ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian railway and transport workers denounce Maruti Suzuki frame-up

இந்திய இரயில்வே மற்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜோடிப்பு வழக்கினை கண்டனம் செய்கின்றனர்

By our correspondents 
11 April 2017

ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டின் பேரில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 13 மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுதலை செய்யும் பொருட்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு (ICFI) முன்னெடுத்துவரும் பிரச்சாரத்திற்கு இந்திய இரயில்வே மற்றும் பொது போக்குவரத்து தொழிலாளர்கள் ஆதரவு அளிக்கின்றனர். ஹரியானா மாநிலத்தின் மானேசர்-குர்கான் தொழிற்துறை பகுதியில் அமைந்துள்ள மாருதி சுசூகி தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கு எதிரான சட்டரீதியான சதியினை இந்த பிரச்சாரம் அம்பலப்படுத்தியுள்ளது.

சென்னையிலுள்ள இந்திய இரயில்வேக்கு சொந்தமான ஒருங்கிணைந்த நான்கு சக்கர வண்டி தொழிற்சாலையின் (Integral Coach Factory-ICF) தொழிலாளர்களிடமும், மற்றும் ஏனைய போக்குவரத்து தொழிலாளர்களிடமும் உலக சோசலிச வலைத் தளத்தின் நிருபர்கள் கடந்த வாரம் பேசினர்.

ரவி, 52 வயதானவர், ICF நிறுவுதல் பிரிவு தொழிலாளியான இவர், பின்வருமாறு கருத்து தெரிவித்தார்: “இந்த தீர்ப்பு தவறானதாக இருப்பதுடன், மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது நீதிபதியின் வேலையில்லை. தொழிலாளர்கள் போராட்டங்கள் நடத்தினால், முதலீட்டாளர்கள் நாட்டிற்குள் வரமாட்டார்களென நீதிமன்றம் கூறமுடியாது, மேலும் எந்தவொரு சிறு ஆதார துணுக்குமின்றி தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்திருப்பதும் தவறானதாகும்.”

இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (CPM) மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) ஆகிய இந்திய ஸ்ராலினிச கட்சிகளுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் இது தொடர்பாக வகித்த பாத்திரம் பற்றி கருத்து தெரிவிக்கும்போது ரவி பின்வருமாறு கூறினார்: “CITU மற்றும் AITUC போன்ற தொழிற்சங்கங்கள் இந்த தண்டனை குறித்து கண்டனம் தெரிவிக்க தவறியுள்ளது கண்டனத்திற்குரியதாகும். பாதிக்கப்பட்ட 13 மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பு பற்றி பிற தொழிலாளர்களுக்கு விளக்குவதற்கு கூட அவர்கள் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை என்பதுடன் அவர்களை பாதுகாக்கும் விதமாக எந்தவொரு நடவடிக்கை எடுக்கவும் மறுத்துவிட்டனர்.”

கேசவன், 55 வயதானவர், ICF இன் shell பிரிவை சேர்ந்தவருமான இவர், “நான் மாருதி சுசூகி தொழிலாளர்களின் போராட்டம் பற்றி கேள்விப்பட்டுள்ளேன், மேலும் நிறுவனத்தில் நடந்த தொழிலாளர்கள் போராட்டத்தின் போது ஒரு மேலாளர் கொல்லப்பட்டார் என்பதையும் நான் அறிவேன். ஆனால் எனக்கு இந்த தீர்ப்பு பற்றி எதுவும் தெரியாது. இந்த தீர்ப்பு கண்டனத்திற்குரியது. தொழிலாள வர்க்கத்தின் கட்சிகளாக இருப்பதாக உரிமை பாராட்டும் CPM, CPI போன்ற கட்சிகள் இந்த விவகாரம் குறித்து மௌனம் சாதிப்பது ஒரு பெரிய தவறாகும்.” என்று கூறினார்.

