ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian court to hear sentencing arguments against framed-up Maruti Suzuki workers

ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூசி தொழிலாளர்களுக்கு எதிராக, இந்திய நீதிமன்றம் தண்டனை குறித்த வாதங்களை கேட்க உள்ளது

By Shannon Jones
17 March 2017

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் மானேசர் கார் உற்பத்தி ஆலையில் நடந்த ஒரு 2012 சம்பவம் தொடர்பாக, ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் தீர்ப்பளிக்கப்பட்ட அந்நிறுவனத்தின் 31 தொழிலாளர்களுக்கான தண்டனை மீதான வாதங்களை ஒரு இந்திய நீதிமன்றம் இன்று மார்ச் 17 இல் வெள்ளியன்று விசாரிக்க உள்ளது. "கொலை குற்றம்" புரிந்தவர்களாக தீர்ப்பு வழங்கப்பட்டதில் சிலருக்கு அல்லது அனைத்து 13 தொழிலாளர்களுக்கும் மரண தண்டனை விதிக்க கோர இருப்பதாக வழக்கு தொடுத்த தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜூலை 2012 இல் நிர்வாகம்-தூண்டிவிட்ட கலகத்திற்கும் மற்றும் அந்த வாகன ஆலையில் தீயிட்டதற்கும் இந்த தொழிலாளர்களைப் பொறுப்பாக்கி குற்றஞ்சாட்டப்பட்டது. அதில் ஆலையின் ஒரு பகுதி தீக்கிரையானதுடன், மனிதவள மேலாளர் ஒருவரும் கொல்லப்பட்டார். நிறுவனத்திற்கு ஆதரவான ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிராக நிறுவப்பட்ட ஒரு சுயாதீனமான தொழிற்சங்கமான மாருதி சுசூகி தொழிற்சங்கத்தின் (MSWU) ஒட்டுமொத்த தலைவர்கள் உட்பட அனைவரும் சாத்தியமான மரண தண்டனையை முகங்கொடுத்துள்ளனர். இன்னும் பதினெட்டு தொழிலாளர்கள் மீது, கலகம் மற்றும் ஏனைய தீவிர கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் இரண்டு பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து பேரினவாத பாரதீய ஜனதா கட்சி (பிஜேபி) ஆகியவை உட்பட பொலிஸ் மற்றும் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், அப்பட்டமாக அந்நிர்வாகத்தால் ஜோடிக்கப்பட்ட சதியால் இந்த தொழிலாளர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

எந்த சம்பவத்திற்காக கடந்த வாரம் இத்தொழிலாளர்கள் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டதோ, அதை நிறுவனம் தான் தூண்டியது, அதன் பின்னர் மிகவும் போர்குணத்துடன் இருந்த 150 தொழிலாளர்களை வேட்டையாடவும் மற்றும் அதன் தொழிலாளர் சக்தியைக் குறைக்கவும் அச்சம்பவம் பயன்படுத்தப்பட்டது. அச்சம்பவத்தில், தொழிலாளர்கள் மீது அனுதாபம் கொண்டிருந்த ஒரே நிறுவன அதிகாரியான மனிதவள பொது மேலாளர் அவனிஷ் குமார் தேவ் கொல்லப்பட்டார்.

இந்தியாவின் தலைநகரமும் மற்றும் மிகப் பெரிய நகரமும் ஆன டெல்லிக்கு அருகே ஹரியானா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மிகப்பெரிய வாகன உற்பத்தி மையமான குர்காவ்-மானேசர் தொழிற்பேட்டை பகுதியில் கடுமையான மலிவு-கூலி முறையை முகங்கொடுக்கும் தொழிலாளர்களின் எதிர்ப்பு மையமாக அவர்கள் மாறியிருப்பதால், மானேசர் ஆலை தொழிலாளர்கள் இலக்கில் வைக்கப்பட்டு வருகிறார்கள்.

