ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The popular movement against Trump vs. the corporate media’s anti-Russia witch-hunt

ட்ரம்ப்க்கு எதிரான மக்கள் இயக்கத்திற்கு எதிராக, பெருநிறுவன ஊடகங்களின் ரஷ்ய-விரோத வேட்டையாடல்

Andre Damon
18 February 2017

டொனால்ட் ட்ரம்பின் அசாதாரண பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஒரு நாளைக்குப் பின்னர், அமெரிக்க அரசுக்குள் நடக்கும் சண்டை வெறுமனே இன்னும் அதிகமாகவே வளர்ந்தது. பெருநிறுவன ஊடகங்கள், ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஒரு பிரிவானது மத்திய உளவுத்துறையின் (CIA) ஊதுகுழலாக சேவையாற்றுகின்ற நிலையில், இந்த மோதல், அமெரிக்காவின் அதிதீவிர வலது ஜனாதிபதியை இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் சக்தி வாய்ந்த பிரிவுகளுக்கு எதிராக நிறுத்துகிறது.

வெளியுறவு கொள்கை மற்றும் போர் குறித்த பிரச்சினைகளை மையத்தில் கொண்டுள்ள இந்த மோதலில் முற்போக்கானரீதியில் எந்த கன்னையும் கிடையாது. ட்ரம்ப், நிதியியல் தன்னலக் குழுவின் ஓர் இழிவார்ந்த பிரதிநிதியாவார். அவர் அவரது நிர்வாகத்தை தலைமை செயலதிகாரிகள் மற்றும் பில்லியனர்களைக் கொண்டும், அவர்களோடு முன்னாள் தளபதிகள், சமூக பிற்போக்குவாதிகள் மற்றும் அப்பட்டமான பாசிசவாதிகளைக் கொண்டும் நிரப்பி உள்ளார். அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தில் உள்ள அவர் எதிர்ப்பாளர்களும், ஜனநாயக கோட்பாடுகளால் உந்தப்பட்டவர்கள் அல்ல, மாறாக உளவுத்துறை ஸ்தாபகத்தால் ஆதரிக்கப்படுகின்ற மற்றும் முந்தைய நிர்வாகம் பின்பற்றிய ரஷ்யாவை நோக்கிய ஆக்ரோஷமான, இராணுவவாத கொள்கையிலிருந்து ட்ரம்ப் விலகி செல்கிறாரே என்ற கவலைகளால் உந்தப்பட்டுள்ளனர்.

வெள்ளியன்று ட்ரம்ப் ட்வீட்டரில், “ஊடகம்… எனது எதிரியல்ல, அது அமெரிக்க மக்களின் எதிரி!” என்று அறிவித்து, ஊடகங்கள் மீதான அவர் கண்டனங்களை இரட்டிப்பாக்கினார். அவர் நியூ யோர்க் டைம்ஸ், சிஎன்என் மற்றும் பிரதான செய்தி ஒளிபரப்பு வலையமைப்புகளைச் சுட்டிக் காட்டினார்.

ஊடகங்கள், அவற்றின் பங்கிற்கு, அவரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின், முகவர் இல்லை என்றாலும், ஒரு கூட்டாளி என்று முத்திரை குத்தி, புதிய ஜனாதிபதிக்கு எதிரான அவற்றின் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தின. அதனுடன் மெக்கார்த்தியிச துர்நாற்றத்தைக் கொண்டிருக்கும் இந்நடவடிக்கையின் தர்க்கம், போராகும். நோரிகா, மிலொசெவிக், சதாம் உசேன், கடாபி மற்றும் அசாத் ஆகியோருக்கு எதிரான ஊடக செயல்பாடுகளைப் போலவே, ஊடகங்கள் புட்டினைப் பூதாகரமாக்கி காட்டுவது இராணுவ தாக்குதலுக்கான ஒரு தயாரிப்பாகும் —இந்த தடவை இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய அணுஆயுத நாட்டுக்கு எதிராக நடக்கிறது.

அவரது சொந்த கன்னையின் பொருட்டு, ட்ரம்ப், ஊடகங்களை பொய்யர்கள் என்றும், உளவுத்துறை முகமைகளின் அருவருக்கத்தக்க உத்திகளுக்கான வடிகால்கள் என்றும் கண்டித்து, அந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஓர் உண்மையைத் தான் வெளியிட்டார்.

