ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

PES public meeting in Paris calls for active boycott of French elections

பாரிஸில் நடந்த PES பொதுக் கூட்டம் பிரெஞ்சுத் தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது

By our reporters
3 May 2017

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான PES (Parti de l'égalité socialiste - சோசலிச சமத்துவக் கட்சி), பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்க அது விடுத்திருக்கும் அழைப்பை விளக்குவதற்காக, சென்ற ஆண்டில் அது ஸ்தாபிக்கப்பட்டதற்கு பின்னர் அதன் முதன்முதல் பொதுக்கூட்டத்தை மே 1 அன்று பாரிஸில் நடத்தியது. PES இன் தேசிய செயலரான அலெக்ஸ் லான்ரியேர் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) ஜேர்மன் பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) ஒரு முன்னிலை உறுப்பினரான ஜொஹானஸ் ஸ்டேர்ன் ஆகியோர் உரையாற்றினர்.

பாரிஸில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், இளைஞர்களில் இருந்து ஒரு பெரும் குழுவினர் மற்றும் உலக சோசலிச வலைத் தளம் மூலமாகவோ அல்லது தலைநகரில் மே தினப் பேரணியின் போது PES பிரச்சார குழுவினருடன் பேசியதன் மூலமோ இக்கூட்டம் குறித்து அறிந்தவர்கள் ஆகியோர் உள்ளிட 60க்கும் மேற்பட்டோர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்குபெற்றனர். PES பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் மார்சைய், அமியான், அல்சாஸ், பிரிட்டானி மற்றும் பேர்கண்டி ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்தனர்.

பாரிஸ் கூட்டத்தின் ஒரு பகுதியினர்

ஒரு செயலூக்கமான புறக்கணிப்பின் அரசியல் முக்கியத்துவத்தையும், நவ-பாசிச வேட்பாளரான மரின் லு பென் உடன் ஒப்பிட்டால் பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியால் ஆதரிக்கப்படுகின்ற வங்கியாளர் இமானுவல் மக்ரோன் ஒரு “குறைந்த தீமையாக” கருதப்பட்டு ஆதரிக்கப்பட வேண்டும் என்ற கூற்றை PES ஏன் நிராகரிக்கிறது என்பதையும் லான்ரியேர் விளக்கினார்.

மக்ரோன் அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் ஒரு கூட்டாளியாக இருக்கிறார், சிரியா, வட கொரியா மற்றும் அணு ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு எதிரான அவற்றின் போர் முனைப்பை ஆதரிக்கிறார், அத்துடன் கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவதற்கு வாக்குறுதியளித்திருக்கிறார். ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் ஆழமாய் மக்கள்வெறுப்பை சம்பாதித்த PS அரசாங்கத்தில் ஒரு அமைச்சராக இருந்து மக்ரோன், பிரான்ஸ் சர்வாதிகார அவசரகாலநிலையை திணித்ததை ஆதரித்தார், பத்துபில்லியன் யூரோ கணக்கிலான சமூக வெட்டுகளை திணித்த அதேநேரத்தில் தொழிலாளர் சட்டத்தை “சீர்திருத்துவதற்கு”ம் தொழிலாளர்களது’ உரிமைகளுக்கு குழிபறிப்பதற்கும் சட்டம் கொண்டுவருவதில் உதவினார் பிரான்சை ஒரு எதேச்சாதிகார ஆட்சியாக மாற்றும் PS இன் கொள்கையில் அவர் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தார் என்பதை லான்ரியேர் குறிப்பிட்டுக் காட்டினார்.

இரண்டு வேட்பாளர்களுமே தொழிலாள வர்க்கத்திற்கு உயிர்வாழ்க்கை அச்சுறுத்தலை முன்நிறுத்துகின்றதொரு சமயத்தில், புரட்சிகரப் பாதை மட்டுமே முன்னிருக்கிற ஒரே வழியாகும் என்பதை லான்ரியேர் விளக்கினார். அடிபணியா பிரான்ஸ் இயக்க வேட்பாளரான ஜோன்-லூக் மெலோன்சோன் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சிக்கவைக்கும் பொறியை அமைத்துக் கொண்டிருக்கிறார். பிரெஞ்சு வாக்காளர்களில் 10 இல் ஏழு பேர் போலவே UF வாக்காளர்களும் மக்ரோனை எதிர்க்கின்றனர். தான் மதிப்பிழந்து போவதை தவிர்ப்பதற்காக மக்ரோனை பகிரங்கமாக வழிமொழிய மறுத்தாலும், மெலோன்சோன், ஒரு கையாலாகாத வெற்று வாக்கு அல்லது மக்ரோனுக்கு வாக்கு என்ற முன்னோக்கை மட்டுமே வழங்குகிறார். மக்ரோன் பிரதமர் பதவி அளித்தால் தான் ஏற்கக் கூடும் என்று இப்போது கூறியிருக்கும் அவர், அதன்மூலம் மக்ரோனின் போர்க் கொள்கையை மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

