ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US rejects talks over North Korea, declaring “all options on table”

“மேசையில் அனைத்து சாத்தியக்கூறுகளும் இருப்பதாக" அறிவிப்புடன், அமெரிக்கா வட கொரியா குறித்த பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கிறது

By Peter Symonds
9 March 2017

கொரிய தீபகற்பத்தில் கூர்மையாக அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையே, வாஷிங்டனும் பியொங்யாங்கும் ஒரு மோதல் போக்கில் இருப்பதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி (Wang Yi) எச்சரித்துள்ள நிலையில், ட்ரம்ப் நிர்வாகம் வட கொரியா உடனான பேச்சுவார்த்தைகளுக்கான ஒரு சீன முன்மொழிவை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்கும் குழு, கண்டறியவியலா போர்விமானங்கள் மற்றும் திட்டமிட்டு தாக்கும் போர்விமானங்களின் பக்கபலத்துடன் 300,000 க்கும் அதிகமான துருப்புகள் ஈடுபட்டுள்ள மிகப்பெரும் தென் கொரிய-அமெரிக்க இராணுவ ஒத்திகைகள் நடந்து வருவதோடு, ஒரு மோதல் போக்கு அதிகரித்துள்ளது.

சீனா தெளிவாக அதன் வாசலில் போர் சாத்தியக்கூறுக்கான எச்சரிக்கை மணியை உணர்கிறது. நேற்று பெய்ஜிங்கில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி அசாதாரணமாக அப்பட்டமான வார்த்தைகளில் எச்சரித்தார்: “அதிவேகமான இரண்டு இரயில்கள் ஒன்றை நோக்கி ஒன்று வந்து கொண்டிருப்பதைப் போல இரண்டு தரப்புகளுமே மற்றொன்றுக்கு வழிவிட விருப்பமின்றி உள்ளன.” “கேள்வி என்னவென்றால்: நடக்கவிருக்கும் மோதலுக்கு இரண்டு தரப்பும் நிஜமாகவே தயாராக இருக்கிறதா? சிவப்பு விளக்கு காட்டுவதும், இரண்டு இரயில்களையும் நிறுத்துவதற்கு விண்ணப்பிப்பதும் தான் இப்போது எங்களின் முன்னுரிமையாக உள்ளது,” என்றார்.

ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி (Nikki Haley), வட கொரியா அதன் அணுஆற்றல் மற்றும் ஏவுகணை திட்டங்களை நிறுத்துவதற்கு கைமாறாக, அமெரிக்காவும் தென் கொரியாவும் அவற்றின் வருடாந்தர Foal Eagle போர் சாகசங்களை நிறுத்துவதற்கான சீன திட்டத்தை அழுத்தந்திருத்தமாக மறுத்தளித்தார். சீனாவின் "இரட்டை இடைநிறுத்தத்தை" (dual suspension) மட்டும் நிராகரிக்கவில்லை, மாறாக எந்தவித எதிர்கால பேச்சுவார்த்தைகளையும் நடைமுறையளவில் நிராகரிக்கும் விதத்தில், நேற்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஓர் அவசர கூட்டத்திற்குப் பின்னர் ஹேலி பேசுகையில், வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் "ஒரு பகுத்தறிவார்ந்த நபர் கிடையாது" என்று ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்தார்.

வட கொரியாவை எவ்வாறு கையாள்வதென அமெரிக்கா மறுமதிப்பீடு செய்து வருவதாக ஹேலி ஊடகங்களுக்குத் தெரிவித்தார். “நாங்கள் எந்த சாத்தியக்கூறையும் ஒதுக்கிவிடவில்லை, மேசையின் மீதிருக்கும் ஒவ்வொரு சாத்தியக்கூறையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்,” என்று அமெரிக்கா வட கொரியாவை தாக்கலாம் என்ற ஒரு மெல்லிய சூசகமான அச்சுறுத்தலுடன் தெரிவித்தார். நேரம் விரயமாகி கொண்டிருக்கிறது என்று வலியுறுத்துவதற்காக, “நாங்கள் அந்த முடிவுகளை இப்போது எடுத்து வருகிறோம், அதன்படி செயல்படுவோம்,” என்று ஹேலி எச்சரித்தார். அந்த அமெரிக்க தூதரின் தென் கொரிய மற்றும் ஜப்பானிய சமதரப்பினர், வாஷிங்டனின் ஆக்ரோஷமான நிலைப்பாட்டிற்கு அவர்களது ஆதரவை எடுத்துக்காட்டுவதற்காக பக்கவாட்டிலிருந்து அவரை பலப்படுத்தினர்.

