ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On-the-spot report from India
Maruti Suzuki worker condemns court verdict as “pre-determined”

இந்தியாவிலிருந்து கள நிலவர அறிக்கை

நீதிமன்றத் தீர்ப்பை “முன்கூட்டிய தீர்மானம்” என்று மாருதி சுசூகி தொழிலாளர்கள் கண்டனம் செய்கின்றனர்.

By our correspondents
16 June 2017

மானேசரிலுள்ள மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு ஆலையில் போர்குணமிக்க தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் மற்றும் மிருகத்தனமான தண்டனைகளைத் தகர்த்தெறிய போராடுபவர்களுடன் பேசுவதற்கு உலக சோசலிச வலைத் தள செய்தியாளர் குழு ஒன்று இந்திய தலைநகரமான தில்லி மற்றும் அதற்கு அருகிலுள்ள குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதிக்கு கடந்த மாதம் விஜயம் செய்தது.

ஜூலை 18, 2012 அன்று மாருதி சுசூகி நிறுவனத் தொழிற்சாலை தளம் ஒன்றில் நிறுவனத்தால் தூண்டிவிடப்பட்ட கைகலப்பு மற்றும் தீப்பற்றல் சம்பவத்தினால் உருவான புகையினை உள்ளிழுத்து அந்த நிறுவன மேலாளர் ஒருவர் மரணமடைந்தது குறித்து எழும்பிய ஜோடிக்கப்பட்ட கொலைக் குற்றச்சாட்டுக்களின் பேரில் 13 வாகனத் தொழிலாளர்களுக்கு கடந்த மார்ச் 18 அன்று ஆயுள் தண்டனை விதித்து குர்கான் மாவட்ட நீதிமன்றத்தின் ஒரு நீதிபதி அவர்களை தண்டித்தார். மேலும் சற்று குறைந்த குற்றச்சாட்டுக்களின் பேரில் மற்றொரு 18 தொழிலாளர்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனைகளும் விதிக்கப்பட்டது.

2011-12 இல் ஆலையின் நிறுவன சார்புடைய, மாநில அரசாங்க ஆதரவுபெற்ற தொழிற்சங்கத்திற்கு எதிராக கீழ்மட்ட தொழிலாளர்களின் கிளர்ச்சியின் விளைவாக உருவான மாருதி சுசூகி தொழிலாளர் சங்கத்தின் (MSWU) நிர்வாகக் குழுவின் அனைத்து 12 உறுப்பினர்களையும் உள்ளடக்கி 13 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலிடப்பட்டனர்.

தொழிலாள வர்க்கத்தை அச்சுறுத்தவும், தொழிலாளர்களை கடுமையாக சுரண்டுவது குறித்த அனைத்து தொழிலாளர்களின் எதிர்ப்பையும் இரக்கமின்றி ஒடுக்க அவர்களால் முடியுமென்று வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நிரூபிக்கவும் மாருதி சுசூகி தொழிலாளர்களை ஒரு உதாரணமாக்க இந்திய ஆளும் உயரடுக்கு உறுதிகொண்டுள்ளது.

13 தொழிலாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டுமென மார்ச் 17ம் தேதி  அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான விசாரணையின்போது ஹரியானா மாநில அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சிறப்பு வழக்கறிஞரான அனுராக் ஹூடா வலியுறுத்தியதற்கான காரணத்தை விளக்கியபோது அவர் பின்வருமாறு அறிவித்தார்: “நமது தொழில்துறை வளர்ச்சி வீழ்ச்சியடைந்துவிட்டதுடன், வெளிநாட்டு நேரடி முதலீடும் [Foreign Direct Investment-FDI] வறண்டு விட்டது. பிரதம மந்திரி நரேந்திர மோடி “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” திட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இத்தகைய சம்பவங்கள் நம்மைப் பற்றிய எண்ணம் மீதான ஒரு கறையாக உள்ளது.”

இந்தியாவிலுள்ள பெருநிறுவன கட்டுப்பாட்டு ஊடகங்களும், பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புகளும் சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்களின் தலைவிதி குறித்து ஒரு நிஜமான இருட்டடிப்பை பராமரித்து வருகின்றனர். பல வாரங்களாக, முக்கிய ஸ்ராலினிச கட்சியான இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of India – Marxist) ஆங்கில மொழி பத்திரிகையான People’s Democracy, மாருதி சுசூகி தொழிலாளர்களை குற்றவாளிகளாக தீர்மானித்து தீர்ப்பு வழங்கியது குறித்தும், அவர்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட்டது குறித்தும் எந்தவொரு செய்தியும் வெளியிடத் தவறிவிட்டது.

