ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

To defeat ruling class assault,

Indian workers need a socialist program

ஆளும் வர்க்கத்தின் தாக்குதலை முறியடிக்க,

இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச வேலைத்திட்டம் தேவை

By the WSWS Editorial Board
20 February 2013

பெட்ரோல் டீசல் விலையேற்றம், ஒப்பந்தத் தொழிலாளர் முறையை ஊக்குவிப்பது, பெரு வணிகங்களுக்கு பாரிய வரிச் சலுகைகள், மற்றும் தனியார்மயமாக்கம் ஆகியவை உட்பட்ட காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) அரசாங்கத்தின் சமூகப் பொருளாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றும் வியாழக்கிழமையும் நடைபெறுகின்ற இரண்டு நாள் பொது வேலைநிறுத்தத்தில் இந்தியா முழுவதும் பத்து மில்லியன் கணக்கிலான தொழிலாளர்கள் பங்குபெறுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கமும், ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் ஆசியாவின் பிற பகுதிகளில் இருக்கும் தமது சக ஆளும் வர்க்கங்களைப் போலவே 1930களின் பெருமந்தநிலைக்குப் பிந்தைய உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரும் நெருக்கடிக்கு தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற உழைக்கும் மக்களையும் விலை செலுத்தும்படி செய்ய வேண்டும் என்பதில் தீர்மானத்துடன் இருக்கிறது. விலை மானியங்களை வெட்டுதல், சில்லறை வணிகத் துறையை வால்மார்ட் போன்ற பல பிராண்டு அந்நிய பகாசுர நிறுவனங்களுக்குத் திறந்து விடுதல் போன்றவை உள்ளிட்ட “பெரு வெடிப்பு சீர்திருத்தங்களை” திணித்த தனது அரசாங்கத்தின் செயலை பிரதமர் மன்மோகன் சிங் சென்ற செப்டம்பரில் உள்நாட்டு மற்றும் அந்நிய முதலீட்டாளர்களை சமாதானப்படுத்துகின்ற “தியாக”ங்களை இந்திய மக்கள் செய்தாக வேண்டும் என்று பிரகடனம் செய்து நியாயப்படுத்தினார்.

அதனையடுத்து நிதியமைச்சர் சிதம்பரம் பாரிய சமூகச் செலவின வெட்டுகளை திணித்தார். 2012-13 வரவு-செலவுத் திட்ட ஒதுக்கீட்டில் 6.5 சதவீதத்துக்கும் அதிகமாக செலவினம் வெட்டப்பட்டது. அடுத்த மாத வரவு-செலவுத் திட்டத்தில் விலை மானியங்கள் உள்ளிட்டவற்றில் மேலதிக வெட்டுகளை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் செய்யவிருப்பதாகவும் ஃபைனான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்தவொரு நேர்காணலில் சிதம்பரம் உறுதிப்படத் தெரிவித்திருந்தார்.

பெரு வணிகங்கள் இந்த நடவடிக்கைகளை வரவேற்றிருக்கின்றன, என்றாலும் பாரிய ஆட்குறைப்புகளுக்கும் ஆலை மூடல்களுக்கும் இருக்கக் கூடிய தளைகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட இன்னும் அதிகமாய் செய்ய வேண்டும் என்று அவை கூச்சலிடுகின்றன. அரசாங்கத்தை மேலதிகமாய் வலது நோக்கித் தள்ளும் நோக்கத்தோடு, இந்தியப் பெருநிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற பல முன்னணி மனிதர்களும் 2014 தேர்தலில் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை பிரதம வேட்பாளராக முன்நிறுத்துகின்றனர். பெருவணிகங்களை ஊக்குவிப்பதில், அதாவது வேலைநிறுத்தங்களை ஒடுக்குவதோடு இந்நிறுவனங்களுக்கு இலவச நிலத்தையும் இன்னபிற இலாபகரமான சலுகைகளையும் வழங்குவதில், கடைந்தெடுத்த இந்து மேலாதிக்கவாதியும் ’மென்று முழுங்காத வலிமையான மனிதராக’த் திகழ்வதில் தனக்கென ஒரு பாணியைக் கொண்டவருமான இவரது சாதனையின் மீது அவர்களது நேசப் பார்வை பொழிகிறது.

