ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US sends drones, assassination squad to South Korea

அமெரிக்கா தென் கொரியாவிற்கு டிரோன்களையும் கொலைப் படைகளையும் அனுப்புகிறது

By Peter Symonds
14 March 2017

ட்ரம்ப் நிர்வாகம் தென் கொரியாவிற்கு தாக்கும் டிரோன்களை அனுப்பியும் மற்றும் ஏற்கனவே நடந்து வரும் பாரிய போர் ஒத்திகைகளில் பங்கெடுக்க சிறப்புப்படை பிரிவுகளை அனுப்பியும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் அதீத பதட்டமான விட்டுக்கொடுப்பற்ற நிலையை இன்னும் தீவிரப்படுத்தி உள்ளது. வட கொரியாவின் அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது தாக்குதல் தொடுக்க வெள்ளை மாளிகை பரிசீலித்து வருகின்ற நிலையில் தான், இந்த இராணுவ ஆயத்தப்பாடுகள் நடக்கின்றன.

கிரே ஈகிள் (Gray Eagle) நிறுவனத்தின் ஆளில்லா வான்வழி தளவாடங்கள் (UAS) சியோலின் தெற்கே குன்சன் விமானத் தளத்தில் நிரந்தரமாக நிலைநிறுத்தப்படுமென US Forces Korea கட்டளையகம் திங்களன்று அறிவித்தது. “அமெரிக்க போர்ஸ் கொரியா கட்டளையகம் மற்றும் நமது [தென் கொரிய] பங்காளிகளது வேவுபார்ப்பு, கண்காணிப்பு மற்றும் அறிவுசார் ஆற்றல்களை இந்த UAS தளவாடங்கள் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்துகின்றன,” என்றது அறிவித்தது.

அமெரிக்க அறிக்கை வேவுபார்ப்பை குறிப்பிடுகின்ற போதினும், படுகொலைகளை நடத்தவும் மற்றும் இராணுவ இலக்குகளைத் தாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ள ஹெல்பயர் ஏவுகணைகளில் நான்கையும் கூட கிரே ஈகிள் டிரோன்களால் தாங்கிச் செல்ல முடியும். இந்த உயிர்பறிக்கும் டிரோன்கள் 24 மணி நேரம் வரையில் தரையிறங்காமல் பறக்கக்கூடியவையாகும்.

தென் கொரிய இராணுவம் ஐயத்திற்கிடமின்றி நிலைநிறுத்தல்களுக்காக இருந்தது. பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் Yonhap செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “கொரிய தீபகற்பத்தில் ஒரு போர் ஏற்பட்டால், ஆளில்லா இந்த விமானம் வட கொரிய வான்எல்லைகளுக்குள் ஊடுருவி, போர் கட்டளையகம் மற்றும் ஏனைய பிரதான இராணுவ தளங்கள் மீது ஒரு துல்லியமான தாக்குதலை நடத்தும்,” என்றார்.

தென் கொரியாவிற்கு தாக்கும் டிரோன்களை அனுப்பியமை, ஒசாமா பின் லேடனைக் கொன்ற அதிஉயர் பயிற்சி பெற்ற தாக்கும் படையான SEAL படைப்பிரிவு 6 ஐ உள்ளடக்கிய அமெரிக்க சிறப்புப்படைகள் Foal Eagle எனும் வருடாந்தர போர் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளதுடன் பொருந்தி வருகிறது. இந்த SEAL படைப்பிரிவு அமெரிக்க தரைப்படை ரேஜ்சர்ஸ் (US Army Rangers), டெல்டா ஃபோர்ஸ் (Delta Force) மற்றும் கிரீன் பேரெட் (Green Berets) ஆகியவற்றுடன் சேர்ந்து தென் கொரியாவில் கூட்டு பயிற்சிகளில் பங்குபற்றும் என்று Yonhap குறிப்பிட்டது.

“வடக்கிற்குள் ஊடுருவ, வடக்கின் போர் கட்டளையகத்தைத் தகர்க்க மற்றும் அதன் முக்கிய இராணுவ தளங்களை நிர்மூலமாக்குவதற்கான நடவடிக்கைகளைப் பயிற்சி செய்வதற்காக" மிக அதிக எண்ணிக்கையில் மற்றும் வெவ்வேறு விதத்தில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படைப்பிரிவுகள் பங்குபற்றி வருகின்றன என்று ஒரு இராணுவ அதிகாரி அந்த செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்தார். Foal Eagle கூட்டு பயிற்சிகள் முன்பில்லாதளவில் மிகப் பெரியதாகும், இதில் ஒரு அமெரிக்க விமானந்தாங்கி போர்க்கப்பலின் தாக்கும் குழுவும், கண்டறியவியலா போர்விமானங்கள் மற்றும் தந்திரமாக குண்டுவீசும் போர்விமானங்களும், 320,000 க்கும் அதிகமான துருப்புகளுடன் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் றெக்ஸ் ரில்லர்சனின் ஜப்பான், தென் கொரியா மற்றும் சீனாவிற்கான இவ்வாரயிறுதி விஜயம் குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மார்க் டோனர் கருத்துரைக்கையில், அமெரிக்க இராணுவம் "அதிகரித்தளவில் வட கொரியாவிடம் இருந்து வரும் கவலைப்படுத்தும், கவனம் செலுத்துவதற்குரிய அச்சுறுத்தலுக்கு" எதிராக "தற்காப்பு நடவடிக்கைகளை" எடுத்து வருகிறது என்று அபத்தமாக வாதிட்டார்.

