ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Support grows for framed up Maruti Suzuki workers in India

இந்தியாவில் ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சூசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவு பெருகுகிறது

By Jerry White
21 March 2017

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி ஆலையில் ஜூலை 2012 தொழிலாளர் மோதலுக்குப் பின்னர், கொலைக் குற்றச்சாட்டுக்களின் சிக்கவைக்கப்பட்ட 13 தொழிலாளர்களுக்கு ஒரு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியதும், இந்தியாவின் தலைநகரான டெல்லியை அடுத்துள்ள மானேசர்-குர்காவ் தொழில்துறை பகுதியில் பெருந்திரளான மக்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது.

குர்காவ் மாவட்ட நீதிமன்றத்தில் அந்த தண்டனைகள் வாசிக்கப்பட்டு வெறும் சில மணிநேரத்தில், மாருதி சுசூகி ஆலையிலும் மற்றும் மானேசரைச் சுற்றியுள்ள வினியோக ஆலைகளிலும் 30,000 தொழிலாளர்கள், நிர்வாகத்தின் எட்டு நாள் சம்பள வெட்டு அச்சுறுத்தல்களுக்கு இடையிலும், ஒரு மணி நேரம் "வேலை செய்ய மறுத்துள்ளனர்". இந்த நடவடிக்கை ஜூலை 2012 மோதலின் காட்சிக்களமான மானேசரில் உள்ள மாருதி சுசூகி உற்பத்தி ஆலையிலும், குர்காவில் உள்ள மற்றொரு உற்பத்தி ஆலையிலும், மாருதி சுசூகி பவர்ட்ரைன், சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா மற்றும் இன்னும் இரண்டு வாகன உற்பத்தி பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்களில் உற்பத்தியை நிறுத்தியது.

சனிக்கிழமை வேலைநிறுத்ததிற்கு அழைப்புவிடுத்திருந்த அப்பகுதியின் ஆறு தொழிற்சங்கங்கள், மார்ச் 25 வரையில் குர்காவில் அதிகாரிகள் திணித்துள்ள 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது மீதான ஒரு தடையை எதிர்த்து மானேசரில் மார்ச் 23 போராட்ட பேரணிக்கு அழைப்புவிடுத்துள்ளன. இத்தடையானது, துல்லியமாக மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கு மீது பாரிய தொழிலாளர் எதிர்ப்பு குறித்து அவை அஞ்சுவதாலாகும்.

நிறுவனத்தின் ஒரு தலையாட்டி தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு எதிர்ப்பினூடாக மானேசர் ஆலை தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர் தொழிற்சங்கம் (MSWU), ஏப்ரல் 4 அன்று நாடுதழுவிய ஒரு போராட்டத்திற்கு திட்டமிட்டு வருவதாகவும் தெரிவிக்கிறது.

MSWU தலைவர் ராம் மெஹர் மற்றும் அந்த தொழிற்சங்கத்தின் ஏனைய பதினொரு நிர்வாக அங்கத்தவர்களும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 13 பேரில் உள்ளடங்குவர்.

சிக்க வைக்கப்பட்ட தொழிலாளர்கள் சிலருக்கான ஒரு பிரதிவாதி வழக்கறிஞர் ராஜேந்திர பதக், உலக சோசலிச வலைத் தள செய்தியாளர் ஒருவரிடம் கூறுகையில், “இந்த நீதித்துறை முதலாளித்துவ மனோநிலை கொண்டவர்களைக் கொண்டுள்ளது. இந்த முதலாளித்துவ சமூகத்தில் பணக்காரர்கள் அவர்களிடம் அனைத்து விதமான வழிவகைகளையும் கொண்டுள்ளனர், நீதிபதிகளையும் கூட,” என்றார்.

தொழிலாளர்கள் அவர்கள் மீதான தண்டனைகள் மற்றும் குற்றத்தீர்ப்பு மீது உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யலாமென பதக் தெரிவித்தார். “குற்றத் தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த 13 தொழிலாளர்களுக்கு எதிராக கொலை குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான கோப்பில் எந்த ஆதாரமும் இல்லை,” என்றவர் தெரிவித்தார். “ஆனால் இந்த போராட்டம் முதலாளித்துவ சமூகத்திற்கு எதிரான போராட்டம் என்பதால் இதுபோன்றவொரு வழக்கில் என்ன முடிவு வருமென்று என்னால் உறுதியாக கூற முடியாது. இது ஆண்டுக்கணக்கில் நீண்டு கொண்டே போகலாம் … மேலும் இறுதி தீர்ப்பு வரும் வரையில் இந்த 13 பேரும் பலவந்தமாக காவலிலேயே வைக்கப்பட்டிருப்பார்கள்.”

தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, மாருதி சுசூகியின் இணை ஆலையினது தொழிலாளி ஒருவர் ஹிந்துஸ்தான் டைம்ஸிற்கு கூறுகையில், “இன்று மாருதியில் நடந்துள்ளது, நாளை நாங்களும் சிறையில் இருக்க வேண்டியிருக்கலாம். எங்கள் தோழர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம், ஆனால் வேறெந்த தொழிற்சங்கத்தைக் காட்டிலும் அதிகமாகவே மாருதி ஏற்கனவே எங்களை ஐக்கியப்படுத்தி உள்ளது,” என்றார்.

சந்தீப் தில்லன், ராம் பிலாஸ், சரப்ஜீத் சிங், பவன் குமார், சோஹன் குமார், அஜ்மர் சிங், சுரேஷ் குமார், அமர்ஜீத், தன்ராஜ் பாம்பி, பிரதீப் குஜ்ஜார், யோகேஷ் மற்றும் ஜியாலால் ஆகியோர், ராம் மெஹருடன் சேர்ந்து, ஆயுள் தண்டனையை முகங்கொடுக்கும் ஏனையவர்கள் ஆவர்.

இந்த தொழிலாளர்கள், இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் இந்து மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பிஜேபி) ஆகியவற்றின் முழு ஒத்துழைப்புடன், சுசூகி பெருநிறுவனம், பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகளால் நடத்தப்பட்ட ஈவிரக்கமற்ற ஜோடிப்பிற்கு இரையாகி உள்ளனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு இந்த கேலிக்கூத்தை எதிர்க்க ஒரு சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளதுடன், இந்த மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும் கோருகிறது. உலகெங்கிலும் இருந்து தொழிலாளர்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான பாதுகாவலர்களால் ஏற்கனவே ஒரு இணையவழி மனு கையெழுத்திடப்பட்டு வருகிறது.

அந்த ஆலை தளத்தில் ஜூலை 18, 2012 அன்று நிர்வாகம் தூண்டிவிட்ட ஒரு கைகலப்பிற்கு இடையே, திடீரென புதிரான விதத்தில் ஏற்பட்ட நெருப்பில் மூச்சுத் திணறி மனிதவள மேலாளர் அவனிஷ் குமார் தேவ் இறந்தார் என்பதே இந்த ஜோடிப்பு வழக்கிற்கான சாக்குபோக்காக இருந்தது. தொழிலாளர்களுக்கு அனுதாபமாக இருந்தவரும், மார்ச் 1, 2012 இல் MSWU ஐ பதிவு செய்ய தொழிலாளர்களுக்கு உதவியவருமான தேவ் இன் மரணத்துடன், MWSU நிர்வாக அங்கத்தவர்கள் ஏதேனும் விதத்தில் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதற்கு அங்கே முற்றிலுமாக எந்த ஆதாரமும் இல்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், எந்தவொரு தொழிலாளரும் அச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டிருந்தார்கள் என்பதற்கும் கூட அங்கே எந்த ஆதாரமும் இல்லை.

ஆலை தளத்தில் ஒரு மேற்பார்வையாளர் ஜாதி அடிப்படையில் அவதூறாக பேசி, ஜியாலால் எனும் ஒரு தொழிலாளியை அவமானப்படுத்திய போதுதான் ஜூலை 18 கைக்கலப்பு தொடங்கியது. மற்ற தொழிலாளர்கள் அந்த தொழிலாளருக்கு ஆதரவாக வந்த போது, ஏற்கனவே ஆலையில் பலமாக நிறுத்தப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு சேவை ஆட்கள் தொழிலாளர்களுடன் வன்முறையான மோதலில் ஈடுபட்டனர், அப்போது ஏற்பட்ட நெருப்புத்தான் ஆலையின் ஒரு பகுதியை நாசமாக்கியது.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்கில், ஜியாலால் "பிரதான குற்றவாளியாக" இருந்தார் என்பதோடு, ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட பன்னிரெண்டு MSWU நிர்வாக அங்கத்தவர்களுடன் சேர்ந்து அவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

