ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French ruling elite rallies around Macron

பிரான்சின் ஆளும் உயரடுக்கு மக்ரோனைச் சுற்றி அணிவகுக்கிறது

By Anthony Torres and Alex Lantier
25 April 2017

ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் சோசலிஸ்ட் கட்சி (PS)  மற்றும் குடியரசுக் கட்சி (LR) ஆகிய பிரான்சின் இரண்டு கட்சிகளுமே வரலாற்று முக்கியத்துவம் பெற்ற வகையில் அகற்றப்பட்டு விட்டதன் பின்னர், பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் பெரும்பான்மையான பகுதி நவ-பாசிச தேசிய முன்னணி ஆட்சிக்கு வந்து விடாமல் தடுத்து நிறுத்தும் பொருட்டு முன்னாள் வங்கியாளரான இமானுவல் மக்ரோனின் பின்னால் அணிவகுக்க முயல்கிறது.

PS மற்றும் LR இரண்டின் தேசியக் குழுக்களும் மக்ரோனுக்கு ஆதரவளிக்கும் தீர்மானத்திற்காக நேற்று கூடின. PS இன் தேசியக் கமிட்டி இதற்கு ஆதரவாக ஒருமனதாக வாக்களித்தது. இக்கட்சி அதன் சொந்த திவால்நிலையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றதானதொரு முடிவில், வெறும் 6.12 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றிருந்த அதன் வரலாற்றுத் தோல்வி குறித்த எந்த ஆய்வையும் வரைவதை அது தள்ளிவைத்தது. இது, இப்போதைய PS ஸ்தாபிக்கப்படுவதற்கு சற்றுகாலம் முன்பாக, 1969 இல் Gaston Defferre வெறும் 5.01 சதவீத வாக்குகளே பெற்றதன் பின்னர், பிரான்சின் ஒரு சமூக-ஜனநாயகக் கட்சி பெறுகின்ற மிகக் குறைந்த வாக்கு எண்ணிக்கையாகும்.

“விளக்கங்களுக்கான நேரம் இன்னும் வரவில்லை. இன்று செயல்படுவதற்கான சமயமாகும்” என்று PS இன் முதற்செயலரான ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் கூறினார். “மே 7 அன்று, நான், நாங்கள், இமானுவல் மக்ரோனுக்கு வாக்களிப்போம். (2002 இல்) ஜாக் சிராக் மற்றும் ஜோன்-மரி லு பென் இடையே போட்டி வந்தபோது நாங்கள் செய்ததையே, எந்தவித தயக்கமும் இன்றி, எந்த வித ஐயப்பாடும் இன்றி, எந்தவித நிபந்தனைகளும் இன்றி நான் செய்யவிருக்கிறேன்.”

LR இன் கமிட்டியானது, மக்ரோனுக்கு வாக்களிக்க அழைப்பு விட விரும்புவோருக்கும் லு பென்னைத் தோற்கடிக்க அழைப்பு விடுக்க விரும்புவோருக்கும் இடையில் கடுமையான விவாதங்கள் நடந்ததன் பின்னர், வாக்களிப்பு இல்லாத ஒரு அறிக்கையை ஆதரித்தது. இரண்டாவது தரப்பின் நிலைப்பாடே வெற்றி பெற்றது, LR முறைப்படி அறிவித்தது: “FN எதிர்நிற்கையில் வாக்களிக்கச் செல்லாமல் இருப்பது ஒரு தெரிவாக ஆக முடியாது. மரின் லு பென் ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றில் தோற்கின்ற வகையில் அவருக்கு எதிராக வாக்களிப்பதற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம், அதன்பின் நாங்கள் எங்களது மாற்று வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்காக எங்களது சட்டமன்ற பிரச்சாரத்தை உடனடியாகத் தொடக்குவோம்”.

