ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

WRITINGS OF TROTSKY FROM 1917

Under the Banner of the Commune

கம்யூனின் பதாகையின் கீழ்

By Leon Trotsky
March 17 , 1917

உலக சோசலிச வலைத் தளம் 1917 பிப்ரவரியிலிருந்து  மார்ச் வரையிலான லியோன் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் புதிய மொழிபெயர்ப்புக்களை வெளியிடுகிறது. பல வியங்களில், இக்கட்டுரைகள் முதல்முறையாக இப்போதுதான் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளி வருகின்றன.

இக்கட்டுரை நியூயோர்க் செய்தித்தாளான  நோவி மிர் (புதிய உலகு) என்பதில் மார்ச் 17, 1917ல் வெளியிடப்பட்டது. இது ரஷ்ய மொழியில் ட்ரொட்ஸ்கியின்  1923 Voina i Revoliutsiia (போரும் புரட்சியும்), தொகுதி 2, பக்கம் 422-424 இல் வெளியிடப்பட்டிருந்தது. கீழே உள்ளது மூல மொழிபெயர்ப்பு. (மொழிபெயர்ப்பாளர்: ஃபிரெட் வில்லியம்ஸ், பதிப்பு உரிமை: WSWS)

வரலாற்றில் போரும் புரட்சியும் பெரும்பாலும் ஒன்றை மற்றொன்று பின்தொடரும்.

சாதாரண சமயங்களில், உழைக்கும் மக்கள் பழக்கவழக்கம் எனும் வலிமை கொண்ட சக்திக்கு அடிபணிந்து, அன்றாடம் தண்டிக்கும் கடும் உழைப்பில் பணிவடக்கத்துடன் ஈடுபட்டிருப்பர். மூலதனத்தின் உண்மையான சேவகனாக இருக்கும் இந்த பழக்கவழக்கம் இல்லாவிடின் கண்காணிப்பாளரோ, பொலீசோ, சிறை அதிகாரிகளோ, தூக்கிலிடுபவர்களோ இந்த மக்களைக் கீழ்ப்படுத்தி வைத்திருக்க இயலாது.

மக்களை துண்டுதுண்டாக்கி அவர்களை வெட்டிக் குவிக்கும் யுத்தமானது, ஆட்சியளர்களுக்கும் கூட ஆபத்தானதுதான் — துல்லியமாக ஏனெனில், ஒரே அடியில், அது மக்களை அவர்களது வழமையான நிலையிலிருந்து குலுங்க வைத்துவிடும், அதன் இடிமுழக்கத்தில் மிகப் பின்தங்கியோரையும் அறியாமையிலுள்ள கூறுகளையும், தங்களையும் தங்களைச் சுற்றி இருப்போரையும் விழித்தெழச் செய்துவிடும்.

பலலட்சக் கணக்கான உழைக்கும் மக்களை நெருப்பில் தள்ளுகின்ற அதேவேளை, ஆட்சியாளர்கள் பழக்கவழக்கம் என்ற இடத்தில் வாக்குறுதிகளையும் பொய்களையும் கட்டாயம் முன்வைப்பார்கள். முதலாளித்துவ வர்க்கமானது அதன் யுத்தத்தை “சுதந்திரத்துக்கான” “நீதிக்கான”, “சிறந்த வாழ்க்கைக்கான” யுத்தம்! என மக்கட்திரளின் பெருந்தன்மை கொண்ட இதயங்களுக்கு விருப்பமான அனைத்துவிதமான பண்புக்கூறுகளாலும் அழகுபடுத்துவது, அவர்களை ஆழமாய் கிளர்ந்தெழசெய்யும், யுத்தமானது தவிர்க்கமுடியாதபடி அவர்களை ஏமாற்றுவதில் போய் முடியும்” அது அவர்களுக்கு புதியகாயங்களையும் அடிமைச் சங்கிலிகளையும் தவிர வேறெதையும் கொண்டுவராது. இந்த காரணத்தினால்தான், அடிக்கடி யுத்தத்தால் தூண்டிவிடப்பட்ட ஏமாற்றப்பட்ட மக்களின் பதட்டமானது ஆட்சியாளர்களுக்கு எதிரான ஒரு வெடிப்புக்கு வழிவகுக்கும்; யுத்தமானது புரட்சி பிறப்பதற்கு வழிவகுக்கும்.

