ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Mass abstention overshadows Macron victory in French legislative elections

பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தலில் பாரிய வாக்குப்பதிவின்மையை, மக்ரோனின் வெற்றி குறித்துநிற்கிறது

By Alex Lantier
12 June 2017

நேற்று நடந்த பிரெஞ்சு நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இமானுவல் மக்ரோனின் குடியரசை நோக்கி முன்னேறுவோம் கட்சி (La République En Marche - LREM) மிகப்பெரும் பெரும்பான்மை பெறுகையில், வரலாறு காணாத வாக்குப்பதிவு வீழ்ச்சி ஆதிக்கம் செலுத்தியது. கிட்டத்தட்ட 51.2 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை, இது இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் முதல்முறையாக சிறுபான்மை எண்ணிக்கையிலான வாக்காளர்களே நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்ற நிகழ்வாய் அமைந்தது.

தொழிலாளர்களும் இளைஞர்களும் பெருவாரியாக தேர்தலைப் புறக்கணித்தனர். மூத்த குடிமக்களில் 70 சதவீதம் பேர் தேர்தலில் வாக்களித்திருந்தார்கள் என்றாலும், முப்பது வயதுக்குக் கீழான வாக்காளர்களில் சுமார் 30 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்தனர். தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக நடத்தப்பட்டிருந்த கருத்துக்கணிப்புகள், “உழைக்கும் மக்கள் வகைகள்” என்பதாய் அழைக்கப்படுகின்ற உடலுழைப்புத் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பிரிவில் 56 சதவீதம் பேர் தேர்தலைப் புறக்கணிக்க திட்டமிட்டதைக் காட்டின.

ஒரு நிரந்தரமான அவசரகாலநிலை, தொழிலாளர்களுக்கான பாதுகாப்புகள் மீது வெட்டும் தாக்குதல்கள் மற்றும் கட்டாய இராணுவ சேவைக்கு மீண்டும் திரும்புவது ஆகியவற்றுக்கு ஆலோசனை வைக்கின்ற மக்ரோனின் ஒரு எதிர்ப்புரட்சிகரமான வேலைத்திட்டத்தை ஊக்குவிப்பதற்கு ஊடகங்கள் செய்யும் பிரச்சாரத்தின் மீது பிரெஞ்சு மக்கள் ஒரு திட்டவட்டமான மறுதலிப்பான தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் —Le Monde எழுதியதைப் போல, மக்ரோன் அவரது வேலைத்திட்டத்தைத் திணிப்பதற்கு “கடிவாளமற்ற அதிகாரங்களை” எடுத்துக் கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிப்பதே இதன் நோக்கமாய் இருக்கிறது— முடிவுகள் நாடாளுமன்றத்தில் LREM க்கு அறுதிப் பெரும்பான்மையைக் கொடுக்கும் என்பதாகவே தெரிகிறது. ஆயினும், தேர்தல் பொறிமுறைகள் மக்ரோனுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு சவாலில்லாத பிடியைக் கொடுத்தாலுமே கூட, மக்களின் ஒரு சிறுபான்மை எண்ணிக்கையோரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் இந்தப் பெரும்பான்மையானது அவரது வேலைத்திட்டத்தை திணிப்பதற்கு எந்த அங்கீகாரத்தையும் கொண்டிருக்காது.

LREM 32 சதவீத வாக்குகளை பெற்றது, வலதுசாரி குடியரசுக் கட்சி 21 சதவீத வாக்குகளையும், நவ-பாசிச தேசிய முன்னணி 13.9 சதவீத வாக்குகளையும், ஜோன்-லுக் மெலன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (FI) இயக்கம் 10.9 சதவீத வாக்குகளையும், சோசலிஸ்ட் கட்சி 13.3 சதவீத வாக்குகளையும், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) 3.3 சதவீத வாக்குகளையும் பெற்றன. தொழிலாளர் போராட்டம் (Lutte ouvrière - LO) மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) இரண்டும் சேர்ந்து வெறும் 0.08 வாக்குகளை மட்டுமே பெற்றன.

