ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The mass protests against Trump and the role of the Democratic Party

ட்ரம்ப்புக்கு எதிரான வெகுஜனப் போராட்டங்களும் ஜனநாயகக் கட்சியின் பாத்திரமும்

By Bill Van Auken
1 February 2017

அமெரிக்க இராணுவத்தால் சிதைக்கப்பட்ட முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதைத் தடைசெய்கின்ற மற்றும் உலகெங்கிலும் இருந்து வரும் அகதிகளை தடுத்துநிறுத்துகின்ற ட்ரம்ப் நிர்வாகத்தின் கொடூரமான மற்றும் சட்டத்திற்கு புறம்பான நிர்வாக உத்தரவுக்கு எதிராக, செவ்வாய்கிழமையன்று, நான்காம் நாளாக போராட்டங்கள் தொடர்ந்தன.

இந்த அரக்கத்தனமான நடவடிக்கையை எதிர்த்தும் அடிப்படை ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாத்தும் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் நூறாயிரக்கணக்கிலான மக்கள் விமான நிலையங்களிலும் மற்றும் நகர மையங்களிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் அமெரிக்க வரலாற்றின் மிகவும் அதி-வலது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததற்கு பதிலிறுப்பாய் எழுந்து கொண்டிருக்கின்ற அரசியல் தீவிரப்படலின் பகுதியாகும். 16 வருட காலமாக, ஒரேபோல ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இருகட்சி நிர்வாகங்களின் கீழும், முடிவற்ற “பயங்கரவாதத்தின் மீதான போர்” நடத்தப்பட்டு வந்திருந்ததன் பின்னர், ஏகாதிபத்திய மூர்க்கத்தனத்தையும் போர்க் குற்றங்களையும் நியாயப்படுத்துவதற்காக ஊக்குவிக்கப்பட்டு வந்த முஸ்லீம்-விரோத பேரினவாதத்தையும் மற்றும் இராணுவவாதத்தையும் வெகுஜனங்கள் நிராகரித்திருக்கின்றனர் என்பதையே இந்த போராட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

தங்களது வீடுகள், குடும்பங்கள் மற்றும் வேலைகளுக்குத் திரும்புவதில் இருந்து திடீரென்று பலவந்தமாக தடுக்கப்பட்டிருப்பதைக் காண்கிற ஆண், பெண், குழந்தைகள் மீது தொடுக்கப்பட்ட மிருகத்தனத்தைக் கண்டு மில்லியன் கணக்கான மக்கள் கொதிப்படைந்துள்ளனர்.

பராக் ஒபாமா மற்றும் செனட் சிறுபான்மை தலைவரான சார்ல்ஸ் சூமர் போன்ற ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் அரசியல்ரீதியாக ஆபத்தில்லாத பாதைகளில் தங்களை நிறுத்திக் கொள்கின்ற முயற்சியில் ஆர்ப்பாட்டங்களுடன் தங்களை தொடர்புபடுத்திக் கொள்கின்றனர். ஆயினும், ஆர்ப்பாட்டங்களுக்கு உயிர்கொடுத்து வருகின்ற மனிதாபிமான மற்றும் ஜனநாயக மனோநிலைகளுக்கும், ட்ரம்ப் நிர்வாகத்திற்கு ஜனநாயகக் கட்சி அளிக்கும் பதிலிறுப்பின் கீழமைந்திருக்கும் அடிப்படையாய் பிற்போக்குத்தனமான நோக்கங்களுக்கும் இடையில் ஒரு மாபெரும் பிளவு அமைந்திருக்கிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜனநாயகக் கட்சியினரும் அவர்களது வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவு வளாகத்தின் தரப்பாய் நின்று, ட்ரம்ப்பின் மீதான தங்களது விமர்சனத்தை அவர் ரஷ்யா விடயத்தில் “மென்மையாக” நடந்து கொள்வதாக சொல்லப்படுவதன் மீது குவித்தனர். ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அரசாங்கம் ட்ரம்ப்புக்கு ஆதரவான விதத்தில் அமெரிக்க தேர்தலில் தலையீடு செய்ததாக, எந்த ஆதாரத்தையும் வழங்காமல், ஒரு நவ-மெக்கார்த்திய பிரச்சாரத்தை அவர்கள் தொடக்கினர். இந்த பிற்போக்குத்தனமான கருப்பொருளும், அடையாள அரசியலை ஊக்குவித்த அதேநேரத்தில் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்கும் கவலைகளுக்கும் காட்டிய அக்கறையின்மையும் சேர்ந்து, ட்ரம்ப்பினை ஸ்தாபகத்தின் எதிரியாக வாய்வீச்சுடன் காட்டிக்கொள்வதற்கு வழியமைத்து தந்தது. 

