ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron and neo-fascist Le Pen advance to run-off in French presidential elections

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் மக்ரோனும் நவ-பாசிச லு பென்னும் அடுத்த சுற்றுக்கு முன்னேறுகின்றனர்

By Alex Lantier
24 April 2017

1968 மே-ஜுன் பொது வேலைநிறுத்தம் முதலாக பிரான்சை ஆட்சி செய்து வந்திருக்கும் இரண்டு கட்சி ஆட்சிமுறையின் ஒரு வரலாற்றுப் பொறிவாக, சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் வேட்பாளர்கள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றிலேயே வெளியேற்றப்பட்டனர். மே 7 அன்று நடைபெறவிருக்கும் இறுதிச் சுற்றில் PS இன் முன்னாள் பொருளாதார அமைச்சரான இமானுவல் மக்ரோனும் நவ-பாசிச தேசிய முன்னணியின் மரின் லு பென்னும் மோதவிருக்கின்றனர்.

உள்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின் படி, மக்ரோன் 23.55 சதவீத வாக்குகளையும் லு பென் 22.32 சதவீத வாக்குகளையும் பெற்றனர். LR வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோன் 19.88 சதவீத வாக்குகளையும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் (PCF) ஆதரவுடன் போட்டியிட்ட அடிபணியா பிரான்ஸ் இயக்கத்தின் ஜோன் லூக் மெலோன்சோன் 19.01 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

PS வேட்பாளரான பெனுவா அமோன் வெறும் 6.12 சதவீத வாக்குகளையே பெற்றிருந்தார். இது வரலாற்றில் ஐரோப்பாவின் எந்தவொரு ஒரு முன்னணி சமூக-ஜனநாயகக் கட்சியும் கண்டிராத மாபெரும் வீழ்ச்சியாகும், இதனுடன் ஒப்பிடுவதென்றால் 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவை அடுத்து பொருளாதாரரீதியான தற்கொலைக்கு சமமான ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை திணித்த காரணத்தால் கிரீசின் Pasok கட்சி சிதறிப் போனதுடன் தான் ஒப்பிட முடியும். PS அரசாங்கத்தின் ஆழமான சிக்கன நடவடிக்கைகள், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்திவைத்த ஒரு அவசரகால நிலையை அது திணித்தமை, மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் கீழ் FNக்கு அதன் வளைந்துகொடுப்புகள் ஆகியவை கட்சியை மதிப்பிழக்கச் செய்து விட்டிருக்கின்றன.

ஃபிய்யோன் மற்றும் அமோன் இருவருமே மக்ரோனை வழிமொழிந்திருக்கின்றனர்; லு பென் ஜனாதிபதி பதவியைக் கைப்பற்ற விடாமல் தடுக்க வாக்காளர்கள் மக்ரோனை தேர்ந்தெடுக்க அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். அமோன் தனது தோல்வியை ஒரு “ஆழமான காயம்” என்றும், ஒரு “தார்மீகத் தோல்வி” என்றும் 15 ஆண்டுகளுக்குள் இரண்டாம் முறையாக வாக்காளர்கள் PS க்கு அளித்திருந்த “வரலாற்றுப்பெரும் தண்டனை” என்றும் அழைத்தார். முன்பு 2002 இல், வலது-சாரி வேட்பாளரான ஜாக் சிராக் மற்றும் மரினின் தந்தையான FN இன் ஜோன்-மரி லு பென் ஆகியோரால் PS வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன் வெளியேற்றப்பட்டிருந்தார்.

ஃபிய்யோன் LR க்குள் கட்சியின் ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தார், அவர் அறிவித்தார், “இந்த தோல்வி என்னுடையது. அதற்கான பொறுப்பு எனக்குண்டு, எனக்கு மட்டுமே உண்டு”. FN ஆட்சிக்கு வந்தால் நேரக் கூடிய “குழப்பநிலை”, “திவால்நிலை” மற்றும் “யூரோ நாணய மதிப்பில் இருந்தான வெளியேற்றம்” ஆகியவை குறித்து எச்சரித்த அவர், “நான் இமானுவல் மக்ரோனுக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்” என்று கூறினார்.

