ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French neo-fascists present anti-EU, anti-immigrant program in 2017 elections

பிரெஞ்சு நவ-பாசிஸ்டுகள் 2017 தேர்தலில் ஐரோப்பிய ஒன்றிய-விரோத, புலம்பெயர்-விரோத வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றனர்

By Alice Laurençon
18 February 2017

நவ-பாசிச தேசிய முன்னணியின் (FN) ஜனாதிபதி வேட்பாளரான மரின் லு பென், லியோன் இல் தனது பிரச்சாரத்தை தொடங்கியதன் பின்னர், தனது 144-அம்ச தேர்தல் வேலைத்திட்டத்தை வெளியிட்டார். இந்த வேலைத்திட்டம், பலதரப்பான நச்சுத்தனமான புலம்பெயர்-விரோத மற்றும் குறிப்பாக முஸ்லீம்-விரோத நடவடிக்கைகளையும், சட்டம்-ஒழுங்கு கொள்கைகளையும், அத்துடன் இராணுவ தீவிரப்படுத்தலையும், இவற்றுடன் வலதுசாரி நிலைப்பாட்டில் இருந்து நேட்டோவின் இராணுவக் கூட்டணியை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை தாக்குவதையும் முன்மொழிகிறது.

இந்தக் கொள்கைகளுக்கு பிரெஞ்சு மக்களின் பெரும்பான்மையினர் விரோதம் காட்டுகின்றனர் என்றபோதிலும், ஏப்ரல்-மே ஜனாதிபதி தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பை இன்னும் கூட மரின் லு பென் வலுவாகக் கொண்டிருக்கிறார். வியாழனன்று வெளியான Ipsos கருத்துக்கணிப்பு ஒன்றின்படி, இவர் 25 முதல் 26 சதவீத வாக்குகளை பெற்று தேர்தலின் முதல் சுற்றில் வெற்றி காண்பார் என்றும், சோசலிஸ்ட் கட்சி (PS) உடன் தொடர்புடைய சுயேச்சை வேட்பாளரான இமானுவல் மக்ரோன், 20 முதல் 23 சதவீதம் வரை வாக்குகளைப் பெற்று அவருக்குப் பின்னால் வருவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இது பிரான்சில் சிக்கன நடவடிக்கைகள், போர் மற்றும் அவரசகாலநிலை திணிப்பு ஆகியவற்றால் மேலாதிக்கம் செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி பதவிக்காலத்தின் இறுதி மாதங்களை கழித்துக் கொண்டிருப்பவரான ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சியின் திவால்நிலையினையும் அது பெற்றுள்ள மக்கள் வெறுப்பையும் பிரதிபலிக்கிறது. சோசலிஸ்ட் கட்சியின் முதனிலை தேர்தலில் வெற்றி பெற்றது பெனுவா அமோன் ஆக இருந்தாலும், கட்சியின் பெரும்பகுதி முன்னாள் முதலீட்டு வங்கியாளரான மக்ரோனை ஆதரிக்கும் நிலையில் கட்சி இதுதொடர்பாய் பிளவுபட்டிருக்கிறது.

வலது-சாரி குடியரசுக் கட்சியும் (LR) கூட, அதன் வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன், தனது மனைவிக்கு தனது நாடாளுமன்ற உதவியாளர் என்ற ஒரு கற்பனையான வேலையின் பேரில் 1 மில்லியன் யூரோக்கள் அரசாங்க நிதியை வழங்கியிருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளில் சிக்கியதன் பின்னர், ஒரு ஆழமான நெருக்கடியின் விளிம்பில் நிற்கிறது. பிரான்சில் முதலாளித்துவ ஜனநாயகம் உருக்குலைந்திருப்பதிலும் பிரான்சிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் அரசியல் ஸ்தாபகத்தின் மீது மக்களின் வெறுப்பு பெருகிச் செல்வதிலும் லு பென் தான் ஆதாயமடைந்து கொண்டிருப்பதாய் தென்படுகிறது.

ஹாலண்டின் அரசாங்கத்தில் முன்னாள் பொருளாதார அமைச்சராக இருந்தவரான மக்ரோனும் இந்த இரண்டு கட்சிகளின் நெருக்கடியின் மூலம் ஆதாயமடைந்திருக்கிறார், இரண்டாவது சுற்றில் இவர் லு பென்னைத் தோற்கடிக்கக் கூடும் என்பதாக இப்போது கருத்துக்கணிப்புகள் காட்டுகின்றன. ஆயினும் மக்ரோனது வாக்காளர்களில் வெறும் 36 சதவீதம் பேர் மட்டுமே தமது முடிவில் உறுதியாக இருப்பதாக Ifop இன் ஒரு கருத்துக்கணிப்பு கூறுவதை சுட்டிக்காட்டி, Ifop இன் துணைத் தலைவரான ஃபிரெடரிக் டபி கூறினார்: “2012 முதலாக தேசிய முன்னணி (FN) இன் சீரான வெற்றிகள் தொடர்வதைக் கொண்டு பார்த்தால், இரண்டாவது சுற்றில் மரின் லு பென் வாய்ப்புமிக்க ஒரு வேட்பாளராக இருக்கிறார்.”

