ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Chinese foreign minister warns against war with the US

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்கா உடனான போருக்கு எதிராக எச்சரிக்கிறார்

By Peter Symonds
9 February 2017

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி செவ்வாயன்று கான்பெர்ராவில் அறிவிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு போரைக் கருதிப்பார்க்கவே முடியாது ஏனென்றால் அந்த மோதல் இரு தரப்பிற்கும் பேரழிவுகரமான இழப்புக்களைக் கொண்டு வரும் என்றார். ஆனால் பெய்ஜிங் நோக்கிய ட்ரம்ப் நிர்வாகத்தின் ஆத்திரமூட்டும் நிலைப்பாடு குறித்து வாங்'கிடம் கேள்வி எழுப்பப்பட்டது என்ற உண்மையே, அவ்விரு அணுஆயுத சக்திகளுக்கும் இடையிலான மோதல் குறித்த அச்சங்கள் அதிகரித்து வருகின்றன என்பதற்கு மற்றொரு அறிகுறியாக உள்ளது.

"பல பிரச்சினைகளில் சீனாவை நோக்கி ஒரு பலமான மற்றும் முன்பினும் அதிக ஆக்ரோஷமான நிலைப்பாட்டை…" சமிக்ஞை காட்டும் புதிய அமெரிக்க நிர்வாகத்தினது அறிக்கைகளுக்கு அவரது விடையிறுப்பு குறித்தும், "அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே சாத்தியமான போர் குறித்து நீங்கள் எந்தளவிற்கு உண்மையிலேயே கவலைக் கொண்டுள்ளீர்கள்?” என்றும் ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் அவரது ஆஸ்திரேலிய சமதரப்பான ஜூலி பிஷாப் உடனான ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் பேசுகையில் வாங்'கிடம் கேள்வி எழுப்பினார்.

தென் சீனக் கடல் விவகாரத்தில் ஐந்தில் இருந்து பத்தாண்டுகளில் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே போரை அனுமானித்துள்ள ட்ரம்பின் மூத்த ஆலோசகர் ஸ்டீவ் பானனின் கருத்துக்களை அந்த இதழாளர் குறிப்பிட்டு சுட்டிக்காட்டினார். தீவிர வலதுசாரி வலைத் தளமான ப்ரைய்ட்பார்ட் (Breitbart) இல் கடந்த மார்ச் மாதம் உரையாற்றிய பானன் கூறுகையில், “அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர்கள் மணல்திட்டுக்களைச் சீரமைத்து, அடிப்படையில் இடம்விட்டு இடம் நகராத விமானந்தாங்கி போர்க்கப்பல்களை உருவாக்கி, அவற்றில் ஏவுகணைகளை ஏற்றி வருகிறார்கள்,” என்றார்.

கடந்த நான்கு தசாப்தங்களில் “சீன-அமெரிக்க உறவுகளில் கடுமையான அல்லது சிலவேளைகளில் அறிவுக்குப் பொருந்தாத தவறிழைப்புகள்" இருந்தாலும், இந்த உறவு "எல்லா விதமான சிக்கல்களையும் கடந்து, தொடர்ந்து முன்னோக்கி நகர்ந்து" வந்துள்ளது என்று அறிவித்து போர் அபாயத்தைக் குறைத்துக் காட்ட வாங் சிரமமெடுத்தார்.

பானன் மீது ஒரு விளாசலாக வாங் அறிவித்தார்: “சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சண்டை நடத்த முடியாது ஏனெனில் இருதரப்பும் தோல்வி அடைவார்கள், மற்றும் இரண்டு தரப்புமே அதற்கு விலைகொடுக்க முடியாது என்பதை எந்தவொரு புத்தி தெளிவான அரசியல்வாதியும் தெளிவாக புரிந்து கொள்வார்,” என்றார்.

ஆனால் முந்தைய ஒபாமா நிர்வாகத்தின் சீனாவிற்கு எதிரான "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" மோதல் நிலைப்பாட்டைத் தொடர்ந்து கொண்டே, அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களை கேள்விக்கிடமின்றி உறுதியாக வலியுறுத்துவதை நோக்கிய ஒரு அடிப்படையான திருப்பத்தை ட்ரம்ப் நிர்வாகம் பிரதிநிதித்துவம் செய்கிறது. குறிப்பாக சீனாவிற்கு எதிராக திருப்பி விடப்பட்டுள்ள ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" வாய்சவுடால், இராணுவ வழிவகைகள் உட்பட அனைத்து வழிவகைகள் மூலமாக ஒருபோல போட்டியாளர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு எதிராக சண்டையிடுவதன் மூலமாக அமெரிக்காவின் வரலாற்று வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்த ஈவிரக்கமின்றி தீர்மானகரமாக இருப்பதைக் குறிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, வாங் பானனை புறக்கணிக்கும் அதேவேளையில், ட்ரம்ப் ப்ரைய்ட்பார்ட் செய்தியின் முன்னாள் பதிப்பாசிரியரும் பாசிசவாதியுமான ஒருவரை அவரது தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் உயர் பதவியில்—அதாவது, அவசர காலங்களுக்கும் மற்றும் நெருக்கடிகளுக்கும் விடையிறுக்கும், மற்றும் ஆத்திரமூட்டல்கள், இராணுவ தலையீடுகள் மற்றும் போர்களுக்குத் தயாரிப்பு செய்து மேற்பார்வையிடுகின்றன ஒரு அமைப்பில்—நிறுவி உள்ளார்.

