ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

UK government deploys military following Manchester suicide bombing

இங்கிலாந்து அரசாங்கம் மான்செஸ்டர் தற்கொலை குண்டுவெடிப்பைத் தொடர்ந்து இராணுவத்தை நிலைநிறுத்துகிறது

Chris Marsden
24 May 2017

நேற்றிரவு, பிரிட்டனின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டம் அதன் அதிகபட்ச மட்டத்திற்கு "அபாயகரமானதாக" அதிகரிக்கப்பட்டது. மான்செஸ்டர் அரங்கில் Ariana Grande இன் இசைநிகழ்ச்சியில் திங்களன்று இரவு நடந்த தற்கொலை குண்டுவெடிப்புக்குப் பின்னர் மேற்கொண்டும் தாக்குதல்கள் நடக்கக்கூடுமென பிரதம மந்திரி தெரேசா மே அறிவித்தார்.

பிரதான பொலிஸ் இடங்களில் 5,000 வரையிலான இராணுவ சிப்பாய்கள் நிறுத்தப்பட்டுள்ளார்கள். 2015 இல் மே உள்துறை செயலளராக இருந்த போது பிரதம மந்திரி டேவிட் கேமரூனின் கீழ், இரகசியமாக ஆலோசிக்கப்பட்டு, பின்னர் பத்திரிகைகளுக்குக் கசியவிடப்பட்ட, "Operation Temperer” நடவடிக்கையை மே கையிலெடுத்துள்ளார்.

ஜூன் 8 பொது தேர்தல் இனி துப்பாக்கி முனையில் நடந்தேறும்.

மான்செஸ்டர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒரு பயங்கரமான குற்றமாகும். சல்மான் ரமதான் அபேடி எனும் 22 வயதான அந்த குண்டுதாரி, அதிகபட்சம் பேரைக் கொல்வதற்காக இரும்பாணிகள், திருகாணிகள் மற்றும் போல்ட்கள் நிரப்பிய அவரது வெடிகுண்டு குப்பியை மறைத்து எடுத்து வந்திருந்தார், அதில் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஏறத்தாழ 120 பேர் காயமடைந்தனர், காயமடைந்தவர்களில் சிலர் அபாயகரமான நிலைமையில் உள்ளனர். உண்மையில் Grande இன் இரசிகர்களில் பெரும்பான்மை இளைஞர்களே என்பதால் கொல்லப்பட்டவர்களில் 12 பேர் குழந்தைகளாவர், மிகவும் இளைய குழந்தையான வெறும் எட்டு வயதான Saffie Rose Roussos என்ற பெயர் கொண்ட குழந்தையும் அதில் உள்ளடங்கும்.

ஆனால் இந்த கொடூரமான நடவடிக்கை தூண்டிவிட்டுள்ள துக்கம் மற்றும் கோபத்தை விட, அரசாங்கம் எடுத்துள்ள முன்னொருபோதும் இல்லாத நடவடிக்கைகளில் இருந்து ஒருவரின் உள்ளார்ந்த உணர்வுகளைக் காப்பாற்றுவது அதிக அவசியமாகிறது. பெரும்பாலும் இதற்கு முன்னர் நடந்ததைப் போலவே, இந்த சமீபத்திய பயங்கரவாத குண்டுவீச்சு சம்பவமும் வலதுசாரி அரசியல் திட்டநிரலை முன்னெடுக்க பயன்படுத்தப்பட்டு வருவதால், எந்தளவிற்கு இதுகுறித்து அரசுக்கு முன்னரே தெரிந்திருந்தது மற்றும் இதில் அரசு சம்பந்தப்பட்டிருந்ததா என்றும் கூட கேள்விகளை எழுப்புகிறது.

தெற்கு மான்செஸ்டரில் அபேடி வசித்த Fallowfield பகுதியில் ஆயுதமேந்திய பொலிஸ் சோதனைகள், வெளியேற்றங்கள் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட துப்பாக்கிசூடு நடவடிக்கைகளுக்குப் பின்னர், செவ்வாயன்று மாலை அவர் பெயர் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. அவர் பாதுகாப்பு சேவைகளுக்கு நன்கறியப்பட்டவர் என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஓர் அச்சுறுத்தல் இல்லை என்று பார்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த பரிதாபகரமான சம்பவத்தைத் தடுக்க ஏன் ஒன்றும் செய்யப்பட்டிருக்கவில்லை என்று விளக்கமளிப்பதற்கான இவ்வித மழுப்பலான விடையிறுப்புக்கு எந்த நம்பகத்தன்மையும் கிடையாது. மிகவும் கீழ்தரமாக நவம்பர் 2015 இல் பட்டாக்லோன் அரங்கில் நடந்த இஸ்லாமியவாத தாக்குதலிலும் மற்றும் 130 பேர் கொல்லப்பட்ட பாரீஸ் எங்கிலுமான ஏனைய இடங்களிலும் நடந்த முந்தைய பல சம்பவங்களிலும் கூட இதே போல தான் மன்னிப்பு கேட்கப்பட்டது. பத்திரிகைகள் பின்னர், பாரீஸ் குண்டுதாரிகளுக்கும் புரூசெல்ஸ் விமான நிலையம் மற்றும் சுரங்க பாதையில் மார்ச் 2016 தற்கொலை தாக்குதல்கள் நடத்திய குற்றவாளிகளுக்கும் இடையிலான தொடர்புகளையும் மற்றும் அவற்றில் சம்பந்தப்பட்ட பலருடன் பொலிஸ் பரிச்சயமாக இருந்தது என்பதையும் எடுத்துக்காட்டின.

