ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Corruption allegations undermine French presidential candidate François Fillon

ஊழல் குற்றச்சாட்டுகள் பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன் நிலையை பலவீனப்படுத்துகின்றன

By Alice Laurençon
4 February 2017

ஊழல் குற்றச்சாட்டுகள் முதன்முதலில் வெளியாகி ஒரு வாரமே கடந்திருக்கும் நிலையில், மேலதிகமான தகவல்கள் தொடர்ந்து வெளிவருவதை அடுத்து பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் அதிகமான அழுத்தத்தின் கீழ் வந்திருக்கிறார்.

பழமைவாத குடியரசுக் கட்சியின் (LR) வேட்பாளரான ஃபிய்யோன், தனது நாடாளுமன்ற உதவியாளர் என்ற கற்பனையான ஒரு வேலையின் நிமித்தமாக தனது மனைவி பெனிலோப்புக்கு எட்டு ஆண்டு காலத்தில் 600,000 யூரோக்களை செலுத்தியிருந்தார் என சென்ற புதன்கிழமையன்று நையாண்டி செய்தித்தாளான Le Canard Enchaîné குற்றச்சாட்டுகளை வெளியிட்டிருந்தது. அரசாங்கத்தில் ஃபிய்யோன் ஒரு அமைச்சராக இருந்த சமயத்தில் சட்ட அவையில் அவரைப் பிரதியீடு செய்த ஒரு பிரதிநிதியான மார்க் ஜூலார் (Marc Joulard) க்கான ஒரு “பாராளுமன்ற உதவியாளராக” (parliamentary attaché) கொடுக்கப்பட்டிருந்த 500,000 யூரோக்களும் இதில் அடங்கும்.

அதே காலகட்டத்தில் ஜூலாருக்காக வேலை செய்திருந்த Jeanne Robinson-Behre என்ற இன்னுமொரு உதவியாளர், ஜூலாருக்காக பெனிலோப் வேலை செய்திருந்ததாக கூறக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் தன்னால் நினைவுகூர முடியவில்லை என்று கூறியிருந்ததை இந்த செய்தித்தாள் மேற்கோளிட்டிருந்தது. ஃபிய்யோன் தனது மனைவி தொகை பெற்றார் என்பதை மறுக்கவில்லை, ஆயினும் ஜூலார் இல்லாத சமயத்தில் விருந்தினர்களை சந்திப்பது மற்றும் அவரது உரைகளுக்கான வரைவுகளை சரிபார்ப்பது என தனது ஊதியத்தை நியாயப்படுத்தும் அளவிற்கு அவர் வேலை செய்திருந்தார் என்று மீண்டும் மீண்டும் அறிவித்து வந்திருந்தார்.

ஃபிய்யோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் வியாழனன்று பிரான்ஸ்2 தொலைக்காட்சி சேனலில் வெளியான ஒரு காணொளியில் மேலும் எரியூட்டப்பட்டன. 2007 இல் சண்டே டெலிகிராப் என்ற இங்கிலாந்தின் செய்தித்தாளுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், “அவரது உதவியாளராகவோ அல்லது அந்த மாதிரி எதுவுமாகவோ நான் ஒருபோதும் இருந்திருக்கவில்லை” என்று பெனிலோப் ஃபிய்யோன் கூறியிருந்ததன் ஒரு பகுதியை அந்த காணொளி காட்டியது. 

“அவரது மக்கள் தொடர்பு விவகாரங்களை நான் கையாள்வதில்லை” என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

Le Canard Enchaîné தனது சமீபத்திய இதழில், ஃபிய்யோனது மனைவிக்கு வழங்கப்பட்டிருந்த தொகை ஆரம்பத்தில் கருதப்பட்டதை விடவும் அதிகமானதாக, 831,000 யூரோ வரையிலும் இருந்ததாக, கூறியிருக்கிறது.

ஃபிய்யோன் செனட்டராக இருந்த சமயத்தில் 2005 இல் மற்றும் 2007 இல் தனது இரண்டு பிள்ளைகளை சட்ட ஆலோசகர்களாக பணியமர்த்தியதாகக் காட்டி அவர்களுக்கு அரசு நிதியில் இருந்து 84,000 யூரோக்களை வழங்கியிருந்ததாகவும் அது குற்றம்சாட்டியது. அந்த சமயத்தில் அவரது பிள்ளைகள் இருவருமே தங்கள் சட்டப்படிப்புகளை முடித்திராத நிலையில் அவர்கள் வழக்கறிஞர் தகுதிக்கு பூர்த்தியாகியிருக்கவில்லை என்ற உண்மை நிலையைத் தாண்டி இவ்வாறு நடந்திருப்பதானது, அவர்கள் என்ன வேலை செய்திருக்க முடியும் என்ற மேலதிக ஊகங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது.