ஒருவர், இரண்டாவது சுற்றுக்கு முன்னேற 12.5 சதவீத வாக்குகளுக்கு அதிகமாய் பெற வேண்டும், இரண்டாவது சுற்றில் யார் அதிக வாக்கு பெறுகிறார்களோ அவர் வெற்றி பெறுவார். இருக்கின்ற தேர்தல் முறையைக் கொண்டு பார்த்தால் LREM நாடாளுமன்றத்தில் ஒரு மிகப்பெரும் பெரும்பான்மையை பெறும் நம்பிக்கை கொள்ள முடியும்.

பதிவுசெய்த வாக்காளர்களில் வெறும் 16 சதவீதம் வாக்குகளையே LREM பெற்றிருந்த போதிலும் கூட, நேற்றைய வாக்களிப்பின் அடிப்படையிலான ஆரம்பகட்ட கணிப்புகளின் படி, அது 577 இருக்கைகள் கொண்ட தேசிய நாடாளுமன்றத்தில் 400 முதல் 450 வரை தொகுதிகளை வென்று ஒரு நசுக்கித்தள்ளும் பெரும்பான்மையை பெறக் கூடும். LRக்கு 70 முதல் 110 தொகுதிகள் வரை கிடைக்கும், PSக்கு 20 முதல் 30 வரை கிடைக்கும், FI-PCF கூட்டணிக்கு 8 முதல் 18 வரை கிடைக்கக் கூடும், FNக்கு 7 முதல் 12 தொகுதிகள் கிடைக்கலாம்.

LREM க்கு கிடைத்த வாக்குகள் மீதான ஆரம்ப கட்ட பகுப்பாய்வுகள் அவை மிகவும் பலவகைப்பட்டவையாக இருப்பதையும் ஆகவே அது எளிதில் நொருங்கிவிடத்தக்கது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. சீருதிருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் குறித்த LREM இன் மேலோட்டமான வாக்குறுதிகள், பாரிஸில், மிக முதலாளித்துவ தன்மை கொண்ட 16 ஆம் வட்டாரம், மற்றும் 19 ஆம் வட்டாரத்தின் தொழிலாள வர்க்க அண்டை அருகாமைப் பகுதிகள் இரண்டையுமே அது வெல்வதற்கு அனுமதித்தது.

வாக்குப்பதிவிலான வீழ்ச்சியின் காரணத்தால், மக்ரோன் மக்கள் மீது அவரது திட்டநிரலைத் திணிக்கத் தொடங்கும்போது அவரது ஜனநாயகரீதியான அங்கீகரிப்பின்மை தீவிரமான அரசியல் பின்விளைவுகளைக் கொண்டுவரும் என்று ஏராளமான அரசியல்வாதிகளும் ஊடக வருணனையாளர்களும் பகிரங்கமாய் கவலை வெளியிட்டனர்.

“நமது ஜனநாயகம் நோய்வாய்ப்பட அதுவே அனுமதிக்கக் கூடாது” என்று அறிவித்த PS இன் முதல் செயலரான ஜோன் கிறிஸ்தோப் கம்படெலிஸ் மேலும் சேர்த்துக் கொண்டார்: “முதல் சுற்றில் வெறும் 24 சதவீத வாக்குகளைப் பெற்று, இரண்டாவது சுற்றில் தேசிய முன்னணியை மக்கள் நிராகரித்த ஒரே அடிப்படையில் வெற்றி பெற்ற ஒரு ஜனாதிபதி, ஜனநாயகப் பிரதிநிதித்துவத்தில் ஏகபோகத்தைப் பெறுவதென்பது ஆரோக்கியமானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல”.

நேற்றிரவு France Info கருத்திட்டிருந்தது: “இது ஒரு கரும்புள்ளி, மிகப்பெரும் கரும்புள்ளி: வருங்கால நாடாளுமன்ற அவை பிரான்சின் ஒரு அரசியல் கேலிச்சித்திரமாக இருக்கின்ற ஒரு பிம்பத்தையே கொடுக்கும். இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமான அறிகுறி அல்ல.”

வரும் ஞாயிறன்று நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் சுற்றில் மிக அதிக எண்ணிக்கையில் பங்கேற்க வாக்காளர்களுக்கு விண்ணப்பம் செய்யும் நிலைக்கு மக்ரோன் அரசாங்கம் தள்ளப்பட்டது. ஜனாதிபதித் தேர்தலை காட்டிலும் “குறைந்த எண்ணிக்கையில் நீங்கள் வாக்களிக்க வந்திருக்கிறீர்கள்” என்று அறிவித்த பிரதமர் எடுவார்ட் பிலிப், “வாக்காளர்கள் அடுத்த ஞாயிறன்று வாக்களிக்கச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த” தான் கடமைப்பட்டிருப்பதாய் உணர்வதாக மேலும் சேர்த்துக் கொண்டார்.

