ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

IMF meeting signals descent into global trade war

சர்வதேச நாணய நிதியத்தின் கூட்டம் உலகளாவிய வர்த்தக போருக்குள் இறங்குவதை சமிக்ஞை செய்கிறது

Nick Beams
24 April 2017

உலகளாவிய வர்த்தக போரை நோக்கிய மற்றொரு படியாக, இவ்வாரயிறுதி வாக்கில் சர்வதேச நாணய நிதியம், "பாதுகாப்புவாதத்தின் எந்தவொரு வடிவத்தையும் எதிர்ப்பதற்கான" கடமைப்பாட்டிலிருந்து பின்வாங்கிய இரண்டாவது பிரதான உலகளாவிய பொருளாதார அமைப்பாக மாறியது.

கடந்த மாத ஜி 20 நிதி அமைச்சர்கள் கூட்டத்தின் கூட்டறிக்கையிலிருந்து அந்த வார்த்தையை நீக்குவதென முடிவெடுக்கப்பட்டிருந்த நிலையில், சர்வதேச நாணய நிதியமும் வாஷிங்டனில் அதன் வசந்தகால கூட்டத்தில் அதே போக்கை ஏற்றது. இவ்விரு விடயங்களிலுமே, வெள்ளை மாளிகையின் "அமெரிக்கா முதலில்" திட்டநிரலுக்கு இணங்க, ட்ரம்ப் நிர்வாகத்திடம் இருந்து வந்த அழுத்தத்தின் காரணமாக "சுதந்திர வர்த்தக" கடமைப்பாடு நீக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் நிதியியல் கமிட்டி (IMFC) வெளியிட்ட அறிக்கை, முந்தைய வார்த்தைகளை கைவிட்டு, அது “சர்வதேச வர்த்தகத்தின் சமநிலைப்பட்ட களத்தை ஊக்குவிக்க" விரும்புவதாக குறிப்பிட்டது.

கமிட்டியின் தற்போதைய தலைவரும், பேங்க் ஆஃப் மெக்சிகோவின் ஆளுநருமான அகஸ்டின் கார்ஸ்டன்ஸ், “பாதுகாப்புவாதம் என்ற வார்த்தை பிரயோகம் மிகவும் தெளிவின்றி" இருப்பதால் முந்தைய வார்த்தைகள் நீக்கப்பட்டிருப்பதாக கூறி, அந்த முடிவின் முக்கியத்துவத்தை மூடிமறைக்க முயன்றார்.

யதார்த்தத்தில், பாதுகாப்புவாதம் என்ற சொல்லை எந்தவிதத்திலும் உதறிவிடுவதானது, அனைத்திற்கும் மேலாக ட்ரம்ப் நிர்வாகத்தால் எரியூட்டப்பட்டு, தவறுக்கிடமின்றி, அதிகரித்து வரும் வர்த்தக பதட்டங்களின் ஒரு வெளிப்பாடாகும்.

இந்த முரண்பாடுகளைக் கூட்டத்தில் முழுமையாக ஒடுக்கிவிட முடியவில்லை. IMFC இன் அறிக்கையில், ஜேர்மன் நிதி அமைச்சர் வொல்ஃப்காங் முன்சௌவ் கூறுகையில் ஜேர்மனி "உலகளாவிய பொருளாதாரத்தை திறந்து வைக்கவும், பாதுகாப்புவாதத்தை எதிர்க்கவும், உலகளாவிய பொருளாதார மற்றும் நிதியியல் கூட்டுறவை அதன் பாதையில் பயணிக்க செய்யவும் பொறுப்பேற்கிறது,” என்றார்.

இந்த அறிக்கை அமெரிக்க நிதித்துறை செயலர் ஸ்டீவன் மினுசின் கருத்துக்களுடன் கூர்மையாக முரண்படுகின்றன. அவர் கூறுகையில் அமெரிக்கா "சந்தை அடிப்படையிலான போட்டிக்கு பொறுப்பேற்கும் பங்காளிகளுடன் வர்த்தக விரிவாக்கத்தை ஊக்குவிக்கும், அதேவேளையில் நேர்மையற்ற வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக மிகக் கடுமையாக எங்களை பாதுகாக்க முயலும்,” என்றார்.