ஜனநாயகக் கட்சியின் நடைமுறையளவிலான அங்கமாக பாத்திரம் வகித்து வந்துள்ள நியூ யோர்க் டைம்ஸின் தலையங்க பக்கங்களில் சரமாரியான பிரச்சாரம் வெளியானது. வெள்ளிக்கிழமை பதிப்பில் பிரசுரிக்கப்பட்ட முதன்மை தலையங்கம் மற்றும் ஏழு கருத்துரை கட்டுரைகளில் நான்கு, ட்ரம்பை ஒரு ரஷ்ய உளவாளியாக சித்தரிக்க அர்ப்பணிக்கப்பட்டிருந்தன.

“சிறப்பு வழக்கறிஞரைக் கொண்டு வாருங்கள்" என்ற தலையங்கம், மஞ்சள் பத்திரிகையியலுக்கான மற்றும் தனிமனிதவியல்பைச் சிதைப்பதற்கான ஒரு பாடப்புத்தக முன்னுதாரணமாகும். அது, ஆதாரமற்ற குற்றச்சாட்டை விவாதத்திற்கிடமற்ற உண்மையாக எடுத்துக்காட்டுவதற்கு காலங்கடந்தும் நிலைத்திருக்கும் அணுகுமுறையைக் கையாள்கிறது. அதற்காக அது இவ்வாறு தொடங்குகிறது, “ரஷ்ய அரசாங்கத்துடன் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடர்புகள் குறித்து புலனாய்வு மேற்கொள்ளலாமா வேண்டாமா என்பதல்ல பிரச்சினை…"

என்ன தொடர்புகள்? எதுவுமே நிரூபிக்கப்படவில்லை, நிச்சயமாக டைம்ஸால் நிரூபிக்கப்படவே கிடையாது. இருந்தாலும் இது, சர்ச்சைக்கிடமற்ற உண்மைகளாக அதன் குற்றச்சாட்டுக்களைக் கையாள்வதிலிருந்து அப்பத்திரிகையை தடுத்துவிடவில்லை.

பின்னர் அந்த தலையங்கம், "ட்ரம்ப் பிரச்சாரக்குழுவின் உள்வட்டார அங்கத்தவர்கள் கடந்த ஆண்டு ரஷ்ய உளவுத்துறை முகவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர்…" என்று மேற்கோளிடுகிறது. ஆனால் டைம்ஸ் மேற்கோளிட்ட அந்த "செய்தி" செவ்வாயன்று வெளியான அதன் சொந்த முதல் பக்க கட்டுரையில் உள்ளது, அதில் எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை என்பதோடு, மாறாக பெயர் வெளியிடாமல் “நான்கு தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிகாரிகள்" கூறிய குற்றச்சாட்டுக்களைச் சார்ந்திருந்தது.

“திரு. ட்ரம்ப் உடனிருப்பவர்கள்… ரஷ்யாவில் வியாபாரம் செய்துள்ளனர்,” அங்கே "அமெரிக்க வணிகர்கள், சிலவேளைகளில் அவர்களை அறியாமலேயே கூட, வெளிநாட்டு உளவுத்துறை அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பது வழமையில் இல்லாத ஒன்றல்ல" என்ற ஒப்புதல் போன்றவற்றை, முன்னெச்சரிக்கையோடு அதன் "செய்தியில்" இருந்து மறைத்துவிட டைம்ஸ் கடமைப்பட்டிருப்பதாகவும் கூட உணர்ந்தது.

"அந்நாட்டுடன் [அதாவது ரஷ்யாவுடன்] மற்றும் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு கையாளாக திரு. ட்ரம்பின் விவரிக்கவியலாத விசுவாசம்" "பிரதான கவலைக்குரியது" என்று முடிவு செய்வதற்கே அத்தலையங்கத்தை இந்த "உண்மைகள்" இட்டு சென்றன.