ஜோன் லுக் மெலன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (UF) மற்றும் அதனுடன் தொடர்புபட்ட குட்டி-முதலாளித்துவக் கட்சிகள் இதேபோன்ற குட்டைகுழப்பலையே ஊக்குவித்துக் கொண்டிருக்கின்றன, இரண்டாம் சுற்றில் மக்ரோனை வெளிப்படையாக ஆதரிக்காமல், வாக்காளர்கள் மக்ரோனை ஆதரித்தால் அது தங்களால் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பதாய் அவை சூசகம் செய்கின்றன. UF தலைவரான கிளெமொன்டின் ஒற்றான் மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் பியர் லோரொன் இருவரும் லு பென்னை ”தோற்கடிக்க” அழைப்புவிடுத்தனர்.

வெளித்தோற்றத்திற்கு ஒரு நவ-பாசிச சர்வாதிகாரத்தை தடுப்பதற்காய் மக்ரோனை ஆதரிப்பது, அல்லது அதுவும் இல்லாமலேயே தமது வாக்காளர்களை இதை ஆதரிப்பதற்குக் கேட்பது ஆகியவற்றின் மூலம், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் மற்றும் 1968க்குப் பிந்தைய குட்டி-முதலாளித்துவ மாணவர் இயக்கத்தின் பாரம்பரியக் கட்சிகள் ஒரு மாபெரும் அரசியல் மோசடியை இழைத்துக் கொண்டிருக்கின்றன.

மக்ரோன், லு பென்னுக்கான ஒரு ஜனநாயக மாற்றீடு அல்ல. அவர் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நிறுத்திவைத்திருக்கின்ற பிரான்சின் அவசரகால நிலையை நீட்டிக்க விரும்புகிறார், கடுமையான சிக்கன நடவடிக்கைகளை திணிக்க விரும்புகிறார், அத்துடன் போர் என்பது இப்போது “அரசியலின் சாத்தியமான ஒரு விளைபொருளாக” இருக்கிறது என்று கூறி கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவர விரும்புகிறார். இப்படியானதொரு வேலைத்திட்டத்தை திணிப்பதற்கு, அவர் இப்போதைய PS ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்டின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களையும் வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்துவார். இக்கொள்கைகள் இறுதியில் முதலாளித்துவ ஜனநாயகத்துடனேயே இணங்கமறுப்பவையாகும்.

FN பிரெஞ்சு பாசிசத்தின் பாரம்பரியத்திலிருந்து நேரடியாய் வருவது என்பதிலும் அது தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு தார்மீக அச்சுறுத்தல் என்பதிலும் எந்த சந்தேகமுமில்லை. அதேபோல, லு பென்னுடன் ஒப்பிட்டால் “குறைந்த தீமை” என்பதான ஆளும் உயரடுக்கின் பிரகடனங்களை அடிப்படையாகக் கொண்டு, மக்ரோனை ஜனாதிபதியாகக் கொள்வது என்ற முன்னோக்கின் கீழ் அணிவகுப்பதும் ஒரு மரணகரமான பிழையாக இருக்கும்.

ஆளும் உயரடுக்கின் மிகப்பெரும் பகுதி மக்ரோனை ஆதரிக்கிறது என்ற காரணத்தால், அவர்கள் கூறுவதைப் போல ஒரு ”நவ-பாசிச” சர்வாதிகாரத்தைத் ”தடுத்து விடுகின்ற” நோக்கம் அவர்களுக்கு இருப்பதை அது குறிப்பதாக ஆகிவிடாது. மாறாக, ஜேர்மனிக்கு விரோதமான விதத்தில் ட்ரம்ப் மற்றும் ரஷ்யாவின் கூட்டாளியாவதற்கு நம்பிக்கை கொள்கின்ற லு பென்னால் திணிக்கப்படுகின்ற ஒரு சர்வாதிகாரத்தை காட்டிலும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவின் இராணுவக் கூட்டணி ஆகியவற்றின் ஒரு கூட்டாளியான மக்ரோனால் திணிக்கப்படுகின்ற ஒரு சர்வாதிகாரத்தை அவர்கள் விரும்புகின்றனர்.