இந்த அமைதியான சதித்திட்டத்தை முறித்துக்கொள்ளும் விதமாக, தொழிற்சங்கத் தலைவர்கள், கீழ்மட்ட தொழிலாளர்கள் பெருமளவில் கைதுசெய்யப்பட்டது மற்றும் ஜப்பானியருக்கு சொந்தமான நிறுவனம் தொழிற்சாலையின் தொழிலாளர் தொகுப்பினரிடையே களையெடுப்பினை மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகளுக்கு பின்னர் தொழிற்சங்கத்தின் தலைமைப் பொறுப்பை தங்கள் வசம் எடுத்துக்கொண்ட MSWU இடைக்கால குழுவின் உறுப்பினர்களை எங்களது நிருபர்கள் பேட்டி கண்டனர். கைதுசெய்யப்பட்டு பிணையில் வெளிவர அனுமதியின்றி பல ஆண்டுகளுக்கு சிறையிலிடப்பட்டிருந்த வாகனத் தொழிலாளர்களுடனும் உலக சோசலிச வலைத் தளம் பேசியது, அவர்களுக்கு எதிராக வாதித் தரப்பு ஒரு சிறு துண்டு ஆதாரங்களைக்கூட வழங்க இயலாத நிலையில் இறுதியில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

மனிதவள மேலாளரான அவனிஷ் தேவ் என்பவரின் மரணத்தை தொழிலாளர்களுடன் தொடர்புபடுத்திய, நிறுவனம், பொலிஸ், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய யூனியன் மற்றும் ஹரியானா மாநில அரசு அதிகாரிகளின் ஆதரவை எப்படி பெறுகின்றனர் என்பது குறித்து ஒரு விரிவான விசாரணையை WSWS நடத்தியுள்ளது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பாக வழங்கப்பட்ட நீதிக்கான பரிகாரம் பற்றியும், மேலும் தொடரப்படும் சட்டரீதியான முயற்சிகள் பற்றியும் இந்த வழக்கில் செயலாற்றிவரும் பிரதிவாதித் தரப்பு வழக்கறிஞர்களுடன் இந்தியாவிலுள்ள நமது நிருபர்கள் பேசினர்.

தொழிலாள வர்க்கத்தையும், இந்த கொடூரமான ஜோடிக்கப்பட்ட வழக்கிற்கு எதிராக ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கின்ற மற்றும் இந்த தைரியமான தொழிலாளர்களின் உடனடி விடுதலைக்கு கோரிக்கை விடுக்கின்ற அனைவரையும் அணிதிரட்டுவதற்கான ஒரு சர்வதேச பிரச்சாரத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (International Committee of the Fourth International - ICFI), உலக சோசலிச வலைத் தளமும் (World Socialist Web Site) ஈடுபட்டுள்ளன.

மாருதி சுசூகி தொழிலாளர்கள், இந்தியா, சீனா மற்றும் ஆசியா முழுவதிலும், ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் முதலாளித்துவ பூகோளமயமாக்கல் உருவாக்கிய பல கோடிக்கணக்கான புதிய தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். இந்த தொழிலாளர்கள் வெறும் சுரண்டலுக்கான பொருட்கள் மட்டுமல்ல, முன்னேறிய முதலாளித்துவ நாடுகளில் ஒரு வலிமைவாய்ந்த சமூக சக்தியாகவும், தொழிலாளர்களின் ஒரு சக்திவாய்ந்த கூட்டாளிகளாகவும் இருக்கின்றனர். ட்ரம்ப், லு பென் மற்றும் தொழிற்சங்கங்கள் மூலமாக ஊக்குவிக்கப்பட்ட பொருளாதார தேசியவாதத்தையும், பேரினவாதத்தையும் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலுள்ள தொழிலாளர்கள் நிராகரிக்கவேண்டும், மேலும் கண்ணியமான, பாதுகாப்பான வேலைகள் மற்றும் சமூக உரிமைகள் குறித்தும், மற்றும் வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட நாடுகளில் வெகுஜனங்களை மீண்டும் அடிமைப்படுத்தப்படுவதை பிரதான குறிக்கோளாக கொண்ட ஏகாதிபத்திய போருக்கு எதிரான போராட்டத்தில் ஆசிய, இலத்தீன் அமெரிக்க மற்றும் ஆபிரிக்க தொழிலாளர் சக்தியுடன் இணையவேண்டும்.