இது மெக்கார்த்தியிசத்தின் வழமையான ஒன்று தான். அப்பத்திரிகை உண்மையைக் குறித்து அக்கறை கொள்ளவில்லை, மாறாக ரஷ்யாவிற்கு எதிரான பிரச்சாரத்துடன் சம்பந்தப்பட்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முறையீடுகள் மீது அக்கறை கொண்டுள்ளது.

இந்த முதன்மை தலையங்கத்துடன் சேர்ந்து மற்றொரு வலதுசாரி ட்ரம்ப் விரோத விஷம பிரச்சார கட்டுரையும் வந்திருந்தது, இதை "இடது" பொருளாதார நிபுணரும் மற்றும் ஒபாமா/கிளிண்டன் அனுதாபியுமான பௌல் க்ரூக்மன் எழுதியிருந்தார். “ஊடுருவல்காரர்களின் மௌனம்" என்று தலைப்பிடப்பட்ட ஒரு சுய-தலையங்கத்தில், அவர் அறிவிக்கையில், “ஒரு அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரின் சார்பாக ஒரு வெளிநாட்டு சர்வாதிகாரி தலையிட்டார்—அதனால் அந்த வேட்பாளர் வென்றார்,” என்று அறிவித்தார். “அப்பிரச்சாரத்தின் போது அந்த சர்வாதிகாரியின் உளவுத்துறை அதிகாரிகளோடு புதிய ஜனாதிபதியின் உடனிருந்தவர்கள் தொடர்பில் இருந்தனர்,” மற்றும் "அந்த ஜனாதிபதி அந்த சர்வாதிகாரியின் நலன்கள் மீது கருத்து முரண்பாடின்றி அக்கறை கொண்டிருந்தார்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொள்கிறார்.

புட்டினை ஒரு "சர்வாதிகாரியாக" வர்ணிப்பது மோசடியாகும். அவர் ரஷ்ய செல்வந்த தன்னலக் குழுவின் ஒரு வலதுசாரி தேசியவாத மற்றும் ஏதேச்சதிகார பிரதிநிதியாவார். எவ்வாறிருப்பினும் கிழக்கு ஐரோப்பாவில் அமெரிக்காவின் வலிய தாக்குதல் மீதிருந்த கோபத்தை மூலதனமாக்கி ஆதரவை வென்று, அவர் பல தேர்தல்களை வென்றுள்ளார். “சர்வாதிகாரி" (மற்றும் தலையங்கத்தில் “கையாள்”) என்ற பதத்தைப் பிரயோகிப்பது, ஆட்சி மாற்றத்திற்கான மற்றொரு போருக்கு சித்தாந்தரீதியிலான நியாயப்பாட்டை உருவாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

புட்டின், ரஷ்யாவில் முதலாளித்துவ மீட்சியின் விளைபொருளாவார்—இதை டைம்ஸூம், அமெரிக்க ஆளும் வர்க்கமும் உற்சாகத்தோடு ஆதரித்தன—அது ரஷ்ய தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்டிருந்தது. 1993 இல், 2,000 உயிர்களைப் பலியாக எடுத்து, ரஷ்ய நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது போரீஸ் யெல்ஸ்டீன் குண்டு வீசியதற்கு டைம்ஸால் அதன் உற்சாகத்தை மூடிமறைக்க முடியவில்லை. தேசியமயப்பட்ட தொழில்துறையைக் கலைக்கவும் மற்றும் சமூக நல வலையமைப்பை அழிக்கவும் அப்போது "அதிர்ச்சி வைத்தியம்" நடைமுறைப்படுத்துவதற்கு யெல்ஸ்டீன் சிறந்த கருவியாக கருதப்பட்டதால், அப்போது எந்த ஜனநாயக வேஷங்களும் அவசியப்படவில்லை.

இந்த வரலாற்றில் எதுவுமே பௌல் "மெக்கார்த்தி" க்ரூக்மனுக்கு முக்கியமானதாக இல்லை. “[ட்ரம்ப்] பதவியேற்றதற்குப் பின்னர் [ஒ]ன்றுமே செய்யவில்லை என்பது நடைமுறையில் அவர் புட்டினின் ஒரு கைப்பாவை என்ற அச்சங்களையே கொண்டு வருகிறது. இதுபோன்றவொரு மறைப்பில் இருக்கும் ஒரு தலைவரால் எவ்வாறு அமெரிக்க சிப்பாய்களை உயிர்தியாகம் செய்ய அனுப்ப முடியும்?” என்று அவர் எழுதிய போது, ட்ரம்ப் மீதான அவர் விமர்சனங்களில் விரவியுள்ள போர்-சார்பு மனோபாவங்களையே அவர் வெளிப்படுத்துகிறார்.

