ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

In French legislative elections, Mélenchon moves closer to Macron

பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களில், மெலோன்சோன் மக்ரோனுக்கு நெருக்கமாக நகர்கிறார்

By Kumaran Ira
2 June 2017

பிரெஞ்சு நாடாளுமன்ற தேர்தல்களின் முதல் சுற்றுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் திட்டநிரலுக்கு எதிராக அடிபணியா பிரான்ஸ் (France insoumise - FI) இயக்கத்தின் தலைவர் ஜோன்-லூக் மெலோன்சோன் முன்வைத்த முன்னோக்கு உருக்குலைந்து வருகிறது. செவ்வாயன்று Le Parisien க்கு அவர் வழங்கிய பேட்டியை ஆராய்கையில் இது தான் வெளிப்படுகிறது.

போரை விமர்சித்ததன் அடிப்படையில் ஜனாதிபதி தேர்தல்களில் மெலோன்சோன் 7 மில்லியன் வாக்குகள் பெற்றிருந்த போதினும், புதிய ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை அணித்திரட்டும் ஒரு புரட்சிகர கொள்கையை அவர் நிராகரித்தார். அவர் ஆதரவாளர்களில் பெரும்பான்மையினர் மக்ரோன் மற்றும் நவ-பாசிசவாத வேட்பாளர் மரீன் லு பென் இருவரையும் நிராகரித்திருந்த போதிலும், அவர் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு அழைப்புவிடுக்க மறுத்தார் — பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி (Parti de l’égalité socialiste - PES) மட்டுமே இந்த கொள்கையை முன்னெடுத்தது. அரசியல் பொறுப்பை அப்பட்டமாக கைத்துறக்கும் விதத்தில், மெலோன்சோன் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலில் எந்த நிலைப்பாட்டையும் எடுக்க மறுத்தார்.

அதற்கு பதிலாக அவர், நிலைமைகள் முரண்பட்டரீதியில் காணக் கிடைக்கின்ற போதினும், நாடாளுமன்ற தேர்தல்களில் FI வெற்றியடைந்து ஓர் அரசாங்கம் அமைக்கும் என்றும், அவ்விதத்தில் பிரதம மந்திரி அலுவலகத்திற்குள் இருந்து மக்ரோனுக்கு எதிராக ஒரு போர்குணம் மிக்க போராட்டத்தை நடத்த முடியுமென்றும் கூறி, ஒரு நாடாளுமன்ற மூலோபாயத்தை முன்மொழிந்தார். ஆனால் இந்த வாரம் மெலோன்சோன் அதிகரித்தளவில் இந்த பாசாங்குத்தனங்களைக் கைவிட்டு, துரிதமாக வலதை நோக்கி திரும்பி வருகிறார். தேசிய நாடாளுமன்றத்தில் ஒரு சிறுபான்மையாக செயல்படவும் மற்றும் மக்ரோனின் நாடாளுமன்ற திட்டநிரலுக்கு நட்புரீதியிலான ஆலோசனைகள் வழங்கவும் அவர் தயாராகி வருகிறார் என்பதை அவர் Le Parisien இல் தெளிவுபடுத்தினார்.

ஜனாதிபதி தேர்தல்களில் 20 சதவீதம் பெற்றதில் இருந்து சரிந்து, FI க்கு வெறும் 12 சதவீத வாக்குகளே கிடைக்கும் என்ற நிலையில், மெலோன்சோன் கூறுகையில், “எனது இயக்கத்திற்கு ஒரு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், நான் இந்நாட்டின் எதிர்கட்சி தலைவராக செயல்படுவேன்,” என்றார், நாடு "ஒரு வெடி உலை உள்ளது" என்பதை மெலோன்சோன் ஒப்புக் கொண்டார். அதாவது, நாடாளுமன்றத்தில் FI க்கு விரல்விட்டு எண்ணக்கூடிய பிரதிநிதிகளே இருந்தாலும் கூட மக்ரோனிடம் இருந்து அவரால் விட்டுக்கொடுப்புகளை பெற முடியுமென்ற நப்பாசைகளை அவர் விற்பனை செய்து வருகிறார்.