ஜூலை 18 கைகலப்பை அடுத்து, அரசாங்கமும் அரசு எந்திரமும், அந்த வாகனத்துறை நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, MSWU ஐ மற்றும் தொழிலாளர்களின் எந்தவொரு எதிர்ப்பையும் நசுக்கும் நோக்கில் கடுமையான அரசு ஒடுக்குமுறை நடவடிக்கையை கட்டவிழ்த்துவிட்டன. தொழிலாளர்கள் வாழுமிடங்களுக்குள் பொலிஸ் நுழைந்ததுடன், சுசூகி நிர்வாகம் வழங்கிய "சந்தேகத்திற்குரியவர்கள்" பட்டியலின் அடிப்படையில், நூற்றுக் கணக்கான தொழிலாளர்களை அடித்து கைது செய்தது. பின்னர் அந்நிறுவனம் ஆலை கதவடைப்பு செய்ததுடன், ஆகஸ்ட் 2012 இல் 2,300 தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்கி வேறு ஆட்களைக் கொண்டு பிரதியீடு செய்து களையெடுப்பு நடாத்தியது.

இந்த இரகசிய வேட்டையாடல், ஓராண்டுக்கும் அதிகமான காலம் நடந்திருந்த தைரியமான போராட்டத்திற்குப் பின்னர் நடந்திருந்தது, அப்போராட்டங்களில் தொழிலாளர்கள் மீண்டும் மீண்டும் வெளிநடப்புகள் மற்றும் உள்ளிருப்பு வேலைநிறுத்தங்கள் மேற்கொண்டதோடு, நிறுவன தலையாட்டி தொழிற்சங்கத்தை எதிர்ப்பு வெற்றிகரமாக அவர்களின் கோரிக்கைகளுக்காக போராட MSWU ஐ உருவாக்கினார்கள். வெறுக்கப்பட்ட தொழிலாளர் ஒப்பந்த முறையைக் கைவிட வேண்டும் என்பதே இவற்றின் மத்தியில் உள்ளது, இந்த முறையானது ஆயிரக் கணக்கான மலிவுகூலி தற்காலிக தொழிலாளர்களை நியமிக்கவும், அவர்கள் முழு நேர நிலைமைகளுக்கு தகுதியடைவதற்கு முன்னதாக அவர்களை வேலையிலிருந்து நீக்கவும் சுசூகி நிறுவனத்தை அனுமதிக்கிறது. ஏழு மாதங்கள் ஒப்பந்தத்தில் வைக்கப்பட்டு பின்னர் ஐந்து மாதங்களுக்கு வெளியில் அனுப்பப்படும் இப்போதைய "நிறுவன தற்காலிகர்கள்" (company temps) என்பவர்களுக்கு மாதம் 14,000 ரூபாய் (214 அமெரிக்க டாலர்) சம்பளமாக வழங்கப்படுகிறது, இது ரூ. 35,000 (536 அமெரிக்க டாலர்) அல்லது அதற்கு அதிகமாக சம்பாதிக்கும் நிரந்தர தொழிலாளர்களின் சம்பளத்தில் பாதியை விட குறைவாகும்.

MSWU இன் இடைக்கால தலைமை இந்த ஜோடிப்பு வழக்கின் குற்றத்தீர்ப்புகளை கண்டித்தும் மற்றும் கடுமையான இந்த தண்டனைகளை "தொழிலாளர் விரோதமானது" என்றும் மற்றும் "நாட்டின் தொழில்துறை தொழிலாளர்களிடையே அச்சம் மற்றும் பயங்கரத்தை" விதைக்க நோக்கம் கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வாதி தரப்பின் இறுதி வாதங்கள் "மூலதனத்திற்கு 'நம்பிக்கையை' மீட்டளிக்க வேண்டிய தேவை குறித்தும் மற்றும் 'இந்தியாவில் உற்பத்திசெய்யுங்கள்' திட்டத்திற்கு உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் பிரதம மந்திரியின் முனைவு குறித்தும் பேசின. இந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளித்துவவாதிகளின் நம்பிக்கை, கீழ்படிந்த மலிவுழைப்பு தொழிலாள சக்தி எனும் ஒரு விடயத்தைச் சார்ந்துள்ளது, ஆகவே தான் தொழிற்சங்களோ அல்லது வேறு எவரும் கோரிக்கைகளை எழுப்புவதில்லை,” என்றது குறிப்பிட்டது.