மலிவுகூலி சுரண்டலுக்கு சவாலாக, மாருதி சுசூகி தொழிலாளர்கள் இந்தியாவிலுள்ள தொழிலாளர்களின் சார்பாக மட்டுமின்றி, உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்களுக்காக எடுக்கப்பட்ட ஒரு அடியாக, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். பூகோள மூலதனத்திற்கு எதிராக போராடுவதற்கு தேவைப்படும் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்தை உருவாக்குவதற்கு, அதாவது சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் புறநிலை ஐக்கியத்தை ஒரு நனவான அரசியல் மூலோபாயமாக்குவதற்கான ஒரு முக்கிய முதல் படியாக அவர்களது பாதுகாப்பு உள்ளது.

* * * * * *


MSWU இடைக்கால குழு உறுப்பினர் ஜிதேந்திர குமார்

MSWU இடைக்கால குழு உறுப்பினரான ஜிதேந்திர குமார் WSWS நிருபர்களுடன் மானேசர் தொழிற்சங்க அலுவலகத்தில் வைத்து பேசினர். ஹரியானாவிலுள்ள ரேவாரி மாவட்டத்தைச் சார்ந்தவரான குமார், ஒரு இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் (Indian Technical Institute-ITI) வெல்டிங் படிப்புகளை முடித்த பின்னர் 2005 ம் ஆண்டில் குர்கானிலுள்ள மாருதி சுசூகி தொழிற்சாலையில் ஒரு பயிற்சியாளராக பணியமர்த்தப்பட்டார். 2009 இல் ஒரு பயிற்சிபெற்ற நபர் என்ற வகையில் 10 மைல் தொலைவிலுள்ள மானேசர் ஆலைக்கு அவர் நியமிக்கப்பட்டு, பின்னர் 2010 இல் ஒரு நிரந்தர தொழிலாளியாக மாறினார்.

ஒரு சுயாதீனமான தொழிற்சங்கத்தை அமைப்பது மற்றும் தொழிற்சாலைகளில் நடைமுறையிலிருக்கும் வெறுக்கத்தக்க ஒப்பந்தத் தொழிலாளர் முறையையும், அடிமை போன்ற நிலைமைகளையும் எதிர்ப்பது போன்றவை தொடர்பான தொழிலாளர்களின் போராட்டங்கள் குறித்து குமார் மீளாய்வு செய்தார். “குர்கானிலுள்ள ஹோண்டா வாகனத் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை அமைத்த பின்னரே சில நன்மைகளைப் பெறமுடிந்தது என்பதைக் கற்றுக்கொண்டதுடன், மானேசர் ஆலையில் நாமும் ஒரு தொழிற்சங்கத்தை உருவாக்கியிருந்தால், நமது நிலைமைகளையும் முன்னேற்றமடையச் செய்யமுடியும் என்று நினைத்தோம். நிர்வாகம் MUKU ஐ [நிறுவன கட்டுப்பாட்டிலுள்ள Maruti Udyog Kamgar Union] எங்கள் மீது சுமத்த முயன்றது, ஆனால் தொழிலாளர்கள் அதை நிராகரித்தனர். நாங்கள் மாருதி சுசூகி ஊழியர் சங்கத்தை [Maruti Suzuki Employee Union-MSEU] உருவாக்கி, ஒரு தொடர்ச்சியான போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள், மற்றும் உள்ளிருப்புகளை  ஒழுங்கமைத்ததுடன், ஒரு கதவடைப்பையும் எதிர்கொண்டோம்.