பிரெஞ்சு அரசியலை "நெறிப்படுத்துவதற்காக" திட்டமிடப்பட்ட ஊழல்-தடுப்பு சட்டத்தை விவாதிக்க, அவர் மக்ரோனின் நீதித்துறை அமைச்சர் பிரான்சுவா பேய்ரூவை சந்திக்க இருப்பதாக மெலோன்சோன் தெரிவித்தார்: “நாங்கள் மாற்றீடுகளை முன்மொழிந்து, ஒரு கட்டுப்படுத்தும் இடத்தைப் பெறுவோம். நான் நாளை, புதன்கிழமை, திரு பேய்ரூவை சந்திப்பேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளை நீக்கும் அதிகாரத்தை, மக்களுக்கு வழங்கும் சாதாரண நடவடிக்கைகளை நான் முன்மொழிவேன். இது தான் என் திட்டம். அதை அவர் ஏற்றுக் கொண்டால், அதற்காக வாழ்த்து கூறி அச்சட்டத்திற்கு வாக்களிப்பேன்! அவர் ஏற்காவிட்டால், அதில் என்ன இருக்கிறதென காண நாம் காத்திருக்க வேண்டியிருக்கும்,” என்றார்.

மக்ரோன் பிரெஞ்சு அரசியலுக்குப் புத்துயிரூட்டி, நிதி ஊழல்களை களையெடுத்து வருகிறார் என்று கூறி வரும் பத்திரிகைகளது மக்ரோன்-ஆதரவு வெற்று பிரச்சாரத்திற்கு அரசியல் மூடுமறைப்பை வழங்குவதே அதுபோன்றவொரு சந்திப்பின் நோக்கமாகும். இந்த பிரச்சாரம் அதன் முதல் பிரதான தடையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்கிறது: அதாவது, மக்ரோனின் ஆதரவாளரும் நகர்புற திட்டமிடல் அமைச்சருமான ரிச்சார்ட் ஃபெர்றாண் பிரிட்டானியில் ஒரு பொதுக்காப்பீட்டு நிதி நிறுவனத்தைத் நடத்தி வருகின்ற அதேவேளையில், ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் நில-மனை வியாபார உடன்படிக்கைகளில் இருந்து முறைகேடாக ஆதாரயமடைந்தார் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

குறிப்பாக மக்ரோனின் REM (République En Marche!) நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றாலுமே கூட, அவர் இயக்கம் தேசிய நாடாளுமன்றத்தில் மக்ரோன் அரசாங்கத்துடன் இணைந்து இயங்கும் என்பதை Le Parisien இல் தெளிவுபடுத்தும் அளவிற்கு மெலோன்சோன் சென்றார். “திரு மக்ரோன் வென்றாலும், சமூக எதிர்கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு நிஜமான மக்கள் முன்னணியை உருவாக்க நாங்கள் முன்மொழிவோம்,” என்று மெலோன்சோன் தெரிவித்தார்.

உத்தரவாணைகள் மூலமாக வேலைகள் மற்றும் சமூக நலன்களை ஆழமாக வெட்டவும், இராணுவ செலவினங்களை மிகப்பெரியளவில் அதிகரிக்கவும் மற்றும் கட்டாய இராணுவச் சேவையை திரும்ப கொண்டு வரவும் அழைப்புவிடுத்து, மக்ரோன் அவசரகால நெருக்கடி நிலையின் கீழ், ஒரு சர்வாதிகார முறையில், உத்தரவாணைகள் மூலமாக, அவர் வேலைத்திட்டத்தை திணிக்க உத்தேசித்துள்ளார் என்பது மெலோன்சோனுக்கு நன்கு தெரியும். இந்த வேலைத்திட்டம் பிரான்சில் அதிகரித்தளவில் மக்கள் வெறுப்பைப் பெற்றுள்ளது, குறிப்பாக தொழிலாள வர்க்கத்திடையே. பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் சமூக கோபம் அதிகரித்து வருகின்ற நிலையில், வர்க்க போராட்ட வெடிப்பு ஒன்றுக்கு அவர் தயாரிப்பு செய்து கொள்ள வேண்டுமென்பதை மெலோன்சோன் அறிந்துள்ளார்.

அவர் Le Parisien பத்திரிகைக்கு கூறுகையில், “[மக்ரோன்] வென்றால், சமூகத்தின் ஒரு பாகத்திடமிருந்து அவர் விரைவிலேயே மிகவும் வன்முறையான நிராகரிப்பை முகங்கொடுப்பார் என்று நான் அனுமானிக்கிறேன். ஏனென்றால் தொழிலாளர் தொகுப்பு சட்டத்தை கீழறுப்பதற்காக அவர் செய்ய விரும்பும் வரி உயர்வுகள் மற்றும் அதிகடுமையான-தொழிலாளர் சட்டம் (super-labour law) ஆகியவை மிகப் பெரியளவில் ஒரு சமூக அதிர்ச்சியை உண்டாக்கும்,” என்றார்.

