ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

SEP (Sri Lanka) calls for workers’ inquiry into Meethotamulla garbage dump disaster

சோ.ச.க. (இலங்கை) மீதொடமுல்ல குப்பைக் மேடு பேரழிவு தொடர்பாக தொழிலாளர் விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது

By the Socialist Equality Party 
9 May 2017

சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) அமைப்பும், புறநகர் பகுதியான மீதொட்டமுல்லவில் உள்ள கொழும்பின் பிரதான குப்பை மேடு சரிந்ததினால் ஏற்பட்டுள்ள பேரழிவு பற்றி ஒரு சுயாதீனமான தொழிலாளர் விசாரணைக்கு அழைப்பு விடுக்கின்றன.

ஏப்ரல் 14 அன்று, மீதொட்டமுல்ல குப்பை மேட்டின் ஒரு பெரும் பகுதி சரிந்ததில் 146 வீடுகள் அழிந்ததுடன் 32 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு சம எண்ணிக்கையிலானோர் காணாமல் போயிருக்கலாம் என நம்பப்படுகிறது. 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்து அண்டை பிரதேசங்களில் தற்காலிக முகாம்களில் குறைந்த அல்லது எந்தவொரு வசதியும் இன்றி வசிக்கத் தள்ளப்பட்டுள்ளன. ஒரு தொகை காயமடைந்தவர்கள் கொழும்பில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.

மனித உயிர்கள் மற்றும் நலன்களைப் பற்றிக் கவலை கொண்டுள்ள பிரதேசவாசிகள் மற்றும் ஏனையவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் சீற்றத்தை எதிர்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஓய்வுபெற்ற நீதிபதி சந்திரதாச நாணயக்காரவை, பேரழிவுக்கான காரணங்கள் பற்றி விசாரணை நடத்துவதற்காக நியமித்தார். பேரழிவு ஏற்படுவதற்கு அனுமித்த பின்னர் விசாரணை ஆணைக்குழுவை நியமிப்பது என்பது, வெறுமனே அரசாங்கத்தின் சொந்த பொறுப்புடைமையை மூடிமறைக்கவும் வெகுஜன அதிருப்தியை திசை திருப்புவதற்குமான ஒரு வழிமுறையாகும்.

தொழிலாளர்களின் மற்றும் இளைஞர்களின் உயிரிழப்பு மற்றும் முன்னாள் மீதொடமுல்ல குடியிருப்பாளர்களின் வீடுகள் அழிக்கப்பட்டமை போன்ற அசம்பாவிதங்களை ஏற்படுத்திய குற்றவியல் அலட்சியங்களுக்கு பொறுப்பானவர்களை –எல்லாவற்றுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த முதலாளித்துவ அரசாங்கங்களை- இந்த அரசாங்க விசாரிணை பூசி மெழுகி மறைக்கும் என சோ.ச.க. எச்சரிக்கின்றது.

அரசாங்கமும் கூட்டு எதிர்த்தரப்பு என அழைக்கப்படுபவதும் சேர்ந்து ஆரவராத்துடன் அறிவித்த பாராளுமன்ற விவாதமும் முற்றிலும் கேலிக்கூத்தாக முடிவடைந்தது. மே 3 அன்று டெய்லி மிரர் ஆசிரியர் தலையங்கம் இத்த விவாதம் எந்தளவு மோசடியான என்பதை அறிவித்தது: "இப்பொழுது விவாதம் முடிந்துவிட்டது, அதில் இருந்து நாட்டிற்கு கிடைத்தது என்ன? அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியில் உள்ள கட்சிகளோ எந்தவொரு குறிப்பிட்ட குறுகிய கால அல்லது நீண்ட கால தீர்வையும் இந்த பிரச்சனைக்கு பரிந்துரைக்கவில்லை.”

