ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

WSWS publishes Urdu translation of Trotsky’s Lessons of October

அக்டோபரின் படிப்பினைகள் உருது மொழிப்பதிப்பின் முகவுரை

By Keith Jones
13 December 2017

மூலப் பதிப்பு வெளியாகி ஒன்பது தசாப்தங்களுக்கு மேலாகியும் கூட, 1917 அக்டோபர் புரட்சியின் வரலாறு மற்றும் சோசலிசப் புரட்சியில் புரட்சிகரத் தலைமையின் இன்றியமையாத பாத்திரம் இவை இரண்டையுமே புரிந்துகொள்வதற்கு முக்கியமானதும் மற்றும் தவிர்க்கமுடியாத ஒரு படைப்பாகத் திகழும் லியோன் ட்ரொட்ஸ்கியின் அக்டோபரின் படிப்பினைகள் எனும் நூலின் முதன்முதல் உருது மொழிப் பதிப்பை அறிமுகம் செய்வது பெருமிதத்திற்குரியதாகும்.

அக்டோபரின் படிப்பினைகள் ட்ரொட்ஸ்கியால் 1924 இல் எழுதப்பட்டது, சோவியத் ஒன்றியத்தின் அரசு நூல் வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட 1917 இல் இருந்தான அவரது எழுத்துக்கள் மற்றும் பேச்சுகளின் ஒரு தொகுதிக்கு அறிமுகமாக அவர் இதனை எழுதினார். ஆயினும் உள்ளபடியே இது புரட்சியின் ஒரு வரலாறு அல்ல. 1929 இல் ஸ்ராலினிச ஆட்சியால் சோவியத் ஒன்றியத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர், ட்ரொட்ஸ்கி ரஷ்யப் புரட்சியின் வரலாறு பற்றி பாரிய மூன்று தொகுதிகளை எழுதினார். அதுவே புரட்சியின் காரணங்கள், நிகழ்வுகள் மற்றும் இயக்கவியலின் ஆகச்சிறந்த விவரிப்பாகத் திகழ்கிறது.

ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவின் முன்னேறிய முதலாளித்துவ நாடுகள் மற்றும் கிழக்கின் ஒடுக்கப்பட்ட நாடுகள் இரண்டிலுமே வருங்கால ”அக்டோபர்களுக்கு” -அதாவது, சோசலிசப் புரட்சிகளுக்கு- அரசியல்ரீதியாகத் தயாரிப்பு செய்கின்ற கண்ணோட்டத்தில் இருந்து எழுதப்பட்ட அக்டோபரின் படிப்பினைகள், 1917 பிப்ரவரியில் ஜார் தூக்கிவீசப்பட்டதற்கும் அக்டோபரில் போல்ஷிவிக் தலைமையின் கீழ் ரஷ்யத் தொழிலாள வர்க்கத்தால் அதிகாரம் கைப்பற்றப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் போல்ஷிவிக் கட்சிக்குள் (பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சி) நடந்த உள்முக மோதல்களை ஆவணப்படுத்துகிறது.

போல்ஷிவிக் வெற்றியானது, புரட்சியின் அபிவிருத்தி, அதன் வர்க்க இயக்கவியல் மற்றும் கடமைகள், மற்றும் முதலாம் உலகப் போரின் முதலாளித்துவப் படுகொலைக்கு ஐரோப்பியத் தொழிலாள வர்க்கம் காட்டிய அதிகரித்துவந்த எதிர்ப்புடனான அதன் உறவு ஆகியவை குறித்த கட்சியின் மதிப்பீடு விடயத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்த உள்முகமான அரசியல் மோதலின் ஊடாகத் தயாரிக்கப்பட்டிருந்தது என்பதை ட்ரொட்ஸ்கி எடுத்துக்காட்டினார்.

