ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ජනාධිපති සිරිසේන මානව හිමිකම් කඩ කිරීම ගැන පරීක්ෂනය හෙලා දැකීම පිටුපසින්

மனித உரிமை மீறல்கள் விசாரணையை ஜனாதிபதி சிறிசேன கண்டனம் செய்வதன் பின்னணியில்

By K. Ratnayake 
4 March 2017

இலங்கை மனித உரிமை மீறல்கள் பற்றிய விசாரணையை நடத்த சர்வதேச நீதிபதிகளை இணைத்துக்கொள்ளுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை  (யு.என்.எச்.ஆர்.சி.) உயர் ஸ்தானிகர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அறிவித்தார். அந்த அறிவித்தல் வந்து இருபத்தி நான்கு மணி நேரம் முடிவதற்குள், ஜனாதிபதி சிறிசேன வியாழக்கிழமை அதை நிராகரிப்பதாக ஸ்ரீ.ல.சு.க. மத்திய குழு கூட்டத்தில் பெருமையாக கூறிக்கொண்டர்.

யு.என்.எச்.ஆர்.சி. உயர்ஸ்தானிகர், தனது அறிக்கைக்குள் அவ்வாறு அறிவித்தது, ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கமானது மனித உரிமை மீறல்களை மூடி மறைப்பது சம்பந்தமாக எழுந்துள்ளன எதிர்ப்புக்களை தணிப்பதற்காகவே ஆகும். பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட இனவாத யுத்தத்தைதின் போது செய்யப்பட்ட யுத்தக் குற்றங்களை மூடி மறைப்பதற்கு இலங்கை முதலாளித்துவ வர்க்கத்திற்கு உள்ள மூர்க்கமான எதிர்பார்ப்பையே சிறிசேனவின் இந்த பாய்ச்சல் வெளிப்படுத்துகிறது.

முப்பது ஆண்டுகால போரில், இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் உட்பட பெருந்தொகை உயிர்கள் பலியாகியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கம் புலிகளின் தோல்வியுடன் 2009 மே மாதம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு முன்னரான வாரங்களில் மட்டும், பத்தாயிரக்கணக்கான தமிழ் சிவிலியன்கள் கொல்லப்பட்டனர் என்று ஐ.நா. புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. சரணடைந்தவர்களுக்கும் அதே கதியே நேர்ந்தது. அநேகமானவர்கள் சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். மேலும் ஆயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

போர் முடிவடைந்த கடைசி சில நாட்களில் நடந்த இராணுவ நடவடிக்கைகள் பற்றி, இராஜபக்ஷவுக்கு பதிலாக தானே வேலை பார்த்ததாக சிறிசேன மீண்டும் மீண்டும் உற்சாகத்துடன் கூறுகின்றார். போர் நடந்த முழு காலமும், சில அரசாங்கங்களில் அமைச்சராகவும் மற்றும் எதிர்க்கட்சியில் பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்த சிறிசேனவும், யுத்தக் குற்றங்கள் தொடர்பாக அரசியல் ரீதியில் பொறுப்பாளியாவார்.

யு.என்.எச்.ஆர்.சி. ஆண்டு கூட்டத்தில், போர் குற்றங்களை மூடி மறைப்பதற்காக, அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய நாடுகளின் ஆதரவை தொடர்ந்தும் பெற்றுக்கொள்வதற்காக சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவை கெஞ்சுவதற்காக பயன்படுத்தி வருகின்ற நிலையிலேயே சிறிசேன இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் மீறல்கள் உட்பட பிரச்சினைகளை விசாரணை நடத்துவதற்காக, போலி பொறிமுறையொன்றை அமைப்பதற்கு மேலும் “கால அவகாசம் பெறுவதற்காக” இலங்கை மனித உரிமைகள் பேரவைக்கு முன்வைத்துள்ள பிரேரணைக்கு, ஏற்கனவே பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆதரவு கிடைத்துள்ளதோடு அமெரிக்காவும் ஆதரிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரிகின்றது. வெளியுறவு அமைச்சர் இந்த இரு நாடுகளதும் ஒத்துழைப்புடன் அதை முன்வைத்து அங்கீகாரம் பெறவே காத்திருக்கின்றார்.

