ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sri Lankan workers support campaign to free framed-up Maruti Suzuki workers

சதி வழக்கில் சிக்கியுள்ள மாருதி சுசுகி தொழிலாளர்கள் விடுவிக்கும் பிரச்சாரத்துக்கு இலங்கை தொழிலாளர்கள் ஆதரவு

By our correspondents 
28 March 2017

இலங்கை தலைநகரம் கொழும்பின் துறைமுக மற்றும் தொழில்துறை பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, வட இந்திய மாநிலமான ஹரியானாவில் போலி வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுவிக்க முன்னெடுக்கும் உலக பிரச்சாரத்திற்கு ஆர்வத்துடன் ஆதரவை வெளிப்படுத்தினர்.

மாநில அரசாங்கம், அதன் போலீஸ் மற்றும் நீதிமன்றங்களின் ஒத்துழைப்புடன் ஜப்பனீயருக்கு சொந்தமான கார் நிறுவனமான மாருதி சுசுகி பதிவுசெய்த ஒரு வழக்கில், 13 தொழிலாளர்களுக்கு போலி கொலைக் குற்றச்சாட்டின் பேரில் இந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் 18 பேருக்கு சிறிய குற்றச்சாட்டுக்களுக்காக மூன்று முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை வழங்கப்பட்டது.

பயங்கரமான தொழில் நிலைமைகளுக்கு எதிராக 2011-12ல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்கள், ஆலை ஆக்கிரமிப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள் உட்பட பலமான போராட்டங்களை தொடர்ந்து நடத்தியமைக்கு பழிவாங்கும் செயலாகவே இந்த சோடிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, ஒரு இணையவழி மனுவை முன்னெடுப்பதோடு மாருதி சுசுகி தொழிலாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்படுதவற்கான போராடத்திற்கு உலகளாவிய ரீதியில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது.

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (ஐ.வை.எஸ்.எஸ்.இ.) அமைப்பின் பிரச்சார அணி, சமீபத்திய நாட்களில் கொழும்பு துறைமுக மற்றும் தொழில்துறை தொழிலாளர்களை சந்தித்துப் பேசியதுடன் மேலும் நகரின் தொழிலாளர்கள் வர்க்க பிரதேசங்களிலும் பிரச்சாரம் செய்திருந்தது. அவர்கள், "போலி வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்களை விடுதலை செய்!" என்ற அனைத்துலகக் குழுவின் அறிக்கையின் சிங்கள மற்றும் தமிழ் பிரதிகளை விநியோகித்தனர்.

சோ.ச.க. பிரச்சாரகர் தொழிலாளர்களுடன் பேசுகிறார்

கொழும்புத் துறைமுகத் தொழிலாளர்கள் இந்தியாவில் தங்கள் வர்க்க சகோதர்களுக்கு ஆதரவைத் தெரிவித்தனர். இலங்கை தொழிலாளர்களும், சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம் முன்னெடுக்கும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைக்கு பலியாகியுள்ளனர்.

பல தொழிலாளர்கள், போலி வழக்கில் சிக்கியுள்ள மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை துறைமுகங்கள் தனியார்மயப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடிய இலங்கை தொழிலாளர்கள் மீது நடதட்தப்பட்ட கொடூரமான பொலிஸ் பாய்ச்சலுக்கும் இடையே ஒற்றுமையை சுட்டிக் காட்டினர்.

கொழும்பு துறைமுகத்தின் தகவல் சேவைகள் பிரிவில் பணிபுரியும் தேவிகா கூறியதாவது: "இத்தகைய அநீதிக்கு எதிராக நீங்கள் பிரச்சாரம் செய்வது முக்கியம். அதே கதி குறுகிய எதிர்காலத்தில் நமக்கு நேரிடக் கூடும். துறைமுகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலிறுத்த விதத்தை பற்றி சற்று சிந்தித்துப் பாருங்கள்."

துறைமுகத்தில் நிரந்தர தொழிலாளர்களுக்குப் பதிலாக ஒப்பந்த தொழிலாளர்களை இருத்துவதை சுட்டிக்காட்டிய அவர், "பெரும்பாலான ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களை விட குறைந்த ஊதியமே கிடைக்கின்றது. அவர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. கடின உழைப்பு வேலைகளுக்கு கூட பெண் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்," என குறிப்பிட்டார்.