MSWU இன் உருவாக்கமும், ஒப்பந்தத் தொழிலாளர் முறைக்கு எதிரான போராட்டமும்

MSEU ஐ உடைப்பதற்கான நிர்வாகத்தின் உந்துதலைத் தொடர்ந்து, MSWU ஐ உருவாக்க மானேசர் தொழிலாளர்கள் முன்னோக்கிச் சென்றனர் மற்றும் அதன் தலைவர்களை பதவி நீக்கம் செய்து அச்சுறுத்தி பின்னர் தொழிலாளர்கள் வேலையை விட்டு வெளியேறும்படி அவர்களுக்கு லஞ்சம் கொடுத்து அவர்களை விரக்தியடையச் செய்தது எப்படியென்று குமார் விவரித்தார்.

MSWU ஆல் எழுப்பப்பட்ட முக்கியமான கோரிக்கை, மானேசர் ஆலையில், நிரந்தரத் தொழிலாளர்கள் செய்யும் அதே பணிகளையே செய்கின்றபோதும், அவர்களது ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட சிறுதொகையினையே ஊதியமாக வழங்கப்பட்டுவரும் ஆயிரக்கணக்கான தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்டது. இந்த தொழிலாளர்கள், “ஒழுங்குபடுத்தப்படவேண்டும்,” அதாவது, முழுநேர ஊழியர்களுக்கான அதே வேலை பாதுகாப்பு, ஊதியம் மற்றும் நலன்களுடன், அனுபவமிக்க நிரந்தர தொழிலாளர்களாக அவர்களை மாற்றுவதை MSWU கோரியது.

“ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்குவதையே முதல் கோரிக்கையாக நிர்வாகத்திடம் எங்களது தொழிற்சங்கம் முன்வைத்தது. நாங்கள் இந்த கோரிக்கையை கைவிட்டு ஏனைய விடயங்கள் மீது கவனம்செலுத்துமாறு அவர்கள் எங்களை வலியுறுத்தினர். ஆனால் வேறு கோரிக்கைகளை எழுப்புவதற்கு முன்னர், முதலாவதாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் குறித்த பிரச்சனையை நிர்வாகம் தீர்த்துவைக்க வேண்டுமென தொழிற்சங்கம் அழுத்தம் கொடுத்தது”.

நிரந்தர மற்றும் முழுநேர பணியாளர்களாக இருந்த தொழிலாளர்களின் தரவரிசையிலிருந்து ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கான கோரிக்கை குறித்து குமார் கூறினார். “நாங்கள், நிரந்தரத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களுடன் இணைந்து வேலைசெய்து அவர்களுடன் மிகுந்த நட்புறவு கொண்டவர்களாக மாறினோம். நிரந்தரத் தொழிலாளர்கள், அவர்கள் கொண்டிருக்கும் குறிப்பிட்ட சில பணி பாதுகாப்புகள் மற்றும் நலன்களை அவர்களுடன் பணியாற்றும் சக ஒப்பந்தத் தொழிலாளர்களும் பெறவேண்டுமென நினைத்தனர். அதனால் தான் அவர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒழுங்குபடுத்துவதற்கான கோரிக்கையை எழுப்ப தொழிற்சங்கத்தைக் கேட்டனர்.”

2011 ல் மாருதி சுசூகி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது [புகைப்படம் குறித்து ராகுல் ராய் இன் த ஃபேக்டரி (2015) திரைப்படத்திற்கு நன்றி]

ஏப்ரல் 2012 இல், MSWU ஐ அங்கீகரிக்க நிர்வாகம் கட்டாயப்படுத்தப்பட்ட பின்னர், தொழிலாளர்கள் மீதான சதிவேட்டைக்கும், புதிய தொழிற்சங்கத்தை நசுக்குவதற்குமான சாக்குப்போக்கை உருவாக்க நிறுவன அதிகாரிகள் முற்பட்டனர் என்று குமார் கூறினார். ஜூலை 18, 2012 அன்று ஒரு மேலாளர் ஒரு தொழிலாளிக்கு எதிராக ஜாதி ரீதியான நிந்தனையை பயன்படுத்தி அவரை பணி இடைநீக்கம் செய்தபோது இது நிகழ்ந்தது. அப்பொழுது அவரை பாதுகாக்க தொழிலாளர்கள் முற்பட்டபோது, இந்தியாவில் “அடியாட்கள்” என்றழைக்கப்படும் நிறுவன குண்டர்கள் அவர்களைத் தாக்கினர். மேலும், தொழிலாளர்களிடம் பரிவுணர்வு கொண்ட ஒரு மனிதவள மேலாளரான அவனிஷ் தேவ், இன்னமும் விளக்கப்படாத தோற்றப்பாடான நெருப்பிடலின் மூலம் உருவான புகையில் சிக்கி இறந்து கிடந்ததும் பின்னர் தெரியவந்தது.