இந்த டிரோன்களும் சரி அல்லது Terminal High Altitude Area Defence (THAAD) எனப்படும் தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை தடுப்பு அமைப்புமுறையும் சரி, டோனர் குறிப்பிடும் இவ்விரண்டுமே "தற்காப்பு" தன்மை கொண்டவை அல்ல. சிறப்புப்படை பிரிவுகளுடன் சேர்ந்து இந்த டிரோன்கள், வட கொரிய இராணுவ தளங்கள் மீது "முன்கூட்டிய" தாக்குதல்கள் மற்றும் வட கொரிய தலைவர்களைக் கொல்வதற்காக "படுகொலை வேட்டையாடல்களை" நடத்த ஒத்திகை பார்த்து வருகின்றன. இது, 2015 இன் இறுதியில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஆக்ரோஷமான புதிய கூட்டு நடவடிக்கை திட்டமான OPLAN 5015 இன் அதே வரிசையில் உள்ளது.

இந்த THAAD ஆயுத அமைப்பின் நிலைநிறுத்தலானது, ஆசியாவில், அதுவும் பிரதானமாக சீனாவிற்கு எதிரான போருக்காக, தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை தடுப்பு ஆயுத அமைப்புகள் மற்றும் இராணுவ படைகளைக் கட்டமைக்கும் பென்டகனின் பரந்த கட்டமைப்பினது பாகமாக உள்ளது. தென் கொரியாவில் THAAD நிறுவுதலுக்கு பெய்ஜிங் திரும்ப திரும்ப கடுமையான ஆட்சேபணைகளைக் கூறியுள்ளது. இந்த ஆயுத அமைப்புமுறை சீனப் பெருநிலத்திற்குள் ஆழமாக கண்காணிக்க தகைமை கொண்ட ஒரு பலம்வாய்ந்த ராடார் அமைப்புமுறையைக் கொண்டிருப்பதுடன், போர் சம்பவத்தில் சீனாவிலிருந்து வரும் ஏவுகணைகள் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு இது மிகவும் முன்கூட்டிய எச்சரிக்கைகளை வழங்கக்கூடியதாகும்.

வட கொரியாவை நோக்கிய அமெரிக்க மூலோபாயத்தைத் தற்போது மீளாய்வு செய்து வரும் ட்ரம்ப் நிர்வாகம், கொரிய தீபகற்பத்தில் நீண்டகால இராணுவ தயாரிப்புகளை முன்னெடுப்பதற்காக கடந்த வாரம் வட கொரியா பரிசோதித்த தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் நான்கு ஏவுகணை சோதனைகளைச் சாதகமாக கைப்பற்றியுள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தியின்படி, வெள்ளை மாளிகை பியொங்யாங்கில் ஒரு "ஆட்சி மாற்றத்தை" மற்றும் வட கொரியா மீதான இராணுவ தாக்குதல்களைச் செயலூக்கத்துடன் பரிசீலித்து வருகிறது.

“வட கொரியாவைக் கையாள்வதற்கு நாம் புதிய யோசனைகளை, புதிய வழிகளைக் காண வேண்டியுள்ளது,” என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டோனர் சர்வசாதாரணமாக தெரிவித்தார். “சீனாவுக்கு அச்சுறுத்தல் புரிகிறது. வட கொரியாவில் என்ன நடந்து வருகிறதோ அது அவர்களுக்கு தெரியாது என்பதல்ல,” என்றார்.

சீனாவைக் குறிப்பிடுவதானது, வரவிருக்கும் ரில்லர்சன் விஜயத்தின் நோக்கங்களை அடிக்கோடிடுகிறது. முதலாவதாக, அவர் வாஷிங்டனின் ஜப்பானிய மற்றும் தென் கொரிய கூட்டாளிகளுக்கு அமெரிக்க திட்டங்களை விவரிக்கவும் மற்றும் மோதல் சம்பவத்தில் நெருக்கமான இராணுவ கூட்டுறவை ஊக்குவிக்கவும் உத்தேசித்துள்ளார். பின் அவர் பெய்ஜிங்கிற்கு செல்வார், அங்கே பியொங்யாங்கிற்கு எதிராக கடுமையான தண்டிக்கும் விதமான நடவடிக்கை எடுக்குமாறு சீன அரசாங்கத்தை மிரட்ட முயல்வார்.