ட்ரம்ப் நிர்வாகம் பதவிக்கு வந்ததற்குப் பின்னர், பியொங்யாங்கை நோக்கிய அமெரிக்க மூலோபாயத்தின் "விரிவான மறுயோசனையை" தொடங்கியது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் செய்திப்படி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோகசர் கே. டி. மெக்பார்லாண்ட் (K.T. McFarland) வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளில் இருந்து "ஆட்சி மாற்றம்" மற்றும் இராணுவ தாக்குதல்கள் வரையிலான "பிரதான நடைமுறைகளுக்கு அப்பாற்பட்டவை" உள்ளடங்கலாக, பல முன்மொழிவுகளுக்கு அழைப்புவிடுத்தார். ஹேலியின் நேற்றைய கருத்துக்களைக் கொண்டு பார்த்தால், வெள்ளை மாளிகை எந்தவொரு பேச்சுவார்த்தைகளையும் ஒதுக்கிவிட்டு, சாத்தியமானளவிற்கு ஆசியா மற்றும் உலகை ஒரு பேரழிவுகரமான மோதலுக்குள் மூழ்கடிக்கும் ஒரு ஈவிரக்கமற்ற நடவடிக்கை போக்கை எடுக்க தயாரிப்பு செய்து வருவதாக தெரிகிறது.

“வடக்கின் ஏவுகணை மற்றும் அணுஆற்றல் தளங்கள் மீதான தாக்குதல் போன்ற ஒரு கடுமையான படைபல காட்சி, அனேகமாக ஒரு போரைத் தொடங்கி விடக்கூடும்" என்று தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரிகளின் மூன்று கூட்டங்கள் தீர்மானித்ததாக செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸ் அறிவித்தது. நடுங்க செய்யும் விதத்தில், அதன் காரணமாகவே வெள்ளை மாளிகை இராணுவ தாக்குதல்களை நிராகரித்துள்ளது என்பதை அக்கட்டுரை எடுத்துரைக்கவில்லை.

பிரதானமாக சீனாவிற்கு எதிராக இலக்கு வைத்துள்ள அதன் வட கிழக்கு ஆசிய இராணுவ ஆயத்தப்படுத்தலை நியாயப்படுத்துவதற்கு, அமெரிக்கா, வட கொரியாவின் இவ்வார ஏவுகணை சோதனையை பற்றிக்கொண்டுள்ளது. தென் கொரியாவில் திங்களன்று தொடங்கப்பட்ட அமெரிக்காவின் Terminal High Altitude Area Defence (THAAD) எனும் தரையிலிருந்து வானில் தாக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவுவதை சீன வெளியுறவு மந்திரி யாங் நேற்று எதிர்த்தார். “THAAD அமைப்பின் கண்காணிப்பு மற்றும் முன்கூட்டிய எச்சரிக்கை பெறும் தூரம் கொரிய தீபகற்பத்தையும் கடந்து, சீனாவின் மூலோபாய பாதுகாப்பை உட்கொண்டிருக்கிறது என்பது சர்வசாதாரணமாக புரிந்து கொள்ளக்கூடியதாகும்,” என்றார்.