டைம்ஸ் மற்றும் ஏனைய செய்தி நிறுவனங்களின் செய்திகளில், பெயர் வெளியிடாத உளவுதுறை முகவர்களின் அறிவிப்புகள் சற்றேனும் ஐயுறவாதத்துடன் கையாளப்பட வேண்டும் என்று துணுக்களவு கூட அங்கே குறிப்புகள் கிடையாது. பாரிய பேரழிவுகரமான ஈராக்கிய ஆயுதங்கள் குறித்த சிஐஏ இன் பொய்கள் (இதை ஊக்குவிக்க டைம்ஸ் உதவியது) ஒருபோதும் நடந்திருக்கவே இல்லை என்ற போதினும் கூட இது இவ்வாறு உள்ளது.

இடது-தாராளவாத புத்திஜீவிகளுக்குள் என்ன சென்று கொண்டிருக்கிறதோ, அவர்களது புத்திஜீவிய, அரசியல் மற்றும் தார்மீக மோசடிக்கு க்ரூக்மன் எடுத்துக்காட்டாக விளங்குகிறார். க்ரூக்மன் எந்தவொரு தனிச்சலுகை கொண்ட சமூக அடுக்கிற்காக பேசுகிறாரோ, அது பங்குச்சந்தையின் ஒரேசீரான உயர்வோடு அவற்றின் வருவாய் உயர்வைக் கண்டுள்ளது, அதேவேளையில் தொழிலாளர்களின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன. அவர்கள் ஏகாதிபத்தியம், முதலாளித்துவ அரசு மற்றும் தேசிய உளவுத்துறையின் பகிரங்கமான ஆதரவாளர்களாக மாறியுள்ளனர். ட்ரம்பை "ரஷ்யாவிற்கான தேசதுரோகி" என்று குறிப்பிட்ட மைக்கெல் மூரே இல் இருந்து, தங்களின் சொந்த புட்டின்-விரோத அறிக்கைகளை வெளியிட்ட பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் எலிசபெத் வாரென் வரையில், உத்தியோகப்பூர்வ "இடது" ஒட்டுமொத்தமும், ரஷ்ய-விரோத பிரச்சாரத்தில் பதிவு செய்துள்ளன.

பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ட்ரம்பின் பிற்போக்குத்தனமான ஜனநாயக விரோத கொள்கைகளுக்கு நிலவும் எதிர்ப்புக்கும், உளவுத்துறை முகமைகள் மற்றும் ஜனநாயக கட்சி மற்றும் ஊடகங்களில் உள்ள அவர்களது பிரதிநிதிகளின் வலதுசாரி போர்-சார்பு திட்டநிரலுக்கும் இடையே ஒரு இணைக்கவியலாத இடைவெளி நிலவுகிறது.

ட்ரம்ப் விமர்சகர்களின் கூட்டம், மக்கள் நனவிற்குள் இராணுவவாத நுண்கிருமியைச் செலுத்தவும், ஒரு வெகுஜன இயக்கத்தைப் பிற்போக்குத்தனமான முடிவுகளுக்குக் கொண்டு செல்லவும் அவர்களால் ஆனமட்டும் அனைத்தும் செய்து வருகின்றனர்.

ஜனநாயக கட்சியுடன் தெளிவாக மற்றும் சிறிதும் விட்டுக்கொடுப்பின்றி உடைத்துக் கொள்வது தான், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான போராட்டத்தின் முக்கிய பணியாகும். இப்போராட்டம், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சளைக்காத எதிர்ப்புடன் ஒரு சோசலிச அரசியல் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் சமூகத்தின் உண்மையான முற்போக்கு கூறுபாடுகள் அனைத்தையும் அதன் பின்னால் அணிதிரட்டி, தொழிலாள வர்க்கத்தின் அடித்தளத்தில் அமைந்திருக்க வேண்டும்.