தங்கள் வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் மீது இந்திய உயரடுக்கு தொடுக்கின்ற தாக்குதலை எதிர்த்துப் போராட தொழிலாளர்கள் தீர்மானத்துடன் இருக்கின்றனர் என்பதற்கு இன்றைய பொது வேலைநிறுத்தம் சாட்சியமளிக்கிறது. தொழிற்சங்கங்கள் இந்த நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்ததற்குக் காரணம் தொழிலாள வர்க்கத்தின் பதில்-தாக்குதலை அபிவிருத்தி செய்வதற்கு அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் மீது தங்களது கட்டுப்பாட்டைப் பராமரிக்கவும், அதன் பெருகும் கோபம் மற்றும் போர்க்குணத்தை தொந்தரவற்ற ஆர்ப்பாட்டங்களாக திசைதிருப்பவும், அதனை அரசியல்ரீதியாக ஆளும் காங்கிரஸ் கட்சி மற்றும் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியான இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆகியவை உள்ளிட்ட முதலாளித்துவ கட்சிகளுக்கு தக்கபடி பட்டை தீட்டித் தருவதற்குமே ஆகும்.

இந்தியாவின் இருபெரும் ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆகியவற்றின் தொழிற்சங்க இணைப்புகளான அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய தொழிற்சங்க மையம் (CITU) ஆகியவற்றின் கரங்களில் தான் இந்த வேலைநிறுத்தத்தின் அரசியல் தலைமை பெருமளவில் இருக்கிறது.

உலக முதலாளித்துவத்திற்கான மலிவு உழைப்பு உற்பத்திக் களமாக இந்தியாவை ஆக்குவதற்கு முதலாளித்துவ வர்க்கம் காட்டுகின்ற முனைப்பை எதிர்ப்பவர்களாக ஸ்ராலினிஸ்டுகள் காட்டிக் கொள்கின்றனர். இப்போதைய அரசாங்கத்தையும் சரி இதற்கு முன்னாலிருந்த பாஜக தலைமையிலான அரசாங்கத்தையும் சரி அவற்றை “மக்கள்-ஆதரவு” கொள்கைகளை ஏற்றுக் கொள்ளச் செய்யும்படி நெருக்குதலளித்து விட முடியும் என்று கூறி இவர்கள் அவ்வப்போது ஒருநாள் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்து வந்திருக்கின்றனர்.

ஆயினும், ஆளும் வர்க்கத்தின் பிரதானக் கட்சிகள் “மக்களுக்கு சேவை செய்யும்படி செய்வதற்கு” அக்கட்சிகளை நெருக்குதலளிப்பதிலேயே தொழிலாள வர்க்கம் தனது சக்தியைச் செலவிட வேண்டும் என்பதான ஆபத்தானதும் பிற்போக்குத்தனமானதுமான ஒரு கருத்தைப் பரப்புவதற்கும் தாண்டியும் அவர்களது பாத்திரம் விரிந்து செல்கிறது. இந்திய ஆளும் வர்க்கத்தின் சந்தை ஆதரவு சீர்திருத்த வேலைத்திட்டத்தை அமல்படுத்துவதில் CPI மற்றும் CPM ஒரு அதிமுக்கிய பாத்திரம் ஆற்றியிருக்கின்றன. இந்தியாவின் “புதிய பொருளாதாரக் கொள்கை”யை தொடங்கிய நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்திற்கு, அத்துடன் 2004-2008 வரை, இப்போதைய அரசாங்கத்திற்கு உட்பட மத்தியில் தொடர்ச்சியாக வலது-சாரி அரசாங்கங்களுக்கு அவை முட்டுக் கொடுத்து வந்துள்ளன. மேலும், மேற்கு வங்கம் மற்றும் கேரளா ஆகிய அவை ஆட்சியமைத்த மாநிலங்களிலும், CPI, CPM மற்றும் இடது முன்னணி அவர்களே வெளிப்படையாக “முதலீட்டாளர்-ஆதரவு” கொள்கைகள் என வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்ற கொள்கைகளேயே பின்பற்றி வந்திருக்கின்றன. சமூக செலவினங்களை வெட்டியது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைத் துறைகளில் வேலைநிறுத்தங்களை சட்டவிரோதமாக்கியது மற்றும் பெருவணிகங்கள் தமது நிலங்களை பறித்ததை எதிர்த்துப் போராடிய விவசாயிகளை வன்முறை கொண்டு ஒடுக்கியது ஆகியவை இந்த ”முதலீட்டாளர்-ஆதரவு” கொள்கைகளில் அடங்கும்.

