ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Bangladesh government continues repression against garment workers

பங்களதேஷ் அரசாங்கம் ஆடைத் தொழிலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையை தொடர்கிறது

By Sarath Kumara
3 March 2017

கடந்த வாரம், டாக்கா அருகே அஷுலியா தொழில்துறை பகுதியில் ஊதிய உயர்வுகோரி ஆடைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்கு பின்னர் இட்டுகட்டப்பட்ட குற்றச்சாட்டுக்களின் பேரில் கைதுசெய்திருந்த சில தொழிலாளர் ஆர்வலர்களை வங்காள அரசாங்கம் விடுதலை செய்தது. பல தொழிலாளர் ஆர்வலர்கள் இன்னும் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், கைதுசெய்யப்பட்டுள்ள அனைவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதையும் பொலிஸ் தொடர்கிறது.

IndustriALL Global Union (IAGU), சுவிஸ் சார்ந்த UNI Global Union (UNIGU), தொழிலாளர் அமைச்சகம் மற்றும் வங்காள ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (Bangladesh Garment Manufacturers and Exporters Association- BGMEA) ஆகியவற்றிற்கு இடையிலான ஒரு ஒப்பந்தத்தை அடுத்து கைதுசெய்யப்பட்டிருந்த பல ஆர்வலர்கள் பிணை மனுவில் விடுவிக்கப்பட்டனர். விடுதலை செய்யப்பட்ட தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை குறித்து சங்கங்கள் அறிக்கை வெளியிடவில்லை அல்லது மற்றவர்கள் ஏன் பிணையில் விடுவிக்கப்படவில்லை என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. குறைந்தபட்சம் 35 தொழிலாளர்கள் இன்னமும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பரில் தொழிலாளர்கள் கைதுசெய்யப்பட்டதிலிருந்து அவர்களை விடுதலை செய்வதற்கும், நிறுவனங்களில் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கவும் டாக்கா அரசாங்கத்தை வலியுறுத்துவதற்கு IAGU வும் UNIGU வும் மேற்கத்திய சில்லறை வணிகர்களின் ஆதரவினை திரட்டிவருகின்றன. இதற்கு விடையிறுப்பாக, H&M, Inditex, C&A, Next மற்றும் Tchibo போன்ற ஐந்து சில்லறை பெருநிறுவனங்கள், ஆடை ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்காக BGMEA மூலமாக கடந்த மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வருடாந்திர டாக்கா ஆடை உச்சி மாநாட்டிலிருந்து (Dhaka Apparel Summit-DAS) அவர்களை விலக்கிக்கொண்டுவிட்டதாக அறிவித்தன.

டிசம்பரில், இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து சுமார் 150,000 தொழிலாளர்கள் 10 நாட்கள் வேலைநிறுத்தில் ஈடுபட்ட பின்னரே இந்த அடக்குமுறை தொடங்கியது. தற்போதைய மாத ஊதியம் 5,300 டகாவிலிருந்து 16,000 டகாவாக ($200) உயர்த்துவது உட்பட 16 கோரிக்கைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர். இது தொடர்பாக, 85 தொழிற்சாலைகளில் உள்ள தொழிலாளர்களை வெளியேற்றுவது, மேலும் உள்ளூர் தொழிற்சங்க தலைவர்கள் உட்பட வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் பலரையும் கைதுசெய்வது என்ற வகையில் வங்காள அரசாங்கமும், நிறுவனங்களும் மிகக்கொடூரமான முறையில் நடவடிக்கைகளை எடுத்தனர்.

குறைந்தபட்சம் 1,600 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்த பின்னரே டிசம்பர் இறுதியில் தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்த தொழிலாளர்கள் புதிய வேலைகளை தேடிசெல்லும் சாத்தியத்தையும் இழக்கின்ற வகையில் நிறுவனங்களால் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுவிட்டனர். அஷுலியாவில் எட்டு தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள், கைதுசெய்யப்பட்டுள்ள ஆர்வலர்கள் காலித்தனம், சூறையாடல் மற்றும் வன்முறை போன்ற குற்றவியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி பொலிஸிடம் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தொழிற்சங்கங்களும், மனித உரிமை அமைப்புக்களும் இந்த குற்றச்சாட்டுக்கள் எந்தவித ஆதாரமுமின்றி சுமத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கின்றன. இந்த வேலைநிறுத்தத்திற்கு தொடர்பில்லாத வகையில், அரசியல் வன்முறை தொடர்பான கடுமையான சிறப்பு அதிகார சட்டத்தின் (Special Powers Act) கீழ் மூன்று தொழிலாளர்களும், ஒரு பத்திரிகையாளரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்படுவதை தவிர்க்கும் பொருட்டு சில தொழிலாளர்கள் மறைந்து இருக்கின்றனர்.