மக்ரோனை உடனடியாக வழிமொழிவதற்கு மெலோன்சோன் அல்லது ஆர்த்தோ காட்டும் தயக்கமானது, மக்ரோன் தொழிலாளர்களிடையே தூண்டக்கூடிய எதிர்ப்பு குறித்த அவர்களது நனவையும் அச்சத்தையும் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. PS-ஆதரவு வேட்பாளருக்கு அவர்களது அனுதாபங்கள் இருக்கின்றன —இவர்கள் 2012 இல் ஹாலண்டை ஆதரித்தனர் 2002 இல் சிராக்கை ஆதரித்தனர்— ஆனால் ஹாலண்டின் ஒரு நாசகரமான ஜனாதிபதி பதவிக்காலத்திற்கு பின்னர் ஒரு வங்கியாளரும் PS இன் முன்னாள் அமைச்சருமான ஒருவரை ஆதரிப்பது தங்களது இடது மறைப்பை அம்பலப்படுத்தி விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர். இவ்வாறாக அவர்களது “தீவிரத்தன்மை” மரியாதையில் எஞ்சியிருப்பதை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் —மக்ரோன் மற்றும் PSக்கு எதிரான தொழிலாளர் போராட்டங்களை தவறாய் வழிநடத்துவதையும் கழுத்துநெரிப்பதையும் இன்னும் மேம்பட்ட வகையில் செய்வதற்காக— அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் தேர்வு செய்யப்பட்டதில் போல, மக்ரோனுக்கும் லு பென்னுக்கும் இடையில் தெரிவு செய்தாக வேண்டிய ஒரு நிலைக்கு பிரான்சின் வாக்காளர்கள் முகம்கொடுத்திருக்கிறார்கள் என்ற உண்மையானது புரட்சிகர தாக்கங்களுடனான ஒரு ஆழமான ஜனநாயக நெருக்கடிக்கு சாட்சியமளிக்கிறது. PS சிதைந்து செல்லும் நிலைக்கு முகம்கொடுக்கின்ற சமயத்தில், தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதே அத்தியாவசியமான பிரச்சினை ஆகும். ஆயினும், இதற்கு மெலோன்சோன், ஆர்த்தோ மற்றும் இதனையொத்த சக்திகளுடன் தயவுதாட்சண்யமற்று முறித்துக் கொள்வதும் பிரான்சில் சோசலிச சமத்துவக் கட்சியால் அறிவுறுத்தப்படும் உண்மையான ட்ரொட்ஸ்கிசத்திற்காகப் போராடுவதும் அவசியமாகிறது.

2002 தேர்தல் நெருக்கடி முதலாக, ஒரு தொழிலாள வர்க்கக் கட்சியை கட்டியெழுப்புவதற்கு PS இன் சுற்றுவட்டத்தில் உள்ள பல்வேறு போக்குகளும் காட்டுகின்ற குரோதம் ஐயத்திற்கிடமில்லாததாகும். 2002 இல் LO (தொழிலாளர்கள் போராட்டம்), LCR (புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம்; இன்று புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியாக (NPA) இருக்கிறது), மற்றும் தொழிலாளர் கட்சி (இன்று, ஜனநாயக சுதந்திர தொழிலாளர்கள் கட்சி - POID) ஆகியவை 3 மில்லியன் வாக்குகள் பெற்றன.