அவர் மேலும் கூறினார்: “[மக்ரோன்] மாற்றத்திற்கான எதிர்பார்ப்புகளில் இருந்து ஆதாயம் பெற்றுக் கொண்டிருக்கிறார், பெனுவா அமோன் மற்றும் எல்லாவற்றுக்கும் மேல் ஃபிரான்சுவா ஃபிய்யோன் ஆகிய அரசாங்கக் கட்சிகளின் வேட்பாளர்களது இக்கட்டு நிலையில் இருந்து ஆதாயமடைந்து கொண்டிருக்கிறார், ஆனபோதும் அவருக்கு வாக்களிக்கவிருப்பவர்களின் பகுதி, அவர்களது தெரிவு குறித்து அதிக உறுதி கொண்டிராதவர்களாக, மிகவும் தீர்மானமற்றவர்களாக இருக்கின்றனர்.”

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கானது, அதிலும் குறிப்பாக சோசலிஸ்ட் கட்சி, பாரம்பரியக் கட்சிகளின் பரவலான பிரமைவிலகல் குறித்தும் FN வெற்றிபெறுவதற்கான சாத்தியம் பெருகிவருவது குறித்தும் மிக அதிக கவலை கொண்டிருக்கிறது. வியாழக் கிழமையன்று Le Monde எழுதியது: “சோசலிஸ்ட் கட்சிக்குள்ளாக, பீதி இருக்கிறது. இதற்கு அதிகமான காரணம் அமோன் ஒரு மோசமான வேட்பாளர் என்பதால் அல்ல, மாறாக மரின் லு பென்னை பார்த்து அதிர்ஷ்டம் புன்னகைத்துக் கொண்டிருக்கிறது என்பதால்... மிக முன்னேறிய தொழில்நுட்பத்தின் முன்முனையாக இருக்கும் கல்விபடைத்த மக்களையே கூட ஜனரஞ்சகம் (populism) வெற்றிகாண முடிகிறது என்பதையே அமெரிக்கா போன்ற மிகப் பழைய மற்றும் மிக சக்திவாய்ந்த ஒரு ஜனநாயகத்தின் தலைமையிலேயே உயரடுக்கு-விரோத வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றிருப்பது எடுத்துக்காட்டுகிறது.

ட்ரம்ப்பின் தேர்வானது ஐரோப்பாவில் ஆழமான நிச்சயமின்மையையும் அரசியல் பதட்டங்களையும் ஆழப்படுத்தியிருக்கிறது. லு பென் ட்ரம்ப்பை வழிமொழிந்திருக்கிறார், ட்ரம்ப்பின் நிர்வாகம் FN ஐ ஆதரிக்கிறது, ட்ரம்புக்கு பிரான்சில் மக்கள் வெறுப்பு பெருவாரியாக இருக்கிறது என்றாலும் கூட, இந்த ஆதரவை ஊடகங்களும் அரசியல் வட்டாரங்களும் உதாசீனப்படுத்துகின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தை ஜேர்மனியின் கருவியாக ட்ரம்ப் கண்டனம் செய்ததையும் சென்ற ஆண்டின் பிரெக்ஸிட் வாக்களிப்பை அவர் கொண்டாடியதையும் FN இன் வேலைத்திட்டம் எதிரொலிக்கிறது.

FN தனது வேலைத்திட்டத்தின் முதல் ஷரத்திலேயே, ஐரோப்பிய ஒன்றியத்திலான பிரான்சின் அங்கத்துவம் குறித்து ஒரு கருத்துக்கணிப்புக்கு அழைப்புவிடுக்க உறுதியளித்து, பிரான்ஸ் “நமது சுதந்திரத்தையும் நமது தலைவிதி மீதான கட்டுப்பாட்டையும் மீட்டெடுக்க வேண்டும்” என்று அறிவித்தது. நேட்டோ கூட்டணி “காலாவதி”யானதாக கூறிய ட்ரம்ப்பின் கருத்துக்களை எதிரொலிக்கும் விதமாய், நேட்டோவில் இருந்து விலகப் போவதாகவும், “ஒவ்வொரு பிரிவிலும் ஒரு தன்னாட்சியான பாதுகாப்புத் திறன்” உள்ளிட்ட ஒரு கூடுதல் சுயாதீனமான வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டப் போவதாகவும் FN கூறுகிறது.

