ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In online poll, Mélenchon supporters reject both candidates in French runoff election

இணையக் கருத்துக்கணிப்பில், பிரெஞ்சு தேர்தல் இறுதிச் சுற்றில் இரண்டு வேட்பாளர்களையுமே மெலோன்சோனின் ஆதரவாளர்கள் நிராகரிக்கின்றனர்

By Alex Lantier
3 May 2017

இந்த வாரம் நடத்தப்பட்ட ஒரு இணையக் கருத்துக்கணிப்பில், அடிபணியா பிரான்ஸ் (UF) இயக்கத்தின் அங்கத்தவர்கள் பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலின் இறுதிச் சுற்றில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதை நிராகரித்தனர். முன்னாள் ரோத்ஸ்சைல்ட் வங்கியாளர் இமானுவல் மக்ரோன் மற்றும் நவ-பாசிஸ்ட் மரின் லு பென் ஆகியோர் தான் அந்த இரு வேட்பாளர்களாவர்.

இந்த வாக்களிப்பானது UF இன் தோல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளரான ஜோன்-லூக் மெலோன்சோன் எடுத்த நிலைப்பாட்டின் —இவர் மக்ரோனுக்கு தனது அரசியல் ஒருமைப்பாட்டை வலியுறுத்தியிருந்ததோடு அவரது பிரதமராவதற்கும் கூட முன்மொழிந்தார்— ஒரு மறைமுகமான மறுதலிப்பாக இருந்தது. பிரான்சின் பிரதான அரசியல் கட்சிகள் வரலாற்றுப்பெரும் நிலைகுலைவை சந்தித்துள்ள நிலையில் தேர்தலின் முதல் சுற்றில் மெலோன்சோன் கிட்டத்தட்ட 20 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார்.

UF ஆல் நடத்தப்பட்ட கலந்தாலோசனை வாக்களிப்பில், பிரான்சின் ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் விருப்பமானவராக இருக்கும் மக்ரோனுக்கு வாக்களிப்பதற்கு ஆதரவாக வெறும் 34.83 சதவீத அங்கத்தவர்களே ஆலோசனையளித்தனர். ஒரு வெற்று வாக்கிற்கான அழைப்புகள் 36.12 சதவீத வாக்குகளைப் பெற்றன, கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பதற்கு 29.05 சதவீத வாக்குகள் கிடைத்தன. UF இன் 440,000 அங்கத்தவர்களில் சுமார் 200,000 பேர் பங்குபெற்ற இந்த வாக்கெடுப்பில், இரண்டாம் சுற்றில் மக்ரோனின் எதிராளியான நவ-பாசிச தேசிய முன்னணியை (FN) சேர்ந்த மரின் லு பென்னுக்கு வாக்களிப்பது ஒரு தெரிவாக அளிக்கப்படவில்லை என்று UF சுட்டிக்காட்டியிருந்தது.

இந்த இணையவழி வாக்களிப்பானது, இரண்டு பிற்போக்கு வேட்பாளர்களுக்கும் எதிராக, இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு PES (Parti de l’égalité socialiste) விடுத்த அழைப்பின் அரசியல் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அடுத்த ஜனாதிபதிக்கு தொழிலாள வர்க்கத்தில் இருந்து எழக்கூடிய எதிர்ப்பை தடுத்து நிறுத்த முனைவதில் மெலோன்சோன் வகிக்கின்ற ஆபத்தான பாத்திரத்தையும் இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தொழிலாளர்களும் இளைஞர்களும் மெலோன்சோனின் மீது சிறிதும் நம்பிக்கை வைக்க இயலாது என்பதை PES வலியுறுத்துகிறது. வேலைநிறுத்தங்களும் போராட்டங்களும், அவரது அமைப்பில் இருந்து சுயாதீனப்பட்டும், அடுத்த தேர்தலில் எந்த பிற்போக்கு வேட்பாளர் ஜெயித்தாலும் அவருக்கெதிரான புரட்சிகரப் போராட்டத்தை மேற்கொள்வதற்கான ஒரு முன்னோக்கின் அடிப்படையிலும், ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

