ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

May Day 2017

The Crisis of the European Union

2017 மே தின உரை: ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடி

By Peter Schwarz
4 May 2017

இந்த உரை ஏப்ரல் 30 அன்று நடந்த 2017 சர்வதேச இணையவழி மேதினப் பேரணியில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செயலரான பீட்டர் சுவார்ட்ஸ் வழங்கியதாகும்.

இருபதாம் நூற்றாண்டில், ஐரோப்பா இரண்டு ஏகாதிபத்திய உலகப் போரின் மூலமாகவும், பிரதான யுத்தக்களமாகவும் இருந்தது. தொழிற்துறைப் புரட்சியின் மையமாகவும் கலாச்சார முன்னேற்றத்தின் முன்முனையாகவும் இருந்த இக் கண்டம் 1945 இல் சின்னாபின்னமாய் கிடந்தது. இரண்டு போர்களில் 80 மில்லியன் முதல் 100 மில்லியன் மக்கள் வரை கொல்லப்பட்டனர். ஒருகாலத்தில் தனது கலாச்சாரம், தனது எழுத்தாளர்கள், தனது இசைத்தொகுப்பாளர்கள் குறித்து பெருமிதம் பொங்கத் திகழ்ந்து வந்த ஜேர்மனி, மனிதகுலம் அதுவரை கண்டிராத மோசமான காட்டுமிராண்டித்தனமான குற்றங்களது மையமாக ஆகியிருந்தது.

“இனியும் பாசிசம் வேண்டாம்; இனியும் போர் வேண்டாம்!” போரின் முடிவில் இந்த சுலோகம் மில்லியன்கணக்கான மக்களால் ஆதரிக்கப்பட்டது. பாசிசமும் போரும் முதலாளித்துவத்தின் விளைபொருளாக இருந்தன என்பது அச்சமயத்தில் பரவலாய் புரிந்துகொள்ளப்பட்டதாய் இருந்தது. குறிப்பாக ஸ்ராலினிசத்தின் காட்டிக்கொடுப்பின் மத்தியிலும் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெகுஜன ஆதரவைக் கொண்டிருந்த இத்தாலி மற்றும் பிரான்ஸ் போன்ற அக்டோபர் புரட்சியின் நினைவு இன்னும் உயிர்ப்புடன் இருந்து வந்த, நாடுகளில் தொழிலாளர்கள் முதலாளித்துவத்துடன் கணக்குத் தீர்த்து சோசலிசத்தை ஸ்தாபிக்கும் தீர்மானத்துடன் இருந்தனர். ஜேர்மனியில், பழமைவாத CDUவும் கூட தனது வேலைத்திட்டத்தில் முதலாளித்துவம் தோல்வியடைந்து விட்டதாக குறிப்பிடுவதற்கு கடமைப்பட்டுள்ளதாக உணருமளவுக்கு, அங்கு முதலாளித்துவ-எதிர்ப்பு மனோநிலைகள் மிக வலுப்பட்டிருந்தன.

ஆனால் தொழிலாளர் இயக்கத்தின் ஸ்ராலினிச மற்றும் சீர்திருத்தவாதத் தலைவர்கள் இந்த சோசலிச அபிலாசைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு, முதலாளித்துவத்தை ஸ்திரப்படுத்துவதற்கு தத்தமது அரசாங்கங்களுடன் நெருக்கமாய் சேர்ந்து வேலைசெய்தனர். பாசிசத்திற்கும் போருக்கும் இட்டுச் சென்றிருந்த தேசிய மற்றும் சமூக குரோதங்களை வெல்லக் கூடியது என்பதாய் கூறி ஏராளமான பொறிமுறைகளை அவர்கள் ஊக்குவித்தனர்.

சோசலிசப் புரட்சியைக் காட்டிலும் சமூக சீர்திருத்தங்கள், சமூக சமத்துவமின்மையை கொஞ்சம் கொஞ்சமாய் வெற்றிகண்டு வளத்தையும் அனைவருக்கும் சமமான வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றனர். கண்டத்தை ஒரு முதலாளித்துவ அடிப்படையில் பொருளாதாரரீதியாக ஒருங்கிணைப்பது -ஐரோப்பிய ஒன்றியம்- ஐரோப்பாவை நாசம்செய்த தேசிய குரோதங்களை வெல்லும் என்றனர்.

