ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Munich Security Conference chairman advocates European rearmament

முனீச் பாதுகாப்பு மாநாட்டு தலைவர் ஐரோப்பிய மீள்ஆயுதமயப்படுத்தலை அறிவுறுத்துகிறார்

By Peter Schwarz
16 February 2017

இவ்வாரம் நடக்கவுள்ள மூன்று உயர்மட்ட கூட்டங்களும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து ஐரோப்பாவிற்குள் ஆழமடைந்து வரும் மோதல்களையும் நெருக்கடியையும் வெளிப்படுத்துகின்றன.

நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்கள் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் புரூசெல்ஸில் சந்திக்கிறார்கள், ஜி 20 நாடுகளது வெளியுறவுத்துறை அமைச்சர்கள் வெள்ளியன்று Bonn இல் சந்திக்க இருக்கிறார்கள், மற்றும் வாரயிறுதியில் 53 வது முனீச் பாதுகாப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவிலிருந்து பங்குபற்றுபவர்களில் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் மற்றும் பல செனட்டர்களும் உள்ளடங்குவர்.

ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும், அத்துடன் டஜன் கணக்கான அரசு தலைவர்களும், ஏனைய நாடுகளிலிருந்து 50 வெளியுறவுத்துறை அமைச்சர்களும் மற்றும் 30 பாதுகாப்புத்துறை அமைச்சர்களும் இம்மாநாட்டில் பங்குபற்ற உள்ளனர்.

இக்கூட்டத்திற்கு முன்னதாக, முனீச் பாதுகாப்பு மாநாட்டு தலைவர் வொல்ஃப்காங் இஷிங்கர் (Wolfgang Ischinger), புதிய அமெரிக்க ஜனாதிபதியை கூர்மையாக விமர்சித்ததோடு, ஐரோப்பிய ஒன்றியம் ஐக்கியத்தை காட்டவும் மற்றும் ஓர் இராணுவ கட்டமைப்பை தொடங்கவும் அழைப்புவிடுத்தார். 70 வயதான இந்த இராஜாங்க அதிகாரி, 45 ஆண்டு கால வெளியுறவுத்துறை கொள்கை அனுபவம் கொண்டவர் என்பதோடு, ஜேர்மன் அரசியலில் மிகவும் செல்வாக்கான குரல்களில் இவருடையதும் உண்டு.

“துரதிருஷ்டவசமாக அமெரிக்கா இனியும் மேற்கிற்கான முன்னுதாரணமான அரசியல்-தார்மீக தலைவராக இருக்க பொருத்தமற்றது,” என்று பேர்லினை மையமாக கொண்ட Tagesspiegel க்கு இஷிங்கர் கடந்த சனியன்று தெரிவித்தார். “ட்ரம்பின் வருகை மேற்கின் முடிவை அர்த்தப்படுத்துகிறது, அங்கே ஏனையவர்கள் முன்மாதிரியாக கொள்ள விரும்பிய ஒளிவிளக்காக அமெரிக்கா திகழ்ந்தது. இந்த இழப்பைப் பிரதியீடு செய்வதே இப்போது ஐரோப்பாவின் பணியாகும்,” என்றார்.

“அமெரிக்கா உலக ஒழுங்கமைப்பின் கூறுபாடுகளையும், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒருங்கிணைவையும் [கேள்விக்குள் இழுத்ததற்கு] பின்னர் இருந்து" மேலெழுந்துள்ளதைப் போல, 40 ஆண்டுகளில், அவர் இதுபோன்ற "ஒரு அதிகபட்ச ஸ்திரமற்ற தன்மையை" ஒருபோதும் அனுபவத்தில் பார்த்ததில்லை என்றார்.