லு பென்னின் இராணுவ முன்மொழிவுகளில், தனது பதவிக்காலத்தின் முதல் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக பாதுகாப்பு செலவினத்தை உயர்த்துவது, தனது பதவிக்காலம் முடிவதற்குள் 3 சதவீதமாக அதிகப்படுத்துவது, குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கேனும் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவது, மற்றும் பிரான்சின் அணு ஆயுதத் திறனை புதுப்பிப்பது மற்றும் அதிகரிப்பது ஆகியவையும் அடங்கும்.

இந்த இராணுவமயமாக்கமானது வெளிநாட்டு இலக்குகளை மட்டுமே நோக்கமாய் கொண்டிருக்கவில்லை, மாறாக சொந்த நாட்டில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தையும் இலக்காக கொண்டிருக்கிறது. “15,000 புதிய போலிஸ் அதிகாரிகளை பணியமர்த்துவது மற்றும் அவர்களது ஆயுதங்களை “நவீனப்படுத்துவது” ஆகியவை உள்பட “சட்டம் ஒழுங்குப் படைகளை பாரிய அளவில் மறுஆயுதபாணியாக்குவதற்கு” FN வாக்குறுதியளிக்கிறது. பிரான்சின் முக்கிய நகரங்களது வறுமைப்பட்ட புறநகர் பகுதிகளை குறிவைக்கும் FN இன் வேலைத்திட்டம் “சட்டம் இயங்கமுடியா நிலையிலிருக்கும் மண்டலங்களில் அரசு மீண்டும் கட்டுப்பாட்டை மீட்சி செய்வதற்கு” அழைப்பு விடுக்கிறது.

லு பென், ரஷ்யாவுடன் நெருக்கமான உறவுகளுக்கான தனது விருப்பத்தை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருப்பதோடு, ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய தடைகளை அகற்றுவதற்கும் தொடர்ந்து அழைப்பு விடுத்திருக்கிறார். மாஸ்கோவை நோக்கிய அவரது நோக்குநிலையானது, அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப்பின் பிரச்சாரத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட குற்றச்சாட்டுகளின் பிரதிபலிப்பை போல, பிரெஞ்சு தேர்தலில் மக்ரோனுக்கு எதிராக லு பென்னுக்கு ஆதரவாக தலையீடு செய்வதற்கு கிரெம்ளின் திட்டம் கொண்டிருப்பதாக ஊடகங்களில் ஊர்ஜிதப்படாத குற்றச்சாட்டுகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திலான நெருக்கடிக்கும் ட்ரம்ப்பின் தெரிவுக்கும் எவ்வாறு பதிலிறுப்பு செய்வது என்பது குறித்து ஐரோப்பிய ஆளும் உயரடுக்கில் தீவிரமான பிளவுகள் வெடித்திருக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முழுமையான சிதறலுக்கு கட்டியம் கூறக் கூடிய FN இன் ஜனாதிபதிக்காலம் ஒன்றை, எப்படியேனும் தடுப்பதற்கு பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பல கூறுகளும் முனைப்புடன் இருக்கின்றன.

ஆயினும், லு பென்னின் பிரச்சாரத்தில் பிரதிபலிக்கின்றவாறாய், ஒரு ஒற்றை ஐரோப்பிய நாணயம் பிரான்சுக்கு அனுகூலமற்றது ஜேர்மனிக்கு சாதகமானது என பிரெஞ்சு முதலாளித்துவத்தின் கணிசமான பிரிவுகள் முடிவுக்கு வந்திருக்கின்றன. ஜேர்மனியுடன் ஒப்பிடுகையில் பிரான்சின் பொருளாதார பலவீனம் பெருகிச் செல்வதற்கு முகம்கொடுக்கின்ற நிலையில், அவை, பேர்லினுக்கு நெருக்குதலளிப்பதற்காக ரஷ்யாவுடன், ட்ரம்ப் நிர்வாகத்துடன், அல்லது இரண்டுடனும் கூட்டணி சேருகின்ற ஒரு மூலோபாயத்தை பரிசீலித்துக் கொண்டிருக்கின்றன.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய முதலாளித்துவ ஒழுங்கின் இந்த முறிவானது FNக்கு முதலாளித்துவ அரசியலின் ஒரு மையமான சக்தியாக அபிவிருத்தி காண்பதற்கான ஒரு பாதையைத் திறந்து விட்டிருக்கிறது. 2015 இல் பிரான்சின் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியை பாதுகாத்து பேசியதற்காகவும் யூதப்படுகொலையை குறைத்துக் காட்டியதற்காகவும் அதன் ஸ்தாபகர் ஜோன் மரி லு பென்னை வெளியேற்றியதன் மூலம், FN தனக்கு ஒரு “பிரதான நீரோட்ட” கட்சியாக மறுதோற்றத்தை கொடுக்க முனைந்து வந்திருக்கிறது. மூத்த லு பென்னின் சளைக்காத பிற்போக்குத்தனமான கண்ணோட்டங்கள் FN ஐ ‘இயல்பானதாய்’ ஆக்குவதற்கான அவரது மகளான மரின் லு பென்னின் முயற்சிகளுக்கு இடையூறாக இருந்த நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே இருந்தது, இதற்கு PSம் போலி-இடதுகளும் முடிவில்லாத உதவியை வழங்கியிருக்கின்றன.