அனைத்துலகக் குழுவின் பிரச்சாரத்திற்கு தேவிகா பாராட்டுத் தெரிவித்தார். "தொழிற்சங்கங்கள் தொழிலாளர்கள் உடனடிப் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே சிந்திக்குமளவுக்கு மட்டுப்படுத்தியுள்ளன, பரந்த அரசியல் பிரச்சினைகளை விவாதிப்பதில் இருந்து அவர்களை ஓரங்கட்டி விடுகின்றன. நான் அரசியல் விஞ்ஞானத்தைப் படித்தேன். தொழிலாளர்கள் இந்த விஷயங்களை இன்னும் முறையாக படிக்கத் தொடங்க வேண்டும் என நான் நினைக்கிறேன். நான் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர் ஆவேன், உங்களது சர்வதேச மனுவை ஆதரிப்பேன்.”

மாருதி சுசுகி வழக்கானது, தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் உரிமை எப்படி அபகரிக்கப்படுகின்றது என்பதை நிரூபிக்கின்றது என கொழும்பு படகுத் துறை ஊழியரான கெலும் கூறினார். "இலங்கையிலும் இதுதான நடக்கின்றது?" என்று அவர் கேட்டார். "அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கூட தடுக்க அரசாங்கம் நீதிமன்ற உத்தரவுகளை பெறுகின்றது. உத்தரவுகளை மீறினால் அமைப்பாளர்கள் தண்டிக்கப்படுவார்கள். இப்போது அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு இடங்களையும் நேரங்களையும் ஒதுக்கப் போகிறது."

"இது இந்தியா, ஸ்ரீலங்கா அல்லது அமெரிக்காவில் நடக்கிறதா இல்லையா என்பது பற்றிய பிரச்சினை அல்ல. இத்தகைய சம்பவங்கள் உலகளாவிய அளவில் ஆளும் வர்க்கத்தின் தாக்குதல்களை எதிர்கொள்ள தொழிலாளர்களின் ஒற்றுமை அவசியம் என்பதை தெளிவுபடுத்துகிறது."

ஒரு வாகன தொழிலாளி ஷெஹான் கூறியதாவது: "அந்த தொழிலாளர்களுக்கு எதிரான தீர்ப்பை நான் கண்டனம் செய்கிறேன், ஏனெனில் இலங்கையைப் போன்ற மற்ற நாடுகளிலும் முதலாளித்துவ அரசாங்கங்கள் தொழிலாளர்களின் உரிமையை நசுக்க இதை ஒரு எடுத்துக்காட்டாக அமையக் கூடும்."

"தொழிலாளர்களுக்கு தரமான வேலை நிலைமைகள் தேவை, அதற்காக போராடுவது அவர்களுக்கு உள்ள உரிமை" என்று ஷெஹான் தெரிவித்தார். "தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தின் மூலம் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

"இந்த வகையிலான ஒரு சர்வதேச பிரச்சாரத்தை நான் முதல் தடவையாக காண்கிறேன். எனவே நான் உங்கள் பிரச்சாரத்தை பெரிதும் மதிக்கிறேன் மற்றும் நிச்சயமாக இணையவழி மனுவில் கைச்சாத்திடுவேன்."

ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் இரண்டு பெண் பராமரிப்பு ஊழியர்கள் பாதிக்கப்பட்ட மாருதி தொழிலாளர்கள் மீது அனுதாபம் கொண்டனர். அவர்களில் ஒருவர் கூறியதாவது: "நாங்களும் மிகவும் கடினமான சூழ்நிலையில் வேலை செய்கிறோம். பொதுவாக, நாங்கள் ஒரு நாளைக்கு 11 அல்லது 12 மணி நேரம் வேலை செய்கிறோம். நாங்கள் மாதம் 30 நாட்களாக வேலை செய்து மாதத்திற்கு 28,000 ரூபாய் மட்டுமே சம்பாதிக்கிறோம்.