“இதுவரையில், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையானது அடிப்படையில் உறுதியான வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்ட ஒரு நிலையான நடவடிக்கையாக இருந்தது. இப்போது அனுமானிக்க இயலாத அதிகபட்ச மட்டங்களுடன், புதிய தீவிரப்பட்ட நிலைமைகளை நாம் கையாண்டு கொண்டிருக்கிறோம். இது அசாதாரணமான விதத்தில் அபாயகரமானது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஐரோப்பாவிலும் குறிப்பாக ஜேர்மனியிலும் ஒரு பாரிய இராணுவ கட்டமைப்பின் மூலமாக "மேற்கத்திய மதிப்புகளின் ஒழுங்குமுறைகளை" பாதுகாப்பதற்கு இஷிங்கர் முன்மொழிந்தார். ஜேர்மன் இராணுவ செலவினங்களை வெறுமனே அதன் தற்போதைய மட்டமான 1.2 சதவீதத்திலிருந்து அமெரிக்கா அழைப்புவிடுத்த 2 சதவீதத்திற்கு உயர்த்துவது போதாது, மாறாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதத்திற்கு உயர்த்த வேண்டும். இது அபிவிருத்திக்கான வரவு-செலவு திட்டக்கணக்கு, இராஜாங்க மற்றும் மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்க வேண்டும், இவ்விதத்தில் அது இராணுவ வரவு-செலவு திட்டக்கணக்கின் பாகமாக மாறும் என்றவர் Tagesspiegel உடன் பேசுகையில் முறையிட்டார். “இந்த அணுகுமுறை எடுத்த எடுப்பிலேயே எல்லா இடதுகளாலும் எதிர்க்கப்படாது,” என்றார்.

இராணுவ செலவுகளில் அத்தகையவொரு உயர்வு அமெரிக்காவின் நலன்களுக்கானது அல்ல, மாறாக ஜேர்மனியின் நலன்களுக்கானது என்று இஷிங்கர் திங்களன்று பத்திரிகைகளுக்குத் தெரிவித்தார். “ஆகவே இங்கே பிரச்சினையில் இருப்பது பென்டகனில் இருந்து ஏதோசில மூன்றாந்தர சிறுவர்கள் வருவது குறித்ததாக இருக்காது,” என்றார். பிரச்சினையானது அதனினும் பெரிதாக, நாட்டை பாதுகாக்க ஜேர்மன் இராணுவத்திற்கு (Bundeswehr) என்ன அவசியப்படுகிறதோ அது குறித்ததாக இருக்கும்.

ஜேர்மன் இராணுவத்தின் தாக்கும் ஆற்றலைப் பலப்படுத்த, இஷிங்கர், இராணுவ மற்றும் தளவாட தொழில்துறை பகுதிகளில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நெருக்கமான கூட்டுறவுக்கு அழுத்தமளித்து வருகிறார்.

“ஐரோப்பிய ஒன்றிய அங்கத்தவர்கள் அவர்களுக்கான போர்விமானங்களையோ அல்லது ஆயுதங்களையோ ஒருங்கிணைந்து வாங்கினால், அவர்கள் ஒவ்வொன்றுக்கும் பாதி விலை மட்டுமே கொடுப்பார்கள்,” என்று Tagesspiegel க்கு அவர் கணக்கிட்டு காட்டினார். “வெறுமனே பாதி அளவிற்குச் செலவிட்டு, நாம் அமெரிக்காவை விட ஆறு மடங்கு அதிகமான ஆயுத அமைப்புமுறைகளைக் கொண்டிருக்கிறோம், ஆனால் நமது சண்டையிடும் ஆற்றல் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது,” என்றார். “வெளியுறவுக் கொள்கையில் முடிவெடுப்பதற்கான தகைமையுடன் சேர்ந்து… பிராந்தியவாதத்தின்" முடிவுடன், ஐரோப்பியர்களாகிய நாம் உண்மையில் ஒரு பலமான அபிப்ராயத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் அரசியல்-இராணுவ சக்தியாக இருப்போம்,” என்றார்.

