ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India: Victimized Maruti Suzuki workers file affidavits documenting their torture

இந்தியா: பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்கள் தங்கள் மீதான சித்திரவதையை ஆவணப்படுத்தி உறுதிமொழிப்பத்திரங்களை தாக்கல் செய்கிறார்கள்

By Arun Kumar and Kranti Kumara
20 March 2013

ஹரியானா மாநில காவல்துறை உயர் அதிகாரிகளும் உயர்நிலை MSI நிறுவன நிர்வாகிகளும் சித்திரவதை, தாக்குதல், கடத்தல் மற்றும் தம்மை கொன்றுவிடுவதான மிரட்டலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி சிறையில் அடைக்கப்பட்ட 151 மாருதி சுஜூகி இந்தியா (MSI) நிறுவனத்தின் தொழிலாளர்களில், மாருதி சுஜூகி தொழிலாளர்கள் சங்கத்தில் (MSWU) அலுவலக நிர்வாகிகளாக இருக்கும் 10 பேர் உட்பட 13 பேர் நீதிமன்றத்தில் உறுதிமொழிப்பத்திரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

சிறையிலடைக்கப்பட்ட 13 பேரும் மற்றும் ஏனைய 138 பேரில் பெரும்பான்மையான தொழிலாளர்கள் கடந்த ஏழு மாதங்களாக கொலை உள்ளிட்ட மிகைப்படுத்தப்பட்ட கிரிமினல் குற்றச்சாட்டுகளின் கீழ் கொடிய சூழ்நிலையில் சிறையில் உள்ளார்கள்.

இந்தியாவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரும் ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கமும் மாருதி சுஜூகி கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு எதிராக பழி தீர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால், அவர்கள் நிர்வாகத்தின் கைக்கூலி தொழிற்சங்கம் மற்றும் ஒரு கொத்தடிமை நிலையிலான வேலைச் சூழல் ஆகியவற்றுக்கு எதிராக கிளர்ந்து எழுந்ததும் மற்றும் ஒரு தொடர்ச்சியான போர்க்குணமிக்க தொழில் நடவடிக்கைகள் பிரமாண்டமான குர்கான்-மானேசர் தொழிற்பகுதியில் இருக்கும் தொழிலாளர்களின் ஒரு பரந்த எழுச்சியை விரைவுப்படுத்தக்கூடிய அச்சத்தை ஏற்படுத்தியதாலுமாகும்.

தொழிலாளர்களின் உறுதிமொழிப்பத்திரம் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டிருந்த போதிலும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர் ராஜேந்திர பதக் உலக சோசலிச வலைத் தளத்திற்கு அதன் ஆங்கில மொழிப்பெயர்ப்பை வழங்கினார்.

சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்கள் அடித்தல், தண்ணீரில் மூழ்கடித்தல், உணவு கிடைக்காமல் செய்தல் மற்றும் மருத்துவ சிகிச்சையை நிறுத்தி வைத்தல் உள்ளிட்ட காட்டுமிராண்டித்தனமான நடத்தைக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒரு தாங்கமுடியாத காட்சியை உறுதிப்பத்திரங்கள் சித்தரிக்கின்றன. MSI நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப போலீஸ் செயல்பட்டதையும் இவை வெளிப்படுத்துகின்றன. நிறுவனத்தால் வழங்கப்பட்ட பட்டியல் அடிப்படையில் மட்டும் போலீஸ் கைது செய்யவில்லை. தொழிலாளர்களின் உறுதியளிக்கப்பட்ட வாக்குமூலங்களின்படி, அவர்களை அடிக்கவோ அல்லது அவமதிக்கவோ MSI நிர்வாகிகள் தொடர்ச்சியாக வற்புறுத்தினார்கள்.

"போலீஸ், எங்களை அடித்தும் நிர்பந்தப்படுத்தியும் வெற்றுப்பேப்பரில் (அதாவது போலியான ஒப்புதல் வாக்குமூலம்) கையெழுத்து வாங்கிக் கொண்டது" எனவும், எங்கள் சுயநினைவை இழக்கப்போகும் நிலைவரை காவலர்களால் நாங்கள் அனைவரும் தண்ணீர் தொட்டி ஒன்றுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்தோம் என தொழிலாளர்களின் உறுதிப்பத்திரங்கள் விளக்கிக் கூறுகின்றன.