அவர் தொடர்ந்தார்: "இந்த அரசியல் பிரச்சினைகளை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? எங்களுக்கு முறையான கல்விக்கான வாய்ப்பே இல்லை, இப்போது நாம் ஒரு சாத்தியமில்லே வேலைச் சுமையை எதிர்கொள்கிறோம். எப்போதும் இருளில் இருப்பதாகவே உணர்கிறோம்."

புரட்சிகர கட்சியின் பணி தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை அபிவிருத்தி செய்வது தான் என சோ.ச.க. பிரச்சாரகர்கள் விளக்கினர். "ஆம், நீங்கள் செய்வது மிகவும் முக்கியமானது," என்று அவர் பதிலளித்தார். "நான் என் பிள்ளைகளுக்கு இந்த துண்டுப்பிரசுரத்தை கொடுப்பேன். அனைத்து சிரமங்களுடனும், நாம் பெற்றதைவிட சிறந்த கல்வியை அவர்களுக்கு வழங்கியுள்ளோம்."

44 சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் செயல்படும் கொழும்புக்கு அருகில் ஹோமமாகாவில் உள்ள பனாகொட "டெம்பிள்பர்க்" தொழிற்துறை வலயத்தை சுற்றியுள்ள பிரதேசத்திற்கு சோ.ச.க. பிரச்சாரகர்கள் விஜயம் செய்தனர். தொலைதூர கிராமங்களில் இருந்து வந்துள்ள இந்த வலயத்தின் தொழிலாளர்கள், மிகவும் மோசமான நிலையில் சிறிய வாடகை அறைகளில் வாழ்கின்றனர்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணையவழி மனுவில் இளம் தொழிலாளர்கள் கையெழுத்திடுகின்றனர்

ஒரு சிறிய அறையில் தன் மகனுடன் வசிக்கும் ஒரு பெண் காந்தி, இந்திய தொழிலாளர்கள் மீதான வேட்டையாடலை குறித்து கோபத்தை வெளிப்படுத்தினார். "இந்த தொழிலாளர்கள் எங்கள் சகோதரர்கள்," என்று அவர் கூறினார். "நாங்கள் அனைவரும் ஒரே பரிதாபகரமான வேலை மற்றும் வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொண்டுள்ளோம், ஆனால் எம்மால் எதையும் கோர முடியாது."

வாழ்க்கைச் செலவினங்களை சமாளிக்க சராசரியாக சம்பளம் 600-800 ரூபாய் எவ்வகையிலும் போதவில்லை என்று அவர் குறிப்பிட்டார்: "மாருதி சுசுகி தொழிலாளர்களைப் போலவே இந்த பயங்கரமான நிலைமைகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ள விரும்புகிறோம். ஆனால் போராடுவதற்கு எங்களுக்கு அமைப்புகள் இல்லை. தொழிலாளர்கள் சர்வதேச அளவில் ஒன்றிணைந்தால் போராடுவதற்கான வலிமை எங்களுக்கு இருக்கும் என நான் நினைக்கிறேன்."

இளம் ஆண் தொழிலாளர் குழுவினரும் கருத்து தெரிவித்தனர். "இந்த 13 தொழிலாளர்களின் துன்பம் நாம் எதிர்கொள்வது போன்றதே," என்று ஒருவர் கூறினார். மாருதி சுசுகி தொழிலாளர்களைப் போலவே, புதிய தொழிற்சங்கங்களை உருவாக்க அவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஏற்கனவே இருந்த தொழிற்சங்கங்கள் தம்மைக் காட்டிக் கொடுத்துவிட்டன என்றும் அவர் குறிப்பிட்டார். "நீதிமன்றங்கள் எப்போதும் சக்திவாய்ந்த அதிகாரத்தை பாதுகாக்கின்றன," என்று அவர் கூறினார். "அனைத்தும் நிறுவனங்களின் இலாபங்களை அதிகரிக்க திசையமைவுபடுத்தப்பட்டுள்ளன."

மற்றொரு தொழிலாளி கருணபால கூறியதாவது: "இந்திய அரசாங்கம் மற்றும் தொழிற்சாலை உரிமையாளர்களின் விருப்பப்படி மாருதி சுசுகி தொழிலாளர்கள் தண்டிக்கப்பட்டனர். இப்போது ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. 'இந்தியாவில் நடந்தால், ஏன் ஸ்ரீலங்காவில் நடக்காது?'”