சென்ற வெள்ளிக்கிழமையன்று பேசிய மெலோன்சோன், அவர் வாக்களிக்கச் செல்லவிருப்பதாக கூறிய அதேசமயத்தில், யாருக்கு வாக்களிக்கவிருக்கிறார் என்பதை சொல்ல மறுத்து விட்டார். இறுதிச் சுற்றில் UF இன் அங்கத்தவர்களும் வாக்காளர்களும் எவ்வாறு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கருதுகிறார் என்பதைக் கூட கூற மறுத்து, எந்த அரசியல் வழிகாட்டலையும் கூட வழங்காது விட்டிருந்தார். இதன்மூலம் லு பென்னுடன் ஒப்பிடுகையில் ஒரு “குறைந்த தீமை”யாகக் கருதி மக்ரோனை வாக்காளர்கள் தெரிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்ற PS, வலதுசாரி குடியரசுக் கட்சி மற்றும் பிரதான செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சானல்கள் ஆகியவற்றின் மூலமான அரசியல் மற்றும் ஊடகப் பிரச்சாரத்தின் பின்னால் அவர் தன்னை நிறுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்தப் பிரச்சாரம் ஒரு அரசியல் மோசடியாகும். லு பென்னுடன் ஒப்பிடுகையில் மக்ரோன் ஒரு “குறைந்த தீமை” அல்ல. நவ-பாசிச வேட்பாளர் தொழிலாளர்களுக்கு ஒரு உயிர்வாழ்க்கை அபாயத்தை முன்நிறுத்துகிறார் என்பதில் சந்தேகமில்லை தான், ஆயினும் மக்ரோனும் அதே அபாயத்தையே முன்நிறுத்துகிறார். PS ஆல் திணிக்கப்பட்ட அவசரகால நிலையை தொடர்ந்து பராமரிக்க விரும்புவதாக அவர் கூறுகிறார், கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டு வருவது, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை மீண்டும் இராணுவமயமாக்குவது, அத்துடன் PS இன் பிற்போக்கான தொழிலாளர் சட்டத்தை பயன்படுத்தி உத்தரவுகள் மூலமாக தொழிலாளர்-விரோத நடவடிக்கைகளை திணிப்பது ஆகியவற்றுக்கு எழுகின்ற எதிர்ப்பினை நசுக்குவதற்கு இதனைப் பயன்படுத்துவதற்கு அவர் நோக்கம் கொண்டுள்ளார்.

பெரும் போர்களுக்கு தயாரிப்பு செய்வதற்கும் பிரான்ஸிலும் மற்றும் ஐரோப்பாவிலும் 20 ஆம் நூற்றாண்டின் போது பல தலைமுறை போராட்டங்கள் மூலமாக தொழிலாளர்கள் வென்றெடுத்த சமூக உரிமைகளை அழிப்பதற்காகவும் ஒரு நீடித்த எதேச்சாதிகார ஆட்சியைத் திணிப்பதற்காக ஒட்டுமொத்த பிரெஞ்சு ஆளும் வர்க்கமும் செய்கின்ற முயற்சியே இப்போது மேலெழுந்து கொண்டிருப்பதாகும்.

இது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே ஆழமான எதிர்ப்பைத் தூண்டிக் கொண்டிருக்கிறது, ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கும், முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை புரட்சிகரமாக அணிதிரட்டுவதற்கான வேலைநிறுத்தங்கள் மற்றும் தொழிலாளர் போராட்டங்களுக்கும் PES அழைப்பு விடுக்கிறது.

மெலோன்சோன் இணையம் மூலமான தனது தேர்தல் பிரச்சாரத்தின் ஊடாக  அணிதிரட்டப்பட்ட சக்திகளில் மிகப்பெரும்பான்மையினரை மார்சைய், துலூஸ், மற்றும் பாரிஸின் தொழிலாள வர்க்கம் செறிந்த சென் செண்ட். டெனிஸ் புறநகர்ப் பகுதிகள் ஆகியவை உள்ளிட பல நகர்ப்புற மற்றும் தொழிலாள வர்க்க மையங்களில் இருந்து அவரால் வெற்றி கொள்ளக்கூடியதாக இருந்தது. இவர்கள் மக்ரோனுக்கு விரோதம் காட்டுகின்றனர். அவர்கள் தங்கள் வாக்குகளை FN க்கோ அல்லது ஜேர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு ஆழமான சிக்கன நடவடிக்கைகளை திணிக்க நோக்கம் கொண்ட ஒரு இராணுவவாத வேட்பாளருக்கோ வழங்க விரும்பவில்லை. இரண்டாம் சுற்றில் ஜெயிப்பது யாராயிருந்தாலும், ஜெயிப்பவர் உழைக்கும் மக்களின் ஒரு தீர்மானகரமான எதிரியாக நிரூபணமாவார் என்பதை பிரெஞ்சு மக்களின் ஒரு பரந்த பெரும்பான்மையினரைப் போல (69 சதவீதத்தினர்) இவர்களும் புரிந்து கொள்கின்றனர்.

