வழிமுறை குறித்த கேள்விகளுக்கு கவனமான ஒரு மனோநிலை அங்கே இருக்க முடியும்.[9]

எட்வார்ட் பேர்ன்ஸ்டைன் மீது இடைவிடாது தாக்குதல் கொடுத்ததன் பாதையில், பிளெக்ஹானோவ் அந்த திருத்தல்வாதி மார்க்சிசத்தின் வழிமுறைரீதியான அடித்தளங்கள் குறித்து அறியாமை கொண்டிருந்ததை வலியுறுத்தினார்:

”மார்க்சிசத்தின் அடிப்படையின் மிக முக்கியக் கூறாக, அதாவது அதன் அடிப்படை விதியாக, அதன் ஒட்டுமொத்த அமைப்புமுறை ஊடாகவும் ஓடுவதாக இருப்பது, வரலாற்று சடவாதம் என்ற பெயரைத் தாங்கி நிற்கின்ற அதன் தனித்துவமான வரலாற்றுத் தத்துவமாகும்” என்று திரு. பேர்ன்ஸ்டைன் குறிப்பிட்டிருக்கிறார். இது தவறு. உண்மையில், வரலாறு குறித்த சடவாத விளக்கம் மார்க்சிசத்தின் பிரதான தனித்துவமுடைய அம்சங்களில் ஒன்று, ஆனால் அந்த விளக்கமானது மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் சடவாத உலகக் கண்ணோட்டத்தில் ஒரு பகுதியை மட்டுமே கொண்டிருக்கிறது. ஆகவே அவர்களது அமைப்புமுறை மீதான விமர்சன ஆய்வானது அந்த உலகக் கண்ணோட்டத்தின் பொதுவான மெய்யியல் அடித்தளங்கள் மீதான ஒரு விமர்சனத்தைக் கொண்டே தொடங்கியாக வேண்டும். எந்த மெய்யியல் அமைப்புமுறைக்குமான சந்தேகத்திற்கிடமற்ற ஆன்மாவாக அதன் வழிமுறையே இருக்கிறது என்பதால், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் இயங்கியல் வழிமுறை மீதான எந்த விமர்சனமும் அவர்களது வரலாற்றுத் தத்துவம் “திருத்தப்படுவதற்கு” முன்பாக வந்தாக வேண்டும்.[10]

கலை மற்றும் அழகியல் விடயங்களிலான பிளெக்ஹானோவின் எழுத்துக்கள் புரிதலின் ஆழத்தையும் செறிந்த அறிவின் மீது அமர்ந்திருக்கின்ற உணர்திறனையும் வெளிப்படுத்தியது. இது விடயத்தில் அவர் ஹேகலின் மாணவராகவும் ட்ரொட்ஸ்கியின் ஆசிரியராகவும் இருந்தார். அழகியல் ரீதியான தீர்ப்புக்கு வரலாற்று அறிவும் சமூக உட்பார்வையும் அவசியப்படுகிறது என்று அவர் வலியுறுத்தினார். செரினிஷெவ்ஸ்கியின் வார்த்தைகளை அவர் ஏற்புடன் மேற்கோளிடுகிறார்: “கலையின் வரலாறு கலையின் தத்துவத்திற்கான அடிப்படையாக சேவைசெய்கிறது...”[11] மகத்துவமான கலை என்பது வெறுமனே அகநிலை உணர்வின் வெளிப்பாடாய் இருக்கவில்லை, மாறாக ஆழமான சிந்தனைக்கு வெளிப்பாடு கொடுத்ததாக இருந்தது. “ஒரு கலைப் படைப்பை ஆய்வு செய்வதற்கு, அதன் சிந்தனையைப் புரிந்து கொள்ள வேண்டும், அதன் வடிவத்தை மதிப்பீடு செய்ய வேண்டும். விமர்சகர், உள்ளடக்கம் வடிவம் இரண்டையும் தராசில் வைக்க வேண்டும்; அவர் ஒரு கலாரசிகராகவும் இருக்க வேண்டும் ஒரு சிந்தனையாளராகவும் இருக்க வேண்டும்.”[12] கலையும் சமூக வாழ்க்கையும் என்ற தனது கட்டுரையில், பிளெக்ஹானோவ் கலை வடிவத்துக்கும் உள்ளடக்கத்துக்கும் இடையிலான உறவு குறித்த ஆகச்சிறந்த விபரிப்புகளில் ஒன்றை வழங்கினார். கலைப்படைப்பின் தரமென்பது அதன் வடிவத்தால் தீர்மானிக்கப்படுகிறது என்று வலியுறுத்திய காதல்நயம்மிக்க பிரெஞ்சு கவிஞன் தெயோபில் கோத்தியே (Théophile Gautier) இன் கண்ணோட்டத்தை விமர்சனம் செய்த பிளெக்ஹானோவ் எழுதினார்:

கோத்தியே, கவிதை எதையும் நிரூபிக்க முயற்சி செய்வதில்லை என்று கூறியது மட்டுமல்லாமல், அது எதையும் சொல்வதற்கும் கூட முயலுவதில்லை என்றும், அதன் இசை மற்றும் அதன் சந்தத்தால் தான் அந்தக் கவிதையின் அழகு தீர்மானிக்கப்படுகிறது என்றும் கூறிவந்தார். ஆனால் இது ஒரு ஆழமான பிழை. மாறாக, கவிதை மற்றும் இலக்கியப் படைப்புகள் பொதுவாக எதையாவது சொல்லவே செய்கின்றன, ஏனென்றால் அவை எப்போதும் எதையேனும் வெளிப்படுத்துகின்றன. நிச்சயமாக விடயங்களைச் “சொல்லுவதில்” அவை தமக்கான சொந்த வழியைக் கொண்டிருந்தாலும். ஓவியன் தன் சிந்தனைகளை சித்திரத்தில் வெளிப்படுத்துகிறான்; பதிப்புத்துறை கலைஞன் தன் சிந்தனையை தர்க்க முடிவுகளின் உதவியுடன் விளங்கப்படுத்துகிறான். ஒரு எழுத்தாளன் சித்திரங்களுக்குப் பதிலாக தர்க்க முடிவுகளைக் கொண்டு இயங்குகிறான் என்றாலோ, அல்லது ஒரு குறிப்பிட்ட பேசுபொருளை விளங்கப்படுத்தும் பொருட்டு அவன் சித்திரங்களைக் கண்டுபிடிக்கிறான் என்றாலோ, அவன் ஒரு ஓவியன் அல்ல பதிப்பாளனே, அவன் கட்டுரைகள் எழுதுவதில்லை, புதினங்கள், சிறுகதைகள் அல்லது நாடகங்கள் தான் எழுதுகின்ற போதிலும். அனைத்தும் உண்மையே. ஆனாலும் அதற்காக இலக்கியப் படைப்புகளில் சிந்தனைகளுக்கு முக்கியத்துவம் கிடையாது என்று இதற்கு அர்த்தமல்ல. இன்னும் சற்று மேலே போய், சிந்தனை இல்லாமல் ஒரு இலக்கியப் படைப்பு ஒன்று கிடையாது என்று கூட நான் சொல்லுவேன். உள்ளடக்கத்தைப் பற்றி அக்கறையின்றி வடிவத்தின் மீது மட்டுமே அக்கறை கொண்ட ஆசிரியர்களது படைப்புகளும் கூட ஏதோவொரு சிந்தனையை ஏதேனும் ஒரு வழியில் வெளிப்படுத்துவனவாகவே இருக்கின்றன.[13]

மார்க்சிச அழகியலில் பிளெக்ஹானோவின் செல்வாக்கு ட்ரொட்ஸ்கியின் சகசிந்தனையாளரும் அவருக்கு தோளோடு தோள் நின்ற தோழருமான அலெக்ஸாண்டர் வோரோன்ஸ்கி, பல ஆண்டுகளுக்குப் பின்னர் எழுதிய இந்த மகத்தான கட்டுரையில் தெளிவாக இருக்கிறது:

அழகியல்ரீதியாக ஒரு படைப்பை மதிப்பீடு செய்வதென்பது எந்த மட்டத்திற்கு அதன் உள்ளடக்கம் வடிவத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதாகும்; வேறு வார்த்தைகளில் சொல்வதானால் எந்த மட்டத்திற்கு உள்ளடக்கம் புறநிலையான கலைத்துவ உண்மைக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதாகும். ஓவியன் சித்திரங்களின் வழியே சிந்திக்கிறான் என்பதால், அந்த சித்திரம் கலைத்துவரீதியாக உண்மையாக இருக்க வேண்டும், அதாவது அது சித்தரிக்கப்படுகின்ற இயல்புக்கு பொருந்தியிருக்க வேண்டும். இதில்தான் ஒரு ஓவியனின் துல்லியநேர்த்தியும் அழகும் அமைந்திருக்கிறது. ஒரு போலியான சிந்தனையோ, ஒரு போலியான உள்ளடக்கமோ ஒரு துல்லியநேர்த்தியான வடிவத்தை காண முடியாது, அதாவது அழகியல்ரீதியாக நம்மை ஆழமான விதத்தில் அசைக்க முடியாது, அல்லது நம்மை “பாதிக்க” முடியாது. சிந்தனை சரியில்லை, ஆனால் அது ஒரு அழகான வடிவத்தை எடுத்திருக்கிறது என்று நாம் கூறுவோமாயின், அது ஒரு மிகக் குறுகிய ஒரு அர்த்தத்தில் தான் புரிந்து கொள்ளப்பட முடியும்.[14]

ரஷ்யாவிலான வர்க்கப் போராட்டத்தின் சமூக இயக்கவியல் மற்றும் அரசியல் விளைவுகள் குறித்த அவரது மதிப்பீட்டில் இருந்த முக்கியமான குறைபாடுகளை அம்பலப்படுத்திய 1905 புரட்சிக்கு முன்பாக, ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் செல்வாக்கான தத்துவாசிரியராக பிளெக்ஹானோவின் நிலை கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. நிக்கோலாய் வலென்டினோவ் தனது லெனினுடனான சந்திப்புகள் என்ற தனது முக்கியமான நினைவுக்குறிப்பில் நினைவுகூர்ந்தார்: “வேறெவரொருவரையும் விட அதிகமாக அவரை [லெனின்] கவர்ந்தவர் பிளெக்ஹானோவ் தான், கவுட்ஸ்கி மற்றும் பேபலைக் காட்டிலும். பிளெக்ஹானோவ் கூறிய, செய்த அல்லது எழுதிய எதுவொன்றும் அவருக்கு பெரும் ஆர்வமூட்டுவதாக இருந்தது. பிளெக்ஹானோவ் என்று பெயர் வந்து விட்டால் போதும் காதுகளைக் கூர்மையாக்கி விடுவார். ‘ஒரு மாபெரும் அந்தஸ்துக்குரிய ஒரு மனிதர் இங்கிருக்கிறார்; அவர் முன்னால் எவரொருவரும் அடக்கம் காட்டியாக வேண்டும் என்பது சரியே’ என்று அவர் லெபெஷின்ஸ்கியிடம் கூறினார்.” [15]

பிளெக்ஹானோவின் செல்வாக்கு ரஷ்யாவுடன் நின்று விட்டதல்ல. 1890களின் பிற்பகுதியில் பேர்ன்ஸ்டைனின் மார்க்சிய—விரோதத் திருத்தல்வாதத்திற்கு எதிராக முதன்முதலில் போராட்டத்தைத் தொடங்கியவர்களில் ஒருவராய் அவர் இருந்தார். பேர்ன்ஸ்டைனின் சந்தர்ப்பவாதத்தில் இருந்த கான்ட்வாத அடித்தளங்களை அவர் உலுக்கியெடுக்கும் விதமாக அம்பலப்படுத்தியமையானது, ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியை அதன் தலைமைக்குள் திருத்தல்வாதத்தின் வளர்ச்சியை எதிர்த்து நிற்க நிர்ப்பந்தம் செய்தது. பேர்ன்ஸ்டைன் குறித்த அவரின் விமர்சனங்கள் —”பேர்ன்ஸ்டைனும் சடவாதமும், நாம் அவருக்கு எதற்காக நன்றி சொல்ல வேண்டும்?”, “கான்ட்டுக்கு எதிராக முடியாதா அல்லது திரு.பேர்ன்ஸ்டைனின் உயிலும் இறுதி விருப்பமுமா” (“Cant Against Kant or Herr Bernstein’s Will and Testament”), மற்றும் “சடவாதம் அல்லது கான்ட்டியவாதம்” போன்ற அவரது எழுத்துக்களில் வெளிப்படுத்தப்படுகின்றன— கவனமாகப் படிப்பதற்குக் கோருகின்ற மார்க்சிச தர்க்கவிவாதவியலின் செதுக்கியபடைப்புகள் ஆகும்.


