ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US warns of “catastrophic consequences” if North Korea is not brought to heel

வட கொரியாவை அடிபணிய செய்யவில்லையானால் “பேரழிவுகரமான விளைவுகள்” நிகழுமென அமெரிக்கா எச்சரிக்கிறது

By Peter Symonds
29 April 2017

நேற்று ஐ.நா. பாதுகாப்பு குழுவில் அமெரிக்க வெளியுறவு செயலர் றெக்ஸ் ரில்லர்சன் ஆற்றிய உரையில், அமெரிக்காவின் கடுமையான விதிகளுக்கு உட்பட்டு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொள்வதற்கு வட கொரியாவை வலியுறுத்த உறுப்பு நாடுகள் துரிதமான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லையானால் “பேரழிவுகரமான விளைவுகள்” நிகழக்கூடுமென எச்சரித்தார்.

“அனைத்து வாய்ப்புக்களும்” தயாராகவுள்ளதாக ரில்லர்சன் மீண்டும் வலியுறுத்தியதுடன், “தேவைப்பட்டால் வட கொரிய ஆக்கிரமிப்பை இராணுவ நடவடிக்கை மூலமாக எதிர்கொள்ளும் ஒரு விருப்பத்துடன், அதற்கு ஆதரவாக  இராஜதந்திர மற்றும் நிதி ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றும் தெரிவித்தார்.

உள்ளூர் நேரத்தின்படி சனிக்கிழமை அதிகாலையில் வட கொரியா நடத்திய ஒரு நடுத்தர அளவிலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியடைந்ததாக கூறப்பட்டதென அவர் குறிப்பிட்டார்.

கொரிய தீபகற்பத்தின் மீதான ட்ரம்ப் நிர்வாகத்தின் போரில் ஈடுபடா இராஜந்திரம் மோதலுக்கான கடுமையான அபாயத்தை உருவாக்கியுள்ளது என்பதை ரில்லர்சனின் கருத்துக்கள் கோடிட்டுக் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்கா ஒரு உடனடி போர் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி வருவதானது, உலகத்தையே வளைக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒரு பூகோள அளவிலான அணுஆயுத பேரழிவிற்கு அதிவிரைவாக தீவிரப்படுத்தக்கூடும், அதிலும் குறிப்பாக அதன் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்காக வட கொரியா மற்றும் சீனாவுடன் போரை நிகழசெய்யும் வாய்ப்புள்ளது.

வட கொரியாவிற்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு குழு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டியதன் அவசியத்தைப் பற்றியே அமெரிக்க பாதுகாப்பு செயலர் அவரது உரை முழுமையிலும் திரும்ப திரும்ப வலியுறுத்தினார். “நீண்ட காலமாகவே, சர்வதேச சமூகம் வட கொரியா குறித்து எதிர்வினையாற்றி வருகிறது. அந்த நாட்கள் முடிவுக்கு வரவேண்டும்” எனவும் அறிவித்தார். “உலகில் நிலவுகின்ற மிக அழுத்தமான பாதுகாப்பு பிரச்சனையில் தற்போது நடவடிக்கை எடுக்க தவறுவதானது பேரழிவுகரமான விளைவுகளை கொண்டுவரக்கூடும்” என்றும் எச்சரித்தார்.

அமெரிக்கா வடகிழக்கு ஆசிய பகுதியில் அதன் இராணுவ கட்டமைப்பின் மூலம் வட கொரியா, சீனா ஆகிய இரு நாடுகளுக்குமே பெரும் அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. அமெரிக்க-தென் கொரிய கூட்டு போர்ப் பயிற்சிகள் தொடரப்படுவதுடன், தற்போது கொரிய தீபகற்பத்திற்கு அருகே தென் கொரிய மற்றும் ஜப்பானிய போர் கப்பல்களுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்க அணுஆயுத நீர்மூழ்கி கப்பலான USS கார்ல் வின்சனின் தலைமையிலான ஒரு விமானந்தாங்கி கப்பல் தாக்குதல் குழுவினையும் பென்டகன் அனுப்பிவைத்துள்ளது.

அந்த சூழலில், “அமெரிக்கா இந்த பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமாக ஒரு தீர்வை அடைவதற்கே முன்னுரிமை அளிப்பதாகவும்,” பியோங்யாங் உடனான எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் விதிமுறைகளை வகுத்துவிட்டதாகவும் ரில்லர்சன் அறிவித்தார். மேலும், “நாங்கள் பேச்சுவார்த்தைகளை கருத்தில் கொள்வதற்கு முன்பாக, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை நோக்கிய தனது சட்டவிரோத ஆயுத திட்டங்களுடனான அச்சுறுத்தலை குறைக்க வட கொரியா உறுதியான நடவடிக்கைகளை கண்டிப்பாக எடுக்கவேண்டும்” என்றும் தெரிவித்தார்.