ஆனால் ஒருபுறம் வாஷிங்டனுடன் ஓர் உடன்படிக்கையை கோரிக் கொண்டும், மறுபுறம் அதன் சொந்த இராணுவ தகைமைகளை விரிவாக்கிக் கொண்டும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) போர் அச்சுறுத்துக்குக் காட்டும் விடையிறுப்பானது, மோதல் அபாயத்தை அதிகரிக்க மட்டுமே செய்கிறது. உத்தியோகபூர்வ Xinhua செய்தி நிறுவனம் வெளியிட்ட ஒரு கருத்துரை, THAAD ஆயுத அமைப்பு பிராந்திய ஆயுத போட்டியில் போய் முடியும் என்று எச்சரித்ததோடு, அமெரிக்க ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறையை எதிர்கொள்ள சீனா இன்னும் அதிக அணுஆயுத ஏவுகணைகளைக் கட்டமைக்க வேண்டுமென அறிவுறுத்தியது.

ஜப்பான் கடலைக் கொந்தளிக்க விடுவதற்கு முன்னதாக சுமார் 1,000 கிலோமீட்டர் பயணித்திருந்த மத்திய-தூர தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணைகள் நான்கினை வட கொரியா திங்களன்று பரிசோதித்திருந்ததே, வட கொரியாவுடன் தீவிரமடைந்து வரும் அமெரிக்க மோதலுக்கான உடனடி சாக்குபோக்காக இருந்தது. அதன் பிரதேசம் தாக்கப்பட்டால் "அணுஆயுத தளவாடங்கள் கொண்ட அதன் மிகவும் சக்தி வாய்ந்த Hwasong ராக்கெட்டுகளுடன், ஆக்ரோஷம் மற்றும் ஆத்திரமூட்டல்களின் இடங்களை அது சாம்பலாக்கும்" என்று வட கொரியா அறிவித்தது. இதுபோன்ற அர்த்தமற்ற அச்சுறுத்தல்களுக்கும் வட கொரிய மக்களைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவை வெறுமனே நேரடியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கரங்களில் சாதகமாக்கிக் கொள்ளப்படுவதோடு, போர் அபாயங்களை மட்டுமே உயர்த்துகின்றன.

வாஷிங்டனின் பிரதான இலக்கில் இருப்பது வட கொரியா அல்ல, மாறாக சீனா ஆகும். ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போதே, ட்ரம்ப், அமெரிக்க வேலைகளை திருடுவதாகவும் மற்றும் "அமெரிக்காவை சீரழிப்பதாகவும்" சீனாவைக் குற்றஞ்சாட்டி, திட்டமிட்டு சீன-விரோத அந்நிய எதிர்ப்புணர்வை தூண்டிவிட்டார். அமெரிக்க தடையாணைகளை மீறியதாக குற்றஞ்சாட்டி சீன தொழில்நுட்ப பெருநிறுவனம் ZTE மீது சாதனையளவிற்கு $1.19 பில்லியன் அபராதம் விதித்து, வெள்ளை மாளிகை செவ்வாயன்று வர்த்தக போர் நடவடிக்கைகளின் முதல் அடியை எடுத்து வைத்தது.

முன்னதாக தென் சீனக் கடல் விவகாரத்தில் அச்சுறுத்தும் விதத்தில் அறிக்கைகளை வெளியிட்டும், “ஒரே சீனா" கொள்கையைக் கைவிட அச்சுறுத்தியும், ட்ரம்ப் நிர்வாகம் சீனா மீது ஆழ்ந்த அழுத்தத்தை பிரயோகிப்பதற்குரிய ஒரு வழிவகையாக அது வட கொரியா மீது தங்கியிருப்பதாக தெரிகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சன் அடுத்த வாரம் டோக்கியோ, சியோல் மற்றும் பெய்ஜிங் கூட்டங்களில் கலந்து கொள்ள செல்கிறார், இவை வட கொரியாவின் "அணுஆயுத மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல் முன்னெடுப்பு" மீது ஒருங்குவிந்திருக்கும். அந்த விவாதங்கள் "வட கொரியாவை நோக்கி ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்க முயலும்" என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

