ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Trump press conference: A ferocious conflict within the ruling elite

ட்ரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பு: ஆளும் உயரடுக்கிற்குள் ஒரு மூர்க்கமான மோதல்

Patrick Martin
17 February 2017

வியாழனன்று மதியம் டொனால்ட் ட்ரம்ப் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு அசாதாரணமானதும், முன்னொருபோதும் இல்லாததுமாகும். அமெரிக்க ஜனாதிபதி இதழாளர்களை அவமதிக்க சென்றதோடு, மற்றொருவிதத்தில் ஊடகங்களில் உள்ள அவரது நிரந்தர எதிரிகளுடன் ஒரு கடுமையான மோதலில் ஈடுபட்ட நிலையில், 75 நிமிடங்களுக்கும் அதிகமாக நடந்த அந்த நிகழ்வு ஒரு மிகையதார்த்த (surreal) குணாம்சத்தை எடுத்தது. இதற்கு முன்னர் நவீன அமெரிக்க வரலாறு கண்டுள்ள எதனோடும், வாட்டர்கேட் நெருக்கடியில் உச்சத்தில் நடந்ததைக் கூட, இதனோடு ஒப்பிட முடியாது.

இத்தகையவொரு காட்சிப்படுத்தலை காண்கையில், பகுத்தறிவார்ந்த உள்ளடக்கத்தை, அடித்தளத்திலிருக்கும் அரசியல் இயக்கவியலை வெளிப்படுத்திக் காட்ட வேண்டியது எப்போதும் அவசியமாகிவிடுகிறது. அமெரிக்கா போரை நோக்கி விரைந்து கொண்டிருக்கையில், இவ்விடயத்தில், பத்திரிகையாளர் சந்திப்பானது வெளியுறவு கொள்கை மீதான அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள் நடக்கும் ஒரு வக்கிரமான மோதலைக்கு வெளிப்பாட்டைக் கொடுத்தது.

இந்த பத்திரிகையாளர் சந்திப்பு ஆரம்பத்தில் ட்ரம்பின் புதிய தேர்ந்தெடுப்பாக தொழிற்துறை செயலரை அறிவிக்கவே அழைப்பிடப்பட்டது, ஆனால் இதற்கு அந்நிகழ்வில் ஒரேயொரு நிமிடம் தான் எடுத்துக் கொள்ளப்பட்டது. சாதனைகள் மற்றும் அவர் பதவியேற்றதற்குப் பின்னர் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் துதிபாடல்களை ட்ரம்ப் தொடங்கினார், இது பெரும்பாலும் ஆளும் உயரடுக்கை நோக்கிய ஆதரவுக்கான முறையீடாக இருந்தது. பங்குச்சந்தை "சாதனையளவிலான எண்களை எட்டியுள்ளது", பெருநிறுவன நெறிமுறைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன, புலம்பெயர்ந்தோர்கள் நாடு கடத்த இலக்கில் வைக்கப்பட்டுள்ளார்கள், ட்ரம்ப் ஏனைய வலதுசாரி நடவடிக்கைகளோடு சேர்ந்து, அமெரிக்க இராணுவத்தின் "பாரிய மீள்கட்டமைப்பிற்கு" உத்தரவிட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும், அமெரிக்க உளவுத்துறை எந்திரத்தால் திருப்பிவிடப்பட்டு, ஊடகங்களிடம் வந்த கேள்விகள் ஏறத்தாழ பிரத்யேகமாக ரஷ்யா உடனான ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடர்புகள் மீதும் மற்றும் இவ்வார தொடக்கத்தில் பலவந்தமாக இராஜினாமா செய்த ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கல் ஃபிளினின் ரஷ்ய தூதர் உடனான பதவியேற்பதற்கு முன்னரே நடந்திருந்த தொலைபேசி உரையாடலுக்குப் பின்னால் இருந்த சூழல்கள் மீதும் ஒருங்குவிந்தன.