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தில் அதன் ஜப்பானிய தலைமை நிறுவனம் பெரும்பான்மை பங்குகளைக் கொண்டிருப்பதுடன், நாட்டின் கார் சந்தையில் 50 சதவீத பங்களிப்புடன் இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக உள்ளது.

மானேசர் தொழிலாளர்கள், அந்த ஆலையில் நிறுவனத்தின் மேலாளுமையில் இருந்த தலையாட்டி தொழிற்சங்கங்கள் மற்றும் பிரதான தொழிற்சங்க சம்மேளனங்களை எதிர்த்து, 2011 இல் தொடர்ச்சியான போராட்டங்களையும் மற்றும் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்களையும் நடத்தினர். நீதிமன்றம் இந்த 31 பேரை குற்றவாளிகளாக காண்பதில், வழக்கு தொடுத்த தரப்பிற்கும் மற்றும் நிர்வாகத்திற்கும் இடையிலான உள்கூட்டு குறித்த அதன் சொந்த கண்டுபிடிப்புகள் மற்றும் இட்டுக்கட்டப்பட்ட சாட்சியங்களை எல்லாம் உதறி விட்டுள்ளது. உண்மையில், இந்த 31 நபர்களோடு சேர்ந்து கைது செய்யப்பட்டு குற்றஞ்சாட்டப்பட்ட ஏனைய 117 தொழிலாளர்களும் எந்தவொரு குற்றங்களும் செய்திராத அப்பாவிகள் என்பதை அந்நீதிமன்றம் கடந்த வாரம் நிர்பந்தமாக ஒப்புக் கொள்ள வேண்டி இருந்தது.

அந்த கலகம் மற்றும் தீயிடல் மீது பொலிஸ் சுதந்திரமான ஆழ்ந்த விசாரணைகளை நடத்தவில்லை என்பதை பிரதிவாதிகள் எடுத்துக்காட்டினர். வழக்கு தொடுத்த தரப்பும், நிர்வாகமும் வழங்கியிருந்த "சந்தேகத்திற்குரியவர்கள்" பட்டியலின் அடிப்படையிலும், சொல்லிக் கொடுக்கப்பட்ட “நேரில் பார்த்த சாட்சிகள்" வழங்கிய சாட்சியங்களின் அடிப்படையிலும் அவர்களது வழக்கை நடத்தினர். சான்றாக, வழக்கு தொடுத்த தரப்பைச் சார்ந்த நேரில் பார்த்ததாக கூறும் நான்கு சாட்சிகள், அந்த கூறப்படும் குற்றங்களைப் பார்த்ததாக "பெயர் வரிசை கிரமமாக" பட்டியலிட்டதைப் பிரதிவாதிகள் எடுத்துக்காட்டிய போது, அந்த "சாட்சியங்களின்" ஜோடிக்கப்பட்ட தன்மை வெளிப்பட்டது. அவர்களில் ஒருவர், அந்த ஆலையின் ஒரு பிரிவில் குற்றங்களைச் செய்தவர்களாக A இல் இருந்து G வரை எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்களைப் பார்த்ததாக கூறியிருந்தார், மற்றொருவர் H இல் இருந்து P வரையிலான எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களைக் கொண்டவர்களைப் பார்த்ததாக கூறினார், இன்னும் இது போல தொடர்கிறது.

அந்த நெருப்பை தொழிலாளர்கள் தான் பற்ற வைத்தார்கள் என்பதே அந்த ஒட்டுமொத்த வழக்கின், அதுவும் குறிப்பாக "கொலை முயற்சிக்கான" குற்றச்சாட்டுகளின் மையத்தில் இருந்த போதும், அந்த ஆலையில் யார் நெருப்பைப் பற்ற வைத்தவர்கள் என்று காட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், அங்கே எவ்வாறு நெருப்பு பற்றியது என்பதை கூட வழக்கு தொடுத்தவர்கள் தரப்பு எடுத்துக்காட்டவில்லை. வழக்கு தொடுத்தவர்களின் சார்பில் நேரில் பார்த்ததாக ஆஜரான சாட்சிகள், அவர்கள் சாட்சியளித்தவர்களுக்கு எதிராக மீண்டும் அவர்களை அடையாளங்காட்ட முடியாமல் இருந்தனர்.