பிளெக்ஹானோவில் (நடு) ஸ்தாபிக்கப்பட்ட தொழிலாளர் விடுதலைக் குழு

"ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை”யாக பிளெக்ஹானோவின் வரலாற்றுப் பாத்திரமானது வெறுமனே அவரது இலக்கிய—தத்துவார்த்த விளைபொருட்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ரஷ்ய தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அரசியல் இயக்கத்தின் ஸ்தாபகராகவும் அவர் இருந்தார். 1883 இல் பிளெக்ஹானோவின் தலைமையின் கீழ் தொழிலாளர் விடுதலைக் குழு ஸ்தாபிக்கப்பட்டமையானது, 34 வருடங்களுக்குப் பின்னர் 1917 அக்டோபரில் போல்ஷிவிக் கட்சியினால் அதிகாரம் கைப்பற்றப்படுவதில் உச்சமடைந்த ஒரு அரசியல் நிகழ்முறையை இயக்கத்தில் நிறுத்தியது. 1883 முதல் 1917 வரையான இயக்கம் கொந்தளிப்பான அரசியல் மோதல்களால் குணாம்சப்படுத்தப்பட்டிருந்தது என்பது உண்மையே, அந்த மோதல்கள் ரஷ்ய மற்றும் உலக முதலாளித்துவத்தின் அபிவிருத்தியிலான ஆழமான வேர்கொண்ட முரண்பாடுகளில் இருந்து எழுந்தவையாகும். அந்த நிகழ்ச்சிப்போக்கிற்குள்ளாக, பிளெக்ஹானோவின் பாத்திரம் ஆழமான முக்கியத்துவமுடையதாகவும் இருந்தது, ஆழ்ந்த துயரகரமானதாகவும் இருந்தது. ரஷ்யாவில் புரட்சிகரத் தொழிலாளர் இயக்கத்தின் தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளங்களை அமைத்துத் தந்த மனிதர் 1917 அக்டோபர் புரட்சியின் ஒரு கடுமையான எதிரியாக தனது வாழ்க்கையை முடித்தார் என்பது ஒரு மறுக்கவியலாத வரலாற்று உண்மையாகும்.

பிளெக்ஹானோவின் துயரார்ந்த கதியை ஆய்வு செய்வதென்பது, போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு மூலோபாய நோக்குநிலையை வழங்கிய ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் அபிவிருத்தி குறித்த ஒரு புரிதலுக்கு தீவிர முக்கியத்துவம் கொண்டதாகும். இன்றியமையாத கேள்விகள் என்னவென்றால்: 1880களின் ஆரம்பத்தில் ஜனரஞ்சகவாதத்தில் (narodnichestvo) இருந்து மார்க்சிசத்தை நோக்கிய அவரது பாதையில் பிளெக்ஹானோவ் எடுத்துவைத்த அரசியல் தத்துவத்திற்கும் அக்டோபர் புரட்சியின் முன்னோக்கிற்கும் இடையில் இருந்த உறவு என்ன? நிரந்தரப் புரட்சித் தத்துவத்திற்கும் 1880களில் பிளெக்ஹானோவ் எடுத்துரைத்த கருத்தாக்கங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு இருந்ததா? நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு 1917 இல் போல்ஷிவிக்குகள் வெற்றிபெற்றமையானது, சற்றேறக்குறைய பிளெக்ஹானோவின் ஒட்டுமொத்த அரசியல் பாரம்பரியத்தின் ஒரு முழுமையான மறுப்பைக் குறித்து நிற்கவில்லையா? எப்படிப் பார்த்தாலும், போல்ஷிவிக்குகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை, அதனை ஒரு முதிர்ச்சியற்ற சாகசமாகக் கூறிக் கண்டனம் செய்தார் என்பது நன்கறிந்த ஒன்றல்லவா?

பிளெக்ஹானோவின் பாரம்பரியம் குறித்த இத்தகைய ஒரு முழு எதிர்மறையான மதிப்பீடு ஆழமான பிழை கொண்டதாக இருக்கும் என்பதோடு, 1918 இல் பிளெக்ஹானோவின் மரணத்தைத் தொடர்ந்து அவரது இறுதிச்சடங்கின் போது ட்ரொட்ஸ்கி ஆற்றிய உரையில் வழங்கிய மதிப்பீட்டிற்கு முரண்பட்டதாகவும் இருக்கும், அந்த உரையில் ட்ரொட்ஸ்கி அறிவித்தார்:

அக்டோபர் புரட்சிக்கு 34 வருடங்களுக்கு முன்பாகவே, ரஷ்யப் புரட்சியானது தொழிலாளர்களின் ஒரு புரட்சிகர இயக்கத்தின் வடிவத்தில் மட்டுமே வெற்றிபெறும் என்பதை நிரூபித்தவராக அவர் இருந்தார். பாட்டாளி வர்க்கத்தின் வர்க்க இயக்கத்தின் உண்மையை புத்திஜீவிகளது முதலாவது வட்டங்களின் புரட்சிகரப் போராட்டத்தின் வேரில் வைப்பதற்காக அவர் பாடுபட்டார். இதுவே நாங்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொண்டதாகும், இதில் தான், பிளெக்ஹானோவின் செயல்பாட்டின் அடித்தளம் மட்டுமல்ல, நமது புரட்சிகரப் போராட்டத்தின் மொத்தத்தின் அடித்தளமும் அடங்கியிருக்கிறது. [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது][16]

1917 அக்டோபரில் போல்ஷிவிக்குகள் அதிகாரத்துக்கு வந்தமையானது ஒரு குறிப்பிட்ட சமூக—அரசியல் நோக்குநிலையின் —நிரந்தரப் புரட்சித் தத்துவம் முதன்முதலில் முதல் ரஷ்யப் புரட்சி, 1905—1907, மற்றும் அதன் உடனடிப் பின்வந்த ஆண்டுகளில் லியோன் ட்ரொட்ஸ்கியினால் எடுத்துரைக்கப்பட்டது— காரணத்தாலேயே சாத்தியமானது. இந்தத் தத்துவத்தின் படி, முதலாளித்துவ—ஜனநாயகப் புரட்சியின் கடமைகள் (நிலப்பிரபுத்துவத்தின் எச்சசொச்சங்களை ஒழிப்பது, சம அரசியல்சட்ட உரிமைகள் மற்றும் அத்தனை குடிமக்களுக்குமான சுதந்திரங்களை அறிவிப்பது மற்றும் இன்ன பிற) ஏகாதிபத்தியத்தின் சகாப்தத்தில், தொழிலாள வர்க்கம் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலமாகவும், ஒரு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஸ்தாபிக்கப்படுவதன் மூலமாகவும், மற்றும் ஒரு நேரடி சோசலிசத் தன்மையுடைய நடவடிக்கைகளை அறிமுகம் செய்வதன் மூலமாகவும் அல்லாமல் தீர்க்கப்பட முடியாது.

ஆரம்பத்தில் ரஷ்யா போன்ற ஒப்பீட்டளவில் பின்தங்கிய ஒரு நாட்டிற்காக சூத்திரப்படுத்தப்பட்ட ட்ரொட்ஸ்கியின் தத்துவமானது உலக சோசலிசப் புரட்சிக்கான முன்னோக்கிற்கு மூலோபாய நோக்குநிலையை வழங்கியது. துல்லியமாக, வர்க்கப் போராட்டத்தின் சர்வதேச இயக்கவியலை ட்ரொட்ஸ்கி உணர்ந்து கொண்டமை தான், ரஷ்யாவிலான ஜனநாயகப் புரட்சியானது, உலகப் பொருளாதாரம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் அழுத்தத்தின் கீழ் ஒரு சோசலிசத் தன்மையைப் பெறும் என்று அவர் முன்கணிப்பதற்கு வழிவகை தந்தது. உலக ஏகாதிபத்திய சகாப்தத்தில், ரஷ்ய சமூக அபிவிருத்தியின் பிரச்சினைக்கு ட்ரொட்ஸ்கி வழங்கிய பதிலானது, பிளெக்ஹானோவின் கருத்தாக்கங்களைத் தாண்டிய ஒரு பெரும் முன்னேற்றத்தைக் குறித்து நின்றது.

ஆயினும், 1917 அக்டோபரில் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தின் வெற்றிக்கு ட்ரொட்ஸ்கி பெரும் பங்களிப்பு செய்ததை அங்கீகரிப்பது என்பது, அவரது பணியானது, ஒரு வரலாற்று முக்கியத்துவமானதொரு அர்த்தத்தில், பிளெக்ஹானோவின் முன்னோடியான முயற்சிகளில் வேரூன்றியிருந்தது என்ற உண்மைக்கு முரண்பட்டதாய் ஆகாது.

ஒரு அரசியல்சிந்தனையாளராக பிளெக்ஹானோவின் தலைசிறந்த மதிப்பு, தொழிலாள வர்க்கம் பொருளாதார மற்றும் அரசியல் வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தை ஆக்கிரமிக்கின்ற ஒரு பாரிய சமூகக் குழுவாக எழுவதற்கு வெகு முன்பேயும், அத்துடன் ரஷ்யாவில் முதலாளித்துவம் அதன் ஆரம்ப அடிகளை மட்டுமே எடுத்து வைத்திருந்த நிலைமைகளின் கீழும், அதன் தீர்மானகரமான பாத்திரத்தை முன்கணித்திருந்தார் என்ற உண்மையில் தங்கியிருக்கிறது.

ரஷ்ய மார்க்சிசத்தின் தந்தை, ஜாரிசம் வீழ்ச்சியடையும்போதுகூட, உடனடியாக ரஷ்யா சோசலிச உருமாற்றத்தைத் தொடங்க முடிவதற்கான புறநிலை சாத்தியத்தை எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால் அது, அவரது வரலாற்று முன்னோக்கின் ஒரு மையமான கூறின் —அதாவது, முதலாளித்துவப் புரட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் மேலாதிக்கம் என்ற அவரது சிந்தனை— முக்கியத்துவத்தை குறைத்துவிடவில்லை.

பிளெக்ஹானோவ் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தை “கண்டறிந்தமை”யும் ஜனநாயகப் புரட்சியில் அதன் தலைமைப் பாத்திரத்தின் மீதான அவரது வலியுறுத்தலும் 1880களில் எண்ணிப் பார்த்திட முடியாத வருங்கால மோதல்களின் விதைகளைக் கொண்டிருந்தது. அவரது உட்பார்வைகளின் நடைமுறை அரசியல் சம்பந்தங்கள் 1905 புரட்சியின் பாதையில் எழவிருந்தன, புரட்சியின் ஜனநாயக மற்றும் சோசலிசக் “கட்டங்களுக்கு” இடையிலான உறவு அவர் ஆரம்பத்தில் வழங்கியிருந்ததை விடவும் இன்னும் துல்லியமான மற்றும் கணிசமாக மாறுபட்டதொரு மதிப்பீட்டை அவசியமாக்கியது. ஆயினும், ஒருபுறத்தில் ஜனநாயகப் புரட்சி மற்றும் சோசலிசப் புரட்சியை அரசியல் அபிவிருத்தியின் இரண்டு தனித்தனியான மற்றும் பிரிந்த கட்டங்களாக பிளெக்ஹானோவ் பிரித்துப் பார்த்ததற்கும், மறுபக்கத்தில் ட்ரொட்ஸ்கியால் அபிவிருத்தி செய்யப்பட்ட முன்னோக்கிற்கும் இடையில் இருந்த அடிப்படையான வித்தியாசத்தின் விரிவெல்லையை மறைக்காத அதேநேரத்தில், ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவம் பிளெக்ஹானோவின் முன்னோடியான தத்துவார்த்த மற்றும் அரசியல் வேலைகளுக்கு கொஞ்சமும் நன்றிக்கடன் கொண்டதில்லை என்பதான முடிவுக்கு வருவதை ஒருவர் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

ஜனரஞ்சகவாதத்தில் இருந்து மார்க்சிசத்திற்கு


1925ல் வகானியன்

ஜனரஞ்சகவாதத்தில் இருந்து மார்க்சிசத்திற்கு பிளெக்ஹானோவ் அபிவிருத்தி கண்ட நிகழ்ச்சிப்போக்கு, மற்றும் அவரது ஆரம்பகால அரசியல் கருத்தாக்கங்களின் தனித்துவமான தன்மை ஆகியவை 1920களின் ஆரம்பத்திலேயே குறிப்பிடத்தக்க சோவியத் மார்க்சிச எழுத்தாளரும் இடது எதிர்ப்பு அணியைச் சேர்ந்தவருமான வி.டெர்—வகானியன் (V. Ter—Vaganian - 1893—1936) மூலம் அலுப்பூட்டக் கூடிய அளவுக்கு முழுமையாக ஏற்கனவே மீள்கட்டுமானம் செய்யப்பட்டு விட்டிருந்தது. 1924 இல், பிளெக்ஹானோவின் சமூக—அரசியல் கண்ணோட்டங்களது அபிவிருத்திக்கு சிறப்பாக அர்ப்பணித்துக் கொண்ட, கிட்டத்தட்ட 700 பக்கங்கள் கொண்ட ஒரு திறம்பட்ட வாழ்க்கைச் சரிதத்தை அவர் வெளியிட்டார். [17]