AITUC மற்றும் CITU, அத்துடன் அவர்களது அரசியல் குருக்களான CPI மற்றும் CPM ஆகியவற்றை பொறுத்தவரை, பிப்ரவரி 20- 21 வேலைநிறுத்தப் போராட்டம் என்பது வலதுசாரி அரசியல் சக்திகளது ஒரு தொடர்ச்சியுடன் அவர்கள் கொண்டிருக்கக் கூடிய ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான ஒரு முயற்சியையே குறிக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (INTUC), மற்றும் பாஜகவுடன் இணைப்பு கொண்ட பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) ஆகியவை இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்பது “வரலாற்றுச் சிறப்பானது” என்று இவை போற்றுகின்றன. உண்மையில், ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளின் தொழிற்சங்க தலையாட்டிகளின் ஆதரவை பட்டியலிடுவதின் மூலம், இந்த வாரத்தின் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் ஸ்தாபகத்திற்கு விடுக்கப்பட்ட சவால் அல்ல என்பதையே ஸ்ராலினிஸ்டுகள் ஐயமறத் தெளிவுபடுத்துகின்றனர். மதிப்பிழந்த வலதுசாரி INTUC மற்றும் BMS எந்திரங்கள், தங்கள் பங்காக, ஸ்ராலின்ஸ்டுகளின் இந்த ஒத்துழைப்பு சலுகையை வரவேற்கின்றன. வெகுஜன அதிருப்தி கொந்தளித்துக் கொண்டிருப்பதான நிலைமைகளின் கீழ், ”தொழிலாளர் பிரதிநிதிகள்” என்று இவை கூறிக் கொள்வதற்கான பூச்சு வேலைக்கும், இவற்றின் கட்சிகள் ஆம் ஆத்மி (சாமானிய மக்கள்) குறித்துக் கவலைப்படுவனவாக போடும் வேடத்தை ஊக்குவிப்பதற்கும் இது வகைசெய்து தருகிறது.

தொழிலாள வர்க்கத்தை வலதுசாரி சக்திகளுடன் கட்டிப் போடுவதற்கே ஸ்ராலினிஸ்டுகள் முனைகின்றனர் என்பது AITUC இன் பொதுச் செயலரும் CPI கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான குருதாஸ் தாஸ்குப்தாவின் நடவடிக்கைகளில் வெட்டவெளிச்சமாகிறது. கர்நாடக முதலமைச்சர் ஜக்தீஷ் ஷெட்டர் மற்றும் ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் இந்த வேலைநிறுத்தத்திற்கு “தார்மீக ஆதரவு” அளிப்பதாக தாஸ்குப்தா பெருமைபொங்கக் கூறியிருக்கிறார். ஷெட்டர் ஒரு பாஜக அரசாங்கத்திற்குத் தலைமை கொடுக்கிறார். பட்நாயக் தலைமை கொடுக்கின்ற BJD என்ற பிராந்திய கட்சி நவ-தாராளவாத சீர்திருத்தங்களை அமல்படுத்தியிருப்பதுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் ஆட்சியிலிருந்த ஆறு வருடங்கள் அதற்குச் சேவையாற்றி இருக்கிறது. எந்தவித அர்த்தமுமற்ற “தார்மீக ஆதரவினை” பட்நாயக் அறிவித்ததைத் தொடர்ந்து, “அவரது பெருந்தன்மையான ஆதரவுக்காகவும் சாமானிய மக்களின் மீதும் ஏழைகளின் பரிதாப நிலையின் மீதும் அவர் காட்டிய அக்கறைக்காகவும்” தாஸ்குப்தா அவருக்கு பகிரங்கமாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.

மராத்தி மற்றும் இந்து மேலாதிக்கவாதத்தை தூண்டி விட்டும் வேலைநிறுத்தத்தை உடைக்க குண்டர்களை ஏற்பாடு செய்ததிலும் - இதில் மிகக் குறிப்பிடத்தக்கதாக 1982 பாம்பே டெக்ஸ்டைல் வேலைநிறுத்தத்தைக் குறிப்பிடலாம்- புகழ் அடைந்த ஒரு பாசிசக் கட்சியான சிவசேனாக் கட்சியிடம் இருந்து இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு பெறுவதற்காக உத்தவ் தாக்கரேயைச் சந்திக்க மும்பைக்கும் பயணம் செய்தார் தாஸ்குப்தா.