தாக்குதல்களை தொடர்ந்து, பெரும் போராட்டங்களை வெடிக்கச்செய்யும் என்ற அச்சத்தில், அஷுலியாவில் மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்தும் விதமாக தொழிற்சாலைகளுக்கு அருகில் பொலிஸ் மற்றும் துணை இராணுவப்படைகளை அரசாங்கம் குவித்து வைத்துள்ளது.

ஆடை உற்பத்தி நிறுவனங்கள், தொழிலாளர் உரிமைகள் குறித்த கவலையினால் அல்லாமல், தொழிலாளர் போராட்டங்களின் வெடிப்பானது அவர்களது இறக்குமதியிலும், இலாபத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தினால் தான் டாக்கா மாநாட்டிலிருந்து விலகிக்கொள்வதற்கு தீர்மானித்தன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் வங்காளத்திலிருந்து குறைந்த விலைமதிப்பிலான தர அடையாளம் கொண்ட பொருட்களை இறக்குமதி செய்வதன் மூலமாக பாரிய இலாபத்தை பெற்றுவருகின்றன.

தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்மை என்பது "தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்குள் நுழைவதற்கு ஏதுவாக நாட்டின் தொழில்துறைக்கு ஒரு வலுவான செய்தியை அனுப்புகிறது என்ற விதத்தில் வங்காளத்தில் ஆடைத் தொழிலாளர்களின் ஒரு முக்கியமான வெற்றியாக" இது இருந்தது என்று IAGU இன் பொது செயலாளர் வால்டர் ஸான்செஸ் கூறினார். சில மேற்கத்திய சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் "ஆதரவை" பெறுவதை "சர்வதேச ஒற்றுமை" என்று UNIGU இன் பொது செயலாளர் பாராட்டினார்.

உலகளாவிய தொழிற்சங்கங்கள் அனைத்து தொழிற்சாலைகளிலும் தொழிற்சங்கங்களை நிறுவுவதற்கும், நிறுவன உரிமையாளர்களுடன் இது குறித்த "பேச்சுவார்த்தை" நடத்தவும் ஆர்வமாக உள்ளனர். ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், இந்த தொழிற்சங்கங்கள், தங்களது உறுப்பினர்களின் ஊதியங்கள் மற்றும் நலன்களை குறைப்பதற்காக சில்லறை விற்பனையாளர்கள் உட்பட பெரு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றிக்கொண்டிருக்கின்றன.

டாக்கா ஆடை உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள முடியும் என்று IAGU வும் UNIGU வும் நிறுவனங்களுக்கு தெரிவித்ததற்கு சற்று முன்னதாகவே காவலில் வைக்கப்பட்டிருந்த தொழிலாளர்கள் விரைவில் பிணையில் விடுவிக்கப்படவிருந்தது அறிவிக்கப்பட்டது.

இருப்பினும், இட்டுக்கட்டப்பட்ட குற்றச்சாட்டுக்கள் திரும்ப பெறப்படவில்லை, தொழிற்சங்கங்கள் மீதான அடக்குமுறை தொடர்கிறது, மேலும் ஊதியங்களும் உயர்த்தப்படவில்லை. டிசம்பரில், 2019 வரையிலும் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்கு நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்துவிட்டன. ஆனால் முன்னதாக 2013ல் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை பொறுத்தவரை, கடந்த ஆண்டிலேயே ஊதியங்கள் அதிகரிக்கபட்டிருக்கவேண்டும்.

அஷுலியா வேலைநிறுத்தம் ஒரு தன்னியல்பான நடவடிக்கையாகவே இருந்தது. வங்காளத்திலுள்ள சர்வதேச சங்கங்கள் அல்லது அவற்றின் கிளை அமைப்புக்கள் எதுவும் இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுவதில் ஈடுபடவில்லை.

