ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

NPA tacitly backs the French ruling elite’s campaign for Macron vote

பிரெஞ்சு ஆளும் உயரடுக்கின் மக்ரோனுக்கான வாக்கு பிரச்சாரத்தை புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மறைமுகமாக ஆதரிக்கிறது

By Johannes Stern and Alex Lantier
6 May 2017

பப்லோவாத புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சியையும் (NPA) நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியையும் (PES) பிரிக்கும் வர்க்க பிளவு, இதைவிட ஒருபோதும் கூர்மையாக இருக்கமுடியாது. சோசலிச சமத்துவக் கட்சி (PES) ஒரு சுயாதீனமான புரட்சிகர முன்னோக்கிற்காக இந்த ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றில் இவ்விரு வேட்பாளர்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கு அழைப்புவிடுத்து வருகின்ற நிலையில், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியோ (NPA) தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை வங்கியாளர் இமானுவல் மக்ரோனுக்கு அடிபணிய செய்ய தலையீடு செய்து வருகிறது.

NPA அதன் வலைத் தளத்தில் வெளியிட்ட பிரதான தேர்தல் அறிக்கையில் இவ்வாறு அறிவிக்கிறது: “மரீன் லு பென்னும் தேசிய முன்னணியும் (FN), மக்கள் உரிமைகளுக்கும் மற்றும் சமூக இயக்கங்களுக்கும் ஒரு மரணகதியிலான அபாயமாகும். அவர்கள் சமூக எதிர்ப்பையும், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தொழிற்சங்கங்களையும் மற்றும் சமூக எதிர்ப்பையும் ஒடுக்கவும் தடுக்கவும் விரும்புகிறார்கள். இது பிரெஞ்சுக்காரர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையேயும், சாதாரண ஆண்-பெண் உறவுள்ளவர்களுக்கும் மற்றும் ஓரினபால் சேர்க்கையாளர்களுக்கும் இடையே முன்பினும் அதிக பிளவுகளை அர்த்தப்படுத்துகிறது. இது பெண்களின் உரிமைகளை அச்சுறுத்துகிறது” என்று குறிப்பிடுகிறது.

மக்ரோன் “கடந்த 30 ஆண்டுகளாக சுதந்திர சந்தை கொள்கைகளை பின்பற்றிய மிகவும் நேரடியான பிரதிநிதியாவார்" என்பதை அந்த அறிக்கை ஒப்புக் கொள்கின்ற அதேவேளையில், அது தொடர்ந்து குறிப்பிடுகையில், “மக்ரோனுக்கு வாக்களிக்கும் தொழிலாளர்களும் இளைஞர்களும் தேசிய முன்னணியை தடுக்கவே வாக்களிக்கிறார்கள் என்று நாம் புரிந்து கொள்கிறோம்,” என்றது.

இது பிரான்சின் வரலாற்று நெருக்கடியால் முன்னுக்கு வந்துள்ள அடிப்படை அரசியல் பொறுப்புகளை கோழைத்தனமாக தட்டிக்கழிப்பதாகும். வாக்காளர்களில் எழுபது சதவீதத்தினர் ஒரு நவ-பாசிசவாதிக்கும் அதீத சிக்கன திட்டம் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய இராணுவவாதத்தை ஆதரிக்கும் ஒரு பிரதிநிதிக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு கோபமாக உள்ளனர்; தோல்வியடைந்த ஜனாதிபதி வேட்பாளர் ஜோன்-லூக் மெலோன்சோனின் ஆதரவாளர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு, அவர்களில் மூன்றில் இரு பங்கினர் இவ்விரு வேட்பாளர்களையும் நிராகரிப்பதைக் காட்டியது. இருந்தும், வாக்காளர்களுக்கு, பிளேக் நோய்க்கும் காலாராவுக்கும் இடையே ஒன்றை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ள ஒரு தேர்தலை எதிர்க்க தொழிலாளர்கள் என்ன செய்ய வேண்டுமென்பதற்கு NPA எந்த வழியையும் காட்டவில்லை.

