ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India and Pakistan admitted to Shanghai Cooperation Organisation

இந்தியாவும், பாகிஸ்தானும் ஷங்காய் கூட்டுழைப்பு அமைப்பில் இணைக்கப்பட்டன

By Wasantha Rupasinghe
14 June 2017

இந்தியாவிற்கும் அதன் பரம எதிரியான பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் விரோதப் போக்கிற்கு மத்தியில், ஷங்காய் கூட்டுழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation-SCO) வருடாந்திர உச்சிமாநாடு கடந்த வாரம் காஜக்ஸ்தானில் இரண்டு நாட்களுக்கு நடைபெற்றபோது இவ்விரு நாடுகளுக்கும் இந்த அமைப்பின் முழு உறுப்பினராவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

மத்திய ஆசியா மற்றும் காஸ்பியன் பிராந்தியத்தில் அமெரிக்க புவிசார் அரசியல் மூலோபாயத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அங்கு ரஷ்யாவும், சீனாவும் மேலாதிக்கம் செய்யக்கூடிய பிராந்திய அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இது, காஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் போன்ற பல மத்திய ஆசிய நாடுகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த அமைப்பின் இரண்டு மிகமுக்கிய சக்திகளாக இருந்த ரஷ்யாவிற்கும், சீனாவிற்கும் இடையிலான வேறுபாடுகள் காரணமாக 2005 இல் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் உறுப்பினர் அனுமதி வழங்கப்படவில்லை. ரஷ்யா அதன் பல தசாப்தகால நட்பு நாடான இந்தியாவை இந்த அமைப்பின் முழு உறுப்பினராக்குவதற்கு அழுத்தம் கொடுத்துவந்த நிலையில், இதேபோன்ற காரணங்களுக்காக சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தது. சமீபத்திய ஆண்டுகளில், வாஷிங்டனின் ஆக்கிரோஷமான மற்றும் மோதல் போக்குடனான நிலைப்பாட்டுக்கு விடையிறுப்பாக, ரஷ்யாவும், சீனாவும் ஒன்றாக இணைந்து இந்தியாவும், பாகிஸ்தானும் இந்த அமைப்பில் முழு உறுப்பினர்களாவதற்கு வழிவகை செய்ய ஒப்புக்கொண்டனர்.

அமெரிக்கா அதன் இராணுவ மூலோபாய செயற்பட்டியலில் சீனாவிற்கு எதிராக இந்தியாவை ஒருங்கிணைக்க அதன் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளதுடன், மோடி அரசாங்கத்தின் கீழ், பெய்ஜிங்கிற்கு எதிரான வாஷிங்டனின் யுத்தத் தயாரிப்புகளில் இந்தியாவை ஒரு முன்னணி நாடாக திறம்பட மாற்றிவிட்டது. தென் சீனக் கடல் பகுதி சார்ந்த பிராந்திய மோதல்கள் குறித்த அமெரிக்காவின் கோரிக்கைகளையே, பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அதிகரித்தளவில் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஆகஸ்டில், இந்தியா தனது இராணுவ தளங்களை அமெரிக்க இராணுவ பயன்பாட்டிற்கு உட்படுத்தவும் ஒப்புக்கொண்டது.

அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பிற்கு, பாகிஸ்தானும், சீனாவும் தசாப்தங்களாக நீண்ட அவர்களது அரசியல், பொருளாதார மற்றும் இராணுவ பங்காண்மையை மேலும் உறுதிப்படுத்துவதன் மூலமாக விடையிறுத்துள்ளனர்.

பரந்த ஆசிய பிராந்தியத்தில் இந்தியா அதன் புவிசார் அரசியல் இலட்சியங்களை முன்னெடுக்க தனது SCO உறுப்பினர் தகுதி அனுமதிக்குமெனவும், அதிலும் குறிப்பாக, எரிபொருள் மூலவளங்கள் நிறைந்த மத்திய ஆசியா பகுதியில் அதன் பாதுகாப்பான அணுகுமுறைக்கு வழிவகுக்குமெனவும் நம்புகின்றது. “SCO உடன் இணைந்தது என்பது, மத்திய ஆசியாவில் இந்தியாவின் செல்வாக்கை குறைந்த செலவில் அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாகும்,” என்று கார்னெகி இந்தியாவில் ஒரு உறுப்பினரான கான்ஸ்டன்டினோ சேவியர் சமீபத்தில் கருத்து தெரிவித்தார்.