சோசலிச சமத்துவக் கட்சியின் இந்த கூட்டமானது, 1971 இல் பியர் லம்பேரின் OCI (சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பு) ICFI உடன் முறித்துக் கொண்டதற்கு பின்னர், ICFI இன் பிரெஞ்சு பிரிவு ஒன்றினால் நடத்தப்படுகின்ற முதலாவது பொது நிகழ்வாகும். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) மற்றும் புதிதாய் உருவாக்கப்பட்டிருந்த சோசலிஸ்ட் கட்சி (PS) ஆகியவற்றுடன் இடதுகளின் ஐக்கியத்திற்கான கூட்டு ஒன்றை உருவாக்கும் ஒரு தேசியவாத முன்னோக்கின் அடிப்படையில் OCI அப்போது ட்ரொட்ஸ்கிசத்துடன் முறித்துக் கொண்டதாக லான்ரியேர் குறிப்பிட்டார். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் அரசாங்கத்திற்கான பிரதான “இடது” கட்சியாக PS ஐ கட்டியெழுப்புவதில் OCI ஒரு இன்றியமையாத பாத்திரம் வகித்திருந்தது.

நாற்பத்தியாறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் போலிஸ்-அரசு ஆட்சி ஆகிய செயற்பாட்டினால் மதிப்பிழந்தும், ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் PS வெளியேற்றப்பட்டதினாலும் PS ஒரு மரண நெருக்கடியில் இருக்கிறது. ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கான அழைப்பிற்கும், தொழிலாள வர்க்கத்தில் புரட்சிகரப் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்கும், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் இடது-சாரி அரசியல் என்பதனை முழுமையான அரசியல் மறுமதிப்பீட்டிற்கு உட்படுத்துவதும் ட்ரொட்ஸ்கிசத்திற்கான ICFI இன் கோட்பாடுமிக்க மற்றும் சமரசமற்ற போராட்டத்திற்குத் திரும்புவதும் அவசியமாய் இருப்பதாக லான்ரியேர் வலியுறுத்தினார். கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் PESக்கு ஆதரவளிக்கவும் அதனுடன் கரம்கோர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார்.

ஸ்டேர்ன் பேசுகையில், அத்தனை ஜனாதிபதி வேட்பாளர்களிலும் மக்ரோன் தான், பேர்லினுடன் ஒத்துழைத்து ஐரோப்பிய ஒன்றியத்தை இராணுவமயமாக்குவதற்கு மிக உத்வேகத்துடன் அறிவுறுத்தி வந்திருக்கிறார் என்பதை விளக்கி, மக்ரோனுக்கு ஆதரவளிப்பதற்கு ICFI காட்டும் எதிர்ப்பினை வலியுறுத்தினார். மக்ரோன் ஆதரிக்கும் ஐரோப்பிய மீள்-இராணுவமயமாக்கத்தின் குறிப்பாக ஜேர்மன் மீள்-இராணுவமயமாக்கத்தின் திட்டநிரலானது, ஜேர்மன் கல்வியறிஞர்களது கூறுகள் இருபதாம் நூற்றாண்டில் ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் வரலாற்றை மாற்றி எழுதுவதையும் இன்னும் மேலேபோய் நாஜிக்கள் மற்றும் ஹிட்லரது குற்றங்களையும் கூட தணித்துக் காட்டுவதிலும் இறங்கியிருப்பது சம்பந்தப்பட்டதாயும் இருக்கிறது.

இந்த உரைகளுக்குப் பின்னர் ஒரு உயிரோட்டமான விவாதம் நடைபெற்றது, பார்வையாளர்களில் இருந்து பல கேள்விகள் வந்தன, PES அங்கத்தவர்கள் பங்களிப்பு செய்தனர்.

லு பென் வெற்றி என்பது இப்போது ஒரு சாத்தியமாகி விட்டிருக்கக் கூடிய நிலைமையில், தேர்தலை புறக்கணிப்பதற்கு அழைப்பதென்பது அனுமதிக்கத்தக்கது தானா? என பார்வையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். 1972 இல் FN ஸ்தாபிக்கப்பட்டது முதலாக அதன் வளர்ச்சியின் வரலாற்றை திறனாய்வு செய்த லான்ரியேர், மக்ரோனது ஜனாதிபதிக் காலம் முன்நிறுத்துகின்ற அபாயங்களைக் கொண்டு பார்த்தால் ஒரு செயலூக்கமான புறக்கணிப்பு என்பது சரியானதொரு கொள்கை மட்டுமல்ல, அது மட்டுமே FN இன் எழுச்சியை தடுத்து நிறுத்தத்தக்க ஒரேயொரு கொள்கையும் ஆகும் என விளக்கினார். PS க்கு இடதின்பக்கமிருந்து வந்திருந்த எதிர்ப்பை, PCF மற்றும் OCI போன்ற PS இன் கூட்டாளிகள் தடுத்துநிறுத்தியதால் தான், FN தனது வாய்வீச்சைக் கொண்டு எதிர்க்கட்சியாக தன்னை காட்டி ஆதரவைத் திரட்ட முடிந்திருந்தது.