அதற்கு மாறாக புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, லு பென்னுக்கு எதிராக வாக்காளர்கள் ஏன் மக்ரோனுக்கு வாக்களிப்பார்கள் என்பதை அது "புரிந்து கொண்டிருப்பதாக" தெரிவிக்கிறது. உண்மையில் மக்ரோனை ஆதரிக்க யார் வாக்காளர்களுக்கு அழுத்தமளிக்கிறார்கள் என்பது வெளிப்படையாக உள்ளது: ஆளும் சோசலிஸ்ட் கட்சி (PS), வலதுசாரி குடியரசுக் கட்சி (LR) மற்றும் பெருநிறுவன ஊடகங்கள் அனைத்தும், வாக்காளர்களுக்கு என்ன ஆட்சேபனைகள் இருந்தாலும், அவர்கள் நவ-பாசிசவாதிகளுக்கு எதிராக மக்ரோனுக்கு வாக்களிக்க தார்மீகரீதியில் கட்டுப்பட்டிருப்பதாக வலியுறுத்தும் ஒரு பாரிய பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்டுள்ளன. புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் சொந்த அறிக்கையே கூட, அது தெளிவாக புரிந்து கொண்டு மற்றும் அதனுடன் அது உடன்பட்டு, மக்ரோனுக்கான இந்த உத்தியோகபூர்வ பிரச்சாரத்தையே எதிரொலிக்கிறது.

தேசிய முன்னணி அரசாங்கம் (FN) தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அபாயகரமான எதிரியாக இருக்கும் என்பதில் எந்த கேள்விக்கும் இடமில்லை. அது ஆர்ப்பாட்டங்களுக்கு தடைவிதிக்கும், தொழிலாளர்களின் அடிப்படை சமூக உரிமைகளை நசுக்க நகரும், தேசியவாத வெறுப்புகளை தூண்டிவிடும், பெண்கள் மற்றும் பாலியல்ரீதியில் சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்தும் என்று NPA குறிப்பிடுகிறது. இருந்தாலும் இதற்காக மக்ரோன் வாக்குகளை ஆதரிக்கவோ அல்லது, NPA அலட்சியமாக தட்டிக் கழிப்பதை போல, மக்ரோனுக்கு வழங்கப்படும் வாக்குகளைப் "புரிந்து கொள்வதற்காகவோ" வாதிடுவது, மக்ரோனுக்கு வாக்களிப்பது  ஒரு கணிசமானளவிற்கு வித்தியாசமான மாற்றங்களைக் கொண்டு வரும் என்றுரைப்பதாக உள்ளது.

ஆனால் சூசகமாக, மக்ரோன் போராட்டங்களுக்கு தடை விதிக்க மாட்டார், அடிப்படை சமூக உரிமைகளைத் தாக்க மாட்டார், தேசியவாத வெறுப்புகளைத் தூண்ட மாட்டார் அல்லது ஜனநாயக உரிமைகளை அச்சுறுத்த மாட்டார் என்பதால் அவரே குறைந்த தீமை உடையவர் என்று மறைமுகமாக தெரிவிப்பதானது, அப்பட்டமாக அவரது முன்வரலாறை பொய்மைப்படுத்துகிறது.

மக்ரோன் வெளியேறவிருக்கும் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் முன்னாள் பொருளாதார அமைச்சராவார். அவ்விதத்தில், சோசலிஸ்ட் கட்சி அவசரகால நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததற்கு அவரும் அரசியல் பொறுப்பாவார், மேலும் அவர் ஜனாதிபதியானால் இதை அவர் நீடிக்கவே விரும்புகிறார். அடிப்படை ஜனநாயக உரிமைகளை இடைநிறுத்திய இந்த அவசரகால நெருக்கடி நிலை, பிரான்சில் முஸ்லீம் சமூகத்தின் மீது பாரிய பொலிஸ் சோதனைகளை நடத்துவதற்கும், அத்துடன் ஹோலாண்ட் எலிசே ஜனாதிபதி மாளிகைக்கு மரீன் லு பென்னை மீண்டும் மீண்டும் அழைத்து பேசி, முஸ்லீம்-விரோத இனவாதத்திற்கு சட்டபூர்வத்தன்மையை வழங்கவும் சாக்குபோக்காக இருந்தது.