இத் தேர்தல் உடனடியாக கவனத்தில் எடுக்கப்படவேண்டிய ஒரு முரண்பாட்டால் குறிக்கப்படுவதாய் இருக்கிறது. மக்ரோன் ஜேர்மனியுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இணைந்து உருவாக்கியிருக்கின்ற சிக்கனநடவடிக்கைகள், இராணுவப் பெருக்கம், மற்றும் போலிஸ்-அரசு ஆட்சி ஆகியவற்றின் ஒரு வேலைத்திட்டத்திற்கு பரந்த எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் சென்ற ஆண்டில் அப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் வெறுப்புசம்பாதித்திருந்த PS அரசாங்கத்தின் கீழ் பொருளாதார அமைச்சராக இருந்த மக்ரோனால் ஸ்தாபிக்கப்பட்ட LREM, ஒரு சில மாதங்களிலேயே, PS மற்றும் LR இன் மிகப்பெரும் கன்னைகளை வெற்றிகண்டு பிரான்சின் பிரதான முதலாளித்துவக் கட்சியாக தன்னை ஸ்தாபித்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

இது அனைத்திற்கும் மேல், ஹாலண்டின் கீழ் நடந்தேறிய வலது நோக்கிய கூர்மையான நகர்வை மக்ரோன் இன்னும் தீவிரப்படுத்துவார் என்பது துல்லியமாய் தெளிவாக தெரிந்தும் கூட அவருக்கு ஓசையில்லாமல் ஆதரவு வழங்கிய மெலோன்சோன் மற்றும் FI, அத்துடன் NPA மற்றும் LO ஆகியோரது துரோகப் பாத்திரத்துடன் பிணைந்ததாகும். மக்ரோனும் லு பென்னும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறிய சமயத்தில், மெலோன்சோன் மற்றும் NPA இருவருமே, மக்ரோனை வெளிப்படையாக வழிமொழியாத அதேநேரத்தில், மக்ரோன் வெற்றிபெறுவதை அவர்கள் மவுனமாக ஆதரிப்பதை தெளிவாக்கினர்.

NPA, லு பென்னுக்கு எதிராய் மக்ரோனுக்கு வாக்களிக்கக் கூடியவர்களை அது “புரிந்து கொள்வதாக” தெரிவித்தது என்றால், மெலன்சோன் அதன்பின்னர் மக்ரோனின் பிரதமராக சேவை செய்வதற்கும், தேசிய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றுவதில் மக்ரோனின் அமைச்சர்களுக்கு ஆலோசனையளிக்கவும் முன்வந்தார்.

அவர்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சி (PES) முன்னெடுத்த அரசியல் நிலைப்பாட்டை நிராகரித்தனர். PES லு பென்னுக்கு எதிராக மக்ரோன் ஒரு ஜனநாயகத்தின் பாதுகாவலராய் இருப்பார் என்பதான பொய்யான கூற்றுகளை நிராகரித்தது, ஜனாதிபதித் தேர்தலின் இரண்டாம் சுற்றை செயலூக்கத்துடன் நிராகரிப்பதற்கு அழைப்பு விடுத்தது. மக்ரோனோ அல்லது லு பென்னோ ஜனாதிபதிப் பதவியை யார் வென்றாலும் தவிர்க்கவியலாமல் தொழிலாளர்களுக்கு எதிராக அவர் தொடுக்கப்போகும் தாக்குதல்களுக்கு எதிராய் போராடுவதற்கான அரசியல்ரீதியாக சுயாதீனமானதொரு முன்னோக்கைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவதற்கு அது முனைந்து கொண்டிருந்தது என்பதை அது விளக்கியது.