1920 இல் டெர்—வகானியன் மார்க்ஸ் ஏங்கெல்ஸ் ஸ்தாபனத்தில் வேலை செய்யத் தொடங்கினார், அந்த சமயத்தில் சர்வதேச சமூக ஜனநாயக மற்றும் மார்க்சிச வரலாறு துறையில் மிகவும் புகழ்பெற்ற அறிஞர்களில் ஒருவரான டி.பி.ரியாசனோவ் அதன் தலைவராக இருந்தார். வகானியன் மார்க்சிசப் பதாகையின் கீழ் என்ற தத்துவார்த்த இதழின் ஆசிரியராக பணியாற்றினார். பிளெக்ஹானோவின் எழுத்துக்களுக்கு டெர்—வகானியன் காட்டிய ஆர்வத்தை அங்கீகரிக்கும் விதமாக, ரியாசனோவ் ஸ்தாபனத்தில் பிளெக்ஹானோவ் துறை ஒன்றை உருவாக்கி, ரஷ்ய மார்க்சிசத்தின் ஸ்தாபகரது படைப்புகளின் 24 தொகுதிகள் சேகரத்திற்கு தயாரிப்பு செய்வதற்கு டெர்—வகானியனை அமர்த்தினார். டெர்—வகானியன் மேற்கொண்ட ஆய்வுகளின் ஒரு இடைக்கால விளைவாக, ஜி.வி.பிளெக்ஹானோவின் வாழ்க்கைசரிதத்திற்கான ஒரு முயற்சி என்னும் அவரது படைப்பு அமைந்தது, இது 1923 இல் வெளிவந்தது. இந்தப் புத்தகத்தின் ஒரு புதிய, விரிவாக்கப்பட்ட பதிப்பு 1930களின் ஆரம்பத்தில் தயாரிக்கப்பட்டது, ஆனால் அது வெளியிடப்படவில்லை, ஏனென்றால், அதற்குள்ளாக, பிளெக்ஹானோவ் மீது ஒரு குரோதமான மனோநிலையை ஸ்ராலின் ஏற்றுக் கொண்டிருந்தார். 1936 இல் முதலாவது மாஸ்கோ விசாரணையில் பிரதிவாதிகளில் ஒருவராக டெர்—வகானியன் இருந்தார், சினோவியேவ் மற்றும் கமெனேவுடன் சேர்த்து அவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பின்வருவனவற்றில், டெர்—வகானியன் எழுதிய வாழ்க்கைச்சரிதத்தில் வழங்கப்பட்டிருக்கும் முக்கியமான விடயங்களை நமக்கு அடிப்படையாக்கிக் கொள்ள இருக்கிறோம். ஜனரஞ்சகவாதத்தில் இருந்து மார்க்சிசத்திற்கான பிளெக்ஹானோவின் உருமாற்றம் மற்றும் அவர் 1883 இல் தனது அரசியல் தத்துவத்தை அவரது முதல் மார்க்சிசத் துண்டுப்பிரசுரமான சோசலிசமும் அரசியல் போராட்டமும் என்பதில் எவ்வாறு சூத்திரப்படுத்தினார் என்ற கேள்வியுடன் நாம் நம்மை மட்டுப்படுத்திக் கொள்வோம்.

ரஷ்ய ஜனரஞ்சகவாதத்தின் (நரோத்திசம்) முக்கியமான தனித்துவமாக இருந்தது என்னவென்றால், விவசாயிகளை அது உன்னதப்படுத்தியதும் ரஷ்ய விவசாயிகள் கம்யூன்கள் (obshchina, commune) ஒரு வர்க்கமற்ற சமூகத்திற்கான ஒரு இயல்பான அடிப்படையை உருவாக்கும் என்ற அதன் கருத்தாக்கமும் ஆகும். இந்தத் தத்துவம் ஐரோப்பாவில் அப்போது தனது செல்வாக்கை வலுப்படுத்திக் கொண்டிருந்த மார்க்சிசத்திற்கு நேரடியாக முரண்பட்டதாக இருந்தது. ஜனரஞ்சகவாதிகள் மார்க்சின் பாடங்களை மரியாதையுடனும் அனுதாபத்துடனும் அணுகினர் என்றபோதிலும், அவை ரஷ்யாவில் நிலவுகின்ற நிலைமைகளுக்கு பொருத்தமற்றவை என்பதாக அவர்கள் கருதினர்.

இதேபோன்றதொரு கண்ணோட்டம் தலைசிறந்த ரஷ்ய சிந்தனையாளரும் எழுத்தாளருமான அலெக்சாண்டர் ஹெர்சென் (Aleksandr Herzen - 1812—1870) இன் சிந்தனைகளின் வலிமையான செல்வாக்கின் கீழும் வடிவம் எடுத்தது. இளம் வயதில், மேற்கு ஐரோப்பிய கற்பனாவாத சோசலிசத்தின் நீரோட்டங்களில் ஒன்றான செயிண்ட்—சிமோனிசத்தின் (Saint—Simonism) ஒரு சீடராக இருந்த ஹேர்சென், 1840களில் “மேற்கத்தியர்கள் பாதை” என்று சொல்லப்பட்டதன் ஒரு முன்னணி ஊக்குவிப்பாளராக எழுந்தார், அவர் மேற்கு ஐரோப்பிய வரலாற்றை ரஷ்யா கடக்க வேண்டிய வரலாற்றுப் பாதைக்கான ஒரு முன்மாதிரியாக கருதினார். ஆயினும், 1848—50 இல் ஐரோப்பிய முதலாளித்துவ—ஜனநாயகப் புரட்சிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர் ஒரு நெருக்கடிக்குள்ளானார், முதலாளித்துவ நாகரிகம் ஒரு முட்டுச் சந்தை எட்டி விட்டிருந்ததாகவும் பாட்டாளி வர்க்கம் ஒரு அற்பத்தன சீரழிவுக்குள் சென்று விட்டிருந்ததாகவும் ஒரு அவநம்பிக்கையான முடிவுக்கு அவர் வந்தார். இறுதியில், ஹெர்சன், பெரும் சிலாவிசத்தின் (pan—Slavism) இன் ஒரு பிரச்சாரவாதியாகவும், மார்க்சின் போதனைகளது ஆதரவாளர்களுக்கு எதிரான ஒரு ஆவேசமான தர்க்கவிவாதவாதியாகவும், ஐரோப்பிய நாகரிகத்துக்கு புத்துயிர் அளிக்கத்தக்க ஒரு சக்தியாக ரஷ்ய விவசாய வர்க்கத்தின் தனித்துவமான பாத்திரம் குறித்த ஒரு பிற்போக்கான தத்துவத்தை உருவாக்கினார்.

1870களில், ரஷ்ய வர்க்கம்சாராத-புத்திஜீவிகளது (raznochintsy—intelligentsia) இளம் தலைமுறையின் ஒரு கணிசமான அடுக்கு தீவிரமயமாதலின் ஒரு காலகட்டத்திற்குள் சென்றது, ஜாரிசத்திற்கு எதிராக ஒரு விவசாயிகளது கிளர்ச்சியைத் தூண்டுகின்ற யோசனையை நோக்கி அவர்கள் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருந்தனர், விவசாய சமூகத்தை (obshchina) பண்ணையடிமைத்தனம் மற்றும் சர்வாதிபத்தியத்தின் கருமையத்தில் இருந்து விடுதலை செய்வதற்கும் சமமான மற்றும் சுதந்திரமான உழைப்பாளிகளது ஒரு சமூகத்தை கட்டியமைப்பதற்குமான ஒரு முகவுரையாக அது அமையும் என்று அவர்கள் கருதினர்.

1861 இல் பண்ணையடிமை முறை ஒழிக்கப்பட்டதன் பின்னரும் ரஷ்ய விவசாயிகளது கடின நிலைமை அதிக முன்னேற்றம் காணவில்லை என்ற உண்மையானது இந்த மனோநிலைகளை ஊக்குவித்தது. நிலம் தொடர்ந்தும் பெரும் நிலச்சுவாந்தர்கள் கையில் தான் இருந்து கொண்டிருந்தது, விடுதலையளிக்கப்பட்ட பின்னரும் கூட, விவசாயிகள் மிக அதிகமான விலை கொடுத்தும், கிட்டத்தட்ட தாங்கமுடியாத சுமைகளை உருவாக்கிய மிகக் கடினமான நிலைமைகளின் கீழும் தான் அவர்களது நிலத்துண்டுகளை வாங்க முடிந்தது. மேலும், விவசாய சீர்திருத்தமானது இந்த விவசாய சமூகத்திற்குள்ளான (obshchina) உள்முகமான வித்தியாசங்களை தீவிரப்படுத்தியது, விவசாய வர்க்க ஒழுங்கமைப்பின் இந்த மேலாதிக்கமான வடிவத்தின் அடிப்படையை பலவீனப்படுத்தியது.

விவசாயிகள் அதிகமான அளவில், தாங்கள் ஏமாற்றப்பட்டதாய் உணர்ந்தனர் என்றால் அதில் ஆச்சரியமேதுமில்லை. ”கடவுள் பரிசாய் கொடுத்திருந்த”, ஆனால் நிலவுடமையாளர்கள் பலவந்தப்படுத்தியும் ஏமாற்றியும் அவர்களிடம் இருந்து பறித்துக் கொண்டு விட்டிருந்த தங்கள் நிலங்களைச் சொந்தமாக்கிக் கொள்ள அவர்கள் விரும்பினர். அதேநேரத்தில், பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யப் புரட்சியின் முக்கிய உந்துசக்திகளில் ஒன்றாக ஆன, ரஷ்ய விவசாய வர்க்கத்திலான இந்த கிளர்ச்சி மனோநிலையானது, ஒரு ”நல்ல” ஜார்—விடுதலையாளரில் ஆழமாக வேரூன்றிய ஒரு நம்பிக்கையுடன் கைகோர்த்திருந்தது.

இந்தக் காரணத்தினால், ஜனரஞ்சகவாதிகளின் முன்னோக்கும் “மக்களை நோக்கி செல்லும்” பிரச்சாரங்களும் முழுமையான தோல்வியில் விளைந்தது. 1870களின் மத்தியில், கிளர்ச்சிச் சிந்தனையை விவசாயிகளின் மத்தியில் பிரச்சாரம் செய்கின்ற புரட்சிகர புத்திஜீவித்தட்டின் முயற்சிகள் வெகுஜன ஆதரவை வெல்லத் தவறியது மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில், விவசாயிகள் அந்த பிரச்சாரம் செய்தவர்களை ஜாரிச போலிசிடம் பிடித்து ஒப்படைப்பதிலும் முடிந்தது. இந்தக் காரணத்தினால், ஜனரஞ்சகவாதிகளின் முன்னோக்கும் “மக்களை நோக்கி செல்லும்” பிரச்சாரங்களும் முழுமையான தோல்வியில் விளைந்தது. 1870களின் மத்தியில், கிளர்ச்சி சிந்தனையை விவசாயிகளின் மத்தியில் பிரச்சாரம் செய்கின்ற புரட்சிகர புத்திஜீவித்தட்டின் முயற்சிகள் வெகுஜன ஆதரவை வெல்லத் தவறியது மட்டுமல்ல, சில சந்தர்ப்பங்களில், விவசாயிகள் அந்த பிரச்சாரம் செய்தவர்களை ஜாரிச போலிசிடம் பிடித்து ஒப்படைப்பதிலும் முடிந்தது.

ஜனரஞ்சகவாதிகளது அமைப்பான “நிலமும் சுதந்திரமும்” (Zemlya i Volya) இல் ஒரு உள்முக நெருக்கடி உருவானது, அது விரைவில் ஒரு உடைவுக்கும் இட்டுச் சென்றது, 1879 கோடையில் Voronezh காங்கிரசில் இது நடந்தது. அமைப்பின் பெரும்பகுதி, அரசின் தலைமையான ஆட்களுக்கு எதிராய் ஒரு பயங்கரவாதப் பிரச்சாரத்தை முறைப்படி தொடங்குவது மட்டுமே ஜாரிசத்தை வெல்வதற்கு ஒரே வழி என்ற முடிவுக்கு வந்திருந்தது. ஜனரஞ்சகவாதிகளது இலக்கிய அங்கமான நிலம் மற்றும் சுதந்திரம் இதழின் நான்கு ஆசிரியர்களில் இருவரான, நிக்கோலோய் மோரோசோவ் மற்றும் லேவ் டிகோமிரோவ், “ஒழுங்கமைப்பின்மை” மற்றும் “நவகிளர்ச்சிவாதம்” தந்திரத்தை செயலூக்கத்துடன் ஊக்குவித்தனர்.

வரோன்ஸ் (Voronezh) காங்கிரசில் அவர்கள் இந்த புதிய தந்திரோபாயத்தை ஏற்றுக் கொள்ள வெளிப்படையாக அறிவுறுத்தினர். இந்த “சொல்லும் வழிமுறை”யை [18] பேச்சு சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரத்தை அடைவதற்கான ஒரு வழிவகையாக மோரோசோவ் கருதினார். விவாதத்தின் மத்தியில், ஏ.டி. மிகைலோவ் எதிர்பாராத வகையில் ஆச்சரியம் வெளியிட்டார்: “நாம் ஒரு அரசியலமைப்பைப் பெறுவோம், அரசாங்கத்தை சீர்குலைத்து அதனை செய்ய [ஒரு அரசியலமைப்பை ஏற்றுக்கொள்ள] நிர்ப்பந்திப்போம்.” வர்க்கப் போராட்டத்தை முற்றிலுமாகக் கைவிடுவது அவசியமாக இருந்ததாக ஆண்ட்ரே சிலியபோவ் (Andrei Zheliabov) அறிவித்தார், இவ்வாறாக, இந்த அரசியல் கூறினை சர்ச்சையின் முன்பகுதிக்கு தள்ளினார் என Aptekman இன் நினைவுகூர்தல் தெரிவிக்கிறது. [19]

வர்க்கப் போராட்டத்தை, அரசியல் மற்றும் சமூகப் புரட்சிக்கு எதிரெதிராக வைத்தல் ஜனரஞ்சகவாத உலகக் கண்ணோட்டத்தின் ஒரு பண்பாக இருந்தது என்பதை இங்கே குறிப்பிடுவது முக்கியமானது. ஒரு வரலாறல்லாத வழியில் அரசின் எந்த வடிவத்தையும் உடனடியாக அழிக்கப்பட வேண்டிய ஒரு தீமையாக கருதுவதில் ஜனரஞ்சகவாதிகள் அராஜகவாதிகளாய் இருந்தனர். அந்த சமயத்தில், மூன்று முக்கியமான புத்திஜீவித் தலைவர்கள் அவர்களில் இருந்து எழுந்தனர்.

பயோட்டர் லாவ்ரோவ் (Pyotr Lavrov -1823—1900) இவர்களில் ஒருவர். இவர் புரட்சியில், படித்த புத்திஜீவித்தட்டின் சிறப்பான பாத்திரம் குறித்த கருத்தாக்கத்தை உருவாக்கியவர் என்பதுடன், வரலாற்றில் “அகநிலை” காரணியை தீர்க்கமானதாகக் கருதுகின்ற அவரது மனப்பாங்கிற்கு புகழ்பெற்றவராவார். மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் உடன் நட்பான உறவுகளைப் பராமரித்த இவர் பல்வேறு குழுக்களையும் ஐக்கியப்படுத்துவதற்காகப் பாடுபட்டார், மற்ற பேதங்களை மனதில் கொள்ளாமல் எதேச்சாதிகார ரஷ்ய ஆட்சி என்ற பொது எதிரிக்கு எதிராக ஐக்கியப்படுவது மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமாக இருந்தது என்று அவர் நம்பினார்.

பயோட்டர் காச்சேவ் (Pyotr Tkachev 1844—1886) மற்றுமொரு போக்கிற்கு தலைமை கொடுத்தார். ஒரு புரட்சிகரக் குழு உடனடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அவசியம் குறித்து அவர் வலியுறுத்தினார், இரகசிய சதி யோசனையை ஊக்குவித்தார், ரஷ்ய புளோங்கிஸ்ட் (Blanquist - ஒரு சிறிய குழு மூலமான சதி மூலம் புரட்சி) இன் ஒரு வகையைப் பிரதிநிதித்துவம் செய்தார். (சதியாளர்களின் ஒரு சிறிய குழுவின் தீர்மானகரமான பாத்திரத்தின் மீதான காச்சேவின் நம்பிக்கை மற்றும் தொழிலாள வர்க்கத்தை ஒரு புரட்சிகர சக்தியாக கருதிப்பார்க்க அவர் மறுத்தமை ஆகியவை சே குவேரா மீது செல்வாக்கு செலுத்தியது, அவர் நவீனத்திற்கான ஒரு உத்வேகமளிக்கும் சாகச பிம்பமாக ரஷ்ய நரோத்னிக்குகளை அடிக்கடி குறிப்பிட்டார்.)


மிக்கையில் பக்குனின்

இறுதியில், மூன்றாவதாய் இருந்தவரும் மிக செல்வாக்கு மிக்கவருமாய் இருந்தவர், ரஷ்ய ஜனரஞ்சகவாதத்தின் சித்தாந்தவாதியான மிக்கையில் பக்குனின் (1814—1876), இவர் முதலாம் அகிலத்திற்குள் செல்வாக்கு செலுத்துவதற்காக மார்க்ஸ், ஏங்கெல்ஸ் உடன் போட்டியிட்டவர். விவசாய சமூகத்தை (obshchina) சோசலிசத்திற்கான இயல்பான அடிப்படையாகக் கருதியமை, நிலப்பிரபுத்துவத்தை ஒரு “சுதந்திர—சமூக”த்தின் குறிப்பிட்ட அரசல்லாத வடிவமாகக் கருதியமை, மற்றும் ஒரு “அரசுவாத”, “எதேச்சாதிகார”, ”சர்வாதிகார” கூறினை தாங்கி நின்றதன் பொருட்டு ஜேர்மன் சமூக ஜனநாயகத்தை நோக்கிய அவரது எதிர்மறை மனப்போக்கு ஆகியவை ஜனரஞ்சக உலகக் கண்ணோட்டத்தின் முக்கியமான அம்சங்களாக இருந்தன.

ஜோர்ஜ் பிளெக்ஹானோவ் தனது ஆரம்ப புரட்சிகரக் காலகட்டத்தில் ஒரு பக்குனியவாதியாக இருந்தார், பின்னாளில் அவர் பக்குனின்வாதத்தை ஒரு “தனி வகையான அராஜகவாத ஸ்லேவோபிலிசம்” (ஸ்லேவிக் மற்றும் குறிப்பாக ரஷ்ய கலாச்சாரத்தை மேற்கு ஐரோப்பா பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்திய சித்தாந்தம்) என்று விவரித்தார்.

“நிலம் மற்றும் சுதந்திரத்திற்கு” உள்ளான பேதங்கள் தீவிரமடையத் தொடங்கிய நிலையில், ஜனரஞ்சகவாதிகள் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொண்டதற்கும் வர்க்கப் போராட்டத்தை அவர்கள் நிராகரித்ததற்குமான பிரதான எதிர்ப்பாளர்களில் ஒருவராக பிளெக்ஹானோவ் எழுந்தார். இதன் விளைவாக பழைய ஜனரஞ்சக வேலைத்திட்டத்தைப் பாதுகாக்க முயன்ற Chernyi peredel (கறுப்பு மறுபங்கீடு) குழு தோன்றியது.

ஆயினும், பயங்கரவாத தந்திரோபாயத்தை நிராகரிப்பதற்கான வலுவான காரணங்களை வழங்குவதற்கும் “மக்களை நோக்கி செல்வது” என்ற முன்னோக்கு தோல்வி கண்டதற்கான ஒரு விளக்கத்தை வழங்கவுமான தனது முயற்சிகளில், பிளெக்ஹானோவ் அராஜகவாத—பகுனின்வாத கருத்தாக்கங்கள் குறித்த படிப்படியான தனது திறனாய்வைத் தொடங்கினார், இதன்மூலம் மார்க்சிசத்தை நோக்கிய அவரது திருப்பத்திற்குத் துவக்கமளித்தார்.

செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் 1878—79 இல் குளிர்காலத்தைச் செலவிட்ட பிளெக்ஹானோவ், உதயமாகிக் கொண்டிருந்த நகர்ப்புற தொழிலாள வர்க்கத்திற்குள்ளாக இருந்த அதிருப்தி மட்டங்களைக் கண்டார்.

இந்தக் காலகட்டத்தில் அவர் எழுதிய “சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் விதியும் ரஷ்யாவில் சோசலிசத்தின் கடமைகளும்” என்ற ஒரு கட்டுரை, புரட்சி குறித்து அவர் விருத்தி செய்த கருத்தாக்கத்தில், விவசாய வர்க்கத்துடன் சேர்த்து, எவ்வாறு பாட்டாளி வர்க்கத்தையும் சேர்த்துக் கொள்ளத் தொடங்கியிருந்தார் என்பதற்கு சாட்சியளிக்கிறது.[20] இதனிடையே, டெர்—வகானியன் அவதானித்ததைப் போல, “ஆயினும் அப்போதும் பெரும் நகரங்களில் தொழிலாளர்களது புரட்சியானது, விவசாயிகளது புரட்சிக்கான ஆதரவாகவே இருக்கும் என்று அவர் இன்னும் எண்ணினார். சமூகப் புரட்சியானது விவசாயிகளால்தான் பூர்த்தி செய்யப்படும், தொழிலாளர்கள் அவர்களது கூட்டாளிகளாக மட்டுமே இருப்பர் என்று அவர் கருதினார்.”[21]

1880 ஆகஸ்டில் வெளியான கறுப்பு மறுபங்கீடு குழுவின் இரண்டாவது இதழுக்கு அவர் எழுதிய கட்டுரைகளில், பிளெக்ஹானோவ் பழைய ஜனரஞ்சகவாதத்தின் சுலோகங்களையே தொடர்ந்தும் கூறிக் கொண்டிருந்தார்.[22] ஆனால் நிக்கோலாய் சிபெர் (1844—1888) இன் இலக்கிய நடவடிக்கைகளுக்கு குறிப்பாக கவனம் செலுத்தி அவர் பின்பற்றி வருகையில் மார்க்சிசத்துக்கான அவரது மரியாதை வளர்ந்து சென்றது. சிபெர், ரஷ்யாவில் மார்க்சின் போதனைகளைப் பிரபலப்படுத்தி வந்திருந்தார், ஆயினும் அவர் “ஒரு புரட்சியாளராக அல்லாமல், விஞ்ஞானத்தின் ஒரு உண்மையான காவலராக அதைச் செய்தார்.” [23]

1880—1881 குளிர்காலத்தில் பிளெக்ஹானோவ் பாரிஸில் தங்கியது அவரது அபிவிருத்தியில் அடுத்த முக்கியமான முன்னேற்றமாய் இருந்தது. அங்கே அவர் லாவ்ரோவை சந்தித்தார், தொழிலாளர்’ ஆர்ப்பாட்டங்களைக் கண்ணுற்றார், பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட பாரிஸ் கம்யூனின் வெளியிலிருந்து குடியேறியிருந்த தலைவர்களுக்கு மரியாதை செய்வதற்கு அர்ப்பணித்துக் கொண்ட முக்கிய கூட்டங்களில் பங்குபெற்றார். தேசிய நூலகத்திலும் அவர் வேலைசெய்தார், பாரிஸ் சோசலிஸ்டுகளின் கூட்டங்களில் தொடர்ந்து பங்குபெற்றார், அங்கு மார்க்சின் பிரெஞ்சு ஆதரவாளர்களான ஜூல் கேட் (Jules Guesde) மற்றும் போல் லஃபார்க் (Paul Lafargue) ஆகியோரின் பரிச்சயம் அவருக்கு ஏற்பட்டது, அவரது விமர்சனபூர்வ சிந்தனையின் அபிவிருத்தியில் அவர்களது உதவியும் செல்வாக்கும் “அசாதாரணமானவை”யாக இருந்தன.[24]

இந்தக் காலகட்டத்தில் தான் பிளெக்ஹானோவின் ஜனரஞ்சகவாதத்தில் இருந்து மார்க்சிசத்திற்கான பரிணாம வளர்ச்சியில் தீர்மானகரமான ஒரு திருப்புமுனை நிகழ்ந்தது. 1881 ஜனவரியில், கறுப்பு மறுபங்கீடு இன் ஆசிரியர் குழுவுக்கு வந்த ஒரு கடிதத்தில் சோசலிசத்தின் தன்மை குறித்து வந்திருந்த ஒரு கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்:

சோசலிசம் என்பது, உழைக்கும் பரந்த மக்களின் நலன்களின் கோணத்தில் இருந்து, நிலவும் சமூகத்தில் வர்க்கங்களது குரோதம் மற்றும் போராட்டத்தின் தத்துவார்த்த வெளிப்பாடு ஆகும்.[25]

இந்தக் கடிதத்தில், சோசலிசத்திற்கான சமூக அடிப்படையாக இருப்பதில் இருந்து விவசாயி வர்க்கம் மறைந்து விட்டிருந்தது. அதன்பின் பிளெக்ஹானோவ் சோசலிசத்தை “நிலவும் (அதாவது, முதலாளித்துவ) சமூகத்தில் வர்க்கங்களுக்கு இடையிலான குரோதம் மற்றும் போராட்டத்தின்” விளைவாகக் கருதவிருந்தார். மேலும், பிளெக்ஹானோவ் எழுதினார்:

புரட்சிகர நடவடிக்கைக்கு இதிலிருந்து [வர்க்கப் போராட்டம்] பிறக்கின்ற நடைமுறைக் கடமையானது, தொழிலாளர்களது அடுக்கை [rabocheyo soslovia] ஒழுங்கமைப்பதையும், அதன் விடுதலைக்கான பாதைகளையும் வழிவகைகளையும் அதற்கு சுட்டிக்காட்டுவதையும் கொண்டிருக்கிறது. ... சக்திகளின் ஒழுங்கமைப்புக்கு வெளியில், மக்களின் நனவையும் சொந்த நடவடிக்கையையும் தட்டியெழுப்புவதற்கு வெளியில், மிக சாகசகரமான புரட்சிகரப் போராட்டமும் கூட உயர் வர்க்கங்களுக்கே, அதாவது துல்லியமாக யாருக்கு எதிராக நாம் உழைக்கின்ற, ஒடுக்கப்பட்ட பரந்த மக்களை ஆயுதபாணியாக்க வேண்டுமோ, சமகால சமூகத்தின் அந்த அடுக்குகளுக்கே நன்மை பயப்பதாக அமையும். மக்களின் விடுதலையானது அம்மக்களின் பணியாகவே இருந்தாக வேண்டும்.[26] 

பிளெக்ஹானோவ் நிலப்பிரபுத்துவத்தை நோக்கிய தனது மனோபாவத்தையும் தீர்க்கமாக மாற்றி விட்டிருந்தார், அரசு மையப்படுத்தலை சமூகத்தை சமூக சமத்துவத்தின் அடிப்படையில் மறுகட்டுமானம் செய்வதற்கான ஒரு முக்கியமான முன்நிபந்தனையாக இப்போது அவர் கருதினார்.

"Karl Rodbertus—Jagetzow இன் பொருளாதாரத் தத்துவம்” என்ற அவரது கட்டுரை மார்க்சிசத்தை நோக்கிய அவரது நகர்வில் அடுத்த மைல்கல்லாக அமைந்தது, இக்கட்டுரை 1882—83 இல் சட்டபூர்வமான ரஷ்ய இதழான தாயகத்தின் குறிப்புகள் (Otechestvennye Zapiski) இன் பல இதழ்களில் வெளியிடப்பட்டது.

இந்தக் கட்டுரையில், பிளெக்ஹானோவ், முதலாளித்துவ எழுத்தாளர்களின் கண்களில் மக்கள் அனைவரும், தொழிலாள வர்க்கம் அதன் விடுதலைக்குப் போராடுவதற்கான உரிமையை ஒப்புகொள்பவர்கள் மற்றும் அந்த உரிமையை ஒப்புக்கொள்ள மறுப்பவர்களாகப் பிரிக்கப்படுவதாக வாதிட்டார். அவர் எழுதினார்:

எல்லாவற்றையும் விட, உழைக்கும் வர்க்கங்களின் அரசியல் சுய—நடவடிக்கை குறித்த பிரச்சினையில், இத் தத்துவங்களின் ஆசிரியர்களின் நடைமுறை முயற்சிகள், அவர்களின் கண்களில் தீர்க்கமான முக்கியத்துவம் கொண்டவையாக இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியில் தொழிலாளர்கள் ஒழுங்கமைவதற்கு எதிராக எழுதக் கூடிய எழுத்தாளர் அநேகமாக முதலாளித்துவப் பொருளாதார அறிஞர்களின் அனுதாபத்தைப் பெறுவார், அவர் என்ன தத்துவார்த்த கருத்தாக்கங்களால் வழிநடத்தப்பட்டிருந்தாலும் அது ஒரு பொருட்டாக இராது.[27]

இங்கே, பிளெக்ஹானோவ், 1882 இன் ஆரம்பத்திலேயே, ஒரு மிகத் தெளிவான விதத்தில், தொழிலாள வர்க்கத்தை ஒரு தனியான, வர்க்க—அடிப்படையிலான அரசியல் கட்சியில் ஒழுங்கமைக்கின்ற அவசியத்தை சூத்திரப்படுத்திக் கொண்டிருந்தார்.

நாடுகடத்தப்பட்டிருந்த பிளெக்ஹானோவின் தத்துவார்த்த முன்னேற்றங்களுக்கு இணையாக, “மக்கள் விருப்பம்” (Narodnaya Volya) குழுவின் பயங்கரவாத முயற்சிகளும் அவற்றின் உச்சத்தை எட்டியிருந்தன. 1881 மார்ச்சில், ஜார் இரண்டாம் அலெக்சாண்டரைக் குறிவைத்தான இன்னுமொரு தாக்குதலில் அவர் கொலையுண்டார். அத்தனை ஜனநாயக ஐரோப்பாவின் கண்களிலும், ஜனரஞ்சகவாதிகளின் புரட்சிகர அதிகாரம் அதன் உச்சப் புள்ளியை எட்டியிருந்தது. ஆயினும், பயங்கரவாத தந்திரோபாயத்தின் அதே “வெற்றி” ”மக்கள் விருப்பம்” குழுவின் முடிவின் தொடக்கத்தையும் குறித்ததாகவும் ஆனது. தொடர்ந்து வந்த கொடூரமான ஒடுக்குமுறைகளில் மிகச்சிறந்த காரியாளர்கள் அதன் பொறுப்புகளில் இல்லாது போயினர். அரசாங்கத்தின் “சீர்குலைவு” என்பது, ஒருவேளை அது நடந்திருந்ததாக எடுத்துக்கொண்டாலும் கூட, மிகவும் குறுகிய காலமே உயிர்வாழ்ந்தது, ரஷ்ய முடியாட்சியின் அடித்தளங்களை உலுக்கத் தவறியது.

ஒரு தற்காலிக அதிர்ச்சியின் பின்னர், புதிய மூன்றாம் ஜார் அலெக்சாண்டரும் அவரது பரிவாரங்களும் ரஷ்யாவில் இன்னுமொரு “குளிர் காலகட்டத்தை” தொடக்கின, அடுத்த 15 ஆண்டுகளுக்கு அவர்கள் நாட்டில் ஒரு கடுமையான தேசியவாத பிற்போக்குத்தன ஆட்சியைப் பராமரித்தனர். சமூக வீழ்ச்சியின் ஒரு சூழலுடன் கரம்கோர்த்து தீவிர நோக்குநிலையுடைய புத்திஜீவித் தட்டின் பரந்த அடுக்குகளது மத்தியில் அவநம்பிக்கை மற்றும் ஏமாற்றத்தின் வளர்ச்சியும் உடன்வந்தது, இது அவர்களிடையே “சிறிய விடயங்கள்” மற்றும் முக்கியத்துவமற்ற நிலச் சீர்திருத்தங்களை சாதிக்கின்ற ஒரு தத்துவத்தை ஏற்றுக்கொள்வதை நோக்கி விருப்பம் கொள்ளும் மனோநிலைகளை ஊக்குவித்தது.

இரண்டாம் அலெக்சாண்டர் படுகொலை செய்யப்பட்டதற்குப் பின்னர், வருங்கால ரஷ்ய புரட்சிகர இயக்கத்திற்கு தீர்மானகரமான முக்கியத்துவம் உடைய கேள்விகளைத் தெளிவுபடுத்துவதன் மீது பிளெக்ஹானோவின் பிரதான முயற்சிகள் கவனம் குவித்தன. ஜனரஞ்சகவாதிகள் மீதான தத்துவார்த்த கண்டனத்தை முன்னெடுப்பதில், பிளெக்ஹானோவ் அளவிடமுடியா உடலியல்ரீதியான மற்றும் புத்திஜீவித்தனரீதியான துணிச்சலை வெளிப்படுத்தினார்.

பிளெக்ஹானோவின் தத்துவார்த்த உழைப்புகளின் இறுதி விளைவாய் 1883 செப்டம்பரில் சுவிட்சர்லாந்தில் “தொழிலாளர் விடுதலை” (“Emancipation of Labor”) குழு ஸ்தாபிக்கப்பட்டது. இந்தக் குழு 1903 இல் ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் இரண்டாவது காங்கிரஸ் வரையில் இருந்தது. அமைப்பு அதன் சமூக—ஜனநாயகத் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்ற விதமான ஒரு பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று பிளெக்ஹானோவ் விரும்பினார். ஆனால் குழுவின் மற்ற உறுப்பினர்களிடம் இருந்து எதிர்ப்பு வந்ததை அடுத்து, அவர் ஒரு சமரசத் தீர்வை எட்டினார்.

சோசலிசமும் அரசியல் போராட்டமும் என்னும் துண்டுப் பிரசுரம்

“தொழிலாளர் விடுதலைக்” (“Emancipation of Labor”) குழு ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்பாக சோசலிசமும் அரசியல் போராட்டமும் என்ற பிளெக்ஹானோவின் பிரசுரம் வெளிவந்தது, அதில், அவர் முதன்முறையாக, அவரது அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படைப் புள்ளிகளை தனித்துவமான மார்க்சிசப் பதங்களில் சூத்திரப்படுத்தினார்.


பிளெக்ஹானோவ்

இந்தப் படைப்பு ரஷ்ய சோசலிசத்தின் அபிவிருத்தியில் இன்றியமையாததாக நிரூபணமானதோடு ஐரோப்பா முழுமையிலுமான சோசலிஸ்டுகளின் கவனத்தை ஈர்த்தது. லண்டனில் இருக்கும்போது, பிளெக்ஹானோவ் பிரெடரிக் ஏங்கெல்ஸை சந்தித்தார், அவர் பிளெக்ஹானோவை மெய்யியல் தேர்ச்சி பெற்றவராக ஒப்புக்கொண்டார். நவீன சடவாதம் என்பது, சாரத்தில், சிறுகுறைகள் நீக்கப்பட்ட மற்றும் தர்க்கரீதியாக பூர்த்தி செய்ய நீட்சி செய்யப்பட்ட ஸ்பினோயிசவாதம் (Spinozism) என்ற கருத்துடன் —அத்தனை வகையான கருத்துவாத திரிப்புகள் மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக சடவாதத்தைப் பாதுகாப்பதிலான பிளெக்ஹானோவின் மேலதிகப் போராட்டங்கள் அத்தனைக்கும் அடித்தளம் அமைத்த ஒரு ஆய்வுமுடிவாக இது அமைந்திருந்தது— ஏங்கெல்ஸ் உடன்பட்டார் என்பதை பிளெக்ஹானோவ் நினைவுகூர்ந்தார்.

வளர்ந்து வந்த நகர்ப்புற பாட்டாளி வர்க்கத்தின் சமூக முக்கியத்துவத்தை முற்றிலும் உதாசீனப்படுத்த வழியில்லாமல், “புரட்சிக்கு” தொழிலாளர்கள் முக்கியமானவர்களாய் இருந்தனர் என்பதை தயக்கத்துடன் ஒப்புக்கொள்ள ஜனரஞ்சகவாதிகள் தள்ளப்பட்டனர். இந்த சொல்லாடலை ஜனரஞ்சகவாதிகளுக்கு எதிராகத் திருப்பிய பிளெக்ஹானோவ் “நமது வேறுபாடுகள்” என்ற பிரசுரத்தில் பதிலளித்தார்: “இது எந்த வகையிலும் சமூக ஜனநாயகவாதி பேசும் விதமல்ல; புரட்சிக்கு தொழிலாளர்கள் அவசியமாக இருக்கிறார்கள் என்ற விடயமல்ல இது, தொழிலாளர்களுக்கு புரட்சி அவசியமாக இருக்கிறது என்பதே விடயம் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.”[28] வர்க்கத்திற்கு—அப்பாற்பட்ட மக்கள் புரட்சி என்ற ஜனரஞ்சகவாதிகளின் கருத்தாக்கத்திற்கு எதிரான பிளெக்ஹானோவின் போராட்டத்தின் விளைவுகளை இந்த வாசகம் இரத்தினச்சுருக்கமாக கூறி விட்டது. எதேச்சாதிகாரத்துக்கு எதிராய் வரவிருந்த புரட்சியில், தொழிலாள வர்க்கம் ஒரு தனியான, சுதந்திரமான மற்றும் தீர்மானகரமான பாத்திரத்தை ஆற்றவிருந்ததுடன், அதன் சொந்த வர்க்க நலன்கள் மற்றும் இலட்சியங்களது ஒரு நனவுடன் சுயாதீனமாக செயல்பட இருந்தது.

