ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

ගිය සතියේ හර්තාලයෙන් උතුරු නැගෙනහිර ඇන හිටී

வட இலங்கை கடந்த வாரம் நடந்த ஹர்த்தாலில் முடங்கியது

By our correspondent
03 May 2017

ஏப்ரல் 27 அன்று வடக்கு மற்றும் கிழக்கில் நடந்த ஹர்த்தாலில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஹர்த்தாலின் காரணமாக வட பிராந்தியத்தில் சுகாதராம், மின்சாரம், நீர் விநியோக சபை தவிர்ந்த ஏனயை அரச மற்றும் தனியார் போக்குவரத்து, வர்த்தக மற்றும் வங்கி நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் மற்றும் பாடசாலைகள் உட்பட ஒட்டுமொத்த பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளும் முடங்கிப் போயின. கிழக்குப் பிராந்தியத்தில் பகுதியளவில் ஹர்த்தால் இடம்பெற்றது. தமிழ் மக்களுடன் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களும் ஹர்த்தாலில் பங்குபற்றினர்.

போரில் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்கள் சம்பந்தமாக தகவல்களை வெளியிடுமாறும் இராணுவத்தாலும் அரசாங்கத்தாலும் பலாத்கராமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் காணிகளை விடுவிக்குமாறும் கோரியே ஹர்த்தால் நடத்தப்பட்டது.

வட மாகாண சபை முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமைத்துவம் வகிக்கும் தமிழ் மக்கள் பேரவையே ஹர்த்தாலுக்கு அழைப்பு விட்டது. அது தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (இ.பி.ஆர்.எல்.எப்.) மற்றும் பல்வேறு சிவில் அமைப்புகளும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணியாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியில் அதிருப்திக்கு உள்ளாகி வருகின்ற நிலைமையின் கீழ் அதற்கு ஒரு போர்வையாகவே இந்த பேரவை கட்டியெழுப்பப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பாராளுமன்ற ஊது குழலாக செயற்பட்ட தமிழ் கூட்டமைப்பு, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசும் இந்தப் பிரச்சாரத்திற்கு “ஒத்துழைப்பை” அறிவித்தன.

போரினால் ஏற்பட்ட அழிவுகளால் துன்பப்படும் வடக்கு-கிழக்கு மக்களின் வறுமை, வேலையின்மை உட்பட சமூகப் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கும், இராணுவ ஆட்சிக்கு சமாந்தரமான நிலைமைகளை தூக்கி வீசுவதற்குமான நேர்மையான தேவை அவர்களுக்கு இருக்கின்றது. எனினும் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் பேரவை போன்ற கட்சிகளுக்கு இந்த தேவைகளைப் பற்றி எந்த அக்கறையும் கிடையாது. அடிக்கடி அவர்கள் கொழும்பு அரசாங்கத்தை விமர்சிப்பது மற்றும் ஏப்பிரல் 27 போன்ற ஹர்த்தால் மற்றும் வேறு ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுப்பது, மக்கள் மத்தியில் அடிக்கடி வெடிக்கும் எதிர்ப்புக்களை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே ஆகும்.

அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் புவி-சார் அரசியல் தேவைகளுக்கு சேவையாற்றுவதன் ஒரு பாகமாக, கொழும்பில் உள்ள வாஷிங்டன்-சார்பு சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தை பாதுகாப்பதிலேயே அவர்கள் அக்கறை காட்டுகின்றனர். அதன் மூலம் தமது சிறப்புரிமைகளை காத்துக்கொள்ள முனைகின்றனர்.

தமிழ் கூட்டமைப்பு, தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்காக வாஷிங்டன் முன்னெடுத்த ஆட்சி மாற்றத்துக்கு நேரடியாக ஒத்துழைப்பு வழங்கியது. ஸ்ரீ.ல.மு.கா. மற்றும் அ.இ.மு.கா. மற்றும் ஈ.பி.டி.பி.யும் மஹிந்த இராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் அதன் இனவதாத யுத்தத்துக்கும் ஆதரவளித்ததோடு முதலில் கூறிய கட்சிகள் இரண்டும் தற்போதை அரசாங்கத்தில் பங்குதாரர்களாவர். அரசாங்கத்தின் சிக்கன கொள்கைகளை அமுல்படுத்துவதற்கும் தொழிலளா-ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக, இராணுவ ஆக்கிரமிப்பு உட்பட கொடூரமான ஒடுக்குமுறை இயந்திரத்தை பேணிக் காப்பதற்கும் அவர்கள் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். ஈ.பி.டி.பீ., தற்போதைய அரசாங்கத்தின் பங்காளி அல்ல, எனினும் அதற்கு ஆதரவளிக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய தகவல்களைத் தேடுவது உட்பட கோரிக்கைகள் சம்பந்தமான இந்தக் கட்சிகளின் அழைப்புக்கள் கபடத்தனமானவையாகும். ஏனெனில், அவை போர்க் குற்றங்களை மூடி மறைப்பதற்காக, கொழும்பு அரசாங்கம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கும் தந்திரோபாயங்களை ஆதரிக்கின்றன.