பாரிய புலம்பெயர்-விரோத வலைவீச்சின் அச்சுறுத்தல், முஸ்லீம்களுக்குத் தடை, வம்பிழுப்பான போர் அச்சுறுத்தல்கள் மற்றும் சித்திரவதையை ட்ரம்ப் வெளிப்டையாக ஊக்குவித்தமை ஆகியவற்றின் காரணத்தால் ட்ரம்ப் பதவிக்காலத்தின் முதல் பத்துநாட்கள் மக்கள் கோபத்தையும் வெறுப்பையும் தட்டியெழுப்பியிருக்கின்ற அதேநேரத்தில், ஜனநாயகக் கட்சியினர் எவ்விதத்திலும் தமது தேர்தல் பிரச்சாரத்தின் பிற்போக்குத்தனமான அம்சங்களை கைவிட்டிருக்கவில்லை.

ஹிலாரி கிளிண்டனை நிபந்தனையில்லாமல் ஆதரித்த பொருளாதார நிபுணரும் நியூயோர்க் டைம்ஸ் பத்தியாளருமான போல் கிரக்மேன் தனது சமீபத்திய பத்தியை இவ்வாறாய் தொடங்குகிறார்: “ட்ரம்ப்-புட்டின் ஆட்சி தொடங்கி ஒரு வாரத்திற்கும் மேலான காலம் தான் ஆகியிருக்கிறது, அதன் நாசங்களை முழுமையாக பின்பற்ற இயலுவது அதற்குள்ளாகவே சிரமமாகிக் கொண்டிருக்கிறது.”

ஜனநாயகக் கட்சியினருக்கும் ட்ரம்புக்கும் இடையிலான வித்தியாசங்கள் மாறுபட்ட வர்க்க நலன்களை பிரதிபலிக்கவில்லை —இரண்டுமே ஒரே ஆளும் சிலவரணியையே பிரதிநிதித்துவம் செய்கின்றன— அல்லது அவை ஜனநாயகக் கோட்பாடுகள் சம்பந்தப்பட்டவையும் அல்ல. மாறாக, அவை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்கான கொள்கைகளை அமல்படுத்துவதை மையமாகக் கொண்டவையாகும். அவர்களை பொறுத்தவரை, ட்ரம்ப்பால் பின்பற்றப்படுகின்ற முஸ்லீம்களுக்கான தடையும் மற்ற பிற கொள்கைகளும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான மோதலுக்கான தயாரிப்புகளையும் மத்திய கிழக்கில் நடந்து வருகின்ற அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளையும் எங்ஙனம் பாதிக்கும் என்பதே அதிகமான கவலையாக இருக்கிறது.

“சீனாவை மீண்டும் மகத்தானதாக்குங்கள்” என்ற தலைப்பில் ியூ யோர்க் டைம்ஸில் பத்தியாளரான டேவிட் லியோன்ஹார்ட் எழுதி வெளியாகியிருக்கும் ஒரு பத்தியில் இது தெளிவாக விளங்கப்படுகிறது. ஒட்டுமொத்த பத்தியின் தொனியும் “அமெரிக்காவின் போட்டியாளர்களும் எதிரிகளும் மிக நல்ல 10 நாட்களை அனுபவித்திருக்கிறார்கள்” என்று தொடங்கும் முதல் வாக்கியத்தினால் அமைவு செய்யப்பட்டு விடுகிறது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தரப்பைச் சேர்ந்தவராக சளைப்பின்றி எழுதுகின்ற லியோன்ஹார்ட், முஸ்லீம்கள் மீதான தடையை ISIS சுரண்டிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை என்ற அதேநேரத்தில் அது “அமெரிக்காவுக்கான ஒரு முக்கியமான எதிரியல்ல. அதற்குப் பதிலாய், இறுதியில் ஆதாயமடைவதாக இருப்பது அமெரிக்காவின் மிகப்பெரும் உலகப் போட்டியாளரான, சீனாவே” என்று எச்சரிக்கச் செல்கிறார்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் நிர்வாக உத்தரவை சவால் செய்வதற்காக முன்கொண்டுவரப்பட்டவர்களில், அகதிகள் மற்றும் முஸ்லீம் புலம்பெயர்ந்தவர்களுக்கான நலம்விரும்பியாக கூறிக் கொள்ள முடியாத, சிஐஏ இன் முன்னாள் செயல் இயக்குநர் மைக்கேல் மோரல்லும் இருக்கிறார். ஹிலாரி கிளிண்டனின் ஆதரவாளரான இவர், அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததாக சொல்லப்பட்டதன் மீது கண்டனம் செய்வதிலும் புட்டினின் முகவராக ட்ரம்ப்பை சித்தரிப்பதிலும் மிகவும் மும்முரமானவர்களில் ஒருவராய் இருந்தவராவார்.