"முதல் நாள் நானும் சக தொழிலாளர்கள் 9 பேரும் குர்கானின் பிரிவு 46, குற்றவியல் பிரிவிற்கு கொண்டுச் செல்லப்பட்டோம். அங்கு வந்த எங்கள் தொழிற்சாலையின் திரு. எஸ்.ஒய் சித்திக் (MSI-யின் தலைமை செயலாக்க அதிகாரி-நிர்வாகம்) மற்றும் திரு. ஏ.கே சிங் (தொழிற்துறை மேலாளர்), "அவர்கள் தொழிற்சங்கத்தின் பெரிய தலைவர்கள், அவர்களை கடுமையாக அடித்து அவர்களுக்கு எதிராக வலுவான ஆதாரத்தை தயார் செய்வதன் மூலம் அவர்கள் சிறையிலிருந்து எப்பொழுதும் வெளியில் வர முடியாது செய்யவேண்டும்" என போலீஸிடம் கூறினார்கள் என்று உறுதிப்பத்திரங்களில் ஒன்று குறிப்பிடுகிறது.

தொழிலாளர்களை தாக்க போலீஸை தூண்டி விடுவதற்கு, சித்திக் அவர்களிடையே சாதி குறித்த தவறான அபிப்பிராயங்களை ஏற்படுத்தினார்: எனது சக தொழிலாளர்களின் முன்பாக செக்டர் 46-ன் SHO (Police Station House Officer) ராஜ்வீர் சிங்கிடம், அஜ்மீர் சிங் ஒரு வெட்டியான் (சாதியைத் திட்ட பயன்படுத்தும் ஒரு வார்த்தை) அவ்வாறு இருப்பதாலேயே நமது நிறுவனத்தின் நிர்வாகத்துடன் பிரச்சனைகளை உருவாக்குகின்றார். இந்த வெட்டியானுக்கு கடுமையாக அடி கொடுக்கவேண்டும். இதை சொல்லிக் கொண்டிருக்கும் போதே ராஜ்வீர் சிங் மற்றும் அவருக்கு கீழ் பணிபுரிபவர்கள் அவரை கடுமையாக அடித்தார்கள். அதைத் தொடர்ந்து ராஜ்வீர் சிங் தனக்குக்கீழ் பணிபுரிபவர்களிடம் இந்த வெட்டியானை நடத்தப்படும் விதத்தைக்கண்டு இவர் மட்டுமல்ல இவருடைய மற்ற சகாக்களும் ஒரு தொழிற்சங்கத்தை தோற்றுவிக்க தைரியம் கொள்ளக்கூடாது என்றார்.

சிறையில் அடைக்கப்பட்ட தொழிலாளர்கள், துஷ்பிரயோகம் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதை பதிவு செய்ததுடன் சேர்த்து, ஜூலை 18 அன்று மானேசர் தொழிற்சாலையில் நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட ஒரு மோதலில் MSI-யின் மனித வளத்துறை அதிகாரி (Human Resources officer) அபினேஷ் தேவ் கொல்லப்பட்டது மீது இந்த உறுதிமொழிப்பத்திரங்கள் முக்கியமான புதிய கவனத்தை செலுத்தியது.

MSWU தலைமை முழுவதுமான கைது, மற்ற ஒரு நூறுக்கும் அதிகமான போர்குணமிக்க தொழிலாளர்கள் அதைத் தொடர்ந்த ஐநூறுக்கும் அதிகமான நிரந்தர மற்றும் ஏறக்குறைய இரண்டாயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் பணி நீக்கம் ஆகியவற்றை நியாயப்படுத்த நிறுவனம், ஹரியானா மாநில அரசும் மற்றும் போலீஸும் இந்த மோதலையும் குறிப்பாக தேவின் மரணத்தையும் தமது கையிலெடுத்துக் கொண்டனர்.

உண்மையிலேயே, ஹரியானா தொழிற்துறை அமைச்சரகத்திலிருந்து MSWU இற்கான அங்கீகாரத்தைப் பெற மானேசர் தொழிலாளர்களுக்கு தேவ் உதவினார் என உறுதிப்பத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அதன் காரணமாகவே அவர், தொழிலாளர்களிடையே தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அவர்களின் ஊதிய உயர்வுக்கான ஒரு கோரிக்கையை திரும்பப் பெற செய்யுமாறு MSI நிர்வாகத்தால் நிர்பந்திக்கப்பட்டார்.