பிரான்ஸை இராணுவமயப்படுத்தி, கட்டாய இராணுவ சேவையை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான மக்ரோனின் திட்டங்கள், தெளிவாக ஹோலாண்ட் இன் கீழ் அவர் திட்டமிட உதவிய சோசலிஸ்ட் கட்சியின் கடுமையான சிக்கன கொள்கைகளைத் தீவிரப்படுத்துவதன் அடிப்படையில் அமைந்துள்ளன. இத்தகைய சிக்கன கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் வெறுக்கப்படும் தொழிலாளர் சட்டத்தைத் திணிக்கவும் சோசலிஸ்ட் கட்சி போராட்ட அணிவகுப்புகளுக்கு தடைவிதித்ததுடன், இடம் நகராமல் ஒரேயிடத்தில் நடத்தும் கூட்டங்களைக் கொண்டு அவற்றை பிரதியீடு செய்து ஒட்டுமொத்தமாக பேரணிகளுக்குத் தடைவிதிக்க அச்சுறுத்தியது.

சட்ட அரசாணை மூலமாக சமூக சட்டங்களில் கடுமையான மாற்றங்களைக் கொண்டு வர தொழிலாள சட்டத்தை பயன்படுத்துவதென்ற மக்ரோனின் திட்டங்கள் ஐயத்திற்கிடமின்றி பாரிய எதிர்ப்பை தூண்டிவிடும் என்பதோடு, தொழிலாள வர்க்க எதிர்ப்புக்கு தடை விதிக்க மற்றும் நசுக்க பொலிஸின் புதிய முயற்சிகளையும் கொண்டு வரும். பிரான்சின் "போட்டித்தன்மையை" இன்னும் அதிகரிக்க, அவர் 120,000 பொதுத்துறை வேலைகளை அழிக்கவும், உழைப்பு சந்தையின் நெறிமுறைகளை தளர்த்தவும், மருத்துவ மற்றும் ஓய்வூதிய முறைகளை அழிக்கவும் சூளுரைத்துள்ளார். கட்டாய இராணுவ சேவையுடன் சேர்ந்து, அத்தகைய கொள்கைகளின் நோக்கம், "மீண்டுமொருமுறை போரை அரசியலின் சாத்தியமான விளைவாக ஆக்கக்கூடிய சர்வதேச உறவுகளின் ஒரு சகாப்தத்திற்குப்" பிரான்ஸை தயாரிப்பு செய்வதாகும்.

மக்ரோனுக்கு வாக்களிப்பதன் மூலமாக சோசலிஸ்ட் கட்சியின் ஓர்-பால் திருமண கொள்கையைப் பேணலாம் என்ற எந்தவொரு முயற்சியை பொறுத்த வரையிலும், இதுவொரு திவாலான மூலோபாயமாகும். சோசலிஸ்ட் கட்சியின் பரந்த தொழிலாளர்-விரோத கொள்கைக்கு "இடது" நிறம் வழங்குதவற்கான ஒரு முயற்சியாக ஓர்-பால் திருமணத்தை கையிலெடுப்பது பிற்போக்குத்தனமானது என்பதுடன் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளையே கூட அச்சுறுத்துகிறது. இது வெறுமனே ஒரு வலதுசாரி எதிர்விளைவுக்கு எரியூட்டுகிறது. உண்மையில் சோசலிஸ்ட் கட்சியின் கீழ் தான் சோசலிஸ்ட் கட்சியின் ஓரினச் சேர்க்கையாளர் திருமணம் மற்றும் பாலின சட்டமசோதாவை எதிர்த்து, பிரான்சில் கிறிஸ்துவ வலதால் இறுதியில் ஓரினச்சேர்க்கையாளர் எதிர்ப்பு இயக்கத்தை, அதாவது Manif pour tous ஐ, கட்டமைக்க முடிந்தது.