குடியுரிமை பறிப்பு என்ற, நாஜி ஆக்கிரமிப்பின் சமயத்தில் வதை முகாம்களுக்கு யூதர்கள் அனுப்பப்பட்ட சமயத்தில் கையிலெடுக்கப்பட்ட ஒரு கோட்பாட்டை, அரசியல்சட்டத்தில் சேர்ப்பதற்கு சோசலிஸ்ட் கட்சி செய்யும் முயற்சிகள் FN இன் அரசியலை சோசலிஸ்ட கட்சி ஏற்றுக் கொண்டிருப்பதையே எடுத்துக்காட்டுகிறது. அத்துடன் சோசலிஸ்ட் கட்சி ஒரு அவசரகாலநிலையை திணித்தது என்பதுடன், கலே (Calais) இல் அகதி முகாமையும் மிருகத்தனமாய் அகற்றியது, அத்துடன் முழு-முக மறைப்பு பர்தாக்கள் மற்றும் முஸ்லீம் “பர்கினி” நீச்சலுடை மீதான தடைகளையும் ஆதரித்தது. பாரிஸில் 2015 நவம்பரில் நடந்த தாக்குதல்களுக்குப் பின்னர், ”தேசிய ஐக்கியம்” என்ற பேரில் ஹாலண்ட் மீண்டும் மீண்டும் மரின் லு பென்னை எலிசே அரண்மனைக்கு அழைத்துப் பேசினார்.

போலி-இடது புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியும் (NPA) தொழிலாளர் போராட்டம் (LO) குழுவும் இதற்கு சளைக்காத ஒரு அசிங்கமான பாத்திரத்தை ஆற்றியிருக்கின்றன. 2012 இல் ஹாலண்டுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்ததன் மூலமும், 2016 தொழிலாளர் சட்டத்தைப் போன்ற சோசலிஸ்ட் கட்சியின் வெறுக்கப்பட்ட கொள்கைகளுக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பை ஒடுக்குவதற்காக தொழிற்சங்கங்களுடன் சேர்ந்து வேலைசெய்ததன் மூலமும், இவை இடதின் பக்கமிருந்து சோசலிஸ்ட் கட்சிக்கு வந்த எதிர்ப்புகளை தடைசெய்து அரசியல் முன்முயற்சியை அதிவலதிடம் ஒப்படைத்தன.

மதச்சார்பின்மையாக்கல் மற்றும் பால் சமநிலை என்ற பேரில், முஸ்லீம் பர்தாக்களுக்கும் பர்கினிக்களுக்குமான தடைக்கு NPA மற்றும் இன்னும் வெளிப்படையாக LO இன் ஆதரவு, லு பென் முஸ்லீம்களுக்கும் புலம்பெயர்ந்தவர்களுக்கும் எதிராக மேலதிக நடவடிக்கைகளை சூத்திரப்படுத்துவதற்கு ஒரு பாதையை திறந்து விடுகிறது. அதன் வேலைத்திட்டத்தில் “பிரான்சை சுதந்திரங்களின் ஒரு நாடாக மீண்டும் ஆக்குவது” என்ற தலைப்பிலான பகுதியில், FN, முஸ்லீம்கள் மீதான மேலதிக தாக்குதல்களுக்கு இதேபோன்ற வாய்வீச்சை பயன்படுத்துகிறது, “இஸ்லாமியத்திற்கு எதிராகப் போராடுவதன் மூலமாக” பெண்களது உரிமைகளை பாதுகாப்பதற்கு அது ஆலோசனை முன்வைக்கிறது.

FN இன் புலம்பெயர்ந்தோர் விரோத செயல்பட்டியல் எல்லைக் கட்டுப்பாடுகளை அதிகரிப்பது, பிரெஞ்சு பிராந்தியத்தில் வெளிநாட்டு பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு பிரெஞ்சுக் குடியுரிமையை அகற்றுவது, சட்டவிரோதமாய் புலம்பெயர்ந்தோர் இயல்பான பிரெஞ்சு குடிமக்களாக ஆவதை சாத்தியமற்றதாக்குவது, அவர்களை சொந்த நாட்டிற்கு திருப்பியனுப்பும் நிகழ்முறையை எளிமைப்படுத்துவது ஆகியவை இடம்பெற்றுள்ளன.