அமெரிக்காவின் தீவிர வலதுசாரி புதிய ஜனாதிபதி டொனால்ட் டரம்பின் அரசாங்கத்தின் துணை இராஜாங்கச் செயலாளர் எரின் பெர்லசி புதனன்று ஜெனீவாவில் மனித உரிமை பேரவை கூட்டத்தல் பின்வருமாறு கூறினார்: "பேரவை ஒழுங்காக வேலை செய்யும் போது, அதன் சாதனைகள் மனித உரிமைகளுக்கு கிடைக்கும் வெற்றிகளாகும். உதாரணமாக, யு.என்.எச்.ஆர்.சி. நடவடிக்கைகள், இலங்கையில் சீர்திருத்த முன்னேற்றத்துக்கான ஊக்குவிப்பாக இருந்தது மட்டுமல்லாமல், கடந்த கால மீறல்கள் பற்றிய பொறுப்புக்கூறலை மேம்படுத்தவும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும் காரணமாக இருக்கும்."

ட்ரம்ப் அராசங்கத்துக்கு மனித உரிமைகள் பற்றிய எந்தவொரு அக்கறையும் கிடையாது. போர்க் குற்றங்களுக்கு பேர்போன மற்றும் தொடர்ந்தும் அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் இஸ்ரேலை, “நியாயமற்ற முறையிலும் விஷமத்தனமாகவும்" விமர்சிப்பதாக பேர்லசி யு.என்.எச்.ஆர்.சி. ஆணையாளரை சாடினார். ஈரான், சிரியா மற்றும் வட கொரியா சம்பந்தமாக, யு.என்.எச்.ஆர்.சி. போதுமானளவு தலையிடவில்லை என அவர் குறை கூறினார். அவை தனது ஆக்கிரமிப்பு தலையீடுகளுக்கு ட்ரம்ப் அரசாங்கம் குறிவைத்துள்ள நாடுகாளகும்.

2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ ஆட்சியை அகற்றி சிறிசேனவை அதிகாரத்தில் இருத்துவதற்கு ஒபாமா அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்ற சதி, சீனாவுக்கு எதிரான அமெரக்க போர் தயாரிப்புகளில் இலங்கையையும் கட்டி இழுப்பதற்கே நடத்தப்பட்டது. கொழும்பு அரசாங்கத்தின் போருக்கு அமெரிக்கா ஆதரவு கொடுத்த போதிலும், கபடத்தனமாக, ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் நடந்த போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணையை கோரும் பிரேரணையை முன்வைப்பது வரை சென்றது, சீனாவிடம் இருந்து தூர விலகுமாறு அழுத்தம் கொடுப்பதற்கே.

சிறிசேனவை ஆட்சியில் அமர்த்தி, இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்காவுக்கும் மற்றும் தெற்காசியாவில் அதனது மூலோபாய பங்குதாரரான இந்தியாவுக்கும் சார்பாக மாற்றத் தொடங்கிய பின்னர், ஒபாமா நிர்வாகம் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை தேவை என்ற முன்மொழிவை குப்பையில் போட்டது.

மாறாக, மனித உரிமை மீறல்களை விசாரிப்பது என்ற பெயரில் ஒரு "பொறிமுறையை" உருவாக்கிக்கொண்டு செயல்படுவதற்கு இலங்கையை அனுமதிக்க வேண்டும் என ஒரு தீர்மானத்தை சிறிசேன அரசாங்கத்திற்கு நிறைவேற்றிக் கொடுக்க அமெரிக்கா முன்னணி வகித்தது. சர்வதேச நீதிபதிகளை அந்த பொறிமுறையில் இணைத்துக்கொள்ளும் பிரிவும் அதில் உள்ளடக்கப்பட்டதற்கான காரணம், தமிழ் முதலாளித்துவக் கட்சிகளுக்கும் போலி-இடதுகளுக்கும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமான ஒரு "பாரபட்சமற்ற" சர்வதேச விசாரணை நடைபெறுகின்றது என்ற போலிப் பிரச்சாரத்தை முன்னெடுத்து, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் கண்களில் மண் தூவுவதற்கு வாய்ப்பளிப்பதற்கே.

இராஜபக்ஷவும் அவரைச் சூழ அணிதிரண்டுள்ள சிங்கள பேரினவாதிகள் மற்றும் இராணுவமும் இந்த போலித் தோற்றத்தைக் கூட எதிர்க்கின்றன. அரசாங்கம் வாழ்க்கை நிலைமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் எழும் அதிருப்தியை சுரண்டிக்கொண்டு மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயலும் இராஜபக்ஷ, இனவாத பிரச்சாரத்தை முன்னெடுக்க யு.என்.எச்.ஆர்.சி.யிலான இந்த பிரேரணையை நன்கு பயன்படுத்திக்கொள்கின்றார்.

உண்மையில், வாஷிங்டன் இந்து சமுத்திரப் பகுதிகளில் முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளுடன் இலங்கையை அணிதிரட்டுவதையே சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் இந்த புகைச்சலுக்குப் பின்னால் முன்னெடுக்கின்றது. அமெரிக்காவின் ஆசியா பசிபிக் இராணுவ நடவடிக்கைகளுக்கான மையம், இலங்கை இராணுவத்தை அதற்காக பயிற்றுவிப்பதை துரிதப்படுத்தியுள்ளது. நெருக்கடியில் மூழ்கியுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள், உலகின் மீது தமது அதிகாரத்தை ஸ்தாபித்துக்கொள்வதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பாகமாகவே தெற்கு ஆசிய பிராந்தியத்தில் சீனாவிற்கு எதிரான போருக்கு இவ்வாறு தயாராகின்றது.

சீனாவை தனது பிரதான இலக்காக அறிவித்துள்ள ட்ரம்ப்பின் கீழ் இந்த வேலைகள் மேலும் ஆழப்படுத்தப்படவுள்ளன. ட்ரம்ப் அரசாங்கம் மனித உரிமைகளை ஒரு சதத்துக்கும் கணக்கில் எடுக்காது என்பதை சிறிசேன கணிக்கிறார். சிறிசேனவை அமெரிக்க ஆட்சி மாற்றத்திற்கு பொருத்தமான வேட்பாளராக தேர்வு செய்து முன்வைப்பதற்கு வாஷிங்டன் சார்பாக செயல்பட்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவரும் பிரதமருமான விக்கிரமசிங்கவுக்கும் போர் குற்றங்கள் பற்றிய எந்த அக்கறையும் கிடையாது. அவர்கள் அனைவரும் மற்றும் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் கூட ராஜபக்ஷவைப் போலவே குற்றவாளிகளின் கூண்டில் இருப்பவர்கள்.

தாம் ராஜபக்ஷவையும் விஞ்சும் விதத்தில் போர்க்குற்ற விசாரணைகளை எதிர்ப்பவராக காட்டிக்கொண்டு, இராணுவம், பௌத்த துறவிகள் உட்பட பேரினவாதிகளை தமது பின்னால் அணிதிரட்டிக்கொள்வதற்கே சிறிசேன முயற்சிக்கின்றார். அவரது இலக்கு தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் கரங்களை வலுப்படுத்திக்கொள்வதாகவே உள்ளது.

2015ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போர் குற்றங்களை மூடி மறைக்கும் பிரேரணையை உருவாக்குவதை ஆதரித்தது. இப்போது அது, அரசாங்கம் ஏகாதிபத்தியவாதிகளின் ஒத்துழைப்புடன் மனித உரிமை மீறல்களை விசாரிக்கும் பொறிமுறையை அமைப்பதற்காக கால அவகாசம் பெறும் நோக்கில் முன்வைக்கப்படவுள்ள தீர்மானத்தையும் ஆதரிக்கவுள்ளது. தொழிலாள ஒடுக்கப்பட்ட மக்களின் எந்தவொரு ஜனநாயக உரிமைகளின் பேரிலும் போராடுவதற்கு தயாரில்லாத பலவீனமான தமிழ் உயரடுக்கு, இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கொழும்பு அரசாங்கத்துடனும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுடனும் அணிசேர்ந்துள்ளது.

புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட தமிழ்த் கூட்டமைப்பும் ஏனைய தமிழ் முதலாளித்துவ கட்சிகளும், தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் ஜனநாயக உரிமைகளில் ஆர்வம் காட்டவில்லை. சிங்கள, தமிழ் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்காக, சிங்கள பேரினவாதிகளுடன் சேர்ந்து போட்டிக்கு தமிழ் இனவாதத்தை தூண்டிவிட்டு, தமிழ் முதலாளித்துவ கும்பலுக்காக வட கிழக்கில் ஒரு பகுதியை ஒதுக்கிக்கொண்டு, கொழும்பு அரசாங்கத்துடன் கூட்டாக சுரண்டும் நிலைமையை உருவாக்கிக்கொள்ளவே அவர்கள் ஆர்வம் காட்டினர். அதற்காக அவர்கள் எப்போதும் ஏகாதிபத்தியவாதிகளின் ஆதரவைக் கோரினார்.