இந்த வாரம் தான், சார்லி ஹெப்டோ நையாண்டி சஞ்சிகை மீதான ஜனவரி 2015 தாக்குதலில் சம்பந்தப்பட்ட உளவாளி Claude Hermant பிரெஞ்சு அரசுடன் உடந்தையாய் செயல்பட்டது அறியப்பட்டது. ஜூலை 7, 2005 இல் இலண்டனில் நடத்தப்பட்ட பிரிட்டனின் மிகவும் பயங்கரமான பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்களும் பொலிஸ் க்கு நன்கறிந்தவர்கள் என்பதுடன் தெளிவாக பாதுகாப்பு சேவைகளால் பாதுகாக்கப்பட்டிருந்தார்கள்.

இதுபோன்ற அம்பலப்படுத்தல்களுக்குப் பின்னரும் கூட, விடயங்கள் எப்போதும் "புதிராகவே" இருக்கின்றன என்பதோடு, முறையாக ஒருபோதும் விசாரிக்கப்படுவதும் இல்லை. பிரதான ஏகாதிபத்திய சக்திகள் வெளிநாடுகளில் அவற்றின் சூறையாடும் நலன்களை மேற்கொண்டு முன்னெடுக்கவும் மற்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் உள்நாட்டில் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் திணிப்பதைச் சட்டப்பூர்வமாக்கவும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவற்றில் சம்பந்தப்பட்ட குழுக்கள் பிரதான ஏகாதிபத்திய சக்திகளின் அரசியல் உருவாக்கங்களாக இருந்தன என்றாலும் கூட ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இஸ்லாமியவாத பயங்கரவாத குழுக்களின் வளர்ச்சியானது 1991 இல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து தொடுக்கப்பட்ட மற்றும் 2003 ஈராக் படையெடுப்புக்குப் பின்னர் தீவிரப்படுத்தப்பட்ட தொடர்ச்சியான முடிவில்லா ஏகாதிபத்திய போர்களின் துணை-விளைவுகளாகும். ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் இப்போது சிரியா ஆகியவை கடும் வன்மத்தை வளர்க்கும் இடமாக உள்ளன, இவ்விடங்களில் இஸ்லாமியவாதிகள் வளர்க்கப்பட்டு ஆழ்ந்த பிற்போக்குத்தனமான திசையில் திருப்பி விடப்படுகிறார்கள்.

இத்தகைய குழுக்கள் பெரும்பாலும் எதிரிகளாக கருதப்படுவதற்கு முன்னதாக கூட்டாளிகளாக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள். ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிக் அரசு (ISIS) இந்த இரும்பாணி தற்கொலை குண்டுவீச்சுக்குப் பொறுப்பேற்றுள்ளது. இதன் தோற்றுவாய் ஈராக் மீதான 2003 அமெரிக்க-பிரிட்டன் படையெடுப்பிலும் ஆக்கிரமிப்பிலும் தங்கியுள்ளது. ஈராக்கில் சதாம் ஹூசைன் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் மேலெழுந்த சுன்னி பிரிவினரது கிளர்ச்சிகளின் விளைவாக, ISIS, ஈராக்கில் அல் கொய்தாவாக வாழ்வை தொடங்கியது. 2010 இல் அது சிரியாவிற்கு மாறியது, இஸ்லாமியவாத போராளிகள் குழுக்களுக்கு ஆயுத உதவிகள் மற்றும் நிதியுதவிகள் வழங்கி பஷார் அல் அசாத் ஆட்சியை சீர்குலைத்து கலைப்பதற்கான அமெரிக்க தலைமையிலான முயற்சிகளுக்குத் தான் இதற்காக நன்றி கூற வேண்டியிருக்கும்.