மேற்கு வங்காளத்திலும் கேரளாவிலும் இடது முன்னணி அரசாங்கங்கள் பின்பற்றிய பெருவணிகக் கொள்கைகளின் விளைவாக, CPI மற்றும் CPM கட்சிகள் தொடர்ச்சியான தேர்தல் படுதோல்விகளைச் சந்தித்தன. 2009 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய நாடாளுமன்ற மக்களவையில் இக்கட்சிகளது பிரதிநிதிகளின் எண்ணிக்கை பாதியாகி விட்டது. 2011 மாநிலத் தேர்தல்களில், மேற்கு வங்காளம் மற்றும் கேரளா இரண்டு மாநிலங்களிலும் அக்கட்சிகள் அதிகாரத்தில் இருந்து கீழிறக்கப்பட்டன.

ஸ்ராலினிஸ்டுகள், இந்த வாரத்தின் வேலைநிறுத்தப் போராட்டத்தின் மூலமாக, சமூக அதிருப்தியை கட்டுப்பாட்டுக்குள் வைப்பதில் அவர்கள் எத்தனை உபயோகமாக இருப்பார்கள் என்பதையும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் பக்கமிருக்கும் சக்திகளுடனும் சேர்ந்து வேலை செய்ய அவர்கள் எத்தனை தயாராய் இருக்கிறார்கள் என்பதையும் ஆளும் வர்க்கத்திற்கு எடுத்துக் காட்டி, ஸ்தாபக அரசியலில் தாங்கள் இன்னமும் ஒரு முக்கியமான தரப்பாகத் திகழ்வதிலும் அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அரசியல் பேரத்திற்கு தாங்கள் வரவேற்கப்படுவதிலும் இந்தியாவின் அரசியல் உயரடுக்கிற்கு உறுதியேற்படுத்துவதற்கே முனைந்து கொண்டிருக்கின்றனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு முன்னோக்கிற்கு குரலாக, தாஸ்குப்தா இம்மாதத்தின் ஆரம்பத்தில், “பொருளாதாரத்தில் ஒரு பங்குதாரராக அமைகின்ற தொழிற்சங்கங்களை அரசாங்கம் உதாசீனப்படுத்துகிறது” என்று புலம்பினார்.

மேற்கு வங்காளத்தில் இந்த வாரத்தின் போராட்டத்தை ஒரேயொரு நாளுடன் மட்டுப்படுத்தியதை நியாயப்படுத்துவதற்கு எத்தகைய மோசடியான சாக்கினை CPM கையிலெடுத்துள்ளது என்பதைக் கவனித்தால் தொழிலாளர்கள் ஸ்ராலினிஸ்டுகளைப் புரிந்து கொள்ள இயலும். புதிய முதலமைச்சர் மம்தா பானர்ஜி CPMஐ அதிகாரத்தை விட்டுக் கீழிறக்க கையிலெடுத்த வெகுஜனப் பங்காளர் வேடத்தை தூக்கியெறிய அவர் போதுமான அளவு விரைந்து செயல்படவில்லை என்று கருதுகின்ற பெரு வணிகங்களுக்கு விண்ணப்பம் செய்ய வேலைநிறுத்தப் போராட்டத்தை ஒருநாளாகக் குறைப்பதன் மூலம் CPM முனைகிறது. கொல்கத்தாவில் இருந்து வெளியாகும் டெலிகிராப் பத்திரிகை CPM இன் மாநிலத் தலைவர் ஒருவரின் விளக்கமாக மேற்கோளிடுகிறது, “மாநிலத்தின் நிலையையும் [CPM முன்னாள் முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சாரியா] தொழிற்துறைக்கு ஆதரவாகத் தொடர்ந்து வலியுறுத்தி வருவதையிட்டும் கொண்டு பார்த்தால், இரண்டு நாள் வேலைநிறுத்தம் இடதின் பிம்பத்தை மோசமாகப் பாதிப்பதாக அமையும்.”