எவ்வாறிருப்பினும் மெலோன்சோனின் வேலைத்திட்டம், வரவிருக்கின்ற வெடிப்பார்ந்த மற்றும் கடுமையான போராட்டங்களுக்கான ஒரு முன்னோக்குடன் தொழிலாளர்களை அரசியல்ரீதியில் ஆயுதபாணியாக்குவதற்கோ மற்றும் அவசரகால நெருக்கடி நிலையை எதிர்ப்பதற்கோ கிடையாது. மாறாக, தேசிய நாடாளுமன்றத்தில் அடிபணியா பிரான்ஸ் (France insoumise - FI) இயக்கத்தின் பிரதிநிதிகள் மூலமாக சமூக எதிர்ப்பை திசைதிருப்புவதற்கு அவர் வலியுறுத்துகிறார். “நாங்கள் தொழிற்சங்கங்கள், அரசு-சாரா அமைப்புகள், அரசியல் மற்றும் கலாச்சார சக்திகளுடன் இணைந்து வேலை செய்வோம்,” என்றார். “எல்லாவற்றிற்கும் முதல், எதிர்ப்பு தேசிய நாடாளுமன்றத்தில் ஆரம்பிக்கப்படும்,” என்றார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI) பிரெஞ்சு பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியை (PES) மெலோன்சோன் முன்வைக்கும் முன்னோக்கிலிருந்து ஒரு வர்க்க இடைவெளி பிரிக்கிறது. தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு சுயாதீனமான அரசியல் வழியை வழங்கவும் மற்றும் மக்ரோன் பதவிக்கு வந்ததும் பின்பற்ற உள்ள பிற்போக்குத்தனமான, இராணுவவாத மற்றும் ஜனநாயக-விரோத கொள்கைகளைக் குறித்து எச்சரிக்கவும் மக்ரோன் மற்றும் லு பென்னின் இரண்டாம் சுற்று ஜனாதிபதி தேர்தலை செயலூக்கத்துடன் புறக்கணிக்குமாறு பிரெஞ்சு சோசலிச சமத்துவக் கட்சி அழைப்புவிடுத்தது. தொழிலாள வர்க்கத்தில் போர் மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான புரட்சிகர எதிர்ப்பின் அபிவிருத்தியை நோக்கி நோக்குநிலை கொண்டிருந்த அது, ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கை வழங்க முயன்றது.

ஏற்கனவே, மக்ரோன் தேர்வாகி வெறும் ஒரு சில வாரங்களில், பிரான்சில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் லாரி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் ஆரம்பமாகியுள்ளது. இருப்பினும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களைப் போலவே மெலோன்சோனும் அந்த ஓட்டுநர்களுக்கு ஆதரவாக தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த போராட்டத்திற்கு அழைப்புவிடுக்கவில்லை, மாறாக மக்ரோனின் கொள்கைகளில் ஒருசில மாற்றங்களை பேரம்பேச முயன்று வருகிறார். இது தொழிலாள வர்க்கத்தைச் சிக்க வைப்பதற்கான ஒரு பொறி என்ற ஒரே விதத்தில் மட்டுமே, இந்த மூலோபாயத்தை சரியாக கூற முடியும்.

மெலோன்சோன், மக்ரோனுக்கோ அல்லது முன்னாள் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் இன் மதிப்பிழந்த சோசலிஸ்ட் கட்சிக்கோ ஒரு மாற்றீட்டைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை, மாறாக இந்த மதிப்பிழந்த ஆளும் உயரடுக்கின் ஒரு கன்னையைப் பிரதியீடு செய்கிறார். சோசலிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்ப உதவும் முன்னோக்கின் அடிப்படையில் 1917 இல் ட்ரொட்ஸ்கிசம் மற்றும் ICFI இல் இருந்து முறித்துக் கொண்டு, குட்டி-முதலாளித்துவ சர்வதேச கம்யூனிஸ்ட் அமைப்பில் (Organisation communiste internationaliste OCI) இணைந்த ஒரு முன்னாள்-மாணவர் இயக்க தீவிர கொள்கையாளரான மெலோன்சோன், பின்னர் சோசலிஸ்ட் கட்சியிலேயே இணைந்தார். 1980 களில், அவர் செனட்டர் ஆனார், பின்னர் உளவுத்துறை மற்றும் இராணுவ வட்டாரங்கள் உடனான உயர்மட்ட தொடர்புகளுடன் அமைச்சரானார்.