இப்படித்தான் 12 ஆண்டுகளுக்கு முன்னர், ரஷ்ய-ஜப்பானிய போரின் போது இருந்தது: அது உடனடியாக மக்களின் அதிருப்தியை உயர்த்தியது மற்றும் 1905 புரட்சிக்கும் வழிவகுத்தது.

46 ஆண்டுகளுக்கு முன்னாள் பிரான்சில் அது இப்படித்தான் இருந்தது: 1870-71 பிராங்கோ-பிரஷ்ய யுத்தமானது தொழிலாளர் எழுச்சிக்கு வித்திட்டது மற்றும் பாரிஸ் கம்யூனை நிறுவியது.

ஜேர்மன் துருப்புகளுக்கு எதிராக தலைநகரைக் காப்பதற்காக பாரிஸ் தொழிலாளர்கள் தேசிய காவலர்கள் என்ற வடிவில் முதலாளித்துவ அரசாங்கத்தால் ஆயுதபாணியாக்கப்பட்டனர். ஆனால் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம், ஜேர்மன் முடியாட்சியான Hohenzollern துருப்புக்களை விடவும் தங்களின் சொந்த பாட்டாளி வர்க்கத்திற்கே மிகவும் அஞ்சியது. பாரிஸ் சரணடைந்த பின்னர் குடியரசுக் கட்சி அரசாங்கம் தொழிலாளர்களை நிராயுதபாணி ஆக்க முயற்சித்தது. போரானது ஏற்கனவே அவர்களின் சினத்தை கிளறிவிட்டிருந்தது. அவர்கள் போருக்கு முன்னர் இருந்த அதே தொழிலாளர்களைப்போல் தொழிற்சாலைக்கு திரும்பிப்போக விரும்பவில்லை. பாரிஸ் பாட்டாளி வர்க்கத்தினர் தங்களது ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தனர். ஆயுதம் ஏந்திய தொழிலாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இது 1871 மார்ச் 18ல் ஆகும். வெற்றிபெற்ற தொழிலாளர்கள் பாரிசின் எஜமானர் ஆனார்கள் மற்றும் மார்ச் 28ல் அவர்கள் கம்யூனின் பெயரில் பாரிசில் ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவினர். கம்யூன் நீண்டகாலம் நிலைக்கவில்லை. 28 மே அன்று அதன் கடைசிப் பாதுகாப்பாளர்கள் முதலளித்துவ கும்பலின் படுகொலைக்கு எதிராக நடத்திய வீரஞ்செறிந்த எதிர்ப்புக்குப் பின்னர் வீழ்ச்சியுற்றனர். பின்னர் பாட்டாளி வர்க்கப் புரட்சியில் பங்கேற்றவர்களுக்கு எதிராக வாரங்கள் மாதக்கணக்கிலான இரத்தம் தோய்ந்த ஒடுக்குமுறைகள் ஆரம்பமாயின. ஆயினும், குறுகிய காலமே நீடித்திருந்தாலும், கம்யூனானது பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றில் மாபெரும் நிகழ்வாக தொடர்ந்து இருந்தது. பாரிஸ் தொழிலாளர்களின் அனுபவத்தின் அடிப்படையில், உலகப் பாட்டாளி வர்க்கமானது முதல் தடவையாக பாட்டாளி வர்க்கப் புரட்சி என்றால் என்ன, அதன் இலக்குகள் என்ன, அதன் பாதை வழி என்ன என்பனவற்றைக் கண்டுகொண்டது.