இந்த ஆத்திரமூட்டல் சம்பவத்தை பொலிஸ் பயன்படுத்தி, நிர்வாகத்தின் மூலம் வழங்கப்பட்ட 148 தொழிலாளர்களின் பெயர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு அவர்களை சுற்றிவளைத்து சிறையிலிட்டனர். பின்னர் ஆகஸ்ட் 2012 இல் தொழிற்சாலையில், 546 நிரந்தரத் தொழிலாளர்களையும், கிட்டத்தட்ட 1,800 ஒப்பந்தத் தொழிலாளர்களையும் நிறுவனம் பணிநீக்கம் செய்தது.

“MUKU ஐ கட்டுப்படுத்தியதைப் போல MSWU ஐயும் கட்டுப்படுத்த முடியுமென நிர்வாகம் நினைத்தது. அவர்கள் முயற்சியும் செய்தனர், ஆனால் அவர்கள் MSWU ஐ அழிக்க முடிவு செய்தபோது தோல்வியுற்றனர். MSWU ஐ அவர்களால் அழிக்க முடியவில்லை என்றால் இலாபங்களை ஈட்டுவதற்கான ஒரு பெரும் ஆதாரமாக இருக்கும் ஒப்பந்தத் தொழிலாளர் சக்தியை அவர்களினால் தொடர்ந்து வைத்திருக்க முடியாமல் போய்விடும் என்று நிர்வாகம் அறிந்திருந்தது.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது மற்றும் அவர்களுக்கு கொடூரமான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவிக்கையில், “நீதிபதி தீர்ப்பை அறிவிப்பதற்கு முன்னரே, முன்கூட்டிய தீர்மானமாகவே அது இருந்தது. மேலும், விசாரணை நடவடிக்கைகள் அனைத்தும் வெறும் ஜோடிப்புகளாவே இருந்தன. நீதிபதி தீர்ப்பை வெளியிட்டபோது, தொழிலதிபர்களுக்கு அவர் வழங்கிய செய்தியிலிருந்து அரசாங்கம் அவர்களுடன் இருப்பதும் தெரிய வந்தது” என்று குமார் கூறினார்.

ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவர்களுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் பங்கு

இரண்டு ஸ்ராலினிச நாடாளுமன்றக் கட்சிகளான, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India – Marxist) அல்லது CPM மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of India-CPI) ஆகியவற்றுடன் முறையே இணைந்த தொழிற்சங்க கூட்டமைப்புக்களான இந்திய தொழிற்சங்கங்களின் மையம் (Centre of Indian Trade Unions - CITU) மற்றும் அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (All India Trade Union Congress - AITUC) ஆகியவற்றின் பங்கு பற்றி WSWS குமாரிடம் வினவியது. மாருதி சுசூகியின் மலிவு உழைப்பு ஆட்சிக்கும், மேலும் போர்குணமிக்க தொழிலாளர்கள் மீதான நிறுவனம் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு சதிவேட்டையாடல்களுக்கும் எதிரான மானேசர் தொழிலாளர்களின் போராட்டத்தை ஸ்ராலினிச தொழிற்சங்கங்கள் முறையாக தனிமைப்படுத்தின. இது மானேசர் தொழிலாளர்கள் மீதான ஜோடிப்பு வழக்குகளுக்கு வழியமைத்துக் கொடுத்தது. 

“அந்த மத்திய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்காக போராட ஆர்வமாக இல்லை” என்று குமார் தெரிவித்ததுடன், மேலும் “அவர்கள் தங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவதில் மட்டுமே கவனமாகவுள்ளனர். இந்த தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களை பிளவுபடுத்துகின்றன. MSWU போன்ற ஒரு சுயாதீனமான தொழிற்சங்கங்கள் உருவாகியபோது (குர்கான்-மானேசர் தொழில்துறை பகுதிக்குள்), நாங்கள் மத்திய தொழிற்சங்கங்களிடமிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தபோது அவர்கள் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களுடன் இணையுமாறு எங்களை கேட்டுக்கொண்டனர். (பாதிக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களுக்கு) ஆதரவளிக்கும் விதமாக ஒரு பேரணியை ஒழுங்கமைக்க உதவிடுமாறு AITUC ஐ நாங்கள் அணுகியபோதும், நாங்களே தான் ஒழுங்கமைத்துக்கொள்ளவேண்டுமென்று எங்களிடம் அவர்கள் தெரிவித்துவிட்டனர். “வெளிநபர்கள் உதவிட முடியாது,” “வெளிநபர்களிடம் உதவியை நாடாதீர்கள்” என்று அவர்கள் கூறிவிட்டனர். அடிப்படையில், அவர்கள் எங்களது இயக்கத்தை நாசப்படுத்தவே முயன்றனர்” எனவும் விவரித்தார். 