விளைவு, முழு அரசியல் ஸ்தாபனத்தின் மீதான குற்றப்பத்திரிகை ஆகும். பாராளுமன்ற அமைப்பு முறையே முதலாளித்துவ வர்க்கத்தின் அடக்குமுறை ஆட்சியை மூடிமறைக்க அணிந்திருக்கும் மேலாடையாகும். அது உழைக்கும் மக்களின் தேவைகளை எந்த விதத்திலும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை.

பேரழிவின் உண்மையான காரணங்களை அம்பலப்படுத்தவும் முதலாளித்துவ வர்க்கம் மற்றும் அதன் அரசாங்கங்களின் குற்றங்களுக்கு முடிவுகட்டும் உண்மையான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீன விசாரணையை நடத்துவதே இப்போதைய அவசர தேவை ஆகும்.

சோ.ச.க. மற்றும் ஐ.வை.எஸ்.எஸ்.ஈ அழைப்பு விடுக்கும் மற்றும் ஸ்தாபிக்கும் ஒரு சுயாதீன விசாரணைக் குழுவானது வெகுஜனங்கள் எதிர்கொள்ளும் எரியும் பிரச்சினைகளை அணுகவதற்கான ஒரு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் வேலைத்திட்டத்தை வரைவதற்காக உழைக்கும் மக்கள், இளைஞர்கள், சமூக நனவு கொண்ட புத்திஜீவிகள் மற்றும் தொழில் வல்லுநர்களையும் செயற்படுவதற்கு ஒன்றுகூட்டும்

குப்பை பிரச்சனை பற்றிய தொழிலாளர் விசாரணை என்பது, குறிப்பிட்ட அந்தப் பிரச்சினைக்கு மாத்திரம் உறுதியான விஞ்ஞானபூரவமான தீர்வுகளை முன்வைக்காது. முதலாளித்துவத்தின் கீழ் எதிர்கொள்ளும் அனைத்து சமூக மற்றும் ஜனநாயக பிரச்சனைகளுக்கும் நிலையான தீர்வுகளை காண்பதன் பேரில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழை மக்களின் ஆதரவை பெறுவதற்காக, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு அரசியல் முன்னோக்கை விரிவாக்கும்.

இத்தகைய விசாரணைகளை நடத்துவதில் சோ.ச.க. அனுபவம் கொண்டுள்ளது. அதன் முந்தைய மூன்று விசாரணைகளில், 2013 இல் ரத்துபஸ்வல பகுதியில் வெனிகோஸ் லேடக்ஸ் தொழிற்சாலை காரணமாக ஏற்பட்ட நீர் மாசுபாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை சுட்டுக் கொன்றமை பற்றிய விசாரணை மிக அண்மையதாகும். அப்போது ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததுடன் அது சுத்தமான குடிநீரைக் கோரி மக்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகளை அணிதிரட்டியது.

அந்த தொழிலாளர் விசாரணை, பிரதேசத்தில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே பரந்த ஆதரவை வென்றது. வெனிகிஸ் ஆலை உரிமையாளர்கள் மற்றும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் பல தடைகளுக்கு மத்தியிலும், விசாரணக் குழு வெற்றிகரமாக தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், அரசாங்கத்தின் உடந்தையுடன் தொழிற்சாலை செய்த குற்றவியல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டது.

மீதொடுமுல்ல அனர்த்தம் பற்றிய உத்தேச தொழிலாளர் விசாரணை பின்வருவனவற்றை விசாரிக்கும்:

* மீதொடுமுல்ல குப்பை மேட்டின் வரலாறும் அது ஏற்படுத்தியுள்ள சமூக-பொருளாதார சிக்கல்களும்

*   ஏப்ரல் 14 சரிவை தூண்டிய காரணிகள் என்ன

* விஞ்ஞானபூர்வமான தின்மக் கழிவு முகாமைத்துவத்திற்கான நுட்பங்கள் இருக்கும் போது அவை ஏன் பயன்படுத்தப்படவில்லை

* ஆளும் வர்க்கங்களால் முன்னெடுக்கப்படும் சமூக எதிர் புரட்சியின் ஒரு பகுதியாக தின்மக் கழிவுப் பிரச்சினையின் சர்வதேச சூழ்நிலை