ட்ரம்ப் ஒரு வசைபாடலோடு விடையிறுத்தார், வெள்ளை மாளிகையை எந்த கட்சி கட்டுப்பாட்டில் கொண்டிருக்கிறது அல்லது காங்கிரஸில் யார் பெரும்பான்மையில் இருக்கிறார்கள் என்பதை பொறுத்தில்லாமல், உண்மையில் அரசாங்கத்தை வழிநடத்தும் நிரந்தர இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் பெரும்பகுதியோடு அமெரிக்க ஆளும் உயரடுக்கில் உள்ள அவரது நிஜமான எதிர்ப்பாளர்களது இடத்தில், அந்த வசைபாடல்களில் ஊடகங்கள் வைக்கப்பட்டன. உளவுத்துறை முகமைகளுக்குள் உள்ள ஆதாரநபர்களிடம் இருந்து ஊடகங்களுக்கு வரும் "சட்டவிரோதமான கசிவுகள்" என்று அவர் எதை அழைத்தாரோ அவற்றை மீண்டும் அவர் கண்டித்தார்.

ட்ரம்ப் நேரடியாகவே ஊடகங்கள் உளவுத்துறை முகமைகளின் ஊதுகுழல் என்று குற்றஞ்சாட்டிய போது, அவரை மறுத்தளிக்க அங்கே எந்த முயற்சியும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். அது உண்மை என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். இதேபோல, அவர் பிரச்சாரத்திற்கும் ரஷ்ய உளவுத்துறை முகமைகளுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லையென அவர் திட்டவட்டமாக மறுத்தபோது, அந்த எதிர் கருத்திற்கு ஆதாரத்தை எந்தவொரு செய்தியாளரும் எடுத்துக்காட்டவில்லை.

பத்திரிகையாளர் சந்திப்பின் போக்கில், ட்ரம்ப், ஒட்டுமொத்த உலகமும் முகங்கொடுக்கும் அதீத அபாயங்களைக் குறித்துக் காட்டும் பல்வேறு மலைப்பூட்டும் கருத்துக்களை உளறிக் கொட்டினார்.

கனக்டிகட் கடலோரங்களின் சர்வதேச எல்லைகளில் ஒரு ரஷ்ய போர் கப்பல் உளவு நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர் என்ன செய்வார் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு விடையிறுக்கையில், —ரஷ்ய மற்றும் சீன கடற்கரையை ஒட்டி அமெரிக்க போர்க்கப்பல்கள் இதைவிட மிகப் பெரியளவில் இது மாதிரியான நடவடிக்கைகளைத் தான் செய்து கொண்டிருக்கின்றன— ட்ரம்ப் கூறினார், “கடல் எல்லையிலிருந்து 30 மைல்களுக்குள் இருக்கும் கப்பலைச் சுட்டுத் தள்ளுவது தான் நான் செய்யக்கூடிய மிகப்பெரிய விடயமாக இருக்கும். இந்நாட்டில் ஒவ்வொருவரும் 'ஓ, இது மிகப் பிரமாண்ட காரியம்,' என்று கூறுவார்கள்.” அவர் தொடர்ந்து தெரிவித்தார், “ரஷ்யா மீது இப்போதே நான் மிகவும் மூர்க்கமாக நடந்து கொண்டால், அதாவது மூர்க்கமாக, நீங்கள் 'ஓ, இது சிறப்பானதல்ல,' என்று தான் கூறுவீர்கள்,” என்றார்.

ரஷ்யாவும் அமெரிக்காவும் உலகின் மிகப் பெரிய அணுஆயுத தளவாடங்களை வைத்திருக்கின்ற நிலையில், அதுபோன்றவொரு மோதலின் பாதிப்புகளை ட்ரம்ப் சுட்டிக்காட்டினார். “நாம் மிகவும் பலம் வாய்ந்த அணுஆயுத நாடாவோம், அதேபோலத்தான் அவர்களும்,” என்றார். “நான் சுருக்கமாக சொல்லிவிட்டேன். மிகவும் அடிப்படையானதை கூட இதுவரை வாசிக்காத யார் வேண்டுமானால் கூறக்கூடியது என்பதால், நம்மை கூற அனுமதிக்கும் ஒரு குறிப்பை உங்களுக்கு என்னால் கூற முடியும்: ஓர் அணுஆயுத பேரழிவு என்பது ஏனைய வேறெதையும் போன்றிருக்காது,” என்றார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அங்கே, ரஷ்யாவுடன் ஒரு சாத்தியமான அணுஆயுத போர் குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் உயர்மட்டங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடந்து வருகின்றன, இதற்கான தயாரிப்புகளும் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன.