குடும்ப அங்கத்தவர்களை பணியமர்த்துவது மற்றும் நாடாளுமன்ற உதவியாளர்களை பணியமர்த்துவது ஆகிய விவகாரங்களில் பிரெஞ்சு சட்டங்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவையாக இருப்பதால், பெனிலோப் ஃபிய்யோன் மற்றும் ஃபிய்யோனின் இரண்டு பிள்ளைகளுக்கு கொடுக்கப்பட்ட பணத்தொகைகள் தொழில்நுட்பரீதியாக சட்டவிரோதமாக கருதப்பட இயலுமா என்பது இன்னும் தெளிவாகவில்லை என்கிறபோதிலும், இந்த குற்றச்சாட்டுகள் ஃபிய்யோனை மட்டுமல்லாது ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையுமே மதிப்பிழக்கச் செய்திருக்கின்றன. தொழிலாள வர்க்கம் அரக்கத்தனமான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று கோருகின்ற அதே நேரத்தில், ஆளும் உயரடுக்கானது தமது சொந்த ஆதாயத்திற்கு நூறாயிரக்கணக்கான யூரோ அரசு நிதியை பெற்றுக் கொள்ள முடிகிறது.

இது போன்ற ஊழல்களின் பின்விளைவுகள், தொழிலாள வர்க்கத்தை ஸ்தாபகக் கட்சிகளிடம் இருந்து மேலும் அந்நியப்படுத்தி விடும் என்பதில் ஊடகங்களும் அரசியல் வட்டாரங்களும் கூடுதலாய் எச்சரிக்கை கண்டிருக்கின்றன.

Le Monde இல் நேற்று வெளியான ஒரு தலையங்கம் கூறியது: “பிரெஞ்சு மக்களை முட்டாள்களாய் கருதிக் கொள்வதன் மூலமும், அவர்களை நோக்கிய இத்தகைய உதாசீன மட்டங்களை அவர்கள் காணும்படியும் கேட்கும்படியும் செய்வதன் மூலமும், கொஞ்சநஞ்ச நேர்மையையும் இல்லாது செய்வதன் மூலமும், அரசாங்க அலுவல்கள் மீதான அவர்களது வெறுப்பை ஆழப்படுத்துவதிலும் அவர்களது கலகத்தன்மையை -அவை நியாயமானவையே- ஆத்திரமூட்டலின் மூலம் தூண்டி விடுவதிலுமே நாம் சென்றடைய இருக்கிறோம்.” அது தொடர்ந்து எழுதியது, வேட்பாளர்களின் தண்டனைபயமின்மை மற்றும் குருட்டுத்தனமான சுயநலம் ஆகியவற்றால், “இத்தகைய நிலைக்கு பொறுப்பாகின்ற அவர்கள், தங்களையே நொந்து கொள்கின்றபடி ஆகிவிடும். ஆனால் இப்போது மிகவும் காலம் கடந்ததாகி விட்டது.”

இந்த புதிய விபரங்களின் வெளியீடானது, LR இன் வேட்பாளரை ஜனாதிபதி பதவிக்கான அதிக வாய்ப்பிருந்த வேட்பாளர் என்ற நிலையில் இருந்து ஒரு தேர்தல் படுதோல்விக்கு முகம்கொடுக்கும் நிலைக்கு மாற்றியிருப்பதால், அக்கட்சிக்குள்ளாக உள்முகமான பிளவுகளையும் இது தூண்டியிருக்கிறது. பிரெஞ்சு மக்களில் 76 சதவீதம் பேருக்கு இக்குற்றச்சாட்டுகள் குறித்த ஃபிய்யோனின் கருத்துக்களில் சமாதானம் உண்டாகியிருக்கவில்லை என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் ஃபிய்யோன் 19 முதல் 20 சதவீதம் வரையான வாக்குகளையே பெற முடியும் என்றும், PS உடன் தொடர்புடைய வங்கியாளரான இம்மானுவேல் மாக்ரோன் மற்றும் தேசிய முன்னணி வேட்பாளரான மரின் லு பென் ஆகியோருக்கு அடுத்த இடத்தையே அவர் பிடிப்பார் என்றும் கருத்துக்கணிப்புகள் இப்போது கணிப்பு வெளியிடுகின்றன. இது அவரை இரண்டாம் சுற்றுக்கு முன்னேற முடியாததாக்கி விடும்.

டொனால்ட் ட்ரம்புக்கு -ட்ரம்ப்பின் தேர்வினை தன்னால் பிரெஞ்சு ஜனாதிபதி பதவிக்கு தேர்வாக முடியும் என்பதன் ஒரு அறிகுறியாக எடுத்துக் கொண்டிருக்கும் மரின் லு பென்னை ட்ரம்ப்பின் நிர்வாகம் ஆதரிக்கிறது- எவ்வாறு பதிலளிப்பது என்று ஐரோப்பிய சக்திகள் தடுமாறிக் கொண்டிருக்கும் சமயத்தில், குடியரசுக் கட்சி (LR) தமது வேட்புநிலை பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வுகாண்பது என்றும், உலக அரங்கில் பிரெஞ்சு முதலாளித்துவத்தின் நலன்களை எவ்வாறு நிலைநாட்டுவது என்பது குறித்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறது.