அவர் கருத்துக்கள் குறிப்பாக இரண்டு பிரதான நாடுகளுக்கு எதிராக, அதாவது அமெரிக்காவுடன் மிகப் பெரியளவில் வர்த்தக உபரியைக் கொண்டுள்ள சீனா மற்றும் ஜேர்மனிக்கு எதிராக இருந்தன. சீனப் பொருளாதாரம் சந்தை அடிப்படையிலானது கிடையாது என்று வாஷிங்டன் வலியுறுத்துகின்ற அதேவேளையில், ஜேர்மனியின் முந்தைய நாணயம் டோச்சமார்க் (deutschmark) இன் மதிப்பை விட யூரோ மதிப்பு குறைவாக இருப்பதால் ஜேர்மனி நேர்மையின்றி ஆதாயங்களை அனுபவித்து வருவதாக ட்ரம்ப் நிர்வாக அங்கத்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.

கடந்த ஆண்டும் சாதனையளவிற்கு வர்த்தக உபரியைப் பதிவு செய்துள்ள ஜேர்மனியை நேரடியாக பெயரிடாமல், மினுசின் கூறுகையில் "வெளிநாடுகளில் மிகப்பெரியளவில் உபரிகளைக் கொண்டுள்ள மற்றும் பலமான அரசு நிதிகளைக் கொண்டுள்ள நாடுகள், மிக பலமான உலகளாவிய பொருளாதார பங்களிப்பில் குறிப்பிடத்தக்க பொறுப்புகளைக் கொண்டுள்ளன,” என்றார்.

எஃகு இறக்குமதிகள் மீது அதிகளவிலான கட்டுப்பாடுகளைத் திணிக்கும் நோக்கில் ட்ரம்ப் நிர்வாகம் ஒரு மிகப் பெரிய நடவடிக்கையை அறிவித்து வெறும் ஒரு சில நாட்களில், அமெரிக்க அழுத்தத்திற்கு வளைந்து கொடுக்கும் விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் இம்முடிவு வந்தது. ட்ரம்ப் நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், உலகளாவிய சந்தையில் அந்த அத்தியாவசிய பண்டத்தின் மீது நீண்டகால தாக்கங்கள் ஏற்படும்.

எஃகு இறக்குமதிகள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மீது ஏற்படுத்தும் தாக்கங்களைக் குறித்து ஒரு விசாரணை தொடங்குவதற்காக, 1962 இல் இருந்து மிகக் குறைந்தளவே பயன்பாட்டில் இருந்துள்ள ஒரு சட்டத்தின் கீழ், ட்ரம்ப் ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார். அந்த முடிவை "அமெரிக்காவிற்கான வரலாற்று தினமாக" அறிவித்து, அவர் அறிவிக்கையில், எஃகு "நமது பொருளாதாரம் மற்றும் இராணுவம் இரண்டுக்கும் முக்கியமானது" என்றும், “இந்த விடயத்தில் நாம் வெளிநாடுகளைச் சார்ந்திருக்க முடியாது" என்றும் அறிவித்தார்.

“தேசிய பாதுகாப்பைத்" துணைக்கு இழுப்பது தெளிவாக நிர்வாகத்தின் இராணுவவாத முனைவுடன் தொடர்புபடுகிறது. ஆனால் இந்த சட்டத்தை பிரயோகிப்பதே கூட, இந்தாண்டின் தொடக்கத்தில் வர்த்தகத்துறை செயலர் வில்பர் ரோஸூம் மற்றும் ட்ரம்பின் தேசிய வர்த்தக கவுன்சில் தலைவர் பீட்டர் நவார்ரோவும் காங்கிரஸிடம் சமர்பிப்பதற்காக வகுத்தளித்த ஒரு பரந்த பாதுகாப்புவாத மூலோபாயத்தின் பாகமாக உள்ளது.