அரசாங்கம் தனியார் அடிமை உழைப்பு நிலையங்களுக்கு ICF இன் வேலைகளை வழங்கியுள்ளதுடன், ஒப்பந்த தொழிலாளர் முறையையும் நடைமுறைப்படுத்தியுள்ளது என்று கேசவன் விளக்கமளித்தார். மேலும், “ICF தனியார்மயமாக்கத்தை நோக்கி நகர்வதை நாங்கள் எதிர்க்கிறோம். தொழிலாளர்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், நிர்வாகம் இந்த செயல்முறையை தீவிரமாக முன்னெடுத்துவருகிறது. அவர்களது உற்பத்தி இலக்குகளை அடைவதற்காக மலிவு தொழிலாளர் ஒப்பந்த முறையை அவர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர், மேலும் தனியார்மயமாக்கத்தை விரைவுபடுத்துவதை முன்னிட்டு அவர்களும் வேலைகளை அயலாக்கத்திற்கு உட்படுத்துகின்றனர். அதன் விளைவாக, ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் தொழிற்பயிற்சியை முடித்தவர்களாக இருந்தும், இன்னமும் வேலையற்றவர்களாகவே உள்ளனர். மத்திய அரசாங்கமும் வேலையற்ற நிலைமை குறித்து கவலைப்படவுமில்லை” என்று கூறினார்.

நடேசன், மற்றொரு ICF தொழிலாளியான இவர், ICFI இன் பிரச்சாரத்திற்கு அவரது ஆதரவினை வெளிப்படுத்தினார். அவர், “நீதிமன்றங்கள், அரசாங்கம் கீறிய கோட்டை தாண்டாது என்ற அடிப்படையில் மாருதி சுசூகி தொழிலாளர்களை அவைகள் தண்டித்துள்ளன” என்று கூறினார்.

தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பங்கை குறிப்பிட்டு, அவர் பின்வருமாறு கூறினார்: “தொழிற்சங்கங்கள் ஒருசமயத்தில் இந்த தொழிலாளர்களுக்காக போராடின, ஆனால் இப்போது அவர்கள், என்ன செய்யவேண்டுமென்று முதலாளிகள் கூறுகின்றனரோ அதையே அவர்கள் செய்கின்றனர். தொழிற்சங்கங்கள் தனியார்மயமாக்கத்தை எதிர்த்து (ICF இல்), அது நிறுத்தப்படவேண்டுமென போராடினார்களா, அதை அவர்கள் செய்யவில்லையே. மத்திய, மாநில அரசாங்கங்க தொழிலாளர்கள் ஓய்வூதியம் பெறுவதுகூட பெருகிய முறையில் கடினமான ஒன்றாகவே மாறிவருகிறது.”


ஸ்ரீனிவாசன்

ஸ்ரீனிவாசன், 42 வயதானவர், ஒரு பொது போக்குவரத்து பேருந்து நடத்துனரான இவர், “நான் இந்த சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கிறேன். 13 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்துள்ள இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த தொழிலாளர் வர்க்கத்திற்கும் எதிரானது” என்று கூறினார்.

ஸ்ரீனிவாசன் தொழிற்சங்கங்கள் மீதான அவரது வெறுப்பை வெளிப்படுத்தியதுடன், “இங்கு 150,000 போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளனர், ஆனால் தொழிற்சங்கத்துக்குள் நாங்கள் வெளியாட்களை போன்றே நடத்தப்படுகின்றோம். தொழிற்சங்கத்துக்குள் சுதந்திரமாக பேசும் உரிமை கூட இல்லை. தொழிற்சங்கங்கள் ஆளும் கட்சிக்கு மட்டுமே சேவகம் செய்கின்றன” என்றும் கூறினார்.

குழந்தைவேல், 44 வயதானவர், மற்றொரு பேருந்து நடத்துனரான இவர், மாருதி சுசூகி நிறுவனத்தின் ஜோடிப்பு வழக்கு பற்றி தொழிற்சங்கங்கள் மௌனம் சாதித்துவருவது குறித்து அவரது கவலையை வெளியிட்டார். மேலும், “ஒரு சட்டபூர்வமான போராட்டத்தை நடத்திவந்த இந்த தொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தண்டனைகள் தொடர்பாக நான் வன்மையாக கண்டிக்கிறேன்” என்றும் தெரிவித்தார்.

தொழிலாள வர்க்கத்திற்கு விரோதமான இந்த தாக்குதல் பற்றி அவரது தொழிற்சாலையில் தொழிற்சங்கங்கள் எந்தவித எதிர்ப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்றும், அதிலும் அவர்களுக்கு மிருகத்தனமான தண்டனைகள் அளிக்கப்பட்டுள்ளது தொடர்பான தகவல்களையும் தொழிலாளர்களுக்கு தெரிவிக்கவில்லையெனவும் அவர் விளக்கினார். மேலும், “நான் உங்கள் மூலமாகத்தான் இந்த தாக்குதல் பற்றி தெரிந்துகொண்டேன். நான் தங்களது சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கிறேன், அதுவும் இந்த வகையான பிரச்சாரத்தின் மூலமாக மட்டும் தான் 13 சிறையிலிடப்பட்டுள்ள தொழிலாளர்களை பாதுகாக்க முடியுமென்று நம்புகிறேன்” என்றும் தெரிவித்தார்.