ஒரு செயலூக்கமான புறக்கணிப்பு என்பது என்ன, வெறுமனே வாக்களிக்காமல் இருப்பது மட்டும் தானா? என்று இன்னொரு பார்வையாளர் கேட்டார். இரண்டு வேட்பாளர்களுக்கும் எதிரான மிகப் பரந்த ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் PESம் ICFIம் ஊக்குவிக்கின்றன என்பதை உரையாற்றியவர்கள் விளக்கினர். அந்த வேட்பாளர்களின் மற்றும் அவர்களது அரசியல் கூட்டாளிகளின் பிற்போக்கான தன்மையை அம்பலப்படுத்துவதும், மே 7 சுற்றில் எந்த வேட்பாளர் வெல்கின்றபோதும் அவருக்கு எதிரான புரட்சிகரப் போராட்டத்திற்கு தொழிலாளர்களை தயாரிப்பு செய்வதற்கு போராடுவதும் அவசியமாய் இருக்கிறது. பொதுக்கூட்டமும் PES ஐ தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர முன்னணிப்படையாக கட்டியெழுப்புவதும் செயலூக்கமான புறக்கணிப்பு பிரச்சாரத்தின் இன்றியமையாத கூறுகளாய் இருப்பதை அவர்கள் சேர்த்துக் கொண்டனர்.

அமெரிக்காவுக்கு எதிராக ஒரு ஏகாதிபத்தியவாத பிரான்ஸ்-ஜேர்மனி கூட்டணியின் சாத்தியம் குறித்துக் கேட்டபோது, உரையாற்றியவர்கள் நேட்டோவுக்குள் நிலவுகின்ற ஆழமான ஏகாதிபத்தியங்களுக்கு-இடையிலான மோதல்களைச் சுட்டிக்காட்டினர். ஆயினும், தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற கடமையானது, அத்தகையதொரு போரைத் தூண்டக்கூடியதாக இருக்கின்ற குறிப்பிட்ட, ஸ்திரமில்லாத இராஜதந்திர அணிச்சேர்க்கைகள் குறித்து ஆருடம் கூறுவதல்ல, மாறாக போர் வெடிப்பதற்கு முன்பாக அதனைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு தலையீடு செய்வதாகும். புரட்சிகர முன்னணிப் படையின் பணி, “போர் வரைபடத்தைப் பின்பற்றிச் செல்வதல்ல, மாறாக வர்க்கப் போராட்டத்தின் வரைபடத்தை பின்பற்றிச் செல்வதாகும்” என்ற ட்ரொட்ஸ்கியின் கருத்தை அவர்கள் மேற்கோள் காட்டினர்.

PES இன் முன்னணி உறுப்பினரான வி.ஞானா, தமிழ் தொழிலாளர்களின் ஒரு காரியாளர் படையை அபிவிருத்தி செய்வதிலும் PES ஐ கட்டியெழுப்புவதிலும் ICFI இன் பாத்திரம் குறித்து பேசினார். லங்கா சமஜமாஜ கட்சியின் (LSSP) இன் மாபெரும் காட்டிக்கொடுப்புக்கு எதிராக ICFI போராடியது. பப்லோயிசத்திற்கு அது சரணடைந்ததும் பின்னர் 1964 இல் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்திற்குள் நுழைந்ததும் இறுதியில் இலங்கையில் இருந்த தொழிலாளர்களை சிங்கள மற்றும் தமிழ் தொழிலாளர்களாக பிரிவடைய செய்தது. இப்போது, பல தசாப்த காலமாக ICFI நடத்திய ஒரு போராட்டமானது ஒரு பிரெஞ்சு பிரிவு ஸ்தாபிக்கப்பட இட்டுச் சென்றுள்ளதோடு, பிரான்சில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்களை பிரதிநிதித்துவம் செய்யக் கூடிய ஒரு கட்சியை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

பார்வையாளர்களில் பலரும் கூட்டம் முடிந்த பின்னரும் கூட இருந்து அரசியல் சூழ்நிலை, மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கம் குறித்து விவாதித்தனர். PES இன் ஸ்தாபக அறிக்கை மற்றும் 2017 தேர்தல்கள் குறித்த அதன் அறிக்கை ஆகியவற்றின் பல பிரதிகள் விற்பனையாயின. அங்கே கணிசமான தொகை நிதியுதவியும் திரட்டப்பட்டது. பார்வையாளர்கள் பலரும் PES உடன் தொடர்ந்து அரசியல் தொடர்பில் இருப்பதற்கு அல்லது கட்சியில் இணைய விண்ணப்பிப்பதற்கு முடிவெடுத்தனர்.