இதற்கிடையே இந்த பன்னாட்டு வாகனத்துறை நிறுவனம், உள்ளவாறே தொழிலாளர்களின் இரத்தத்திற்காக தவித்துக் கொண்டிருக்கின்றது. மாருதி சுசூகியின் நிறுவன ஆலோசகர் விகாஸ் பாஹ்வா இந்தியன் எக்ஸ்பிரஸிற்கு கூறுகையில், "உடலுழைப்பு தொழிலாளர்களும் மற்றும் தொழிற்சங்க அங்கத்தவர்களும் சட்டத்தை அவர்கள் கைகளில் எடுக்க முடியாது என்பதற்கு" நீதிமன்றம் "அவர்களுக்கு பலமான சமிக்ஞை அனுப்பியுள்ளது,” என்றார். ஆனால் "தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு எதிரான தண்டனை போதுமானதாக இல்லை" என்பதாலும் மற்றும் நீதிமன்றம் ஏனைய 117 தொழிலாளர்களை விடுவித்திருப்பதற்கும் இரண்டு காரணங்களுக்காகவும், நிறுவனம் "உயர் நீதிமன்றத்தில் இத்தீர்ப்பிற்கு சவால் விடுக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தண்டனை மீதான விசாரணையில் இந்த 13 பிரதிவாதிகள் அனைவரையும் தூக்கிலிட வேண்டுமென வாதி தரப்பு வாதிட்டது. அதற்கு பதிலாக, இந்தியாவின் கடுமையான சிறை அமைப்புமுறையில் நரகத்தில் வாழ்வதற்கு ஒத்த ஆயுள் தண்டனையை நீதிபதி தொழிலாளர்களுக்கு வழங்கினார்.

கலகத்தில் ஈடுபட்டமை மற்றும் காயம் ஏற்படுத்தியமை உட்பட இந்த வழக்கில் சற்று குறைந்த குற்றச்சாட்டுக்களுக்காக தீர்ப்பு வழங்கப்பட்ட ஏனைய 18 தொழிலாளர்களில் நான்கு பேருக்கு ஐந்தாண்டு கால சிறை தண்டனை மற்றும் மற்ற 14 பேருக்கு மூன்றாண்டுகால சிறைதண்டனை உடன் தண்டிக்கப்பட்டார்கள். பிந்தைய குழுவில் இருப்பவர்கள் ஏற்கனவே சிறையில் இருந்திருப்பதால், அபராதம் செலுத்திய பின்னர், வெளியில் விடப்படுவார்கள்.

மார்ச் 10 ஆம் தேதி தீர்ப்பில் நீதிமன்றம் நிர்பந்தமாக விடுவித்த 117 தொழிலாளர்களை போலவே, இப்போது விடுவிக்கப்படுபவர்களும் மூன்றாண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு இன்னும் சிலரது விடயத்தில் நான்காண்டுகளுக்கும் அதிகமான காலத்திற்கு நீண்ட குரூரமான சிறை தண்டனைகளை சகித்திருந்தனர். குடியுரிமை குழுவான ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு (PUDR) நடத்திய செப்டம்பர் 2012 விசாரணையானது, கைது செய்யப்பட்டவர்கள் அடிக்கப்பட்டு, கால்களை இழுத்துநீட்டுவது மற்றும் நீண்டகாலத்திற்கு அழுக்கு நீரில் மூழ்க வைப்பது ஆகியவற்றால் காயங்களுக்கு உள்ளாகி இருந்ததைக் கண்டறிந்தது.