தொழிலாளர்களின் மோசமான நிலைமைகளின் அடிப்படையில், குறைந்த உற்பத்தி செலவினங்களை கொண்டுள்ள காரணத்தினால் வங்காளம் மேற்கத்திய மூலதனத்தை ஈர்ப்பதாகவுள்ளது. 2013ல் எட்டு ஆடை தொழிற்சாலைகள் அமைப்புடன்கூடிய ரானா பிளாசா கட்டடத்தின் சரிவுக்கு பின்னர் ஆடை நிறுவனங்களும், மேற்கத்திய சில்லறை விற்பனையாளர்களும் தொழிலாளர்களின் நிலைமைகளை உயர்த்துவதற்கு அரசாங்கத்தினால் வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவுகளின் மத்தியில், 1,100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் தங்களது உறுப்புக்களை இழந்தனர்.

இன்னும், வங்காள ஆடைத் தொழிலாளர்கள் உலகத்திலேயே குறைவான ஊதியம் பெறுபவர்களாக உள்ளனர், வேலை நிலைமைகளும் கொடூரமானதாகவும் பாதுகாப்பற்றதாகவும் இருக்கின்றன, மேலும் அச்சுறுத்தல்களும், அடக்குமுறைகளும் குறைவின்றி தொடர்கின்றன.

பிரதம மந்திரி ஷேக் ஹசினா, பிப்ரவரி 25 அன்று, டாக்காவில் ஆடை உச்சி மாநாட்டினை தொடங்கிவைத்தார், ஆனால் அஷுலியாவில் அவரது அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகின்ற அடக்குமுறை பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. பெரும்பாலும் 3,869 தொழிற்சாலைகள் ஆய்வு செய்யப்பட்டுவிட்டன, ஆனால் அவற்றில் வெறும் 39 மட்டுமே மோசமான நிலைமையினால் மூடப்பட்டுள்ளன என்று ஹசினா கூறினார். அதே நேரத்தில், தொழிற்சாலைகளின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பெரும் நிதி தேவை இருந்ததனால் மேற்கத்திய கொள்வனவாளர்களின் உதவிக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

அவரது பேச்சு எதிர்கால ஆடை ஏற்றுமதி இலக்குகளை அதிகரிப்பதையே குவிமையபடுத்தியது. உற்பத்தியாளர்கள் "பாரம்பரிய இடங்களுக்குள் சிக்கிப் போகாமல்" இருக்கவேண்டுமென்றும், "உங்களது சட்டை கைகளை உயர்த்திக்கொண்டு புதிய சந்தைகளை கண்டறியவேண்டும்" எனவும் அவர் வலியுறுத்தினார். ஐரோப்பாவும் அமெரிக்காவும் வங்காளத்தின் ஆடை ஏற்றுமதிகளுக்கு முக்கிய சந்தைகளாக இருக்கின்றன.

ஹசினா, தனது நாடு சர்வதேச ஆடை ஏற்றுமதி சந்தையில் தற்போது 5.1 சதவிகிதமாகவுள்ள அதன் பங்கை மேம்படுத்த முடிகின்ற வகையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வங்காள பொருட்கள் மீதான வரி மற்றும் ஒதுக்கீடு குறித்த விலக்குடனான அணுகுதலை கொண்டிருக்கும் என்று அவர் நம்பிக்கை வைத்துள்ளதாக கூறினார். இதுபோன்ற வசதிகள் அமெரிக்காவில் இல்லாததால், வங்காள நிறுவனங்கள் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ஏற்றுமதி மீது 850 மில்லியன் டாலர் மதிப்பிலான தொகையினை வருடாந்திரம் வரிகளாக செலுத்தவேண்டியுள்ளது என்று அவர் புலம்பினார்.

வங்காள ஆடை தயாரிப்பு தொழிற்துறை, அனைத்து ஏற்றுமதிகளில் 82 சதவிகித பங்களிப்பை கொண்டுள்ள வகையில் நாட்டின் பிரதான அந்நிய செலாவணி வருமானம் ஈட்டித்தரும் துறையாக உள்ளது. ஒரு மாபெரும் உழைப்பு சக்தியாக 4 மில்லியன் நபர்கள் இந்த தொழிற்சாலைகளில் உழைத்து கொண்டிருக்கின்றனர். சந்தை பங்கிற்கு நெருக்கடியான போட்டியுள்ள இந்த ஒரு சூழ்நிலையில், ஹசினா அரசாங்கம் மலிவு-உழைப்பு நிலைமைகளை பாதுகாக்க தீர்மானித்துவிட்டது. இதுதான் தொழிலாளர்கள் மீதான அவரது அரசாங்கத்தின் கொடூரமான அடக்குமுறையை தூண்டுகிறது.

