ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Campaign for release of Maruti Suzuki workers wins support in India and Sri Lanka

மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்யும் பிரச்சாரத்துக்கு இந்தியாவிலும் இலங்கையிலும் ஆதரவு அதிகரிக்கின்றது

By our correspondents 
23 March 2017

சிறையில் அடைக்கப்பட்டுள்ள மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுவிக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு முன்னெடுக்கும் பிரச்சாரம், இந்தியாவிலும் இலங்கையிலும் ஆதரவை வென்று வருகின்றது. கடந்த சனிக்கிழமை, வட இந்திய மாநிலமான ஹரியானாவில் குர்கான் மாவட்ட நீதிமன்றம் போலி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு குறைந்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஏனைய 18 தொழிலாளர்கள் மீது கடுமையான சிறைத் தண்டனையை சுமத்தியுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது இந்தக் குற்றச்சாட்டுக்ளையும் தண்டனைகளையும், இந்தியாவின் பிரதான அரசியல் கட்சிகளான ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க.) மற்றும் காங்கிரஸ் கட்சியினதும் முழு உடந்தையுடன் கம்பனி, போலீஸ் மற்றும் நீதித்துறையினால் சுமத்தப்பட்ட ஒரு கொடூரமான ஜோடிப்பு-வழக்கு என கண்டனம் செய்கின்றது. சிறையிலடைக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் அப்பாவி ஆண்கள். மாருதி சுசுகி நிறுவனத்தின் மானேசர் கார் ஒருங்கிணைப்பு ஆலையில், அடிமை உழைப்பு நிலைமைகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமே அவர்கள் செய்த "குற்றம்" ஆகும். ஒரு இணையவழி மனுவை வெளியிட்டுள்ள அனைத்துலகக் குழு, உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் அவர்களது விடுதலைக்காகப் போராட முன்வருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு வெளியிட்டுள்ள, "ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்" என்ற அறிக்கையின் பிரதிகளை அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்கள் தமிழ்நாடு மாநிலத் தலைநகரான சென்னைக்கு வெளியில் உள்ள பல வாகன ஆலைகளிலும் நகரில் உள்ள இந்திய இரயில் துறைக்கு சொந்தமான இரயில் தொழிற்சாலையிலும் (ஐ.சி.எஃப்.) விநியோகித்தனர். பல தொழிலாளர்கள் பிரச்சாரத்துக்கு தங்கள் ஆதரவினை வெளிப்படுத்தியதோடு இணையவழி மனுவில் கையெழுத்திடவும் உடன்பட்டனர்.

வினுகிருஷ்னன்

ஃபோர்ட் மற்றும் ஹூண்டாய்க்கு வாகன உதிரிப்பாகங்கள் விநியோகம் செய்யும் ஹனன் சிஸ்டம்ஸ் நிறுவனத்தின், ஒரு ஒப்பந்த தொழிலாளியான வினுகிருஷ்னன், ஆயுள் தண்டனையை கண்டனம் செய்தார். மாருதி சுசுகியின் கடும் சுரண்டல் நிலைமையிலான ஒப்பந்த தொழிலாளர் முறை, தமிழகத்தைச் சேர்ந்த முதலாளிகளாலும் பயன்படுத்தப்படுகின்றது என்று அவர் கூறினார்.

"ஒப்பந்த தொழிலாளர் முறை தொழிலாளர்களை பெரிதும் பாதிப்பதோடு நாளுக்கு நாள் நிரந்தர தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய நிறுவனங்கள் மலிவான உழைப்பைச் சுரண்டுவதற்காக இந்தியாவுக்கு வரும் அதேவேளை, நாட்டில் மற்றொரு சுரண்டல் வடிவம் தலைநீட்டுகின்றது.