அந்த ஜோடிப்பு வழக்கு நெடுகிலும், வழக்கு தொடுத்த தரப்பு, அப்பட்டமாக பழிவாங்கும்ரீதியில் செயல்பட்டது. பல ஆண்டுகளால அது அந்த 148 தொழிலாளர்களில் யாரொருவருக்கும் பிணை வழங்குவதை எதிர்த்து வந்ததுடன், அதுவும் மற்றும் நீதிமன்றமும் இரண்டுமே கைது செய்யப்பட்ட தொழிலாளர்கள் மீதான துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதை குறித்த கண்கூடான ஆதாரங்களைப் புறக்கணித்தன. கால்களைக் கடுமையாக நீட்டுவது (leg stretching), மின் அதிர்ச்சி அளிப்பது மற்றும் நீரில் மூழ்கடித்து எடுப்பது (water immersion) போன்றவற்றிற்கு தொழிலாளர்கள் உள்ளாக்கப்பட்டனர். நம்பத்தகுந்த ஆதாரங்கள் இல்லாத போதும், கைது செய்யப்பட்ட தொழிலாளர்களில் யாருக்குமே மார்ச் 2015 வரையில் பிணை வழங்கப்படவில்லை.

நெருப்புக்கு இரையான பின்னர் அந்த ஆலை மீண்டும் திறக்கப்பட்ட போது, மானேசர் ஆலை தொழிலாளர்கள் ஒரு பாரிய களையெடுப்புக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சுமார் 2,300 தொழிலாளர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டு, பிரதியீடு செய்யப்பட்டார்கள். காலையில் வெறும் ஏழு நிமிட இடைவேளை, மதிய உணவு நேரம் வெறும் 30 நிமிடங்கள் மற்றும் ஏழு நிமிட நேர தேனீர் இடைவேளை மட்டுமே தொழிலாளர்களுக்கு அனுமதிக்கப்பட்டதுடன், ஆலை நிலைமைகள் கடுமையாக உள்ளன. பலர் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். சமீபத்திய ஒரு செய்தியின்படி, தொழிலாளர் சக்தியில் பெரும்பாலானவர்கள், கூடுதலாக பல்வேறு ஊக்கத்தொகை கொடுப்பனவுகளில் ரூ. 8,000 சம்பாதிக்கலாம் என்ற சாத்தியக்கூறுடன், அடிப்படை சம்பளமாக மாதம் வெறுமனே 8,000 ரூபாய் (125 அமெரிக்க டாலருக்கும் குறைவான) பெற்று வருகின்றனர்.

இந்திய அரசு அதிகாரிகள், குர்காவ் மாவட்டத்தில் ஐந்திற்கும் அதிகமானவர்கள் ஒன்றுகூடுவதற்குத் தடைவிதிக்கும் அவசரகால அதிகாரங்களைக் கையிலெடுத்தும் மற்றும் "எளிதில் புறத்தூண்டல் பெறும்" இடங்கள் என்றழைக்கப்படும் இடங்களில் சுமார் 2,500 பொலிஸாரை ஒன்றுதிரட்டியும், மார்ச் 10 ஆம் தேதி நீதிமன்ற தீர்ப்புக்கு கோபமான விடையிறுப்பு குறித்து அவர்கள் மிகவும் பயந்திருந்தனர். நூற்றுக் கணக்கான பொலிஸ் மானேசர் ஆலையைச் சுற்றி நிலைநிறுத்தப்பட்டனர்.

வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவைக் காட்டும் விதத்தில், குர்காவ்-மானேசர் தொழிற்பேட்டை பகுதியில் சுமார் 30,000 தொழிலாளர் அந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாக மதிய உணவைத் தவிர்த்திருந்தனர். ஆலை கதவு முன்னர் நடந்த கூட்டங்களிலும் பலர் பங்கெடுத்தனர்.

முன்னர் ஹரியானாவில் இருந்த காங்கிரஸ் கட்சியின் மாநில அரசாங்கம், இந்த ஜோடிப்பு வழக்கை எதிர்த்து தொழிலாளர்களின் ஐக்கியப்பட்ட பேரணிகளை ஒடுக்க பொலிஸிற்கு உத்தரவிட்டது உட்பட, மாருதி சுசூகி உடன் மிக நெருக்கமாக கூடி வேலை செய்தது. தொழிலாளர்களின் ஒரு குழு ஹரியானா காங்கிரஸ் கட்சி முதலமைச்சர் புபேந்தர் சிங் ஹூடாவை எதிர்கொண்ட போது, அவர்கள் கலைந்து செல்லாவிடில் "அங்கேயே அவர்கள் கைது செய்யப்படுவார்கள்" என்றவர் அச்சுறுத்தினார். ஹரியானா மாநிலத்தில் பிஜேபி அரசாங்கம் பதவி ஏற்ற பின்னரும், தொழிலாளர்களுக்கு எதிரான அந்த பழி தீர்க்கும் வேட்டை தொடர்ந்தது. இதற்கிடையே, ஸ்ராலினிச செல்வாக்கு பெற்ற உத்தியோகப்பூர்வ தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைத் தனிமைப்படுத்தியதுடன், எந்தவொரு முக்கிய ஒன்றுபட்ட நடவடிக்கைகளையும் ஒழுங்கமைக்கவில்லை, அதேவேளையில் நீதிமன்றங்களது "நீதி" மீது நம்பிக்கை வைக்குமாறு அவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி வந்தன.

மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் இந்த வஞ்சிக்கப்பட்ட தொழிலாளர்கள், வாகனத்துறை தொழிலாளர்கள் அனைவரது ஆதரவையும் மற்றும் சர்வதேச தொழிலாளர்களின் ஆதரவையும் பெற தகுதியானவர்கள் ஆவர். இந்த தொழிலாளர்களை நசுக்கும் முயற்சியானது, தசாப்தகால போராட்டத்தில் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட ஆதாயங்களைத் திரும்பப் பெற முயற்சித்து வரும் பன்னாட்டு வாகனத்துறை நிறுவனங்களால் கூலிகள், வேலையிட நிலைமைகள், மற்றும் வேலைகள் மீது நடத்தப்படும் ஓர் உலகளாவிய தாக்குதலின் பாகமாகும்.

இலாபங்களை அதிகரிப்பதற்கான மற்றும் "பங்குதாரர் மதிப்பை" பாதுகாப்பதற்கான நலன்களுக்காக, ஒரு கடுமையான மலிவு-கூலி முறையைப் பேணுவதற்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பதை முதலீட்டாளர்களுக்கு ஒரு சேதியாக வழங்க, இந்த தைரியமான தொழிலாளர்களை, குறிப்பாக மாருதி சுசூகி நிறுவனமும் இந்திய அரசாங்கமும், ஒரு முன்னுதாரணமாக்க தீர்மானகரமாக உள்ளன.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

திஃபேக்டரி: ஆவணப்படம் இந்திய வாகன உற்பத்தித் துறை தொழிலாளர்களின் போராட்டத்தை சர்வதேச பார்வையாளர்களுக்கு எடுத்துச்செல்கிறது

[25 November 2015]

இந்தியாவின் "நீதித்துறை முதலாளித்துவவாதிகளின் நிகழ்ச்சிநிரலின் மீது செயல்படுகிறது"

[8 January 2014]

India: Jailed Maruti Suzuki workers subjected to torture
[23 October 2012]