நவ சம சமாஜக் கட்சி (ந.ச.ச.க.), ஐக்கிய சோசலிசக் கட்சி (USP) மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சி (மு.சோ.க.) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிறிசேன அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு பங்களித்தது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகாமுக்கு மாறின. நவ சம சமாஜக் கட்சியும் அதன் தலைவர் விக்கிரம்பாகு கருணாரட்னவும், இந்த அரசாங்கத்தில் தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை காக்க முடியும் என கூறித் திரிவதோடு, ஐக்கிய சோசலிசக் கட்சியும் மு.சோ.க.வும் அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை அதிகரிப்பதன் மூலம் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்க இயலும் என்ற மாயையை பரப்புகின்றன. அவர்களது வேலைத் திட்டத்தின் இலக்கு, தொழிலாளர்களை திசை திருப்பி, முதலாளித்துவ வர்க்கத்துடன் கட்டிப்போட்டு, அதன் தாக்குதல்களின் எதிரில் அரசியல் ரீதியாக நிராயுதபாணயாக்குவதே.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும், 2015 ஜனாதிபதி தேர்தல்ல் அமெரிக்க ஆட்சிமாற்றம் பற்றி எச்சரித்து, சிறிசேன மற்றும் இராஜபக்ஷ ஆளும் குழுக்களுக்கு எதிராக சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்கள் அனைத்து முதலாளித்துவக் கட்சிகளில் இருந்தும் முற்றிலும் சுயாதீனமாவதற்கு வேலைத் திட்டம் ஒன்றை முன்வைத்தது.

7 ஜனவரி 2015 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் விஜே டயஸ் எழுதிய முன்னோக்கில், தேசியவாதம் மற்றும் முதலாளித்துவ தேசிய-அரசை அடிப்படையாகக் கொண்ட நிகழ்ச்சி நிரல்களின் திவாலை அம்பலப்படுத்தினார்.

இலங்கை தேர்தலில் அமெரிக்கத் தலையீடானது போருக்கான ஏகாதிபத்திய உந்துதல் தீவிரப்படுத்தப்படும் போது பிராந்தியம் பூராவும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கப் போவது என்ன என்பது பற்றிய ஒரு முன்னறிவிப்பாக இருக்கிறது. போர் மற்றும் சமூக அவலத்தின் தோற்றுவாயான இலாப நோக்கு அமைப்பு முறையை தூக்கிவீசுவதை இலக்காகக் கொண்டு, முக்கிய ஏகாதிபத்திய மையங்கள் உட்பட,  ஆசியாவிலும் சர்வதேச ரீதியிலும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஐக்கியப்பட்ட இயக்கத்தினால் மட்டுமே இதை எதிர்த்துப் போராட முடியும்.சோசலிச சமத்துவக் கட்சி இந்த முன்னோக்குக்கே போராடுகின்றது.

இந்த முன்னோக்கே சரியென நிரூபிக்கப்பட்டுள்ளது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கமும் முதலாளித்துவ உயரடுக்கும், வாழ்க்கைத் தரங்கள் மற்றும் சமூக உரிமைகள் மீது தொடுக்கும் தாக்குதல்களுக்கு எதிராக, தெற்காசியாவிலும் உலகம் பூராவும் சோசலிச குடியரசுகளுக்கான போராட்டத்தின் பாகமாக, சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தை, அதாவது ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை ஸ்தாபிப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயக, வாழ்க்கை மற்றும் சமூக உரிமைகளை வெற்றிகொள்ள முடியும். இந்த போராட்டமானது ஏகாதிபத்திய யுத்த அச்சுறுத்தலுக்கு எதிராக, சர்வதேச தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் ஒரு சோசலிச இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கான போராட்டத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் சோசலிச சிந்தனை கொண்ட அனைவரிடமும் இந்த முன்னோக்குடன் இணைந்து போராடுமாறு நாம் அழைப்பு விடுக்கின்றோம்.