தான் மேற்பார்வை செய்து வந்திருக்கக் கூடிய சித்திரவதை மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலமான படுகொலைகள் ஆகியவற்றை பகிரங்கமாகவே பாதுகாத்துப் பேசி வந்திருக்கும் மோரல், லிபியாவிலும் சிரியாவிலும் சிஐஏ ஏற்பாடு செய்த ஆட்சிமாற்றத்திற்கான போர்களின் மூலமாய் மில்லியன் கணக்கான மக்களை அகதிகளாக்குவதிலும் நூறாயிரக்கணக்கானோரது உயிரிழப்பிலும் வகித்த பாத்திரமும் சிறியதல்ல. திங்களன்று CBS News’ அதிகாலை நிகழ்ச்சியில் நேர்காணல் செய்யப்பட்டபோது, ட்ரம்ப்பின் தடையை, ஜனநாயக உரிமைகளை கழுத்து நெரிப்பதற்காக அவர் கண்டனம் செய்யவில்லை, மாறாக அது “ISIS இன் விவரிப்பை சரியாக்கி விடும்”, அதாவது, எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கில் இராணுவ வன்முறையின் மூலமாக அமைதியை நிலைநாட்டும் அமெரிக்க முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கும், என்பதற்காக கண்டனம் செய்தார்.

அமெரிக்க இராணுவத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்த ஈராக்கியர்களையும் பயணத் தடையில் இடம்பெறச் செய்திருப்பது மோரல்லின் பிரதான கவலைகளில் இடம்பிடித்திருந்தது, “அமெரிக்க இராணுவத்துடன் நெருக்கமாக வேலைசெய்த மக்களுக்கு ஒரு ஊக்கம்குன்றலை” இது உருவாக்கும் என்றார் அவர்.

தேசிய பாதுகாப்பு அவையின் (NSC) பிரதானிகள் குழுவுக்கு தனது “தலைமை மூலோபாயவாதி”யான Breitbart News இன் முன்னாள் தலைவர் ஸ்டீபன் பானன் பெயரை பரிந்துரைத்து, கூட்டுப்படைத் தலைவர் மற்றும் தேசிய உளவு இயக்குநர் ஆகியோரது பங்கேற்பை வரம்புபடுத்தி ட்ரம்ப் விடுத்திருக்கும் நிர்வாக உத்தரவுக்கும் மோரல் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

ைம்ஸும் கூட தனது செவ்வாய் தலையங்கத்தில், இதே கருப்பொருளையே இசைத்தது. “ஜனாதிபதி பானன்” என்ற தலைப்பில் பானனின் பாதி முகத்தை ட்ரம்ப்பின் முகத்தின் மேல் ஒட்டி அபாய உருவாகத் தோற்றம் தரக் கூடிய ஒரு படத்துடன் வெளியாகியிருந்த இந்த தலையங்கமானது, பானன் NSCக்கு நியமனம் செய்யப்படுவது தேசியப் பாதுகாப்பை ”அரசியல்மயமாக்கி” இராணுவ மற்றும் உளவு எந்திரத்தின் அதிகாரத்தைக் குன்றச் செய்து விடும் அபாயத்திற்கு ஆட்சேபித்த அளவிற்கு ட்ரம்ப்பின் வெள்ளை மாளிகை மூலோபாயவாதியாக அவரது பாசிச அரசியல் குறித்து ஆட்சேபிக்கவில்லை.

அந்தத் தலையங்கம் இவ்வாறு நிறைவுறுகிறது: “கற்பனை செய்து பாருங்கள், நாளை தென் சீனக் கடலில் சீனா சம்பந்தப்பட்ட அல்லது உக்ரைனில் ரஷ்யா சம்பந்தப்பட்ட ஒரு நெருக்கடிக்கு திரு.ட்ரம்ப் முகம்கொடுக்கிறார் என்றால், அவர், விடயங்களை வெடிப்பு காணச் செய்யும் ஆர்வத்துடன் இருக்கும் தனது தலைமை அரசியல் ஆத்திரமூட்டலாளரான, திரு.பானனை நோக்கித் திரும்புவாரா, அல்லது இறுதியில் ஆலோசனைக்காக பாதுகாப்புச் செயலர் ஜிம் மாட்டிஸ் மற்றும் ஜெனரல் டன்போர்டு போன்ற தனது நிர்வாகத்தில் இருக்கும் ஒருசில சிந்தனையும் அனுபவமும் மிக்க கரங்களை நோக்கி திரும்புவாரா?”

