ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Infighting in Tamil party signifies deep political crisis in Sri Lanka

தமிழ் கட்சியில் உள்மோதல் இலங்கையில் ஆழமான அரசியல் நெருக்கடியைக் குறிக்கிறது

By K. Ratnayake
21 June 2017

இலங்கையின் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமைத்துவத்துக்கும் இடையில், கடந்த வாரம் வெடித்த ஒரு கன்னை மோதல், நேற்று ஒரு அரசியல் சமரசத்திற்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

2013ல் நடந்த தேர்தலில் தமிழ் கூட்டமைப்பின் முன்னணி வேட்பாளராக நியமிக்கப்பட்ட பின்னர், ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியான விக்னேஸ்வரன், வட மாகாண சபை முதலமைச்சர் ஆனார். அவர் கூட்டமைப்பின் உறுப்பினராக இல்லாத போதிலும், கொழும்பு ஸ்தாபனத்தாலும் சர்வதேச சக்திகளாலும் ஒரு பொருத்தமான நபராக கருதப்பட்டதால், தமிழ் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தனால் அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டார்.

எனினும், கடந்த வாரம் விக்னேஸ்வரன் இரண்டு வடமாகாண அமைச்சர்களை ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக பதவி நீக்கியதுடன், இன்னும் இரண்டு பேரை கட்டாய விடுமுறையல் செல்ல நிர்ப்பந்தித்தை அடுத்து, தமிழ் முதலாளித்துவ உயரடுக்கின் உள்ளேயான இந்த வேறுபாடுகள் வீதிக்கு வந்தன. இந்த நான்கு அமைச்சர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் உள்ள கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களாவர்.

ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் கூட்டமைப்பு தலைவர்கள், முதலமைச்சரின் தீர்ப்பை எதிர்த்ததோடு, இரண்டு அமைச்சர்களை கட்டாய விடுமுறையில் அனுப்புவது எதேச்சதிகார முடிவு என அறிவித்தனர். தமிழரசுக் கட்சி மாகாணசபை உறுப்பினர்கள் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வடமாகாண சபையில் கொண்டுவந்ததன் மூலம் இதற்குப் பதிலளித்தனர்.

இதற்கு எதிர் நடவடிக்கையாக, தமிழ் கல்வியாளர்கள் குழுவான தமிழ் மக்கள் பேரவையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் யாழ்ப்பாணத்திலும் ஏனைய வடக்கு நகரங்களிலும் விக்னேஸ்வரனை ஆதரிக்கும் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தன. ஈழ மக்கள் விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) ஆகியவற்றையும் உள்ளடக்கிய தமிழ் மக்கள் பேரவையும், தமிழ் கூட்டமைப்பின் பங்காளிகள் ஆகும். மற்றொரு இனவாத கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கின்றது. விக்னேஸ்வரனுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியில், இந்த அமைப்புகள் அவரை ஊழலுக்கு எதிரான போராளியாகவும், தமிழர்களின் உரிமைகளின் காவலனாகவும் சித்தரித்தன.

ஊழல் செய்த அமைச்சர்களுக்கு எதிரான விக்னேஸ்வரனின் நடவடிக்கைகளுக்கும் தமிழ் வெகுஜனங்களின் உரிமைகளைக் காப்பதற்கும் இடையில் எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் தமது நலன்களை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி தமிழ் செல்வந்த தட்டிற்குள் நிலவும் தந்திரோபாய வேறுபாடுகளையே இது பிரதிபலிக்கிறது. இராணுவ ஆக்கிரமிப்பு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் நசுக்கப்படுதல் மற்றும் கொடூரமான வாழ்க்கை நிலைமைகள் சம்பந்தமாக, தமிழ் கூட்டமைப்பிற்கும் கொழும்பு அரசாங்கத்துக்கும் எதிராக, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் உழைக்கும் மக்கள் மற்றும் இளைஞர்களின் மத்தியில் ஆழ்ந்த வளர்ச்சியடைந்து வரும் கோபமுமே இந்த மோதல்களுக்கு பின்னணியில் உள்ளன.

கொழும்பை பற்றியும் வடக்கின் இராணுவ ஆக்கிரமிப்பு பற்றியும் மட்டுப்படுத்தப்பட்ட விமர்சனங்களையே செய்யும் விக்னேஸ்வரன், வெகுஜன கோபத்தையும் எதிர்ப்பையும் இனவாத வழிவகைகளில் திசைதிருப்புவதற்கு முயற்சிக்கிறார்.