சோசலிசப் புரட்சியானது உற்பத்தியின் அதிகரித்துச்செல்லும் சமூகமயமான தன்மைக்கும் சமூக-பொருளாதார வாழ்வு அத்தனையையும் தனியார் முதலாளித்துவ இலாபத்திற்கு கீழ்ப்படியச் செய்வதற்கும் இடையிலான, மற்றும் உலகப் பொருளாதாரத்தின் அபிவிருத்திக்கும் முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறை தொடர்ந்து நிலவுவதற்கும் இடையிலான மோதலில் வேரூன்றிய முதலாளித்துவத்தின் முரண்பாடுகளில் ஒரு புறநிலையான நிகழ்ச்சிப்போக்காகும். ஆனால், ட்ரொட்ஸ்கி விளக்குவதைப் போல, புரட்சியின் அபிவிருத்தியின் ஒரு குறிப்பிட்ட புள்ளியில், புரட்சிகரக் கட்சியின் பாத்திரம் தான் அதன் வெற்றியில் மிக முக்கியமான புறநிலை தீர்மானிப்புக்காரணியாக இருக்கிறது; கட்சியானது தொழிலாள வர்க்கத்தின் மிகவும் வர்க்க-நனவான மற்றும் சுய-தியாகவுணர்வுடைய பிரிவுகளை ஒழுங்கமைத்திருக்கும் நிலையில், தொழிலாள வர்க்கத்திற்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும், சமூகத்தை சோசலிச அடிப்படையில் மறுஒழுங்கமைப்பு செய்வதற்குமான கருவியாக அது ஆகிறது.

கட்சியானது புரட்சியின் அணுகுமுறையை உணர்ந்துகொள்வதற்கும், தனது நடைமுறையை அதன் வரிசையில் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தவறுமாயின், ஒரு புரட்சிகர வாய்ப்பானது சில நாட்களில் அல்லது வாரங்களில் இழக்கப்பட்டுவிடக் கூடும். அதன்மூலம் ஆளும் வர்க்கங்கள் மறுகுழுவமைத்துக்கொண்டு எதிர்வரவிருக்கும் ஆண்டுகளுக்கான தமது ஆட்சியை மறுஸ்திரம் செய்ய அனுமதித்ததாகி விடும்.

ட்ரொட்ஸ்கி எடுத்துக்காட்டுவதைப் போல, 1917 இல் போல்ஷிவிக்குகளின் மூலோபாய நோக்குநிலையை விளங்கப்படுத்துவதில் வி.இ.லெனின் பிரதான பாத்திரம் வகித்தார்: முதலாவதாய், புரட்சியானது முதலாளித்துவ ஆட்சியை இல்லாதொழிக்காத வரையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் மிக அத்தியாவசியத் தேவைகளில் எதுவும் பூர்த்தியாக முடியாது, ஆகவே தொழிலாளர்களது’ அதிகாரத்திற்கான அவசியத்தை “பொறுமையாக விளக்குவது” நமது கடமையாக இருக்கிறது என்ற மதிப்பீடு;  இரண்டாவதாய், 1917 இலையுதிர்காலத்தில், முதலாளித்துவ இடைக்கால அரசாங்கமும் அதன் மென்ஷிவிக் மற்றும் சோசலிச-புரட்சிக்கட்சி (Socialist-Revolutionary S-R) ஆதரவாளர்களும் முழுமையாக மதிப்பிழந்து விட்டிருந்த நிலையிலும், தொழிலாள வர்க்கத்தின் வெகுஜனக் கட்சியாக போல்ஷிவிக்குகள் எழுந்த நிலையிலும், போல்ஷிவிக்குகள் தொழிலாள வர்க்கத்தை அதிகாரத்திற்கான போராட்டத்திற்கு அரசியல்ரீதியாகத் தயாரிப்பு செய்ததில் இருந்து கிளர்ச்சியை ஒழுங்கமைப்பதற்கு நகர்வதற்குக் கூறியமை.

நாடுகடத்தப்பட்டிருந்த லெனின் 1917 ஏப்ரலில் ரஷ்யாவிற்குத் திரும்பியதும் கட்சியை அரசியல்ரீதியாக மறுஆயுதபாணியாக்கியது இதற்கான முக்கியமானதாக இருந்தது. லெனின் ஒரு சில வார காலத்திலேயே, கமனேவ் மற்றும் ஸ்ராலின் ஆகிய “பழைய போல்ஷிவிக்குகளின்” வழிகாட்டலின் கீழ் இடைக்கால அரசாங்கத்திற்கு “நிபந்தனையுடனான ஆதரவு” வழங்குவது என்று கட்சி அதுவரையில் பின்பற்றிவந்திருந்த கொள்கையில் இருந்து அதனை வெளிக்கொண்டுவருவதில் வெற்றிபெற்றிருந்தார். அவரது புகழப்பட்ட ஏப்ரல் ஆய்வுகள் மூலமாக, லெனின், “அனைத்து அதிகாரங்களும் சோவியத்துகளுக்கே” என்ற கோஷத்துடன் பிப்ரவரிப் புரட்சிக்கு உடனடிப் பிந்தைய காலத்தில் பரந்த மக்கள் புரட்சியின் உருவடிவமாகவும் புரட்சிக்கு உத்திரவாதமளிக்கும் அமைப்பாகவும் கண்ட உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள், சிப்பாய்கள் (மற்றும் பின்னாளில் விவசாயிகள்) குழுக்கள் ஊடாக சோசலிசப் புரட்சிக்கு அரசியல்ரீதியாகத் தயாரிப்பு செய்கின்ற வகையில் போல்ஷிவிக்குகளை நோக்குநிலை மாற்றியமைத்தார். ஆனால் சோவியத்துக்கள் மென்ஷிவிக்குகள் மற்றும் சோசலிச புரட்சியாளர்களின் தலைமையின் கீழ் அதிகாரத்தை முதலாளித்துவத்திற்கும் அதன் இடைக்கால அரசாங்கத்திற்கும் விட்டுக்கொடுத்திருந்தது.

