ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Record abstention overshadows Macron victory in French legislative election

பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தலில் சாதனையளவிற்கான வாக்களிக்காமை மக்ரோனின் வெற்றியையும் விஞ்சி நிற்கிறது

By Alex Lantier
19 June 2017

இரண்டாம் சுற்று பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களில் சாதனையளவிற்கு 57 சதவீதத்தினர் வாக்களிப்பைத் தவிர்த்துள்ளமை, மே 7 இல் ஜனாதிபதியாக இமானுவல் மக்ரோன் தேர்வானதற்குப் பிந்தைய அவரது அரசியல் வேலைத்திட்டம் மீது பிரெஞ்சு மக்களின் முதல் தீர்ப்பை வழங்குகிறது. நிரந்தரமாக அவசரகால நிலையைக் கொண்டு வருவது, உத்தரவாணைகள் மூலம் சிக்கன நடவடிக்கை திட்டங்களுக்கு கட்டளையிடுவது மற்றும் நாட்டை இராணுவமயப்படுத்துவது என அவரது ஜனநாயக விரோத கொள்கை, மக்களின் பெரும் பெரும்பான்மையினரிடையே வெறுப்பு அல்லது விரக்தியை மட்டுமே கொண்டு வந்துள்ளது.

எந்தவொரு நிஜமான எதிர்ப்பும் இல்லாதிருப்பதிலிருந்து மக்ரோன் ஆதாயமடைந்துள்ளார். இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில், ஜோன்-லூக் மெலோன்சோனின் அடிபணியா பிரான்ஸ் (France insoumise – FI) இயக்கம் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) ஆகியவை நவ-பாசிசவாத தேசிய முன்னணிக்கு (FN) மக்ரோனை ஒரு ஜனநாயக மாற்றீடாக அவை கருதுவதைத் தெளிவுபடுத்தி இருந்தன. மக்ரோனின் குடியரசை நோக்கி முன்னேறுவோம் (La République en Marche - LREM) இயக்கத்தைச் சுற்றி ஸ்தாபக கட்சிகள் ஐக்கியப்பட்டிருப்பதை எதிர்கொண்ட நிலையில், வாக்களிக்க சென்றவர்கள், மக்ரோன் விரும்பிய பெரும்பான்மையை வழங்கினர். முதல் சுற்று தேர்தலில் பதிவு செய்த வாக்காளர்களில் வெறும் 16 சதவீதத்தினர் மட்டுமே அவர் அமைப்பிற்கு வாக்களித்திருந்த நிலையில், அக்கட்சி தேசிய சட்டமன்றத்தின் 577 ஆசனங்களில் 361 என்ற முழு பெரும்பான்மையை பெறக்கூடும்.

ஆரம்ப மதிப்பீடுகளின்படி, குடியரசுக் கட்சியினர் (LR) 128 ஆசனங்களை பெறலாம், மெலோன்சோனின் FI 18 ஆசனங்களும், ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) 10 ஆசனங்களும் பெறக்கூடும், தேசிய முன்னணி 8 ஆசனங்களைப் பெறக்கூடும். LREM க்கு ஒதுக்கப்பட்டுள்ள 355 ஆசன வேட்பாளர் பட்டியலில் நாற்பத்தி இரண்டு, LREM உடன் தேர்தல் உடன்பாட்டை எட்டியுள்ள பிரான்சுவா பேய்ரூவின் ஜனநாயக இயக்க (Le Mouvement démocrate - MoDem) அங்கத்தவர்களுக்கு சென்றுவிடும்.

இந்த தேர்தல் சோசலிஸ்ட் கட்சியின் பொறிவுடன் சேர்ந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய அரசியலில் ஒரு சகாப்தத்தின் முடிவை சமிக்ஞை செய்கிறது. 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தம் தொடங்கியதற்கு சற்று பின்னர், 1971 இல் சோசலிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதற்குப் பின்னர் இருந்து பிரான்சின் "இடது" என்று கூறப்பட்டு செல்வாக்கு செலுத்தி வந்திருந்த இந்த சமூக ஜனநாயக கட்சி, சிதைந்து போயுள்ளது. அது 2012 நாடாளுமன்ற தேர்தல்களில் பெற்ற 331 ஆசனங்களில் இருந்து இன்று 46 ஆசனங்களாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

நேற்று மாலை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் உடனடியாக ஒரு தொலைக்காட்சிக்கு வழங்கிய உரையில், சோசலிஸ்ட் கட்சியின் முதல் செயலர் ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் அவர் இராஜினாமாவை அறிவித்தார். பாரீசில் சொல்ஃபெரினோ (Solférino) வீதியில் உள்ள அதன் தலைமையகத்தை விற்க வேண்டியிருக்கும் நிலையில் உள்ள சோசலிஸ்ட் கட்சி, செவ்வாயன்று காலை அதன் தலைமை செயலகத்தில் ஓர் அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.

புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) மற்றும் தொழிலாளர் போராட்டம் (LO) உட்பட "தீவிர இடது" (far left) என்று கூறப்பட்டவை, 2002 ஜனாதிபதி தேர்தல்களில் ஒட்டுமொத்தமாக 3 மில்லியன் வாக்குகள் பெற்ற இவற்றில் எதுவுமே ஒரு ஆசனத்தைக்கூட ஜெயிக்கவில்லை.

மக்ரோனின் பிரதம மந்திரி எடுவார்ட் பிலிப் அவரது திட்டநிரலை முன்நகர்த்த அவரது நாடாளுமன்ற பெரும்பான்மையை பயன்படுத்த இருப்பதாக அறிவித்து, தேர்தல் முடிவுகளுக்கு எதிர்வினையாற்றினார்: “இந்த ஞாயிறன்று, நீங்கள் குடியரசின் ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு தெளிவான பெரும்பான்மையை வழங்கி உள்ளீர்கள். பிரான்சிற்காக செயல்படுவது தான் அதன் ஒரே நோக்கமாக இருக்கும். பிரெஞ்சு மக்கள் அவர்களின் மிகப் பெரும்பான்மை வாக்குகள் மூலமாக, கோபத்திற்கு பதிலாக நம்பிக்கையையும், ஏமாற்றத்திற்குப் பதிலாக உறுதியையும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்,” என்றார்.

சமூகரீதியில் சீரழிக்கப்பட்ட வடக்கு பிரான்சின் நிலக்கரி படுகை உள்ள அவர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மரீன் லு பென், சோசலிஸ்ட் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் பெரும்பான்மை பிரிவுகளுடன் LREM கூட்டணியில் இருக்கும் நிலையில், சட்டமன்றத்தில் தேசிய முன்னணி மட்டுமே ஒரே எதிர்க்கட்சியாக இருப்பதாக அறிவித்தார். “பழைய கட்சிகள் எல்லாம் இப்போது அவற்றை உள்ளடக்கி உள்ள ஒரு இயக்கத்தின் துணைகோள்களாக மாறிவிட்டன,” என்றார். விகிதாச்சார பிரதிநிதித்துவத்திற்கு அழைப்புவிடுத்த அப்பெண்மணி, அரசாங்கத்தின் "சட்டபூர்வத்தன்மை மீதான பிரச்சினை" குறித்து பேசியதுடன், புலம்பெயர்ந்தோர் மீது ஒரு பழிவாங்கும் வகையிலான கண்டனத்தை வெளியிட்டார்.

இந்த வாக்கெடுப்பு மெலோன்சோனுக்கு மற்றொரு தோல்வியாக உள்ளது. மக்ரோனுக்கு இருக்கும் ஒரு நாடாளுமன்ற எதிர்ப்பின் திவாலான முன்னோக்கை ஊக்குவிப்பதற்காக, மெலோன்சோன் முதலில் ஜனாதிபதி தேர்தலில் மக்ரோனைத் தோற்கடிக்க சூளுரைத்தார். பின்னர், முதல் சுற்றிலேயே அவர் வெளியேறியதும், அவர் சட்டமன்ற தேர்தலை ஜெயித்து பிரதம மந்திரியாக ஆகவிருப்பதாக உறுதியளித்தார். எல்லா தேர்தல் கருத்துக்கணிப்புகளும் மெலோன்சோன் ஒரு சிறிய சிறுபான்மை ஆசனங்களை மட்டுமே வெல்வார் என்று சுட்டிக்காட்டிய நிலைமைகளின் கீழ், ஆச்சரியத்திற்கிடமின்றி, இந்த முன்னோக்கு தோல்விக்கு இட்டுச் சென்றது.