ஆயினும் கூட அவை, PS இன் வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன் வெளியேற்றப்பட்டதன் பின்னர் இரண்டாம் சுற்றில் லு பென் -சிராக் இடையிலான மோதலை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு விடுத்த அழைப்பை நிராகரித்தன. சிராக் தயாரிப்பு செய்து கொண்டிருந்த போர்கள் மற்றும் சமூகத் தாக்குதல்களுக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு அரசியல் இயக்கத்திற்கான அடிப்படையை இது அமைத்துத் தந்திருக்கும். ஆனால் அவை சிராக்குக்கு வாக்களிக்க PS செய்த பிரச்சாரத்தின் பின்னால் தங்களை அணிநிறுத்தி, பிரான்சில் இரண்டாம் சுற்றில் சிராக்-லு பென் போட்டியிடும் நிலைக்கு மில்லியன் கணக்கானோர் காட்டிய எதிர்ப்பிற்கும், சர்வதேச அளவில் ஈராக்கில் கண்முன் விரிந்துகொண்டிருந்த போருக்கு மில்லியன் கணக்கான மக்கள் காட்டிய எதிர்ப்பிற்குமான தங்கள் குரோதத்தை எடுத்துக்காட்டின.

அப்போது முதலாக, PSம் போலி-இடது கட்சிகளும் முக்காடு மற்றும் பர்தா ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் உள்ளிட்ட முஸ்லீம்கள் மீதான தாக்குதல்களையும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவிலான ஏகாதிபத்தியப் போர்களையும், பிரான்சில் ஹாலண்டின் கீழான மற்றும் கிரீசில் சிரிசாவின் (”தீவிர இடதுகளின் கூட்டணி”) கீழான சிக்கன நடவடிக்கைகளையும் ஆதரித்து வந்திருக்கின்றன. ஹாலண்ட் லு பென்னை எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்ததன் மூலம் FN மீதான ”திகிலச்சத்தை விலக்குவதற்கு” உதவினார்.

பிரான்சில் 2002 முதலாக தொழிலாளர்களின் ஒரு பரந்த தீவிரப்படல் நடந்தேறி வந்திருக்கிறது. வர்க்கப் போராட்டம் என்பது வாழ்வின் ஒரு அன்றாட யதார்த்தம் என உணர்வதாக மக்களின் மூன்றில் இரு பங்கினர் தெரிவிக்கின்றனர். ஆயினும், LO மற்றும் LCR ஆகியவை சிராக்கின் முகாமிற்கு பின்னால் அணிவகுத்ததில் பிரதிபலித்த இடதிலான அரசியல் வெற்றிடத்தின் காரணமாக, தேசிய முன்னணியானது (FN), PS மீதான ஜனரஞ்சகத் தாக்குதல்களைக் கொண்டும், பிரெஞ்சு மக்களைக் காப்பதற்கான சட்டம்-ஒழுங்கு வாக்குறுதிகளைக் கொண்டும் தன்னை பிரதான எதிர்க்கட்சியாக முன்நிறுத்திக் கொள்ள முடிந்துள்ளது.

இன்று நடைபெற்றுக் கொண்டிருப்பதான PS மற்றும் அதன் கூட்டாளிகளது அரசியல் நிலைகுலைவானது, அவை பல தசாப்த காலங்களாக தொழிலாளர்களுக்கு எதிராய் முன்னெடுத்திருந்த காட்டிக்கொடுப்புகள் மற்றும் பிற்போக்கான கொள்கைகளது விளைபொருளாகும்.