உண்மையில், மக்ரோனுக்கான வாக்குகள் தேசிய முன்னணியை "தடுக்கப் போவதில்லை" என்றும், மாறாக அக்கட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு வழிவகுத்து, அதன் நிர்வாகிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்முறையான வலதுசாரி சமூக கண்ணோட்டங்களை சாத்தியமானளவிற்கு திணிக்கும் என்றும் NPA அதுவே ஒப்புக் கொள்கிறது. மக்ரோனைக் குறித்து NPA அதன் அறிக்கையில் இவ்வாறு அறிவிக்கிறது: “அவர் வேலைத்திட்டம்? 35 மணிநேர வாராந்தர வேலை நேரத்தை முடிவுக்குக் கொண்டு வருவது, சமூக பாதுகாப்பை ஒழிப்பது, பொதுத்துறை தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, தொழிலாளர் நெறிமுறைகளை இன்னும் அதிகமாக நசுக்க நகர்வது. … நமது சமூக உரிமைகளை அழிப்பதை தொடர்ச்சியாக தீவிரப்படுத்துவதன் மூலமாக, தேசிய முன்னணி (FN) வளர்வதற்கு உதவும் ஒரு கொள்கையைத்தான் துல்லியமாக அவர் நடைமுறைப்படுத்த விரும்புகிறார்.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்ரோன் வலதுசாரி மற்றும் தொழிலாள வர்க்க விரோதக் கொள்கைகளை முன்னெடுக்கிறார் மற்றும் ஆதரிக்கிறார் என்பதை முழுமையாக தெரிந்திருந்தும், NPA அவர் சார்பான நோக்குநிலை எடுத்து வருகிறது.

புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சியின் அரசியல் வரலாற்றுடன் பரிச்சயமான எவரொருவரை பொறுத்த வரையிலும், இந்த பிற்போக்குத்தனமான நோக்குநிலை குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. புரட்சிகர மார்க்சிசத்திற்கு விரோதமான செல்வாக்குமிக்க நடுத்தர வர்க்க அடுக்குகளது நலன்களுக்காக பேசும் NPA, 2009 இல் அது ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து சோசலிஸ்ட் கட்சியின் சமூக-விரோத மற்றும் போர்-ஆதரவு கொள்கைகளுடன் நோக்குநிலை கொண்டுள்ளது.

ஏற்கனவே 2012 ஜனாதிபதி தேர்தல்களின் இரண்டாம் சுற்றில், NPA ஹோலாண்ட் க்கு வாக்களிக்க அழைப்புவிடுத்து, அவ்விதத்தில் பிரெஞ்சு வரலாற்றின் மிகவும் பிற்போக்குத்தனமான அரசாங்கங்களில் ஒன்றுக்கு அதன் ஆதரவை வழங்கியது. சர்வதேச அரங்கில், NPA கிரீஸில் சிக்கன கொள்கை ஆதரவு சிரிசா அரசாங்கத்தை ஆதரித்ததுடன், லிபியா மற்றும் சிரியாவில் நேட்டோ ஏகாதிபத்திய தலையீடுகளை ஊக்குவிப்பதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

இராணுவ தீவிரப்பாட்டிற்கான அழைப்புகள் NPA இன் 2017 தேர்தல் பிரச்சாரத்தின் இதயதானத்தில் உள்ளன. கடந்த மாதம் பாரீசில் அக்கட்சியின் இறுதி தேர்தல் பேரணியில், NPA செய்தி தொடர்பாளர் கிறிஸ்டீன் புப்பான் சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தைக் கவிழ்க்க ஐரோப்பிய மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியங்கள் அதிக ஆக்ரோஷத்துடன் தலையீடு செய்யாததற்காக அவற்றை கடுமையான தாக்கினார்.

அந்த கூட்டத்திற்கு முன்னதாக, NPA ஜனாதிபதி வேட்பாளர் பிலிப் புட்டு சிரியா மீது ஏப்ரல் 7 அன்று ட்ரம்ப் நடத்திய ஏவுகணை தாக்குதலை நியாயப்படுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கான போரை எதிர்ப்பவர்களை அசாத்தைப் பாதுகாப்பவர்கள் என்று அவமதித்தார். “அசாத் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்" மற்றும் "நம்பவியலாத வகையில் சிரியா மீது ட்ரம்பின் சிறிய தாக்குதல்" போன்ற தலைப்புகளில், NPA இணைப்பு கொண்டுள்ள பப்லோவாத அகிலத்தின் வலைத் தளம் International Viewpoint சமீபத்திய நாட்களாக கட்டுரைகளையும் நேர்காணல்களையும் வெளியிட்டது.