மக்ரானோ லு பென்னோ இரண்டாம் சுற்றில் எவர் வென்றாலுமே, இத்தேர்தல் எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை, இது வெடிப்பான சமூக மோதலுக்கு மட்டுமே மேடையமைத்து கொடுக்கும். ஒரு நவ-பாசிஸ்டுக்கும், ஹாலண்டின் கசப்புமிக்கதும் மக்கள் வெறுப்பைச் சம்பாதித்ததுமான பொருளாதாரக் கொள்கையை வடிவமைத்த முன்னாள் Rothschild வங்கியாளரும் பெரும் போர்களது ஒரு “சகாப்த”த்திற்கு தயாரிப்பு செய்யும் பொருட்டு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்திருப்பவருமான மக்ரோனுக்கும் இடையில் தான் தெரிவுசெய்ய இயலும் ஒரு நிலைக்கு வாக்காளர்கள் முகம்கொடுத்து நிற்கின்றனர். PS முன்மொழிந்த, அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்தி வைத்திருக்கக் கூடிய அவசரநிலையையும், அத்துடன் ஆழமான சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் போர்த் திட்டமிடலையும் வழிமொழிந்திருப்பவரான மக்ரோன் உழைக்கும் மக்களை பொறுத்தவரை லு பென்னுக்கு எந்த மாற்றையும் வழங்கக் கூடியவராக இல்லை.

லு பென்னுக்கு எதிரான மக்கள் ஆதரவை அணிதிரட்ட நேற்றிரவு மக்ரோன் செய்த முயற்சி முரண்பாடுகள் நிரம்பியதாய் இருந்தது. வலது-சாரி மற்றும் இடது-சாரி அரசியலுக்கு இடையிலான பிரிப்புக்கோட்டை அழிப்பவராக, பிரான்சை முற்றிலும் புதுப்பிப்பவராக தன்னைக் காட்டிக் கொள்ள அவர் முயற்சி செய்கின்ற போதிலும், அவர் PS இன் முன்னாள் பொருளாதார அமைச்சர் என்பதோடு கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமான அரசியல் ஸ்தாபகத்தின் ஆதரவுடன் போட்டியிடுகின்றவராவார்.

பிரெஞ்சு அரசியலை மறு-நோக்குநிலை கொள்ளச்செய்யும் ஒன்றாக இருக்கக் கூடிய ஒன்றில் வெற்றி பெற்றதன் மூலம் தான் பணிவானவனாக இருக்கச் செய்யப்பட்டிருப்பதாக 39 வயதான மக்ரோன் அறிவித்தார். “இது குறித்துநிற்கின்ற மிகப்பெரும் கவுரவத்தையும் மாபெரும் பொறுப்பையும் நான் அறிவேன்” என்று கூறிய அவர் பெருமையடித்துக் கொண்டார்: “ஒரு ஆண்டில், நாங்கள் பிரெஞ்சு அரசியலின் முகத்தையே மாற்றியிருக்கிறோம்.”

மெலோன்சோன் மட்டுமல்லாது தொழிலாளர் போராட்ட (LO) வேட்பாளர் நத்தலி ஆர்த்தோ மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி வேட்பாளரான பிலிப் புட்டு ஆகியோர் உட்பட லு பென்னை தவிர்த்து மற்ற அத்தனை ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். அதன்பின் அவர் FNக்கு எதிரான ஒரு பிரச்சாரத்திற்கு ஒரு தேசியவாத விண்ணப்பத்தை செய்தார். “தேசியவாதத்தின் அபாயத்திற்கு எதிரான வகையில் தேசப்பற்றாளர்களின் ஜனாதிபதியாக” ஆவதே தனது இலட்சியம் என்று அறிவித்த அவர் கூறினார்: “இன்றிரவு முதலாய், முன்னேறிச் சென்று அத்தனை பிரெஞ்சு மக்களையும் ஒன்றிணைப்பது எனது பொறுப்பாகும்”.

இது வெறுமையான அரசியல் நடிப்பு ஆகும். மக்ரோனின் பேரணியில் முன்செல்வோம் (En Marche) இயக்கம், ஹாலண்ட் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்-ஈவ் லு திரியோன் இல் ஆரம்பித்து PS அரசாங்கத்தின் உயர் நிர்வாகிகளின் ஆதரவை நம்பியிருக்கும் செல்வாக்கான இளம் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் செயல்பாட்டாளர்களின் ஒரு சிறிய அடுக்கைக் கொண்டதாகும்.

பிரான்சின் பிரதான கட்சிகள் ஆழமான மக்கள் வெறுப்பை சம்பாதித்துள்ளன என்பதைக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், மக்ரோனின் மூலோபாயமானது, பிரான்சின் வெறுப்புக்குரிய அரசியல் ஸ்தாபகத்தை சவால் செய்யும் ஒரே வேட்பாளராக லு பென் தன்னை முன்நிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை அவருக்கு வழங்குகிறது. உண்மையில் இந்த முறையிலேயே நேற்றிரவு அவர் எதிர்வினையாற்றினார்.

லு பென் Hénin-Beaumont இல் உள்ள தனது பிரச்சாரத் தலைமையகத்தில் இருந்து அவர் பேசினார், வடக்கு பிரான்சில் சமூகரீதியாக சீரழிக்கப்பட்டிருந்த நிலக்கரி வயல்களில் இருக்கின்ற ஒரு நகரமான இதில், ஒரு ஊழல் மோசடியில் சிக்கி PS இன் மேயரான Gérard Dallongeville பதவி விலகிய பின்னர் FN இன் Steeve Briois மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஒரு தேசியவாத எதிர்ப்பு மற்றும் வன்முறையான புலம்பெயர்-விரோதக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியிட்டிருந்த அவர், தேர்தலை EU மற்றும் PS இன் சிக்கன நடவடிக்கை கொள்கைகளுக்கும் தனது பிரான்சை தேசியரீதியாக பாதுகாக்கின்ற கொள்கைக்கும் இடையிலான ஒரு தெரிவாக ஆக்குவதற்கு வாக்குறுதியளித்தார்.

“அந்த மகத்தான அரசியல் விவாதம் இறுதியாய் நடந்தேற இருக்கிறது. நமது நாகரிகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடில்லாத உலகமயமாக்கம் தான் இந்த தேர்தலில் மாபெரும் பிரச்சினையாகும்” என்றார் அவர். “ஒன்று மொத்தத்தையும் கட்டுப்பாடகற்றி விட்டு மூலதன ராஜாவின் ஆட்சியை நோக்கி நாம் தொடர்ந்து கொண்டிருப்போம்... இல்லையேல் நமது தேசிய அடையாளத்தைப் பாதுகாக்கின்ற எல்லைகளை கொண்ட ஒரு பிரான்சை நோக்கி நாம் நகருவோம்.”

குறிப்பிடத்தக்கதாக, நேற்று தேர்தல் முடிவுகளை விவாதம் செய்த தொலைக்காட்சி வருணனையாளர்கள், 15 ஆண்டுகளில் இரண்டாம் முறையாக ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றுக்கு FN முன்னேறியிருக்கிறது என்ற உண்மையின் முக்கியத்துவத்தை பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் கடந்து சென்றனர். 2002 இல், இது அதிர்ச்சியையும் FN ஆட்சிக்கு வந்து விடக் கூடிய சாத்தியத்தால் திகிலடைந்த மில்லியன் கணக்கான மக்களின் வெகுஜன ஆர்ப்பாட்டங்களையும் உருவாக்கியது. ஆனால், இன்றோ, இரண்டாம் சுற்றுக்கு லு பென் முன்னேறியிருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றாலும் கூட அதிர்ச்சியடைவதற்கு ஒன்றுமில்லை என்பதைப் போல அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகங்கள் நடந்து கொள்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இது, PS உம் பல தசாப்த காலமாய் அதனைச் சுற்றி வரும் LO மற்றும் NPA போன்ற பல்வேறு நடுத்தர வர்க்கக் கட்சிகளின் தடையற்ற சந்தர்ப்பவாதம் மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கைகளின் விளைபொருளாகும். 2002 இல், LO வும் NPA இன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகமும் (LCR), சிராக்-லு பென் போட்டியை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) விடுத்த அழைப்பை நிராகரித்தன. சிராக்கும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஆளும் வர்க்கமும் அதன்பின் முன்நிறுத்த தயாரித்துக் கொண்டிருந்த போர்கள் மற்றும் சமூகத் தாக்குதல்களுக்கு வலிமையான எதிர்ப்பை முன்நிறுத்துவதற்கு தொழிலாள வர்க்கத்தை தயாரிப்பு செய்வதே அதன் இலட்சியமாய் இருந்தது.