வட கொரியா நோக்கிய அதிகரித்த அமெரிக்க அச்சுறுத்தல்களும், சீனாவையே குறி வைத்துள்ளன. ட்ரம்ப் நிர்வாகம் ஆசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பேணுவதற்கு சீனாவைத் தலையாய தடையாக ட்ரம்ப் நிர்வாகம் இலக்கில் வைத்துள்ளது. தென் சீனக் கடலில் பெய்ஜிங் நிர்வாகத்தின் கீழ் உள்ள தீவுத்திட்டுக்களை சீனா அணுகுவதற்கு அமெரிக்கா தடை விதிக்க வேண்டுமென ரில்லர்சன் ஆத்திரமூட்டும் வகையில் அறிவித்துள்ளார். அதுபோன்றவொரு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒரே வழி, அமெரிக்க இராணுவ முற்றுகையாக இருக்கும்—போருக்கு நிகரான நடவடிக்கையான இது அவ்விரு அணுஆயுதமேந்திய சக்திகளுக்கு இடையே மோதலைத் தூண்டிவிடக்கூடும்.

ஜப்பானின் மிகப்பெரிய போர்க்கப்பலான JS Izumo ஐ, சர்ச்சைக்குரிய கடல்எல்லைகளையும் உள்ளடக்கி மூன்று மாதங்களுக்கு நடவடிக்கையில் இறக்க ஜப்பானிய இராணுவம் முடிவெடுத்திருப்பதால், தென் சீனக் கடல் பதட்டங்கள் இன்னும் பதட்டமாகி உள்ளன. ராய்டர்ஸ் செய்திகளின்படி, Izumo போர்க்கப்பல் ஜூலையில் இந்திய பெருங்கடலில் நடக்கவுள்ள இந்திய மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்களின் மலபார் கூட்டு கடற்படை ஒத்திகையில் இணைவதற்கு முன்னதாக, சிங்கப்பூர், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கையில் நின்று செல்லும். அது தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படையுடன் பயிற்சியிலும் ஈடுபடும்.

ஒபாமா நிர்வாகம் மற்றும் அதன் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" எட்டுக்கும் அதிகமான ஆண்டுகளில் அமெரிக்கா ஆசிய பசிபிக் எங்கிலும் திட்டமிட்டு இராணுவ விரிவாக்கத்தில் ஈடுபட்டிருந்ததுடன், கூட்டணிகள் மற்றும் மூலோபாய பங்காண்மைகளைப் பலப்படுத்தி, கொரிய தீபகற்பம் மற்றும் தென் சீனக் கடல் உட்பட அபாயகரமான பிராந்திய வெடிப்புப்புள்ளிகளை இன்னும் அதிகளவில் தீவிரப்படுத்தியது. அந்த "முன்னெடுப்பு" போதியளவிற்கு ஆக்ரோஷமாக இல்லை என்பதில் விமர்சனபூர்வமாக உள்ள ட்ரம்ப் நிர்வாகம், இப்போது போர் அபாயத்தைப் பெரிதும் உயர்த்தும் ஒரு போக்கில் பயணிக்கத் தொடங்கி உள்ளது.

வாஷிங்டனின் நடவடிக்கைகளுக்கு வட கொரிய ஆட்சியின் விடையிறுப்பு, பிற்போக்குத்தனமான விதத்திலும் மற்றும் முற்றிலும் பிற்போக்குத்தனமாகவும் உள்ளது. அதன் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளும், அத்துடன் இரத்தம் கொதிப்பேற்றும் அதன் அச்சுறுத்தல்கள் மற்றும் கொரிய பேரினவாதமும், எந்தவிதத்திலும் கொரிய மக்களைப் பாதுகாக்காது, மாறாக வட கிழக்கு ஆசியாவில் அமெரிக்கா அதன் இராணுவ ஆயத்தப்படுத்தலை செய்வதற்கு ஒரு சாக்குபோக்கை மட்டுமே வழங்குகிறது. ஜோன் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு கொண்ட 38north.org வலைத்தள செய்தியின்படி, பியொங்யாங் மற்றொரு அணு சோதனையைச் செய்ய தயாரிப்பு செய்து வருவதை வர்த்தக செயற்கைக்கோள் படங்கள் எடுத்துக்காட்டுகிறது.

வாஷிங்டனில் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள ட்ரம்ப் நிர்வாகம் வட கொரியாவிற்கு எதிராக பொறுப்பற்ற ஆத்திரமூட்டல்கள் மற்றும் இராணுவ நகர்வுகளை வெறுமனே பரிசீலித்துக் கொண்டிருக்கவில்லை, மாறாக செயலூக்கத்துடன் தயாரிப்பு செய்து வருகிறது, இது ஒட்டுமொத்த உலகையே உள்ளிழுக்கும் ஒரு பிரளயகரமான போரைத் தூண்டும் சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது.