ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The WikiLeaks revelations and the crimes of US imperialism

விக்கிலீக்ஸ் வெளிக்கொணரல்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குற்றங்களும்

By Andre Damon
9 March 2017

பெருகிச் செல்லும் எண்ணிக்கையில் ஊடகங்களும் அரசியல் ஸ்தாபகமும், அமெரிக்காவின் மூர்க்கமான வெளியுறவுக் கொள்கை நடவடிக்கைகளை, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவியரசியல் எதிரிகளான ரஷ்யா மற்றும் சீனாவின் “ஊடுருவல்” மற்றும் “இணைய-வேவு” நடவடிக்கைகளில் இருந்து தற்காத்துக் கொள்ளும் பதிலிறுப்புகளாக பூசி மெழுகி வருகின்றன.

பல மாதங்களாக, 2016 தேர்தலில் சதிவேலையின் பொருட்டு ஜனநாயகக் கட்சியின் தேசியக் கமிட்டியை ரஷ்யா “ஊடுருவல்” செய்ததாகக் கூறப்படுகின்ற வெறிக்கூச்சலுடனான குற்றச்சாட்டுகள் தான் செய்தி நிகழ்ச்சிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றன. அச்சு ஊடகங்களும் ஒளிபரப்பு ஊடகங்களும் ரஷ்யா மீது வெறிக்காய்ச்சலுடன் கண்டனம் செய்வதில் ஈடுபட்டிருந்த போது, அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டாளிகளும் ஆயிரக்கணக்கான துருப்புகளையும் நூற்றுக்கணக்கான தாங்கிகளையும் ரஷ்யாவின் எல்லைக்கு நகர்த்தின.

அமெரிக்கத் தேர்தலில் தலையிட்டதாக குற்றம் சாட்டுவதில் மட்டும் திருப்தியடைந்து விடாமல், அமெரிக்க ஊடகங்களும் அதன் சர்வதேச பிரதிநிதிகளும் பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் இன்னும் வெகு-தூரத்தில் இருக்கும் நாடுகளில் நடக்கும் தேர்தல்களிலும் ரஷ்யா தலையீடு செய்வதாக குற்றம் சாட்டியிருக்கின்றனர். தேர்தலை ரஷ்யா “ஊடுருவல்” செய்ததாகக் கூறப்படும் இப்போதைய அமளிக்கு முன்பாக, ஒபாமா நிர்வாகமானது, அதன் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” உடன் கைகோர்த்து வந்திருந்த சீனாவுக்கு எதிரான வர்த்தகத் தடைகள் மற்றும் இராணுவத் தீவிரப்படலை நியாயப்படுத்தும் பொருட்டு “ஊடுருவல்” மற்றும் “அறிவுஜீவி உடைமைத் திருட்டு” குற்றச்சாட்டுகளை சீனாவுக்கு எதிராகப் பயன்படுத்தியது.

வெளியுறவுத் துறை, சிஐஏ அல்லது பெயர்கூறாத “உளவு அதிகாரிகள்” அமெரிக்காவின் புவியரசியல் எதிரிகள் மூலமான “இணையவழி” ஆத்திரமூட்டல் குறித்து பிரகடனம் செய்கின்ற போதெல்லாம், செய்தித் தொகுப்பாளர்கள் குற்றச்சாட்டுகளை உண்மைகளாக மூச்சுவிடாமல் முழங்குவதோடு, முகமூடியணிந்த மனிதர்கள் இருட்டு அறைகளில் கணினி தட்டச்சுப் பலகைகளில் மும்முரமாக தட்டச்சு செய்வதாகக் காட்டும் வரை, கலைக் காட்சி அல்லது ஒளிப்படக் காட்சியையும் அதனுடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.

ஆனால் நல்ல மனமும் நோக்கமும் கொண்ட அமெரிக்க அரசாங்கமானது ரஷ்ய மற்றும் சீன ஊடுருவல்காரர்கள், உளவாளிகள் மற்றும் “இணைய கேலிகள்” ஆகியவற்றின் சரமாரித் தாக்குதலுக்குள்ளாகிக் கொண்டிருப்பதான உத்தியோகபூர்வ சித்தரிப்பானது, செவ்வாயன்று, உலகெங்கிலும் இணைய-வேவு, சுரண்டல், ஹேக்கிங், மற்றும் தவறான தகவல்களைப் பரப்புதல் நடவடிக்கைகளுக்காக மத்திய உளவு முகமை சிஐஏ பயன்படுத்திய வழிமுறைகளைக் காட்டும் சுமார் 9,000 ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டதையடுத்து, முனைமுறிந்து போனது.