1917 ஏப்ரல் கருத்துவேறுபாடுகள் 1917 அக்டோபர் கிளர்ச்சி வரை புரட்சியின் ஒவ்வொரு முக்கிய திருப்புமுனையான புள்ளியிலும் மறுபடி மறுபடியும் எழுந்து கொண்டிருந்தன; ரஷ்யாவின் ஒப்பீட்டளவில் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலைமையைக் கருத்தில் கொண்டு ரஷ்யாவிலான சோசலிசப் புரட்சி முதிர்ச்சியற்றதாக இருந்ததாக பழைய போல்ஷிவிக்குகளின் ஒரு பிரிவினர் வாதிட்டனர். “பாட்டாளிகளதும் விவசாயிகளதும் ஜனநாயக சர்வாதிகாரம்” என்ற 1917-க்கு முந்தைய போல்ஷிவிக்குகளின் அழைப்பைக் குறிப்பிட்டு இந்த நிலைப்பாட்டை நியாயப்படுத்துவதற்கு அவர்கள் முனைந்தனர்.

லெனின், அவர் தரப்பில், இந்தக் கருத்தாக்கத்தை காலாவதியானதெனக் கூறி புறந்தள்ளியதோடு, அச்சமயத்தில் ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சித் தத்துவமாக பரவலாக அறியப்பட்டிருந்த ரஷ்யாவில், ஜாரிசத்தை ஒழிப்பது, நிலத்தை உழுபவருக்கே தீவிரப்பட்ட வகையில் மறுவிநியோகம் செய்வது, மற்றும் மகா ரஷ்ய தேசிய ஒடுக்குமுறையை அகற்றுவது ஆகியவை உள்ளிட்ட முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் அடிப்படைக் கடமைகளானவை சோசலிசப் புரட்சியின் மூலமாக மட்டுமே எட்டப்படும்; அந்தப் புரட்சி ரஷ்யாவில் தொடங்கினாலும் கூட, அதன் தலைவிதியானது ஐரோப்பாவின் மிக முன்னேறிய நாடுகளுக்கு அது பரவுவதுடன், அதாவது உலக சோசலிசப் புரட்சியின் அபிவிருத்தியுடன் பிணைந்ததாகவும், இறுதியில் அதனாலேயே தீர்மானிக்கப்படுவதாகவும் இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டார்.

1917 இல் ட்ரொட்ஸ்கி எழுதியவையும் பேசியவையும் மீண்டும் வெளியிடப்பட்டது தான் அவரது அக்டோபரின் படிப்பினைகள் இற்கு உத்தியோகபூர்வ காரணமாக இருந்தபோதிலும், அதன் தயாரிப்பானது, ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி 1923 கோடையிலும் இலையுதிர்காலத்திலும் அபிவிருத்தி கண்டிருந்த புரட்சிகர வாய்ப்பைப் பற்றிக் கொள்ளத் தவறியதற்கான ஒரு பதிலிறுப்பாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. ஜேர்மன் முதலாளித்துவ ஆட்சி அரசியல் மற்றும் பொருளாதார உருக்குலைவுக்கு முகம்கொடுத்திருந்த நிலையிலும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிக்கான ஆதரவு அதிகரித்துச் சென்ற நிலையிலும், ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு நாள் குறித்தது, ஆனால் பதட்டத்தில் அது கடைசி நிமிடத்தில் அதனை திரும்பப் பெற்று விட்டது.