ரஷ்யாவினது "ஆத்திரமூட்டல்கள்" என்று அவர் அழைக்கும் ஒரு தொடர்ச்சியான விடயத்திற்கு அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து ஏன் எந்த விடையிறுப்பும் இல்லை என்று ஒரு செய்தியாளர் சவால்விடுத்த போது —பெரும்பாலும் ரஷ்யாவின் எல்லைகளை ஒட்டி அமெரிக்கா மற்றும் நேட்டோ போர் ஒத்திகைகளால் தூண்டிவிடப்பட்ட சம்பவங்களை இவை உள்ளடக்கியவை என்ற நிலையில்— ட்ரம்ப் விடையிறுக்கையில், “நான் என்ன விடையிறுப்பை வழங்குவேன் என்பதை குறித்து உங்களுக்கு எதையும் நான் சொல்லப் போவதில்லை. நான் இராணுவ விடையிறுப்பைக் குறித்து பேச மாட்டேன்,” என்றார்.

ஈராக், வட கொரியா, ஈரான் அல்லது ஏனைய எந்தவொரு இடத்திலும் இராணுவ நடவடிக்கைகள் குறித்து அவர் பேசப் போவதில்லை என்று அறிவித்து, அக்கருத்துருவை அவர் விரிவாக்கினார். “ஏன் தெரியுமா? ஏனென்றால் அவர்களுக்கும் தெரியக்கூடாது. மேலும் தவிர்க்கவியலாமல், நீங்கள் இக்கேள்வி கேட்டு சலித்துப் போவீர்கள்,” என்றார்.

2013 இல் பஷர் அல்-அசாத் அரசாங்கத்திற்கு எதிராக ஒபாமா "சிவப்பு கோடு" என்றழைக்கப்பட்டதை அமலாக்க தவறி, அப்போது சிரியாவில் ஒரு நேரடி இராணுவ தலையீட்டிலிருந்து அவர் பின்வாங்கியதன் மீது இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்குள் இருந்த அதிருப்தியை போல, வெளியுறவு கொள்கை மீது ஆளும் உயரடுக்கிற்குள் நடக்கும் இதுபோன்ற மோதல்கள் வழமையாக திரைக்குப் பின்னால் தான் நடக்கும்.

ஆனால் இந்த முறை, இந்த மோதல் பகிரங்கமாக வெடித்துள்ளது. அமெரிக்க அரசு எந்திரத்திற்குள் நடக்கும் விவாதம் குறிப்பிட்ட வடிவம் எடுத்துள்ளது என்பதற்கு அப்பாற்பட்டு, இது ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புமுறையின் அடியிலிருக்கும் ஒரு நெருக்கடியின் ஒரு வெளிப்பாடாகும். இருபத்தைந்து ஆண்டுகளின் முடிவில்லா போர்கள், அதீத வேகத்துடன், மிகப்பெரிய தேசிய அரசுகள் சம்பந்தப்பட்ட ஒரு பெரும் மோதலாக உருவெடுத்து வருகின்றன. தேசிய பாதுகாப்புத்துறை இதழ்கள், ரஷ்யா உடனான போர் குறித்த பகிரங்க விவாதங்களைக் கொண்ட கட்டுரைகளால் முழுவதுமாக நிறைந்துள்ளன, அவற்றில் பிரச்சினையாக இருப்பது, நடக்குமா என்பதல்ல, எப்போது மற்றும் எவ்வாறு நடக்கும் என்பதே அவற்றில் பிரச்சினையாக உள்ளது. மறுபுறம், ட்ரம்ப் அவர் கவனத்தை சீனா மீது ஒருங்குவித்துள்ளார். இரண்டு விடயங்களிலுமே, விளைவுகள் கணக்கிட முடியாதவையாகும்.