மொபைல் போன்கள் மற்றும் “ஸ்மார்ட்” தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எந்த இணைய-தொடர்புடைய சாதனத்தையும் சுரண்டக்கூடிய மற்றும் கட்டுப்படுத்தக் கூடிய திறனை சிஐஏ கொண்டிருப்பதாக அந்த ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. 5,000 சிஐஏ ஊடுருவல்காரர்களின் ஒரு படையினால் பிரயோகிக்கப்படும் இந்தக் கருவிகள் இம்முகமைக்கு கிட்டத்தட்ட எவரையும் -”நட்பு” நாடு மற்றும் எதிரி நாடு இரண்டுமான வெளிநாடுகள், ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் உள்ளிட அமெரிக்காவிற்குள்ளிருக்கின்ற அல்லது வெளியில் இருக்கின்ற எவரைய் வேண்டுமானாலும் அது இருக்கலாம்- வேவுபார்க்கும் வழிவகையை வழங்குகின்றன.

அமெரிக்கா உலகின் மிகப்பெரும் “போக்கிரி அரசு” ஆகவும் “இணைய குற்றவாளி” ஆகவும் இருப்பதை விக்கிலீக்ஸ் ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. வரிப் பணத்தில் நூறு பில்லியன் டாலர் கணக்கில் செலவிடப்படுகின்ற இந்த அசுரத்தனமான அமெரிக்க உளவு வலைப்பின்னலானது, தனது “கூட்டாளி”களிடம் இருந்து தனது நடவடிக்கைகளை மறைப்பதற்கு தூதரகப் பதவிகளைப் பயன்படுத்துகிறது, உலகத் தலைவர்களை வேவுபார்க்கிறது, கடத்தல்களையும் படுகொலைகளையும் ஒழுங்கமைக்கிறது அத்துடன் உலகெங்கிலும் தேர்தல்களில் செல்வாக்கு செலுத்த அல்லது அவற்றைக் கவிழ்க்க குறிவைக்கிறது.

செவ்வாய்கிழமையன்று, இந்த வெளிக்கொணரல்களுக்கு பதிலளித்த சிஐஏ இன் முன்னாள் இயக்குநரான மைக்கல் ஹேய்டன் இவ்வாறு பெருமையடித்துக் கொண்டார், “ஆனால் சிலரை நாங்கள் வேவுபார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பும் வகையான மனிதர்கள் இருக்கிறார்களே. அந்த மனிதர்களின் நோக்கங்களைத் தெரிந்து கொள்வதற்கு தொலைக்காட்சிக்குள் இருக்கின்ற கேட்கும்சாதனத்தை இயக்க இயலும் திறன் நம்மிடம் இருக்க வேண்டும் என்று நீங்கள் எங்களிடம் கேட்கிறீர்கள்.”

இவை ரஷ்யாவின் ஒரு முன்னாள் உளவுத் தலைவரிடம் இருந்து உதிர்க்கப்பட்டிருக்குமானால் அமெரிக்க ஊடகங்களில் இந்த வசனங்கள் எத்தனை பெரிய அவமானமாக முன்வைக்கப்பட்டிருக்கும் என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும். ஹேய்டன் தனது கருத்துக்களின் போது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினோ அல்லது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கோ கற்பனை மட்டுமே செய்ய இயலக் கூடிய வகையான வேவு மற்றும் அரசியல் இடையூறு செயல்பாடுகளை அமெரிக்கா இயக்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையை மூடிமறைக்க அப்பட்டமாக முயற்சி செய்கிறார்.

