ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Public meeting on “World War and the Russian Revolution” in Chennai, India

சென்னை பொது கூட்டம்: "உலகப் போரும் ரஷ்ய புரட்சியும்"

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) இந்திய ஆதரவாளர்கள் மார்ச் 5 ம் தேதி "உலகப் போரும் ரஷ்ய புரட்சியும்" என்ற தலைப்பில் சென்னையில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகின்றனர். இந்த நிகழ்வு, வரவிருக்கும் இணையவழி விரிவுரை தொடர் உட்பட நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு 1917 அக்டோபர் புரட்சியின் நூற்றாண்டை நினைவுகூருவதன் ஒரு பகுதியாகும்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ், அமெரிக்க ஏகாதிபத்தியம், சீனாவுக்கு எதிரான யுத்த தயாரிப்புகளை முடுக்கிவிட்டுள்ளது, அது அணு ஆயுத சக்திகளுக்கு இடையில் பேரழிவு தரும் போர் அபாயத்தை தோற்றுவித்துள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் ஏற்கனவே நாட்டை சீனாவிற்கு எதிரான ஒரு முன்னிலை அரசாக மாற்றியமைத்துள்ள நிலையில், அமெரிக்காவுடனான இந்திய இராணுவ-மூலோபாய கூட்டணியை தீவிரமாக்கி வருகின்றன. இத்தகைய முயற்சிகள் இந்தியா பெரும் சக்தியாக மாற்றமடைவதற்கான அபிலாஷைகளின் ஒரு பகுதியாக உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம், இந்திய தளங்களை அமெரிக்க இராணுவம் பயன்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் புது தில்லி கையெழுத்திட்டது. இந்த நாடு, அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரிவுக்கான ஒரு முக்கிய சேவை மற்றும் சரிபார்க்கும் மையமாக மாறிவிட்டது. அந்த கடற்படை போர் கப்பல்கள் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர் ஏற்பாடுகளின் மையமாக உள்ளது.

இத்தகைய அபிவிருத்திகள் இந்த பிராந்தியத்திலும், சர்வதேசரீதியாகவும் உள்ள  தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கு கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான இராணுவ போர்வெடிப்பில் தெற்கு ஆசியா முழுவதையும் ஈடுபடுத்தும் ஆபத்தை கொண்டுள்ளது.

சென்னை கூட்டத்தில், அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி, அதேபோல் ஒரு மூன்றாம் உலக போர் மற்றும் ஏகாதிபத்திய சக்திகளின் சர்வாதிகார ஆட்சி வடிவங்களை நோக்கிய உந்துதல் பற்றி விவாதிக்கப்படும். பேச்சாளர்கள், அத்தகைய ஒரு பேரழிவை தடுப்பதற்கான ஒரே வழி, ஏகாதிபத்தியப் போருக்கான மூலமாக இருக்கும் காலங்கடந்த முதலாளித்துவ அமைப்புக்கு ஒரு  முடிவு கட்ட, ஒரு சர்வதேச தொழிலாள வர்க்க போர் எதிர்ப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்திய தொழிலாளர்களை அணிதிரட்டுவது தான் என்பது பற்றி விளக்குவார்கள்.

இங்குதான் 1917 அக்டோபர் ரஷ்ய புரட்சியின் தற்காலத்திய பொருத்தம் உள்ளது, அது உலகப் புரட்சியின் முதல் வெடிப்பாகும், அது முதலாம் உலகப் போரின் பேரழிவின் விளைவாக உருவானது. ஆட்சியை கைப்பற்றுவதற்கான போராட்டத்தில் ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டி தலைமை தாங்கிய லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக்குகளின் போராட்டத்தின் அரசியல் படிப்பினைகளை தொழிலாளர்கள் இன்று கற்றுக் கொள்ள வேண்டும்.

தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் இன்று முகங்கொடுக்கும் புரட்சிகர பணிகள் பற்றி விவாதிக்கும் இந்த சென்னை கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் நாம் அழைப்பு விடுக்கிறோம்.

தேதி: ஞாயிறு, மார்ச் 5

நேரம்: 10.00 மணி

இடம்: ICSA மையம், கன்னிமாரா நூலகம் எதிரே, எழும்பூர் சென்னை-8