மாறாக, LO வும் LCR உம் சிராக்கிற்கு வாக்களிக்க PS செய்த பிரச்சாரத்தின் பின்னால் தங்களை அணிநிறுத்திக் கொண்டன. எதிர்ப்பு வாக்களித்திருந்த மில்லியன் கணக்கான மக்கள் தங்களுடைய நேரத்தை வீணடிக்காமல் வீட்டிலேயே இருந்திருக்கலாம் அல்லது நேராகவே சிராக்கிற்கு வாக்களித்திருக்கலாம் என்பதைப் போன்றதொரு சமிக்கையை இது வாக்காளர்களுக்கு அளித்தது. அத்தோடு இத்தகைய ஒரு வலது-சாரி வேட்பாளரை ஆதரித்ததன் மூலமாக, இவை முதலாளித்துவ அரசியல் ஸ்தாபகத்துடன் முழுமையாக ஒருங்கிணைந்திருந்ததையும் ஆளும் உயரடுக்கிற்கு எந்த மாற்றினையும் வழங்கப் போவதில்லை என்பதையும் அவை தெளிவாக்கி விட்டிருந்தன. உண்மையில், 2012 இல் அவை இறுதியில் ஹாலண்டுக்கு ஆதரவளித்தன. இதுவே FN பிரான்சின் ஒரே எதிர்க்கட்சியாக தன்னை முன்நிறுத்திக் கொள்வதற்கு அனுமதித்து, அதன் துரிதமான ஒரு வளர்ச்சிக்கு மேடையமைத்து கொடுத்தது.

இப்போது, PS உம் மற்றும் பிரான்சின் பிற்போக்கு ஸ்தாபகமும் ஒரு வரலாற்றுப் பொறிவுக்குள் சென்று கொண்டிருக்கும் நிலையில், ICFI இன் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டிருக்கும் சோசலிச சமத்துவக் கட்சியை (Parti de l’égalité socialiste - PES) ஒரு உண்மையான ட்ரொட்ஸ்கிசக் கட்சியாக கட்டியெழுப்புவதற்கு அழைப்பு விடுப்பதற்காக தலையீடு செய்கிறது. மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (France insoumise) இயக்கம் தொடங்கி பல்வேறு நடுத்தர வர்க்க “இடது” போக்குகளும், மக்ரோனுக்கு முட்டுக் கொடுத்து தொழிலாள வர்க்கத்தில் பெருகிச் செல்லும் சமூக கோபத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்காக தலையீடு செய்கின்றன.

மெலன்சோனின் ஆதரவாளர்கள் லு பென்னுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிக்க அழைக்கும் வசனங்களை ஐயத்திற்கிடமின்றி வழிமொழிந்து கொண்டிருக்கின்றனர். PCF தலைவரும் மெலன்சோனின் ஆதரவாளருமான பியர் லோரன், வாக்காளர்கள் “மற்ற வாக்குத்தெரிவை” பயன்படுத்தி லு பென்னை “தோற்கடிக்க” வேண்டும் என்று அழைப்பு விடுத்ததன் மூலமாக கிட்டத்தட்ட எந்த மறைப்புமின்றி மக்ரோனுக்கு வாக்களிக்க விண்ணப்பம் செய்திருந்தார். இதேபோல், மெலன்சோன் ஆலோசகர் Clémentine Autain உம் "அதி-வலதை தோற்கடிக்க" முறையீடு செய்தார்.

மெலோன்சோன் சுருக்கமாய் பேசிய ஒரு கோபமான மற்றும் வெளிப்படையாய் ஏமாற்றம்மிகுந்த உரையில், உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தேர்தல் முடிவுகளை முறையானவையாக தான் ஏற்றுக்கொண்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். அவரது அமைப்பு மக்ரோனை வழிமொழிந்து கொண்டிருந்ததற்கு பொறுப்பேற்க சிடுமூஞ்சித்தனத்துடன் அவர் மறுத்தார். அதற்குப் பதிலாய், தனது அடிபணியா பிரான்ஸ் இயக்கத்திற்கு இணையவழி மூலம் கையெழுத்திட்டிருந்த 450,000 பேருக்கு லு பென்னை ஆதரிப்பதா அல்லது மெலன்சோனை ஆதரிப்பதா என்ற முடிவெடுப்பதற்காக வாக்களிக்கும் உரிமை உண்டு என்று அவர் அறிவித்தார்.

ஆயினும், மக்ரோன் மற்றும் லு பென்னுக்கான எதிர்ப்பை இத்தகைய சக்திகள் ஒடுக்கி விட இயலுகின்ற மட்டத்திற்கு, அது இன்னும் அதிக பிற்போக்கான அரசாங்கங்கள் ஆட்சிக்கு வருவதற்கும் தொழிலாள வர்க்கத்துடனான வெடிப்பான மோதல்களுக்குமே களம் அமைப்பதாக இருக்கிறது.