அமெரிக்கா தனது குற்றங்களுக்கு ரஷ்யா மற்றும் சீனா உள்ளிட்ட தனது புவியரசியல் எதிரிகளே காரணம் என்று காட்டுகின்ற போலியான அடையாளங்களை நட்டு வைப்பதன் மூலமாக தனது முறையற்ற நடவடிக்கைகளை மூடிமறைக்க முயற்சி செய்கிறது என்பதையே விக்கிலீக்ஸ் ஆவணங்கள் காட்டுகின்றன.

இணையப் பாதுகாப்பு நிபுணர் ரோபர்ட் கிரஹாம் ஒரு வலைப்பதிவில் சொல்கிறார், உதாரணமாய், “வைரஸ்-தடுப்பு ஆய்வாளர் ஒருவர் என்னிடம் சொன்னார், ஒருசமயத்தில் ரஷ்யர்கள் அல்லது சீனர்களிடம் இருந்து வந்திருப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஒரு வைரஸ் இப்போது சிஐஏ பரப்பியதாக சந்தேகிக்கப்படக் கூடியதாய் இருக்கிறது, ஏனென்றால் இந்த ஆவணக்கசிவில் விவரிக்கப்பட்டிருக்கும் சிலவற்றுடன் அது துல்லியமாக ஒத்துப் போகிறது.”

இந்த வெளிக்கொணரல்கள் ஏற்கனவே உலகெங்கும் அதிரத் தொடங்கி விட்டன. ஜேர்மனி இந்த வெளிக்கொணரல்களை “மிகத் தீவிரமான” விடயமாக பார்ப்பதாக தெரிவித்த ஜேர்மன் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளரான செபஸ்டியான் ஃபிஷர், “இதுமாதிரியான பிரச்சினைகள் மறுபடி மறுபடி எழுந்து வருகின்றன” என்று மேலும் சேர்த்துக் கொண்டார். இதனிடையே ஜேர்மனியின் தலைமை வழக்காடுநர் ஆவணங்களின் உள்ளடக்கம் குறித்த ஒரு விசாரணையை அறிவித்திருக்கிறார், செய்தித்தொடர்பாளர் ஒருவர் ராய்டர்ஸிடம் தெரிவித்தார், “ஸ்தூலமான குற்றவியல் நடவடிக்கைகளுக்கோ அல்லது குறிப்பான குற்றமிழைத்தவர்களுக்கோ ஆதாரத்தை நாங்கள் கண்டால் ஒரு விசாரணையை நாங்கள் தொடக்குவோம்.. இதனை நாங்கள் மிகக் கவனமாக ஆராய்ந்து கொண்டிருக்கிறோம்.”

ஜேர்மனியின் பிராங்க்பேர்டில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில், சிஐஏ முகவர்கள், NSA உளவாளிகள், இராணுவ இரகசிய சேவை மனிதர்கள் மற்றும் அமெரிக்க தாயகப் பாதுகாப்புத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட உளவுத்துறை ஊழியர்களின் ஒரு வலைப்பின்னலை பணியமர்த்தி, ஐரோப்பாவெங்கிலும் தனது உளவு மற்றும் இணைய நடவடிக்கைகளுக்கான ஒரு தளமாக அதை சிஐஏ பயன்படுத்தியதாக ஆவணங்கள் அம்பலப்படுத்துகின்றன. இவர்களது நடவடிக்கைகளை ஜேர்மன் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களிடம் இருந்து மறைக்கும் பொருட்டு போலியான அடையாளங்களும் தூதரக பாஸ்போர்ட்டுகளும் இவர்களில் பலருக்கு வழங்கப்பட்டன.

ஜேர்மனியின் தலைமை வழக்காடுநர் 2015 இல் முன்வைத்தவாறாய், “அமெரிக்க உளவு சேவைகளின் பெயர்தெரியாத அங்கத்தவர்கள் சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் மொபைல் போனை வேவுபார்த்தனர்” என்று 2013 இல் எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளிக்கொணர்ந்ததையே புதனன்றான ஜேர்மன் அரசாங்கத்தின் கண்டிப்பு குறிப்பிடுகிறது.