அதே படைப்பில், பிளெக்ஹானோவ் இதனையும் பிரகடனப்படுத்தினார்:

மேற்கைப் போன்ற வரலாற்று மற்றும் பொருளாதார அபிவிருத்தியின் அதே கட்டங்களை ரஷ்யா கடந்தாக வேண்டும் என்பதான அபத்தமான முடிவுக்கு மார்க்ஸ் கூறியதைக் காரணம் காட்டுகிறார்கள்.[29]

மார்க்சின் தத்துவத்தை ரஷ்யாவுக்கு “எந்திரத்தனமாக” பொருத்தியவராக பிளெக்ஹானோவை விமர்சனம் செய்தவர்களின் கூற்றுகளை மறுப்பதற்கு இந்த வசனமே போதுமானதாய் இருக்கிறது. பிளெக்ஹானோவ் வலியுறுத்தினார்,

....மேற்கு ஐரோப்பிய உறவுகளின் வரலாறானது, மார்க்சினால், உலகின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் எழுந்த மற்றும் அபிவிருத்தி கண்ட முதலாளித்துவ உற்பத்தியின் வரலாற்றின் அடிப்படையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ... மூலதனத்தின் ஆசிரியரும் சரி அல்லது அவரது புகழ்மிக்க நண்பர் மற்றும் சகாவும் சரி எந்த குறிப்பிட்ட நாட்டின் பொருளாதார பிரத்தியேகத்தன்மைகள் குறித்து கவனத்தைத் தொலைத்து விடவில்லை; அந்த நாட்டின் சமூக, அரசியல், மற்றும் புத்திஜீவித இயக்கங்கள் அத்தனைக்குமான விளக்கத்தை அவர்கள் அந்த பிரத்தியேகத்தன்மைகளில் தேட மட்டுமே செய்தனர்.[30]

குறிப்பாக, மார்க்சின் கற்பித்தல்கள் ரஷ்ய நிலத்தின் விவசாய கம்யூனின் (obshchina) முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்தவில்லை என்று பிளெக்ஹானோவ் விளக்கினார். 1882 ஜனவரியில், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ரஷ்ய மொழிபெயர்ப்புக்கு மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸினால் எழுதப்பட்ட முகவுரையில் இருந்து அவர் மேற்கோளிட்டார். ரஷ்ய கம்யூன், குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ், “நேரடியாக உயர்ந்த, நில உரிமையின் கம்யூனிச வடிவத்திற்குச் செல்ல முடியும்” என்று அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

பிளெக்ஹானோவ் தொடர்ந்தார்:

இந்த நிலைமைகள், அவர்களது கருத்தில், ஐரோப்பாவின் மேற்கிலும் மற்றும் ரஷ்யாவிலுமான புரட்சிகர இயக்கத்தின் பாதையுடன் நெருக்கமாகத் தொடர்புபட்டதாக இருந்தது. “ரஷ்யப் புரட்சியானது” அவர்கள் கூறுகிறார்கள், “மேற்கிலான பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு ஒன்றுக்கொன்று துணைநிற்கக் கூடியதாகின்ற வகையில், அதற்கான ஒரு சமிக்கையாக ஆகின்ற பட்சத்தில், இப்போதைய ரஷ்ய நிலப் பொது உரிமைத்துவமானது ஒரு கம்யூனிச அபிவிருத்திக்கான தொடக்கப்புள்ளியாக சேவை செய்ய முடியும்.” (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, VIII) ...ரஷ்ய கிராம கம்யூனானது “கம்யூனிச பொது உடைமையின் ஒரு உயரிய வடிவமாக” அபிவிருத்தி காண்பது என்பது மேற்கில் தொழிலாள—வர்க்க இயக்கத்தின் தலைவிதியுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது என்பதை நவீன நாகரிக சமூகங்களின் பொருளாதார வாழ்வில் சர்வதேச உறவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்கின்ற எவரொருவரும் மறுக்க முடியாது.[31]

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ரஷ்யாவில் உள்முக சமூக—அரசியல் அபிவிருத்தியின் பகுப்பாய்வு, பாட்டாளி வர்க்கப் புரட்சியின் ஒரு பொதுவான சர்வதேச முன்னோக்கின் கட்டமைப்புக்குள்ளாக மட்டுமே சாத்தியம் என்று பிளெக்ஹானோவ் வலியுறுத்தினார்.

பிளெக்ஹானோவ் ரஷ்யப் புரட்சி குறித்த தனது கருத்தாக்கத்திற்கு, 19 ஆம் நூற்றாண்டின் மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ—ஜனநாயகப் புரட்சிகளது அனுபவத்தை “விமர்சனபூர்வமற்ற” முறையில் அடிப்டையாகக் கொண்டார் என்பது பிளெக்ஹானோவ் விமர்சகர்களது இன்னுமொரு கூற்றாக இருக்கிறது.

ஆனால் பிளெக்ஹானோவ் ஒருபோதும் அப்படியானதொரு உயிரற்ற அணுகுமுறையை பயன்படுத்தவில்லை. அவர் எழுதினார்:

“சிவப்பு பூதம்” அச்சுறுத்துகின்ற வடிவங்களை எடுக்கின்ற போதெல்லாம், “தாராளவாதிகள்” மிகவும் சம்பிரதாயமான இராணுவ சர்வாதிகாரத்தினை தழுவிக் கொள்வதில் பாதுகாப்பு தேடிக் கொள்ள ஆயத்தமாக இருந்தார்கள் என்பதை மேற்கு ஐரோப்பாவின் வரலாறு மிக உறுதியாக நமக்குச் சொல்கிறது.[32]

ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கத்தின் முதலாளித்துவ—விரோத அரசியல் நடவடிக்கையின் அச்சுறுத்தலானது, தாராளவாத முதலாளிகளை சர்வாதிபத்திய பிற்போக்குத்தனத்தை நோக்கித் தள்ளும் என்பதை பிளெக்ஹானோவ் நன்கு அறிந்திருந்தார் என்பதை இந்த வார்த்தைகள் தெளிவாக்குகின்றன. அவர் இந்த விளைவைத் தவிர்ப்பதற்கு விரும்பினார், அதேசமயத்தில் ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் சுற்றுவரைக்குள்ளாக தொழிலாள வர்க்கத்தின் நிலையை வலுப்படுத்த விரும்பினார். இயல்பிலேயே ஒரு முரண்பட்ட நிலைக்கான ஒரு பொருத்தமான பதிலைத் தேடுகின்ற முயற்சியில், பிளெக்ஹானோவ் வாதிட்டார்:

"நமது சோசலிச புத்திஜீவித் தட்டு ரஷ்ய சமூக சக்திகளின் உண்மை உறவுகளை அரசியலமைப்புக்கு-முந்தைய காலகட்டத்திலேயே கூட தொழிலாள வர்க்கத்திற்கு சாதகமானதாக மாற்றுவது குறித்து அக்கறை கொண்டாக வேண்டும். இல்லையென்றால் முடியாட்சியின் வீழ்ச்சியானது அதன் மீது ரஷ்ய சோசலிஸ்டுகள் அல்லது ஜனநாயகவாதிகள் வைத்த நம்பிக்கைகளுக்கு எந்த விதத்திலும் நியாயப்படுத்தப்பட முடியாது போய்விடும்.... சோசலிஸ்ட் கட்சியும் கூட, அது தாராளவாத முதலாளித்துவத்திற்கு பேச்சு மற்றும் நடவடிக்கைச் சுதந்திரத்தை வென்றிருக்கும் நிலையில், ஜேர்மன் சமூக—ஜனநாயகம் இன்று தன்னைக் காணுகின்றதொரு “அசாதாரணமான” ஒரு அதேநிலையில் தன்னைக் காணும்படியாகலாம்... ரஷ்ய சோசலிஸ்டுகள்... தமது நம்பிக்கைகளை முதலும் முதன்மையுமாக தொழிலாள வர்க்கத்தின் மீது வைத்தாக வேண்டும்... தொழிலாள வர்க்கத்தின் வலிமையானது, எந்த மற்ற வர்க்கத்தையும் போலவே, மற்ற எல்லா விடயங்களையும் விட, அதன் அரசியல் நனவு குறித்த தெளிவு, அதன் ஒன்றமைந்த நிலை மற்றும் ஒழுங்கமைப்பு மட்டம் ஆகியவற்றைச் சார்ந்திருக்கிறது. அதன் வலிமையின் இந்தக் கூறுகள்தான் நமது சோசலிச புத்திஜீவித்தட்டினால் செல்வாக்கு செலுத்தப்பட்டாக வேண்டும். வரவிருக்கும் விடுதலை இயக்கத்தில் இந்தத் தட்டு தொழிலாள வர்க்கத்தின் தலைமையாக ஆக வேண்டும், அதற்கு அதன் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களையும் அந்த நலன்களின் பரஸ்பர சார்பையும் விளக்க வேண்டும், அத்துடன் அதனை ரஷ்யாவின் சமூக வாழ்வில் ஒரு சுயாதீனமான பாத்திரத்தை ஆற்றுவதற்கு தயாரிப்பு செய்ய வேண்டும். ரஷ்யாவின் அரசியலமைப்பு வாழ்கையின் மிகத் தொடக்க காலகட்டத்திலேயே நமது தொழிலாள வர்க்கமானது ஒரு திட்டவட்டமான சமூக மற்றும் அரசியல் வேலைத்திட்டத்துடனான ஒரு தனிக் கட்சியாக முன்வருகின்ற விதத்தில் அவர்கள் தங்கள் அத்தனை ஆற்றலையும் செலவிட வேண்டும். [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது] [33]

”ரஷ்ய சோசலிஸ்டுகள் ... தங்களது நம்பிக்கைகளை முதலும் முதன்மையுமாய் தொழிலாள வர்க்கத்தில் வைத்தாக வேண்டும்” என்றும் “சோசலிஸ்ட் கட்சி, தாராளவாத முதலாளித்துவத்திற்கு பேச்சு மற்றும் நடவடிக்கை சுதந்திரத்தை வென்று தரும்” என்றும் எழுதியதன் மூலம் ஜாரிசத்திற்கு எதிரான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கம் (மற்றும் அதன் கட்சியின்) மேலாதிக்கம் குறித்த தனது தத்துவத்தை பிளெக்ஹானோவ் சூத்திரப்படுத்தினார்.

பிளெக்ஹானோவின் தத்துவார்த்த சாதனையில் இருந்து விலகிச் செல்லாத அதேநேரத்தில், அவரது சூத்திரப்படுத்தலானது புரட்சியின் ஒரு இரண்டு கட்டத் தத்துவத்தை முன்வைத்தது என்பதை ஒப்புக்கொள்வதும் அவசியமாகும். முதல் கட்டமானது ஒரு முதலாளித்துவ ஜனநாயகத்தை ஸ்தாபிப்பதற்காகப் போராடும். இரண்டாவது கட்டமானது, அபிவிருத்தியின் ஒரு காலவரையறையற்ற எதிர்கால புள்ளி ஒன்றில், தொழிலாளர்’ ஆட்சிக்கும் சோசலிசத்திற்குமான போராட்டத்தை முன்னெடுக்கும்.

1880களின் ஆரம்பத்தில் ஜாரிச ரஷ்யாவில் இருந்த சமூக—பொருளாதார பின்தங்கிய நிலைமைகளின் கீழ் பாட்டாளி வர்க்கம் உடனடியாக ஒரு சோசலிச சமூகத்தை கட்டியெழுப்பும் நிலைக்கு செல்லக் கூடிய சாத்தியத்தை பிளெக்ஹானோவால் காணமுடியாமல் இருந்தது. ஆயினும் கூட, ரஷ்யப் புரட்சி அபிவிருத்தியானது, ஐரோப்பாவில் மேலாதிக்கமான முதலாளித்துவ ஆட்சியே இன்னும் பராமரிக்கப்பட்டு வந்த அதேவேளையில் முடியாட்சியை தூக்கிவீசுவதற்கான அவசியத்தை அன்றைய தினத்திற்கான பணியாக வைக்கின்ற நேரத்தில் தொழிலாளர் கட்சியானது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதான கேள்விக்கு ஒரு பதிலைக் காண அவர் முயன்றார்.

இந்தக் கேள்விக்கு, ஒரு வரலாற்றுப் பார்வையில் இருந்து, அந்த நேரத்தில் ரஷ்யாவின் புறநிலை சமூக யதார்த்தத்துக்குத் தக்கபடி ஒரு ஆழமான இயங்கியல் பதிலை பிளெக்ஹானோவ் வழங்கினார். ஆனால் அந்தக் காரணத்தினாலேயே, இந்த பதிலானது இறுதியான ஒன்றாக இருக்கவில்லை, அது முற்றிலும் உணரக் கூடியதான முரண்பாட்டின் சுவடுகளைக் கொண்டிருந்தது.

கொடுங்கோன்மைக்கு எதிரான போராட்டத்தில் முதலாளித்துவ வர்க்கம் உள்ளிட்ட அத்தனை மற்ற சமூக அடுக்குகளுக்குமான அரசியல் தலைமையாக ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் இருக்க வேண்டும் என பிளெக்ஹானோவ் வலியுறுத்தினார். ஆனால், ஜாரிசத்தை வெற்றி பெற்றவுடனேயே அது உடனடியாக தனது சொந்த வர்க்க வேலைத்திட்டத்தை அடையத் தொடங்க முடியாது. ஆகவே, புறநிலையாக திறந்த நிலையில் இருந்த அக்கேள்வியானது பின்வருவதாகக் குறைந்துபோனது: ஜனநாயகப் புரட்சியில் பாட்டாளி வர்க்கக் கட்சி வெற்றி பெறுமாயின், வெற்றிபெறும்போது அது முதலாளித்துவ வர்க்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைப்பது சாத்தியமா, இந்த நிகழ்ச்சிப்போக்கு என்ன ஸ்தூலமான பொறிமுறையின் கீழ் நடைபெற வேண்டும்?

மேலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைத் தாராளவாத முதலாளித்துவத்திடம் ஒப்படைக்குமாயின், பிந்தையது “சிவப்பு பூத” அச்சுறுத்தலால் மிரண்டு அதனை “மிகவும் சம்பிரதாயமான இராணுவ சர்வாதிகாரத்தை” கொண்டு ஒடுக்க முயற்சி செய்யாது என்பதற்கோ அல்லது மீண்டும் முடியாட்சியை மீட்சி செய்ய முயலாது என்பதற்கோ என்ன உத்தரவாதம் அங்கே இருந்தது?

பிளெக்ஹானோவ் அக்காலத்து நிலைமைகளின் கீழ், அவரால் இந்தக் கேள்விகளுக்கு ஒரு இறுதியான பதிலை வழங்க முடியவில்லை. புரட்சிகர நிகழ்ச்சிப்போக்கில் பாட்டாளி வர்க்கத்தின் தீர்மானகரமான பாத்திரம் குறித்து அவர் வலியுறுத்திய அதேநேரத்தில், புரட்சியானது, அதன் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தைத் தாண்டி, ஒரு கணிசமான கால இடைவெளி இல்லாமல், முன்னேற முடியும் என்று அவர் நம்பவில்லை. ஒரு முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியில் இருந்து ஒரு சோசலிசப் புரட்சிக்கான உருமாற்றம், பல தசாப்தங்கள் நீளும் என்பதற்கான சாத்தியக்கூறுகளே அவருக்குத் தெரிந்தன. பிற்கால மென்ஷிவிசத்தின் மூலங்களை, இங்கே சந்தேகத்திற்கிடமில்லாமல், பார்க்க முடியும்.

ட்ரொட்ஸ்கி, “ரஷ்யப் புரட்சியின் மூன்று கருத்துருக்கள்” என்ற தனது 1939 கட்டுரையில், பிளெக்ஹானோவின் முன்னோக்கில் பொதிந்திருந்த மட்டுப்படுத்தல்கள் குறித்து கவனத்தை ஈர்த்தார்:

பிளெக்ஹானோவ் முதலாளித்துவப் புரட்சியை சோசலிசப் புரட்சியில் இருந்து —இதனை அவர் வரையற்ற காலத்திற்குத் தள்ளிவைத்தார்— தனியான ஒரு வேலையாக பிரித்தது மட்டுமல்ல, இந்த இரண்டுக்கும் முற்றிலும் வெவ்வேறான சக்திகளது சேர்க்கைகளைச் சித்தரித்தார். பாட்டாளி வர்க்கம் அரசியல் சுதந்திரத்தை, தாராளவாத முதலாளித்துவத்துடன் கூட்டணி வைத்து சாதிக்க வேண்டும்; அதற்குப் பின் பல தசாப்தங்கள் கழித்து முதலாளித்துவ அபிவிருத்தியின் ஒரு உயரிய மட்டத்தில், பாட்டாளி வர்க்கம் முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிரானதொரு நேரடியான போராட்டத்தில் சோசலிசப் புரட்சியை முன்னெடுக்கலாம்.[34]

அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டத்தை சோசலிசத்துக்கான போராட்டத்துடன் நேரடியாக ஒன்றிணைக்கின்ற சாத்தியத்தை பிளெக்ஹானோவ் காணவில்லை. பிளெக்ஹானோவின் பக்க நியாயமாக, இந்த சாத்தியமானது 1880கள் மற்றும் 1890களில் இருக்கவும் இல்லை. ஆனால் ஜனநாயக மற்றும் சோசலிசப் புரட்சிகளுக்கு இடையிலான ஒரு நேரடியான மற்றும் உடனடியான இணைப்பை அவர் நிராகரித்த போதிலும், பாட்டாளி வர்க்கத்தின் நனவான நடவடிக்கையானது ஜனநாயகக் கட்டத்தில் இருந்து சோசலிசக் கட்டத்துக்கான உருமாற்றத்தை —ஒரு நீடித்த கால இடைவெளியில் என்றாலும் கூட— எட்டப் போராடும் என்பதை பிளெக்ஹானோவ் சுட்டிக்காட்டினார். சோசலிசமும் அரசியல் போராட்டமும் என்பதில் பிளெக்ஹானோவ் கூறினார்:

இவ்வாறாய், ஒரு பக்கத்தில் அரசியல் சுதந்திரத்திற்கான போராட்டம், இன்னொரு பக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை அதன் வருங்கால சுயாதீனமான மற்றும் தாக்குதல் பாத்திரத்திற்கு தயார்படுத்துதல்— இவ்விதமே, எமது கருத்தின்படி, இப்போதைக்கு ஒரே சாத்தியமான “கட்சி வேலைகளை அமைக்கும் முறை” ஆகும். முடியாட்சியைத் தூக்கிவீசுவது மற்றும் சோசலிசப் புரட்சி ஆகிய இரண்டு அடிப்படையில் வெவ்வேறான விடயங்களை ஒன்றாக்குவதும், சமூக அபிவிருத்தியின் இந்தக் கூறுகள் நமது நாட்டின் வரலாற்றில் ஒரேசமயத்தில் நிகழும் என்ற நம்பிக்கையில் புரட்சிகரப் போராட்டத்தை நடத்துவதும், இரண்டையுமே நடக்கவிடாது செய்துவிடும். ஆயினும் இந்த இரண்டு கூறுகளை நெருக்கமாகக் கொண்டுவருவது என்பது நம்மிடம் தான் தங்கியிருக்கிறது.[35]

பிளெக்ஹானோவ் ரஷ்யப் புரட்சியின் பாதையை இரண்டு கட்டங்களாகப் பிரித்தார் என்றாலும் கூட, அவை இரண்டையும் முடிந்த அளவுக்கு “நெருக்கமாக” கொண்டுவருவதற்கு மிகவும் விரும்பினார் என்பதைக் குறிப்பிடுவது முக்கியமானதாகும். பிளெக்ஹானோவின் வாழ்க்கைசரிதத்தை எழுதிய அமெரிக்கரான பேராசிரியர் சாமுவேல் பரோன் (Samuel Baron), அவரது நிலைப்பாட்டில் பொதிந்திருந்த முரண்பாட்டுக்கு கவனம் ஈர்த்தார். பரோன் கருத்துப்படி, பிளெக்ஹானோவ்,

முதலாளித்துவ அபிவிருத்தி கட்டத்தை இல்லாதொழிக்க முடியாவிடில் அதனை நீளம் குறுக்குகின்ற நிலையை எதிர்கொள்ள தயாரிப்புடன் இருந்தார். புரட்சிகரக் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளின் மூலமாக வரலாற்று நிகழ்ச்சிப்போக்கில் ஒரு திருத்தம் செய்வதன் மூலமாக இது நிகழ்த்தப்பட முடியும். பிளெக்ஹானோவ் அவரது புரட்சிகரக் கட்சியின் தன்னார்வ நடவடிக்கையானது நிலவும் பொருளாதார அபிவிருத்தி மட்டத்தினால் தீர்மானிக்கப்படுகிற வரையறைகளுக்குள்ளாக எப்போதும் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற முகாந்திரத்தில், அவரது கண்ணோட்டம் மற்றும் மூலோபாயத்தை நரோத்னிக்குகளிடம் இருந்து கூர்மையாகப் பிரித்துக் காட்டினார். அவரது மதிப்பீட்டின் படி, இந்த வரையறைகளை உணர்வதுதான் மார்க்சிசத்தை பல்தரப்பான கற்பனாவாதங்களில் இருந்து பிரித்துக்காட்டுவதாக இருந்தது. அது புரட்சிகர விருப்பத்தை வரலாற்று நிகழ்ச்சிப்போக்கிற்கும் அதன் விதிகளுக்கும் கீழ்ப்படுத்துவதாக, ஆகவே மார்க்சிச புரட்சிகரக் கொள்கையின் பகுத்தறிவு சார்ந்த நிலையை உத்தரவாதம் செய்வதாக இருந்தது. அத்தனையும் இருந்தாலும், பிளெக்ஹானோவின் முறை தன்னார்வவாதம் மற்றும் நியதிவாதம் இரண்டின் (determinism) கூறுகளையும் தழுவியதாக இருந்தது, இரண்டையும் நல்லிணக்கம் காணச் செய்வதில் அவர் வெற்றிபெறவில்லை.[36]

தொழிலாள வர்க்கத்தின் வர்க்க நனவை அபிவிருத்தி செய்வதிலும் அதனை புரட்சிகர நடவடிக்கைக்காக தயாரிப்பு செய்வதிலும் சமூக ஜனநாயக இயக்கத்தின் முக்கியத்துவத்தை பிளெக்ஹானோவ் தொடர்ச்சியாக வலியுறுத்தினார். வரலாற்றை நியதிகளால் ஆளப்பட்ட ஒரு நிகழ்ச்சிப்போக்காக பிளெக்ஹானோவ் வலியுறுத்தியமையானது, புரட்சிகர நடைமுறையை குறைமதிப்பீடு செய்ய அவரை இட்டுச் சென்றதாகக் கூறுவது அடிப்படையாக பிழையானதாகும். ஒரு தொழிலாளர் கட்சியை சாத்தியமான மிக விரைவில் உருவாக்குவதே”, “இன்றைய ரஷ்யாவின் அத்தனை பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழிவகையாகும் என்று பிளெக்ஹானோவ் வாதிட்டார். [அழுத்தம் மூலத்தில் உள்ளவாறு][37] இவ்வாறாய், கட்சி நடைமுறையானது, குறிப்பிட்ட நிலைமைகளின் கீழ், புரட்சியின் முதலாளித்துவ ஜனநாயகக் கட்டத்தில் இருந்து சோசலிசக் கட்டத்துக்கான பாதையின் மீது தாக்கத்தை செலுத்த முடியும், அதன் நீளத்தைக் குறைக்க முடியும் என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

ஆனால் எப்படி, என்ன நிலைமைகளின் கீழ், இதனைச் செய்ய முடியும் என்பதை அவரால் கூற இயலவில்லை. பிளெக்ஹானோவின் புரிதலின் படி, ரஷ்ய சமூகப் பொருளாதார அபிவிருத்தியின் புற நிலைமைகள், சோசலிசத்துக்கான கட்சியின் போராட்டத்தின் மீது கடக்க முடியாத வரம்புகளைத் திணித்ததாகத் தோன்றின. ஆனால் இந்த முரண்பாட்டை முன்நிறுத்தியமையானது பிளெக்ஹானோவால் அடையாளம் காணப்பட்ட வரலாற்றுப் பிரச்சினைக்கான மற்றொரு தீர்வின் சாத்தியத்தை திறந்து விட்டது. இந்தத் தீர்வு 1905 புரட்சியில் வெளிவந்தவாறாக மாறிய புற நிலைமைகள் மீதான ஒரு ஆய்வின் அடிப்படையில் ட்ரொட்ஸ்கியால் கண்டறியப்பட்டது. நிரந்தரப் புரட்சித் தத்துவமானது புரட்சியின் ஜனநாயக மற்றும் சோசலிசக் கட்டங்களை “ஒன்றாய் கொண்டுவருவது” மட்டுமல்லாது, இரண்டாவது கட்டத்தின் வழிமுறைகளை ஏற்றுக் கொள்ளாமல் முதலாவது கட்டமே சாத்தியமில்லை என்பதையும் வலியுறுத்துகின்றதான ஒரு மூலோபாயத்தை முன்னெடுத்தது.

ட்ரொட்ஸ்கியின் தத்துவமானது பிளெக்ஹானோவின் முன்னோக்கைக் காட்டிலும் (பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம் என்ற லெனினின் 1917க்கு முந்தைய வேலைத்திட்டத்தைக் காட்டிலும், என்பதையும் இங்கே வலியுறுத்தியாக வேண்டும்) ஒரு பெரும் முன்னேற்றத்தைக் குறித்து நின்றது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருந்தபோதிலும், ஜனநாயகப் புரட்சியில் ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் மையமான பாத்திரத்தை பிளெக்ஹானோவ் அடையாளம் கண்டமைதான் புரட்சிகர மூலோபாயம் மற்றும் தந்திரோபாயத்தின் வட்டத்தில் லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கி இருவராலும் தொடக்கமளிக்கப்பட்ட அடுத்து வந்த அத்தனை முன்னேற்றங்களுக்கும் அடித்தளம் அமைத்தது— பிளெக்ஹானோவின் வாழ்க்கையின் மகத்தான தன்மை மற்றும் துன்பியல் இரண்டுமே இதில் தான் அமைந்திருக்கிறது. இந்த முன்னேற்றங்கள் 1889 இல் இரண்டாம் அகிலத்தின் ஸ்தாபன காங்கிரசில் பிளெக்ஹானோவின் உரையில் முன்கணிக்கப்பட்டன. ”ரஷ்யாவில் புரட்சிகர இயக்கமானது ஒரு தொழிலாளர் இயக்கமாகவே வெற்றிகாணும், இல்லையேல் அது ஒருபோதும் வெற்றி காணவே போவதில்லை” என்று அறிவித்து பிரதிநிதிகளுக்கு அவர் மின்சாரம் பாய்ச்சினார். [38] வேறு எந்த ஐரோப்பிய சோசலிஸ்டும் அதற்கு முன்பாக பின்தங்கிய ரஷ்யாவில் பாட்டாளி வர்க்கத்தின் தீர்மானகரமான புரட்சிகரப் பாத்திரத்தை அங்கீகரித்ததில்லை.

துல்லியமாக இந்த மகத்தான உட்பார்வையில் இருந்து தான், ரஷ்யாவில் சோசலிசப் புரட்சிக்கான மூலோபாயம் குறித்த அடுத்துவந்த அத்தனை போராட்டங்களும் அபிவிருத்தி கண்டன, ட்ரொட்ஸ்கி நிரந்தரப் புரட்சித் தத்துவத்தை எடுத்துரைத்ததில் அது உச்சம் கண்டது. அதனால்தான் ட்ரொட்ஸ்கி, 1918 இறுதிச்சடங்கு உரையில், பிளெக்ஹானோவின் அரசியல் மற்றும் தத்துவார்த்த வேலைதான் “நமது புரட்சிகரப் போராட்டம் மொத்தத்திற்குமான” அடித்தளம் அமைத்தது என்று வலியுறுத்தினார். [அழுத்தம் சேர்க்கப்பட்டுள்ளது]

பல ஆண்டுகளுக்குப் பின்னர், 1922 இல், ரஷ்யாவின் வரலாற்று அபிவிருத்தியின் சில தனித்துவமான அம்சங்கள் பற்றிய பிளெக்ஹானோவின் கருத்தாக்கத்தின் மீது வரலாற்றாசிரியர் மிக்கையில் போக்ரோவ்ஸ்கி (Mikhail Pokrovskii) நடத்திய ஒரு தாக்குதலுக்கு பதிலளிக்கும் நிர்ப்பந்தம் ட்ரொட்ஸ்கிக்கு ஏற்பட்டது. ரஷ்யாவின் வரலாற்று அபிவிருத்தி குறித்த ட்ரொட்ஸ்கியின் சொந்தப் புரிதலும் கூட பிளெக்ஹானோவின் ஆரம்பகால தத்துவார்த்த வேலைகளால் பெரும் செல்வாக்கு செலுத்தப்பட்டதாய் இருந்தது என்பது நன்கறிந்ததாகும். பிளெக்ஹானோவைத் தாக்குவதன் மூலம், அப்போது ஸ்ராலின் கன்னையின் ஒரு சிரத்தையான ஆதரவாளராக எழுந்து வந்து கொண்டிருந்த போக்ரோவ்ஸ்கி, ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவத்தின் வரலாற்று அடித்தளங்களை பலவீனப்படுத்த முயன்று கொண்டிருந்தார். தனது தாக்குதலுக்குத் துணையாக, பிளெக்ஹானோவின் அரசியல் பலவீனங்களையும் இறுதியில் அவர் சோசலிசப் புரட்சியைக் காட்டிக் கொடுத்ததையும் போக்ரோவ்ஸ்கி நினைவுகூர்ந்தார். போக்ரோவ்ஸ்கியின் தாக்குதலுக்கு எதிராக பிளெக்ஹானோவின் வரலாற்றுத் தத்துவங்களைப் பாதுகாத்து, ட்ரொட்ஸ்கி இவ்வாறு பதிலளித்தார்:

ரஷ்ய முதலாளித்துவ வர்க்கத்தின் பலவீனமும் ரஷ்ய முதலாளித்துவ ஜனநாயகத்தின் மாயையான தன்மையும் ரஷ்யாவின் வரலாற்று அபிவிருத்தியில் மிக முக்கிய அம்சங்களைக் குறித்துநிற்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆயினும், துல்லியமாக இதில் இருந்துதான், தரப்பட்ட நிலவும் ஏனைய அனைத்து நிலைமைகளின் கீழும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான சாத்தியமும் வரலாற்று அவசியமும் எழுகின்றன. பிளெக்ஹானோவ் ஒருபோதும் இந்த முடிவுக்கு வந்துசேர்ந்திருக்கவில்லை என்பது உண்மையே. ஆனால் அவரது சந்தேகத்திற்கிடமற்ற சரியான முன்மொழிவுகளில் இன்னொன்றான “ரஷ்யப் புரட்சிகர இயக்கமானது ஒரு தொழிலாள வர்க்க இயக்கமாகவே வெற்றிபெறும் இல்லையேல் அது ஒருபோதும் வெற்றிபெறாது” என்பதில் இருந்தும் கூட அவர் எந்த முடிவுக்கும் வந்துசேர்ந்திருக்கவில்லையே. நரோத்னிக்குகள் மற்றும் கொச்சை மார்க்சிஸ்டுகளுக்கு எதிராக பிளெக்ஹானோவ் கூறிய அத்தனையையும் அவரது கடேட்டோஃபிலியா [39] [1905க்குப் பின்னர் முதலாளித்துவ கடேட் கட்சியுடன் ஒரு கூட்டணிக்கான சந்தர்ப்பவாத ஆலோசனையை பிளெக்ஹானோவ் அதிகமாய் அளித்து வந்ததை ட்ரொட்ஸ்கி இங்கே இவ்வாறு குறிப்பிடுகிறார்] மற்றும் தேசப்பற்றுவாதத்துடன் நாம் ஒன்றுகலப்போமாயின், பிளெக்ஹானோவிடம் இருந்து நமக்கு எதுவொன்றும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் உண்மையில் பிளெக்ஹானோவ் விட்டுச்சென்றவை நிறையவே இருக்கிறது, இப்போதும் மீண்டும் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதால் எவ்விதமான தீங்குமிருக்கப்போவதில்லை.[40]

நிரந்தரப் புரட்சியை நாம் பாதுகாப்பதும் அக்டோபர் புரட்சியின் தயாரிப்பு மற்றும் வெற்றியில் ட்ரொட்ஸ்கியின் வரலாற்றுப் பாத்திரத்தின் மீதான நமது வலியுறுத்தலும் பிளெக்ஹானோவுக்கு அஞ்சலி செலுத்துவதன் மூலம் கொஞ்சமும் சமரசப்பட்டு விடாது. இந்த மாபெரும் மார்க்சிச தத்துவாசிரியரிடம் இருந்து கற்பதும் படிப்பதும் “தீங்கானதல்ல” என்பதில் நாம் ட்ரொட்ஸ்கியுடன் உடன்படுகிறோம். குறிப்பாக, இந்த நாட்களில், புத்திஜீவித வாழ்க்கையானது சடவாத விரோதம் மற்றும் மெய்யியல் பகுத்தறியாமையின் மிக கொச்சையான வடிவங்களால் சீரழிந்து வருகின்றபோது, வரலாற்று நிகழ்ச்சிப்போக்கின் அபிவிருத்தி குறித்த ஒரு விஞ்ஞானபூர்வமான புரிதலுக்கும், இந்த அடிப்படையில், தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகர சோசலிச நனவுக்கு புத்துயிரூட்டுவதற்குமான போராட்டத்தில் அத்தியாவசியமான ஆயுதங்களாக பிளெக்ஹானோவின் எழுத்துக்கள் சேவை செய்கின்றன. மேலும், பிற்போக்குத்தனமான குட்டி—முதலாளித்துவ போலி—இடதுவாதத்தின் எண்ணிலடங்கா பிரதிநிதிகள் தொழிலாள வர்க்கத்தை அவதூறு செய்வதற்கும், அதன் தீர்மானகரமான புரட்சிகர பாத்திரத்தை மறுப்பதற்கும் தமது சக்திக்குட்பட்ட அத்தனையையும் செய்கின்ற ஒரு நேரத்தில், தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர மேலாதிக்கத்தை ஸ்தாபிப்பதற்காக பிளெக்ஹானோவால் நடத்தப்பட்ட போராட்டமானது தீவிர சமகால பொருத்தத்தைப் பெறுகின்றது.

பிறந்து 160 ஆண்டுகளும் இறந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டும் ஆனபின்னரும் கூட, பிளெக்ஹானோவ் சோசலிச மற்றும் மார்க்சிச சிந்தனையின் வரலாற்றில் ஒரு முக்கிய ஆளுமையாகத் திகழ்கிறார். 1922 இல் பிளெக்ஹானோவுக்கு லெனின் இறுதியாக வழங்கிய அஞ்சலி முற்றிலும் நியாயமானதாகும்:

இளம் கட்சி உறுப்பினர்களின் நலன்களுக்காக அடைப்புக்குறிக்குள் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன், பிளெக்ஹானோவின் மெய்யியல் எழுத்துக்கள் அத்தனையையும் ஆய்வு செய்யாமல் —அதாவது நான் சொல்வது ஆய்வுசெய்யாமல்— ஒரு உண்மையான புத்திக்கூர்மையான கம்யூனிஸ்டாக ஆவதற்கு நீங்கள் நம்பிக்கை கொள்ள முடியாது, ஏனென்றால் உலகின் வேறெங்கிலும் மார்க்சிசம் குறித்து அதனினும் மேம்பட்டது எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை.[41]

******

Notes:

1. “Essays on the History of Materialism,” in Selected Philosophical Works, Vol. 2 (Moscow: Progress Publishers, 1976), p. 158.

2. “On the Materialist Conception of History,” in Selected Philosophical Works, Vol. 2 (Moscow: Progress Publishers, 1976), p. 235.

3. Ibid., pp. 235–236.

4. Ibid., p. 237.

5. Selected Philosophical Works, Vol. 1 (Moscow: Progress Publishers, 1974), p. 402 [italics added].

6. Ibid., p. 416.

7. Ibid., pp. 416–17.

8. Ibid., p. 422.

9. “Our Differences,” in Selected Philosophical Works, Vol. 1, p. 164.

10. “Cant Against Kant, or Herr Bernstein’s Will and Testament,” in Selected Philosophical Works, Vol. 2, p. 352.

11. “N.G. Chernyshevsky’s Aesthetic Theory,” in Selected Philosophical Works, Vol. 5 (Moscow: Progress Publishers, 1981), p. 223.

12. Ibid., p. 225.

13. Ibid., p. 648.

14. Aleksandr K. Voronsky, Art as the Cognition of Life: Selected Writings 1911–1936, translated and edited by Frederick Choate (Oak Park, MI: Mehring Books, 1998), p. 120.

15. Nikolay Valentinov, Encounters with Lenin (London: Oxford University Press, 1968), pp. 180–81.

16. “In Memory of Plekhanov,” reproduced in The Frankfurt School, Postmodernism and the Politics of the Pseudo—Left, by David North (Oak Park, MI: Mehring Books, 2015), pp. 281–82.

17. Ter—Vaganian: G. V. Plekhanov: An Attempt at a Characterization of his Socio—Political Views, (Moscow 1924).

18. 13 ஆம் நூற்றாண்டிலிருந்து 14 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலம்வரை வாழ்ந்ததாக கூறப்படும் சுவிட்சர்லாந்தின் பிரபல்யமான நபரான வில்ஹெம் தெல்புனித ரோமபேரரசிடமிருந்தும் அவுஸ்திரியாவிடமிருந்தும் தனது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய திறமையான குறிசுடுபவரும் ஆவார்.

19. Ter—Vaganian, pp. 42, 43.

20. G.V. Plekhanov, Sochinenia, edited by D. Ryazanov, Vol. 1 (Moscow, 1922), p. 70.

21. Ter—Vaganian, p. 30.

22. Ibid., p. 53.

23. Ibid., p. 35.

24. Ibid., p. 56.

25. Sochinenia, Vol. 1, p. 134.

26. Ibid.

27. Ibid., p. 220.

28. Selected Philosophical Works, Vol. 1, p. 339.

29. Плеханов Г.В. Избранные философские произведения в пяти томах. Том 1. (М., 1956), с. 72. [G.V. Plekhanov, Selected Philosophical Works, Vol. 1, pp. 68–69].

30. Ibid.

31. Ibid.

32. Ibid., p. 99 [Ibid., p. 94].

33. Ibid., p. 108 [Ibid., p. 102].

34. Writings of Leon Trotsky 1939—40 (New York: Pathfinder Press, 1973), p. 56.

35. Плеханов Г.В. Избранные философские произведения в пяти томах. Том 1., с. 110. [Selected Philosophical Works, Vol. 1, p. 104].

36. Samuel Baron, Plekhanov: The Father of Russian Marxism (Stanford: Stanford University Press, 1963), p. 114.

37. “Our Differences,” Selected Philosophical Works, Vol. 1, p. 346.

38. Ibid., p. 419 [Ibid., p. 400]. இங்கு நாங்கள் 1920 களின் அவரது தொகுப்பு நூல்களில் பிரசுரிக்கப்பட்ட பிளெக்ஹானோவின் உரையில் இருந்த ஒரு பத்தியை எடுத்துக்காட்டுகின்றோம். 1950களில் வெளிவந்த 5 பாகங்களை கொண்ட பிளெக்ஹானோவின் தத்துவார்த்தவியல் தொகுப்பில் இவை இரண்டாவது வெளியீடாக அவரது இப்பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. உள்ளடக்கத்தில் இவை முதலாவதில் குறிப்பிடப்பட்டதை ஒத்ததாக இருக்கின்றன.

39. இங்கு ட்ரொஸ்க்கி 1905 இற்கு பின்னர் பிளெக்ஹானோவ் முதலாளித்துவ கடேட் கட்சியுடனான கூட்டிற்கு சந்தர்ப்பவாதரீதியில் அதிகரித்தளவில் ஆதரவளிப்பது பற்றிக் குறிப்பிடுகின்றார்.

40. Leon Trotsky, 1905, translated by Anya Bostock (New York: Random House, 1971), p. 332.

41. V.I. Lenin, Collected Works, Vol. 32 (Moscow: Progress Publishers, 1977), p. 94.