இந்திய உறுப்பினர் தகுதியை ஆதரிப்பதன் மூலம், தனது சொந்த நலன்களை தெற்கு ஆசியாவில் விரிவுபடுத்தவும், அமெரிக்க-இந்திய உறவுகளை பலவீனப்படுத்தவும் பெய்ஜிங் முனைந்துவருகிறது. சேவியர் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளபடி: “SCO வில் இந்தியா இணைந்ததன் மூலம், பிராந்திய ஒத்துழைப்பிற்கான தெற்காசிய அமைப்பு (South Asian Association for Regional Cooperation-SAARC), பல்துறை தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடாப் பகுதி முன்னெடுப்பு (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation-BIMSTEC) மற்றும் தெற்காசியாவின் ஏனைய பிராந்திய அமைப்புக்களிலும் சீனாவிற்கு முன்னோடியாக, இந்தியா உறுப்பினர் தகுதியை கோருவதற்கு வழிவகை செய்யமுடியும்.”

முழு SCO உறுப்பினர் தகுதி அவர்களுக்கு இருந்தபோதிலும், இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான போர் பதட்டங்கள் குறைந்து விட்டதற்கான எந்தவொரு அடையாளமும் தெரியவில்லை. மோடியும், அவரது பாகிஸ்தான் சமதரப்பினரான நவாஸ் ஷெரீபும் உச்சிமாநாட்டின் போது எந்தவொரு முறையான இருதரப்பு அல்லது தனிப்பட்ட பேச்சுவார்த்தையையும் நடத்த தவறிவிட்டனர். மாநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துக்கு முன்னர் மாலையில் தலைவர்களின் சாதாரண சந்திப்பின் போது நிகழ்ந்த ஒரு சிறிய சந்திப்பாகவே அது இருந்தது. ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தினரின் நலம் குறித்து மோடி விசாரித்தபோது அவர்கள் “வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்” என்று கூறப்படுகிறது.

SCO உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஜூன் 1 அன்று Hindustan Times பத்திரிகை இருதரப்பு கூட்டங்கள் எதற்கும் வாய்ப்பில்லை என்று அறிக்கை வெளியிட்டது. மேலும், பெயர் குறிப்பிடாத இந்திய அதிகாரி ஒருவர் பின்வருமாறு கூறியதாக மேற்கோளிட்டு காட்டியது: “பாகிஸ்தான் இராணுவம் அதன் இந்திய கொள்கையில் மிகவும் வலுவான பாத்திரம் வகிக்கிறது. பல்வேறு முனைகளில் உறவுகளை கெடுக்க சாத்தியமான அனைத்தும் அதனால் மேற்கொள்ளப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, எந்தவொரு சந்திப்பிற்கும் பாகிஸ்தானிடமிருந்து வேண்டுகோள் எதுவும் பெறப்படவில்லை.”

SCO உச்சிமாநாட்டில் மோடி உரையாற்றிய போது “பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம்” குறித்து மையப்படுத்தியதுடன், “நாங்கள் ஒருங்கிணைந்த மற்றும் வலுவான முயற்சிகளை எடுக்கும்வரை, ஒரு தீர்வு காண்பது என்பது சாத்தியமற்றது” எனவும் அறிவித்தார். எந்தவொரு நாட்டின் பெயரையும் குறிப்பிடாத போதும், இந்திய எதிர்ப்பு காஷ்மீர் பிரிவினைவாத குழுக்களை ஆதரிப்பதன் மூலம் தொடர்ந்து ஒரு மறைமுகப் போரை நடத்துவதாக புது தில்லி குற்றம் சாட்டுகின்ற பாகிஸ்தான் மீது தான் அவரது வெளிப்படையான இலக்கு இருந்தது.

இந்திய பிரதம மந்திரி தனது நாடு SCO உறுப்பினர் நாடுகளுக்கு மத்தியிலான “இணைப்பை” முழுமையாக ஆதரித்ததாக தெரிவித்தபோதும், “உள்ளடக்குதலும், நிலையானதன்மையும் அவசியமாகவுள்ள அதேவேளையில், இறையாண்மையும், பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்படவேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார். “இறையாண்மை” பிரச்சினையை மேற்கோளிட்டு, சில வாரங்களுக்கு முன்னர் சீனாவின் ஒரே இணைப்பு, ஒரே பாதை (One Belt, One Road – OBOR) உச்சிமாநாட்டை இந்தியா புறக்கணித்ததில் இந்த கருத்துக்கள் குறிப்பிடத்தக்கவையாகும். OBOR இன் ஒரு பகுதியாக, 46 பில்லியன் டாலர் ($46 billion) மதிப்பிலான சீனா மற்றும் பாகிஸ்தானின் பொருளாதார வழித்தடம் (China and Pakistan Economic Corridor-CPEC) இந்தியா இன்னும் உரிமைகோருகின்ற பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதி ஊடாக செல்கின்றது.

