ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The freeing of Hosni Mubarak and the lessons of the Egyptian Revolution

ஹோஸ்னி முபாரக்கின் விடுதலையும், எகிப்திய புரட்சியின் படிப்பினைகளும்

Johannes Stern
25 March 2017

முன்னாள் எகிப்திய சர்வாதிகாரி ஹோஸ்னி முபாரக் நேற்று சிறையிலிருந்து உத்தியோகபூர்வமாக விடுவிக்கப்பட்டார். அவர் வழக்கறிஞர் ஆத்திரமூட்டும் விதத்தில் பொதுமக்களுக்கு அறிவிக்கையில், 88 வயதான முபாரக் கெய்ரோ மாவட்டத்தின் Maadi இராணுவ மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டதாகவும், எகிப்திய தலைநகரின் கிழக்கில் அமைந்துள்ள அவர் குடும்ப வீட்டில் சில நண்பர்களுடன் காலை உணவு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பே இறுதியானது. மார்ச் மாத தொடக்கத்தில், எகிப்திய உச்ச நீதிமன்றம் எகிப்திய புரட்சியின் ஆரம்ப நாட்களில் அவரது பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்ட 800 ஆர்ப்பாட்டக்காரர்களின் உயிரிழப்பிற்கு முபாரக் எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார் என்று அவரை விடுவித்தது. 18 நாட்கள் பாரிய போராட்டங்களுக்குப் பின்னர் பெப்ரவரி 11, 2011 இல் பதவியிலிருந்து நீக்கப்படுவதற்கு முன்னதாக, முப்பதாண்டுகள் ஏகாதிபத்திய சக்திகளின் முழு ஆதரவுடன் முபாரக் அந்நாட்டை இரும்பு கரம் கொண்டு ஆட்சி செய்திருந்தார்.

முபாரக் விடுவிக்கப்பட்டிருப்பதானது, முஸ்லீம் சகோதரத்துவத்தின் இஸ்லாமிய தலைவர் மொஹம்மத் முர்சிக்கு எதிராக ஜூலை 3, 2013 இன் இரத்தந்தோய்ந்த இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குப் பின்னர் இருந்து நிகழ்ந்துவந்துள்ள எதிர்புரட்சியின் ஓர் அடையாளமாகும். இதற்குப் பின்னர் நான்காண்டுகளுக்கும் குறைந்த காலத்தில், கெய்ரோவின் புதிய இராணுவ ஆட்சியாளர்கள், மேற்கத்திய சக்திகளின் ஊக்குவிப்போடு, அவர்களுக்கு முன்னாள் இருந்த தலைவருக்கு முற்றாக புனர்வாழ்வளித்துள்ளதுடன், முன்பினும் அதிக மூர்க்கமான முறைகளுடன் பாரிய பெருந்திரளான எகிப்திய மக்களை ஒடுக்கி வந்துள்ளனர்.

அமெரிக்காவில் பயிற்றுவிக்கப்பட்ட தளபதி அப்தெல் பதாஹ் அல்-சிசி தலைமையிலான இராணுவ ஆட்சிக்குழு, 40,000 க்கும் அதிகமான எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைத்துள்ளதுடன், 1,000 க்கும் அதிகமானவர்களுக்கு மரண தண்டனை வழங்கியுள்ளது. Human Rights Watch அமைப்பின் தகவல்படி, அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதிக்குச் சற்று பின்னர் “எகிப்தின் நவீன வரலாற்றில் நீதி விசாரணையற்ற பாரிய படுகொலைகளின் படுமோசமான சம்பவம்" நடந்தது. ஆட்சியை எதிர்த்த எதிர்ப்பாளர்கள் ஏற்படுத்தி இருந்த இரண்டு போராட்ட முகாம்களை இராணுவமும் பொலிஸூம் அடித்து நொறுக்கியதோடு, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது.   

எகிப்திய புரட்சியின் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் அதிலிருந்து எதுவுமே எஞ்சியிருப்பதாக தோற்றமளிப்பதும், பழைய ஆட்சியின் அருவருக்கத்தக்க முகமான முபாரக் தன்னைத்தானே பொதுமக்களிடம் சுதந்திரமாக காட்டிக் கொள்வதும் எவ்வாறு சாத்தியமானது? அரசியல்ரீதியில் இதற்கு யார் பொறுப்பு, வரவிருக்கும் வர்க்க மோதல்களுக்கான அரசியல் படிப்பினைகள் என்ன?