"வட இந்திய மாநிலங்களில் இருக்கும் ஏழை தொழிலாளர்கள், வேலைகள் தேடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். அவர்கள் குறைந்த ஊதியத்தில் -அற்ப கூலிக்கு- வேலையில் அமர்த்தப்படுவதோடு இந்த வழியில் நிறுவனங்கள் அனைவரின் ஊதியங்களையும் கீழ் மட்டத்திற்கு தள்ள முயற்சிக்கின்றன. வடக்கை சேர்ந்த இந்த தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் வேலை செய்ய தள்ளப்பட்டுள்ளனர். நாம் அதை எதிர்க்க வேண்டும்," என்று அவர் தொடர்ந்து கூறினார்.

நவீன்குமார் மற்றும் லட்சுமணன்,

யூகல் ஃபியூல் சிஸ்டம்மில் வேலை செய்யும் நவீன்குமார் மற்றும் லட்சுமணன், கொடூரமான சிறைத் தண்டனை பற்றி தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். "இது நிறுவனத்தின் தொழிலாளர்-விரோத செயல்களை சவால் செய்யும் எந்தவொரு தொழிலாளியையும் மிரட்டுவதை இலக்காகக் கொண்டது, இது கண்டிக்கப்பட வேண்டியது," என அவர்கள் கூறினர்.

இங்கு வேலை செய்யும் மற்றொரு தொழிலாளியான ரேணுகோபால், "இது மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கை, இது கண்டனத்திற்கு உரியது," என்றார்.

சுரேந்தர்

30 வயதான ஐசிஃஎப் ஊழியர் சுரேந்தர், தெரிவித்தாவது: "பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் உட்பட அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாளர்களுக்கு எதிராக உள்ளன. வேறு எந்த கட்சியும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 தொழிலாளர்களை விடுதலை செய்ய பிரச்சாரம் செய்யவில்லை.

"ஜப்பனீயருக்கு சொந்தமான இந்த நிறுவனம், இந்த போராளித் தொழிலாளர்களை நசுக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் குறைந்த ஊதியங்கள் மற்றும் ஒப்பந்த முறைக்கு எதிராக போராட முயற்சிக்க மாட்டார்கள், என்று நம்புகிறது. இந்திய அரசாங்கமும் முதலீட்டாளர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பியுள்ளதுடன் அது இந்த கொடூரமான ஆயுள்தண்டனக்கு உடந்தையாகவும் இருக்கின்றது. இந்த சர்வதேச பிரச்சாரம் பாதிக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்."

மாதவேந்திரன்

ஐசிஎப் ஷெல் பிரிவில் பணிபுரியும் 40 வயதான மாதவேந்திரன், தான் முதலாளிகளால் பழிவாங்கலுக்கு உள்ளனதாக விளக்கினார். "நான் 10 ஆண்டுகளாக ஃபோர்ட் வாகன நிறுவனத்திற்காக உழைத்திருகிறேன், இதுவும் மாருதி சுசுகி நிலைமை போலவே இருந்தது. தொழிற்சங்கத்தை உருவாக்க முயற்சி எடுத்து ஊதிய உயர்வை வலியுறுத்திய தொழிலாளர்கள் இங்கு வஞ்சிக்கப்பட்டார்கள்.

"நான் தொழிற்சங்கத்தை உருவாக்கும் போராட்டத்தில் பங்கேற்றதற்காக பழிவாங்கப்பட்டேன். தொழிற்சங்கம் அமைக்கப்பட்டபோது, ஃபோர்ட் நிர்வாகம் என்னை மிகவும் தொந்தரவு செய்ததால் நான் இராஜினாமா செய்யத் தள்ளப்பட்டேன். பின்னர் நான் ஐசிஃஎப் இல் சேர்ந்து கடந்த எட்டு ஆண்டுகளாக இங்கே உழைத்துக் கொண்டிருக்கிறேன். தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் நலனுக்காக வேலை செய்யவில்லை, அவை நிர்வாகத்துக்காக வேலை செய்கின்றன. அதனால் எந்த தொழிற்சங்கத்தின் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

"நான் இந்த சர்வதேச பிரச்சாரத்தை விரும்புகிறேன்... மாருதி சுசுகி தொழிலாளர்களை பாதுகாக்க வேறு எந்த அமைப்பும் செய்யாத வேலையை நான்காம் அகிலம் செய்கின்றது. இந்த வகையான சர்வதேச பிரச்சாரம் தற்போதைய சூழ்நிலையில் அவசியம்."