கூட்டத்தின் முடிவில், ரில்லர்சன் நிலைமைகளைப் பற்றி பின்வருமாறு மீண்டும் விளக்கினார்: “பேச்சுவார்த்தைகள் மூலம் அவர்களுடைய மோசமான நடத்தைக்கு நாங்கள் வெகுமதியளிக்கப் போவதில்லை. பாதுகாப்புக் குழுவின் தீர்மானங்களுக்கு இணக்கமாக செயல்படுவதிலும், அவர்களது கடந்த கால வாக்குறுதிகளின் பேரில் அவர்களது அணுஆயுத திட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதிலும், ஒரு நல்ல விசுவாசத்துடனான உறுதிப்பாட்டை அவர்கள் காட்டும் பட்சத்தில்தான் வட கொரியா உடனான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் ஈடுபடுவோம்.”

வட கொரியாவின் அணுஆயுத வசதிகளைத் தடுத்து, இறுதியாக அவைகளை இல்லாதொழிப்பது, மற்றும் மிகவும் ஊடுருவக்கூடிய ஐ.நா. ஆய்வுகள் போன்றவை வட கொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். வாஷிங்டன் “பேச்சுவார்த்தைகளை நடத்த ஆலோசிப்பதற்கு” முன்பாக பியோங்யாங் எந்த மாதிரியான “உறுதியான நடவடிக்கைகளை” எடுக்கவேண்டுமென ரில்லர்சன் சுட்டிக்காட்டவில்லை.

முழு உரையும் பாசாங்குத்தனம் கொண்டதாகவே இருந்தது. முந்தைய இரண்டு சந்தர்ப்பங்களான, 1994 மற்றும் 2007 இல், வட கொரியா மேற்குறிப்பிட்ட அனைத்து விதிமுறைகளையும் ஒப்புக்கொண்டதுடன், பேரம்பேசலில் தன் பக்கத்தை கடைப்பிடிக்கத் தவறிய அமெரிக்காவால் நிர்மூலமாக்கப்பட்ட ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு மட்டுமே அவர்களின்  அமலாக்கம் ஆரம்பமானது. வட கொரியா மீது விதித்திருந்த பல தசாப்த கால இராஜதந்திர மற்றும் பொருளாதார தடைகளை எளிதாக்குவதன் மூலமாக வாஷிங்டன் அதன் “நல்ல நம்பிக்கையை” ஒருபோதும் நிரூபிக்கவில்லை.

மேலும், பியோங்யாங்கில் “ஆட்சி மாற்றத்தை” அமெரிக்கா விரும்பவில்லை எனவும், வட கொரிய மக்களை அச்சுறுத்துவது அல்லது ஆசிய பசிபிக் பிராந்தியத்தை சீர்குலைப்பது போன்ற அபத்தங்களை மேற்கொள்ளவும் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று ரில்லர்சன் கூறுகிறார். 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் பொறிவிற்கு பின்னர், வட கொரிய ஆட்சியை இல்லாதொழிப்பது ஒன்றே தொடர்ச்சியான அமெரிக்க நிர்வாகங்களின் வெறும் மறைமுகமான நோக்கமாக இருந்துவருகிறது.

ரில்லர்சனின் பேச்சு, உண்மையில், உலகத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கையாகவே இருந்தது. மேலும், அவர்கள் வட கொரியா மீது தற்போதுள்ள பொருளாதார தடைகளை முழுமையாக செயல்படுத்தி வருவதாகவும், இராஜதந்திர உறவுகளை நிறுத்தியும் அல்லது குறைத்தும் வருவதாகவும், மற்றும் புதிய தடைகளை விதிப்பதன் மூலமாக “வட கொரிய நிதி தனிமைபடுத்துதலை அதிகரிக்க முனைந்துவருவதாகவும்” தெரிவித்து ஐ.நா. உறுப்பு நாடுகள் மீதான தொடர்ச்சியான கோரிக்கைகள் குறித்து அவர் கோடிட்டுக்காட்டினார். “இந்த புதிய அழுத்த பிரச்சாரம் விரைவாக செயல்படுத்தப்படவுள்ளதாகவும், அவை வட கொரிய நலன்களுக்கு வலிமிகுந்ததாக இருக்கக்கூடும்” எனவும் அறிவித்தார்.

தற்போதுள்ள பொருளாதார தடைகளை முழுமையாக செயல்படுத்துவதில் குறிப்பாக சீனாவை நோக்கம் கொண்டிருந்த ரில்லர்சனின் வலியுறுத்தலானது, ட்ரம்ப் நிர்வாகம் அதை செய்ய தவறுவதாக திரும்ப திரும்ப விமர்சித்தது. “நாம் அனைவரும் நமது பங்கை செய்துமுடிக்கவேண்டும், ஆனால் வட கொரியாவின் 90 சதவிகித வர்த்தகத்தை சீனா கொண்டுள்ளது, சீனா மட்டுமே பொருளாதார பரிவர்த்தனையை கொண்டிருப்பது தனித்துவமானது, மேலும் அதன் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