இயன்ற அளவுக்கு அதிகமான பிரமைகளை விதைப்பதும், பிரான்சிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களும் இளைஞர்களும் முகம்கொடுக்கின்ற போர் மற்றும் சர்வாதிகாரத்தின் அபாயங்கள் குறித்து விழிப்புணர்வு பெருகிச் செல்வதை தடுப்பதுமே மெலன்சோனின் பாத்திரமாகும். ஜேர்மனி மற்றும் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றின் கூட்டாளியான மக்ரோன் சிரியாவில் ஒரு போரில் கைகோர்ப்பதன் மூலம் நேட்டோ கூட்டணியை ரஷ்யாவுடனான ஒரு இராணுவ மோதலுக்குள் இழுக்கக் கூடும் என்ற அபாயம் குறித்து அவர் வாய்திறப்பதில்லை. வடகொரியாவுடன் அமெரிக்காவின் பெருகும் மோதல் குறித்தும் —இதன்மூலம் ட்ரம்ப் சீனாவைக் குறிவைத்துக் கொண்டிருக்கிறார்— அவர் எதுவும் கூறுவதில்லை.

UF இன் அநேக ஆதரவாளர்கள் மக்ரோனுக்கு வாக்களிப்பதை எதிர்க்கின்றனர் என்பதே உண்மையாக இருக்கின்ற போதிலும், மெலோன்சோன், இரண்டு பிற்போக்கு வேட்பாளர்களுக்கும் எதிரான எதிர்ப்பை, மக்ரோனுடனான ஒரு சட்டமன்ற மற்றும் அரசாங்கரீதியான கூட்டணி என்னும் அரசியல் தளைக்குள் சிக்கவைப்பதற்காக வேலைசெய்து கொண்டிருக்கிறார். இதுவே ஞாயிறன்று மாலை TF1 நேர்காணலின் சமயத்தில் மெலோன்சோன் சுட்டிக்காட்டிய முன்னோக்கு ஆகும், அந்த நேர்காணலில் அவர் மக்ரோனுக்கு ஆலோசகராக வேலை செய்ய முன்வந்தார் என்பதோடு அவரது பிரதமராக தயாராக இருப்பதாகவும் கூட அறிவித்தார்.

மக்ரோனின் இராணுவவாத மற்றும் எதேச்சாதிகார வேலைத்திட்டம் லு பென்னின் வேலைத்திட்டத்தில் இருந்து அடிப்படையாக மாறுபட்டதாகும் என்பதை வலியுறுத்துவதுடன் அவர் தொடங்கினார். “நான் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் நான் கூறுகிறேன்: தேசிய முன்னணிக்கு வாக்களிக்கும் படுபயங்கரமான தவறைச் செய்யாதீர்கள். ஏனென்றால் நீங்கள் நமது நாட்டை முடிவு தெரியாத ஒரு முழு-வீச்சிலான வெடிப்புக்குள் தள்ளிக் கொண்டிருப்பீர்கள், ஏனென்றால் அது நம்மை நாளுக்கு அடுத்து நாளாக ஒரு வகையான போருக்குள் தள்ளும்” என்று அறிவித்தார் அவர்.

அதன் பின் மக்ரோனின் கீழ் பிரதமராகும் சாத்தியத்திற்கு தன்னை முன்நிறுத்திய அவர், ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் “நாம் பெரும்பான்மை பெற்றால் இந்த நாட்டை ஆட்சிசெய்வதற்கு” தான் தயாராய் இருப்பதாய் அறிவித்தார்.

“இமானுவல் மக்ரோன் ஜனாதிபதியாகும் பட்சத்தில் அவருடனான ஒரு கூட்டணி அரசாங்கத்தில் பிரதமராக ஆவதற்கு” அவரால் முடியுமா? என்று கேட்கப்பட்டதற்கு மெலோன்சோன் பதிலளித்தார்: “அவர் இந்த யோசனைக்கு பழக வேண்டியிருக்கும்... என்னைப் பொறுத்தவரை, இங்கிருந்து கிளம்பும் முன்பாக அவருக்கு சில அறிவுரைகள் வழங்க விரும்புகிறேன், ஏனென்றால் இந்த பிரச்சாரத்தில் நானும் சிறிது உதவி செய்ய வேண்டியதாய் இருக்கிறது. எனது நண்பர்களின் கைகளை முறுக்கி அவர்களை மிரட்டுவதை விட, ஏன் அவர்களை வென்றெடுப்பதற்கான ஒரு சிறு சமிக்கையை அவர் மேற்கொள்ளக் கூடாது?”