தேர்தல்களின் இரண்டு சுற்றுகளுக்கு இடையே எழுந்த பாரிய சமூக கோபத்தைக் கட்டுப்படுத்த முனைகின்ற அதேவேளையில் போர்-ஆதரவு கொள்கைகளையும் ஆதரிப்பதற்காக, NPA இப்போது, சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் சுற்றுவட்டத்திலிருந்து வந்த மதிப்பிழந்த சக்திகளை உள்ளடக்கி மீண்டும் மற்றொரு முதலாளித்துவ-சார்பு மீள்குழுவாக்கும் திட்டத்தை தொடங்கி வருகிறது.

International Viewpoint இல் வெளியான “லு பென்னை தோற்கடிப்போம், மக்ரோனுக்காக போராடுவோம், ஒரு அதிர்வூட்டும் இடதை மீளக்கட்டமைப்போம்” எனும் ஒரு சமீபத்திய கட்டுரை, “அப்பாற்பட்ட ஐக்கியம்!” அமைப்பைக் கட்டமைக்க அழைப்புவிடுக்கிறது. இந்த இயக்கம் "சமூக-தாராளமயமாக்கத்துடன் உடைத்துக் கொண்ட ஒரு அடித்தளத்தின் மீது, மக்ரோன் கொள்கைகளை எதிர்க்கும் பெரும்பான்மையினருக்காக, தீவிர-வலது மற்றும் வலதுகளுக்கு எதிரான ஒரு முன்னணிக்காக, (France insoumise, Parti de gauche, பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, சம்மேளனம், NPA, பசுமை கட்சி, சோசலிஸ்ட் கட்சியின் மற்றும் பசுமைக் கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள், அடிமட்ட நடவடிக்கையாளர்களைக் கொண்ட…) இடது சக்திகளின் பொதுவான வேட்பாளர்களுக்காக நிற்கிறது. நாங்கள் உள்ளாட்சி நிலைமைகளை மாற்றுவதற்கான பரிசீலனைகளுடன், இந்த நோக்குநிலையை தேசியளவிலும், அத்துடன் உள்ளாட்சியளவிலும் நடைமுறைப்படுத்த விரும்புகிறோம்,” என்றது.

அந்த அறிக்கை "மே 7 அன்று வாக்களிப்பதற்கும் லு பென்னைத் தோற்கடிப்பதற்கும்" அழைப்புவிடுக்கிறது. அதாவது மக்ரோனுக்கு வாக்களிக்க கூறுகிறது. ஜோன்-லூக் மெலோன்சோனின் பிரச்சாரம் சமூக கோபத்தை அரசியல் ஸ்தாபகத்திற்குள் திருப்பிவிட சேவையாற்றி உள்ள நிலையில், அது அதை பாராட்டுவதுடன், இந்த பிரச்சாரத்தை "பலப்படுத்தவும், பரவலாக்கவும்" அழைப்புவிடுக்கிறது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பிரெஞ்சு நாடாளுமன்ற அரசியலின் முட்டுச்சந்திலிருந்து வெளியேற ஒரு வழி தேடி வரும் தொழிலாளர்களும் இளைஞர்களும் இந்த முன்னோக்கை நிராகரிக்க வேண்டும்.

தொழிலாள வர்க்கம் ஒரு நிஜமான ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டமைப்பது அவசியமாகும், மாறாக தொழிலாளர்களை காட்டிக் கொடுக்க மட்டுமே செய்யும், சிக்கன மற்றும் போர் திட்டங்களைத் திணிக்கும், மற்றும் கிரீஸில் சிரிசா, ஸ்பெயினில் பெடெமோஸ் (Podemos) அல்லது ஜேர்மனியில் இடது கட்சி போன்ற தொழிலாளர் விரோத, சிக்கனத் திட்டங்களுக்கு ஆதரவான கட்சிகளுடன் அணி சேரும் சோசலிஸ்ட் கட்சியின் மற்றொரு பரந்த "இடது" கூட்டணியை அமைப்பது அதற்கு அவசியமில்லை. இதுபோன்ற கட்சிகள் பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் பல மட்டங்களில் அதிகாரத்தில் இருந்துள்ளன—கிரீஸில் பிரதம மந்திரி பதவியிலும், பேர்லினில் மற்றும் பார்சிலோனா உட்பட பிரதான ஸ்பானிய நகரங்களின் பிரதேச அரசாங்கங்களுடன் இணைந்தும் பதவி வகித்துள்ளன.