மக்ரோனுக்கு எதிரான கூட்டணி என்று கூறி அவர் உருவாக்கும் கூட்டணியில் இருக்கக்கூடிய ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF) போன்ற சக்திகள் தசாப்தங்களாகவே சோசலிஸ்ட் கட்சியுடன் தொடர்புகள் வைத்துள்ளன என்பதுடன், அவை மக்ரோனையும் எதிர்க்கவில்லை — இது மெலோன்சோனுக்கு நன்றாகவே தெரியும். உண்மையில், கூட்டாக நாடாளுமன்ற வேட்பாளர்களை நிறுத்துவதா வேண்டாமா என PCF க்குள் நடந்து வரும் கன்னை மோதல்களுக்கு இடையே, மெலோன்சோன் அவர்களை மக்ரோனின் கருவிகள் என்று குற்றஞ்சாட்டி PCF தலைமைக்கு ஒரு குறுஞ்சேதி அனுப்பினார்.

அவர் எழுதினார், “நீங்கள் ஒட்டுமொத்த நாட்டிலும் குழப்பத்தை உண்டாக்கி கொண்டிருக்கிறீர்கள் … சபாஷ் 'கம்யூனிச அடையாளம்.' இவையெல்லாம் எனது பிரச்சாரத்தை நாசமாக்க பல மாதகால அவமதிப்புகள் மற்றும் சூழ்ச்சிகளுக்குப் பின்னர் நடக்கிறது. நீங்கள் மீண்டும் அதேயிடத்தில் உள்ளீர்கள். நீங்கள் உயிரற்ற வெற்றுடல். என்னை ஆதரிக்க நீங்கள் 10 மாதங்கள் எடுத்துக் கொண்டீர்கள், மக்ரோனை ஆதரிக்க 10 நிமிடங்கள் தான் எடுத்தீர்கள். அதுவும் நீங்கள் மதிக்காத உடன்படிக்கைகளை குறிப்பிடாமலேயே இதை செய்தீர்கள். இன்னும் என்னிடம் இதுபோல கூறுவதற்கு நிறைய இருக்கிறது,” என்றார்.

ஆனால் இப்போது PCF எதன் உள்ளார்ந்த பாகமாக உள்ளதோ அதே தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், அரசு-சாரா அமைப்பின் நிர்வாகிகள், ஊடகங்கள் மற்றும் அரசியல் நடவடிக்கையாளர்களின் ஒட்டுமொத்த உயர்மட்ட நடுத்தர வர்க்க அடுக்கை மீள்குழுவாக்கம் செய்ய மெலோன்சோன் பரிந்துரைக்கிறார் — ஆனால் மக்ரோனை எதிர்ப்பதற்காக என்று கூறிக் கொள்கிறார். இதுவொரு அரசியல் மோசடியாகும்.

தொழிலாளர்கள் எச்சரிக்கைப்படுத்தப்பட வேண்டும்: அவரது அவ்வப்போதைய தீவிர-வாய்சவடால் பேச்சுக்களுக்கு அப்பாற்பட்டு, மெலோன்சோன் சோசலிசத்திற்கும் மற்றும் சோசலிஸ்ட் கட்சியின் திவால்நிலை மீது ஓர் அரசியல் இருப்புநிலை கணக்கை வரைவதற்கான எந்த முயற்சிக்கும் எதிராக உள்ளார். 2014 இல் முதன்முதலில் பிரசுரிக்கப்பட்ட The Era of the People என்ற அவர் நூலில், அவர் சோசலிசம், தொழிலாள வர்க்கம் மற்றும் இடது முடிந்துவிட்டதாக அறிவித்து, ஒரு ஜனரஞ்சக தேசியவாதத்தை முன்னெடுத்தார். அவர் தொழிலாள வர்க்கத்தில் அடித்தளமிட்ட முதலாளித்துவத்திற்கு எதிரான ஒரு இடதுசாரி இயக்கத்தைக் கட்டமைப்பதை எதிர்க்கிறார்.

இந்த கேடு விளைவிக்கும் திவாலான முன்னோக்குடன் அரசியல்ரீதியில் நனவுபூர்வமாக முறித்துக் கொள்வதே, போர் மற்றும் சமூக பிற்போக்குத்தனத்திற்கான மக்ரோனின் திட்டநிரலுக்கு எதிராக வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு இன்றியமையாத தயாரிப்பாகும்.

கட்டுரையாளரின் ஏனைய பரிந்துரைகள்:

போலி-இடதில் இருந்து புதிய வலதிற்கு: பிரான்சின் ஜோன்-லூக் மெலோன்சோனின் பயணப்பாதை

[18 October 2014]