எகிப்திய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் இத்தகைய தீர்க்கமான கேள்விகளுக்கு பதிலளிப்பதில் பிரதானமானதை ரஷ்ய புரட்சியின் ஓர் ஆய்வில் காணலாம். உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு தலைவரான டேவிட் நோர்த் வழங்கிய “ரஷ்ய புரட்சியை ஏன் படிக்க வேண்டும்?” என்ற அவரது உரையில், தொழிலாள வர்க்கத்தின் வெற்றிக்கான தீர்க்கமான முன்நிபந்தனைகளை விவரித்தார்: 

“விவசாயிகளின் ஒரு புரட்சிகர மேலெழுச்சியால் ஆதரிக்கப்பட்டிருந்த ரஷ்ய தொழிலாள வர்க்க இயக்கம், 1917 இல் பிரமாண்ட பரிமாணம் எடுத்தது. ஆனால் அந்த ஆண்டு சம்பவங்களைக் குறித்த எந்தவொரு உண்மையான கவனத்தில் கொள்ளலும், போல்ஷிவிக் கட்சியின் தலைமை இல்லையென்றாலும் தொழிலாள வர்க்கம் அதிகாரத்திற்கு வந்திருக்கும் என்ற தீர்மானத்திற்கு வர அனுமதிக்காது. இந்த அனுபவத்திலிருந்து இன்றியமையா படிப்பினைகளைப் பெற்று, பின்னர் ட்ரொட்ஸ்கி வலியுறுத்துகையில், 'ஒரு புரட்சிகர சகாப்தத்தில் [தொழிலாள வர்க்க] தலைமை வகிக்கும் பாத்திரமும் பொறுப்பும் பிரமாண்டமானதாக இருக்கும்,” என்றார். இந்த தீர்மானம் 1917 இல் எந்தளவிற்கு செல்லுபடியானதோ அதேயளவிற்கு இன்றைய வரலாற்று நிலைமைகளுக்கும் செல்லுபடியாவதாக உள்ளது.”

எகிப்திய புரட்சி ஐயத்திற்கிடமின்றி ஒரு பிரமாண்ட மேலெழுச்சி என்பதோடு, தொழிலாள வர்க்கமே அதன் உந்து சக்தியாக இருந்தது. ஜனவரி 25, 2011 இல் பத்தாயிரக் கணக்கானவர்கள் கெய்ரோ வீதிகளிலும் மற்றும் ஏனைய பிரதான தொழில்துறை நகரங்களிலும் வெள்ளமென பெருக்கெடுத்தனர். ஜனவரி 28 இல், “வெள்ளிக்கிழமை கோபத்தின்" போது முன்பில்லாதளவில் அதிகரித்து வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிச் சண்டைகளில் முபாரக்கின் இழிவார்ந்த பாதுகாப்புப் படைகளைத் திருப்பி தாக்கினர். அதற்கடுத்தடுத்த நாட்களில், மில்லியன் கணக்கானவர்கள் எகிப்து எங்கிலும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பெப்ரவரி 7 மற்றும் 8 இல், ஒட்டுமொத்தமாக நாடெங்கிலும் உடைத்து கொண்ட வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆலை ஆக்கிரமிப்புகளின் ஓர் அலை முபாரக்கிற்கு தீர்க்கமான அடியை வழங்கியது.  

பெப்ரவரி 11 க்குப் பின்னர் தொழிலாள வர்க்கம் தொடர்ந்து தீர்மானகரமான புரட்சிகர படையாக அபிவிருத்தி அடைந்தது. பதவியிலிருந்து முபாரக் தூக்கியெறியப்பட்டதற்கு பிந்தைய உடனடியான அடுத்தடுத்த நாட்களில், அங்கே நாளொன்றுக்கு 40 இல் இருந்து 60 வேலைநிறுத்தங்கள் இருந்தன. 2010 இல் நடந்த மொத்த வேலைநிறுத்தங்களை விட அதிகமான வேலைநிறுத்தங்கள் பெப்ரவரியில் நடந்தன. வேலைநிறுத்தங்களும் சமூக போராட்டங்களும் 2012 மற்றும் 2013 இன் போதும் தொடர்ந்து அதிகரித்தன என்றாலும், ரஷ்யாவைப் போல, ஒரு புரட்சிகர வேலைத்திட்டத்துடன் கூடிய ஓர் அரசியல் தலைமை எகிப்தில் இருக்கவில்லை.