சிலவேளைகளில் மிகவும் மலைப்பூட்டுவதாக இருந்தது என்னவென்றால், பத்திரிகை கூட்டம் முழுவதும் எந்தளவிற்கு பாரிய பெரும்பான்மை அமெரிக்க மக்களின் உணர்வுகள் மற்றும் கவலைகளில் இருந்து விலகி நிற்கின்றன என்பதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக ட்ரம்பின் போர் அல்லது அதே நேரத்தில் நடந்து கொண்டிருந்த புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் தேசியளவிலான முழுநாள் போராட்டம் ஆகியவை குறித்து அந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் நடைமுறையளவில் எந்த கேள்வியும் இல்லை.

ட்ரம்ப் பதவியேற்றத்திற்குப் பின்னர் இருந்து வெடித்துள்ள பாரிய போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் ரஷ்யாவுடன் ஒரு போர் தொடங்குவதற்கான ஒரு விருப்பத்தால் உந்தப்பட்டவர்கள் கிடையாது, மாறாக ட்ரம்பின் சர்வாதிகாரம், ஜனநாயக விரோத கொள்கைகள் மற்றும் அவர் அமைத்துள்ள செல்வந்த தன்னலக்குழுக்களது அரசாங்கத்தை வெறுப்பவர்களாவர்.

எவ்வாறிருப்பினும் ஜனநாயகக் கட்சி மற்றும் ஊடகங்களில் உள்ள ட்ரம்ப் மீதான விமர்சகர்கள், தீவிர-பிற்போக்குத்தன உள்நாட்டு கொள்கைகளான செல்வந்தர்கள் மற்றும் பெருநிறுவனங்களுக்கான வரி வெட்டுக்கள், பெருநிறுவனங்களுக்கான நெறிமுறை தளர்த்தல், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், புலம்பெயர்ந்தோர் மீதான தொந்தரவுகள் ஆகியவற்றை வரவேற்கும், ஆனால் ரஷ்யாவுடன் நல்லுறவுகளைப் பேணவிரும்பும் அவர் நிலைப்பாட்டை மட்டும் சகித்துக் கொள்ளவியலாததாக கருதும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் சக்திவாய்ந்த பிரிவுகளுக்காக பேசுகிறார்கள்.

ஜனநாயகக் கட்சியினர் அதிருப்திகரமான கவலையோடு விடையிறுக்கின்ற அதேவேளையில் ட்ரம்ப், பில்லியனர்களையும், முன்னாள் தளபதிகள் மற்றும் வலதுசாரி வெறியர்களையும் அவர் மந்திரிசபையில் நியமித்துள்ளார் என்பதோடு, தொடர்ச்சியாக பல பிற்போக்குத்தனமான மற்றும் அரசியலமைப்புக்கு விரோதமான நிர்வாக ஆணைகளை வெளியிட்டார். ஆனால் ரஷ்யா மீது மென்மையாக இருக்கிறார் என்று ட்ரம்பை தாக்குவதற்கு வாய்ப்பு கிடைக்கையில் மட்டும், அவர்கள் காட்டுமிராண்டித்தனமான வேட்டையாடலில் ஈடுபடுகிறார்கள், அது பெரும்பாலும் மெக்கார்த்தியிசத்தை விட வேறெதையும் நினைவூட்டவில்லை.

ஏகாதிபத்திய போரை எதிர்க்கும் எந்தவொரு கன்னையும் அமெரிக்க ஆளும் வர்க்கத்தினுள் கிடையாது. போரைத் தடுக்கும் போராட்டத்தில், அமெரிக்க ஆளும் உயரடுக்கின் இரண்டு கன்னைகளையும், அதாவது சிஐஏ மற்றும் ஊடங்கங்கள் அணிவகுத்திருக்கும் ஜனநாயகக் கட்சி மற்றும் ட்ரம்ப் இருதரப்பையும் எதிர்த்து, தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக தலையீடு செய்ய வேண்டியுள்ளது.