ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump’s National Security Strategy: The return of “great power” military conflict

ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம்: “வல்லரசு" இராணுவ மோதலின் மீள்வருகை

Bill Van Auken
20 December 2017

இவ்வாரம் வெளியிடப்பட்ட அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு மூலோபாயமும், திங்களன்று அதை அறிமுகப்படுத்துவதற்காக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய உரையும், உறுதியாக அமெரிக்க ஏகாதிபத்தியம் ஓர் அணுஆயுத மூன்றாம் உலக போருக்கு இட்டுச் செல்லும் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு மனிதயினத்திற்கான ஒரு கடும் எச்சரிக்கையாகும்.

வெளிவேடத்திற்கு ஜனாதிபதியின் அரசியல் எதிர்ப்பாளர்களாக காட்டிக்கொள்ளும் ஜனநாயகக் கட்சியினரால், அந்த ஆவணம் பெரிதும் மவுனமாக கைவிடப்பட்டுள்ளதுடன், ஸ்தாபக ஊடகங்களால் ஒப்பீட்டளவில் அதற்கு சிறிய பாவமன்னிப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், அதிக சிந்தனைமிகுந்த ஏகாதிபத்திய சித்தாந்தவாதிகள் அந்த ஆவணத்தில் முன்வைக்கப்பட்ட தொலைநோக்கு மாற்றங்களைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

வரலாற்றாளர் ஆர்தர் எல். ஹெர்மன் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் எழுதுகையில், ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு மூலோபாயம் "1917 க்கு முந்தைய உலகத்திற்கு திரும்பிய ஆழ்ந்த மாற்றம்: ஒவ்வொரு இறையாண்மை அரசும், சிறியதோ பெரியதோ, ஆயுத பலத்தைச் சார்ந்து இருக்க வேண்டியிருந்த ஒரு அராஜகவாத சர்வதேச அரங்கை" முன்னறிவிக்கிறது என்றார்.

“இந்த புதிய சகாப்தத்தில்,” ஹெர்மன் எழுதுகிறார், “தவிர்க்கவியலாமல் வலிமையே உரிமையைத் தீர்மானிக்கிறது.” பலம் மட்டுமே செல்லுபடியாகும், “பெரிய பலம் தவிர்க்கவியலாமல் சிறியவற்றை மேலாதிக்கம் கொள்கிறது.”

ஹெர்மன் தொடர்ந்து எழுதுகிறார், “இது ஓட்டொ வொன் பிஸ்மார்க்கின் உலகம், அவர் 1862 இல் அறிவித்தார்: “இந்த காலக்கட்டத்தின் அதிமுக்கிய பிரச்சினைகள், உரைகளாலோ பெரும்பான்மையினரின் முடிவுகளாலோ தீர்மானிக்கப்படுவதில்லை. … மாறாக இரும்பை ஒத்த உறுதியாலும் இரத்தத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது.”

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் வெளியான ஒரு தலையங்கம், "அமெரிக்க அதிகாரத்தை, செல்வாக்கை மற்றும் நலன்களைச் சவால்" செய்ய முனையும் சீனா மற்றும் ரஷ்யாவை "திருத்தல்வாத சக்திகள்" என்று அடையாளப்படுத்தியதை புகழ்ந்துரைத்ததன் மூலம், நடைமுறையில் இல்லாத அந்த ஆவணத்தின் யதார்த்த-அரசியலைப் புகழ்ந்துரைத்தது. முதல் உலக போருக்கு முன்னர் ஆளும் வர்க்கங்களைப் பீடித்திருந்த போர் காய்ச்சலுக்கு ஒத்த ஒரு கெக்களிப்புடன், ஜேர்னல், "ஒபாமா ஆண்டுகளிலும்" மற்றும் "போர் அலை குறையப் போவதில்லை" என்ற அவர் பிரகடனங்களிலும் இருந்த "கவர்ச்சிகரமான உத்தரவாதங்களின் முக்கிய திருத்தம்" என்பதாக அந்த ஆவணத்தை பாராட்டியது.