“அமெரிக்காவை நேற்றை விட இன்று ஒரு கூட்டாளியாக ஏற்க மறுக்கும்" ஏனைய ஐரோப்பிய அரசியல்வாதிகளுக்கு முரண்பட்ட விதத்தில், இஷிங்கர், Süddeutsche Zeitung இன் விருந்தினர் பக்கத்தில் வியாழனன்று எழுதுகையில், எவ்வளவு நீண்டகாலத்திற்கு சாத்தியமோ அந்தளவிற்கு ஒரு சாத்தியமான காலத்திற்கு பகிரங்க முறிவை இழுத்தடிக்க விரும்புகிறார். “அமெரிக்காவிடமிருந்து தீர்க்கமாக திரும்புவதற்கு மாறாக, அட்லாண்டிக் இடையிலான சமூக மதிப்புகளைப் பேணுவதில் ஆர்வமுடையவர்களுடன் நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்,” என்கிறார்.

“காங்கிரஸில் உள்ள ட்ரம்ப் எதிர்ப்பாளர்களை" மற்றும் "புதிய அரசாங்கத்தின் அங்கத்தவர்களையும் கூட" சாத்தியமான பங்காளிகளாக இஷிங்கர் பெயரிட்டார். ஒருவர் "எந்தளவிற்கு சாத்தியமோ அந்தளவிற்கு புதிய அமெரிக்க அரசாங்கத்தை ஒருங்கிணைக்க" முயல வேண்டியிருக்கும் என்றார். “ஒருங்கிணைத்து, செல்வாக்கை பேணுவது தான் துல்லியமாக இப்போது அவசியப்படும் யதார்த்தஅரசியல்,” என்றார்.

அனைத்திற்கும் மேலாக, ட்ரம்ப் போலில்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவிற்கு இதுவரையில் ஆதரவை வெளிப்படுத்தி உள்ள பாதுகாப்பு செயலர் "போர் வெறியர்" மாட்டீஸ், துணை ஜனாதிபதி பென்ஸ் மற்றும் வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் ஆகியோர் மீது இஷிங்கர் நம்பிக்கை வைத்துள்ளார்.

உண்மையில் இந்த முனீச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொள்வார் என்று கருதப்பட்ட, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளினின் இராஜினாமா, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவாளர்களால் நிம்மதியாக எடுத்துக் கொள்ளப்பட்டது. ஃபிளின் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு எதிர்ப்பாளராகவும் மற்றும் மாஸ்கோவின் ஒரு கூட்டாளியாகவும் பார்க்கப்பட்டு வந்தார், அதேவேளையில் பல ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தின் கூடுதல் உடைவைத் தடுப்பதற்கு ரஷ்யாவுடனான ஒரு மோதல் போக்கைப் பின்தொடர வேண்டியதை அவசியமென கருதுகின்றனர்.

அவரது Süddeutsche Zeitung கட்டுரையில், இஷிங்கர், “ஒருங்கிணைந்து செல்வாக்கு பேணுவதற்கான" அவர் கொள்கை இராணுவத்தை மீள்ஆயுதமயப்படுத்த அவகாசம் பெறுவதற்கானது என்ற உண்மை குறித்து எந்த சந்தேகமும் விட்டு வைக்கவில்லை. “குறுகிய மற்றும் மத்திய காலத்திற்கு" ஐரோப்பா, “அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதத்தைக் கைவிட கூடாது" என்றவர் குறிப்பிட்டார். வெளிப்படையாகவே இதை அவர் நீண்டகாலத்திற்கு வேறுவிதமாக பார்க்கிறார்.

அதேநேரத்தில், “இதை மீறுவது ஒரு மரணகதியிலான அட்லாண்டிக் இடையிலான நெருக்கடியைத் தூண்டும்,” என்று அவர் சிவப்புகோடும் வரைந்தார். முதலாவதாக, “உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு எதிராளியாக பார்க்கும் மற்றும் உடைவை அது துரிதப்படுத்துவதற்கும், வலதுசாரி ஜனரஞ்சகவாதிகளை ஆதரிக்கவும் கருதும் டொனால்ட் ட்ரம்பின் கீழ் ஒரு புதிய அரசாங்க கொள்கை இருந்தால், அது பரஸ்பர உறவுகளுக்கு பேரழிவுகரமானதாக இருக்கும்,” என்றவர் எச்சரித்தார். அதுபோன்றவொரு கொள்கையை அவர் முன்னதாக "ஆயுதங்கள் இல்லா ஒரு போர் பிரகடனமாக" வர்ணித்திருந்தார்.

