ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French presidential elections too close to call after weekend campaign launch

வாரயிறுதியில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை யார் வெல்வார் என்பது தெளிவாக தெரியவில்லை

By Alex Lantier
7 February 2017

பல முன்னணி வேட்பாளர்கள் வாரயிறுதியில் அவர்களது தேர்தல் பிரச்சாரங்களைத் தொடங்கி வைத்து பிரதான உரைகளை வழங்கிய நிலையில், அங்கே பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலின் முடிவு மீது மிகப்பெருமளவில் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது.

இந்த போட்டியானது, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டமை மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டு ஆழமாக மதிப்பிழந்திருக்கும் நிலைமைகளால் வடிவமைக்கப்படுகின்றது. பிரான்சின் மரபார்ந்த அரசாங்க கட்சிகள் ஒரு வரலாற்று நெருக்கடியை முகங்கொடுத்துள்ளன. வங்கியாளரும் சுயேட்சை வேட்பாளருமான இமானுவெல் மாக்ரோனை ஆதரிப்பதா அல்லது சோசலிஸ்ட் கட்சியின் பெனுவா அமோனை ஆதரிப்பதா என்பதில் சோசலிஸ்ட் கட்சி பிளவுபட்டுள்ளது, வலதுசாரி குடியரசு கட்சி (LR) வேட்பாளர் பிரான்சுவா ஃபிய்யோன், அவர் மனைவிக்கு செய்யாத வேலைக்காக பெரும் தொகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற மோசடி குற்றச்சாட்டுக்களை முகங்கொடுத்துள்ளார்.

மேலெழுந்துள்ள வேட்பாளர்களின் களம், பிரெஞ்சு ஜனநாயகத்தின் உடைவுக்கும் மற்றும் ஆளும் உயரடுக்கின் திவால்நிலைமைக்கும் சான்று பகிர்கிறது. முன்னொருபோதும் இல்லாத பொருளாதார துன்பங்கள் மற்றும் சமூக கோபத்திற்கு இடையே, எந்தவொரு வேட்பாளரும், உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவில்லை. இது ஒரு வெடிப்பார்ந்த மற்றும் நிச்சயமற்ற சூழலை உருவாக்குகிறது. எல்லா வேட்பாளர்களும் போர் மற்றும் சிக்கனத் திட்டங்களுக்கு பொறுப்பேற்றுள்ளதுடன், அரசியல் ஸ்தாபகத்தின் மீது வாக்காளர்கள் அவநம்பிக்கை அடைந்துள்ள நிலையில், மக்களின் கோபம் மற்றும் அவர்களது மாற்றத்திற்கான கோரிக்கைகளுக்கு யார் தகுதியற்ற பயனாளியாக மாறுவார் என்பது தெளிவின்றி உள்ளது.   

நவ பாசிச தேசிய முன்னணியின் (FN) மரீன் லு பென் 26 சதவீத வாக்குகளுடன் முதல் சுற்றில் முன்னணி வகிப்பதாக சமீபத்திய Les Echos கருத்துக்கணிப்பு எடுத்துக்காட்டியது. மாக்ரோன் 23 சதவீதமும், ஃபிய்யோன் 20 சதவீதமும் பெறக்கூடும். கிளர்ச்சிகரமான பிரான்ஸ் இயக்கத்தின் (Rebellious France movement) வேட்பாளராக போட்டியிடும் இடது முன்னணி தலைவர் ஜோன்-லூக் மெலென்சோனை சமீபத்தில் அமோன் முந்திச் சென்றார்; இருவரும் முறையே 11 மற்றும் 14 சதவீதத்தில் உள்ளனர்.

பெரும்பான்மை பிரெஞ்சு மக்களிடையே ட்ரம்ப் மதிப்பிழந்து இருந்தாலும் அவருடனான கூட்டணிக்கு லு பென் அழைப்புவிடுக்கிறார் என்றபோதிலும் கூட, வாக்காளர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அவர்களைக் கூர்மையாக நிராகரிக்கின்றனர் என்றாலும் கூட, அப்பெண்மணி தேர்தலில் ஜெயிக்கக்கூடும். இது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்தும் மற்றும் யூரோ செலாவணியில் இருந்தும் பிரான்ஸ் வெளியேறுவதற்கு இட்டுச் செல்லக்கூடும், அனேகமாக அது இதுமாதிரியான அடிப்படை ஐரோப்பிய முதலாளித்துவ அமைப்புகளது பொறிவாக இருக்கும், மேலும் பாரீஸ் மற்றும் பேர்லினுக்கு இடையே ஒரு கூர்மையான மோதலுக்கும் இட்டுச் செல்லக்கூடும்.    