மக்ரோனை எதிர்ப்பதற்கான ஒரு முன்னோக்கை வழங்குகின்ற பொறுப்பு மொத்தத்தையும் மெலோன்சோனும் NPA உம் முழுமையாகக் கைதுறந்தமையானது, கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலமாக, அதாவது பிரான்சின் கடைசி பெரும் புரட்சிகர அனுபவமான, 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பிந்தைய காலத்தில், பிரான்சின் “இடது”களாக கூறி கடந்து சென்றிருக்கும் கட்சிகளது வரலாற்றுப்பெரும் உருக்குலைவின் அடியொற்றி வருவதாகும்.

PS, 1971 இல் அது ஸ்தாபிக்கப்பட்ட சிறிது காலத்திற்கெல்லாம் முன்னணிக் கட்சியாகி விட்டிருந்தது. 2012 தேர்தலுக்குப் பின்னர் நாடாளுமன்றத்தில் அது 331 இருக்கைகளுடன் பெரும்பான்மையையும் வென்றிருந்தது, ஆனால் ஹாலண்டின் ஜனாதிபதிக் காலத்திற்குப் பின்னர், இப்போது அது வெறும் கையாலாகாத உபயோகமற்ற பாகமாகக் குறைந்து போய்விடும் நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறை அது அதிகாரத்துக்கு வந்த போதும் ஏகாதிபத்தியப் போர் மற்றும் சமூக சிக்கன நடவடிக்கைகளது மக்கள்விரோதக் கொள்கைகளை முன்னெடுத்ததற்கான விலையை அது கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதிலிருப்பவர்களில் பெரும்பகுதியினர் LREM இல் இணைவதன் மூலமாக தங்களது அரசியல்வாழ்க்கையை இன்னுமொரு சுற்று நடத்தலாம் என கணக்கிட்டுள்ளனர்.

ஆயினும் PS மற்றும் பசுமைக் கட்சியின் மற்ற பல உயர்நிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். PS இன் முதல் செயலர் Cambadélis, ஜனாதிபதி வேட்பாளர் Benoît Hamon, முன்னாள் உள்துறை அமைச்சரான Matthias Fekl, முன்னாள் நீதி அமைச்சரான Elizabeth Guigou, மற்றும் பசுமைக் கட்சியின் முன்னாள் தலைவரான Cécile Duflot ஆகியோரும் இதில் அடங்குவர்.

PCF இன் இறுகிப்போன அதிகாரத்துவத்தின் —1970களில் PS உடன் ஒரு நீண்ட காலக் கூட்டணி ஒன்றை உருவாக்கியதற்குப் பின்னர், எல்லாவற்றுக்கும் மேல் 1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் கலைக்கப்பட்டதற்கு பின்பு இது உருக்குலைந்து போனது— வேட்பாளர்களில் வெறும் 20 பேர் மட்டுமே நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் சுற்றில் இருப்பார்கள். ஒரு நாடாளுமன்றக் குழுவாக அந்தஸ்து பெறுவதற்கு குறைந்தபட்சம் 15 இருக்கைகளையாவது வென்றாக வேண்டும் என்ற நிலையில், இது அந்த அந்தஸ்தை இழக்கவும், அதன்மூலம் சின்னாபின்னமாக்குகிறதாய் அல்லது இன்னும் மரணகரமானதாய் நிரூபணமாகத் தக்க வகையிலான நிதியாதார இழப்பு அச்சுறுத்தலுக்கும் ஆளாகியுள்ளது.

மக்ரோனுக்கு எதிராய் தொழிலாள வர்க்கத்தை அரசியல்ரீதியாய் சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கு இந்த சக்திகள் முட்டுக்கட்டையிட்டு வந்த மட்டத்திற்கு, மக்ரோன், அரசாங்கத்தின் மற்ற அங்கங்களின் மீதும் ஒரு மேலாதிக்கமான நிலையை உருவாக்குவதற்கும் தொழிலாளர்களுக்கு எதிராய் ஆழமான தாக்குதல்களுக்கு தயாரிப்பு செய்வதற்கும் அவரை அனுமதித்திருக்கிறது. எவ்வாறாயினும், பாரிய வாக்குப்பதிவு வீழ்ச்சியானது அவரது பிற்போக்குத்தனமான வேலைத்திட்டத்தை திணிப்பதற்கு எந்த அங்கீகார சாயலையும் கூட இல்லாது செய்திருக்கின்ற நிலைமைகளின் கீழ், அவர் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வெடிப்பான எதிர்ப்புக்கு முகம்கொடுக்கவிருக்கிறார்.