அமெரிக்கா விலக்கீட்டுரிமையோடு பாதுகாப்புவாத நடைமுறைகளைத் திணிக்க உதவும் வகையில், உலக வர்த்தக அமைப்பு (WTO) நடைமுறைபடுத்திய தந்திரமான சர்வதேச வர்த்தக சட்டங்களுக்கேற்ப முந்தைய அமெரிக்க சட்டமசோதாக்களை பயன்படுத்துவதன் அடிப்படையில் அது அமைந்துள்ளது. அவர்களின் ஆவணத்தில், ரோஸ் மற்றும் நவார்ரோ, இரண்டாம் உலக போர் வெடிப்பதற்குப் பங்களிப்பு செய்த 1930 களின் வர்த்தக மோதல்களுக்கு பரவலாக பெறுப்பாக்கப்பட்ட இழிவார்ந்த 1930 ஸ்மூட்-ஹாவ்லே சட்டத்தைப் (Smoot-Hawley Act of 1930) பயன்படுத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சமீபத்திய ட்ரம்ப் நகர்வைக் குறித்து பீட்டர்சன் பயிலகத்தின் மூத்த ஆய்வாளரும் ஜனாதிபதி ஒபாமாவிற்கான ஒரு முன்னாள் பொருளாதார ஆலோசகருமான சாட் பிரௌன் பைனான்சியல் டைம்ஸில் கருத்துரையில், எஃகு இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகளை நியாயப்படுத்த "தேசிய பாதுகாப்பை" மேற்கோளிடுவது வர்த்தகத்தின் மீது "அணுசக்தி வாய்ப்பை" பயன்படுத்துவதற்கு ஒப்பானதாகும் என்றார்.

"வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்க சட்டங்களின் கீழ் இருக்கும் ஒவ்வொரு கருவியையும் பயன்படுத்தி ட்ரம்ப் ஒவ்வொரு கல்லையும் நகர்த்தி வருவதாக தெரிகிறது என்பது இந்த கவலைக்குரிய போக்கிற்கான மற்றொரு ஆதார துணுக்காக உள்ளது,” என்றார்.

சந்தையில் எஃகு குவிப்பதற்கு எதிராக சமீபத்திய ஆண்டுகளில் அமெரிக்கா 152 வழக்குகளைத் தொடுத்துள்ளதுடன், இன்னும் 25 வரிசையில் உள்ளன. இருப்பினும் இந்த சமீபத்திய நகர்வானது ஒரு மிகப்பெரிய தீவிரப்பாட்டைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. வர்த்தகத்துறை செயலர் ரோஸ் கருத்தின்படி, தற்போதைய அமைப்புமுறை மிகவும் "நுண்மையாக" இருப்பதுடன், குறைப்பிட்ட நாடுகளுக்கு எதிரான குறிப்பிட்ட குறைகளை மட்டுமே அனுமதிக்கிறது என்பதால் அவற்றை மிக எளிதாக ஒதுக்கி சென்றுவிடலாம் என்கிறார்.

“மிக பரந்தளவில் பல்வேறு எஃகு பண்டங்கள் மற்றும் பல்வேறு நாடுகளுடன் ஒரு மிகவும் பரந்த தீர்வை" கொண்டு வருவதே இந்த புதிய நடவடிக்கையின் உத்தேசமாகும், இது “அனுமானித்தக்க வகையில், எல்லா எஃகு இறக்குமதியாளர் மீதும் நடவடிக்கை எடுக்கும் ஒரு பரிந்துரையில் போய் முடியக்கூடும்."

எஃகு ஏற்றுமதியாளர்கள் அவர்களின் உற்பத்தியை ஏனைய சந்தைகளுக்கு திருப்ப முயல்வார்கள் என்பதால், இது சர்வதேச சந்தையில் குழப்பங்களை உருவாக்கி, சந்தையில் குவிக்கப்படுவதாக குறைகூறுவதற்கும், இறக்குமதி வரி விதிப்புகளுக்கும் மற்றும் ஏனைய கட்டுப்பாடுகளுக்கும் இட்டுச் சென்று—பின்னர் விரைவிலேயே ஒரு முழு அளவிலான வர்த்தக போருக்கு இட்டுச் செல்லும்.

அமெரிக்க அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குப் பின்னால் இரண்டு இன்றியமையா உந்துசக்திகள் உள்ளன: முதலாவது, தொடர்ந்து கொண்டிருக்கும் அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி, இதை இப்போது அது அரசியல் மற்றும் இராணுவ வழிவகைகளைக் கொண்டு தீர்க்க முயன்று வருகிறது—2008 நிதியியல் நெருக்கடி மற்றும் அதை தொடர்ந்து உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் உலக சந்தைகளின் சுருக்கம் ஆகியவற்றை அடுத்து இந்த நிகழ்வுபோக்கு தீவிரமடைந்துள்ளது.