மக்ரோன் வெளியுறவுத்துறை மற்றும் இராணுவக் கொள்கையை கையில் கொண்டிருக்கக் கூடியதான ஒரு அரசாங்கத்தில் தான் பங்கேற்கக்கூடும் என்று மெலோன்சோன் அறிவித்திருப்பதானது அவரது பிரச்சார வாக்குறுதிகளின் வெற்றுத்தனத்தையே அம்பலப்படுத்துகிறது. கட்டாய இராணுவ சேவையை மீண்டும் கொண்டுவருவது, பிரான்சின் அணுக்கிடங்கை நவீனப்படுத்தி இராணுவ சேவைகளை வலுப்படுத்துவது ஆகியவற்றுக்கு பத்து பில்லியன்கணக்கான யூரோக்கள் செலவிடுவதுடன் இணைந்த ஒரு மிருகத்தனமான சிக்கன நடவடிக்கை கொள்கைக்கு மக்ரோன் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார். அத்தகையதொரு ஜனாதிபதியின் கீழ் வேலைபார்க்கின்ற ஒரு பிரதமருக்கு, மெலோன்சோன் தனது வேலைத்திட்டத்தில் வாக்குறுதியளித்திருக்கும் சமூக நடவடிக்கைகளின் ஒரு சிறு துணுக்கினைக் கூட முன்னெடுப்பதற்கு தேவையான எந்த ஆதாரவளங்களும் இருக்கப் போவதில்லை.

மேலும், இந்த ஆலோசனைவைப்பானது, நேட்டோ தொடக்கிய சில போர்களுக்கு, குறிப்பாக ரஷ்யாவுடனான முழுவீச்சிலான போராக தீவிரப்படும் அபாயத்தை முன்நிறுத்தும் சிரியாவிலான போர் போன்றவற்றுக்கு எதிர்ப்பு காட்டுவதான மெலோன்சோனின் நடிப்பை அம்பலப்படுத்துகிறது. அமெரிக்கா மற்றும் ஜேர்மனி ஆகியவற்றில் இருந்து சுயாதீனமானவராக அவர் அறிவித்ததையும் இது அம்பலப்படுத்துகிறது. ஏகாதிபத்தியத்திற்கும் முதலாளித்துவத்திற்கும் ஒரு புரட்சிகர மாற்றீடை வழங்காமல், தொழிலாள வர்க்கத்திலும் இளைஞர்களிலும் போருக்கு எதிராய் நிலவும் பரந்த எதிர்ப்பை, தேர்தல் ஆதாயத்திற்காக சுரண்டிக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டிருக்கின்ற வெறுமனே ஒரு நடிப்பாக மட்டுமே இது இருக்கிறது.

தனக்கு “குடியரசுக் கட்சியினருடன் எந்த சம்பந்தமுமில்லை, சோசலிஸ்ட் கட்சியுடனும் எந்த சம்பந்தமுமில்லை” என்று அறிவித்த மெலோன்சோன், பிரான்சின் இந்த இரண்டு பாரம்பரியமான பெரு-வணிகக் கட்சிகளால் ஆதரிக்கப்படுகின்ற வேட்பாளரான, மக்ரோனுக்கு அரசியல் சமிக்கைகள் அனுப்புவதற்கே தனது நேர்காணலின் பெரும்பகுதியை செலவிட்டார்.

UF அங்கத்தவர்களை வெற்றி காண்பதற்கான அறிவுரையையும் கூட மக்ரோனுக்கு அவர் வழங்கினார்: “நான் ஏற்பாடு செய்த கலந்தாலோசனை வாக்களிப்பு குறித்து திரு.மக்ரோன் முகச்சுளிப்பு காட்டுவது தவறு என்றே அவருக்கு நான் கூறுவேன். ஏனென்றால் நான் அதை ஒழுங்கமைத்த உடனேயே அவர், அவர்களை சமாதானம் செய்ய முயற்சி செய்வதற்குப் பதிலாக, மிரட்டலின் கீழ் பலவந்தப்படுத்த, குறிப்பாக என்னை அவமதிப்பதன் மூலமாக —இது எனது வாக்காளர்களை வென்றெடுப்பதில் அவருக்கு உதவி செய்யவில்லை— முயற்சி செய்தார், இரண்டாவதாய் அவர்களை ஏதோ பொறுப்பில்லாதவர்களின் ஒரு குழுவைப் போல நிராகரிப்பதற்கும் அவர் முயற்சி செய்தார்.”

UF அங்கத்தவர்கள் மற்றும் மெலோன்சோனின் வாக்காளர்களில் மிகப் பெரும்பான்மையானோர் மெலோன்சோனுக்கு வெகுதூரம் இடதுபக்கம் இருக்கின்றனர், அவர் பிரதிநிதித்துவம் செய்கின்ற அரசியல் நிலைப்பாட்டுக்கான ஒரு மாற்றினை அவர்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த தொழிலாள வர்க்கத்தையும் போலவே, இவர்களும் ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கான அழைப்பிலும் PES ஆல் முன்வைக்கப்படுகின்ற தொழிலாள வர்க்கத்தின் ஒரு புரட்சிகர மற்றும் சர்வதேசிய போராட்டம் என்ற முன்னோக்கிலுமே அந்த மாற்றினைக் காண்பார்கள்.