“எனது நண்பர்கள் மற்றும் சக தொழிலாளர்களில் பெரும்பாலானோர் மத்திய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக வேலை செய்வதில்லை என்பதை அறிவார்கள். மாறாக, அரசாங்கத்திற்கு எதிரான தொழிலாளர்களின் கோபத்தை கட்டுப்படுத்தும் விதமாகவே அவர்கள் வேலை செய்கின்றனர். தொழிலாளர்களுக்காக இருப்பதாக அவர்கள் கூறிக்கொள்கின்ற போதும், உண்மையில் தொழிலாளர்களை கட்டுப்படுத்தும் பொருட்டு நிர்வாகத்திற்கு சார்பாக தான் அவர்கள் இருக்கிறார்கள். கட்டுப்பாட்டில் இல்லை என்றால் தொழிலாளர்கள் கிளர்ச்சி செய்வார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். எனவே, தொழிலாளர்கள் தங்களை எதிர்த்து நிற்கும்போது மட்டும், அவர்களுக்கு சார்பாக இருப்பதுபோன்று பாசாங்கு செய்கிறார்கள்."  

CITU மற்றும் AITUC இன் நம்பிக்கைத் துரோகம் அதன் இணைந்த கட்சிகளான CPM மற்றும் CPI இன் பிற்போக்கத்தன தேசியவாத அரசியலில் அதன் வேர்களைக் கொண்டுள்ளதாக நமது நிருபர்கள் விளக்கமளித்தனர். உலக மூலதனத்திற்கான ஒரு மலிவு உழைப்பு தளமாக இந்தியாவை மாற்றியமைக்கும் இந்திய உயரடுக்கின் கொள்கைக்கு ஸ்ராலினிசக் கட்சிகள் தம்மை அர்ப்பணித்துள்ளன. தேசிய அளவில், CPM ம் CPI யும் முக்கியமாக காங்கிரஸ் கட்சியினால் வழிநடாத்தப்பட்டு, முதலீட்டாளர் சார்பு திட்டநிரலுக்கு ஆதரவாக செயல்பட்டுவருகின்ற முதலாளித்துவ சார்பு அரசாங்கங்களை ஆதரித்தன. அதே நேரத்தில், ஸ்ராலினிசக் கட்சிகள் மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் மாநில அரசாங்கத்தை அமைத்தபோது இத்தகைய கொள்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. மாருதி சுசூகி தொழிலாளர்களின் போராட்டம், மலிவுகூலி உழைப்பு வேலையிட நிலைமைகள் மற்றும் அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக இந்திய தொழிலாளர்களின் ஒரு மிகப்பரந்த இயக்கத்திற்கான வினையூக்கியாக அது மாறிவிடக்கூடும் என்ற வகையிலான காங்கிரஸ் மற்றும் இந்து மேலாதிக்கவாத பி.ஜே.பி. இன் அதே பயத்தை CPM ம் CPI யும் பகிர்ந்து கொள்கின்றன.

ஆகஸ்ட் 2012 இல் நிர்வாகத்தினால் பணிநீக்கம் செய்யப்பட்ட 546 நிரந்தரத் தொழிலாளர்களில், 362 பேர் ஜூலை 18 கைகலப்பின்போது எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் எதுவும் சுமத்தப்படாதவர்கள். குமாரும் இந்த குழுவில் இருக்கிறார். “எங்களை பணிநீக்கம் செய்தபின்னர்,” “நிர்வாகம் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதலளிக்க ஒரு தொழிலாளர் நீதிமன்றத்தைக் கேட்டது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின்னர், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய ஒரு தொழிலாளர் நீதிமன்றத்தின் அனுமதி தேவையில்லை என்று கூறி நிர்வாகம் இந்த விண்ணப்பத்தை திரும்பப் பெற்றது” என்று அவர் கூறினார்.