அனைத்து வெளிநாட்டினரும் தொழிலாளர் அரசாங்கத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்று உறுதிப்படுத்தி கம்யூன் தொடங்கியது. அது அறிவித்தது: “கம்யூனின் பதாகை உலக குடியரசின் பதாகை.”

அது அரசிலிருந்தும் பள்ளிகளிலிருந்தும் மதத்தை வெளியேற்றியது, மரணதண்டனையை ஒழித்தது, பேரினவாதத்தின் நினைவுச்சின்னமான —Vendome Column ஐ கவிழ்த்தது– அனைத்துக் கடமைகளையும் பதவிகளையும் மக்களின் உண்மையான சேவகர்களுக்கு மாற்றியது, அவர்களது சம்பளத்தை ஒரு தொழிலாளியின் கூலிக்கு மேலாகாதவாறு வகுத்து அமைத்தது.

அஞ்சிய முதலாளித்துவவாதிகளால் மூடப்பட்ட தொழிற்சாலைகளும் நூற்பாலைகளும் பொதுச் செலவில் உற்பத்தியை ஆரம்பிக்கும் பொருட்டு, கணக்கெடுக்கப்பட்டன. பொருளாதாரத்தை சோசலிச வழியில் ஒழுங்கமைப்பதை நோக்கிய முதல் அடி வைப்பாக இது இருந்தது.

கம்யூனானது அதன் அனைத்து திட்டங்களையும் வெற்றிகொள்ள முடியவில்லை: அது நசுக்கப்பட்டது. பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம், உடனடியாக அதன் வர்க்கக் கூட்டாளியாக மாறியிருந்த, அதன் “தேசிய எதிரியான” பிஸ்மார்க்கின் உதவியுடன், அதன் உண்மையான பகைவனான தொழிலாள வர்க்கத்தின் எழுச்சியை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. கம்யூனின் திட்டங்களும் பணிகளும் பலனளிக்க தொடங்கவில்லை. ஆனால் அவை முழு உலகிலும் இருக்கின்ற பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த புதல்வர்களின் ஆன்மாவிற்குள் நுழைந்துவிட்டன; அவை எமது போராட்டத்தின் புரட்சிகர மரபுரிமையாக ஆயின.

இப்பொழுது, 1917 மார்ச் 18ல் கம்யூனின் பிம்பம் என்றுமிராத வகையில் மிகத்தெளிவாக எம்முன் எழுகிறது: எம்மை பொறுத்தவரை, நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர், நாம் மாபெரும் புரட்சிகர யுத்தங்களின் சகாப்தத்திற்குள் மீண்டும் ஒருமுறை நுழைந்திருக்கிறோம்.

உலகப் போரானது பல இலட்சக் கணக்கான உழைக்கும் மக்களை அவர்களின் வழக்கமான உழைப்பு நடவடிக்கைகள் மற்றும் மறுமலர்ச்சியிலிருந்தும் வெளியே இழுத்துப் போட்டிருக்கிறது. இப்பொழுது வரைக்கும், இது ஐரோப்பாவில் மட்டும் நிகழ்ந்திருக்கிறது; நாளை அது அமெரிக்காவிலும் நிகழலாம். தொழிலாள வர்க்கத்திற்கு அத்தகைய வாக்குறுதிகள் முன்னர் ஒருபோதும் கொடுக்கப்படவில்லை; அத்தகைய பெருமகிழ்வை வெளிப்படுத்தும் இலக்குகளுக்கு முன்னர் அது இழுக்கப்பட்டிருக்கவில்லை; இந்தப் போரில் போல முன்னர் ஒருபோதும் புகழ்ந்து பேசப்பட்டிருக்கவில்லை. “தாயகத்தை காப்போம்” என்று அழைக்கப்படுகின்ற பொய்யின் பெயரில் சொத்துடைமை வர்க்கங்கள் மக்களிடமிருந்து அந்த அளவுக்கு இரத்தத்தை கோரும் துணிவை முன்னர் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை. தொழிலாளர்கள் இப்பொழுது ஏமாற்றப்பட்டு, காட்டிக் கொடுக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டது போல் முன்னர் ஒருபோதும் இந்த அளவு ஏமாற்றப்பட்டவில்லை.