மேற்சொன்ன நிறுவனத்தின் பொது மேலாளர், திரு. அபினேஷ் தேவ் முயற்சியால் தான் பிப்ரவரி 2012இல் தொழிலாளர்களின் சங்கம் (MSWU) பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என உறுதிப்பத்திரங்கள் விளக்குகின்றன.

அதைத் தொடர்ந்து, அவர் தொழிலாளர்களின் சங்கத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் அதன் பேரில் அவர்கள் தங்கள் மேற்குறிப்பிட்ட கோரிக்கை அறிக்கையை திரும்பப்பெற வேண்டும் என தேவ் மீது நிர்வாகம் அழுத்தத்தை பிரயோகித்தது. ஆனால் அபினேஷ் தேவ் இவ்விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது என தனது விருப்பமின்மையை தெரிவித்துவிட்டார்.

இதன் காரணத்தாலேயே, அவருக்கும் மற்ற மேலாளர்களுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது அதன் பின்னர் திரு. அபினேஷ் தேவ் நிறுவனத்திலிருந்து பணி விலகல் கடிதத்தை ஒப்படைத்தார். ஆனால் அதை உயர் நிர்வாகிகள் குழு ஏற்றுக் கொண்டிருக்காது, ஏனென்றால் இதன் காரணமாக MSI இன் தொழிலாளர்களுக்கு எதிரான நிலை வெளிப்படுத்தப்பட்டுவிடக் கூடும் என பயந்தார்கள்.

நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட ஜூலை18 மோதலின் போது MSI வாடகைக்கு அமர்த்திய குண்டர்கள் திரு. தேவ்-ஐ குறி வைத்தார்கள். ஏனென்றால் அவர் முதுநிலை நிர்வாகிகளால் தமது பக்கத்திலுள்ள விரோதியாக பார்க்கப்பட்டார்.

மேலே குறிப்பிடப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தால், ஜூலை 18 அன்று தொழிற்சாலை வளாகத்துக்குள்ளேயே முரடர்கள் (வாடகைக்கு அமர்த்தப்பட்ட ரவுடிகள்) உதவியுடன் வன்முறையை ஏற்படுத்தி அதன் மூலம் திரு. அபினேஷ் தேவ் கொலை செய்யப்பட்டார். மேலே குறிப்பிடப்பட்ட தொழிற்சாலை நிர்வாகம் மற்றும் ஹரியானா மாநில அரசின் வழிகாட்டுதல்படி போலீஸ் விசாரணையை நடத்தியது. தொழிற்சாலை நிர்வாகத்தின் பொய் புகாரின் அடிப்படையில் தொழிற்சாலையின் MSWU சங்க நிர்வாகிகள் மற்றும் உடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் மீது பொய்யான கொலைக் குற்றசாட்டுகளை பதிவு செய்தது. “18 ஜூலை, 2012இல் திரு. அபினேஷ் தேவ் மற்றும் தொழிற்சங்கத்தை அகற்றியதன் மூலம் தொழிற்சாலையின் தலைமை நிர்வாகிகள், ஒரே கல்லில் இரண்டு பறவைகளைக் கொன்றிருக்கிறார்கள்” என்றும், “வன்முறை MSI நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டது... வன்முறையை ஏற்படுத்த பெருமளவில் முரடர்கள் அழைக்கப்பட்டிருந்தனர்” தொழிலாளர்களின் வழக்கறிஞர் ராஜேந்திர பதக் கூறுகிறார்.

சித்திரவதை மற்றும் துஷ்பிரயோகம் பற்றி ஏன் இப்பொழுது கையெழுத்திட்டு உறுதியளிக்கப்பட்ட வாக்குமூலங்களை பதிவு செய்ய முன் வந்திருக்கின்றோம் என்றால், போலீஸ் கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர அவர்கள் ஏதேனும் முயற்சிகள் செய்தால் அவர்களை கொன்று விடுவதாக மூத்த போலீஸ் அதிகாரிகள் மிரட்டியதால்தான் என அவர்களின் உறுதிப்பத்திரங்களில் தொழிலாளர்கள் விளக்குகிறார்கள்.