ரில்லர்சனின் பயணம் அமெரிக்க போர் திட்டமிடல்களுக்கு ஜப்பானிய மற்றும் தென் கொரிய ஆதரவை மேற்கொண்டு பலப்படுத்துவதற்கு முயலும் என்பதுடன், பியொங்யாங் மீது மட்டுமல்ல, மாறாக ஒட்டுமொத்த அமெரிக்க கோரிக்கைகள் மீதும் பிரதான விட்டுக்கொடுப்புகளைப் பெறுவதற்காக சீன அரசாங்கத்தை மிரட்டுவதற்காக, வட கொரியா விவகாரத்தில் அதிகரித்துவரும் நெருக்கடியை சாதகமாக்க முனையும். ஒபாமாவின் மோதல் தன்மையிலான பெய்ஜிங்கிற்கு எதிரான "ஆசியாவை நோக்கிய முன்னிலையைத்" தீவிரப்படுத்தி வரும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மேலோங்கிய இலக்கு, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்று வீழ்ச்சியைத் தடுத்து, அதன் பொருளாதார மற்றும் மூலோபாய நலன்களுக்கு சீனாவை அடிபணிய வைப்பதாகும்.  

இந்த போர் அபாயம், அமெரிக்கா மற்றும் வட கிழக்கு ஆசியாவில் உள்ள அதன் கூட்டாளிகளை அலைக்கழித்துக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் சூழப்பட்டுள்ளது. தென் கொரிய அரசாங்கம் ஓர் ஊழல் மோசடியில் சிக்கியுள்ளது, இது இதன் ஜனாதிபதி Park Geun Hye மீதான குற்றவிசாரணை மற்றும் சாத்தியமான பதவி நீக்கத்தில் போய் முடிய உள்ளதுடன், ஒரு முன்கூட்டிய தேர்தலுக்கும் இட்டுச் செல்லக்கூடும். சியோல் அதன் உள்நாட்டு குழப்பத்திலிருந்து ஒரு வரவேற்பு திசைதிருப்பலாக, வட கொரியாவை நோக்கிய ஒரு போர்நாடும் அணுகுமுறையை ஆதரித்து வருகிறது. அதேபோல, ஜப்பானிய அரசாங்கம் அதன் தேக்கமடைந்திருக்கும் பொருளாதாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப மற்றும் அதன் சொந்த இராணுவ மீள்ஆயுதமயமாக்கலை நியாயப்படுத்த பியொங்யாங் உடனான மோதலை பற்றி உள்ளது. வட கொரியா அல்லது வேறு ஏதேனும் சாத்தியமான எதிரிகளுக்கு எதிராக, முன்கூட்டிய தாக்குதல்களை நடத்துவதற்கு இராணுவ தளவாடங்கள் கொள்முதல் செய்யுமாறு மூத்த அரசாங்க பிரமுகர்கள் ஜப்பானுக்கு அழைப்புவிடுக்கின்றனர்.

ஆனால் இந்த ஆழமான ஸ்திரமற்ற நிலைமையின் மிகவும் வெடிப்பார்ந்த காரணி அமெரிக்கா ஆகும், அங்கே ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகமும் மற்றும் அரசு எந்திரமும் வெளியுறவு கொள்கை மீதும் மற்றும் ஒருவர் மீது ஒருவர் ஊடுருவல் குற்றச்சாட்டுக்கள் கூறியும் கடுமையான உள்சண்டைகள் மற்றும் பரஸ்பர குற்றச்சாட்டுகளால் பின்னிப்பிணைந்துள்ளன. அபாயம் என்னவென்றால், தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள ஸ்டீபன் பானன் போன்ற பாசிசவாத பிரமுகர்களது வழிகாட்டுதலில் உள்ள ட்ரம்ப் நிர்வாகம் இந்த ஆழ்ந்த உள்நாட்டு நெருக்கடியிலிருந்து கவனத்தை திசைதிருப்பவும் மற்றும் ஏற்படக்கூடிய பேரழிவுகரமான விளைவுகளைக் குறித்து கவலைப்படாமல் சீனாவுடனான ஒரு மோதலுக்கு அதன் திட்டங்களை முன்னெடுக்கவும் வட கொரியாவிற்கு எதிரான ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவ நடவடிக்கையின் பாதையைத் தேர்ந்தெடுக்கும் என்பதேயாகும்.