இரத்தத்தாலும் சேறாலும் நிரம்பி வழிந்த பதுங்கு குழிகளில், பட்டினி கிடக்கும் நகரங்களில், கிராமங்களில், பல இலட்சக் கணக்கானோரின் இதயங்கள் உளக்கொதிப்பினாலும், மனமுறிவினாலும் கடுஞ்சீற்றத்தாலும் நிரம்பியிருக்கின்றன. மற்றும் இந்த உணர்வுகள் சோசலிச சிந்தனையுடன் இணையும்பொழுது புரட்சிகர பேரவாவாக மாறுகின்றன. நாளை அதன் சுடர், உழைக்கும் மக்களின் சக்திமிக்க எழுச்சிகளில் மேலே வெடித்துக் கிளம்பும்.

ரஷ்யாவின் பாட்டாளி வர்க்கமானது புரட்சியின் பெரும் நெடுஞ்சாலைக்குள் ஏற்கனவே வெளிப்பட்டுவிட்டது, மற்றும், அதன் தாக்குதலின் கீழ் எதேச்சாதிகாரத்தின் மிக அவமானகரமான கோட்டைகள் வீழ்ந்து நொருங்குகின்றன. ஆயினும், ரஷ்யாவில் நிகழும் புரட்சியானது ஐரோப்பா முழுமையினதும் மற்றும் முழு உலகினதும் பாட்டாளி வர்க்க எழுச்சியின் ஒரு முன்அறிவிப்பாளனாக மட்டுமே இருக்கிறது.

“கம்யூனை நினைவு கொள்!” —சோசலிஸ்டுகளாகிய நாம் கிளர்ந்தெழும் தொழிலாள மக்களிடம் கூறுவோம். முதலாளித்துவ வர்க்கம் வெளிநாட்டு பகைவனுக்காக உன்னை ஆயுதபாணி ஆக்கியிருக்கிறதா? 1871ல் பாரிஸ் தொழிலாளர்கள் மறுத்ததைப்போல, முதலாளித்துவ வர்க்கத்திடம் ஆயுதங்களை திருப்பிக் கொடுக்க மறுங்கள்! கார்ல் லீப்னெஹ்ட் உம்மிடம் செய்யக் கூறியவாறு இந்த ஆயுதங்களை உங்களின் உண்மையான எதிரிக்கு எதிராக, முதலாளித்துவத்திற்கு எதிராக குறிவையுங்கள்! அரசு எந்திரத்தின் கரங்களிலிருந்து அதனைக் கிழித்து முதலாளித்து வன்முறையின் ஒரு ஆயுதம் என்பதிலிருந்து பாட்டாளி வர்க்கத்தின் சுய ஆட்சியின் சாதனமாக மாற்றுங்கள். கம்யூன் சகாப்தத்தில் இருந்த உங்களது முன்னோடிகளை விடவும் நீங்கள் இப்பொழுது ஒப்பிடமுடியாத அளவு பலம்பொருந்தியவர்களாக இருக்கிறீர்கள். அனைத்து ஒட்டுண்ணிகளையும் அவர்களது அரியாசனத்திலிருந்து உருட்டித் தள்ளுங்கள். நிலம், சுரங்கங்கள், ஆலைகள் அனைத்தையும் எடுத்து நீங்களே நிர்வகியுங்கள். உழைப்பில் சகோதரத்துவத்தையும், உழைப்பின் பயனைப் பங்கிடுவதில் சமத்துவத்தையும் பேணுங்கள்.

கம்யூனின் பதாகை உலக தொழிலாளர் குடியரசின் பதாகை !

நோவி மிர், 17, மார்ச் 1917.