எவ்வாறாயினும், தமிழ் கூட்டமைப்பு, இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் பிரிவுகள், விக்னேஸ்வரனும் அவரது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் ஆழமடைந்து வரும் அரசியல் ஸ்திரமின்மையை இன்னும் அதிகரிக்கச் செய்கின்றனர் என கவலை கொண்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலுமான அதிருப்தி, நாட்டில் தென் பகுதியில் தொழிலாளர்கள், ஏழைகள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அரசாங்கத்துக்கு எதிரான பகைமை வளர்ச்சியடைகின்ற நிலைமையிலேயே வெடித்துள்ளது.

நேற்று, கொழும்பை தளமாகக் கொண்ட டெயிலி மிரர் பத்திரிகை, இலங்கையில் பல உயர் ஸ்தானிகரகங்களும் தூதரகங்களும் "தமிழ் கூட்டமைப்பு தலைமைத்துவத்தை பிரச்சினையை இணக்கமாக தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டன" என்று கூறியுள்ளது. செய்தித்தாள் அவர்களின் பெயர்களை கூறாவிட்டாலும் அமெரிக்க, ஐரோப்பிய ஒன்றிய, பிரித்தானிய மற்றும் இந்திய இராஜதந்திரிகள் அனைவரும், இலங்கையில் அரசியல் அபிவிருத்தியை நெருக்கமாக அவதானித்து வருகின்றனர். இந்த சக்திகள், குறிப்பாக வாஷிங்டன் மற்றும் புது தில்லியும், சீனாவிற்கு எதிரான தமது நடவடிக்கைகளுக்கு இணங்க இலங்கையில் ஒரு உறுதியான மூலோபாய பிடியை வைத்திருக்க முனைகின்றன.

இந்த கோரிக்கைகளுக்கு பிரதிபலித்த விக்னேஸ்வரன், நேற்று இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான கட்டாய விடுமுறையை இரத்துச் செய்ய உடன்பட்டதுடன், தனது எதிர்ப்பாளர்களுடன் சமரசத்திற்கு வந்தார். தன் பங்கிற்கு, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், இரண்டு அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் விசாரணையில் தலையிட மாட்டேன் என வாக்குறுதியளித்ததுடன் விக்னேஸ்வரனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சுருட்டிக்கொள்ளவும் உடன்பட்டார்.

2013ல் நடந்த வட மாகாண சபை தேர்தல், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்ட ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அவர் தமிழ் உயரடுக்கை சமாதானப்படுத்தவும் விரும்பினார். ஏனைய மேற்கத்திய சக்திகளின் ஆதரவுடன் வாஷிங்டனின் முக்கிய அக்கறை, இராஜபக்ஷவை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் அவரது அரசாங்கத்தை சீனாவிலிருந்து தூக்கி நிறுத்துவதற்கு நெருக்குவதாகும்.

2015ல், இராஜபக்ஷவை பதவி நீக்கி, மைத்திரிபால சிறிசேனவை பதவியில் அமர்த்த வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை தமிழ் கூட்டமைப்பு முழுமையாக ஆதரித்தது. சிறிசேன தமிழ் மக்களுக்கு ஜனநாயகம், நல்லிணக்கம் மற்றும் மேம்பட்ட சமூக நிலைமைகளை கொண்டுவருவார் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொய்யாக பிரச்சாரம் செய்து, அவருக்கு வாக்களிக்க மக்களை வலியுறுத்தியது.

"ஜனநாயகம்" மற்றும் "நல்லிணக்கம்" என்பதன் மூலம் தமிழ் தேசியவாதிகள் அர்த்தப்படுத்துவது தமிழ் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சுரண்டுவதற்காக கொழும்புடன் ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்வதையே ஆகும். கொழும்பில் ஆட்சி மாற்றத்திற்கான திமழ் கூட்டமைப்பின் ஆதரவு, இன்னும் கூடுதலான சலுகைகள் பெறுவதற்கான எதிர்பார்ப்பில், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு தமிழ் உயரடுக்கு அடிமைச் சேவை செய்வதன் ஒரு புதிய கட்டத்தை பிரதிபலித்தது.

கடந்த 30 மாதங்களில் இலங்கை அரசாங்கம், கொழும்பின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க மற்றும் இந்திய கோரிக்கைகளுக்கு இணங்கும் பாதையில் கொண்டுவந்துள்ளது. சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், இரு நாடுகளுடனும் தமது இராணுவ உறவுகளை பலப்படுத்தியுள்ளனர். இந்த அரசாங்கம் இலங்கையின் பெருகிவரும் பொருளாதார நெருக்கடியின் சுமை தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஏழைகளின் முதுகில் சுமத்த சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளையும் நடைமுறைப்படுத்துகின்றது.

சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவின் ஸ்திரமற்ற "ஐக்கிய அரசாங்கத்தை" அடுத்து இலங்கை பாராளுமன்றத்தில் தமிழ் கூட்டமைப்பே மிகப்பெரிய குழுவாகும். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் இருக்கும் அதே வேளை, ஏறத்தாழ அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக செயற்படும் தமிழ் கூட்டமைப்பு, அதன் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் அதே சமயம், முகத்தை காத்துக்கொள்ளும் விமர்சனங்களையும் முன்வைக்கின்றது.

நாட்டின் அழிவுகரமான இனவாத யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர், கிட்டத்தட்ட வடக்கு மற்றும் கிழக்கை இலங்கை இராணுவமே ஆளுகின்றது. தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு மீது ஆழமான எதிர்ப்பு நிலவும் அதே வேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கை அரசாங்கத்துக்கு முண்டுகொடுத்து, இராணுவத்தின் யுத்த குற்றங்கள் சம்பந்தமான ஒரு சர்வதேச விசாரணையை தடுக்க அது எடுக்கும் முயற்சிகளையும் ஆதரிக்கின்றது.

வட மாகாணத்தில், போரின் போது இராணுவம் கைப்பற்றிக்கொண்ட நிலங்களை தருமாறு கோரியும் மோதலின் போது "காணாமற் போனவர்களை" பற்றிய தகவல்களை கோரியும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. வேலைவாய்ப்பின்மை பெருகியுள்ளதுடன், போரில் வீடுகள் அழிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் தற்காலிக குடிசைகளில் வசிக்கின்றனர்.

2015 இறுதியில், இந்த புகைந்துகொண்டிருக்கும் வெகுஜன அதிருப்தியை இனவாத வழியில் திசை திருப்பும் முயற்சியில், விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையை ஸ்தாபிக்க பல குழுக்களுடன் இணைந்து கொண்டார். தமிழ் மக்கள் பேரவையானது கடந்த செப்டெம்பரில் வடக்கிலும் இந்த பெப்பிரவரியில் கிழக்கிலும், தமிழர்களின் அபிலாஷைகளை "சர்வதேச சமூகத்துக்கு” எடுத்துச் செல்வது என்ற பதாகையின் கீழ் எழுக தமிழ் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தது.

போரில் கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்கு மே 18 நடைபெற்ற ஒரு கூட்டத்தில், "இராணுவத்தை வெளியேற்றக் கோரி மக்கள் வீதிக்கு இறங்கும் நாள் தொலைவில் இல்லை" என்று விக்னேஸ்வரன் பிரகடனம் செய்தார். இந்த வாய்ச்சவடால் அறைகூவல், எதிர்ப்பு வளர்வதையிட்டு கொழும்புக்கு விடுக்கும் எச்சரிக்கையாக இருந்தது. "இராணுவத்தை திரும்பப் பெற முடியாது" என்று "போர் வீரர்களை" நினைவுகூரும் ஒரு கூட்டத்தில் சிறிசேன பதிலளித்தார்.

சர்வதேச ரீதியில் வர்க்கப் போராட்டங்கள் அபிவிருத்தியடையும் சூழ்நிலையில், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக இலங்கை முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பிரிவினரும், இன பேதங்களைக் கடந்து இலங்கைத் தொழிலாளர்களின் ஒன்றுபட்ட போராட்டத்தின் ஆபத்தை பற்றி கவலைப்படுகின்றனர். சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இராஜபக்ஷவின் எதிர்க் கட்சி மற்றும் இராணுவமும், வடபகுதியில் அபிவிருத்தியடைந்து வரும் போராட்டங்களை கண்டனத்துடன் நோக்குவதோடு, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்துவதற்கான முயற்சியில் சிங்கள இனவாதத்தை தூண்டிவிடுகின்றன.

தமிழ் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் விக்னேஸ்வரனை சூழவுள்ள குழுவும் ஆற்றும் துரோக பாத்திரத்தை நிராகரிக்க வேண்டும். இவர்களுக்கு தமிழ் தொழிலாளர்களினதும் ஏழைகளினதும் அடிப்படை உரிமைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களுக்காகப் போராடுவதில் எந்த ஆர்வமும் கிடையாது. புலிகளைப் போலவே, இந்த அமைப்புகளும் தங்கள் தேசியவாத கொள்கைகளை மேம்படுத்துவதுடன், பிரதான ஏகாதிபத்திய சக்திகளுக்கு அழைப்பு விடுத்து தங்கள் சலுகைகளை பாதுகாக்கின்றன.

தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் போராடுவதன் மூலமே, தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளால் தங்கள் ஜனநாயக உரிமைகளை வென்றெடுக்கவும் தமது சமூக நிலைமையை மேம்படுத்தவும் முடியும். தெற்காசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் பாகமாக, ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசின் வடிவில் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்திற்காகப் போராடுவது இதன் பாகமாகும். இந்த முன்னோக்கிற்காக சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே போராடுகிறது.