* மீதொடுமுல்ல பேரழிவில் ஊடகங்கள் மற்றும் சுற்றுச்சூழல்வாதிகள் என அழைக்கப்படுவர்களின் பாத்திரம்

* ஸ்தாபக அரசியல் கட்சிகளின், குறிப்பாக போலி இடது அமைப்புக்களின் பாத்திரம்

தொழிலாள வர்க்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய மாற்று அரசியல், சமூக வேலைத்திட்டம்

மீதொடுமுல்லவில் உள்ள 16 ஏக்கர் ஈர நிலப்பகுதியில் 22 ஆண்டுகளாக விஞ்ஞான முகாமைத்துவமின்றி குப்பைகளை கொட்டத் தொடங்கியுள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் (ஸ்ரீ.ல.சு.க.) போலி-இடது குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் இந்த காலகட்டத்தில் நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளன. இருப்பினும், 2009ன் பின்னர், ப்ளூமெண்டல் பிரதேசத்தில் உள்ள முன்னைய குப்பை மேட்டில் தீ பற்றியதாலும் அதை அடுத்த நீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவும் அங்கு குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டதனால், மீதொடுமுல்ல குப்பைத் தொட்டி விரைவாக வளர்ந்தது. மீதொடுமுல்ல கொழும்பின் பிரதான குப்பை அகற்றல் நிலையம் ஆனது.

மீதொடுமுல்லவில் குப்பை மேடானது 30 மீட்டர் உயரத்துக்கு மேலாக வளர்ந்து, உள்ளூர் மக்களுக்கு மட்டுமன்றி முழு நகரத்திற்கும் ஒரு முக்கியமான சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. பல மாசடைவு தொடர்பான பிரச்சினை மற்றும் கொசுக்களால் பரவும் நோய்களால் குழந்தைகள் உட்பட குப்பை மேட்டுக்கு அருகில் வாழும் டசின் கணக்கானோர் இறந்துள்ளனர். இப்பகுதியில் உள்ள கால்வாய்கள், குப்பைத் தொட்டியில் இருந்தான கசிவின் காரணமாக கறுப்பு நிறமாக மாறியுள்ளன. நான்கு கிலோமீட்டர் தூரத்துக்கு வாயு துர்நாற்றத்தை உணர முடியும்.

இப்பகுதியின் குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர்கள் மற்றும் நகர்ப்புற ஏழைகளாக உள்ளனர். கொழும்பில் நிலவும் கடுமையான வீட்டுவசதி நெருக்கடி காரணமாக இரண்டு அல்லது மூன்று குடும்பங்கள் சேர்ந்து சிறு சிறு குடிசைகளில் வாழ்கின்றனர். தனியார் முதலீட்டிற்கும் "நகரை அழகுபடுத்தும்" திட்டங்களுக்கும் வழிவகுக்கும் பொருட்டு, கொழும்பின் சில பகுதிகளில் இருந்து 70,000க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களை வெளியேற்றுவதற்காக, அரசாங்கம் மேற்கொண்ட இரக்கமற்ற நடவடிக்கைகளால் வெளியேற்றப்பட்ட சிலரும் இங்கு இடம்பெயர்ந்து வாழ்கின்றனர்.

சமீபத்திய ஆண்டுகளில் பல சந்தர்ப்பங்களில், மீதொடமுல்ல குப்பை மேட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்தை எதிர்த்து மக்கள் தீவிரமாக போராடினர். 2014 ஆரம்பத்தில், இராஜபக்ஷ அரசாங்கமானது குப்பை நிரப்பப்படுவதை தடுக்க பல நாட்கள் அமர்வுப் போராட்டம் மேற்கொண்ட குடியிருப்பாளர்கள் மீது வன்முறையான பொலிஸ் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது.