எழுபது வருடங்களுக்குப் பின்னர் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் சிதைந்துப் போய்க் கிடக்கின்றன.

கண்டமெங்கிலும் சரி ஒவ்வொரு தனித்தனியான ஐரோப்பிய நாட்டிலும் சரி சமூக சமத்துவமின்மையானது முன்னெப்போதினும் மிக அதிகமான அளவில் இருக்கிறது. பல்கேரியாவின் சராசரி சம்பளம் டென்மார்க்கின் சராசரி சம்பளத்தைக் காட்டிலும் பத்துமடங்குக்கும் மேல் குறைவாய் இருக்கிறது; ஜேர்மனி போன்ற செல்வந்த நாடுகளிலும் கூட, மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் வாழ்கிறார்கள், குறைந்தபட்சத்திற்கும் குறைவான ஊதியங்களிலும் ஆபத்தான வேலைகளிலும் பணிபுரிகிறார்கள். வேலைவாய்ப்பின்மை அதிகமாய் இருக்கிறது. சில ஐரோப்பிய நாடுகளில், ஐம்பது சதவீதத்திற்கும் அதிகமான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி இருக்கின்றனர்.

போரின் அபாயம் 1945க்குப் பிந்தைய காலத்தின் மிகப்பெரும் அளவினதாக இருக்கிறது. ஒவ்வொரு தனித்தனியான ஐரோப்பிய நாடுமே தனது இராணுவ நிதிஒதுக்கீட்டை மிகப்பெருமளவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; ஐரோப்பியத் துருப்புகள் மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் ஏகாதிபத்தியப் போர்களில் ஈடுபட்டுள்ளன; சோவியத் ஒன்றியத்தின் மீதான நாஜி ஆக்கிரமிப்புக்குப் பிந்தைய காலத்தில் முதன்முறையாக, மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் ரஷ்ய எல்லையில் துருப்புகளை நிலைநிறுத்தி வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய உலகின் இருபெரும் அணுஆயுத சக்திகளுக்கு இடையிலான ஒரு இராணுவ மோதலின் அபாயமென்பது இனியும் ஒரு அனுமான சாத்தியக்கூறாக இல்லை, ஒரு உண்மையான அபாயமாக முன்நிற்கிறது. அது ஐரோப்பாவை ஒரு அணுஆயுத யுத்தக்களமாக மாற்றிவிடும்.

ரஷ்யாவுடனான போரின் அச்சுறுத்தல் மட்டுமல்ல, ஐரோப்பாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, மற்றும் ஐரோப்பாவுக்குள்ளேயேயான போரின் அபாயமும் கூட பெருகிச் சென்று கொண்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும், குறிப்பாக ஜேர்மனிக்கும், இடையிலான பதட்டங்கள் நீண்டகாலமாய் தொடர்ந்து அதிகரித்துச் சென்று கொண்டிருக்கின்றன. டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்குப் பின்னர், இவை ஒரு புதிய பரிமாணத்தைப் பெற்றுள்ளன.

ஜேர்மனி ஒரு மூர்க்கமான வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவக் கொள்கையைக் கொண்டு பதிலிறுப்பு செய்திருக்கிறது. அது தனது இராணுவ நிதிஒதுக்கீட்டை பாரிய அளவில் அதிகரித்து வருவதோடு ஐரோப்பிய ஒன்றியத்தை —குறைந்தபட்சம் அதன் மையக்கருவையேனும்— ஒரு பொருளாதாரக் கூட்டணியாக இருப்பதில் இருந்து, ஜேர்மனியால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற மற்றும் அமெரிக்காவுக்குச் சமமானதாய் இருக்கின்ற ஒரு இராணுவக் கூட்டணியாக மாற்றுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

ஒருகாலத்தில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு வழிவகையாகச் கூறி விளம்பரப்படுத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றியம், தேசியவாதம், வெளிநாட்டினர் வெறுப்பு, சமூகப் பிற்போக்குத்தனம், சட்டம்-ஒழுங்கு கொள்கைகள் மற்றும் போர் ஆகியவற்றுக்கான ஒரு விளைநிலமாக ஆகியிருக்கிறது.