முதலாளித்துவம் தோற்றுப் போயிருக்கிறது. முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில், ஆளும் உயரடுக்கு கண்கூடான வகையில் சமூக எதிர்ப்புரட்சியைப் பின்பற்றி வருகிறது. பொதுச் சேவைகளையும் கடந்த நூற்றாண்டில் கொந்தளிப்பான போராட்டங்கள் மூலம் தொழிலாளர்கள் வென்றெடுத்திருக்கும் வரம்புபட்ட சமூக உரிமைகளையும் அழிப்பதற்கு அது முனைந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில், இருபது வருட சந்தைச் சீர்திருத்தங்கள், ஒரு சிறு பெருவணிக உயரடுக்கு அபாரமான சொத்துகளைக் குவிப்பதற்கும் மக்களில் பெரும்பகுதியினர் வறுமைக்குள்ளும் பொருளாதாரப் பாதுகாப்பின்மைக்குள்ளும் வாழும் நிலைக்கும் இட்டுச் சென்றிருக்கும் நிலையில், இப்போது முதலாளித்துவ வர்க்கம் கோடிக்கணக்கிலான மக்களை வறுமைக்குள்ளும் நிர்க்கதிக்குள்ளும் தள்ள அச்சுறுத்துகின்ற “தியாகங்களை” வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

தொழிலாள வர்க்கம் தமது வேலைகளையும் ஊதியங்களையும் பாதுகாக்க வேண்டும், கண்ணியமான பொதுச் சுகாதாரம் மற்றும் கல்விக்கான உரிமையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் அது ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை, ஒரு தொழிலாளர்’ மற்றும் விவசாயிகள்’ அரசாங்கத்திற்காக தெற்காசியா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுடன் ஒன்றிணைந்து நடத்துகின்ற ஒரு போராட்டத்தை, முன்னெடுத்தாக வேண்டும். அத்தகையதொரு அரசாங்கம் வங்கிகளையும் அடிப்படையான தொழிற்துறையையும் கைப்பற்றி அவற்றை பொது உரிமைத்துவம் மற்றும் தொழிலாளர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும். அப்போது தான் பொருளாதாரமானது விரல்விட்டு எண்ணத்தக்க முதலாளிகளை செழுமைப்படுத்துவதற்காய் இல்லாமல் சமூகத் தேவையை பூர்த்தி செய்வதற்கான வகையில் ஒழுங்கமைக்கப்பட முடியும்.

தொழிலாளர்கள் ஸ்ராலினிசக் கட்சிகளிடம் இருந்தும் அவற்றின் தொழிற்சங்கங்களிடம் இருந்தும் முறித்துக் கொண்டு தத்தமது வேலையிடங்கள் மற்றும் பிராந்தியங்களில் போராட்டத்திற்கான புதிய அமைப்புகளை உருவாக்க வேண்டும். அந்தப் புதிய அமைப்புகள் தொழிலாளர்கள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை கொடுக்கும் என்பதோடு, ஆளும் வர்க்கம், அதன் அரசியல் பிரதிநிதிகள் மற்றும் அரசு எந்திரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தையும் கட்டியெழுப்பும். இந்திய முதலாளித்துவ வர்க்கத்தின் அடிமை உழைப்பு நிலைய சுரண்டலைத் திணிப்பதில் அரசாங்கம், போலிஸ், மற்றும் நீதிமன்றங்களின் பாத்திரத்தை மாருதி சுசுகி நிறுவனத்தின் மானேசர் கார் ஒன்றுசேர்ப்பு ஆலையில் பாதிப்புக்குள்ளான தொழிலாளர்களின் பரிதாப நிலை தெளிவுற விளங்கப்படுத்துகிறது.

ஏழை விவசாயிகளையும் மற்ற ஒடுக்கப்பட்ட வெகுஜனப் பிரிவுகளையும் நிலப் பண்ணையார்களுக்கும், கந்துவட்டிக்காரர்களுக்கும் மற்றும் பெருவணிகங்களுக்கும் எதிராக அணிதிரட்டத்தக்க ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதின் மூலம் தொழிலாள வர்க்கமானது அந்த விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தலைமையை வழங்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாய், இந்திய முதலாளித்துவ வர்க்கத்திற்கும் உலக ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு தலைமை கொடுப்பதற்கு சர்வதேச சோசலிசத்தின் வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கினை அடித்தளமாகக் கொண்டதொரு புதிய கட்சி தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமாக இருக்கிறது. 1917 ரஷ்யப் புரட்சியில் இணைத் தலைவராகவும், முதலாவது தொழிலாளர்’ அரசு தனிமைப்பட்டதான நிலைமைகளின் கீழ் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து அதிகாரத்தை தட்டிப்பறித்துக் கொண்ட சலுகைபடைத்த ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சமரசமற்ற எதிர்ப்பாளராகவும் திகழ்ந்த லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபகம் செய்யப்பட்ட சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மட்டுமே சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் அத்தகையதொரு புரட்சிகரத் தலைமையை கட்டியெழுப்புவதற்கு போராடி வருகிறது.