LR இன் பொதுச் செயலரான பேர்னார்ட் அக்கோயே, மற்றும் LR இன் முதனிலைத் தேர்தல்களில் முன்னர் நத்தலி கோசியுஸ்கோ-மொறிஸே (Nathalie Kosciusko-Morizet) மற்றும் புருனோ லு மேய்ர் (Bruno Le Maire) ஆகியோர் உள்ளிட LR இன் 17 முதனிலை நிர்வாகிகள் வியாழக்கிழமையன்று, பிரெஞ்சு செய்தித்தாளான Le Figaro இல் எழுதியிருந்த ஒரு தலையங்க பக்க கட்டுரையில், ஃபிய்யோனுக்கு தங்கள் “முழுமையான ஆதரவை” அறிவித்ததோடு, குற்றச்சாட்டுகளை “வதந்திகள், மற்றும் துல்லியமற்ற தகவல்கள் மற்றும் அவதூறுகள்” என்று கண்டனம் செய்தனர்.

ஆயினும், மற்ற நிர்வாகிகள் ஃபிய்யோனை போட்டியில் இருந்து இறங்குவதற்கும் அவருக்கு வழங்கப்பட்டிருந்த பரிந்துரையை வேறொரு LR வேட்பாளருக்கு விட்டுக் கொடுப்பதற்கும் அழைப்பு விடுத்திருக்கின்றனர். ஃபிய்யோனை LR இன் வேட்பாளராக பரிந்துரைத்த நவம்பரில் நடந்த முதனிலைத் தேர்தலின் முடிவுகள், “இந்த முன்கணிக்கவியலாத அபிவிருத்திகளுக்கு முகம்கொடுக்கும் சமயத்தில் செல்லாதவையாக ஆகி விடுகின்றன” என்று கூறிய றோன் (Rhone) பிராந்திய பாராளுமன்ற பிரதிநிதியான ஜோர்ஜ் ஃபெனெக், “ஒரு தீர்வு காண்பதற்கு” LR தேசியக் குழுக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

முதனிலைத் தேர்தலில் ஃபிய்யோனுக்கு அடுத்து வந்த அலென் ஜூப்பேயை ஜனாதிபதி வேட்பாளராக ஆக்குவதற்கு LR இன் ஒரு பிரிவினர் திரைமறைவு வேலைகள் செய்துவருகின்றனர். ஜூப்பேயை பரிந்துரைக்க அழைக்கும் ஒரு பகிரங்க கடிதம் தயாரிப்பு செய்யப்பட்டதையும், “பல டஜன் பிரதிநிதிகள் கையெழுத்திடுவதற்கு தயார்நிலையில்” இருந்ததையும் LR இன் பாராளுமன்ற பிரதிநிதியான பிலிப் கொஸ்லன் (Philippe Gosselin) வியாழனன்று ஊர்ஜிதம் செய்தார்.

சோசலிஸ்ட் கட்சியும் கூட, சென்ற ஞாயிறன்று பெனுவா அமோன் (Benoît Hamon) ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டதில் ஆழமாக பிளவுபட்டிருக்கும் நிலையில், கடந்த அரை நூற்றாண்டு காலமாய் முதலாளித்துவ ஆட்சியின் இரு பெரும் கட்சிகளாக இருந்து வந்திருப்பன பொறிவு காணும் ஒரு சாத்தியத்திற்கு பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு முகம்கொடுத்திருக்கிறது.

இந்த இரண்டு கட்சிகளின் உடைவினால் லு பென் ஆதாயமடையக் கூடும், மற்றும், பிரான்சில் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிராகவும் மக்கள் பரவலான வெறுப்பு கொள்ளக் கூடும் ஆகிய கவலைகள் பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய ஆளும் உயரடுக்கின் பரந்த பிரிவுகளை பீடித்திருக்கின்றன. லு பென் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தீர்மானமான குரோதம் கொண்டவராவார், ஐக்கிய இராச்சியம் பிரெக்ஸிட்டுக்கு வாக்களித்திருக்கின்ற நிலையிலும் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி ட்ரம்ப்பின் குரோதமான நிலைப்பாட்டையும் கணக்கில் கொண்டால், FN ஜனாதிபதி பதவியில் அமர்வதென்பது ஐரோப்பிய ஒன்றியத்தை ஆழமாக மாற்றியமைக்கும் என்பதோடு, அதன் இருப்புக்கே அச்சுறுத்தலாகும்.