அபேடியின் பெற்றோர்கள் கடாபி ஆட்சியை எதிர்த்த லிபிய அகதிகளாவர், கடாபி பதவியிலிருந்து நீக்கப்பட்டு காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் லிபியாவிற்குத் திரும்பியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அல் கொய்தா உள்ளடங்கலாக இஸ்லாமியவாத குழுக்களுடன் ஏகாதிபத்திய சக்திகளின் ஒரு கூட்டணி மூலமாக அங்கே மீண்டும் ஆட்சி மாற்றம் முடுக்கிவிடப்பட்டது.

இந்த போர்களின் போது, MI5 மற்றும் MI6 பாதுகாப்பு சேவைகள் இங்கிலாந்தில் இருந்த இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகளைப் பின்தொடர்ந்தவர்களுடன் நெருக்கமான உறவுகளையும், பரந்த புரிதலையும் கட்டமைத்திருந்தன.

அரசின் குற்றத்தன்மையின் இத்தகைய முன்வரலாறு இருக்கையில், மே 22 சம்பவங்களைக் குறித்த உத்தியோகப்பூர்வ சொல்லாடல்களுக்கு எந்த பெயரளவிலான மதிப்பையும் கொடுக்க முடியாது. இருப்பினும் இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள முனைகளைப் புரிந்துகொள்ள, நேரடியாக அரசு சம்பந்தப்பட்டிருப்பதாக நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.

திங்களன்று, மே மற்றும் அவரது மதிப்பிழந்த அரசாங்கமும் அரசியல் நெருக்கடியில் இருந்தனர். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக கண்டிக்கப்படும் தொழிற்கட்சியின் ஜெர்மி கோர்பினுடன் ஒப்பிடுகையில் ஒரு "பலமான மற்றும் நிலையான" தலைவராக தன்னைக் கூறிக்கொள்வதையே தெரேசா மே, ஜூன் 8 திடீர் பொது தேர்தலின் மையத்தில் வைக்க முயன்று வருகிறார். ஆனால் சமூக பராமரிப்பு செலவுகளுக்காக ஓய்வூதியதாரர்கள் அவர்களின் வீடுகளை விற்க நிர்பந்திக்கும் அவரது திட்டங்களை மக்கள் வெறுப்பதால் இந்த முயற்சி நிலைகுலைந்துள்ளது.

தற்கொலை குண்டுவெடிப்புக்குப் பின்னர், எல்லா தேர்தல் பிரச்சாரமும் இரத்து செய்யப்பட்டு, இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், தேச பாதுகாப்பின் பாதுகாவலர் என்பதாக மே சவாலின்றி பேசுவதற்கு விடப்பட்டுள்ளார். இந்த குண்டுவீச்சு "பயங்கரவாத விவகாரத்தை முன்னுக்குக் கொண்டு வந்து, இந்த தேர்தல் பிரச்சாரத்தின் மையத்தில் வந்துள்ளது. இது இந்நாட்டுக்குத் தலைமை கொடுக்க விரும்புபவர்களின் குணாம்சத்தின் மீது வெளிச்சமிடும்,” என்று ரூபேர்ட் முர்டோக்கின் Sun பத்திரிகை அப்பட்டமாக எழுதியது. மே ஒரு "முன்னாள் உள்துறை செயலராக இதற்கு விடையிறுக்க அனுபவமும் அதிகாரமும் கொண்டுள்ளார்,” என்று அப்பத்திரிகை எழுதியது. அது கோர்பினை ஒரு "கோழைத்தனமான IRA இரசிகர்" என்று குறிப்பிட்டது.

பயங்கரவாத பிரச்சினைக்கு "இறுதி தீர்வு" (“final solution”) காணுமாறு —இந்த சொல் யூத இனப்படுகொலையை வர்ணிக்க நாஜிக்களால் இழிவுகரமாக பயன்படுத்தப்பட்டதாகும்— Daily Mail கட்டுரையாளர் Katie Hopkins விடுத்த அழைப்பு, இந்த அபிவிருத்திகள் முன்னிறுத்தும் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. Telegraph கட்டுரையாளர் Allison Pearson ட்வீட்டரில் குறிப்பிடுகையில், “பிரான்ஸை போல நமக்கும் அவசரகால நெருக்கடி நிலை தேவைப்படுகிறது. இப்போது நமது குழந்தைகளைப் பாதுகாக்க, பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்திற்குரிய ஆயிரக் கணக்கானவர்களுக்கான சிறைச்சாலைகள் நமக்கு அவசியப்படுகின்றன,” என்றார்.