லு பென் அவரது தேர்தல் பிரச்சாரத்தைப் பிரான்சின் மூன்றாவது மிகப் பெரிய நகரமும், சுவிஸ் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு வளமான மற்றும் பாரம்பரிய வலதுசாரி மாநகரமுமான லியோனில் தொடங்கினார். ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதை வரவேற்ற அவர், “வேலையற்றவர்களிடம் விற்பதற்குரிய பண்டங்களை உருவாக்கும் அடிமைகளை தோற்றுவிக்கும்" ஒரு சமூகத்தை தோற்றுவித்துள்ளதற்காக பூகோளமயமாக்கல் மீது வெகுஜனவாத கண்டனத்தை வெளியிட்டார்.

அவர், “இரண்டு சர்வாதிபத்தியங்களான", பொருளாதாரம் மற்றும் மதம் ஆகியவற்றை பிரான்சுக்கு அபாயமாக குறைகூறி, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் கூட்டாளிகளின் மொழியையே மறுசுழற்சி செய்யும் விதத்தில், தேசிய முன்னணியின் பாரம்பரிய அழைப்பீடான தேசியவாத மற்றும் முஸ்லீம்-விரோத உணர்வுக்கு அழைப்புவிட தொடங்கினார். அவரது மருமகளும், தேசிய முன்னணி அங்கத்தவருமான மரியோன் மரிஷால் லு-பென், அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் பாரிய போராட்டங்களைத் தூண்டியுள்ள ட்ரம்பின் முஸ்லீம்-விரோத புலம்பெயர்வு தடையை அங்கீகரித்ததுள்ள நிலையில், லு பென் "இஸ்லாமியம்" மற்றும் "தீவிரப்பட்ட இஸ்லாமை" பிரான்சுக்கான ஆபத்துக்களாக குறிப்பிட்டு தாக்கினார்.     

அவர் இரண்டு சர்வஜன வாக்கெடுப்புகளுக்கான திட்டங்களை அறிவித்தார், முதலாவது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யூரோவிலிருந்து வெளியேறுவதற்கான அவரது முந்தைய அழைப்பின் அதே போக்கில், ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரான்சின் சுதந்திரம் மீது (“நாணய, சட்டமன்ற நிர்வாக, எல்லை மற்றும் பொருளாதார” சுதந்திரம் மீது) மறுபேரம் நடத்துவது. அரசியலமைப்பில் தேசிய முன்னுரிமையை, அதாவது பிரெஞ்சு மக்களுக்கு ஆதரவாக இனரீதியில் பாகுபாட்டை உள்ளடக்குவது மீதான ஒரு சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கும் அவர் விரும்புகிறார்.  

முக்கியமாக, சாத்தியமானளவிற்கு லு பென்னின் வெற்றியையும் மற்றும் யூரோ விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் முரண்பாடுகளையும் எதிர்நோக்கி, நிதியியல் சந்தைகள் பிரெஞ்சு தேசிய கடன் மதிப்பைக் குறைக்க தொடங்கி உள்ளன. “யூரோவிலிருந்து பிரான்சை வெளியேற்ற உறுதியளித்துள்ள ஒரு வெகுஜனவாதியின் அபாயம் மீது, புரிந்து கொள்ளத்தக்க வகையில் பல முதலீட்டாளர்கள் ஒருங்குவிந்துள்ள" நிலைமைகளின் கீழ், பிரெஞ்சு கடன் மீது அதிகரித்து வரும் நஷ்டம், “முதலீட்டாளர்கள் அவர்களது முன்னுரிமையை மாற்றுவதன் மீதான ஓர் அறிகுறியாகும் அல்லது எச்சரிக்கையாகும்" என்று இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் எழுதியது.