தொழிலாளர்களில் ஒருவரான சுரேஷ், "நீ எமக்கு எதிராக ஏதாவது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டால் நீ போலீஸ் காவலில் இருந்து தப்பிக்க முயன்றதாகக் கூறி உன்னை இல்லாமல் செய்து விட பல காரணங்கள் இருக்கிறது" என போலீஸ் எச்சரித்ததாக அவருடைய வாக்குமூலத்தில் கூறுகிறார்.

அவர் மேலும் கூறுகையில், "நீதிமன்றக் காவலின்போது போலீஸ் எதுவும் செய்துவிட முடியாது என்று எனது வழக்கறிஞரிடமிருந்து (ராஜேந்தர் பதக்) நம்பிக்கை கிடைத்த பின்னரே உங்களிடம் இந்த புகாரை நீதிமன்றத்திற்கு அனுப்ப துணிவை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது."

போலிஸாரின் தவறான நடத்தை மற்றும் MSI நிர்வாகத்துடன் வஞ்சகக்கூட்டு உள்ளிட்ட மொத்தம் பதின்மூன்று தனித்தனி புகார்கள் மற்றும் ஒரு தனி நீதிமன்ற அவமதிப்பு மனு ஆகியவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மார்ச் 5ந் தேதி ஒரு ஹரியானா நீதிமன்றத்தில் அவை தாக்கல் செய்யப்பட்டிருப்பதற்கு முன்பே, போன மாதம் குர்கான் போலீஸ் ஆணையாளரிடம் இந்த புகார்கள் ஒப்படைக்கப்பட்டன. எவ்வாறிருப்பினும், WSWS இடம் பதக் விளக்கியவாறு, "அவர்கள் தமது சொந்த இந்திய போலிஸ் துறை (IPS -Indian Police Service) அதிகாரிகளில் ஒருவர் (ஏனைய போலீஸார் உட்பட) மற்றும் MSI நிர்வாகத்தில் பணிபுரிபவர்கள் பலர் இந்த அனைத்து 13 புகார்களிலும் பெயர் குறிப்பிடப்படும்வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஹரியானாவில் காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கமும் மற்றும் இந்திய அரசும், மானேசர் மாருதி சுஜுகி தொழிலாளர்கள் போராட்டத்தை நசுக்குவதன் மூலம் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பெரு வணிகத்திற்கு, இந்தியாவினது புதிய உலகளவில் இணைக்கப்பட்டுள்ள கார் மற்றும் பிற தொழிற்சாலைகளில் விதிமுறையாக உள்ள மோசமான உழைப்பு நிலைமைகளுக்கான எதிர்ப்பை, தான் பொறுத்துக்கொள்ளாது என்பதை எடுத்துக்காட்ட தீர்மானித்துள்ளது.

இந்த வர்க்க போரின் தாக்குதலுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPI) இணைந்த அனைத்திந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) மற்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPM) இணைந்த இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (CITU) உள்ளிட்ட ஸ்ராலினிச தொழிற்சங்க அமைப்புகளால் உதவிசெய்து கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவர்கள் சிறையிலடைக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்பட்ட MSI தொழிலாளர்களை, அவர்களின் பாதுகாப்புக்காக எந்தவொரு தொழிற்துறை நடவடிக்கைகளையும் ஒழுங்கமைக்க மறுத்து தனிமைப்படுத்தி விட்டதுடன், நச்சுத்தனமாக தொழிலாளர்களை அட்டுழியங்களுக்கு உள்ளாக்கும் மாநில காங்கிரஸ் கட்சி அரசாங்கம் மற்றும் அதன் தொழிலாளர் துறை அதிகாரிகளிடமே கோரிக்கைவிட வலியுறுத்துகின்றனர்.

மாருதி சுஜுகி தொழிலாளர்களுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடவும் உடனடியாக விடுதலை செய்யவும் இந்தியா மற்றும் உலக முழுவதுமுள்ள தொழிலாளர்கள் கோரிக்கைவிட வேண்டும். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிரான போராட்டம் மோசமான சுரண்டல் நிலைமை, ஒப்பந்த தொழிலாளர் முறை மற்றும் முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்க வளர்ச்சிக்கான போராட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தை முழுவதுமாக அணித்திரட்டும் போராட்டத்துடன் இணைக்கப்பட வேண்டும்.