இந்தப் பிரச்சனையை பற்றி அவரது சொந்த வார்த்தைகளில் எழுத வேண்டும் என மாதவேந்திரன் ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். பின்வருவது அவர் தமிழில் கூறியது: "தொழிலாளர்களை ஒடுக்கும் கம்பனி, அரசியல் அல்லது நீதித்துறை சார்ந்த எந்த நிறுவனமும் வரலாற்றில் முன்னேற்றமாக இருந்ததில்லை. அதேபோல், நீதிபதியின் தரம் குறைந்த செயல் கண்டிக்கத்தக்கது. மேலும், சர்வதேச தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. இந்த வார்த்தைகள் என்னால் எழுதப்பட்டவை."

மற்றொரு ஐசிஃஎப் தொழிலாளி சசிகுமார், 42, கூறியதாவது: "கம்பனி மேலாண்மை, இந்த தண்டனையை தொழிலாளர்கள் மீது விதிக்கும் பொருட்டு பொய்யாக அவர்கள் மீது குற்றம் சாட்டியது. உங்கள் அறிக்கை சுட்டிக் காட்டுவது போல், குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாததோடு அப்பாவி தொழிலாளர்கள் கம்பனி, அரசாங்கம், காவல்துறை, நீதிமன்றங்களின் கூட்டு ஒத்துழைப்புடன் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்.

"நான் உங்கள் பிரச்சாரம் பற்றியும் நீங்கள் நேரில் தொழிலாளர்களை சந்தித்து மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பு சம்பந்தமாக கருத்துக்களை கேட்பதை பற்றியும் மகிழ்ச்சியடைகிறேன். என்னைப்போல், சர்வதேச ரீதியில் தொழிலாளர்கள் நிச்சயமாக இந்த பிரச்சாரத்தை ஆதரிப்பார்கள், மாருதி சுசூகி தொழிலாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன். "

பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஐசிஃஎப் தொழிலாளி தெரிவித்ததாவது: "நான் பல தொழிற்சங்கங்களை பல கட்சிகளை மற்றும் பல அரசாங்கங்களை பார்த்துள்ளேன். நான் 30 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். ஆனால் தொழிற்சங்கங்கள் முன்னர் போல் இல்லை. அவை நிர்வாகத்தின் கைக்குள் இருந்து செயற்படுகின்றன. இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கு அல்ல என்பது நிர்வாகத்துக்கு நன்கு தெரியும்.

"நீங்கள் சர்வதேச பிரச்சாரத்தை முன்னெடுப்பது சந்தோஷமாக இருக்கிறது, நான் முன்பு மாருதி தொழிலாளர்கள் பற்றி கேட்டறிந்து இருந்தாலும், உங்கள் மூலம் மட்டுமே நீதிமன்றத் தீர்ப்பு பற்றி கேள்விப்படுகிறேன். அவர்கள் இந்த தொழிலாளர்களை 2012ல் இருந்து நான்கு ஆண்டுகளாக சிறையில் வைத்துள்ளார்கள், தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்தமைக்காகவும், ஊதிய உயர்வு கேட்டதற்காகவும் அவர்களை போலி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் பிணை உரிமையையும் மறுத்து தடுத்து வைத்துள்ளனர்."

மற்றொரு ஐசிஃஎப் தொழிலாளி பின்வருமாறு கூறினார்: "அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசாங்கங்களும் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு எதிராக உள்ளன. மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது அவர்களது அடிப்படை உரிமைகளுக்காக எந்தவொரு போராட்டத்தையும் மேற்கொள்வதற்கு எதிராக தொழிலாளர்களை மிரட்டுவதாகும். நீதிபதிகள் முதலீட்டாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாகத்தின் சார்பில் பேசுகின்றனர். அனைத்து தொழிலாளர்களும் இந்த பிரச்சாரத்தை ஆதரிப்பதோடு இந்த சர்வதேச பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின் வர்க்க பலத்தை நிரூபிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