இரண்டாவதாக, குறைந்த கூலிகள் மற்றும் அதிகரித்து வரும் பொருளாதார கஷ்டங்களால் அதிகரித்து வரும் சமூக பதட்டங்களைத் தணிக்க மற்றும் பிற்போக்குத்தனமான பொருளாதார தேசியவாத போக்குகளுக்குள் அவற்றை திசைதிருப்ப ட்ரம்ப் நிர்வாகம் போராடி வருகிறது. இதில், ட்ரம்ப் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முழு ஒத்துழைப்பைப் பெற்றுள்ளார், எஃகு சம்பந்தமான நிர்வாக ஆணையில் அவர் கையெழுத்திடுகையில் முக்கிய தொழிற்சங்க தலைவர்கள் அவருக்கு அருகில் நின்றிருந்தனர். இது ஜனநாயகக் கட்சியின் பொருளாதார தேசியவாதிகளாலும் ஆதரிக்கப்படுகிறது, இதில் மிகவும் பிரபல பிரதிநிதியாக சுயபாணியிலான "சோசலிஸ்ட்" பேர்னி சாண்டர்ஸ் இருக்கிறார்.

இத்தகைய நிகழ்வுபோக்குகளின் உள்ளார்ந்த புறநிலை தர்க்கம், பொருளாதார மற்றும் இராணுவ போராகும். இதற்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளிடம் எந்த முற்போக்கான மாற்றீடும் கிடையாது, அதேவேளையில் சர்வதேச நாணய நிதியம் எதை அது மிகப் பெரிய அபாயமாக ஏற்றுக் கொண்டுள்ளதோ அதன் முன்னால் அது திராணியற்று இருக்கும் காட்சி மீண்டுமொருமுறை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது ஏனென்றால் பொருளாதார தேசியவாதம் மற்றும் பாதுகாப்புவாதத்தின் வளர்ச்சியானது, தனியார் இலாபம் மற்றும் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதன் அடிப்படையில் அமைந்துள்ள இந்த சமூக-பொருளாதார அமைப்புமுறையின் அடித்தளத்திலேயே வேரூன்றி உள்ளது.

ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னர், உலகம் முதலாம் உலக போரின் மனிதயின படுகொலைகளில் சிக்கி இருந்தது. அது "சகல போர்களையும் முடித்து வைக்கும் போராக" இருக்கவில்லை, மாறாக அது ஏகாதிபத்திய சக்திகளில் எது உலக மேலாதிக்கத்தைப் பெறும் என்பதை முடிவு செய்வதற்காக மூன்று தசாப்தங்களுக்கும் அதிகமாக நீண்ட நெடிய சண்டைகளின் ஒரு தொடக்கமாக மட்டுமே இருந்தது. யூத இனப்படுகொலை மற்றும் ஜப்பான் மீது இரண்டு அணுகுண்டு வீசப்பட்டமை உட்பட கூறவியலாத கொடூரங்கள் மற்றும் பத்து மில்லியன் கணக்கானவர்களின் படுகொலைக்குப் பின்னர், தவிர்க்கவியலாமல், அமெரிக்கா ஒப்புயர்வற்ற உலகளாவிய சக்தியாக எழுந்தது.

இப்போது உலகம், அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சியினது முன்பினும் அதிக வெடிப்பார்ந்த விளைவுகளுக்கு முன்னால் நேருக்கு நேராக கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆனால் இந்தாண்டு 20 ஆம் நூற்றாண்டின் மகத்தான சம்பவமான ரஷ்ய புரட்சியின் நூற்றாண்டையும் மற்றும் உலக சோசலிச புரட்சி வேலைத்திட்டத்தின் அடிப்படையில் லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் போல்ஷிவிக் கட்சியால் தலைமை கொடுக்கப்பட்டு தொழிலாள வர்க்கம் வெற்றிகரமாக அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றிய நூற்றாண்டையும் குறிக்கிறது. சர்வதேச தொழிலாள வர்க்கம் இப்போது நேரடியாக எதை எதிர்கொண்டுள்ளதோ அந்த போராட்டங்களுக்கு உயிரூட்டும் முன்னோக்காக இதுவே இருக்க வேண்டும்.