உண்மையில் பிரிட்டனின் சம்பவங்கள் பிரான்சில் அமைக்கப்பட்ட வடிவத்தைப் பின்பற்றி வருகின்றன, அங்கே 2015 இல் இருந்து அவசரகால நெருக்கடி நிலை அமலாக்கப்பட்டுள்ளது. வெறும் ஒரு மாதத்திற்கு முன்னர் தான், வாக்குச்சாவடிகளில் 50,000 க்கும் அதிகமான பொலிஸ் மற்றும் இராணுவ சிப்பாய்கள் நிறுத்தப்பட்டு, அங்கே துப்பாக்கி முனையில் ஜனாதிபதி தேர்தல்கள் நடந்தன. ISIS க்கு ஆதரவாக செயல்படும் தொழில்ரீதியிலான ஒரு குற்றவாளியாக கூறப்படும் Karim Cheurfi ஆல் ஒரு பொலிஸ் கொல்லப்பட்டதே இதற்கு காரணமாக கூறப்பட்டது. பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை முகமைகளுக்கு Cheurfi நன்கறியப்பட்டிருந்த போதினும், அவர் பயங்கரமான அந்த தாக்குதலை நடத்த சுதந்திரமாக விடப்பட்டிருந்தார்.

இந்த சமாந்தரங்கள் மலைப்பூட்டுகின்றன. சிரியா மீதான ஏப்ரல் 7 அமெரிக்க விமானத் தாக்குதலைத் தொடர்ந்து போர் எதிர்ப்புணர்வு அதிகரித்திருந்த நிலைமைகளின் கீழ் நடந்த அந்த தாக்குதல், “இடது" வேட்பாளர் ஜோன்-லூக் மெலோன்சோனுக்கு ஆதாயமளித்தது. பரப்பப்பட்ட அரசியல் விஷமப் பிரச்சாரமும் அதன் முன்னால் மெலோன்சோனின் சரணாகதியும் "பயங்கரவாத எதிர்ப்பு" மீதான உத்தியோகபூர்வ விவாதத்தின் மீது மீண்டும் ஒருமுகப்பட பயன்படுத்தப்பட்டன—இது வலதுசாரி இமானுவல் மக்ரோனும் மற்றும் நவ-பாசிசவாத மரீன் லு பென்னும் இறுதி சுற்றுக்குச் செல்ல உதவியது.

ஐக்கிய இராஜ்ஜியத்தில் தீவிரமாக உள்நாட்டு ஒடுக்குமுறைக்கு திரும்புவதானது, இன்னும் புதிய இரத்தந்தோய்ந்த ஏகாதிபத்திய குற்றங்களுக்குத் தயாரிப்பு செய்வதுடன் பிணைந்ததாகும். இந்த மான்செஸ்டர் தாக்குதல் இஸ்ரேலில் இருந்து ஒரு அடாவடித்தனமான உரை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப்க்கு ஒரு வாய்ப்பளித்தது, அவர் "பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் மற்றும் அவர்களுக்கு உதவியும் ஒத்துழைப்பும் வழங்குபவர்களும்" “நமது சமூகத்திலிருந்து எப்போதைக்குமாக வெளியேற்றப்பட வேண்டும்" என்று கோரினார்.

நடைமுறையில் இதன் அர்த்தம் என்னவென்றால் சவூதி அரேபியா, கட்டார் மற்றும் சுன்னி பயங்கரவாத இயக்கங்களுக்கு ஒத்துழைக்கும் ஏனைய நாடுகளுடனான ஒரு கூட்டணியுடன் சிரியா போரை தொடர்ந்து நடத்துவதாகும். இந்த திட்டங்களில் மே முழு மூச்சுடன் இருக்கிறார், அசாத்திற்கு எதிரான இராணுவ நடவடிக்கைக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் ஒரு வாக்கெடுப்பு கொண்டு வருவதே புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் பழமைவாத அரசாங்கத்தின் முதல் நடவடிக்கையாக இருக்குமென அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

மே அவரது முதல் நேட்டோ பிரசன்னமாக, ட்ரம்ப் உரை நிகழ்த்த உள்ள புரூசெல்ஸ் நேட்டோ உச்சி மாநாட்டிற்காக வியாழனன்று பயணிக்க உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஏற்கனவே பயங்கரவாதம் மீது அமெரிக்க தலைமையிலான நடவடிக்கையையும், ஐரோப்பிய சக்திகளிடம் அதிகரித்த இராணுவ செலவினங்களையும் கோரி வந்துள்ளார். ஷியைட் ஈரானுக்கு எதிராக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தலைமையிலான ஒரு பிராந்திய சுன்னி கூட்டணிக்கான ஆதரவை வலியுறுத்த இப்போது அவர் முன்னால் ஒரு பொன்னான வாய்ப்பு முன்வைக்கப்படும்.