உலக சோசலிச வலைத் தளம் புரட்சியின் ஆரம்பத்திலிருந்தே முதலாளித்துவ வர்க்கத்தின் ஜனநாயக குணாம்சம் மீதான எந்தவித நப்பாசைக்கு எதிராகவும் எச்சரித்து வந்தது. பெப்ரவரி 1, 2011 முன்னோக்கில் டேவிட் நோர்த் எழுதினார்: “ஒரு புரட்சிகர கொந்தளிப்பின் ஆரம்ப கட்டத்தில் எப்போதும் இருப்பதைப் போலவே, மேலோங்கிய முழக்கங்கள் ஒரு பொதுவான ஜனநாயக தன்மையைக் கொண்டுள்ளன. படுகுழி நெருங்கி வருவதைக் கண்டு அஞ்சுகின்ற ஆளும் உயரடுக்கு, பழையை ஒழுங்கில் எவற்றை எல்லாம் அவர்களால் பேண முடியுமோ அதைப் பேணுவதற்காக பெரும்பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களின் உதடுகளில் இருந்து 'சீர்திருத்தத்திற்கான' வாக்குறுதிகள் சர்வ சாதாரணமாக வருகின்றன…     

“ஆனால் எந்தவிதமான ஜனநாயக ஐக்கியம் முன்மொழியப்பட்டதோ அது […] தொழிலாள வர்க்கத்திற்கும், கிராமப்புற ஏழைகளுக்கும் மற்றும் வீதிகளில் இறங்கிய இளைஞர்களின் பரந்த பிரிவினருக்கும் எதையும் வழங்கப் போவதில்லை. நிலவும் சொத்துடைமை உறவுகளை மிகவும் பரந்தளவில் மாற்றியமைப்பதும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு அரசியல் அதிகாரத்தைக் கைமாற்றாமல், எகிப்திய சமூகத்தின் பரந்த பெருந்திரளான மக்களின் அத்தியாவசிய தேவைகளை கைவரப் பெற முடியாது.” 

லியோன் ட்ரொட்ஸ்கி அபிவிருத்தி செய்த நிரந்தர புரட்சி தத்துவமே அக்டோபர் 1917 இல் அதிகாரத்தைக் கைப்பற்ற ரஷ்ய தொழிலாள வர்க்கத்தை வழிநடத்திய மூலோபாய முன்னோக்காக இருந்தது. காலங்கடந்து முதலாளித்துவ அபிவிருத்தி அடைந்த நாடுகளில், ஜனநாயக புரட்சியானது சோசலிச புரட்சியின் விளைவாக தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக மட்டுமே கைவரப் பெற முடியும் என்று அது குறிப்பிட்டது. ஒரு நாட்டில் ஒரு புரட்சி வெற்றி பெற வேண்டுமானால் அது ஒரு உலகெங்கிலுமான தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச மூலோபாயத்தின் அடிப்படையில் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அது மேற்கொண்டு குறிப்பிட்டது.

எகிப்திய புரட்சியானது நிரந்தர புரட்சி முன்னோக்கை எதிர்மறையான விதத்தில் நிரூபணம் செய்தது. முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவும், ஏகாதிபத்தியத்துடன் ஒருங்கிணைந்ததன் மூலமாக மற்றும் இராணுவம் செய்ததைப் போலவே அதே இன்றியமையா வர்க்க நலன்களைப் பாதுகாக்க முயன்றதன் மூலமாக புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் அது ஒரு எதிர்புரட்சி பலமாக இருப்பதை நிரூபித்தது. இது இப்போது தடை செய்யப்பட்டுள்ள முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் "தாராளவாத" முதலாளித்துவ கட்சிகளுக்கும் சம அளவில் பொருந்தும். முஹம்மது எல் பரடெயின் மாற்றத்திற்கான தேசிய அமைப்பு (National Association for Change) அல்லது ஹம்தீன் சபாஹியின் Nasserite Popular Current ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.   

புரட்சிகர சோசலிஸ்ட்கள் (RS) போன்ற குட்டி முதலாளித்துவ போலி இடது குழுக்கள் மிகவும் துரோகத்தனமான பாத்திரம் வகித்தன. புரட்சிகர சோசலிஸ்ட்கள் (RS), சர்வதேச அளவில் அமெரிக்காவின் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு, பிரிட்டன் சோசலிஸ்ட் தொழிலாளர்கள் கட்சி மற்றும் ஜேர்மனியின் இடது கட்சி பிரிவுகளின் வரிசையில் இருந்தது. புரட்சியின் ஒவ்வொரு கட்டத்திலும், அவை முதலாளித்துவ வர்க்கத்தின் இந்த அல்லது அந்த கன்னைகளிடம் தொழிலாள வர்க்கத்தை அடிபணிய செய்ய வேலை செய்தன.

முபாரக் பதவியிலிருந்து தூக்கிவீசப்பட்ட பின்னர் உடனடியாக, அவர்கள் அவரது தளபதிகள் மீது நப்பாசைகளை வளர்த்ததுடன், மொஹமத் தந்தவி தலைமையின் கீழ் இராணுவம் சமூக மற்றும் ஜனநாயக சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமென வாதிட்டன. இராணுவத்திற்கு பாரிய எதிர்ப்பு அதிகரித்ததும், அவை முஸ்லீம் சகோதரத்துவத்தை ஆதரித்தன. இஸ்லாமியவாதிகள் "புரட்சியின் வலதுபிரிவாக" இருப்பார்கள் என புரட்சிகர சோசலிஸ்ட்கள் அமைப்பு பிரகடனப்படுத்தியதுடன், ஜனாதிபதி தேர்தலில் முர்சியைத் தேர்ந்தெடுக்குமாறு அழைப்புவிடுத்தனர். முர்சி ஜெயித்த போது, அவர்கள் அதை "புரட்சியின் வெற்றியாகவும்", “எதிர்புரட்சிக்கு எதிரான மாபெரும் வெற்றியாகவும்" கொண்டாடினர்.

2013 இல் முர்சிக்கு எதிராக பாரிய போராட்டங்கள் வெடித்த போது, புரட்சிகர சோசலிஸ்ட்டுகள், இராணுவத்திற்குப் பின்னால் அலைபாய்ந்தனர். அவர்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை அமைப்புகளது நிதியுதவி பெற்ற தமரோட் கூட்டணியை (Tamarod alliance) “புரட்சியின் சாதனைக்குரிய பாதையாக" வர்ணித்தனர். அல்-சிசி இன் எதிர்புரட்சிகர கொடூர ஆட்சிக்கு அடித்தளமாக இருந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை அவர்கள் ஆரம்பத்தில் "இரண்டாவது புரட்சியாக" வர்ணித்திருந்தனர்.

இராணுவ ஆட்சிக்குழுவின் ஒடுக்குமுறை மற்றும் அதிகரித்துவரும் சமூக நாசங்கள் தொழிலாளர்களிடையே ஒரு புதிய புரட்சிகர எழுச்சியைத் தூண்டிவிடுமென புரட்சிகர சோசலிஸ்ட்கள் இப்போது அஞ்சுகின்றனர். சமீபத்திய அறிக்கை ஒன்றில் RS அறிவிக்கையில், “ஜனவரி 25 புரட்சியின் சக்திகளை ஐக்கியப்படுத்தும் வகையில் அரசியல் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், இளைஞர் மற்றும் மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் கூட்டணிகள் மூலமாக இந்த ஆட்சிக்கும் மற்றும் அதன் கொள்கைகளுக்கும் எதிராக சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை நாம் மீளக் கட்டமைக்க வேண்டியது அவசியமாகும்,” என்று குறிப்பிட்டது.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர்கள் முதலாளித்துவ வர்க்க கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் தொழிலாள வர்க்கத்தை "ஐக்கியப்படுத்தி" அடிபணிய செய்யும் அவர்களது பேரழிவுகரமான கொள்கைகளை உறுதியாக பிடித்துள்ளனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் எகிப்திய பிரிவைக் கட்டமைப்பது மற்றும் எகிப்திய தொழிலாள வர்க்கத்தில் நிரந்தர புரட்சி முன்னோக்கை நிலைநாட்டுவது ஆகியவையே எகிப்திய புரட்சியில் உள்ள முக்கிய கேள்வியாகும். ரஷ்ய புரட்சி குறித்த ஆய்வானது, எகிப்திலும் மற்றும் உலகெங்கிலும் தொழிலாள வர்க்கத்தை புரட்சிகர போராட்டங்களுக்குத் தயாரிப்பு செய்வதற்குச் சேவையாற்ற வேண்டும்.

ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டு குறித்த நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் தொடர்ச்சியான இணையவழி சொற்பொழிவுகளில் பதிவு செய்ய இங்கே பார்வையிடவும்: http://www.wsws.org/1917/