ஐரோப்பாவை விலையாக கொடுக்கும் ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான ஓர் உடன்பாட்டை இஷிங்கர் அவரது இரண்டாவது சிவப்புகோடாக பெயரிட்டார், மற்றும் ஈரானுக்கு எதிராக புதிய தடையாணைகளை, இதை ஜேர்மனி ஆதரிக்காது என்ற நிலையில், இதை மூன்றாவதாக வரையறுத்தார்.

ஐரோப்பாவிற்கு எதிராக ட்ரம்ப் "அவரது திட்டங்களை நிறைவேற்ற முடியாமல்" செய்வதற்காக, ஐரோப்பிய அரசுகள் ஐக்கியத்தை காட்டவும் மற்றும் சுய-வலியுறுத்தலுடன் நடந்து கொள்ளவும் இஷிங்கர் அவசரமாக அழைப்புவிடுத்தார். அதேநேரத்தில் அவர் குறிப்பிடுகையில், “குறிப்பாக ஜேர்மனியர்கள் கொந்தளிப்பான உலக நிலைமைகளின் வெளிச்சத்தில் வெளியுறவு, அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு கொள்கையின் பகுதிகளில் அவர்களது முயற்சிகளைக் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரிக்க வேண்டும்" என்பதை சுட்டிக்காட்டினார்.

ட்ரம்ப் மீதும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள வலதுசாரி ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பாளர்கள் மீதும் அவரது விமர்சனத்திற்கும் "சமூக மதிப்புகளைப்" பாதுகாப்பது என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதையே பாரியளவில் இராணுவ கட்டமைப்புக்கான இஷிங்கரின் அறிவுறுத்தல் எடுத்துக்காட்டுகிறது. மூன்றாண்டுகளுக்கு முந்தைய முனீச் பாதுகாப்பு மாநாடு, "இராணுவ கட்டுப்பாடுகள் நீக்கப்படுகிறதென" பிரகடனப்படுத்த ஜேர்மன் அரசாங்கத்திற்குரிய அரங்கமாக சேவையாற்றியது. அப்போதைய வெளியுறவு மந்திரி மற்றும் தற்போதைய ஜனாதிபதி பிரான்ங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் அந்நேரத்தில் குறிப்பிடுகையில், “ஜேர்மனி உலக அரசியலின் பக்கவாட்டில் இருந்து கருத்து தெரிவிப்பதைக் காட்டிலும் மிகவும் பலமானது,” என்றார். அவருக்கு முன்பிருந்த ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லெயென் ஆகியோரும் அவரை ஆதரித்தனர்.

ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வரவைப் போலவே, ட்ரம்ப் மேலுயர்ந்து வந்திருப்பதும், உலக முதலாளித்துவத்தின் தீர்க்கவியலா நெருக்கடியின் விளைவாகும். அரசியல், பொருளாதார சக்தியின் உலகளாவிய மறுபகிர்வுக்காக கடுமையான சண்டையை முன்னெடுப்பதை தவிர, ஒவ்வொரு நாட்டின் ஆளும் வர்க்கத்திடமும், ஆழமடைந்து வரும் இந்த சமூக மற்றும் பொருளாதார பதட்டங்களுக்கு வேறெந்த விடையிறுப்பும் கிடையாது. அதன் தலைமையின் கீழ் ஐரோப்பாவை இராணுவரீதியில் மறுஒழுங்கு செய்வதற்கான ஜேர்மனியின் முயற்சிகள், கடந்த நூற்றாண்டில் இரண்டு உலகப் போர்களை தூண்டிய முரண்பாடுகளையே தவிர்க்கவியலாமல் ஐரோப்பாவில் தூண்டும்.