இப்போது அடிபணியா பிரான்சின் ஒரு "ஒத்திசைவான, ஒழுக்கமான, ஆக்ரோஷமான" நாடாளுமன்ற குழுவை பிரெஞ்சு மக்கள் சட்டமன்றத்தில் மேற்பார்வைக்கு வைத்திருப்பதாக அறிவித்து, மெலோன்சோன் உணர்ச்சிகரமாக விடையிறுத்தார்.

1991 இல் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தால் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதுடன் தொடங்கி, சோசலிஸ்ட் கட்சி பிரான்சுவா மித்திரோனின் கீழ் 1981 இல் முதலில் அதிகாரத்திற்கு வந்ததற்குப் பின்னர் இருந்து அது எதன் அடிப்படையில் அதன் கொள்கைகளை அபிவிருத்தி செய்திருந்ததோ, அத்தகைய சர்வதேச அரசியல் உள்ளடக்கத்தின் சிதைவு பிரான்சுக்குள் கண்டிருக்கும் வெளிப்பாடுதான் சோசலிஸ்ட் கட்சியின் பொறிவாக உள்ளது. 1991 க்குப் பின்னர் இருந்து ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகளும் நேட்டோ ஏகாதிபத்திய போர்களும் அரசியல் ஸ்தாபகத்தை ஆழமாக மதிப்பிழக்கச் செய்துள்ளதுடன், ஐரோப்பா எங்கிலும் தொழிலாளர்களிடையே கோபம் அதிகரித்து வருகிறது.

நிதிகளின் "எதிரி" ஆக மற்றும் ஒரு "சோசலிஸ்ட்" ஆக இருப்பதாக, முந்தைய ஜனாதிபதியான சோசலிஸ்ட் கட்சி தலைவர் பிரான்சுவா ஹோலாண்டின் எரிச்சலூட்டும் மற்றும் பொய் நம்பிக்கை கூற்றுக்களுக்கு எதிராக வாக்காளர்களின் கோபம் வெடித்தது. அவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகளை ஆதரித்ததுடன், லிபியா, சிரியா மற்றும் துணை-சஹாரா ஆபிரிக்காவில் ஏகாதிப்பத்திய போர்களை நடத்தினார், சிரிய போரில் பாரீஸூம் நேட்டோவும் பயன்படுத்தி வருகின்ற இஸ்லாமிய வலையமைப்புகள் நடத்திய பயங்கரவாத தாக்குதல்களுக்கு விடையிறுப்பாக அவர் அவசரகால நிலையைக் கொண்டு வந்தார். பாரிய போராட்டங்கள் மற்றும் மக்களில் 70 சதவீதத்தினரின் எதிர்ப்பிற்கு இடையிலும் சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்ட திருத்தத்தை திணிப்பதற்கான அவர் முயற்சியானது, மக்களிடையே ஹோலாண்ட் மதிப்பிழந்ததற்கு முக்கிய அடையாளமாக இருந்தது.

எவ்வாறிருப்பினும், மித்திரோனின் கீழ் முதல் ஜனாதிபதி பதவிகாலத்தில் தொடங்கி அக்கட்சி அபிவிருத்தி செய்து வந்திருந்த "சிக்கன நடவடிக்கை திட்டங்களை நோக்கிய திருப்பம்", ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஆதரவு மற்றும் முன்னாள் பிரெஞ்சு காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தின் ஏகாதிபத்திய போர்கள் என சோசலிஸ்ட் கட்சியின் அடிப்படை நோக்குநிலை ஹோலாண்ட் ஆல் மேலும் அபிவிருத்தி மட்டுமே செய்யப்பட்டிருந்தது.

நேற்று புதிதாக சோசலிஸ்ட் கட்சியின் பல உயர்மட்ட நிர்வாகிகள் அவர்களின் ஆசனங்களை இழந்தனர்: ஹோலாண்டின் முன்னாள் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மரியம் எல் கொம்ரி, கல்வித்துறை அமைச்சர் நாஜாத் வாலோத்-பெல்கசெம், உளவுத்துறை வல்லுனர் ஜோன் ஜாக் ஊர்வுவாஸ் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் "கிளர்ச்சியாளர்" பிரதிநிதி கிறிஸ்தியான் போல் ஆகியோர்.