இதேபோல சர்வதேச பத்திரிகைகளும் அந்த ஆவணத்திலிருந்து தொலைநோக்கு தீர்மானங்களை தீர்மானிக்கின்றன, ட்ர்ம்ப் நிர்வாகத்தைச் சுற்றி "நிச்சயமற்றத்தன்மை" நிலவுகின்ற போதினும், ஆஸ்திரேலியன் இதழில், Brendan Thomas-Noone பிரகடனப்படுத்துகையில், அந்த ஆவணம் "அமெரிக்க வெளியுறவு கொள்கையில் உள்ள கருத்தொற்றுமை, உலகளாவிய பொருளாதார ஒருங்கிணைவு என்பதிலிருந்து வல்லரசு போட்டிக்கு மாறும்" ஒரு நீண்டகால மாற்றத்தை வெளிப்படுத்துவதாக அறிவிக்கிறார். 

அவர் தொடர்ந்து எழுதுகிறார்: “சீனா மற்றும் ரஷ்யா ஆகிய 'திருத்தல்வாத' அரசுகளுடன் வல்லரசு போட்டியின் ஒரு புதிய சகாப்தத்திற்குள் அமெரிக்கா நுழைவதை அந்த பாதுகாப்பு மூலோபாயம் எடுத்துரைக்கிறது. இதற்கு முன்னர் பல தசாப்தங்களாக, அந்த அதிகாரங்களை அமெரிக்க கொள்கை அரவணைத்திருந்தது, அவற்றை சர்வதேச அமைப்புமுறைக்குள் கொண்டு வந்து, அவற்றை உலக பொருளாதாரத்துடன் ஒருங்கிணைத்தது. அந்த மூலோபாயமே குறிப்பிடுவதைப் போல, இது 'அவற்றை அபாயமற்றவர்களாக மற்றும் நம்பகமான பங்காளிகளாக மாற்றுமென' கருதப்பட்டது. 'பெரும்பாலும், இந்தக் கருதுகோள் பொய்யாகிப் போனது.'”     

இவ்விடத்தில், ஜனநாயகக் கட்சியினர் மற்றும் அவர்களது ஊடக கூட்டாளிகளிடமிருந்து விமர்சனம் வருகிறது, அந்த ஆவணமும் சரி ட்ரம்பின் உரையும் சரி, 2016 தேர்தலில் "தலை நுழைத்ததாக" குற்றஞ்சாட்டப்படும் ரஷ்யாவை வெளிப்படையாக கண்டிக்க தவறியிருப்பதை அந்த விமர்சனம் மையத்தில் வைத்திருந்தது. அமெரிக்க போர் தயாரிப்புகளில் ரஷ்யாவா அல்லது சீனாவா எது முன்னுரிமை இலக்கில் வைக்கப்பட வேண்டும் என்பதன் மீது ஒரு தந்திரோபாய சொற்புரட்டை மட்டுமே முன்னெடுக்கும் இந்த விமர்சனப் போக்கு, நிர்வாக கொள்கையின் ஒட்டுமொத்த போர்நாடும் குணாம்சத்தை ஆதரிக்கவே செய்கிறது.

1986 இல் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டத்தின் கட்டளைக்கு கீழ்படிந்து, வெள்ளை மாளிகையால் ஆண்டுதோறும் காங்கிரஸிற்கு முன்வைக்கப்படும் ஒரு தேசிய பாதுகாப்பு மூலோபாயம் (NSS), வாஷிங்டனின் "உலகளாவிய நலன்கள், குறிக்கோள்கள் மற்றும் நோக்கங்களை" விவரித்து, “அரசியல், பொருளாதார, இராணுவ மற்றும் தேசிய சக்தியின் பிற கூறுபாடுகளை, முன்மொழியப்பட்ட குறுகிய-கால மற்றும் நீண்ட-கால பயன்பாடுகளுக்காக" முன்வைத்து விவரிப்பதாக கூறப்படுகிறது.  

இந்த சமீபத்திய NSS ஐ மற்றும் ட்ரம்பின் உரையைப் பிரத்யேக விமர்சனத்தின் வழியில் சற்று வெளிப்படுத்திக் காட்டினால், இது ஐயத்திற்கிடமின்றி ஏனென்றால் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டு, வாஷிங்டன் ஒரு புதிய "ஒருதுருவ தருணமாக" பிரகடனப்படுத்தப்பட்டதற்குப் பிந்தைய கடந்த கால் நூற்றாண்டு அமெரிக்க மூலோபாயத்தின் தொடர்ச்சியிலிருந்து ஒரு பலமான கூறுபாட்டைக் கொண்டுள்ளது.  