ஒபாமா நிர்வாகத்தின் கீழ் துவக்கமளிக்கப்பட்டதான ரஷ்யா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளுக்கும் எதிரான இராணுவ மிரட்டல்களின் தீவிரப்படுத்தலுக்கு இடையூறு நேரலாம் என்பதே இந்த இடத்தில் அதன் பிரதான கவலையாக இருக்கிறது. இந்த விவகாரங்கள் பென்டகன் மற்றும் சிஐஏவின் “அனுபவம்வாய்ந்த கரங்களில்” தொடர்ந்து இருக்க வேண்டும் என்று டைம்ஸ் வாதிடுகிறது.

இந்த வரிசையிலான மிகவும் வெளிப்படையான வாசகங்கள் அட்லாண்டிக் இதழில் “ட்ரம்ப்பின் ஜெனரல்கள் ஜனநாயக ஸ்தாபனங்களின் மீதான பாதுகாப்பையா முன்வைக்கிறார்கள்?” என்ற தலைப்பில் செவ்வாயன்று பதிவிடப்பட்ட ஒரு வருணனையில் இடம்பெற்றிருக்கின்றன. பாதுகாப்புச் செயலர் மற்றும் தாயகப் பாதுகாப்புச் செயலர் பதவிகளுக்கும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் பதவிக்கும் முன்னாள்-இராணுவத் தளபதிகளை ட்ரம்ப் பரிந்துரைத்த போது, “பதக்கமணிந்தவர்கள் அதிகமாயிருப்பது என்பது அமெரிக்க அரசாங்கத்தின் அடையாளமுத்திரையாக இருக்கக் கூடிய ஈர்ப்புமிக்க குடிமக்கள் கட்டுப்பாடு என்ற அம்சத்தை பலவீனப்படுத்தி விடும் என்று... சில முற்போக்குவாதிகள் கவலை கொண்டனர்” என்று அது குறிப்பிடுகிறது.

அந்தக் கட்டுரை கூறுகிறது, அதற்கு மாறாய், “இந்த தளபதிகள் ட்ரம்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கு சேவை செய்ய முடியும்”, இராணுவத் தளபதிகளுக்கு “சட்டம் குறித்தும் தங்கள் கடமைகள் குறித்தும் நன்கு தெரியும்” என்பதோடு அவர்கள் “விதிகளையும் நடைமுறைகளையும் பின்பற்றுவதிலும், அத்துடன் ஒரு ஒழுங்கு உணர்வைக் கொண்டுவருவதிலும் ஆழமான அக்கறையுடையவர்கள்” என்று அது மேலும் சேர்த்துக் கொள்கிறது.

இந்தக் கட்டுரை ஏற்புடன் குறிப்பிடுகிறது, “இராணுவத் தளபதிகள், பல்வேறு வடிவங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை உஷார்நிலையில் வைத்திருக்கும் பாத்திரத்தை வகிப்பதென்பது கேள்விப்படாத ஒன்றல்லவே. துருக்கியில், இராணுவமானது மதச்சார்பற்ற நிர்ணயங்களின் பாதுகாவலனாக தன்னைப் பார்க்க முனைந்து வந்திருக்கிறது, குடிமக்களது அரசாங்கங்கள் தேசியக் கோட்பாடுகளில் இருந்து விலகி விட்டதாக தளபதிகள் உணர்கின்ற சமயத்தில் அவற்றைக் கவிழ்ப்பதற்கு அது தொடர்ந்து தலையீடு செய்து வந்திருக்கிறது.”

தான் பிடிபடும் வகையில் இந்தக் கட்டுரை ஆசிரியர் மேலும் கூறுகிறார்: “ட்ரம்ப் சட்டமுறையற்று செயல்படுவதாக ஒருவர் கருதினால், ஒரு ஆட்சிக்கவிழ்ப்பும் கூட சட்டமுறையற்றது தானே. வேறு சிறந்த தெரிவு இல்லை.”

இராணுவத்தின் ஆட்சியை ட்ரம்ப்பின் ஆட்சிக்கான மாற்றாக முன்வைக்கும் நிலை தான் ஜனநாயகக் கட்சியின் கொள்கைகளின் மற்றும் பல தசாப்த கால போர் மற்றும் விரிந்து செல்லும் சமூக அசமத்துவத்தின் பளுவின் கீழ் அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவின் தர்க்கமாய் இருக்கிறது.

அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடியானது தொழிலாள வர்க்கத்தை போர் மற்றும் சர்வாதிகாரத்தின் மரணகரமான அபாயங்களுடன் எதிர்கொண்டிருக்கிறது. தொழிலாள வர்க்கம் ஜனநாயகக் கட்சியுடனான திரும்பவியலாத ஒரு முறிவின் மூலமும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு அரசியல் போராட்டத்தில் தனது சுயாதீனமான வலிமையை அணிதிரட்டுவதன் மூலமும் மட்டுமே தனது அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளை அது பாதுகாத்துக் கொள்ள முடியும்.