மக்ரோன் மற்றும் நாடாளுமன்றத்தில் அவரது முழு பெரும்பான்மையால் தயாரிக்கப்பட்டு வருகின்ற சமூக எதிர்புரட்சிக்கு எதிராக எவ்வாறு போராடுவது என்பதுதான் இப்போது தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் பிரதான கேள்வியாக உள்ளது. அவர்கள் அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கும் ஓர் அவசரகால சட்ட நிலை மற்றும் பேர்லினுடனான ஒரு கூட்டணி மூலமாக ஐரோப்பிய இராணுவ படைகளைப் பெருமளவில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் அரசாங்கம் பிரெஞ்சு சமூக சட்டத்தில் மறுதிருத்தம் செய்ய தீர்மானகரமாக இருப்பது ஆகியவற்றால் அச்சுறுத்தலில் உள்ளனர்.

சர்வதேச அளவிலும் ஐரோப்பாவிலும் தொழிலாளர்களை ஒரு சுயாதீனமான, புரட்சிகர மற்றும் நிஜமான சோசலிச முன்னோக்கின் அடிப்படையில், வழமையான அரசியல் மற்றும் தொழிற்சங்க வடிகால்களுக்கு வெளியே போராட்டத்தில் பரந்தளவில் அணிதிரட்டுவன் மூலமாக மட்டுமே, மக்ரோனின் தாக்குதலை நிறுத்த முடியும். இருப்பினும் மக்ரோனின் வெட்டுக்களுக்கு முன்னால் மற்றொரு அடையாள தொழிற்சங்க போராட்டத்தை ஊக்குவிப்பதற்கான மெலோன்சோன் போன்ற பிரமுகர்களின் முயற்சிகள், தொழிலாளர்களின் கண்களில் மண்ணைத் தூவுவதற்கு ஒத்ததாகும்.

பாரிய வாக்கு புறக்கணிப்பை "குடிமக்களின் பொது வேலைநிறுத்தம்" என்று குறிப்பிட்ட மெலோன்சோன், “சமூக எதிர்ப்புக்கு" அழைப்புவிடுத்தார். அவர், “இந்த சூழல்களின் கீழ் அது சட்டபூர்வமான மொத்த எதிர்ப்பாகும்" என்று அறிவித்து, அவரைச் சுற்றி அரசியல் சக்திகளின் ஒரு பெரும் மறுகுழுவாக்கத்திற்கு அழைப்புவிடுத்தார். சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில்தான் மக்ரோன் அவரது சமூக தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறார் என்ற நிலையிலும், அச்சட்டம் மக்களிடையே ஆழமாக மதிப்பிழந்துள்ளது ஏற்கனவே தெளிவாக உள்ள போதினும், மெலோன்சோன் வெளிப்படையாகவே மக்ரோனின் சமூக நடவடிக்கைகளைக் கைவிட அவரை சமாதானப்படுத்தும் ஒரு கேவலமான முயற்சியில், மக்ரோனின் சமூக நடவடிக்கைகள் மீது ஒரு சர்வஜன வாக்கெடுப்பை ஏற்பாடு செய்யுமாறு முன்மொழிந்தார்.

மெலோன்சோன், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் தசாப்தங்களாக சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் சுற்றுவட்டத்தில் இயங்கி வந்துள்ள சகல கட்சிகளுடனும் விட்டுக்கொடுப்பின்றி உடைத்துக் கொள்வதுதான் முன்னோக்கி செல்வதற்கான ஒரே பாதையென பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l'égalité socialiste - PES) வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டுதவற்கு மாறாக அவர்கள், சோசலிஸ்ட் கட்சியுடன் கூட்டணிகளையும், ஏன் அக்கட்சியையே கூட உருவாக்குவதற்கும் செயற்பட்டார்கள். 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்குப் பின்னர் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் தலைமையில் சிக்கன கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்களின் தொடர்ச்சியான தோல்விக்குப் பின்னர், சோசலிஸ்ட் கட்சியின் பொறிவானது அவர்களின் சொந்த அரசியல் திவால்நிலையையே சுட்டிக் காட்டுகிறது.

மக்ரோன் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு, அரசியல் முன்னோக்கும் தலைமையும் வழங்க, தொழிலாள வர்க்கம் புரட்சிகர மார்க்சிசம் மற்றும் ட்ரொட்ஸ்கிசத்திற்கு திரும்பி, பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியை (PES) கட்ட வேண்டும் என்பதையே சோசலிஸ்ட் கட்சியின் பொறிவு எடுத்துக்காட்டுகிறது.