அவர் மேலும் கூறியதாவது: "ஏழைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் ஏதேனும் நடந்தால், தொழிலாளர்களைத் தவிர வேறு யார் அதற்கு எதிராக போராட முடியும். உங்கள் பிரச்சாரம் உலகளவில் தொழிலாளர்கள் மத்தியில் இணைப்புகளை உருவாக்குகிறது. நாம் இன்னும் ஒரு படி மேலே போவோம்."

கொழும்பில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ள கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் ஒரு குடியிருப்பு பகுதியை சோ.ச.க. பிரச்சாரகர்கள் பார்வையிட்டனர். அவர்கள் அடிமை தொழிலாளர் நிலைமைகளுக்கு உட்பட்டுள்ளனர். இங்கு பெரும்பான்மையான கிராமப்புறங்களில் இருந்து வந்துள்ள இளம் பெண்கள் 3.5 x 2.5 மீட்டர் சிறிய அறைகளில் வசிக்கின்றனர்.

நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன, அவை மனிதவள நிறுவனங்களில் இருந்து ஒப்பந்த தொழிலாளர்களை பெற்று, உற்பத்தி செலவினங்களை குறைத்து, குறைந்த ஊதியங்களை கொடுப்பதன் மூலம் நிரந்தர தொழிலாளர்களின் அற்ப சலுகைகளை கூட மறுக்கின்றன.

ஒரு பெண் தொழிலாளி கீதா கூறுகையில், "ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தொழிலாளர்கள் இந்தியாவில் தண்டிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை விடுவிக்க போராட வேண்டும். தொழிலாளர்களுக்கு தொழிலாளர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் அதே நிலைமையை எதிர்கொள்கிறார்கள். முதலாளித்துவ அரசாங்கங்களும் அவற்றின் நீதித்துறைகளும் நிறுவனங்களுக்காவே சேவை செய்கின்றன. உண்மையில், இன்று மாருதி சுசுகி தொழிலாளர்களை சந்தித்துள்ள இதே நிலைமையை இலங்கை தொழிலாளர்கள் நாளை சந்திக்க நேரிடும். நான் உங்கள் பிரச்சாரத்தை பாராட்டுகிறேன்."

தனது சொந்த அனுபவத்தைப் பற்றி குறிப்பிட்டு, தனது கணவர் ஒரு நல்ல சம்பளத்தை எதிர்பார்த்து ஜோர்டனில் உள்ள OCS ஆடை தொழிற்சாலையில் வேலைக்குச் சென்றதாக அவர் கூறினார். "ஒரு வருடத்திற்கும் மேலாக அங்கு அவர் பணியாற்றி இருந்தாலும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த ஆலை மூட்ப்பட்டுவிட்டது," என்றார் கீதா. "அவகள் இழப்பீடு ஏதேனும் வழங்கவில்லை அல்லது நிறுவனத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட ஊதியத்தை கூட வழங்கவில்லை."

சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, அவர் கூறியதாவது: "பதவிக்கு வரும்போது, இந்த அரசாங்கம் ஒப்பந்த தொழிலாளர் முறையை அகற்றுவதற்கும் எங்கள் சம்பளத்தை 2,500 ரூபாவிற்கும் அதிகரிப்பதற்கும் உறுதியளித்தது. ஆனால் அவர்கள் அவை பொய்யான வாக்குறுதிகள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். அந்த விவகாரங்களை விளக்கும் அமைப்பு அல்லது செய்தி வெளியீடு எதுவும் இல்லை. அவர்கள் இதை விளக்கினால், நாங்கள் நிறைய விஷயங்களை புரிந்து கொள்ள முடியும். "

ஜீப் வே லங்கா தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இன்னுமொரு பெண் தொழிலாளி கூறியதாவது: "சுதந்திர வர்த்தக வலயத்தின் சில பெண்கள் தொழிலாளர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் காரணமாக மலட்டுத் தன்மை அடைந்துள்ளனர். இத்தகைய கடினமான சூழ்நிலையில் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற அநீதிக்கு எதிராக சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தின் பலத்தை அணிதிரட்டுவது அவசியம்."