அமெரிக்காவை தளமாக கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்புக்குழு (Human Rights Watch-HRW) டிசம்பரிலிருந்து நடைபெற்றுவருகின்ற அடக்குமுறைகள் குறித்து இந்த மாதம் ஒரு விபர அறிக்கையினை வெளியிட்டது. வேலைநிறுத்தத்தின்போது "சுமார் 150 தொழிலாளர்கள் மற்றும் 1,600 க்கும் மேற்பட்ட 'அடையாளம் தெரியாத' நபர்கள் மீது டிசம்பரில் "10 குற்றவியல் குற்றச்சாட்டுக்கள்" தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அது குறிப்பிடுகிறது.

அறிக்கையின்படி கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 44 ஆக இருக்கலாம் என்றுபோதிலும், பொலிஸ் ஒரு முழுமையான பட்டியலை வழங்காத நிலையில் உண்மையான எண்ணிக்கை அறியப்படவில்லை. அதேபோல, வேலைநிறுத்தம் செய்தவர்களில் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது பற்றியும் பொலிஸ் எவ்வித தகவலையும் வெளியிடவில்லை. வேலைநிறுத்தங்கள் குறித்த செய்திகளை வெளியிட்டதற்காக உள்ளூர் செய்தி தொலைக்காட்சி பிரிவு ETV இன் ஒரு செய்தியாளரும் கைதுசெய்யப்பட்டுளார்.

பல தொழிலாளர்கள் திடீரென "மறைந்துவிட்டனர்" ஆனாலும், "24 மணி நேரங்களுக்கு பின்னர்" நீதிமன்றத்திற்கு முன்பு கொண்டுவரப்பட்டனர் என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. அதாவது, பொலிஸ் அவர்களை கடத்தி சென்றுள்ளனர் என்பதே இதன் அர்த்தமாகிறது.

பெரும் எண்ணிக்கையிலான நபர்களுக்கு எதிரான குற்றவியல் குற்றச்சாட்டுக்களை பயன்படுத்துவது, கைதுசெய்ய போவதாக அச்சுறுத்துவது, காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை திரும்ப திரும்ப கைது செய்வது, பிணை நிறுத்திவைப்பு, சித்திரவதை மற்றும் பிற வடிவங்களிலான இழிவான செயல்முறைகள் மூலமாக வாக்குமூலம் பெறுவது போன்றவற்றையே பொலிஸ் அச்சுறுத்தல்கள் உள்ளடக்கியுள்ளன.

இந்த அடக்குமுறையை நியாயப்படுத்துவதை அரசாங்கம் தொடர்கிறது. தொழிலாளர் அமைச்சகத்தின் இளநிலை மந்திரியான முகம்மது ஹக், டிசம்பர் மாத ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோதமானவையாகவும், மேலும் சட்ட-ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியவையாகவும் இருந்தன என்று கூறினார். "தொழிலாளர்களின் ஒரு கட்டுக்கடங்காத பிரிவினரால் உருவாக்கப்பட்ட குழப்பமாகவும், சட்டத்திற்கு விரோதமானதாகவும்" இந்த ஆர்ப்பாட்டங்கள் இருந்தன என்று BGMEA இன் தலைவர் முகம்மது சித்திகர் ரஹ்மான் கூறினார். மேலும், "தொழிற்சாலைகளில் உற்பத்திக்கு தடைகளை உருவாக்கிய சில நபர்களை" காவலில் வைத்ததற்கு சட்ட அமலாக்கத் துறையினரை அவர் பாராட்டினார்.

ஒரு சமூக வெடித்து சிதறும் நிலைமைக்கு மத்தியில் அமர்ந்துகொண்டு, ஹசினா அரசாங்கம், ஆடைத் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையினை ஒரு முக்கிய பகுதியாக வைத்துகொண்டு அதிகரித்த வகையில் சர்வாதிகார ஆட்சி வழிமுறைகளையே மீண்டும் நாடிக்கொண்டிருக்கிறது.