அண்டைநாடுகள் உடனான சீனாவின் எல்லை தகராறுகளுக்குள், ஒபாமா நிர்வாகம் அதன் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தும் தலையீடுகள் மூலமாக எதை ஓர் அபாயகரமான சர்வதேச வெடிப்பு புள்ளியாக மாற்றியிருந்ததோ, அந்த தென் சீனக் கடல் மீது பானன் கவனத்தைக் குவித்தது தற்செயலானதல்ல. ஒருசில விரல்விட்டு எண்ணக்கூடிய தீவுத்திட்டுக்களில் சீனாவின் நிலசீரமைப்பு நடவடிக்கைகளைப் பயன்படுத்தி, ஒபாமா மூன்று "கடற்போக்குவரத்து சுதந்திர" நடவடிக்கைகளுக்கு—அதாவது சீனா உரிமை கோரும் கடல்எல்லைகளுக்குள் அமெரிக்க கடற்படை போர்க்கப்பல்களை அனுப்புவதற்கு—பச்சைக்கொடி காட்டியிருந்தார்.

தென் சீனக் கடல் விவகாரத்தில் பெய்ஜிங்கை எதிர்கொள்வதில் ஒபாமா நிர்வாகத்தின் நடவடிக்கைகள் போதுமானளவிற்குப் பலமாக இல்லை என்பதற்காக ட்ரம்ப் மற்றும் அவர் ஆலோசகர்கள் அவற்றை விமர்சித்துள்ளனர். இப்போதைய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான றெக்ஸ் ரில்லர்சன் அவரது பதவி பிரமாணத்தின் போது கூறுகையில், “முதலாவதாக, தீவு கட்டுவதை நிறுத்துங்கள் என்றும், இரண்டாவதாக, அத்தீவுகளை நீங்கள் அணுகுவதற்கு அனுமதிக்கப்பட போவதில்லை என்றும் ஒரு தெளிவான சமிக்ஞையைச் சீனாவுக்கு" ட்ரம்ப் நிர்வாகம் "அனுப்பும்" என்று தெரிவித்தார்.

சீன தீவுத்திட்டுக்களைச் சுற்றி 12 கடல் மைல் எல்லைக்குள் அமெரிக்க போர்க்கப்பல்களை அனுப்பியமை, ஓர் இராணுவ மோதல் அபாயத்தைக் கொண்டிருந்த ஒரு பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கையாகும். தென் சீனக் கடலில் சீன அணுகுதலைத் தடுப்பதற்கான ரில்லர்சனின் அச்சுறுத்தலை, அந்த சர்ச்சைக்குரிய கடல் பகுதியில் ஒரு கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்துவதன் மூலமாக மட்டுமே நடத்த முடியும்—அதுவொரு அப்பட்டமான போர் நடவடிக்கையாக இருக்கும்.

பதவியிலிருக்கும் டரம்ப் நிர்வாகம் ஏற்கனவே அதன் கடுமையான சீன-விரோத நிலைப்பாட்டை மிதமாக்கிக் கொண்டிருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் குறிப்பிட்டார். புதிய அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் ஜேம்ஸ் மாட்டீஸ் தென் சீனக் கடல் பிரச்சினைகள் சம்பந்தமாக இராஜாங்க நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவரது முதல் வெளிநாட்டு விஜயமாக தென் கொரியா மற்றும் ஜப்பானுக்கு விஜயம் செய்த மாட்டீஸ், தென் கொரியாவில் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை அமைப்புமுறையை நிலைநிறுத்துவதற்கு சியோல் உடன் ஓர் உடன்பாட்டை இறுதி செய்தும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளை வட கொரியா தாக்கினால் "பெரும்" படைபலத்தைக் கொண்டு அதை அச்சுறுத்தியும், ஏற்கனவே சீனாவுடனான பதட்டங்களை அதிகரித்திருந்தார். கிழக்கு சீனக் கடலின் சர்ச்சைக்குரிய தீவுத்திட்டுக்கள் விவகாரத்தில் சீனாவுடனான எந்தவொரு போரிலும் அமெரிக்கா ஜப்பானை ஆதரிக்கும் என்பதை மாட்டீஸ் ஜப்பானில் உறுதிப்படுத்தினார்.