அந்த மூலோபாயம், அடிப்படை சாரத்தில், சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ பலத்தைப் பயன்படுத்தி அதன் உலகளாவிய நலன்களைப் பின்தொடர்வதற்கு இருந்த முந்தைய தடைகளை நீக்கி இருந்தது என்ற தீர்மானத்தை அடியில் கொண்டுள்ளது. உலகளாவிய அமெரிக்க முதலாளித்துவ மேலாதிக்கத்தின் ஒப்பீட்டளவிலான வீழ்ச்சியை ஈடுகட்டுவதற்கு அமெரிக்க இராணுவ மேலாதிக்கத்தை ஒரு வழிவகையாக செயலூக்கத்துடன் பயன்படுத்தலாம் என்ற தீர்மானத்தின் அடிப்படையில் அமெரிக்க ஆளும் உயரடுக்குகள் ஒரு மூலோபாயத்தைத் தழுவின.

இந்த போர்நாடும் தோரணை அமெரிக்க முதலாளித்துவத்தின் பலத்தை எடுத்துக்காட்டவில்லை, மாறாக அதன் சீரழிவையும் மற்றும் பெரிதும்-போற்றப்பட்ட “அமெரிக்க நூற்றாண்டு” முடிவுக்கு வந்து கொண்டிருந்தது என்பது மீதான அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் நிலவிய பயங்களையும் எடுத்துக்காட்டியது.

1992 இல், பில் கிளிண்டனின் ஜனநாயக கட்சி நிர்வாகத்தின் கீழ், பென்டகன் வாஷிங்டனின் உலகளாவிய மேலாதிக்க அபிலாஷைகளை வெளிப்படுத்தி, அடிப்படை பாதுகாப்பு திட்டமிடல் வழிகாட்டி ஆவணம் ஒன்றை ஏற்றது: அது குறிப்பிட்டதாவது:

“சாத்தியமான பிற நாடுகளோ அல்லது கூட்டணிகளோ, வரவிருக்கும் காலத்தில் பிராந்திய அளவில் அல்லது உலகளவிலான மேலாதிக்கத்தின் ஒரு பாதுகாப்பு தோரணையை மற்றும் மூலோபாய நோக்கங்களை அபிவிருத்தி செய்யக்கூடும். எதிர்காலத்தில் சாத்தியமான அளவில் எந்தவொரு உலகளாவிய போட்டியாளரும் உருவாவதை தடுக்கும் விதத்தில் நமது மூலோபாயம் இப்போது மீள்ஒருமுனைப்பு கொள்ள வேண்டும்.”

முதல் பாரசீக வளைகுடா போர் மற்றும் அமெரிக்க தலைமையில் 1999 இல் சேர்பியா மீதான குண்டுவீச்சில் போய் முடிந்த யூகோஸ்லாவியா உடைவில் கொடூரமான தலையீடு ஆகியவற்றின் மூலமாக, 1990 ஆம் ஆண்டுகள் இந்த புதிய கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டதைக் கண்டன.  

செப்டம்பர் 11, 2001 சம்பவங்கள், உலகளாவிய அமெரிக்க இராணுவவாதத்தின் ஒரு பாரிய தீவிரப்பாட்டிற்கு "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற சாக்குபோக்கை வழங்கின. “முன்கூட்டிய போர்முறை" கோட்பாட்டை ஏற்று ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் குடியரசு கட்சி நிர்வாகம் வெளியிட்ட 2002 தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் வாஷிங்டனின் கொள்கை எடுத்துரைக்கப்பட்டது. அமெரிக்க நலன்களுக்கு சாத்தியமான ஓர் அச்சுறுத்தலாக உணரப்படும் உலகிலுள்ள எந்தவொரு நாட்டின் மீதும் அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்பதை அக்கோட்பாடு தாங்கியிருந்தது, இக்கொள்கையானது உயிரோடிருந்த நாஜி தலைவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனை வழங்குவதற்காக சட்ட அடித்தளத்தை வழங்கிய, ஆக்கிரமிப்பு போர் மீதான நூரெம்பேர்க் கோட்பாடுகளை மறுத்தளித்தது.     