லு பென் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய அதே நாளில், பாரீசின் ஒரு கூட்டத்தில் முப்பரிமாண காட்சி திரைகளில் தோன்றி, மெலோன்சோனும் லியோனில் இருந்து அவர் பிரச்சாரத்தைத் தொடங்கினார். அவர் இரண்டாம் சுற்றை எட்டுவதற்காக சோசலிஸ்ட் கட்சியின் பாரம்பரிய கூட்டாளிகளான பசுமை கட்சியினர் மற்றும் இடது முன்னணி ஆதரவைப் பெற உத்தியோகபூர்வ சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரை அனுமதிக்க செய்வதற்காக, அமோனுடனான நல்லிணக்கத்திற்கு அழைப்புவிட்டிருந்தார். அவர் கூட்டத்தில், அவர் லு பென் மற்றும் மாக்ரோன் ஆகிய இரண்டு தற்போதைய முன்னணி வேட்பாளர்களை "அறிவிலி" என்றும், “எல் கொம்ரி சட்டத்தில் பங்கெடுத்ததன் மூலமாக ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்வை கொடூரமாக மாற்றிய வங்கியாளர்" என்றும் தாக்கினார். இந்த மக்கள்விரோத தொழிலாளர் சட்டம் கடந்த ஆண்டு பாரிய போராட்டங்களுக்கு இடையே சோசலிஸ்ட் கட்சியால் கொண்டு வரப்பட்டதாகும்.

எவ்வாறிருந்த போதினும் ஹோலாண்டு மற்றும் பிரதம மந்திரி பேர்னார்ட் கசெனேவ் இருவரையும் அவருக்குப் பின்னால் சோசலிஸ்ட் கட்சியில் இணைத்து வைக்க முயற்சிக்கவும் மற்றும் அவரது தேர்தல் வெற்றிக்கு அவர்களது ஆதரவைப் பெறுவதற்கும் அமோன் கடந்த வாரம் அவர்களைச் சந்திக்க சென்றார். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் கூலிகளை, அனைவருக்கும் மாதாந்திர கூலியாக 600 இல் இருந்து 800 யூரோ என்ற அற்பத்தொகையை எல்லா தொழிலாளர்களுக்கும் வழங்கும் ஒரு திட்டத்தைக் கொண்டு பிரதியீடு செய்வதன் மூலமாக பிரான்சின் தொழில்துறை அழிப்பு நடவடிக்கைக்கு விடையிறுக்க முன்மொழிந்ததன் மூலமாக ஊடக கவனத்தைப் பெற்றுள்ள அமோன், கொதித்தெழுந்துள்ள அரசாங்க-விரோத வேட்பாளர் கிடையாது என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. அதற்கு மாறாக, அவர் சோசலிஸ்ட் கட்சி மீது அதிருப்தி கொண்ட உயர்மட்ட நடுத்தர வர்க்க பிரிவுகளை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அவற்றிற்கு அழைப்புவிடும் ஒரு வேட்பாளராவார்.

எவ்வாறிருப்பினும் லியோனில், அமோன் குறித்து மெலோன்சோன் வெளிப்படையாக ஒன்றும் கூறவில்லை, மாறாக அமோன் உடனான ஒரு கூட்டணிக்கு மறைமுகமாக மீண்டும் அழைப்புவிடுத்து அவர் உரையை நிறைவு செய்து கொண்டார். “எங்களை அவமதிக்காமல் எந்தவொரு நேரத்திலும் யாரேனும் எங்களுக்கு உதவிக்கரம் நீட்டினால், எங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சியே,” என்று மெலோன்சோன் தெரிவித்தார்.

இதுபோன்ற நிலைப்பாடுகள் என்ன எடுத்துக்காட்டுகின்றன என்றால், தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும், ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்குப் பின்னர் உலக அரசியலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த நெருக்கடிக்கு இடையே, ஹோலாண்ட் என்ன செய்தாரோ அதற்கு குறைவில்லாமல் தொழிலாள வர்க்கத்தை ஒரு எதிரியாக பார்க்கும் ஒரு அரசாங்கத்தையே உருவாக்கும்.

மாக்ரோன், இவரும் லியோனில், அவரது பிரச்சாரம் தொடங்கிய அடுத்த நாள் தான் லு பென் மற்றும் மெலோன்சோனின் சந்திப்பு நடந்தது. ஹோலாண்டின் இந்த முன்னாள் பொருளாதாரத்துறை அமைச்சர், பேர்லினுடன் நெருக்கமான உறவுகளைக் கட்டமைப்பதன் மூலமாகவும் மற்றும் ட்ரம்பின் கோபம் இருந்தாலும் அமெரிக்காவுடன் நேட்டோ கூட்டணியைப் பேணுவதன் மூலமாகவும் ட்ரம்புக்கு விடையிறுக்க விரும்பும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளுக்காக பேசுகிறார். 