புரூசெல்ஸ் மற்றும் பேர்லினால் உத்தரவிடப்பட்ட சிக்கன நடவடிக்கைத் திட்டங்கள் கிரீஸ் போன்ற ஒட்டுமொத்த நாடுகளையும் சின்னாபின்னமாக்கி விட்டிருக்கின்றன. ஐரோப்பியக் கோட்டையானது அகதிகளை மிருகத்தனமாக நிராகரித்தமையானது ஒரேயாண்டில் 5000க்கும் அதிகமான பேர் மத்திய தரைக்கடலில் மூழ்கக் கூடிய நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் உண்மையாகவே “முன்னேறி”க் கொண்டிருக்கிறது என்றால் அது பரந்த ஒரு போலிஸ் மற்றும் கண்காணிப்பு எந்திரத்தைக் கட்டியெழுப்புவது என்ற ஒரேயொரு துறையில் மட்டும் தான்.

ஐரோப்பா சமூகப் பதட்டங்களால் கூர்தீட்டப்பட்டு நிற்கிறது. அது வெடிப்பதற்கான மணித்துளிகள் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு வெடிகுண்டு போலத் தான். அரசியல் மற்றும் பொருளாதார உயரடுக்குகளுக்கும் மக்களின் மிகப்பெரும்பான்மையோருக்கும் இடையிலான இடைவெளி மிகப் பெரிதாய் இருக்கிறது. மிக சமீபத்தில் பிரான்சில் சோசலிஸ்ட் கட்சி போல, பல தசாப்தங்களாக அரசாங்கத்தில் இருந்து வந்திருக்கும் அரசியல் கட்சிகளின் உருக்குலைவில் இது வெளிப்படுகிறது.

ஆயினும் சமூக அதிருப்தியும், ஆவேசமும் கோபமும் எந்த முற்போக்கான அரசியல் வெளிப்பாட்டையும் காணவில்லை. தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களின் மீது அக்கறை கொண்டுள்ளதாக ஒருகாலத்தில் கூறிவந்த அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தின் போலி-இடது அமைப்புகள் ஆகியவற்றின் வலது-சாரிக் கொள்கைகளே இதற்குக் காரணமாகும். தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதிலும் இராணுவவாதம் மற்றும் போரை ஊக்குவிப்பதிலும் இவை ஒரு மையமான பாத்திரத்தை வகிக்கின்றன.

இது கிரீசில் மிகத் தெளிவாய் எடுத்துக்காட்டப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவிலான சிக்கன நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லையேல் அதற்கு எதிராய் கிரேக்க மற்றும் ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட வேண்டும் என்பதான மாற்றுக்கு முகம்கொடுத்த தீவிர இடதுகளின் கூட்டணியான சிரிசா, முதலாவதையே தெரிவு செய்தது. சிரிசா பிரதிநிதித்துவம் செய்கின்ற வசதியான நடுத்தர வர்க்க அடுக்குகள் தொழிலாள வர்க்கத்தை விடவும் ஐரோப்பிய ஒன்றியம் பிரதிநிதித்துவம் செய்யும் பெருநிறுவன மற்றும் நிதி உயரடுக்குகளுக்கு பத்துமடங்கு அதிக நெருக்கம் கொண்டவையாகும்.

சீர்திருத்தவாத மற்றும் போலி-இடது அமைப்புகளது முற்றுமுதலான திவால்நிலையானது, பிரான்சில் தேசிய முன்னணி, ஆஸ்திரியாவில் சுதந்திரக் கட்சி, ஜேர்மனியில் AfD, பிரிட்டனில் UKIP, அல்லது ஹாலண்டில் கீர்ட் வில்டர்ஸ் போன்ற அதி-வலது சக்திகள் சமூக அதிருப்தியை சுரண்டிக் கொள்வதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான வெறுப்பில் இருந்து ஆதாயமடைவதற்கும் உரிய நிலைமைகளை உருவாக்கித் தந்திருக்கிறது.