பிரான்சில், “பரந்த இடது" கட்சிகளைக் கட்டமைக்கும் முன்னோக்கு திவாலானது என்பது, துல்லியமாக சோசலிஸ்ட் கட்சி அனுபவத்திலிருந்து கிடைக்கும் படிப்பினையாக உள்ளது. அண்மித்து ஒரு அரை நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்தாபிக்கப்பட்ட சோசலிஸ்ட் கட்சி, ஒரு "பரந்த இடது" கட்சிக்கு ஒரு நிஜமான முன்மாதிரியாக இருந்தது. மக்ரோன் மற்றும் லு பென் இருவருக்கும் வழி வகுத்திருக்கும் ஹோலாண்ட் இன் ஜனாதிபதி பதவிக்காலமும் மற்றும் அவரது வலதுசாரி அரசாங்கமும், லெனின் மற்றும் ட்ரொட்ஸ்கியின் பாரம்பரியத்தில் ஒரு பாட்டாளி வர்க்க முன்னணி கட்சிக்கு பதிலாக ஒரு "பரந்த இடது" கட்சியைக் கட்டமைக்கும் திட்டத்தின் இறுதி விளைவாகும்.

அதன் தேர்தல் அறிக்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (PES) சோசலிஸ்ட் கட்சியை (PS) பின்வருமாறு குணாம்சப்படுத்துகிறது: “1968 பொது வேலைநிறுத்தத்தின் போது ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) அதிகாரத்தை கையிலெடுக்க மறுத்து தன்னைத்தானே மதிப்பிழக்கச் செய்து கொண்ட பின்னர், சோசலிஸ்ட் கட்சி 1971 இல் ஸ்தாபிக்கப்பட்டது. இதுவொரு சோசலிஸ்ட் அமைப்பாக இருக்கவில்லை, மாறாக மிகவும் பிற்போக்குத்தனமான சமூக சக்திகளின் ஒரு கருவியாக இருந்தது. சமூக ஜனநாயகவாதிகள், சமூக கத்தோலிக்கர்கள், முன்னாள்-ஸ்ராலினிஸ்ட்டுக்கள், முன்னாள்-ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள் மற்றும் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் முன்னாள் நிர்வாகிகளின் ஒரு தளர்ந்த கூட்டணியாக இருந்த அது, ஒரு முன்னணி முன்னாள்-விச்சி அரசியல்வாதியான பிரான்சுவா மித்திரோனுக்கான தேர்தல் வாகனமாக செயல்பட்டது. 1981 இல், மித்திரோன் பிரான்சின் முதல் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதியானார்.”

1982 இல் மித்திரோன் "சிக்கனத் திட்டங்களுக்கு திரும்பியதற்குப்" பின்னர் இருந்து மற்றும் 1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியத்தில் முதலாளித்துவம் மீட்டமைக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து, வரலாற்றுரீதியில் சோசலிஸ்ட் கட்சியை நோக்கி நோக்குநிலை கொண்ட பசுமைக் கட்சி மற்றும் போலி-இடது வகையறாக்களின் ஒட்டுமொத்தமும் இன்னும் கூடுதலாக வலதிற்கு நகர்ந்துள்ளது. 2017 தேர்தல்களில் சோசலிஸ்ட் கட்சியின் தோல்வியானது அதன் முன்னோக்கின் திவால்நிலைமை மற்றும் தொழிலாள வர்க்க விரோத தன்மையின் விளைவாகும்.

தொழிலாள வர்க்கத்திற்குள் ஒரு நிஜமான ட்ரொட்ஸ்கிச கட்சியைக் கட்டமைக்க சோசலிச சமத்துவக் கட்சியின் (PES) போராட்டமானது, தொழிலாள வர்க்கத்திற்கு மற்றொரு பொறியை அமைப்பதற்கான NPA மற்றும் ஏனையவர்களது சகல முயற்சிகளுக்கு எதிரான ஒரு விட்டுக்கொடுப்பற்ற போராட்டத்தில் நடந்தேறும்.