“பணிநீக்கத்திற்கு எதிராக MSWU வழக்கினை தாக்கல் செய்தபோது, செப்டம்பர் 2012 ல் அது குர்கான் தொழிலாளர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜூலை 2012 சம்பவம் தொடர்பாக எங்களில் எவரும் குற்றம்சாட்டப்படாத நிலையில், எங்களை பணிநீக்கம் செய்வதற்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லையென நாங்கள் வாதிட்டோம். எங்கள் மீதான அவர்களது “நம்பிக்கை இழப்பு” காரணமாக நாங்கள் பின்வாங்கமாட்டோம் என்று நிர்வாகம் கூறியது. எந்தவொரு தொழிலாளியும் நிறுவனத்திற்கோ அல்லது அதன் சொத்துக்களுக்கோ தீங்கு விளைவிப்பதாக நிர்வாகம் நினைக்கும் பட்சத்தில், அந்த தொழிலாளியை அது வெளியேற்றமுடியும் என்று ஒரு நிறுவன உத்தரவை மேற்கோள் காட்டியது. குர்கான் தொழிலாளர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்னும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

“இருப்பினும், மார்ச் 2, 2015 அன்று, பணிநீக்கம் செய்யப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் 100,000 ரூபாய் (US$1,544) வீதம் நிறுவனத்திற்கு தொழிலாளர் நீதிமன்றம் அபராதம் விதித்தது. மே 2015 இல் நிர்வாகம் உயர் நீதிமன்றத்திற்கு சென்று, அபராதத்திற்கு எதிராக ஒரு இடைக்கால தடையை பெற்றது. இப்போது இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இருக்கிறது”  

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான சதிவேட்டைகளுக்கு எதிராக ஒரு கூட்டுப் பிரச்சாரத்தை மேற்கொள்ளும் பொருட்டும், இப்பகுதியில் தொழிலாளர் நிலைமைகளை மேம்படுத்தவும், MSWU, குர்கான்-மானேசர் தொழில்துறைப் பகுதியிலுள்ள ஏனைய சுயாதீன தொழிற்சங்கங்களின் ஆதரவினைப் பெற்று ஒரு தொழிற்சங்கக் குழுவை (Trade Union Council-TUC) அமைத்துள்ளதாகவும் குமார் கூறினார்.

ஜோடிப்பு வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க கோரி இலங்கையில் SEP மற்றும் IYSSE மூலமாக ஒழுங்கமைக்கப்பட்ட மறியல் போராட்டம்

மிகப்பெரியளவிலான தொழிலாளர் ஒற்றுமை தேவைப்படுகின்றது என்ற நிலையில் வேலைவழங்குநர்கள் மற்றும் அரசாங்கத்தின் கூட்டுத் தாக்குதல்களுக்கு எதிராக போராடுவதற்கு தொழிற்சங்க போர்குணம் மட்டும் போதாது, என்று WSWS நிருபர்கள் விளக்கினார்கள். உலகளாவிய பெருநிறுவனங்கள் மற்றும் ஒரு ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தையும், மேலும் முதலாளித்துவ வர்க்கத்தின் செல்வத்தையும் சக்தியையும் பாதுகாக்கவும், மற்றும் தொழிலாள வர்க்கத்திலிருந்து மிருகத்தனமான சுரண்டல் மூலமாக இலாபம் பெறவும் நிறுவனங்களுக்கு துணை நிற்கின்ற மத்திய மற்றும் மாநில அளவிலான அரசாங்கத்திலிருந்து, பொலிஸ் மற்றும் நீதிமன்றங்கள் வரை அனைவரையும் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்றனர்.

பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்கின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்தை முறிக்க, சர்வதேசியவாதம் மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கம் அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்படவேண்டும். மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிக்க முனைகின்ற இந்த சர்வதேச பாதுகாப்பு பிரச்சாரம் தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்று நமது நிருபர்கள் கூறினர்.

“சர்வதேச அளவில் நீங்கள் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் சரியானவையே, நாங்கள் அதை பாராட்டுகிறோம்.” என்று குமார் விடையிறுத்தார்.