மோடி அரசாங்கமும் அதற்கு முன்னர் இருந்த காங்கிரஸ் கட்சியும், தொழிலாளர் எதிர்ப்பை அவை நசுக்கி, அவர்களால் முடிவில்லாத மலிவுழைப்பு வினியோகத்தை வழங்க முடியும் என்பதை முதலீட்டாளர்களுக்கு எடுத்துக்காட்டும் அவற்றினது உந்துதலில் இந்தியாவின் பிரதான தொழிற்சங்க சம்மேளனங்களிடம் இருந்து முக்கிய உதவிகளைப் பெற்றுள்ளனர். தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு மாருதி சுசூகி தொழிலாளர்களை தனிமைப்படுத்தி உள்ள அதேவேளையில், பெருவணிக அரசியல்வாதிகளிடம் மன்றாடி அவர்களால் முதலாளித்துவ நீதிமன்றங்களில் நீதியைப் பெற முடியுமென்ற பிரமைகளை ஊக்குவித்து வருகின்றனர்.

இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்ற கட்சிகளில் எதுவுமே இந்த குற்றத்தீர்ப்பு குறித்தும் மற்றும் மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான தண்டனை குறித்தும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைப்பு கொண்ட அனைத்திந்திய தொழிற்சங்க சம்மேளனமும் (AITUC) வாய் திறக்கவில்லை.

இந்த ஜோடிப்புக்கு எதிராக இந்தியா எங்கிலும் கோபம் அதிகரித்த நிலையில், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உடன் இணைப்பு கொண்ட இந்திய தொழிற்சங்க மையம் (CITU) நேற்று சம்பிரதாயமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது, அதில் சிஐடியு தலைவர் கே. ஹேமலதா அந்த தண்டனைகள் மீது "மனக்கவலை மற்றும் வேதனையை" வெளியிட்டார்.

ஸ்ராலினிச கட்சிகளும் மற்றும் அவற்றுடன் இணைப்பு கொண்ட தொழிற்சங்கங்களும் இந்த ஜோடிப்பை குறைத்துக் காட்டியுள்ளதுடன், நடைமுறையளவில் மாருதி சுசூகி தொழிலாளர்களை தவிர்த்து ஒதுக்கி உள்ளது, ஏனென்றால் அவை சீனாவைக் கீழறுத்து, இந்தியாவை உலகின் மலிவு கூலிக்கான மலிவுழைப்பு மையமாக ஆக்கும் ஆளும் உயரடுக்கின் முயற்சிகளை ஆதரிக்கின்றன.

சுமார் 150 மில்லியன் தொழிலாளர்கள் ஈடுபட்ட செப்டம்பர் 2, 2016 தேசிய வேலைநிறுத்தத்தின் போது, சிபிஐ மற்றும் சிபிஐ மற்றும் அவற்றுடன் இணைப்பு கொண்ட தொழிற்சங்கங்கள் மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஒருபோதும் எழுப்பவில்லை. அதற்கு பதிலாக அவை பெருவணிக கட்சிகளான காங்கிரஸ் கட்சி மற்றும் பிஜேபி உடன் இணைப்பு கொண்ட தொழிற்சங்க எந்திரங்களுடன் கூட்டணியைக் கோருவதன் மூலமாக தொழிலாளர் "ஐக்கியத்தை" அபிவிருத்தி செய்ய அழைப்புவிடுத்தன.

ஆசியா எங்கிலும் உள்ள பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களை போலவே, பெரிதும் வறிய விவசாய பிரதேசங்களில் இருந்து வந்துள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களும் இப்போது பன்னாட்டு பெருநிறுவனங்களது மிகவும் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். பெருநிறுவனம் மற்றும் அரசாங்கத்தின் ஈவிரக்கமற்ற வன்முறையை முகங்கொடுத்த போதும் அதை எதிர்ப்பு போராட அவர்கள் மிகவும் துணிச்சலுடன் தீர்மானகரமாக இருப்பதை மீண்டும் மீண்டும் எடுத்துக்காட்டி உள்ளனர். உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் அவர்களின் உதவிக்கு வர வேண்டும் மற்றும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்கவும் மற்றும் தீர்ப்பு வழங்கப்பட்ட அனைவரது குற்றங்களையும் கைவிடவும் கோர வேண்டும்.

“ஜோடிப்பு வழக்கில் சிக்க வைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்!” மனுவில் கையெழுத்திட இங்கே அழுத்தவும்.