இவை வெளிநாட்டினர் வெறுப்பு, பேரினவாத மற்றும் இன்னும் பாசிசக் கொள்கைகளுக்காக நிற்பவையாகும். ஆயினும் இவற்றின் முதலாளித்துவ எதிரிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமாக இவை தடுத்துநிறுத்தப்பட முடியாது. தேசியவாத அதி-வலதுகளை எதிர்த்துப் போராட, ஐரோப்பிய ஒன்றிய ஆதரவுக் கட்சிகளை நம்புவதென்பது, தீயை அணைக்க ஒரு தீவைப்பவனை நம்புவது போன்றதாகும்.

அதி-வலது கட்சிகள் வளர்ச்சியடைவதால் இடது-சாரி மனோநிலைகளே அங்கு இல்லை என்று அர்த்தமில்லை. ஆனால் நடப்பு அரசியல் அமைப்புக்குள்ளாக அவை வெளிப்பாடு காண்கிற மட்டத்திற்கு அவை உடனடியாகக் காட்டிக்கொடுக்கப்படுகின்றன. கிரீசில் சிக்கன நடவடிக்கையை எதிர்ப்பதாக வாக்குறுதியளித்ததாலேயே அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சிரிசா, தொழிலாள வர்க்கத்தின் மீது முன்பினும் தீவிரமான தாக்குதல்களை அமுல்படுத்துவதையே செய்தது.

பிரான்சில், ஜோன்-லூக் மெலோன்சோனுக்கான வாக்குகள் இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து இரண்டு மடங்குக்கும் அதிகமாகியிருக்கிறது, அவர் போர்-எதிர்ப்பு மற்றும் சிக்கன நடவடிக்கை எதிர்ப்பு சவடால்களை விடுத்திருக்கிறார் என்பதே இதன் காரணம். முடிவில், அவருக்கும் தேசிய முன்னணி வேட்பாளரான மரின் லு பென்னுக்கும் இடையில் வெறும் 1.7 சதவீதம் பேரே பிரித்துப் பார்த்தனர். ஆனால் 40 வருடங்களுக்கும் மேலாய் அரசியலில் இருந்து வருகின்ற ஒரு கைதேர்ந்த முதலாளித்துவ அரசியல்வாதியாக, தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கம் என்பது தான் மெலோன்சோன் காணவிரும்புவதில் கடைசியானதாக இருக்கும்.

வரவிருக்கும் சமூக வெடிப்புகளில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சர்வதேசிய சோசலிச நோக்குநிலையை வழங்கக் கூடிய விதத்தில் ICFI இன் பிரிவுகளை கட்டியெழுப்புவதே, உலகெங்கும் போலவே, ஐரோப்பாவிலும் அவசர பணியாய் முன்நிற்கிறது.

ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியம் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்கடிக்கு நமது பதிலாகும். இது ஒரு வாய்வீச்சு சுலோகமல்ல, மாறாய் ஒரு அரசியல் முன்னோக்கு ஆகும்.

முதலாளித்துவ வர்க்கத்தின் அத்தனை கட்சிகளில் இருந்தும் மற்றும் அவற்றின் போலி-இடது, குட்டி-முதலாளித்துவ முகவர்களில் இருந்தும் அரசியல் ரீதியாக சுயாதீனமான விதத்தில் அமைகின்ற, போர், சர்வாதிகாரம் மற்றும் சமூக சமத்துவத்துவமின்மைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் ஒரு வெகுஜன இயக்கத்திற்காக நாங்கள் போராடுகிறோம்.

தேசியவாதத்தின் அனைத்து வடிவத்திற்கு எதிராகவும் ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்காக நாங்கள் போராடுகிறோம்.

முதலாளித்துவத்தை தூக்கிவீசுவதற்காகவும், தனியார் இலாபத்திற்கு பதில் சமூகத் தேவைகளின் அடிப்படையிலான ஒரு சோசலிச சமூகத்தை உருவாக்குவதற்காகவும் நாங்கள் போராடுகிறோம்.