இந்தப் பிரச்சினையை சுரண்டிக்கொண்ட போலி-இடது குழுக்கள், 2015 ஜனவரியில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் இராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களிக்குமாறு வலியுறுத்தினர். ஆனால் சிறிசேன பதவியேற்ற பின்னர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கி ஒரு அரசாங்கத்தை அமைத்தபின்னரும் இந்த பிரச்சனை உக்கிரமாகியது. உள்ளூர் எதிர்ப்புகளுக்கு தற்போதைய "தேசிய ஐக்கிய" அரசாங்கத்தின் பதிலிறுப்பு, கொடூரமான பொலிஸ் தாக்குதல்களையும் கைதுகளையும் தவிர வேறு ஒன்றும் இல்லை.

முழு அரசியல் ஸ்தாபகமும், மீதொடமுல்ல பேரழிவுக்கு பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சாட்ட முற்பட்டுகின்றது. அந்த பகுதி ஆபத்து பிராந்தியமாக அறிவிக்கப்பட்டும் இழப்பீடு வழங்கப்பட்டும் அவர்கள் அங்கிருந்து வெளியேறவில்லை என்றும் அது குற்றஞ்சாட்டுகிறது. குடியிருப்பாளர்கள் இந்த கூற்றுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.

முறையாக நிர்வகிக்கப்படாத கழிவுப்பொருளால் உருவாக்கப்பட்ட சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் ஆபத்துகள் ஒரு சர்வதேச பிரச்சினையாகும். மீத்தோடமுல்ல பேரழிவிற்கு சில வாரங்களுக்கு முன்னர், எத்தியோப்பியாவில் அடிஸ் அபாபாவில் இதேபோன்ற குப்பை மேட்டின் சரிவால் 113 குடியிருப்பாளர்கள் கொல்லப்பட்டனர். 2005ல், மத்திய அமெரிக்காவில் குவாத்தமாலா நகரத்தில் 200க்கும் மேற்பட்ட கழிவு சேகரிப்போர் கொல்லப்பட்டனர். இந்தியாவின் மும்பாயில், 326 ஏக்கர் டியோனர் குப்பை மேட்டில் 2016ல் தீ விபத்து ஏற்பட்டது. அதன் செறிவான புகைக் கூட்டத்தை வெளிப்பிரதேசத்தில் காணக்கூடியதாக இருந்ததுடன், அந்தப் பகுதியில் காற்று மாசுபடும் ஆபத்து பற்றியும் எச்சரிகப்பட்டது.

இந்த பிரச்சினைகள், வளர்ந்துவரும் மற்றும் முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் பொது சேவைகள் மீதான பல தசாப்த கால தாக்குதல்களின் நேரடி விளைவுகளாகும். உலகம் முழுதும் தொழிலாள வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் கொடூரமான சிக்கன நடவடிக்களால் அவை இன்னும் மோசமாகிவிட்டன. எனினும், முன்னிலை சோசலிஸ்ட் கட்சி, நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிசக் கட்சி உட்பட போலி-இடது குழுக்கள், வெற்று எதிர்ப்புக்களில் ஈடுபடுவதையும் ஏப்ரல் 14 அன்று நடந்த அழிவுக்கு பொறுப்பான அதே ஆளும் வர்க்கக் கட்சிகளுக்கு பயனற்ற வேண்டுகோள் விடுப்பதையும் நிறுத்தவில்லை.

மீதொடமுல்ல பேரழிவு பற்றிய சுயாதீன தொழிலாளர் விசாரணையை ஆதரிக்குமாறு இலங்கையிலும் உலகம் முழுதும் உள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் நனவுபூர்வமான புத்திஜீவிகளுக்கும் சோசலிச சமத்துவக் கட்சி அழைப்பு விடுக்கின்றது. தின்மக் கழிவு நெருக்கடிக்கு ஒரு தீர்வை காணுவதற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் ஒழுக்கமான வாழ்க்கை நிலைமைகளை உறுதிப்படுத்தும் ஒரு சமூக மாற்றத்திற்கான அரசியல் அடிப்படையை ஸ்தாபிப்பதற்குமான ஒரு முக்கியமான முதல் படியாக இது அமையும்.