தமிழ் மக்களுடன் முஸ்லிம் மக்களும் கடந்த வாரம் ஹர்த்தாலில் பங்குபற்றியமை, புலிகளால் போரின் போது வடக்கில் இருந்த முஸ்லிம் மக்களை விரட்டியடித்தும் அவர்கள் மீது பல்வேறு மிரட்டல்களை விடுத்தும் இரு மக்கள் குழுவினருக்கு இடையில் ஏற்படுத்திய முரண்பாடுகளை கடந்து, அரசாங்கத்தின் தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கான அவர்களின் உத்வேகத்தை காட்டுகின்றது.

அன்றைய தினம் வடக்கு-கிழக்கில் பல பிரதேசங்களில் ஊர்வலங்களும் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன. முல்லைத் தீவு மற்றும் வவுனியாவில் ஊர்வலம் சென்ற ஆயிரக்கணக்கான மக்கள், கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியை மறித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களை வீதியில் இருந்து ஒதுக்குவதற்கு பொலிஸ் எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், அவர்களை வீதியில் இருந்து ஓரங்கட்டும் பொலிஸ்காரன் வேலையைச் செய்தது தமிழ் கூட்டமைப்பு அரசியல்வாதிகளே.

சுன்னாகத்தை வசிப்பிடமாகக் கொண்ட, கண்ணாடிக் கடை ஒன்றில் வேலை செய்யும் இளம் தொழிலாளியான பால்ராஜ், தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டம் செய்தார். “ஹர்த்தாலில் சுன்னாகம் முழுமையாக முடங்கிப் போனாலும், எதிர்ப்புகளுக்கு நிச்சயமான தலைமைத்துவம் ஒன்று கிடையாது. அடுத்து என்ன செய்வது என்று மக்களுக்கு தெரியாது. ஆர்ப்பாட்டத்தின் குறிக்கோள் என்ன என எவரும் விளக்கவும் இல்லை. எல்லா அரசாங்கங்களும் எங்களைத் தாக்குகிறது. எங்களது உரிமைகளை வழங்காமல் நிராகரிக்கின்றன. தமிழ் கூட்டமைப்பு எங்களை ஏமாற்றுகிறது. இளைஞர்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்புகள் இல்லாமையால், அவர்கள் சமூக-விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தள்ளப்படுகின்றனர்.”

வறுமை மற்றும் வேலையின்மை காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது, வடக்கில் உள்ள இளைஞர்கள் மத்தியில் சமூக சீரழிவு அதிகமாக உள்ளது என அவர் கூறினார்.

யுத்தம் முடிவடைந்து எட்டு ஆண்டுகள் கட்ந்துள்ளன. எனினும் வடக்கு-கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. இராணுவம் அந்தப் பிரதேசங்களை இன்னமும் ஆக்கிரமித்திருக்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் போரின் போது இராணுவத்தால் பலாத்காரமாக கைப்பற்றப்பட்ட நிலங்கள் விடுவிக்கபடாமையினால், காணிகளை இழந்துள்ள குடும்பங்களும், 2009ல் யுத்தம் முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக தங்கள் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு கோரி போராட்டம் நடத்தி வந்துள்ளனர். இந்த முறையும் சுமார் இரண்டு மாத காலம் இந்த குடும்ப உறுப்பினர்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் கூட்டமைப்பும், தமிழ் பேரவையும் தமிழ் மக்களை பயனற்ற எதிர்ப்புக்களுக்குள் சிறைவைத்து அவர்களை திசைதிருப்பி விடுவதையே செய்கின்றன.