அமெரிக்க ஊடகங்கள், சிஐஏ மற்றும் மற்ற உளவு முகமைகளின் ஒரு பிரச்சார அங்கமாக தான் செயல்படுவதற்கு உண்மையாக, உடனடியாக செயலில் இறங்கி இந்த வெளிக்கொணரல்களின் முக்கியத்துவத்தை தணித்து, அமெரிக்க நலன்களுக்குக் குழிபறிக்கும் முயற்சியில் இந்த ஆவணங்களை வெளியிடச் செய்திருப்பதாக ரஷ்யா மீது கொஞ்சமும் ஆதாரமின்றி குற்றம்சாட்டின.

“இந்தக் கருவிகள் ஒரு அமெரிக்கருக்கு எதிராகப் பயன்படுத்தப்படப் போவதில்லை என்பதை என்னால் சொல்ல முடியும்” என்று ஹேய்டன் அறிவித்ததை சாதகமான வெளிச்சத்தில் NPR மேற்கோளிட்டது என்றால், வாஷிங்டன் போஸ்ட், இந்த ஆவணங்கள் குறித்து கவலை கொள்வதற்கு ஏதுமில்லை என்று கூறுகின்ற ஒரு சாரார் பாதுகாப்பு நிபுணர்களை மேற்கோளிட்டிருந்தது. அது அவ்வாறு சாதகமாக மேற்கோள் காட்டியிருந்த ஒரு “நிபுணரான” ஜோன் டாசன் அறிவித்தார், “நம்மில் மிகப் பெரும்பான்மையானோருக்கு, இது கொஞ்சமும் பொருந்தாது... சட்டத்தை மதித்து நடக்கும் சாதாரணக் குடிமகனுக்கு கவலைப்படுவதற்கு எதுவொன்றும் இல்லை”.

மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் அந்தரங்க உரையாடல்களை வேவுபார்த்து, அதுகுறித்து பொதுமக்களிடமும் நாடாளுமன்றத்திடமும் பொய்கூறியதாக ஸ்னோவ்டெனின் வெளிக்கொணரல்களில் நிரூபணமான ஒரு பாதுகாப்பு எந்திரம் குறித்து கூறப்படும் இத்தகைய அபத்தமான வசனங்கள், அமெரிக்க ஊடகங்களால் செல்லுபடியாகத்தக்க நல்ல நாணயங்களைப் போல எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

விக்கிலீக்ஸ் வெளிக்கொணரல்கள் வெளியாகி வெறும் ஒரேயொரு நாள் தள்ளி, இவையெல்லாம் அமெரிக்காவுக்கு எதிரான ரஷ்யாவின் சதியின் பாகம் என்றும் விக்கிலீக்ஸ் வெளிநாட்டு சக்திகளின் ஒரு முகவராக செயல்படுவதை இது சுட்டிக்காட்டுவதாகவும் சித்தரிப்பதில் ஊடகங்களின் சுழற்றி விடும் எந்திரம் மும்முரமாக இயங்கி வருகிறது. புதனன்று ஒளிபரப்பான NBC இன் மாலை செய்தி நிகழ்ச்சி ”ரஷ்யா சிஐஏ ஐ ஊடுருவல் செய்திருக்கக் கூடுமோ?” என்று கேட்டதென்றால், இன்னுமொரு பிரிவின் தலைப்பு “சிஐஏ க்குள் [ரஷ்ய] உளவாளி ஒருவர் இருக்கக் கூடும்?” என்றிருந்தது.

இந்த ஆவணங்களால் வெளிக்கொணரப்பட்டுள்ள வேவு மற்றும் இடையூறு ஏற்படுத்தல் பொறிமுறைகளது வகைகள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களின் பேரில் ஒட்டுமொத்த கோளத்தின் மக்களது ஜனநாயக உரிமைகளுக்குக் குழிபறிக்க தொழிற்படுகின்ற அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் ஒரு முக்கிய சாதனத்தின் அங்கமாக இருக்கின்றன. வேவுபார்ப்பது, ஊடுருவல் செய்வது, பிளாக்மெயில், கொலை, சித்திரவதை, அல்லது தேவைப்பட்டால், குண்டுவீசுவது மற்றும் படையெடுப்பது உள்ளிட்ட எந்த வழிமுறைகளுமே மேசைமேல் வைக்கப்பட்டிருக்கும் தெரிவுகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருக்கவில்லை.