விரைவிலேயே இக்கோட்பாடு, “பாரிய பேரழிவு ஆயுதங்களை அழிப்பதற்காக" என்ற போலி சாக்குபோக்கில், ஈராக் மீதான அமெரிக்க படையெடுப்பில் பயன்படுத்தப்பட்டு, ஹிட்லரின் மூன்றாம் ரைஹ் வீழ்ச்சிக்குப் பிந்தைய மிகப்பெரும் போர் குற்றங்களில் ஒன்றை நடத்தியது.

புஷ்ஷின் கொள்கையை மாற்றத் தொடங்குவார் என்ற தவறான கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி பராக் ஒபாமா, லிபியாவுக்கு எதிராக தூண்டுதலற்ற 2011 அமெரிக்க ஆக்கிரமிப்பு போரை நியாயப்படுத்துவதற்கு இந்த "முன்கூட்டிய போர்" கோட்பாட்டை உருமாற்றினார். “நமது பாதுகாப்பு நேரடியாக அச்சுறுத்தலில் இல்லையென்றாலும், நமது நலன்களும் மதிப்புகளும் அச்சுறுத்தலில் இருக்கையில்" அமெரிக்க இராணுவ பலம் நியாயப்படுகிறது என்று வலியுறுத்திய அவர், “பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, வர்த்தக பரிவர்த்தனைகளைப் பேணுவது" ஆகியவற்றை நோக்கமாக கொண்ட நடவடிக்கைகளும் இதில் உள்ளடங்கும் என்பதையும் சேர்த்துக் கொண்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்க வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்களின் இலாபங்களும் சந்தைகளும் பணயத்தில் இருக்கும் எந்தவொரு இடத்திலும் ஆக்கிரமிப்பு போரைத் தொடங்க வாஷிங்டனுக்கு "உரிமை" உள்ளது என்பதாகும்.

உலகளாவிய அமெரிக்க இராணுவவாத கோட்பாட்டின் முந்தைய விளக்கங்களுக்கும், போர்நாடும் NSS ஆவணம் மற்றும் ட்ரம்ப் வழங்கிய உரைக்கும் இடையே தவறுக்கிடமின்றி ஒரு தொடர்ச்சி இருந்தாலும், அதில் ஒரு குறிப்பிடத்தக்க முறிவும் உள்ளது. ஆழமடைந்து வரும் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியும், உலக மேலாதிக்கத்திற்காக நடந்து வரும் அமெரிக்க போராட்டத்தின் சமீபத்திய கட்டம் இரண்டு அணுஆயுத சக்திகளான ரஷ்யா மற்றும் சீனாவை முன்பினும் அதிகமாக நேரடியாக இலக்கில் வைத்துள்ளது என்ற உண்மையையும் இது பிரதிபலிக்கிறது.

எட்டு தசாப்தங்களுக்கு முன்னர் ஜேர்மனியில் அடொல்ஃப் ஹிட்லர் காட்டிக் கொண்டதைப் போல, ட்ரம்ப் அவர் உரையில் பெரிதும் அதே விதத்தில், “தாங்கள் யாரை மதித்து குரல் கொடுக்க வேண்டுமோ அவர்களை மறந்துவிட்ட, யாருடைய பாதுகாப்பிற்காக அவர்கள் இருந்திருக்க வேண்டுமோ அவர்களது நலன்களை மறந்துவிட்ட நமது பல தலைவர்களால் —நிறைய தலைவர்களால்— வெளிநாட்டு நலன்களுக்கு விற்கப்பட்டதை மாற்றுவதற்காக வந்திருக்கும், "கைவிட்டப்பட்ட மனிதர்களின்" பாதுகாவலராக மற்றும் தேசத்தின் இரட்சகராக தன்னை அவர் காட்டிக் கொண்டார்.

இந்த "முதுகில் குத்தும்" வாய்சவடாலுக்கு அடியில், அமெரிக்க இராணுவ ஆக்ரோஷத்தின் கடந்த கால் நூற்றாண்டானது ஒரு தோல்வி மாற்றி ஒரு தோல்வியை உருவாக்கி உள்ளதுடன், அதேவேளையில் பட்டவர்த்தனமாக உலக அரங்கில் அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை மாற்றுவதற்கும் தவறி உள்ளது என்ற உண்மை புதைந்துள்ளது. 

இவற்றின் மையத்தில், NSS ஆவணமும் ட்ரம்பின் உரையும் அமெரிக்க இராணுவ உயரதிகாரிகளால் இந்த அனுபவத்திலிருந்து பெறப்பட்ட தீர்மானங்களைப் பிரதிபலிக்கிறது. அமெரிக்க இராணுவ உயரதிகாரிகளின் பிரதிநிதிகள் —மெக்மாஸ்டர், மாட்டீஸ் மற்றும் கெல்லி— இப்போது வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளியுறவு கொள்கையில் மேலாளுமை செலுத்துகின்றனர். “அறையில் இருக்கும் பருவ வயதினர்" என்று முன்னணி ஜனநாயகக் கட்சியினரால் வர்ணிக்கப்படும் இவர்கள் அமெரிக்க இராணுவத்தின் ஒரு பாரிய தீவிரப்பாட்டுக்கு அறிவுறுத்துகிறார்கள்.

இந்த ஆவணம் கடந்த காலம் முழுவதும் அமெரிக்கா "மூலோபாய தன்னிறைவு" கொண்டதற்காக, “இராணுவ தகைமையை" கட்டமைக்கவும் மற்றும் “புதிய ஆயுத முறைகளைப்" பெறுவதற்கும் தவறியதற்காக, அத்துடன் போரை "மிக விரைவாக, குறைந்தபட்ச பாதிப்புகளுடன் விட்டுக்கொடுப்பற்ற நிலைப்பாட்டிலிருந்தே வென்று" விடலாம் என்று கருதியதற்காக புலம்புகிறது. இராணுவ செலவுகளை முன்னொருபோதும் இல்லாதளவில் அதிகரிப்பது மற்றும் மீண்டுமொருமுறை பத்தாயிரக் கணக்கில் அமெரிக்க சிப்பாய்கள் கொல்லப்படும் புதிய போர்களையும் தெளிவாக அவர்கள் மனதில் கொண்டுள்ளனர்.

ஆனால் அனைத்திற்கும் மேலாக இந்த எழுத்துக்கள் ஒரு நம்பகமான தேர்வாக பகிரங்கமாக அணுஆயுத போரை தழுவிய முந்தைய NSS ஆணவங்களில் இருந்தே தொடங்குகிறது. அமெரிக்க அணுஆயுத தளவாடங்களைக் கட்டமைப்பதானது, "அணுஆயுத தாக்குதல்கள், அணுஆயுதம் அல்லாத மூலோபாய தாக்குதல்கள், மற்றும் மிகப்பெரியளவில் மரபார்ந்த தாக்குதல்களைத் தடுக்க இன்றியமையாதவை" என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. ஓர் அணுஆயுதமற்ற சவாலுக்கு விடையிறுப்பாக அமெரிக்கா முதலில் அணுஆயுத தாக்குதல் நடத்த தயாராகிறது என்பதை அந்த ஆவணம் பலமாக அறிவுறுத்துகிறது. “[அணுஆயுத] தீவிரப்படல் மீதான பயம் நமது அத்தியாவசிய நலன்களைப் பாதுகாப்பதில் இருந்து அமெரிக்காவைத் தடுத்துவிடாது" என்றது வலியுறுத்தி செல்கிறது. 

இரண்டாம் உலக போருக்கு முன்னதாக லியோன் ட்ரொட்ஸ்கி எச்சரித்தார், “வரலாறு,” “மனிதயினத்தை அமெரிக்க ஏகாதிபத்திய எரிமலை வெடிப்புக்கு முன்னால் நேருக்கு நேராக கொண்டு வருகிறது.”

இந்த ஆய்வு முடிவு இவ்வாரம் வாஷிங்டனில் இருந்து வெளிப்படும் அச்சுறுத்தல்களில் மிகவும் சக்தி வாய்ந்த உறுதிப்பாட்டைக் கண்டுள்ளது. எந்த குறிப்பிடத்தக்க எதிர்ப்பும் இல்லாதிருப்பது, அமெரிக்க ஆளும் ஸ்தாபகத்தினுள் அங்கே "சமாதானத்திற்கான கன்னை" எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. ஏகாதிபத்திய போர் மற்றும் அதன் தோற்றுவாயான முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராக ஒரு சுயாதீனமான புரட்சிகர சக்தியாக சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவதன் மூலமாக மட்டுமே, மூன்றாம்—அணுஆயுத—உலக போருக்கான சாத்தியக்கூறை எதிர்க்க முடியும்.