கொந்தளிப்பான இவ்விரு வெடிப்பு புள்ளிகள் மீதும் பெய்ஜிங்கிடமிருந்து கோபமான விடையிறுப்புகள் வந்திருந்த நிலையில், தென் சீனக் கடல் குறித்த மாட்டீஸின் கருத்துரைகள் ஒப்பீட்டளவில் மிகவும் மிதமானவை தான். சீனாவின் நிலசீரமைப்பு நடவடிக்கைகள் "அப்பிராந்தியத்தில் தேசங்களின் நம்பிக்கையைச் சிதைத்துள்ளன” என்பதால் இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அமெரிக்காவின் இராஜாங்க முயற்சிகள் செயலிழந்து போகக்கூடும் என்று அவர் அறிவித்தார். “இந்த நேரத்தில், எந்தவிதமான கடுமையான இராணுவ நகர்வுகளும் அவசியமென நாங்கள் கருதவில்லை,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

மோதலுக்கு முந்தைய இராஜாங்க நடவடிக்கைகளுக்கான "இந்நேரம்" என்று பகிரங்கமாக கூறினாலும், பல்வேறு செய்தி ஆதாரங்களைப் பொறுத்தமட்டில், உயர்மட்ட ஜப்பானிய அதிகாரிகளுடன் மாட்டீஸ் முன்பினும் அதிக ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கைகளைக் குறித்து பேசி இருந்தார்.

Nikkei Asian Review குறிப்பிட்டது: “தென் சீனக் கடலில் சீனாவின் நடவடிக்கைகளை இனியும் அமெரிக்கா பொறுத்துக் கொண்டிருக்காது என்று மாட்டீஸ் தெரிவித்தார். கடற்போக்குவரத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் ஒரு ஆக்கப்பூர்வமான பாத்திரம் வகிக்கும் என்றும் அவர் சூளுரைத்தார்… மிக முக்கியமாக, அக்கடலில் சீனா கட்டமைத்துள்ள மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தீவுகளைச் சுற்றி 12 கடல் மைல் தூரத்திற்குள் அமெரிக்கா ரோந்து எண்ணிக்கையை அதிகரிக்க இருக்கிறது.”

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் "இன்றைய சீனாவின் விரிவாக்கமான்னது, மிங் அரச பரம்பரையின் கப்பங்கட்டும் முறையை மீளஉருவாக்குவதற்கான முயற்சிக்கு ஒப்பானது… மாட்டீஸ் வார்த்தைகளில், இன்று பெய்ஜிங் அதேபோன்றவொரு முறையை, அதன் இராணுவ மற்றும் பொருளாதார பலத்தைப் பயன்படுத்தி மீளஉருவாக்க முயற்சிப்பதாக இருக்கலாம், ஆனால் அதுபோன்ற முயற்சிகளை நவீன உலகம் சகித்துக் கொள்ளாது" என்று அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலரது கருத்துக்களை அப்பத்திரிகை குறிப்பிட்டது.

போர்நாடும் அமெரிக்க நிர்வாகத்தையும் மற்றும் போர் அச்சுறுத்தலையும் முகங்கொடுத்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி (CCP), வாஷிங்டனைச் சமாதானப்படுத்தும் முயற்சிகளுக்கும் மற்றும் மோதல் அபாயத்தை மட்டுமே உயர்த்துகின்ற ஓர் ஆயுத போட்டியில் ஈடுபடுவதற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றது. சீனாவின் மத்திய இராணுவக் குழுவின் ஒரு மூத்த அதிகாரி Liu Guoshun கடந்த மாதம் எச்சரிக்கையில், “இந்த [அமெரிக்க] ஜனாதிபதியின் பதவி காலத்திற்குள் ஒரு போர் என்பது, இன்றிரவே கூட போர் வெடிப்பதென்பது, வெற்று கூச்சல்கள் கிடையாது மாறாக யதார்த்தமாகும்,” என்றார்.

ஒரு சிறிய அதிதீவிர-செல்வந்த உயரடுக்கின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற சீன ஆட்சி, போர் உந்துதலைத் தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே சமூக சக்திக்கு—அதாவது சீனாவில், அமெரிக்காவில் மற்றும் சர்வதேச அளவில் உள்ள தொழிலாள வர்க்கத்திற்கு—எந்தவொரு முறையீடும் செய்ய முற்றிலும் இலாயகற்றது.

சீனாவிற்கு எதிராக வர்த்தக போர் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தவும், கூட்டணிகள் மற்றும் பன்முக ஒழுங்கமைப்புகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உடனடி நலன்களுக்கு உரியதாக இல்லையெனில் அவற்றை தூக்கியெறியவும், மற்றும் அனைத்திற்கும் மேலாக, அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்த அமெரிக்க இராணுவத்தை விரிவாக்கி பயன்படுத்துவதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் அச்சுறுத்தல்களும், ஒட்டுமொத்த பிராந்தியத்தையும் ஸ்திரமின்மைக்கு உட்படுத்தி வருகின்றன. தென் சீனக் கடல் பிரச்சினைகளானது, ஒரு பேரழிவுகரமான போரை முன்பின் ஆராயாமல் விரைவுபடுத்தக்கூடிய விசைகளில் வெறும் ஒன்று மட்டுமே ஆகும்.