SCO வின் உறுப்பினராக உள்ளபோதும், CPEC மற்றும் OBOR திட்டங்கள் மீதான எதிர்ப்பை இந்தியா தொடரும் என்பதையே “இறையாண்மைக்கு மரியாதை” எனும் மோடியின் குறிப்பு காட்டுகிறது. வாஷிங்டனின் செயற்பட்டியலுக்கு இணங்க புது தில்லியும், இந்த திட்டங்கள் தெற்கு ஆசியாவிலும், யூரேஷியாவிலும் சீனாவின் பூகோள அரசியல் செல்வாக்கை பொதுவாக கணிசமான வகையில் மேம்படுத்தும் என்பதுடன் பாகிஸ்தானின் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையும் உயர்த்தும் என்று கவலை கொண்டுள்ளது.

கடந்த ஆண்டில், இரண்டு தெற்கு ஆசிய நாடுகளுக்கு இடையில் போர் பதட்டங்கள் மோசமான வகையில் அதிகரித்துள்ளன. கடந்த செப்டம்பரில், பாகிஸ்தானின் எல்லைப்பகுதிக்குள் “நுட்பமான தாக்குதல்” ஒன்றை தொடங்க இந்திய அரசாங்கம் அதன் இராணுவத்திற்கு உத்தரவிட்டது. பாகிஸ்தானுடனான “மூலோபாய தடையை” நேருக்கு நேராக முடிவுக்கு கொண்டுவர நோக்கம் கொண்டே இந்தியாவின் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று மோடி பெருமையடித்துக் கொண்டார். அப்போதிருந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பகுதிகளை பிரிக்கும் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் (Line of Control-LoC) ஊடாக நடைபெறும் துப்பாக்கி சூடு தாக்குதல் பரிமாற்றங்களினால் உறவுகள் மிகவும் மோசமடைந்துவிட்டன. அணுசக்தி ஆயுதங்களை பிரயோகிப்பதற்கான சாத்தியங்கள் உட்பட இருதரப்பும் போர் அச்சுறுத்தல்களை ஒருவருக்கொருவர் விடுத்துள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியுடன் சேர்த்து பூஞ்ச் மற்றும் ரஜோவ்ரி போன்ற எல்லைப்புற மாவட்டங்களின் மூன்று பிரிவுகளின் பாதுகாப்புப் பகுதிகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும் இலக்குவைத்து தாக்கிய பின்னர், அதற்கு எதிராக இந்திய இராணுவம் ஒரு பெரும் தாக்குதலை தொடங்கியதாக ஜூன் 11 அன்று Daily Excelsior பத்திரிகை அறிவித்தது. பதிலடியான துப்பாக்கி சூடு தாக்குதலில் குறைந்தபட்சம் ஒன்பது பாகிஸ்தானிய இராணுவ காவல் அரண்களும், பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டதாக செய்தித்தாள் அறிவித்தது. ஒரு நாள் கழித்து, அதன் இராணுவத் தலைவரான ஜெனரல் கமர் ஜாவெத் பாஜ்வா, முசாஃப்ராபாத்துக்கும், எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சில முன்னோடி காவல் அரண்களுக்கும் விஜயம் செய்த பின்னர் பாகிஸ்தான் அதன் தாக்குதல்களை மேலும் தீவிரப்படுத்தியது.

ஜூன் 12 அன்று, எல்லை கட்டுப்பாட்டு கோடு ஊடாக இந்திய துருப்புக்கள் நடத்திய பீரங்கி தாக்குதல்களினால் இரண்டு இளைஞர்கள் கொல்லபட்டதாகவும், மேலும் மற்றொரு மூன்று பேர் காயமடைந்ததாகவும் Inter Services Public Relations ல் இருந்து மேற்கோளிட்டு, பாகிஸ்தான் இராணுவ ஊடகப் பிரிவான Geo News அறிவித்தது. இரண்டு நாட்களுக்கு முன்பாக, சிராக்கோட்டில் 70 வயதான முதியவர் ஒருவர் இந்திய பீரங்கி தாக்குதலினால் கொல்லப்பட்டார். இவை குறித்து, இந்திய துணை உயர் ஆணையர் J.P. சிங்குக்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் நீதிமன்ற அழைப்பு விடுத்ததுடன், இந்திய துருப்புகளினால் “தூண்டப்படாத” துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து ஒரு உத்தியோகபூர்வ எதிர்ப்பையும் தாக்கல் செய்தது.

இந்த மாத தொடக்கத்தில், ஒரு “பதிலடி துப்பாக்கி சூடு” தாக்குதலில் பாகிஸ்தானிய படையினர் ஐந்து பேர் கொல்லப்பட்டதாகவும், மற்றுமொரு ஆறு பேர் காயமடைந்ததாகவும் இந்திய இராணுவம் அறிவித்தது. மேலும், இந்திய இராணுவ படையினரின் தாக்குதலினால் இரண்டு பாகிஸ்தானிய பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்றும், மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் என்றும் ஒரு பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்தார்.