ஒரு பின்தங்கிய, விவசாய வர்க்கத்தைப் பெருவாரியாகக் கொண்டதொரு நாடு, அந்த நாட்டிலும் உலகப் போரினாலும் அதன்பின் புரட்சிக்குப் பிந்தைய உள்நாட்டுப் போரின் சமயத்தில் ஏகாதிபத்திய-ஆதரவுடனான வெள்ளைப் படையினாலும் சூறையாடப்பட்டிருந்த ஒரு நிலையில் புரட்சி தனிமைப்பட்டு இருப்பது தொடர்ந்தபோது, தொழிலாளர்’ அரசு மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியின் எந்திரத்தில் எழுந்த சலுகைபெற்ற அதிகாரத்துவத்திற்கு எதிரான போராட்டத்திலான ஒரு முக்கியமான வீச்சாகவும் அக்டோபரின் படிப்பினைகள் உணரப்பட வேண்டும்.

1923 இல் தவறவிடப்பட்ட ஜேர்மன் புரட்சியானது சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படலை மேலும் சிக்கலாக்கியது, அதன்மூலம் இப்போது தொழிலாள வர்க்கத்திடம் இருந்து பகிரங்கமாக அரசியல் அதிகாரத்தைப் பறித்துக் கொண்டிருந்த அதிகாரத்துவத்தை மேலும் வலுப்படுத்தியது.

அக்டோபரின் படிப்பினைகள் வெளியாகி சில வாரங்கள் தான் முடிந்திருந்த நிலையில், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரும், அதிகாரத்துவத்தின் அரசியல் தலைவராக எழுந்து கொண்டிருந்தவருமான ஜோசப் ஸ்ராலின், ரஷ்யப் புரட்சிக்கு உயிரூட்டியிருந்த சோசலிச சர்வதேசிய முன்னோக்கை பகிரங்கமாக மறுதலித்ததோடு “தனியொரு நாட்டில் சோசலிசம்” என்ற ஒரு புதிய மூலோபாய நோக்குநிலையை முன்வைத்தார்.

உலக சோசலிசப் புரட்சி வேலைத்திட்டத்துடனான இந்த முறிவானது பரவலாய் அத்தனை விதமான சந்தர்ப்பவாதச் சூழ்ச்சி வேலைகளுடன் கைகோர்த்து நடந்தேறியது. 1917 இல் முதலாளித்துவ இடைக்கால அரசாங்கத்திற்கும் ரஷ்யா தொடர்ந்தும் உலகப் போரில் பங்கேற்பதற்கும் மென்ஷிவிக்குகள் ஆதரவளித்ததற்கும், அத்துடன் தாமதமான முதலாளித்துவ அபிவிருத்தி நாடுகளில் தொழிலாள வர்க்கமானது ஜனநாயக (நிலவுடைமை-விரோத, ஏகாதிபத்திய-விரோத, தேசிய) புரட்சியில் தேசிய முதலாளித்துவத்தின் கீழ்ப்படிவான கூட்டாளியாக செயல்படுவதுடன் தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதான கூற்றுக்குமான “தத்துவார்த்த” நியாயத்தை வழங்கியிருந்த மென்ஷிவிக்குகளின் “இரண்டு-கட்ட” புரட்சித் தத்துவத்திற்கு கம்யூனிச அகிலம் மறுஉயிர் கொடுத்ததும் இவற்றில் இடம்பெற்றிருந்தது.

தொழிலாள வர்க்கம் “முற்போக்கான” தேசிய முதலாளித்துவத்திற்கு தன்னைக் கீழ்ப்படியச் செய்து கொள்ள வேண்டும் என்ற ஸ்ராலினிச வலியுறுத்தலானது பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்தது. முதலாவதாய் சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியானது அதனை சியாங் காய்-ஷேக்கின் முதலாளித்துவ கோமிண்டாங்கில் கலைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஸ்ராலினிசமயமாயிருந்த கம்யூனிச அகிலத்தின் வலியுறுத்தலால், 1925-27 சீனப் புரட்சி நசுக்கப்பட்டது.