ஒரு தொழில்துறை வலயத்தில் இலங்கை தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் சோசலிச சமத்துவக் கட்சி பிரச்சாரகர்கள்

இலங்கையில், சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் (ஐவைஎஸ்எஸ்இ) அமைப்பின் உறுப்பினர்கள், ஹோமாகமவில் உள்ள டெம்பல்பேர்க் தொழிற்துறை வலயத்தில் சிங்களம் மற்றும் தமிழ் துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர். பிரச்சாரகர்கள் மாருதி சுசுகி போலி வழக்கு பற்றி பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து வந்த டஜன் கணக்கான தொழிலாளர்களுடன் பேசினார். கொழும்பில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தொழிற்துறை வலயத்தில் சுமார் 5,000 பேர் வரை வேலை செய்கின்றனர்.

சமன், சேனக பில்டர்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டில் வேலை செய்யும் தொழிலாளி. மாருதி சுசுகி தொழிலாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டது பற்றி முன்னர் தான் கேள்விப்படவில்லை என அவர் கூறினார். "நான் இந்த நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றி மிகவும் கோபமடைகிறேன்," என்று அவர் கூறினார். "இந்த பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் எந்த நாட்டினராக இருந்தாலும் எங்கள் சகோதரர்கள் மற்றும் நாம் எல்லா வழிகளிலும் இதை எதிர்க்கவும் அவர்களை விடுவிக்கப் போராடவும் வேண்டும்.

"நாங்கள் சமீபத்தில் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு எதிரான இலங்கை அரசாங்கத்தின் ஒரு கொடூரமான தாக்குதலை கண்டோம். மற்றும் கல்வி வெட்டுக்கு எதிராகப் போராடும் பல்கலைக்கழக மாணவர்கள், அடிக்கடி கொடூரமான போலீஸ் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். வளரும் இத்தகைய சூழ்நிலையில், நாம் மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் போலிக் குற்றச்சாட்டுக்கள் போன்றவற்றுக்கு இலக்காக முடியும்."

ஆரம்பத்தில் சமன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரச்சாரம் சிறையில் உள்ள தொழிலாளர்களை விடுவிக்க இந்திய அரசாங்கத்தை நெருக்குமா என்பது குறித்து பல சந்தேகங்களை எழுப்பினார். அதன் நோக்கம் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பலத்தை திரட்டுவதுமே என பிரச்சாரகர்கள் விளக்கிய பின்னர் அவர் கூறியதாவது: "ஆமாம், நாங்கள் இந்த வகையான பிரச்சாரத்தின் மூலம் ஒற்றுமை அடைய முடியும் என நினைக்கிறேன். இத்தகைய ஒற்றுமை, அதுவே ஒரு பெரிய சாதனையாக இருக்கும். நீங்கள் சுட்டிக்காட்டியவாறு, நாம் இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கம் ஒன்றை கட்டியெழுப்ப வேண்டும்."

இலங்கை அசோக் லேலண்ட் ஆலையில் இருந்து வந்த இந்திகா, "ஒரு வாகனத் தொழிலாளி என்னும் முறையில் நான் இந்த பாதிக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள் பற்றி வருத்தத்தை உணர்ந்தேன். அவர்கள் சம்பளம் உயர்வும் மற்றும் நல்ல பணி நிலைமைகளுக்காகவே போராடினர். அவர்கள் அவ்வாறு செய்ய ஜனநாயக உரிமை உண்டு. எனினும், இப்போது அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

"நாம் எங்கள் உரிமைகளைப் பாவிக்க முடியவில்லை எனில் ஏன் இந்த சமூகத்தில் வாழ வேண்டும்? நாம் நீங்கள் சொல்வது போல், எங்கள் உரிமைகளை அனுபவிக்க கூடிய வேறுபட்ட ஒரு சமுதாயத்தை நிறுவுவது பற்றி யோசிக்க வேண்டும், இது போன்ற ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மட்டுமே."