பெனுவா அமோனை நிறுத்தியதன் மூலம், PS கிட்டத்தட்ட பிரான்சின் ஒவ்வொரு இடத்தில் இருந்துமே துடைத்தழிக்கப்பட்டது. ஹாலண்டின் ஜனாதிபதி பதவிக்காலத்திற்குப் பின்னர் ஹமோனின் 6.12 சதவீத வாக்குகள் என்பவை கிரீசில் பிரதமர் ஜியோர்ஜியோஸ் பாப்போண்ட்ரூவின் ஒரேயடியான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளுக்குப் பின்னர் Pasok பெற்ற உருக்குலைவுடன் ஒப்பிடத்தக்கதாகும். குறுகிய கால நோக்கில் இவை மக்ரோனின் பின்னால் ஐக்கியம் காண்பதற்கு நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், PS இன் தலைவர்கள் தங்கள் கட்சி சிதையும் நிலை குறித்து வெளிப்படையாகவே பேசுகின்றனர். சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்த பின்னர் முற்றுப்புள்ளி வரலாம் என்று அஞ்சுவதாக ஒருவர் தெரிவித்தார்: “ஜூன் 18 அன்று, தேசிய சட்டமன்றத்தில் PS இன் ஒரு சட்டமன்றக் குழு இருக்கும். ஆனால் ஆறு மாதம் கழிந்த பின் இருக்குமா, எனக்குத் தெரியாது.”

மேற்கத்திய பிரான்சில் பிரதான தொழிற்துறை மையங்களுக்கு வெளியேயான பகுதிகளிலும், மற்றும் உயர் நடுத்தர வர்க்கம் குவிந்திருக்கும் நகர் மையப் பகுதிகளிலும் மக்ரோன் சிறப்பான வாக்குவீதங்களைப் பெற்றிருக்கிறார். பிரான்சின் 100 தொகுதிகளில், பிரிட்டினியில் உள்ள Ille-et-Vilaine, மற்றும் பாரிஸ் பகுதியின் செல்வச்செழிப்பான பகுதிகள், பாரிஸின் நகர்மையப் பகுதி மற்றும் Hauts-de-Seine ஆகிய மூன்று தொகுதிகளில் மட்டுமே அவர் 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கிறார்.

தெற்கு பிரான்சில் மெலன்சோன் சிறப்பாக வாக்குகளைப் பெற்றிருந்தார்; பாரிஸின் தொழிலாள வர்க்க வடக்கு புறநகர்ப் பகுதிகளும் PS இன் பாரம்பரியமான கோட்டைகளுமான Ariège மற்றும் Seine Saint Denis போன்ற பகுதிகளில் அவர் 26 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றிருந்தார். 18 முதல் 24 வயது வரையான மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மத்தியில் 30 சதவீதத்துடன் அவர் முதலாவதாய் வந்தார். சிரியா மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பின்னர், போரின் அதிகரித்துச் செல்லும் அபாயத்திற்கு எதிராக இளைஞர்கள் பலரும் மெலன்சோனுக்கு வாக்களிக்க முடிவு செய்தனர்.

ஆயினும், உடலுழைப்புத் தொழிலாளர்களில், மரின் லு பென் தான் 37 சதவீதத்துடன் முதலிடத்தைப் பிடித்திருந்தார், மெலன்சோன் 24 சதவீதமே பெற்றிருந்தார். மாதத்திற்கு 2,000 யூரோக்களுக்கும் குறைவாக சம்பாதிப்பவர்கள் மத்தியில் FN வேட்பாளர் 43 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார், மெலன்சோனை (22 சதவீதம்) காட்டிலும் இது வெகு அதிகமானதாகும். கிராமப்புற பகுதிகளிலும் கிழக்கு பிரான்சின் குறிப்பாக வடகிழக்கு பிரான்சின் பழைய தொழிற்துறைப் பகுதிகளிலும் —முன்னாளில் PS மற்றும் PCF இன் கோட்டைகளாய் இருந்த இந்தப் பகுதிகளில் இந்த இரு கட்சிகளும் தொழிலாள வர்க்கத்தின், குறிப்பாக, சுரங்கத் தொழிலாளர்கள், உருக்கு ஆலைத் தொழிலாளர்கள் மற்றும் வாகன உற்பத்தித் தொழிலாளர்களின் போர்க்குணமிக்க பகுதிகளை நசுக்குவதற்கு பாரிய தொழில்மய-அகற்றத்தை மேற்பார்வை செய்தன— அவர் அதிகளவில் வாக்குகள் பெற்றிருந்தார்.