வேலையில்லா பட்டதாரிகளும், தொண்டர் ஆசிரியர்களும் தெற்கில் நடக்கும் போராட்டங்களோடு இணைந்த அரச ஊழியர்களின் போராட்டங்களும் வடக்கு-கிழக்கிலும் அடிக்கடை இடம்பெறுகின்றன.

தடைகளை கடந்து, தமது கட்டுப்பாட்டுக்கு வெளியில் சென்று இந்த மக்கள் எதிர்ப்பு ஒரு சமூக வெடிப்பை நோக்கி அபிவிருத்தியடையக் கூடும் என்பதையிட்டும் அது வாழ்க்கை நிலைமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீது அரசாங்கம் மேற்கொள்ளும் தாக்குதல்களுக்கு எதிராக அமைதியிழந்திருக்கும் தெற்கு மக்களின் போராட்டத்துடன் ஐக்கியப்படக் கூடும் என்பதையிட்டும் இந்த தலைவர்கள் பீதியடைந்துள்ளனர்.

கடந்த வாரம் புதன் கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் காணிகளை இழந்திருக்கும் குடும்பங்களை சேர்ந்தவர்களும் 50 நாட்களாக மேற்கொள்ளும் போராட்டம் பற்றிய அரசாங்கத்தின் “அலட்சியம்” காரணமாகவே இந்த ஹர்த்தாலை நடத்த நேர்ந்துள்ளது, என்று சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். அரசாங்கம் தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பை அலட்சியம் செய்தால், அது “பாரிய அளைவை” எட்டக் கூடும் என்றும், அத்தகைய ஒரு நிலைமை ஏற்படுவது அரசாங்கத்துக்கு “நல்லது அல்ல” என்றும் அவர் அங்கு கொழும்பு ஆளும் வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தமிழ் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவையும் தமிழ் மக்களின் துன்பங்களைப் பற்றி அக்கறை காட்டவில்லை. தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் வரப்பிரசாதங்களை பற்றியே அக்கறை காட்டுகின்றன. இந்த இரு அமைப்புகளும் ஏகாதிபத்திய சார்பு கட்சிகளாக இருப்பதோடு, சர்வதேச சக்திகளின், விசேடமாக அமெரிக்கா மற்றும் பிராந்தியத்தில் அதன் மூலோபாய அவசியங்களுக்காக முன்னிலை அரசாக செயற்படும் இந்தியாவின் ஒத்துழைப்புடன் தமது சிறப்புரிமைகளுக்காக கொழும்பு அரசாங்கத்துடன் பேரம் பேசுகின்றன.

போரின் போது அரசாங்கத்தின் பாதுகாப்பு படைகளால் பலாத்காரமாக காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் மக்கள் பற்றி இது வரை நிச்சயமான புள்ளி விபரங்கள் முன்வைக்கப்படவில்லை. யுத்தம் முடிவுக்கு வந்த மாதங்களிலேயே அதிகளவானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். கடைசி மாதங்களில் 40,000 பேர் வரை கொல்லப்பட்டதோடு 10,000க்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

பிரச்சினையை மூடி மறைப்பதற்காக, காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர் என்று கடந்த அரசாங்கம் கூறியது. தற்போதைய அரசாங்கமும் அதையே உச்சரிக்கும். தாம் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் 39,000 குடும்பங்களை பிரதிநிதித்துவம் செய்வதாக தமிழ் கட்சிகள் கூறிக்கொள்கின்றன.

போரின் கடைசி வாரங்களில் இராணுவத்திடம் சரண்டைந்த புலி உறுப்பினர்கள் எனப்படுபவர்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கு இராணுவம் தொடர்ந்தும் மறுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய நிச்சயமான தகவல்களை வழங்குவதனாது அரசாங்கத்துக்கும் அதன் இராணுவத்துக்கும் முன்வைக்கப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டை நிரூபிக்கும் பகிரங்க சாட்சியாக இருக்கும் என்பதை அரசாங்கம் அறியும். அதே போல், “இராணுவத்தினரை” உயிரைக் கொடுத்தும் பாதுகாப்பதாக; அதாவது போர்க் குற்றங்களுக்கு பொறுப்புச் சொல்ல வேண்டிய எந்தவொரு சிப்பாய் அல்லது அதிகாரி மீது தண்டனை விதிக்கப் போவதில்லை என இராஜபக்ஷ உட்பட முந்தைய அரசாங்கத் தலைவர்களைப் போலவே, தற்போதைய ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் விக்கிரமசிங்கவும் சபதமெடுத்துக்கொண்டுள்ளனர்.