குழந்தைவேல், அவரது சொந்த வேலை நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்தபோது பின்வருமாறு கூறினார்: “பொது போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக அரசாங்கம் கூறுவதுடன், அதனடிப்படையில் தான் எங்களுக்கு ஊதிய உயர்வு, ஓய்வூதிய திட்டம் மற்றும் வேலைநீங்கும் போது வழங்கும் உதவித்தொகை ஆகியவற்றை வழங்க மறுக்கிறது.”

ரவிசந்திரன், 50 வயதானவரான இவர், “மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு எதிராக இத்தகைய தீர்ப்பினை அறிவித்துள்ளது நீதிபதிகளின் தவறாகும், அதனை நான் கண்டனம் செய்கிறேன். இந்த தீர்ப்பினை எதிர்த்து போராடவில்லை என்பதிலிருந்தே அரசியல் கட்சிகளும், தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் எதிரிகளாக உள்ளனர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும், உலக சோசலிச வலைத் தளமும் மாருதி சுசூகி தொழிலாளர்களை பாதுகாக்கும் பொருட்டு ஒரு சர்வதேச பிரச்சாரத்தை நடத்திவருவதைப் பார்த்து போக்குவரத்து தொழிலாளர்களும், நானும் மகிழ்ச்சியடைகிறோம். இதுபோன்ற ஒரு கட்சியும், பிரசுரமும் தொழிலாளர்களுக்கு தேவையாகவுள்ளது.” என்று கூறினார்.

பொது போக்குவரத்து தொழிலாளர்களின் மோசமடைந்துவரும் நிலைமைகளை கோடிட்டுக்காட்டி ரவிசந்திரன் பின்வருமாறு கூறினார்: “நாங்கள் பெயரளவில் மட்டுமே பொதுத்துறை தொழிலாளர்களாக இருக்கிறோம். நாங்கள் கடினமான நிலைமைகளுக்கு முகம்கொடுப்பதுடன், தினக்கூலி தொழிலாளர்களை போல தான் வேலை செய்கிறோம். 2003 ஆம் ஆண்டு முதல் பணி நியமனம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு கூட ஓய்வூதிய திட்ட நலன்களை பெறும் உரிமை இல்லை.”

 “பொது போக்குவரத்து துறையின் தனியார்மயமாக்கம் பற்றி பேச்சுக்கள் உள்ளபோதும், தொழிலாளர்களிடமிருந்து எதிர்ப்புக்கள் உள்ளதால் இந்த நடவடிக்கை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. தொழிலாள வர்க்கத்தின் ஒரு சர்வதேச இயக்கத்தின் மூலமாக மட்டுமே தொழிலாளர் உரிமைகளையும், நலன்களையும் பாதுகாக்க முடியுமென நான் நம்புகிறேன். நான் தங்களது சர்வதேச இயக்கத்திற்கு ஆதரவளிக்கிறேன்” என்றும் கூறினார்.


செல்வராஜ்

செல்வராஜ், 29 வயதானவர், ஒரு மூன்று சக்கர வாகன ஓட்டுனரான இவர், “சிறையிலிடப்பட்ட தொழிலாளர்களும், அவர்களது குடும்பங்களும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர், அதிலும் இப்போது விதிக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனையினால் 13 தொழிலாளர்களின் குடும்பங்கள் தெருவில் வீசியெறியப்பட்டுவிடும். இந்த தொழிலாளர்களை பாதுகாக்க யாரும் இல்லை. நான் தங்களது சர்வதேச பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்கிறேன்” என்று கூறினார்.

மூன்று சக்கர வாகன ஓட்டுனர்கள் முகம்கொடுக்கின்ற சூழ்நிலைகள் பற்றி விளக்கியதுடன் அவர், “நான் கைபேசி (mobile phone) கூட வைத்திருக்கவில்லை. வாழ்வதற்காக நான் தினமும் உழைக்க வேண்டியுள்ளது, எங்களது குடும்பத்தில் எவரேனும் நோய்வாய்பட்டால் அவரை நாங்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துப்போக முடிவதில்லை. பொதுவாக உயர்ந்த தரத்தினை கொண்டிராத பொது பள்ளிக்கூடங்களுக்கே எங்களது குழந்தைகளும் செல்கின்றனர்.” என்றும் தெரிவித்தார்.