மாக்ரோனும் சோசலிஸ்ட் கட்சி அமைப்பின் பிரிவுகளை, குறிப்பாக லியோனில் உள்ள அதன் சக்திகளை பிரதிநிதித்துவம் செய்கிறார், அவை ஒரு சோசலிச நோக்குநிலையைக் கொண்டிருப்பதாக காட்டிக்கொள்ளும் எந்தவொரு பாசாங்குத்தனத்தையும் கூட விட்டுவிட்டு, மாக்ரோனின் வெட்கமற்ற முதலாளித்துவ திட்டநிரலை ஆதரித்ததன் மூலமாக ஹோலாண்டின் கீழ் வளர்ந்துள்ள சோசலிஸ்ட் கட்சியின் வரலாற்று நெருக்கடிக்கு அவை விடையிறுக்கின்றன. அவர் இராணுவ செலவுகளை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக அதிகரிக்க நிதி ஒதுக்கீடு செய்வதற்காக சமூக சேவைகளில் ஆழ்ந்த வெட்டுக்களோடு உள்நாட்டில் தொழிலாளர்களுக்கு எதிராக பொருளாதார அதிர்ச்சி வைத்தியம் அளிக்க பரிந்துரைத்து வருகிறார்.

“வலது மற்றும் இடது இனிமேல் இருக்காது என்று நான் கூற மாட்டேன்,” என்று அவர் உரையில் குறிப்பிட்ட மாக்ரோன், “ஆனால் இதுபோன்ற வரலாற்று காலக்கட்டத்தில், அதுபோன்ற பிளவுகளுக்கு அப்பாற்பட்டு இருக்க முடியாதா?” என்றார்.

மாக்ரோன் ட்ரம்பின் புலம்பெயர்வு-விரோத கொள்கைகளை விமர்சித்தாலும் —"என் வேலைத்திட்டத்தில் எந்த சுவரும் இருக்காது" என்று அறிவித்து அமெரிக்கா-மெக்சிக்கோ எல்லையில் சுவர் கட்டுவதற்கான ட்ரம்பின் திட்டங்களை விமர்சித்தாலும்— அவர் ஓர் ஆக்ரோஷமான தேசியவாத மற்றும் இராணுவவாத கொள்கையை முன்மொழிகிறார். பிலிப் டு வில்லியே அவரது பிரச்சார அறிக்கையைத் தயாரித்திருந்த நிலையில் அவர் உட்பட வலதுசாரி தேசியவாத அரசியல்வாதிகளைப் பகிரங்கமாக சந்தித்த பின்னர், மாக்ரோன் அவரது உரையில் ரஷ்யா, ஈரான், துருக்கி, மற்றும் சவூதி அரேபியா உட்பட பல நாடுகளை அபாயகரமான சர்வாதிகார ஆட்சிகள் என்று முத்திரை குத்தினார்.  

இரண்டாம் சுற்று வாக்குபதிவில் மாக்ரோன் பெரும்பாலும் லு பென்னை தோற்கடிக்கலாம் என்று தற்போதைய கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஆனால் ஒரு மக்கள்விரோத நவ-பாசிசவாதத்திற்கும் ஹோலாண்டு உடன் பிணைப்பு கொண்ட ஒரு மதிப்பிழந்த வங்கியாளர் அல்லது அமோனுக்கும் இடையே ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை முகங்கொடுக்கும் வாக்காளர்கள், வாக்களிப்பதைத் தவிர்ப்பது மற்றும் எதிர்ப்பு வாக்குகள் கலப்பதன் மூலமாக, அனுமானிக்க இயலாத விதத்தில் லு பென்னை அதிகாரத்திற்குக் கொண்டு வந்து விடுவார்களோ என்று ஊடகங்களில் அச்சம் அதிகரித்து வருகிறது.