சீன வெளியுறவு அமைச்சரான வாங் யி, விமர்சனங்களை மறுத்ததுடன், கொரிய தீபகற்பத்தின் மீதான விவகாரங்கள் எந்தவொரு தனிக் கட்சியினாலும் உருவாக்கப்படவில்லை, எந்தவொரு கட்சியையும் தனிப்பொறுப்பு ஏற்றுக்கொள்ள கேட்பது நியாயமில்லை” என்றும் அறிவித்தார். நேரடியாக தொடர்புள்ள கட்சிகளான அமெரிக்காவிற்கும், வட கொரியாவிற்கும் “பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டு நேர்மையை நிரூபிக்கவும், பேச்சுவார்த்தையை திரும்ப ஆரம்பிக்கவும்” வாங் மீண்டும் அழைப்புவிடுத்ததுடன், “ஆத்திரமூட்டும் வாய் சவடால் பேச்சிற்கும், நடவடிக்கைக்கும்” எதிராக எச்சரிக்கை செய்தார்.

“நாங்கள் இராஜதந்திர ரீதியில் இந்த பிரச்சனைகளை தீர்க்க முனைகிறோம், ஆனால் அது மிகவும் கடிமானது” என்று அவர் அறிவித்தபோது, வியாழனன்று ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்களுக்கு இசைவானதாகவே ரில்லர்சன் ஐ.நா. வுக்கு தெரிவித்த கருத்துக்களும் இருக்கின்றன. குறிப்பாக சீனாவின் மூலமாக அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரம் தோல்வியடைந்தால், அடுத்து இராணுவ பலத்தைக் கொண்டு ஒடுக்குவதுதான் ஒரே வழி என்பதை அவர் தொடர்ந்து தெளிவுபடுத்த முனைந்தார். வட கொரியாவுடனான ஒரு “பெரிய, முக்கிய மோதலுக்கான” வாய்ப்பு “முற்றுமுழுதாக” இருந்ததாக ட்ரம்ப் எச்சரித்தார்.

கொரிய தீபகற்பத்தை யுத்தத்தின் விளிம்பிற்கு கொண்டுவர முனைந்துவரும் ட்ரம்ப் நிர்வாகம் அதன் கோரிக்கைகளை பியோங்யாங் ஏற்றுக்கொள்வதற்காக பல மாதங்கள் காத்திருக்க தயாராக இல்லை. சீனாவும் வட கொரியாவும் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்ததாக Korean Times பத்தரிக்கை கடந்த வாரம் அறிவித்தது. “வட கொரியாவிற்கு தற்போதைய நிலைமையின் தீவிரத்தை பற்றி தெரிவிக்க” பெய்ஜிங் தனது “உயர்மட்ட அணுஆயுத பேச்சுவார்த்தையாளர்களை” அனுப்பிவைத்துள்ளதாக ஒரு அமெரிக்க அரசாங்க ஆதாரம் தெரிவித்ததை NBC சுட்டிக்காட்டியதை இது குறிப்பிட்டது.

செய்தித்தாளின் படி, பேச்சுவார்த்தையின்போது வட கொரியா சீனாவிடம் அதன் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு உத்திரவாதமளிக்கவும், அதன் அணுஆயுதங்களை கைவிட மூன்று ஆண்டு கால அவகாசத்திற்கும், கோரிக்கை விடுத்ததாக ஹாங் காங் இராணுவ ஆய்வாளர் லியாங் குவோலியாங் குறிப்பிட்டுள்ளார். பியோங்யாங் அதன் அணுஆயுத கட்டமைப்பை அகற்ற 3 மாதங்களுக்கான கால அவகாசத்தையும், அமெரிக்க விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள இரண்டிலிருந்து மூன்று வாரங்கள் வரையிலுமான கால அவகாசத்தையும் வட கொரியா கொண்டிருந்ததாக கூறி சீன அதிகாரிகள் விடையிறுத்ததாக கூறப்படுகிறது.

அமெரிக்கா ஏற்கனவே நியூயோர்க்கில் வட கொரிய அதிகாரிகளோடு இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக தென் கொரிய பத்திரிக்கையாளரான ஜியோங் க்யூ-ஜே கூறியதை Korean Times பத்திரக்கையும் சுட்டிக்காட்டியது. “பேச்சுவார்த்தைகள் பலனளிக்கக்கூடியதாக மாறினால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் வட கொரியாவிற்கு இரகசியமாக ஒரு சிறப்பு தூதரை அனுப்பக்கூடுமென” அவர் தெரிவித்தார்.

இருப்பினும், “இந்த விடயங்கள் சுமூகமாக சீரடையும் பட்சத்தில் தான் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படமுடியும். பேச்சுவார்த்தைகள் தோல்வியடையும் பட்சத்தில், இராணுவ தாக்குதலை மட்டுமே தனது அடுத்த தேர்வாக அமெரிக்கா கருதக்கூடும்” என்று ஜியோங் எச்சரித்தார்.