1930கள் மற்றும் 1940களில், சோவியத் ஸ்ராலினிச அதிகாரத்துவமும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (Communist Party of India CPI), இருந்த அதன் தெற்காசிய தலையாட்டிகளும் துணைக்கண்டத்திலும் இதேபோன்றதொரு நிலைப்பாட்டிற்கு ஆலோசனையளித்தமை, இதற்குச் சளைக்காத விளைவுகளைக் கொண்டுவந்தது. 1917 அக்டோபர் புரட்சியின் மையமான பாடங்களை திட்டமிட்டு உதாசீனம் செய்த ஸ்ராலினிஸ்டுகள், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், ஏகாதிபத்திய-எதிர்ப்புப் போராட்டத்தில் தேசிய முதலாளித்துவம் கொண்டிருந்த கட்டுப்பாட்டிற்கு வலுவூட்டுவதற்கும், விவசாய வர்க்கப் பெருமக்களுக்குத் தலைமை கொடுப்பதில் அதனை சவால் செய்வதில் இருந்து தொழிலாள வர்க்கத்தைத் தடுப்பதற்கும் சேவைசெய்கிறதான ஒரு பாதையைப் பின்பற்றினர். முதலாளித்துவ காங்கிரஸ் கட்சியை ஒரு பல-வர்க்க முன்னணியாகக் கூறிப் பாராட்டியமை, 1942 இந்தியாவை விட்டு வெளியேறு இயக்கத்தினை (Quit India movement) பிரிட்டிஷ் இந்திய அதிகாரிகள் ஒடுக்கியதை அந்த இயக்கம் நேசநாடுகளது கூட்டணியின் போர் முயற்சிக்கு இடையூறு செய்ததாகக் காரணம் சொல்லி ஆதரித்தமை, அத்துடன் ஒரு தனி பாகிஸ்தான் கோரிய முஸ்லீம் லீக்கின் பிற்போக்குத்தனமான கோரிக்கையை ஆதரித்தமை ஆகியவையும் இதில் அடங்கும்.

பிரிவினை என்பது ஜனநாயகப் புரட்சி இந்திய மற்றும் பாகிஸ்தான் முதலாளித்துவங்களது கரங்களில் ஒடுக்கப்பட்டதன் மிக உடனடியான மற்றும் அதிர்ச்சியூட்டுகின்றதான வெளிப்பாடாக மட்டுமே இருந்தது, இதுவேயும் கூட உலக முதலாளித்துவத்தின் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மறுஸ்திரப்படுத்தலுக்கான முக்கிய கூறாக இருந்தது.

ட்ரொட்ஸ்கி எச்சரித்திருந்ததைப் போல, ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் அரசியல் வெற்றியானது முதலாளித்துவ எதிர்ப்புரட்சியின் முதல் கட்டமாக இருந்தது. 1985க்கும் 1991க்கும் இடையில், அதிகாரத்துவமானது அதன் உச்சகட்ட காட்டிக்கொடுப்பை நடத்தியது, முதலாளித்துவ தனியார் சொத்துடைமையை மீட்சி செய்து சோவியத் ஒன்றியத்தைக் கலைத்தது.

ஆனால் முதலாளித்துவத்தின் நிம்மதிப் பெருமூச்சுக்கு ஆயுள்குறைவு என்பது நிரூபணமாயுள்ளது. ரஷ்யப் புரட்சிக்கு நூறு ஆண்டுகளின் பின்னர், இன்று, உலக முதலாளித்துவமானது, 1930களின் பெருமந்த நிலை மற்றும் அதன் விளைபயனான இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரும் பொருளாதார மற்றும் புவியரசியல் நெருக்கடியால் சூழப்பட்டிருக்கிறது. போட்டி தேசிய ஆளும் உயரடுக்குகள் மீண்டுமொரு முறை பிற்போக்குத்தனம், எதேச்சாதிகாரவாதம் மற்றும் போரை நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கின்றன.

அக்டோபரின் படிப்பினைகள் இல் ட்ரொட்ஸ்கி வலியுறுத்துகின்றவாறாக, “ஒரு கட்சி இல்லாமல், ஒரு கட்சிக்கு வெளியில், ஒரு கட்சிக்கு மேலாக, அல்லது கட்சியினிடத்தில் வேறொன்றைப் பிரதியிட்டு” சோசலிசப் புரட்சியானது வெற்றிபெற முடியாது. ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் அதன் பல வாரிசுகளது அரசியல்ரீதியான அழிவுகரமான பாத்திரம், அத்துடன் மிக முக்கியமாக, ரஷ்யப் புரட்சியில் இருந்தும் மற்றும் அதன் அதிகாரத்துவச் சீரழிவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்துமான படிப்பினைகள் ஆகியவை உள்ளிட கடந்த நூற்றாண்டின் மாபெரும் மூலோபாய அனுபவங்களைக் கற்றுணர்ந்திருக்கின்ற ஒரு புரட்சிகரத் தொழிலாளர் கட்சியைக் கட்டியெழுப்புவதே ஒவ்வொரு நாட்டிலுமான இன்றியமையாத பிரச்சினையாகும். உலகெங்கும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளைக் கட்டியெழுப்புவது என்பதே இதன் பொருளாகும்.