“மரீன் லு பென் எவ்வாறு பிரான்சு ஜனாதிபதி ஆகலாம்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையில் Marianne சஞ்சிகை எழுதுகையில், “சூழல் [மாக்ரோனுக்கு] மிகவும் சாதகமாக இருக்க வேண்டும். அவர் தர்க்கரீதியில் 25 சதவீதத்திற்கு அதிகமாக இருக்க வேண்டும். ஆனால் அவர் சுமார் 21-22 சதவீதத்தில் இருப்பதாக தெரிகிறது. இதுவொரு கண்ணுக்குத்தெரியாத தடையில்லையா? வங்கியாளர் என்ற அவர் பிம்பம், உலகளாவிய சுதந்திர-சந்தை, மற்றும் புலம்பெயர்வு மீது மிகவும் பகிரங்கமான நிலைப்பாடு ஆகியவை தெளிவாக பலவீனமாக்கி உள்ளன,” என்றார்.

அந்த இதழ் எழுதியது, அமோன்-லு பென் போட்டியில், “வலதுசாரி வாக்குகள் பாரியளவில் தேசிய முன்னணி வேட்பாளருக்குத் தான் போகும். மத்திய மற்றும் மத்திய-வலதில் பெரும்பாலானவர்கள் புறக்கணிக்கலாம். உடலுழைப்பு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் உழைப்பை முடிவுக்கு கொண்டு வருவதை ஊக்குவிக்கும் ஒரு வேட்பாளரை உழைப்பை ஒழிப்பவராக கூறும் (அதாவது வேலைகளை- அழிப்பவராக கருதி) ஒருவரை ஆதரிக்க மறுத்து, பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுக்கதைகளை நிராகரிக்கலாம். அப்படியானால் மரீன் லு பென்னுக்கு நிஜமாகவே வாய்ப்புகள் இருக்கும்.”

அதுபோன்ற கவலைகள் ஃபிய்யோனுக்கான வாக்குகள் பொறிவதைப் பிரதிபலிக்கின்றன, இவர் குடியரசு கட்சியின் (LR) இலையுதிர்கால ஜனாதிபதி வேட்பாளர் போட்டியில் ஜெயித்தபோது, இரண்டாம் சுற்றில் லு பென்னைத் தோற்கடித்து எளிதாக வென்று விடுவார் என்று மதிப்பிடப்பட்டது. ஆனால் 500,000 வேலைகளை வெட்டுவது மற்றும் மருத்துவக் காப்பீட்டிற்கான சமூக பாதுகாப்பு முறையின் நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது உட்பட இவர் அழைப்புவிடுத்த ஆழ்ந்த சிக்கனத் திட்டங்கள் பெரிதும் மக்கள் மதிப்பிழந்தது. அமெரிக்காவிற்கு எதிராக இவர் ஜேர்மனி மற்றும் ரஷ்யா உடனான கூட்டணிக்கு அழைப்பு விடுத்த பின்னர், இவர் மனைவி எந்தவித வேலையும் செய்யாமல் தேசிய சட்டமன்றம் மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து நூறாயிரக் கணக்கான யூரோக்களை முறைகேடாக பெற்றதாக அவர் மீது மோசடி குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அவ்விடயத்தில் ஃபிய்யோனும் அவர் மனைவியும் அரசு விசாரணையாளர்களுக்கு அளித்த சாட்சியங்களில் ஒருவர் கருத்து மற்றவரோடு முரண்பட்டுள்ளதாக லு மொண்ட் இல் செய்திகள் வந்துள்ள நிலையில், ஃபிய்யோன் அவரது ஜனாதிபதியாகும் தேர்தல் முயற்சியைக் காப்பாற்றும் ஒரு பெரும்பிரயத்தன முயற்சியில் நேற்று மதியம் தொலைக்காட்சியில் தோன்றினார். எவ்வாறிருப்பினும் அவர் எந்தவித பணத்தையும் திரும்ப கொடுக்க போவதில்லை என்று வலியுறுத்தியும் மற்றும் அவர் மனைவியை பாதுகாத்தும், அவரது செயல் வரலாறுகளை அவர் ஆணவத்தோடு நியாயப்படுத்தினார். அதேவேளையில் வெளிப்படையாகவே அவரது பெரு வணிக ஆதரவாளர்களை நோக்கிய ஒரு கருத்தில், அவர், பிரான்சுக்குத் தேவைப்படும் சமூக "அதிர்ச்சியை" கொடுக்கக்கூடிய ஒரே வேட்பாளர் அவர் மட்டுமே என்று வலியுறுத்தினார்.